Advertisement

அத்தியாயம் 16
அடுத்த நாள் கல்பனாவை அழைத்துக் கொண்டு வந்தார் மணிவண்ணன்.
வீட்டுக்குள் நுழைந்தவர் ஹாலில் தனித்திருந்த பார்வதியிடம்¸ தன் மகளை சஞ்ஜீவனுக்கு மணமுடித்துக் கொடுப்பது குறித்து அவர்கள் முடிவென்ன என்று கேட்டார்.
“அண்ணா இதை நீங்கள் என் மகனிடம் தான் கேட்க வேண்டும்” என்றார் அவர்.
“உன் மகன்தான் மூன்று மாதத்திற்கு முன்பாகவே என் மகளை மணமுடிக்க கேட்கச் சொன்னானே…! பிறகும் ஏன் திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டும்?” என்று கேட்டார்.
“அதை நான் சொல்கிறேன் மாமா” என்று வந்தான் சஞ்ஜீவன்.
“நான் கல்பனாவிடம் கேளுங்கள் என்றுதான் சொன்னேனே தவிர…” என்று நிறுத்தியவன் திரும்பி¸ “உன்னை மணக்க சம்மதம் என்று எப்போதாவது உன்னிடம் சொல்லியிருக்கிறேனா? இல்லை அந்த மாதிரியாக நடந்திருக்கிறேனா?” என்று கல்பனாவைக் கேட்டான்.
‘இல்லை’ எனத் தலையாட்டினாள் அவள்.
“ஒருவேளை முன்பு உன்னை மணக்க சம்மதித்திருந்தாலும்கூட உன் எண்ணங்கள் பற்றித் தெரிந்த பின்பும் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று எண்ணினாயா?” என்றும் கேட்டவன்¸ “உன்னை மணப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தெரிந்துகொண்டே அந்தத் தவறான முடிவை எடுக்க எனக்கு விருப்பமில்லை” என்று தன் விருப்பமின்மையை தெளிவாகவே அவளிடம் கூறினான்.
பின்னர் மீண்டும் மாமனிடம் திரும்பியவன்¸ “என்னைப் பெற்றவர்களை எவ்வளவு சங்கடப்பட வைத்துவிட்டாள் உங்கள் மகள்” என்றான்.
நடந்தவற்றையெல்லாம் அறிந்திருந்ததாலும்¸ அதற்குத் தானும் துணை நின்றதாலும் அதைத் தவறாக சித்தரிக்காமல் “மாப்பிள்ளை அவள் உங்கள் மேல் உள்ள அன்பால் அப்படி நடந்துகொண்டாள்” என்று சமாளித்தவர்¸ “அவள் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பார்வதியிடம் மன்னிப்பை வேண்டினார்.
“அதெல்லாம் தேவையில்லை அண்ணா…” என்று பார்வதியும்¸ “தேவையில்லை மாமா” என்று சஞ்ஜீவனும் ஒருசேரத் தடுத்தனர்.
தடுத்துவிட்டு “இந்த வீட்டிற்கு எப்போதும்போல் நீங்கள் வரலாம் போகலாம். ஆனால்¸ திருமணப் பேச்சை எடுக்கக்கூடாது. நான் வேண்டாம் என்று முடித்தது முடித்ததாகவே இருக்கட்டும்” என்று கல்பனாவின் விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவன்¸ “அத்தோடு நான் எனக்குப் பிடித்த பெண்ணைப் பார்த்துவிட்டேன். அவளைதான் மணந்து கொள்ளப் போகிறேன்” என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தான்.
மகனது கடைசிப் பேச்சால் மகிழ்ந்து போன பார்வதி¸ “ஜீவா… பெண் பார்த்துவிட்டாயா! பெண் வீடு எங்கேயிருக்கிறது? நானும் அப்பாவும் எப்போது சென்று பெண் கேட்க வேண்டும்?” என்று பரபரத்தார்.
