Advertisement

அத்தியாயம் 15
சஞ்ஜீவனைத் தூக்கம் நெருங்கவில்லை.
சத்யா அவனைப் பார்த்தபோது அவள் கண்களில் தெரிந்த வலி அவனைப் பேசவிடவில்லை. அவளது அந்த முகமே நினைவில் வந்து அவனைத் தூங்கவிடாமல் செய்தது.
மறுநாளிலிருந்து அவனால் சத்யாவைப் பார்க்க முடியவில்லை.
பெற்றோர் சொன்னவற்றைக் கேட்டு¸ கல்பனாவின் பெற்றோர் வீட்டிலிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு… திருமணம் பற்றிப் பேசாமல் கல்பனாவை அவளது வீட்டிற்குத் திரும்பச் சொன்னான்.
சத்யாவைப் பார்க்காமல் இருப்பதும் அவனுக்குக் கஷ்டமாகவே இருந்தது. அவளோ மருத்துவமனையிலே அதிகநேரம் தங்கி தாயாரை கவனித்துக் கொண்டாள்.
அன்று மீனாட்சியின் கண்கட்டு அவிழ்த்தனர்.
மெதுவாகக் கண்களைத் திறந்தவர்¸ கண்களில் கூச்சமும் லேசான வெளிச்சமும் தெரிவதாகக் கூறவும் “அவருக்குப் பார்வை வந்துவிட்டது… தொடர்ந்து கண்களுக்கு மருந்துவிட்டு கவனிக்க வேண்டும்¸ ஸ்ட்ரெயின் பண்ணிக்கக்கூடாது. அதனால் இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கேயே இருக்கட்டும்” என்றுவிட்டார் டாக்டர்.
தாயாருக்குப் பார்வை திரும்பியதே பெரிய நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது அவளுக்கு.
வீடு திரும்பியவள் பார்வதியிடமும் சங்கரனிடமும் விஷயத்தைக் கூறினாள்.
“ரொம்ப சந்தோஷம் சத்யா… அம்மாவை பத்திரமாகப் பார்த்துக்கோ!” என்றனர் இருவரும்.
ஆபீஸ் அறையில் அவள் தன் வேலையில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே வந்த சஞ்ஜீவன்¸ அவளருகே வந்து “அன்று என்ன நடந்தது?” என்று கேட்டான்.
அவ்வளவு நேரமும் கணினி கீபோர்டை வேகமாகத் தட்டிக் கொண்டிருந்த அவளது கைவிரல்கள் நடுங்கியது. அதைக் கவனித்தவன் “இப்படி நடுங்குற அளவுக்கு என்ன நடந்தது? சொல்” என்றான் மீண்டும்.
பதில் பேசாமல் அவள் கணினி திரையையே வெறிக்க “உனக்கு எவ்வளவு திமிர்? கேட்டால் பதில் சொல்லமுடியாது அப்படித்தானே…” என்றவன்¸ அவள் கையைப் பிடித்து எழுப்பிவிட்டான்.
“ப்ச்… கையை விடுங்க” என்றாள்.
“நீ சொல்லு… நான் விடுறேன்”
“நான் என்ன சொல்லணும்னு எதிர்ப்பார்க்கறீங்க?” என்று அவள் கேட்க¸ “அன்றைக்கு ராத்திரி என்ன நடந்தது? அதைச்சொல் போதும்…” என்றான்.
அதைப் பற்றிப் பேசவிரும்பாதவள்¸ அவன் அதையே விடாமல் தொடர்ந்து கேட்கவும் “எனக்கு என்ன நடந்திருந்தாலும் உங்களுக்கு சந்தோஷம்தானே! அதை ஏன் கேட்கறீங்க?” என்றாள் சற்று எரிச்சலடைந்த குரலில்.
“சாதாரணமான ஒரு கேள்வி¸ அதற்கு பதில் சொல்ல முடியாதா சத்யா?” என்றான் இறங்கிவிட்ட குரலில்.
“இதையேதான் நானும் நீங்கள் என்னைப் போக சொன்னபோதெல்லாம் கேட்டேன். உங்களால் பதில் சொல்ல முடிந்ததா? இல்லையே…! அதைப்போல என்னையும் விடவேண்டியதுதானே…!” என்று பதிலளித்துவிட்டு அவள் தன் வேலையை கவனிக்க¸ ஆத்திரமுற்றவன் டேபிளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிப் போட்டு உடைத்தான்.
