Advertisement

அத்தியாயம் 17
மறுவாரத்தில் ஒருநாள் சங்கரன்-பார்வதி தம்பதியரின் திருமண நாளையும் அவர்களது தொழிற்சாலையின் ஆண்டு விழாவையும் ஒரே நாளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சஞ்ஜீவன் தனது கன்ஸ்ட்ரக்ஷன் ஊழியர்களையும் அழைத்திருக்க¸ தொழிற்சாலை ஊழியர்கள், மற்றவர்கள் என அனைவரும் வீட்டில் திரண்டிருந்தனர். வீட்டின் முன்பாக இருந்த பெரிய இடத்தில் விழா நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அன்றைய தினத்தில் சஞ்ஜீவனின் திருமணத்தைப் பற்றியும் அறிவித்துவிட வேண்டும் என்பது பெரியவர்களது எண்ணம். ஆனால் அதற்குமுன் சத்யா சம்மதிக்க வேண்டுமே..!
என்ன செய்யலாம் என்று யோசித்த சங்கரன்¸ தோன்றிவிட்ட சிறு ஐடியாவை செயல்படுத்துபவராக சத்யாவை அழைத்தார்.
அழைத்து “சத்யா… விழாவில் பேச வேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்பிருந்த பைலை மாடியிலுள்ள ஒரு அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்… நீ போய் அதை எடுத்து வருகிறாயா..?” என்று கேட்டவர்¸ அவள் வேறு யாரையும் அனுப்பி விட்டுவிடக்கூடாது என்பதால் வேலைக்காரர்கள் யாருமில்லாதவாறு கவனித்துக் கொண்டார்.
இருந்தாலும் அவள் தயங்கக்கூடாது என்பதால் “மறுபடியும் மாடியேற எனக்குக் கஷ்டமாக இருக்கு… வேறு யாரிடமாவது சொல்லலாம் என்றாலோ எல்லோரும் வெளி அலங்கார வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள்” என்று சேர்த்துச் சொன்னார்.
சஞ்ஜீவனின் அறையாக இருந்தால் வேறு யாரையாவதுதான் அனுப்ப வேண்டும்… இல்லையென்றால் நாமே போகலாம் என்றெண்ணியவள்¸ எந்த அறை என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு மாடியேறினாள்.
மகனது ரூமாக இருந்தால் அவள் மறுப்பாள் என்பதை அறிந்திருந்தவர்¸ வேறு அறையையே கூறினார்.
லாக்கிடாமல் லேசாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவைத் தள்ளி திறந்து உள்ளே சென்று அவர் சொன்ன பைலை எடுத்துக்கொண்டு வந்து கதவைத் திறந்தால் அது திறக்கவில்லை.
இழுத்துப் பார்த்தாள் “ம்கூம்” முடியவில்லை.
இதை நான் லாக் செய்யவில்லையே… அப்புறம் எப்படி? வெளியிலிருந்து யாராவது லாக் செய்துவிட்டார்களா? ம்… யாராவது இந்தப் பக்கம் வருகிறார்களா என்று கூப்பிட்டுப் பார்க்க வேண்டியதுதான் என முடிவெடுத்து¸ “ஹலோ..!! யாராவது இருக்குறீங்களா? யாராவது இந்த கதவைத் திறங்க…!!” என்று கத்தியவாறே பலங்கொண்ட மட்டும் கதவைத் தட்டினாள்.
வெளியிலிருந்து திறக்கப்படுவதற்குப் பதிலாக அறைக்குள்ளிருந்தே கதவைத் திறக்கும் ஓசை கேட்கவும் திரும்பினாள். அங்கு குளித்து முடித்து ஈரத்தலையுடன் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான் சஞ்ஜீவன்.
அவளைப் பார்த்து அவளருகில் அவன் வந்துவிடுவதற்குள் வெளியே போய்விட்டால் பரவாயில்லை என்றெண்ணியவள் மீண்டும் கதவைத் தட்டினாள். சத்தம் கேட்டு திரும்பியவனால் அவள் தன் அறைக்குள் இருப்பதை நம்பமுடியவில்லை….
நம்பமுடியவில்லை என்பதைவிட அவன் இதை எதிர்பார்க்கவில்லை எனலாம்.
“சத்யா நீ இங்கே என்ன செய்கிறாய்?” எனக் கேட்டவாறே அவளை நோக்கி வந்தான்.
அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கையிலிருந்த பைலைப் பார்த்தவாறே வந்த காரணத்தைக் கூற¸ அவள் தன்னைப் பார்ப்பதைக்கூட விரும்பவில்லை என்று தவறாக எண்ணியவன் “ஏன் சத்யா¸ என் முகம் பார்த்து பதில் பேசக்கூடாத அளவுக்கு நான் பாவியாகிவிட்டேனா?” என்று கேட்டான்.
எப்படி சொல்வாள் அவள்… தலை முடியிலிருந்த நீர்த்துளிகள் வைரமாக மின்ன¸ அகன்ற மார்புடன்… வெகு அருகாமையில் அவனைக் காண அவளது உள்ளம் படபடக்கிறது என்பதை எப்படி அவனிடம் சொல்ல முடியும்.
எதுவும் கூறமுடியாமல் “ம்ப்ச்..!” என்றவளைக் கூர்ந்து பார்த்தவன்¸ சிவந்திருந்த முகத்தையும் அவளது படபடப்பையும் உணர்ந்து அவளை நெருங்கினான்.
“சார் தேடுவாங்க… ப்ளீஸ் கதவைத் திறங்க…” என்றாள் மெதுவாக.
“ஏன் சத்யா பயமாக இருக்கிறதா?” என்று அவன் இன்னும் நெருங்க¸ கதவுப் பக்கமாகத் திரும்பி “யாராவது கத….” என கத்தத் தொடங்கியவளின் கையைப் பிடித்து தன்புறமாகத் திருப்பினான்.
பைலை கீழே தவறவிட்டவளுக்கு தன் நெஞ்சு துடிப்பது தெளிவாகக் கேட்டது. ‘இவன் எப்போது இந்த அறைக்கு வந்தான் என்று தெரியாதே…. தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேனே..!’ என்று மனதிற்குள் எண்ணி வருந்தியவாறு “கையை விடுங்க…” என்று தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள்.
சூடான அவளது கைகளைப் பற்றியிருந்த அவனது கரத்திலிருந்த குளிர்ச்சி அவளுக்கு இதமளிப்பதாகவே இருந்தது. இந்த இதமும் பயத்தையே தோற்றுவிக்க “எனக்கு வெளியே போகணும்… கதவைத் திறங்க..” என்றபோது அவளுக்கு குரல் எழும்பவில்லை.
அவளைக் கதவோடு சாய்த்தவன் “எனக்கு ஒரு சான்ஸ் கொடு சத்யா… நான் உன்கிட்ட என்னை…” என்று ஆரம்பித்ததும்¸ கைகளை உதறிக்கொண்டு திரும்பி கதவைத் தட்டலானாள்.
இப்போது அவளுக்குப் பின்புறமிருந்து அப்படியே அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் அவன். அதற்குமேல் தாங்கிக் கொள்ள இயலாதவலானாள் அவள்.
அவன் தன் தாடையை அவளது தோளில் வைத்து அழுத்த “ப்ளீஸ்… கதவைத் திறங்க சஞ்ஜீவ்..!” என்றாள்.
“நான் இப்போது கதவைத் திறந்துவிட்டால் நீ போய்விடுவாய் சத்யா… அப்புறம் எனக்கு என்னை விளக்க இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியாது. அதனால்…” என்றவன் அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்தான்.
விலகிய பின்னரும் மேனி நடுங்க நின்றவளிடம் “வா… இப்படி வந்து உட்கார்…” என்று சோபாவைக் காட்டினான். அவள் அசையாமல் தலை குனிந்தவாறே நிற்கவும்¸ சென்று ஷார்ட்சும் சட்டையும் அணிந்து வந்தான்.
“இப்போது நிமிர்ந்து என்னைப் பார் சத்யா… கழுத்துவலி வந்துவிடப் போகிறது” என்று அவன் சிரிக்க நிமிர்ந்தாள்.
எதுவுமே பேசாமல் பார்த்தவளிடம் “நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்லட்டுமா? இவன் எப்போது இந்த அறைக்கு மாறினான் என்றுதானே…?” என்று கேட்டவன் அவள் தலையையாவது அசைப்பாள் என்று அவளையே பார்த்தான்.
