Advertisement

அத்தியாயம் 14
சற்று தூரம் சென்றபின் சத்யாவிடம் கேட்டான் “நீ எப்போது இங்கிருந்து போகிறாய்?” என்று.
அவள் பதில் பேசாமல் அமைதியாக இருக்கவே¸ காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க வாகாகத் திரும்பி அமர்ந்தான்.
சத்யா கண்ணாடி வழி வெளியே பார்த்தாள்.
“ம்க்கும்…” என்று தொண்டையைச் செறுமிக் கொண்டு¸ மீண்டும் கேட்டான் “நான் உன்னிடம்தான் கேட்டேன்¸ எப்போது போகிறாய்? என்று” என்றான்.
“ஏன் சார்¸ எப்போதும் இதையே கேட்கிறீர்கள்? நான் இங்கிருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.
“எனக்குப் பிடிக்கவில்லை” என்றவனிடம்¸ “என்ன பிடிக்கவில்லை?” என்று மறுபடியும் கேட்டாள்.
“நீ எங்கள் வீட்டில் நடமாடுவது எனக்குப் பிடிக்கவில்லை” என்றான்.
“சரி சார்… நான் அங்கு வரநேராமல் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.
“ம்கூம்… அது சரிவராது. அதுதான் உன் அம்மாவிற்கு ஆபரேசன் முடிந்துவிட்டதே! வேறுஇடம் பார்த்துப் போய்விடு”
“சார் இன்னும் அம்மாவுக்கு கட்டுகூட பிரிக்கவில்லை… கட்டவிழ்த்த பிறகுதான் பார்வை பற்றித் தெரியும். கண்கள் சரியானாலும்கூட அம்மாவை என்னுடனே வைத்துக்கொள்ள உங்கள் அப்பா சொன்னார்கள்… ஆனால் நீங்கள் எப்போதும் என்னை சங்கடப்படுத்துவதிலே கவனமாக இருக்கிறீர்கள்…. அது ஏன்?” என்று தன் மனதில் பல நாட்களாகக் குடிகொண்டிருந்த கேள்வியை அவனிடம் கேட்டாள்.
பல்லைக்  கடித்து கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்¸ பதிலளிக்காமல் காரை ஸ்டார்ட் செய்தான்.
நர்ஸ் ஒருத்தி மீனாட்சிக்கு இரவு சாப்பாட்டை ஊட்டிக் கொண்டிருந்தாள். தினமும் இவளே சாப்பாட்டை கொடுப்பாள் என்பதால் “இவ்வளவு நேரமும் நீங்கள் வருவீர்கள் என்று வெயிட் பண்ணிவிட்டு இப்போதுதான் ஊட்ட ஆரம்பித்தேன்” என்றாள் அந்த நர்ஸ்.
சஞ்ஜீவனைப் பார்க்க¸ அவன் சுவற்றை வெறித்தான்.
“பரவாயில்லை சிஸ்டர்… நீங்கள் போங்கள்” என்று அவரிடம் சொல்லிவிட்டு¸ கைகழுவி வந்து தாயாரிடம் பேசியவாறே எல்லா சாப்பாட்டையும் கொடுத்துமுடித்தாள்.
அவ்வப்போது சிறு சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்¸ தான் வெளியே காத்திருப்பதாக சொல்லிக்கொண்டு கிளம்ப “யாரது சத்யா?” என்று கேட்டார் தாயார்.
“அதும்மா… நமக்கு கண் ஆபரேசன்க்கு செலவு செய்தாங்களே சங்கரன் சார்… அவரோட பையன்¸ பெயர் சஞ்ஜீவன்” என்றாள்.
வணக்கம் சொன்னவருக்கு¸ வணக்கம் தெரிவித்து அவரிடம் நலன் விசாரித்துவிட்டு வெளியே சென்று காரில் அமர்ந்தான். சிறிதுநேரத்தில் அவள் வர புறப்பட்டார்கள்.
சற்றுதூரம் சென்றதும் மறுபடியும் அதே கேள்வி.