“ஏன் இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்குறீங்க?” என்று கேட்டாள் அவள்.
“என்ன… பைத்தியமா? நான் பைத்தியமா…? ஆமாம்… நான் பைத்தியம்தான்! என் மனைவி சாவிற்குக் காரணமான உன்னைப் பழிவாங்க நினைத்து… அதை முடிக்க முடியாமல் தவிக்கிறேனே… நான் பைத்தியம்தான்” என்று கத்தினான் சஞ்ஜீவன்.
“என்ன!! நீங்க என்ன சொல்றீங்க…!” என்று அதிர்ந்தாள் அவள்.
“ஆமாம் சத்யா… நீ தூரமாக இருந்தபோது என்னால் உன்னைப் பழிவாங்க என்று ஏதாவது செய்ய முடிந்தது. என்று நீ இங்கு வந்தாயோ அன்றிலிருந்து எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நான்… ஒரு பைத்தியமேதான்!” என்று குரல் இறங்கக் கூறியவன்¸ தலையில் கையை வைத்தவாறு அருகிலிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டான்.
அவனது பேச்சை அப்படியே உள்வாங்கியவளுக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. பழிவாங்குவதற்காகத்தான் துணிக்கடையிலும்¸ ஹோட்டலிலும் வேலை பார்க்க முடியாமல் செய்திருக்கிறான்.
அவனை நெருங்கியவள் “நீங்க இப்போது சொன்னதெல்லாம் உண்மையா?” என்று கேட்டாள்.
வருந்தினாலும் தயக்கமின்றி “ஆம்…” என்றான் அவன்.
“உங்க மனைவியின் சாவிற்கு நான் காரணம்னு சொன்னீங்க… அது எப்படி? எனக்கு உங்கள் மனைவி யாரென்றுகூடத் தெரியாது. அப்புறம் எப்படி நான் அவங்களோட சாவிற்கு காரணமானேன்?” என்றவளின்¸ கையைப் பிடித்திழுத்து வேகமாக அழைத்துச் சென்றான் அவனது அறைக்கு.
அறைக்குள் சென்று அவளது கையை விடுவித்தவன் “என் மனைவியை உனக்குத் தெரியாது என்றாய்… இவளை உனக்குத் தெரியாதா? இவளை நீ பார்த்தது இல்லை? பழகியது இல்லை?” என்று கோபத்துடனே சென்று ஒரு போட்டோவை எடுத்து வந்து காட்டினான்.
அதில் சஞ்ஜீவனின் தோளில் சாய்ந்து சிரித்துக் கொண்டிருந்தவள் ‘நித்யா…!’
சத்யாவின் உடன்பிறந்த சகோதரி….
இதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“இவளை உனக்குத் தெரியாது?” என்று அவளை உலுக்கினான் அவன்.
‘அப்படியானால் நித்யா இறந்துவிட்டாளா? எங்கேயோ உயிருடன்தான் வாழ்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தால்…. அவள் மண்ணுக்கு இறையாகிவிட்டாளா?’ நெஞ்சமும் கண்களும் கலங்க அவனை ஏறிட்டாள்.
அவன் அவளை கவனிக்காமல் தன்போக்கில் பேச ஆரம்பித்தான். “பாவம்… யாருமில்லாதவள். அவளை நான் எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டுமென்று நினைத்தேன்¸ தெரியுமா…? ஒரு தோழியின் வாழ்வு நன்றாக அமைவதைக்கூட சந்தோஷமாக எடுத்துக்கொள்ளாத உன் பொறாமையால்…. பணம் படைத்த என்னை அவள் திருமணம் செய்தது பிடிக்காமல்தானே அன்று அவள் கூப்பிடக் கூப்பிட நிற்காமல் சென்றாய்? உன் பின்னாலேயே வந்தவள்… ரோட்டில் வந்த வண்டியை கவனிக்காமல்… அடிபட்டு… ச்சே..! நீ விபத்தை நேரில் பார்த்திருக்கிறாயா…? என் கண்முன்னாலேயே என் மனைவிக்கு விபத்து நடந்து… அது எனக்கு எப்படி மறக்கும்? அதை மறக்க முடியாமல்தான் உன்னைப் பழிவாங்க நினைத்தேன்… இப்போதும் அது முடியவில்லையே என்பதால்தான்…” என்று நிறுத்தினான்.