அவள் அப்படியே நிற்கவும் தானே தொடர்ந்து பேசினான். “அந்த அறையைத்தான் நான் நித்யாவோடு சேர்ந்து பயன்படுத்தினேன்… அவளைப் பற்றி அறிந்த பின்பு தொடர்ந்து அங்கேயே இருக்க விரும்பவில்லை… அதனால்தான். அப்புறம் இனி நம் திருமணத்திற்குப் பிறகு நமக்காக என்று தயார் செய்யப்பட்ட அறை இது¸ ஆட்டோமேட்டிக் லாக்… உள்ளே வந்ததும் தானாக லாக் செய்து கொள்ளும். பார் ரிமோட் கூட இங்கேதான் இருக்கிறது¸ அது தெரியாமல் நீ….” என்று அவள் கதவைத் திறப்பதற்கு முயன்றதை எண்ணி சிரித்தவன்¸ “ஆனால் அப்படி நான் உன்னை என்ன செய்துவிடுவேன் என்று உனக்கு பயம்?” என்று கேட்டான்.
“வந்து… நான் உங்களைத் திருமணம் செய்ய விரும்பவில்லை சார்” என்று மெதுவாக ஆனால் தெளிவாகக் கூறினாள்.
“ஏன் சத்யா? என்மேல் உள்ள கோபம் இன்னும் குறையவில்லையா?”
“குறையும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து ஹோட்டல்¸ ஷோரூம்¸ அப்புறம் உங்கள் வீட்டில் சின்ன சின்ன விஷயங்கள்… இதையெல்லாம்விட என் திருமணத்தை நிறுத்தி… என்னை விபச்சாரி என்று ஊரே பேசும்படி செய்திருக்கிறீர்கள்.. இதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?” என்று தனக்கு அவன் கொடுத்த நெருக்கடிகளை அடுக்கியவள்¸
கடைசியாக “இதையெல்லாம் நீங்கள் செய்தது… உங்களை ஏமாற்றி மணந்த ஒருத்திக்காக… அதுவும் அவள் இறந்தது ஒரு தற்செயலான விபத்து என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் நான்தான் காரணம் என்று… சரி. இதையெல்லாம் செய்தவருக்கு இப்போது திடீரென்று என்மேல் அன்பு¸ திருமணம் செய்யும் ஆசை இதெல்லாம் வந்துவிட்டதா?” என்று கேட்டாள்.
“ஆமாம் சத்யா¸ அன்புதான். இந்த அன்பு இன்று வந்ததல்ல என்பது இப்போதுதான் புரிந்தது…” என்று அவளைப் பார்க்க¸ அவள் அமைதியாக நின்றாள்.
அவனே தொடர்ந்தான். “நீ சொன்னதுபோல் நித்யா இறந்ததற்காக உன்னைப் பழிவாங்க நினைத்தது உண்மைதான். ஆனால் அதற்காக நீ எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து பழிதீர்க்க வேண்டுமென்று நான் ஒருபோதுமே நினைத்ததில்லை… திடீரென்று ஒருநாள் பத்திரிக்கையில் நீயும் முகிலனும் சேர்ந்திருந்த புகைப்படத்தைப் போட்டு திருமண வாழ்த்து போடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். பழிவாங்கும் தருணம் வந்திருப்பதாக எண்ணி முகிலனின் போன் நம்பர் சேகரித்து¸ அவனை அழைத்து ‘உன் வருங்கால மனைவியின் லட்சணம் தெரியுமா?’ என்று கேட்டேன். அவன் என்னைத்தான் யார் என்று கேட்டானே தவிர உன்மேல் அவனுக்கு நம்பிக்கையில்லை. அவனிடம் இந்த ஹோட்டலுக்கு வந்து பார் தெரியும் என்று சொல்லிவிட்டு உனக்கு போன் செய்து முகிலன் வரச் சொன்னதாகச் சொல்லி பேசியதும் நான்தான்….” 
“உன்மீது ஒரு நடவடிக்கை எடுத்தேன் என்றால்¸ அதைச் செய்வது நானாகத்தான் இருந்தேன். வேறு யார் மூலமாகவும் செய்வதை நான் விரும்பவில்லை¸ அதன் காரணம் உன்னை நானே பழிவாங்க வேண்டும் என்ற எனது வெறி என்றே எண்ணியிருந்தேன். ஆனால்….” ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்.
