Advertisement

அத்தியாயம் 13
மகன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டபடியால் அதிகமாகவே மகிழ்ந்த தாயார்¸ நன்றாக சிரித்துவிட்டு மகனிடம் கேட்டார். “சரி தம்பி… பெண் எப்படி இருக்க வேண்டுமென்று  நீ சொல்லவேயில்லையே… சொல்!” என்றார்.
அம்மா… நான் பார்த்து திருமணம் முடித்தவளுடன் வாழும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை…. அதனால் உங்களுக்குப் பிடித்த எந்தப் பெண் என்றாலும் எனக்கு சம்மதம்தான்” என்றான்.
எனக்குப் பிடித்தமாதிரி என்றால்…? நம் சத்யாவை….” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் “வேண்டாம் அம்மா… கல்பனாவை கேளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
கல்பனாவையா! அவள் உனக்கு ஏற்ற பெண் இல்லையே மகனே! நான் சத்யாவை மாதிரிப் பெண் பார்க்கலாமா? என்று கேட்கும்முன் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாய்?’ என்று மகனிடம் மனதாலே கேட்டுக் கொண்டார்.
அவனது அந்த முடிவைக் கேட்டவர் அதை ஜீரணித்துக் கொள்வதற்குள்ளாக “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கள் அத்தை…” என்று காலில் விழுந்தாள் கல்பனா.
குனிந்து பார்த்தார். கல்பனா முகத்தில் வெட்கத்தை வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள்.
கடவுள் இப்படித்தான் என்று நினைத்தால் நாம் என்ன செய்ய முடியும்? என்றெண்ணிக் கொண்டு¸ அவளைத் தூக்கிவிட்டவர் “என்ன கல்பனா… திடீரென்று காலில் விழுகிறாய்?” என்று கேட்டார்.
அத்தான் சொன்னதைக் கேட்டேன்….”
அப்படியா… சரி” என்றவர் வேறெதுவும் சொல்லாமலே போய்விட்டார்.
அவர் எதுவும் சொல்லாததால் கோபமுற்றவள் மனதிற்குள் கறுவினாள்¸ ‘ஏய் கிழவி… உன் மகன் கல்பனாவைக் கேளு என்ற போது உன்முகம் ஏன் அப்படி மாறியது? என்னை அவன் திருமணம் செய்வது பிடிக்கவில்லை…. அப்படித்தானே! ஆனால் என்ன செய்வது? உன் மகன்… அவனே சொல்லிவிட்டானே… இனி என்ன செய்யப் போகிறாய்?’ என்று.
ஆனாலும் தாயார் சத்யாவை சொல்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை… ‘உங்களுக்குப் பிடித்த அவளை என்னால் மணக்க முடியாதும்மா… என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று தாயாரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டினான்.
சங்கரனுக்கும் மற்ற வேலையாட்களுக்கும் விஷயம் சென்றது. யாருமே பெரிதாக மகிழ்ந்துவிடவில்லை. இதையும் கவனித்த கல்பனா ‘கல்யாணம் மட்டும் நடக்கட்டும்¸ அப்புறம் பார்த்துக்கிறேன் உங்க எல்லாரையும்…’ என்று கறுவிக் கொண்டாள்.
சத்யாவும் சஞ்ஜீவன் கல்பனாவை மணப்பான் என்று எண்ணவில்லை.
கல்பனா தன் தந்தைக்கு தகவல் தெரிவித்தாள். அவர்களது பேச்சை சங்கரன்¸ பார்வதி…. இவர்கள் ஏன் சஞ்ஜீவனே கேட்கும்படியான சூழ்நிலை உருவானது.
சந்தோஷமிகுதியில் இருந்த கல்பனா திறந்திருந்த கதவை கவனிக்காமல் எப்போதும் போல சத்தமாகவே பேசினாள்.
கல்யாணத்திற்குப் பிறகு அந்த ரெண்டு கிழத்தையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிடுவேன்” என்றாள்.