அவனது பேச்சைக் கவனித்திருந்தவள் ஏதோ தோன்ற “உங்கள் மனைவிக்கு யாருமில்லை என்று சொன்னீர்கள்… அப்படின்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள்.
முறைத்துப் பார்த்தவன் “யாரும் இல்லாதவள்ன்னா அனாதை என்று அர்த்தம்… ஒரு இல்லத்தில் வளர்ந்தவள்” என்றான்.
“நான் அவளோட தோழின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? யார் சொன்னது?”
“நித்யாதான் சொன்னாள்… ஒருமுறை நாங்கள் காபி ஷாப் போயிருந்தபோது¸ நீயும் அங்கே வந்தாய். அப்போதுதான் உன்னைப் பற்றி சொன்னாள்…..” என்றான்.
அவன் இதைச் சொல்லி முடித்ததும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள் சத்யா.
“ஏய்! நான் என் வேதனையை சொல்வதைக் கேட்டால் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா?” என்று ஆத்திரமானான்.
சிரிப்புடனே “எனக்கு உங்களை… உங்கள் பேச்சை கேட்கிறபோது பரிதாபம்தான் தோன்றுகிறது” என்றாள்.
“பரி… என்ன பரிதாபமாக இருக்கிறதா?” என்றவனிடம்¸ “ஆமாம்… ஒரு முட்டாளிடம் கதை கேட்பது போல் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு வெளியே செல்லத் திரும்பினாள்.
“முட்… என்னைப் பார்த்து முட்டாள் என்கிறாயா?” என்றவன் அவளைப் பிடித்துத் திருப்பினான்.
அவனது கைகளைத் தட்டிவிட்டுவிட்டு “என்மேல் கை வைக்கும் பழக்கம் வேண்டாம்¸ ஆமாம்… சொல்லிட்டேன்” என்றவள்¸ “நீங்கள் முட்டாளேதான்” என்று அழுத்தமாகக் கூறினாள்.
கனல் பார்வையை வீசியவனிடம் “உங்கள் மனைவி யாருமில்லாத அனாதை என்று உங்களிடம் யார் சொன்னது?” என்று கேட்டாள்.
“அதைப் பற்றி உனக்கென்ன?”
“சும்மா சொல்லுங்களேன்… தெரிந்து கொள்வதற்காக கேட்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்” என்றாள்.
“என் ஆபீஸ் வந்தபோது தெரிந்து கொண்டேன்” என்றான் மொட்டையாக.
“உங்களுக்கு எப்படி யார் மூலம் தெரிய வந்ததோ எனக்குத் தெரியவில்லை… ஆனால் அவள் அனாதை இல்லை. அப்படிச் சொல்லி உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்” என்றாள்.
“என் மனைவி ஏன் என்னை ஏமாற்ற வேண்டும்?” என்று கேட்டான் அவன்¸ அவள் சொல்வதை பொய் என்று நிரூபித்துவிடும் நோக்கத்துடன்.
“ஓ… அதைச் சொன்னதும்கூட அவளேதானா..! ஆனால் நான் சொன்னது அவள் உங்கள் மனைவியாவதற்கு முன்பு…”
“சரி¸ எங்களது திருமணத்திற்கு முன்பாகவே இருக்கட்டும். நித்யா ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும்?” என்று கேட்டான்.
“ஏனென்றால்¸ நீங்கள் வசதியானவர் சார்…” என்றாள் ஒரு மாதிரியாக¸ தன் சகோதரி மீதான வெறுப்புடன்.
“நீ பேசுவதைப் பார்த்தால்… நீதான் இப்போது என்னிடம் கதைவிடுவது போலத் தோன்றுகிறது” என்றான்.
“ம்கூம்….” என்று ஒரு பெருமூச்சை வெளியிட்டவள்¸ “நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு நம்பத் தோன்றாது. இருந்தாலும்¸ என்னைப் பழிவாங்கும் எண்ணம் உங்களுக்கு இருப்பதால் இதை சொல்கிறேன். நம்புவதும் நம்பாமலிருப்பதும் உங்கள் விருப்பம்….” என்றவள்¸ “நித்யா என் சகோதரி” என்று உண்மையை அவனிடம் கூறினாள்.