“ம்மா… ரிலாக்ஸ்…” என்று அவரைத் தோளோடு அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்துத் தானும் அமர்ந்தவன்¸ “அப்பா வந்ததும் இருவருக்குமே ஒன்றாகச் சொல்கிறேனே” என்று சொன்னபோது¸
“என்ன ஜீவா சொல்ல வேண்டும்? நான் வந்துவிட்டேன்¸ என்ன விஷயமாக இருந்தாலும் சொல்” என்று மகனிடம் பேசியவாறே அவர்களருகில் வந்து அமர்ந்தவர்¸ மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
மகன் பேசும்முன் பார்வதி “ஏங்க நம்ம பையன் பெண் பார்த்துவிட்டானாம். அதனால்தான் திருமணம் பற்றிப் பேச எப்போது பெண்வீடு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்களும் வந்துவிட்டீர்கள்…” என்று கணவனிடம் சொன்னவர்¸ “சரி… சரி…. பெண் பெயர் என்ன? எந்த ஊர்? குடும்பம் எப்படிப்பட்டது?” என்று மகனிடம் கேள்விகளை அடுக்கினார்.
சத்யாவைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்லி வந்தவனிடம் “நம்ம சத்யாவைப் பற்றியா சொல்கிறாய்?” என்று கேட்டார் சங்கரன்.
‘ஆமாம்’ என்று லேசான சிரிப்புடன் தலையசைத்தவனிடம்¸ தங்களுக்கிருந்த அளவில்லாத மகிழ்ச்சியைத் தெரிவித்தனர் இருவரும்.
அவர்களது சந்தோஷத்தில் தானும் கலந்து கொண்டு நன்றாக சிரித்தவன்¸ சீரியசான முகத்துடன் “உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்” என்று நித்யாவைப் பற்றி கூறினான்.
அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தவர்களிடம்¸ நித்யாவின் தங்கைதான் இந்த சத்யா என்பதையும் கூறிமுடித்தான். இதைக் கேட்டதும் அவர்களுக்கு ஆச்சர்யம். சத்யாவைப் பற்றித் தாங்கள் அறிந்திருந்தாலும்¸ அக்காவைப் பற்றி இப்படி சொல்பவன் எப்படி தங்கையை மணக்கக் கேட்கிறான் என்றிருந்தது அவர்களுக்கு.
மகனைப் பார்த்தார் பார்வதி.
அவரது பார்வையைப் கண்டு “புரிகிறது அம்மா… அக்காவைப் பற்றித் தவறான அபிப்ராயம் கொண்டிருப்பவனால் எப்படித் தங்கையை என்றுதானே…” என்று கேட்க¸ தலையசைத்தார் அவர்.
“அம்மா நான் சத்யாவை… அவள் இங்கு வருவதற்கு முன்பும் இங்கு வந்தபின்னரும் பல நேரங்களில் பல விதங்களில் அவளைத் துன்புறுத்தியிருக்கிறேன்¸ தெரியுமா?” என்று கேட்டான் மகன்.
தன் மகன் இப்படி செய்வானா? ஒரு பெண்ணுக்குத் துன்பம் இழைப்பானா? என்றெண்ணியவர்… ஆனாலும் சத்யா இது பற்றி சொன்னதில்லையே என்று எண்ணி “உன்னைப் பார்த்த பிறகும்கூட அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே… அவள் குணம் யாருக்கும் வராது” என்றார்.
“ஆமாம்மா… அவள் குணம் யாருக்கும் வராதுதான்” என்று தாயாரை ஆமோதித்தவன்¸ “அன்றிரவுகூட அவளை நான் வழியிலே காரிலிருந்து  இறக்கி விட்டுவிட்டேன்…” என்றதும் பெரியவர்கள் இருவரும் பதறினர்.
“என்னப்பா சொல்கிறாய்! நீ ஏன் அப்படி செய்தாய்? ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்?” என்று மகனிடம் கடுமையான குரலில் கேட்டார் சங்கரன்.
“அப்படி செய்தது தப்புதான்” என்று ஒத்துக்கொண்டு¸ “அதற்காக மன்னிப்பு கேட்டு அன்று என்ன நடந்தது என்பதையும் தெரிந்து கொள்ள கேட்ட போதுதான் இந்த உண்மைகள் தெரியவந்தது” என்றவன்¸ “இப்போதும் எனக்குத் தெரிய வரவில்லையென்றால் இன்னும் எவ்வளவு காலம் வன்மத்துடன் இருந்திருப்பேனோ…. தெரியவில்லை” என்று கூறி வருந்தினான்.