“சார்…” என்று இழுத்தவள்¸ பதிலேதும் சொல்லாமலே இருக்க¸ எரிச்சலடைந்தவன் “இறங்கு” என்றான்.
“சார்!!” என்றதிர்ந்தாள் சத்யா.
“ப்ச்… காரைவிட்டுக் கீழே இறங்கு! எனக்கு உன்னைப் பார்த்தாலே பிடிக்கவில்லை என்று நான் சொல்வது உன் மண்டையில் ஏறவில்லை… ம்… இறங்கு!” என்று கோபத்தைக் காட்டினான்.
“சார்…” என்று அவள் இன்னும் தயங்க¸ அவளது தயக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் “சீக்கிரம் இறங்கு… எனக்கு நேரமாகிவிட்டது! நான் ஒருவரைப் பார்க்கப் போகவேண்டும். வீட்டிற்கு வழி தெரியும்தானே..! பஸ் பிடித்துப் போ.. அல்லது நடந்து… இல்லை எப்படியோ போ. முதலில் என் காரை விட்டிறங்கு” என்று அவளை கீழே இறங்கச் சொல்வதிலே கவனமாக இருந்தான்.
கண்களில் நிறைந்த நீருடன் இறங்கினாள் அவள். பயத்துடன் சுற்றிலும் பார்த்தாள்.
சுற்றுப்புறம் முழுவதும் வெளிச்சமாகவே இருந்தாலும்¸ தனிமை ஏதோ பெரிய பள்ளத்தில் நிற்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது. அவன் காரைக் கிளப்பிக் கொண்டு வேகமாகப் போய்விட்டான்.
கார் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றவள்¸ சற்று அருகிலே கேட்ட நாய்களின் சத்தத்தில் நடக்க ஆரம்பித்தாள்.
பத்தடி தூரத்திலே இருந்த பஸ் ஸ்டாப் அருகே சென்றாள். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் அரைகுறை ஆடையில் புரண்டு கொண்டிருக்க¸ அங்கு செல்லாமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
‘இங்கிருந்து வீடு எவ்வளவு தூரம்? திரும்பி மருத்துவமனை செல்வதென்றாலும் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும்?’ என்று எதுவும் புரியாமல் குழம்பிப்போனவள்¸
“முருகா! எனக்கு எந்த பிரச்சினையும் வராமல் வீடுபோய் சேரவேண்டும்!” என்று கடவுளை வேண்டிக் கொண்டு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு நடக்கலானாள்.
தூரத்தில் இரண்டு பைக் வருவது தெரிந்தது. அவளைக் கடந்து சென்ற பைக்குகள் இரண்டும் மெதுவாகத் திரும்பியது. சற்றே தலையைத் திருப்பிப் பார்த்த சத்யாவிற்கு வியர்த்தது.
இரண்டு மோட்டார் சைக்கிளிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு பேர். இவளைப் பார்த்துத்தான் ஏதோ பேசிக் கொண்டார்கள்.
எத்தனை செய்திகள் பேப்பர்¸ டி.வி. என்று பார்த்து கேட்டிருப்பாள். இன்று அவளுக்கு இப்படி ஒரு நிலை… எல்லாம் அந்த சஞ்ஜீவனால் வந்தது…. நடையை எட்டிப் போட்டாள்.
இரு மோட்டார் சைக்கிளும் மெதுவாகப் பின்தொடர்ந்தது.
காரிலிருந்து அவளை இறக்கிவிட்டவன் சென்ற இடம் ஏரிக்கரை.
காரை விட்டிறங்கியவன்¸ காரின் முன்பக்கத்தில் சாய்ந்து நின்றவாறு இருளை வெறிக்க ஆரம்பித்தான்.
கொஞ்ச நேரத்தில் செல்போன் அழைத்தது.
எடுத்துப் பார்த்தவன்¸ வீட்டிலிருந்து என்றதும் அழைப்பை ஏற்று “சொல்லுங்கம்மா…” என்றான்.