நம்பாமல் அவன் பார்க்க¸ “நீங்க சமூகத்தில் ஒரு நல்ல நிலையில் இருப்பவர்தானே…? உங்கள் மனைவி என்று வரும்போது கண்ணை மூடிக்கொண்டு தாலி கட்டிவிடுவீர்களா? அவள் பிண்ணனி என்ன? அவள் சொல்வது உண்மைதானா என்று விசாரிக்க மாட்டீர்களா?” என்று கேள்வி மேல் கேள்வியாக அவனைக் கேட்டவள்¸ கடைசியாகச் சொன்னாள் “நீங்க என்னவோ உங்கள் மனைவியின் சாவிற்கு நான்தான் காரணம் என்று நினைத்து பழிவாங்கக் கிளம்பிவிட்டீர்கள். உங்களைப் போலவே நானும் என் அப்பாவை இழந்ததற்கு¸ அம்மாவின் பார்வை பறிபோனதற்கு என்று காரணங்களைச் சொல்லி பழிவாங்கலாம் இல்லையா…?” என்று கேட்டவள் அவனிடம் ஒரு வெறுப்புப் பார்வையை செலுத்திவிட்டு¸ அறையிலிருந்து வெளியேறினாள்.
சஞ்ஜீவிற்கு தலை வலிப்பது போல் இருந்தது.
‘நித்யா பணக்கார வாழ்விற்காக என்னை ஏமாற்றினாளா? இவள் நித்யாவின் சகோதரியா?
ஒருவேளை இவள் சொல்வது உண்மையாக இருந்து நான்தான் ஏமாந்தது மட்டுமில்லாமல் தவறும் செய்துவிட்டேனா?’ என்று பலவாறு எண்ணிக் குழம்பியவன்¸ காரை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டான்.
அவன் சென்ற இடம் ‘மகிளா அன்பு இல்லம்’.
இந்த இல்லத்திலிருந்துதான் நித்யா டோனேஷன் கேட்டு வந்தாள். இங்குள்ள தலைமை மேடத்திடமும் சம்மதம் பெற்ற பின்தான் அவளை மணமுடித்தான். அவள் மறைவுக்குப் பிறகும் வருடந்தோறும் தவறாமல் நன்கொடை அளித்து வருகிறான்.
அவனைக் கண்டதும் வரவேற்றவர்களிடம்¸ “தலைமை மேடத்தைப் பார்க்க வேண்டும்” என்றான்.
வரவேற்று உபசரித்தவரிடம்¸ நேரடியாகவே தான் வந்த விஷயத்தைப் பற்றிப் பேசலானான். “மேடம் என் மனைவி நித்யா இங்கு வளர்ந்தவள்தானே…?” என்று நேரடியாகத் தான் கேட்க நினைத்ததைக் கேட்டான்.
“இல்லையே… அவள் அப்பாவோடு அடிக்கடி இங்கு வருவாள்” என்றார் அந்த மேடம்.
சத்யா சொன்னதெல்லாம் உண்மையாகத்தான் இருக்குமோ என்றெண்ணத் தொடங்கிய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான் “பின்னே… நீங்கள் நான் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்டபோது அவள் அப்பா பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை?” என்று.
“நித்யாதான் அவள் அப்பாவிற்கு உங்களை ரொம்பவும் பிடித்துவிட்டதாகவும் ஆனாலும் எனக்கும் பிடித்தால் சந்தோஷமாக மணப்பேன் என்றாள்… அதனால் நான் அவரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை…” என்று கூறி அவன் தன் ஆசை மனைவிமீது வைத்திருந்த அன்பையும் அவள்மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கையையும் அழித்தார்.
மிச்சம் மீதியாக ‘இல்லை… இல்லை… அப்படியெல்லாம் இருக்காது’ என்ற அவனது நப்பாசையாலும்¸ ஒருவேளை அப்படியே இருந்தாலும் முழுத்தெளிவு பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தாலும் மற்றும் இதையெல்லாம் சொன்னவளைப் பற்றியும் அறியும் மார்க்கமாகவும் “அவளுக்கு கூடப் பிறந்தவங்க யாராவது இருக்குறாங்களா?” என்று கேட்டான்.