அந்தப் பக்கமிருந்த தந்தையின் பேச்சைக் கேட்டுவிட்டு “அப்பா… அத்தானே என்னைத் திருமணம் செய்ய கேட்டிருக்கார். அவரிடம் நான் அவர்கள் என்னை அப்படி¸ இப்படி செய்தார்கள் என்று கொஞ்சம் அழுது நாடகமாடினால் போதும் அத்தான் என்னை நம்பி… அப்படியே என் பேச்சைக் கேட்பார்” என்றாள் உறுதியாக.
மறுபடியும் தந்தை ஏதோ பேச அதைக் கேட்டவள் “இந்த வேலைக்கார கழுதைகள் எல்லாம் என்னைக் கண்டாலே முகத்தை ஏழுமுழத்திற்கு தூக்கி வைத்துக் கொள்ளுகிறதுகள் அப்பா… அதனால் எல்லாரையும் துரத்திவிட்டு எனக்கு மரியாதை செய்யும் ஆட்களைப் பார்த்து வேலைக்கு வைக்க வேண்டும. நீங்களும் அம்மாவும் என்கூடத்தான் இருக்கணும்….” என்று ஏதேதோ பேசிக்கொண்டே போனாள்.
அவளது இந்த பேச்சைக் கேட்க நேர்ந்த மூவரது மனநிலையுமே ஒவ்வொரு விதமாக இருந்தது.
இந்தப் பெண்ணைப் போய் திருமணம் செய்வதாக நம் மகன் சொல்லிவிட்டானேங்க… வீட்டிற்கு மருமகளாக வரும் முன்னரே நம்மை அனுப்பிவிடுவேன் என்று சொல்கிறாளே” என்று கணவனிடம் அங்கலாய்த்தார் பார்வதி.
அப்படியெல்லாம் எதுவும் நடக்காது பார்வதி… எல்லாம் நல்லதாகவே நடக்கும். நீ பயப்படாமல் இயல்பாக இரு” என்று மனைவியைத் தேற்றியவரும்கூட மகன் இவளை மணந்தால்  எப்படி சந்தோஷமாக இருப்பான் என்று சிந்திக்கலானார்.
என் மனதை என்னிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் மறைக்க விரும்பி தப்பான முடிவெடுத்துவிட்டேனே! இதிலிருந்து எப்படி மீள்வது என்று யோசிக்கலானான் சஞ்ஜீவன்.
இப்போதும்கூட அவனது கோபம் சத்யாவின் மேல்தான் திரும்பியது. அவள் மட்டும் அன்று ஒருநிமிடம் நின்று நித்யாவின் பேச்சைக் கேட்டிருந்தால்… அந்த விபத்து நடந்திருக்காது. இன்று என் பார்வை உன்மேல் விழுந்திருக்காது…. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையும் உருவாகியிருக்காது. அதனால் முதலில் உன்னைத்தான் என் பார்வையிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதன்பிறகு இந்தத் திருமணப் பேச்சை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவு கண்டுவிட்டவன் நிம்மதியாகத் தூங்கினான்.
திருமணப் பேச்சு வந்ததிலிருந்தே சத்யாவை அதிகமாக வேலை வாங்கினாள் கல்பனா.
அதை கவனித்த சங்கரன் அவளிடம் “சத்யா வீட்டு வேலைக்கு வந்த ஆள் இல்லை கல்பனா. என் கம்பெனி கணக்குகள் பார்ப்பதற்காக வந்த பெண். அதனால் அவளிடம் வீட்டு வேலைகள் செய்யச் சொல்வதை நிறுத்திக்கொள்” என்றார். பார்வதியும் அதை ஆமோதித்தார்.
ஆனால் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் “அதெப்படி மாமா? வீட்டோடு இருந்து வேலை செய்ய வேண்டுமென்றால் வீட்டு வேலையும் செய்துதானே ஆக வேண்டும்” என்றாள் பதிலுக்கு.
இங்கே பார் கல்பனா… சத்யாவிற்கு தனிவீடு கொடுத்திருக்கிறோம். அதனால் நீ சொல்வதுபோல் அவள் வீட்டு வேலை செய்ய வேண்டியத் தேவையில்லை¸ புரிகிறதா?” என்றார் சற்று கடுமையாக.