“ஹோட்டலில் உன்மீது காபியை கொட்டச் செய்து¸ ட்ரஸ்வாஷ் செய்ய உனக்கு இந்த அறையைக் காட்டு என்று பணத்தை நீட்ட அவன் அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்துக் கொள்ளவில்லை தெரியுமா சத்யா? அவனுக்கு ஒரு உண்மையான காரணம் தேவைப்பட்டது. அதற்கு நான் ரெடி பண்ணியது நாம் காதலர்கள் என்னும் கதை…. உன் திருமணத்தை நிறுத்த நீயும் நானும் சேர்ந்து நடத்துவதே இந்த நாடகம் என்ற பின்னரே சம்மதித்தான். நீ அந்த அறைக்குள் நின்ற பதினைந்து நிமிடமும் நான் எப்படி உணர்ந்தேன் என்பது எனக்கே தெரியாது. நீ அறையை விட்டு வெளியேறிவிட்டாய் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு வெளியே வந்தேன். அப்போதும் யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டே வந்தேன். வரும்போது சட்டை பட்டனையும் கலைந்திருந்த தலைமுடியையும் சரி செய்தேன்…” என்று அவன் ஒவ்வொன்றாக சொல்லிவர அவனையே வெறுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.
எப்படியும் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்றெண்ணியவன் தொடர்ந்தான். “எப்படியும் முகிலன் நீ போனதையும் நான் வந்ததையும் பார்த்திருப்பான் என்று தெரியும். கண்டிப்பாக உன் திருமணம் நின்றுவிடும் என்றும் நம்பினேன்… அப்படியேதான் நடக்கவும் செய்தது. ஆனால்¸ உன் அப்பா இறந்தது… அம்மாவுக்கு பார்வை போனது… இதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று அவன் முடித்தபோதுதான் அவள் பேசினாள்.
“உங்களுக்குத் தேவை என் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும்¸ அதற்குமேல் என்னைப் பெற்றவர்களை நீங்கள் ஏன் பார்க்கப் போகிறீர்கள்….? ஆனாலும் இப்படி என்னை விபச்சாரி என்று பிறர் எண்ணும் அளவுக்கு பிளான் போட்டதற்குப் பதிலாக என்னைக் கொன்றிருக்கலாம்…” என்றபோது “அப்படிச் சொல்லாதே சத்யா!” என்று அவன் கத்தியதைக் கவனிக்காமலே தொடர்ந்து பேசினாள்.
“ஒரே நாளோடு வேதனை முடிந்திருக்கும்” என்று மூச்சுவாங்கியவள்¸ தொடர்ந்து “இதைப் பற்றியெல்லாம் இப்போது பேசுவதுகூட வீண். நீங்கள் சொன்ன மாதிரி உங்கள் பேச்சு எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இப்போதாவது கதவைத் திறக்கிறீர்களா? உங்கள் அப்பா பேச வேண்டிய குறிப்பு இங்கேதான் இருக்கிறது… விழா வேறு ஆரம்பித்திருக்கும்¸ இதில்லாமல் பேசமுடியாது” என்றவள் கீழே விழுந்திருந்த பைலை எடுத்தாள்.
“இரு சத்யா¸ நான் இன்னும் முடிக்கவில்லை” என்று அவன் சொன்னதும்¸ “இன்னும் என்ன?” என்றாள்¸ குரலில் எரிச்சலிருந்தது.
“ஏன் சத்யா திருமணத்திற்கு மறுக்கிறாய்? என்னைப் பிடிக்கவில்லையா? என்னை மணந்து கொள்ளமாட்டாயா?” என்று பலவாறு கேட்க¸ அவள் “முடியாது” என்று முடித்துவிட்டாள்.
“என்ன சத்யா இது? கொஞ்சம்கூட யோசிக்காமல் பட்டென்று முடியாது என்றால் எப்படி?”
“நீங்கள் யோசித்தீர்களா…? என்னைப் பற்றி… என் வாழ்க்கைப் பற்றி… இல்லையே! அப்புறம் நான் மட்டும் என்ன விதிவிலக்கு” என்றாள்.
“அப்போ… நீயும் என்னைப்போல பழிவாங்குகிறாய்¸ அப்படித்தானே?” என்று கேட்டான்.
“பழியா? நானா? சான்ஸே இல்லை. அப்படி ஒரு எண்ணம் மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் உங்கள்மீது போலீசில் புகார் செய்திருப்பேன். இப்படி ஒவ்வொரு இடமாக வேலை தேடி அலைந்திருக்கமாட்டேன்” என்றாள்.
“ஏன் செய்யவில்லை சத்யா? உன் வேலைக்காக நீ அப்படி நடந்திருந்தாலும்.. கண்டிப்பாக புகார் கொடுத்திருக்க முடியும். ஆனால் நீ கொடுக்கவில்லை¸ ஏன்…? அப்புறம் என் பெற்றோர். அவர்கள் என்னைப் பெற்றவர்களாகவே இருந்தாலும் உன்னுடைய நலம்விரும்பிகள் என்பது உனக்குத் தெரியும். இருந்தும் நீ அவர்களிடம் எதுவுமே சொல்லவில்லை¸ ஏன்? ஏன் சத்யா? சொல்” என்று அவன் கேட்கக் கேட்க¸ “அது… ” என்று தயங்கினாள் அவள்.