“ம்…. இருக்குறாங்களே! சத்யான்னு பெயர்¸ அவள் தங்கை… நல்ல பெண். தந்தை இறந்துவிட்டாலும் கூட எப்போதேனும் நேரம் கிடைக்கும்போது வந்து போவாள்” என்றவர்¸ “இன்றைக்கு ஏன் இதையெல்லாம் திடீரென்று கேட்கிறீர்கள்?” என்று அவனிடம் கேள்வியெழுப்பினார்.
“சும்மாதான் மேடம்… ஒரு நல்லது செய்வதற்குத்தான் இந்த திடீர் தேவை” என்று காரணத்தைக் கூறாமல் விடுத்து¸ அவர்களது இல்லத்திற்கு ஏதேனும் உடனடித் தேவை இருக்கிறதா என்று கேட்டு¸ அவற்றிற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிப் புறப்பட்டான்.
அறையைவிட்டு வெளியேறியவனின் பார்வையில் கைக்குழந்தையுடன் சென்ற ஒரு பெண் தென்பட்டாள். இவளை அவன் இல்லத்திற்கு வந்தபோதெல்லாம் நித்யாவுடன் பார்த்திருக்கிறான். எதிர்ப்பட்டவளும் அவனைக் கண்டதும் வந்து நலன் விசாரித்தாள்.
“ஒரு விஷயம்….” என்று நிறுத்தி¸ “மறைக்காமல் பதில் சொல்வீர்களா?” என்று கேட்டு நித்யாவைப் பற்றிய அவளறிந்த தான் சம்பந்தப்பட்ட விபரத்தைக் கூறுமாறு கேட்டான்.
“நாங்கள் உங்களிடம் டொனேஷன் கேட்டு வந்தபோது உங்கள் பார்வை அவள்மேல் படிந்தததைக் கவனித்து ஒரு பரிதாபத்தைத் தோற்றுவிக்கவே அவள் ‘எங்களை’ என்று அவளையும் எங்களுடன் சேர்த்து அனாதை என்றாள். அதன்பிறகு நீங்கள் அவளை மணக்கக் கேட்டது – அவளுக்கும் சரி எனக்கும் சரி அவளை ஒரு அனாதை என்றெண்ணிதான் நீங்கள் கேட்டீர்கள் என்பது தெளிவாகவே புரிந்தது… நீங்கள் அப்படிக் கேட்டதும் அவளுக்கு உங்களோடு வசதியாக வாழவேண்டும் என்று ஆசை… நானும் தோழியின் விருப்பத்திற்காக வேறு எதுவும் பேசவில்லை… ” என்று தான் அறிந்தவற்றைத் தெளிவாகக் கூறினாள்.
“அவளுக்கு அப்பா¸ அம்மா…” என்று அவன் இழுக்க¸ “இருக்கிறார்களே… ஆனாலும் அவளுக்கு அந்த நேரத்தில் குடும்பம் பெரிதாகத் தோன்றவில்லைபோலும். உங்களுடன் வந்துவிட்டாள்…” என்று தனக்குத் தெரிந்ததை வேகமாகக் கூறியவள்¸ அவன் அவளது குடும்பத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து “…திருமணத்திற்குப் பிறகு சொல்லிவிடுவேன்… என்றுதான் அவள் சொன்னாள். சொல்லவில்லை என்பது இப்போது புரிகிறது” என்றாள் ஒரு வருத்தமான முறுவலுடன்.
நன்றி சொல்லி புறப்பட்டான் சஞ்ஜீவன்.
‘ச்சே..!! எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை! அதையெல்லாம் உண்மை என்று நம்பி மணந்து…. அவ்வளவு மகிழ்ச்சியாக… இரண்டு வருடங்கள் வாழ்ந்தும்¸ எதையுமே சொல்லாமல் சாகும்வரை மறைத்துவிட்டாளே… பாவி!!’ என்று மனைவியை மனதிற்குள்ளேயே திட்டினான்.
‘இப்படிப்பட்ட ஒரு பொய்க்காரியின் இழப்புக்கு சத்யாதான் காரணம் என நினைத்து அவளை எவ்வளவு துன்புறுத்திவிட்டேன். அவள் சொன்னதுபோல் நான் ஒரு முட்டாள்தான். எதையுமே ஒரே கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தது மட்டுமல்லாமல் பழிவாங்கும் படலத்தையும் நடத்தினேனே’ என்று தனக்குள்ளே புழுங்கினான்.

Advertisement