“என்ன தம்பி¸ இன்னும் ஹாஸ்பிட்டலைவிட்டுக் கிளம்பவில்லையா?” என்று அவர் கேட்டதும்¸ ‘சத்யாவை பத்திரமாக அழைச்சிட்டு வந்துடுப்பா…’ என்று கிளம்பும்போதே அவர் சொன்னது நினைவு வரப்பெற்றவனாக “இதோம்மா… வந்துட்டுத்தான் இருக்கிறோம்” என்று சொல்லி போனை கட் செய்தான்.
‘ச்சே..! என்ன முட்டாள்தனம் பண்ணிவிட்டேன். சத்யா இல்லாமல் வீட்டிற்குப் போனால் அம்மா என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவள் இன்னும் வீடுபோய் சேரவில்லையென்றால்…  அவளுக்கு ஏதேனும்… கடவுளே!’ என்றெண்ணி பயந்து அவசர அவசரமாகக் காரில் ஏறிச் சென்றான்.
அவளை விட்டுவிட்டுச் சென்ற இடத்தில் காரை நிறுத்தி இறங்கினான். இடம் மனித நடமாட்டமே இல்லாமல் அமைதியாக இருந்தது.
“சத்யா…! சத்யா…!” சத்தமாக அழைத்தான்¸ பதிலில்லை. நாய்களின் சத்தம் பலமாக கேட்கத் தொடங்கியது.
சற்று தூரம் நடந்தே சென்றவன்¸ அவளைக் காணாமல் வீட்டிற்கு போன் செய்தான்.
பார்வதி எடுத்ததும் “அம்மா சத்யாவைப் பற்றி உங்க…” எனத் தொடங்கியவனிடம்¸ “அவளைப் பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை¸ நீ பத்திரமா அழைச்சிட்டு வா” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
“அம்மா… அம்… ம்ப்ச்..!” என்று காலைத் தரையில் உதைத்தான். காலில் ஏதோ தட்டுப் பட்டதுபோலத் தோன்ற குனிந்து பார்த்தான்.
அது ஒரு செருப்பு. மற்றொன்று சற்று தொலைவில் கிடந்தது.
“இது… இது… சத்யா போட்டிருந்தது…! சத்யா…! சத்யா… உனக்கு என்ன ஆனது!” என்று கொஞ்சதூரத்திற்கு எதுவுமே புரியாமல் ஓடியவன்¸ நினைவு வந்தவனாக காருக்குத் திரும்பினான்.
சாலையோரமாக அவளைத் தேடியவாறே காரை மெதுவாக ஓட்டினான். வீட்டிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. எடுத்து என்ன பதில் சொல்வதென்று புரியாமல்¸ அப்படியே விட்டுவிட்டான்.
தேடிக்கொண்டே கார் வீட்டை அடைந்துவிட்டது.
இனி எப்படியும் வீட்டில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று போனை எடுத்தான்.
“அம்மா…” என்று குரல் நடுங்க அழைத்தவனிடம்¸ “என்ன ஜீவா? மணி பதினொன்றாகுது…?” என்றார்.
சற்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு “வந்து… அம்மா…” என¸ “நீ எங்கே போவதாக இருந்தாலும் காலையில் போகலாம் திரும்பி வீட்டுக்கு வா…” என்றார் தாயார்.
எப்படியும் சொல்லிவிட வேண்டும் என்றெண்ணியவன் “அம்மா சத்யா…” என்றான்.
“ஆமாம்¸ சத்யாதான் சொன்னாள். இவ்வளவு நேரம் போனபின் உனக்கு யாரையோ பார்க்க வேண்டுமென்று அவளை கேட்டருகே இறக்கிவிட்டுப் போனாயாம்…”  என்றார்.
‘அப்படியா சொன்னாள் அவள்!’
“இதோ வந்துவிட்டேன்மா…” என்றவன்¸ காரை கேட்டினுள் கொண்டுவந்து வீட்டிற்குள் நுழைந்தபோது ஹாலில் அவனது பெற்றோருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
அவளைப் பார்த்ததும் அவன் மனது எப்படி உணர்ந்தது என்றே அவனுக்குப் புரியவில்லை… ஆனால் அவனது கையிலிருந்த சிறுசிறு முடிகள் புல்லரித்துப் போய் அவனுக்கிருந்திருந்த பயத்தைக் காட்டியது.