“சரிப்பா.. நீதான் எல்லாம் உண்மைகளையும் அறிந்து பழியுணர்ச்சியை விடுத்து அவளைப் புரிந்துகொண்டாயே..! இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விதியிருந்தால் நம்மால் அதை மாற்ற முடியாது¸ நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றெண்ணிக்கொள்…. அத்தோடு அதற்காக நீ வருந்துவதே இனிமேல் இப்படி செய்யமாட்டாய் என்பதையும் தெளிவாகக் கூறுகிறதே” என்று முடித்துவிட்டு¸ “சத்யாவிடம் நாங்கள் பேசட்டுமா?” என்று இப்போதைய விஷயத்திற்கு தாவினார்.
“இல்லைப்பா நானே பேசுகிறேன்” என்று துள்ளலுடன் சென்றான்.
அன்று மாலையே மீனாட்சியைப் பார்க்க மருத்துவமனை சென்றனர். அவரால் ரொம்பத் தெளிவாக இல்லையென்றாலும் ஓரளவு அவர்களை பார்த்துப் பேச முடிந்தது. மூவருக்குமே நன்றி தெரிவித்தார்.
சத்யாவை காணும் ஆவலுடன் வந்தவன் அவளைக் காணமுடியாமல் “சத்யா எங்கே?” என்று மீனாட்சியிடம் கேட்டான்.
“பக்கத்திலிருக்கிற துணிக்கடைக்குப் போயிருக்கிறாள் தம்பி” என்று அவர் சொன்னதும்¸ தான் அழைத்து வருவதாகக் கூறி கிளம்பினான்.
“இப்போதும் கண்களில் வலி¸ எரிச்சல் என்று ஏதாவது இருக்கிறதா?” என்று பார்வதி கேட்க¸ “லேசாக இருக்கிறது¸ என் மகள் படும்பாட்டைப் பார்க்கும் போது எதுவுமே தெரிவதில்லை. எப்போதோ போயிருக்கக்வகூடிய உயிரைப் பிடித்து வைத்திருக்கிறாள்…” என்றவர்¸ உதவியவர்கள் முன் இப்படிப் பேசலாமா என்றெண்ணி பேச்சை நிறுத்தி சிரித்தார். மற்றவர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.
ஏ.எம். டெக்ஸ்டைல்ஸ் முன்பாகக் காரை நிறுத்தினான் சஞ்ஜீவன்.
உள்ளே சென்று தேடியவனுக்கு¸ முன்பு அவளை இதே இடத்தில் பதுமையாக பார்த்த நினைவுவர தலையைத் தட்டிக்கொண்டு தேடுவதைத் தொடர்ந்தான். மாடிக்கு சென்றவன்¸ அவளருகில் சென்று “என்ன துணி பார்க்கிறாய்?” என்று கேட்டான்.
சட்டென மிக அருகாமையில் கேட்ட குரலால் தடுமாறியவள் கீழே விழப்போக பிடித்து நிறுத்தியவன் “நான்தான் சத்யா¸ உன்னை அழைத்துப் போக வந்தேன்” என்றான் மெதுவாக.
“‘தனியாக’ வரத்தெரிந்த எனக்கு போகவும் தெரியும்…  நீங்கள் போகலாம்” என்று அவனிடம் கடுப்பாக சொல்லிவிட்டுத் திரும்பி தனக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கலானாள்.
அவன் முகம் சுருங்கிவிட்டது.
கோபப்பட்டுவிடாமல் தன்னை அமைதிபடுத்திக் கொண்டவன்¸ நினைவு வந்தவனாக “சத்யா அப்பா¸ அம்மாக்கு திருமண நாள் வருகிறது. அம்மாவுக்கு சர்ப்ரைசாக ஒரு புடவை பரிசளிக்க வேண்டும்¸ செலக்ட் பண்ணித் தருவாயா?” என்று கேட்டான்.
பார்வதியம்மாளுக்கு என்றதும் “சரி” என்று அவருக்கான புடவை வகைகளைப் பார்க்கலானாள்.