“சொல்லு சத்யா¸ அதுதான் ஏன் என்று கேட்கிறேன்” என்று அவளை சொல்லச் சொல்லித் தூண்டினான்.
“அது…” என்று இன்னமும் தயங்கியவள்¸ மெதுவாக சொன்னாள். “அவர்கள் உங்களைப் பெற்றவர்கள் என்பதால் ‘உங்களைத்’ தவறாக எண்ணமாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்கு உகந்த பெண்ணான நான் சொல்லும்போது அவர்களது பார்வையில் நீங்கள் தாழ்ந்து போவீர்களோ என்று நினைத்தேன். அதனால் சொல்லவில்லை” என்று தன் காரணத்தைக் கூறினாள்.
“ம்… ‘என் பெற்றோர்’ அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தால் உனக்கென்ன?”
‘அதானே! அவனது தாய் தகப்பன் அவனைப் பற்றி என்ன நினைத்தாலும் பேசினாலும் எனக்கென்ன வந்தது? இல்லை எனக்கென்ன வந்துவிடப் போகிறது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் முன் வந்து மீண்டும் அவள் கையை பற்றினான்.
மறுபடியும் நெஞ்சம் படபடக்க தலை கவிழ்ந்து கொண்டவளை “சத்யா…!” என்றழைத்து¸ “இன்னுமா உன் மரமண்டைக்குப் புரியவில்லை?” என்று அவள் தலையை லேசாகத் தட்டினான்.
அப்போதும் “ம்ப்ச்…” என்று முகச்சுளிப்புடனே நிமிர்ந்தவளிடம் “என்னை உனக்குப் பிடிக்கும் சத்யா… அதுதான் உண்மை!” என்று அவன் சொல்ல¸ ‘அப்படியா?’ என்று தன்னிடமே கேட்டவளுக்கு பதிலாகக் கிடைத்தது அவன் சொன்னதுதான்.
இனி எப்படி மறைப்பது? என்று அவள் திணறிக் கொண்டிருந்தபோது அவன் கதவைத் திறக்க ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
தந்தைக்கு போன் செய்து தேங்க்ஸ் சொன்னவன்¸ “திருமண நாளை அறிவித்து விடுங்கள் அப்பா… எங்கள் திருமணம் நடக்கும்” என்றான்.
சங்கரன் வந்திருந்த அனைவரின் முன்னிலையில் “ஒரு இனிய செய்தி அறிவிக்கப் போகிறேன்” என்று சொல்லி¸ ஒதுங்கி நின்ற சத்யாவை அருகில் அழைத்து “இதுதான் என் வருங்கால மருமகள்… அவர்களது திருமணம் அடுத்த முகூர்த்தத்தில் நடைபெறும்” என்று சொல்ல¸ பார்வதி சத்யாவின் நெற்றியில் முத்தம் ஒன்றைப் பதித்தார்.
வந்திருந்த அனைவரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதும்¸ வாழ்த்துவதுமாக இருந்தனர். சத்யாவிடம் வாழ்த்து தெரிவித்தவர்களில் முன்பு அவள் வேலை பார்த்த இரண்டு இடங்களின் முதலாளிகளும் சொன்ன செய்தி அவளுக்குப் புதிதாக இருந்தது.
ஹோட்டல் முதலாளி¸ ஷோரூம் முதலாளி இருவர் சொன்னதும் இதுதான்.
“சார் அன்றைக்கு என்னிடம் சொன்னதுபோல் உங்களைத் திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்தி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்றவரிடம் “என்ன!” என்றாள் வியப்புடன்.
அதற்கு அவர் “என்னம்மா இப்படி ஷாக் ஆகுறீங்க? நீங்க வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளிலே வந்து நீங்களும் அவரும் காதலிப்பதைக் கூறி நீங்கள் வேலை பார்ப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால் அவர் சிறுசிறு பிரச்சினைகள் பண்ணினால்தான் வேலையை விடுவீர்கள் என்றும் சொல்லி என்னிடம் சம்மதம் பெற்ற பின்னரே… உங்களுக்கு அவர் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே நடந்து கொண்டுவிட்டார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று மீண்டும் ஒருமுறை தன் வாழ்த்தைத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினார்.

Advertisement