“அதோ… ஜீவன் வந்துவிட்டான் பார்வதி” என்று சங்கரன் சொல்ல¸ “நல்ல பிள்ளைப்பா நீ¸ வெளியே போறதுக்கு நல்லநேரம் பார்த்து வைச்சிருக்கே” என்றார் தாயார் விளையாட்டாக.
பின்னர் “வா… வந்து பால் சாப்பிடு” என்றார். தாயாருடன் டைனிங் டேபிளை நோக்கிச் சென்றவனது பார்வை சத்யாவை விட்டுச் சற்றும் அகலவில்லை.
தலைமுடி நன்றாகக் கலைந்து¸ ஏதோ ஒரு ஆபத்திலிருந்து தப்பி வந்த உணர்வும்¸ அந்த ஆபத்தை எண்ணி… அதனால் அவள் கண்களில் ஒருவித பயமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
“சத்யா நீயும் ஒரு டம்ளர் பால் எடுத்துக்க¸ ரொம்ப டயர்டா தெரிகிறாய்!” என்று பார்வதி கொடுத்த பாலை வாங்கிக் குடித்தவள்¸ பெரியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
போகும்போது சஞ்ஜீவனிடம் திரும்பி “நீங்கள் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி சார்” என்று தன் இரு கரங்களையும் குவித்து¸ அவன் முகம் பாராமலே சொல்லிவிட்டுச் சென்றாள்.
“அம்மா… இதோ வந்துடுறேன்” என்று சத்யாவிடம் ஓடினான்.
“சத்யா ஒரு நிமிடம் நான் சொல்வதை…” என்று அவன் சொல்ல¸ அவள் அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள். அந்த பார்வைக்குப்பின் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை… நின்றுவிட்டான்.
வேக வேகமாகத் தன் இருப்பிடத்திற்கு ஓடிச் சென்றவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை¸ வெடித்து அழுதாள்.
இன்று அவளுக்கு நடக்க இருந்தது எவ்வளவு பெரிய கொடுமை. அதிலிருந்து அவள் தப்பி வந்ததே இறைவன் செயல்தான்.
ஆம். அவள் நடக்க ஆரம்பித்தபோது அவளைப் பின்தொடர்ந்த வண்டிகள் அவளருகே வந்ததும்¸ அந்த நால்வரும் வண்டியை விட்டிறங்கி அவளோடு இணைந்து நடக்கத் தொடங்கினர்.
நாலுபேருமே நன்றாகக் குடித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
ஒருவன் கேட்டான் “என்னம்மா… இந்த நேரத்தில் யாரும் கிடைக்கவில்லையா?” என்று.
“எங்ககூட வர்றியா? உனக்கு வலிக்காமல் நடந்துக்குறோம்” என்றான் மற்றொருவன்.
“நாங்க நிறைய பணம் தருவோம்” என்றான் இன்னொருவன்.
அவள் பதில் பேசாமல் வேகமாக நடக்க “டேய்… இவகிட்ட என்னடா பேச்சு வேண்டிக்கிடக்கு!” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அவள் தோளில் கைவைத்தான்.
சட்டென தட்டிவிட்டவள் “ஏன் இப்படி நடந்துக்குறீங்க? உங்ககூட பெண்கள் யாரும் பிறக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு நில்லாமல் நடந்தாள்.
அவர்களும் விடாமல் நடக்க “எல்லாரையும் அக்கா¸ தங்கையா பார்த்தால் பெண்டாட்டியாக யாரைப் பார்ப்பது?” என்று சிரித்தான் ஒருவன்.
“அதுக்கு வீட்ல சொல்லி கல்யாணம் செய்யணும்” என்றவள் ஓட ஆரம்பித்தாள்.