எந்தவொரு புடவையுமே அவருக்கு ஏற்றதாகத் தோன்றாததால் சற்று நேரமாகத் தேடித் தோற்றுக் கொண்டிருந்தவளிடம் “ஹேய்..! நீ சத்யாதானே?” என்று வந்தான் ஒருவன்.
முகிலன்¸ சத்யாவை மணக்க இருந்தவன். அவன் கூடவே¸ அவனுக்கு வெகுநெருக்கத்தில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவனுடைய மனைவியாக இருக்கக் கூடும். அவனிடம் பேச விருப்பமில்லாமல்¸ துணிகளிலே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவளிடம் அவன் கேட்டான் “நீ இன்னும் இந்த ஆளை விடவில்லையா?” என்று.
அவன் யாரைக் குறிப்பிட்டு அப்படி சொன்னான் என்று புரியாமல் “எந்த ஆள்?” என்று கேட்டாள்.
“சும்மா நடிக்காதே சத்யா..! அன்றைக்கு நம் திருமணம் நடப்பதற்கு முதல்நாள் நீ இவருடன்தானே ஹோட்டலில் இருந்துவிட்டு வந்தாய்!” என்று சஞ்ஜீவை சுட்டிக் காட்டினான்.
அதிர்ந்துபோய் சிலையென நின்றுவிட்டவளிடம் “அப்போதும் இப்படி புடவைதான் வாங்கித் தந்தானா?” என்று அவன் கேட்டதும்¸ தன்னுணர்வு பெற்றவள் சேலையை தொட்டுக் கொண்டிருந்த கைகளை உதறினாள்.
“இங்கே பார் முகிலன்¸ தேவையில்லாமல் ஏதேதோ பேசாதே… போய்விடு! கல்யாணத்தை நிறுத்துவதற்காக என் மீது அபாண்டமாக பழிபோட்டவன்தானே நீ..! அது உண்மையில்லை என்று தெரிந்தும் வருடங்கள் போனபின்பும் அதையே சொல்கிறாயே¸ உனக்கு வெட்கமாயில்லை… போ… போய்விடு!” என்றாள் கோபமாக.
“நான் ஏன் பொய் சொல்கிறேன்..? நீதான்; இல்லையென்று நடித்து சாதிக்கிறாய்! இன்று வரை அவனுடன் தொடர்பில் இருந்துகொண்டும் இல்லை என்று சொல்லும் நீதான் வெட்கப்பட வேண்டும்” என்று அவளை வார்த்தையால் குட்டியவன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இடத்தை காலி செய்தான்.
போகும்போது தன் மனைவியிடம் “பாரு தேவி¸ இவள் இன்னமும் இந்தாளுகூட தொடர்பில்தான் இருக்கிறாள். அன்றைக்கு நான் மட்டும் இவளைக் கல்யாணம் செய்திருந்தேன்னா உலகத்திலே பெரிய ஏமாளியாக இருந்திருப்பேன்… நல்லவேளை தப்பித்தேன்…. ” என்று சொல்லிக் கொண்டே போனான்.
காதல் கொண்டுவிட்ட சஞ்ஜீவன் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது¸ எப்படி சொல்வது என்று எதுவும் புரிபடாமல் அங்கிருந்த புடவைகளையே வெறித்துக் கொண்டிருந்தான்.
‘அவனைப் பார்த்த சத்யாவிற்குள் முகிலன் சொன்னது உண்மையாக இருக்குமோ? அதனால்தான் இவன் இப்படி அமைதியாகவே இருக்கிறானோ?’ என்று தோன்றியது. இருப்பினும் எதுவும் பேசாமல் தான் எடுத்து வைத்திருந்த துணிகளுக்கான தொகையை செலுத்த கவுண்டர் பக்கம் சென்றாள்.
பின்னோடே வந்தவன் “சத்யா அவன் சொன்னது… ” என்று அவன் ஆரம்பிப்பதற்குள்¸ “அத்தனையும் உண்மைதானே?” என்றாள் அவள்.
“ஊரில் உள்ள எத்தனையோ பேர் இன்றுவரை என்னை தவறான பெண்ணாகவே நினைக்கும்படி செய்துவிட்டது உங்களுக்கு மகிழ்ச்சிதானே?” என்று கேட்டாள் கோபமாக.
“சத்யா ப்ளீஸ்..! நான் அன்று இருந்த நிலைமையில் என்ன செய்கிறேன் என்றே… ” என்றவனைப் பேசவிடாமல்¸ “போதும்! உங்கள் பேச்சு எதையும் கேட்க நான் தயாராக இல்லை” என்றவள் வெளியே செல்லத் தொடங்கினாள்.
‘கடவுளே! என்னைப் பற்றி அவளிடம் விளக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடு’ என்று இறைவனை வேண்டிக்கொண்டு¸ அவளுடனே சென்று அவளை காரில் ஏறச் சொன்னான்.
பதில் பேசாமல் விலகிச் சென்றவளை காரில் மெதுவாக பின் தொடர்ந்தான்.
சாலையில் செல்பவர்கள் அவளை ஒருமாதிரியாகப் பார்க்க “ஏன் இப்படி பின்னாலயே வந்து தொல்லை பண்றீங்க….? போங்க…” என்றாள் எரிச்சலைக் காட்டி.
“நீ கார்ல ஏறு… நான் எதுவுமே பேசாமல் உன்னைத் தொல்லை செய்யாமல் ஓட்டுகிறேன்” என்றவன் சரிந்து மறுபக்கக் கதவை அவள் ஏறுவதற்காக திறந்துவிட்டான். அதை மூடிவிட்டு பின்பக்கக் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தவளது முகம் கடுமையைக் காட்டியது.
‘இருக்கும் கோபத்தில் இந்தளவு இறங்கி வந்தாளே அதுவே பெரிது…’ என்றெண்ணியவன் மகிழ்ச்சியாகவே காரை செலுத்தினான்.
அவன் சொன்னதுபோல மருத்துவமனையை அடையும் வரை ஒருவார்த்தை கூட பேசவில்லை. கார் நின்றதும் வேகமாக இறங்கியவள் நேராகத் தாயார் இருக்கும் அறையை அடைந்தாள். அங்கு சஞ்ஜீவனின் பெற்றோரும் இருப்பதைக் கண்டவள் முகத்தை இயல்பாக்கினாள்.
சிரித்த முகத்துடனே பேசிக் கொண்டிருந்தாள்.
சற்றுநேரமாகியும் மகனைக் காணவில்லை என்றதும் “சஞ்ஜீவ் இன்னும் வரவில்லையே! எங்காவது போகிறேன் என்று சொன்னானா?” என்று கேட்டார் சங்கரன்.
“தெரியவில்லை சார்” என்று பதிலளித்தவள்¸ தாயாரிடம் சென்று அவர் அமர்ந்திருந்த கட்டிலில் உட்கார்ந்தாள்.
“சத்யா பெரியவங்க ரெண்டு பேரும் உன்னை அவங்க மகனுக்கு பெண் கேட்கிறாங்க? எனக்கு  ரொம்ப சந்தோசமா இருக்கு… இருந்தாலும் இது உன்னோட வாழ்க்கை அதனால நீதான் முடிவெடுக்கணும். சொல்லு… என்ன பதில் சொல்லட்டும்?” என்று தாயார் கேட்டதும்¸ அவர்களை பார்க்கத் திரும்பியவள் “பார்வதியம்மா¸ சார்… ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க… உங்க மகனை மணக்க எனக்கு விருப்பமில்லை.. நீங்கள் கேட்டு நான் மறுப்பதற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்று தன்னுடைய மறுப்பைத் தெரிவித்தாள்.
இதுதான் அவளது பதிலாக இருக்கும் என்பது ஏற்கனவே அவர்கள் அறிந்ததுதான். இருந்தாலும் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல்¸ உடனே பதிலளிப்பாள் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவளிடம் ‘இதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டியத் தேவையில்லை… ஆனாலும் இதைப்பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்’ என்று சொல்லிக் கிளம்பினர். அத்தோடு இதை மகன்தான் சரிசெய்ய வேண்டும்¸ அவனால்தான் சரிப்படுத்த முடியும் என்பதும் அவர்களது எண்ணமாக இருந்தது.
அதன்பிறகு சஞ்ஜீவ் அவளிடம் பேச முயன்றபோதெல்லாம் அவனைத் தவிர்த்தாள்.

Advertisement