“நாளைக்கே வீட்டில் அதுபத்தி பேசுகிறோம். ஆனால்¸ எங்கள் நால்வருக்கும் இன்றைக்கு நீ பெண்டாட்டியாக இரு” என்று துரத்தியவர்கள்¸ சற்று தொலைவிலே அவளைப் பிடித்துவிட்டனர்.
அவர்கள் அவளைப் பிடித்தபோது இரவு ரோந்து செல்லும் போலீஸ் வாகனம் வந்தது. இவர்களைக் கண்ட போலீசார் வாகனத்தை நிறுத்தினர். துப்பாக்கியோடு இறங்கிய போலீசைக் கண்டதும்¸ ஓடினால் ஆபத்து என்றுணர்ந்த நால்வரும் ஒதுங்கி நின்றனர்.
ஜீப்பை விட்டிறங்கிய போலீசாரின் அருகே சென்று நின்றுகொண்டாள் சத்யா.
விசாரித்தவரிடம் மருத்துவமனை சென்று வந்ததாக அவள் சொல்ல¸ மருத்துவமனைக்கு போன் செய்து அறிந்துகொண்டு¸ உண்மை என்றதும் அவளை ஜீப்பில் ஏறச் சொன்னார்.
பின்னர் அவர்களிடம் திரும்பி “ஏன்டா… குடித்தால் உங்களால் சும்மா இருக்க முடியாதா?” என்றார்.
“இல்லை சார்¸ சும்மா ஒரு விளையாட்டுக்கு…” என்று ஒருவன் சொல்ல¸ ஓங்கி ஒரு அறைவிட்டார்.
“ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவது உங்களுக்கு விளையாட்டா…? டிரைவர் நீ அந்தப் பெண்ணை அட்ரஸ் கேட்டு வீட்டில் விட்டுவிட்டு வா” என்றதும்¸ ஜீப்பிலிருந்த சத்யா இறங்கி வந்து நன்றி சொல்ல “இருக்கட்டும்மா.. இனிமேல் இப்படி ராத்திரி நேரத்தில் தனியாகப் போகாதே. இன்றைக்கு நாங்கள் வந்தோம்¸ இல்லையென்றால் உன் நிலைமை என்ன என்று நினைத்துப் பார்… கவனமாக இரு” என்று அனுப்பிவைத்தார்.
அழைத்துச் சென்ற டிரைவரிடம் கேட்டருகே நிறுத்தச் சொன்னாள். அவள் உள்ளே செல்கிறாளா என்று கவனித்த பின்னரே கிளம்பினார் டிரைவர்.
வீட்டில் பார்வதி கேட்டபோது¸ அவன் நடுரோட்டில் இறக்கிவிட்டதையோ¸ இப்படிப் பிரச்சினையில் மாட்டியதையோ சொல்லாமல்¸ அவன் யாரையோ பார்க்க வேண்டுமென்றுதானே சொன்னான் என்று அதைச் சொல்லி¸ அதனுடன் ‘வாயில்வரை கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றான்’ என்பதையும் சேர்த்துச் சொன்னாள்.
நடந்ததைச் சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால்¸ அவர்களது மகனை அவர்களிடமே குறைத்துச் சொல்ல அவள் விரும்பவில்லை. ‘இருந்தாலும் அவனுக்கு நான் என்ன பாவம் செய்தேன் இப்படி என்னை கஷ்டப்பட வைக்கிறான். அதற்கெல்லாம் அவனால் காரணம் கூற முடிந்தால்கூட… இன்று அவனால் என் பெண்மை பறிபோக இருந்ததே… இதற்கு அவனால் எந்தவொரு காரணமும் சொல்ல முடியாதே…!’ என்று பலவற்றையும் நினைத்துக் கொண்டிருந்தவள்¸ ‘கடவுளே எந்த அசம்பாவிதமும் நடக்காமல் காத்ததற்கு நன்றி!’ என்று கடவுளிடம் மானசீக நன்றியைத் தெரிவித்துவிட்டுத் தூங்க ஆரம்பித்தாள்.

Advertisement