சரி மாமா¸ விடுங்கள்” என்று அத்தோடு பேச்சை மாற்றினாள்.
அதன்பின் சத்யா வீட்டு வேலைகள் எதுவும் செய்வதில்லை.
அன்று மீனாட்சிக்கு கண் ஆபரேசன். பார்வதி¸ சங்கரன் மற்றும் சஞ்ஜீவனும் சத்யாவுடன் மருத்துவமனை சென்றிருந்தனர்.
பார்வதியின் கைகளை இறுக பற்றிக் கொண்டு அவரருகிலே இருந்தாள் சத்யா. அவர்களருகில் அமர்ந்த சங்கரன் “பயப்படாதே சத்யா… உன் அம்மாவிற்கு கண்டிப்பாக பார்வை திரும்பிவிடும்” என்று தைரியமூட்டினார்.
திடீரென்று நினைவு வந்தவராக அவளிடம் கேட்டார் “உன் அம்மாவிற்குப் பார்வை எப்படிப் போனது?” என்று.
எதையுமே யோசிக்காமல் பேசினாள் சத்யா. “அம்மா அதிகளவில் விஷம் சாப்பிட்டுவிட்டார்கள் சார்¸ அதன் விளைவு..! அவர்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. ஆனாலும் கண் நரம்புகளை விஷம் பாதித்துவிட்டதால் கண்பார்வை போய்விட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள்” என்றாள் ஒருவித எந்திரத்தனத்துடன்.
என்ன!” என்று அதிர்ந்தவர்¸ “விஷம் சாப்பிடுகிற அளவுக்கு வீட்ல என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.
அதற்கு ஒருவாரம் முன்னால தான் அப்பா காலமானார்…..”
எப்படி இறந்தார்?”
ஹார்ட் அட்டாக்… ”
முதல் தடவையா?”
இல்லை சார் மூன்றாவது முறை… நீங்க அவருக்கு சரியாக மருத்துவம் பார்க்கவில்லையா?”
பார்த்தோம்… டாக்டர் அதிர்ச்சியான விஷயங்களை கேட்கக்கூடாது என்று சொல்லியிருந்தார். நாங்கள் ரொம்பவே கவனமாகத்தான் இருந்தோம்…. ஆனால் மற்ற… மற்றவர்கள் அப்படி இருக்கமாட்டார்கள் இல்லையா சார்…?”
ஓ….” என்று தன் வருத்தத்தைக் காண்பித்தவர் “சரி…. முதல்முறை அட்டாக் வந்தது எப்போது? அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
என் சகோதரி வீட்டைவிட்டுப் போனபோது… அந்த துக்கத்தில் அப்பா நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு விழுந்தார்… அப்போதான்” என்றாள்.
வீட்டை விட்டு என்றால் எப்படி? யாரையும் காதலித்தாளா அல்லது ஏதாவது தவறான….” என்று அவர் தடுமாற¸ “தெரியாது…. ஆனால் அவள் வீட்டிற்கு வரவில்லை” என்றாள்.
இதனால்தான் ரெண்டாவது அட்டாக்கும் வந்ததா?”
இல்லை…. அப்பா இதிலிருந்து ஓரளவு மீண்டுவிட்டார்தான். மற்றவர்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டோம்…” என்று எதையோ சொல்லாமலே விடுத்தாள்.
அவர் தொடர்ந்தார் “என்ன சத்யா… ரெண்டாவது என்ன நடந்தது?” என்று.
கேள்விகள் அவளுக்கு வருத்தத்தைத் தந்தாலும்¸ ஒருவரிடம் சொல்வது சற்று நிம்மதியைத் தருவதுபோல் தோன்ற அவள் பதிலளிக்கத் தயங்கவில்லை.
அப்பாவுக்கு ரெண்டாவது அட்டாக் வந்தது என் திருமணம் நின்றபோது” என பட்டென்று சொல்லிவிட்டாள்.
என்ன? சத்யா… உனக்கு திருமணம் நடக்க இருந்ததா?”
ம்…” என்று தலையசைத்தாள் அவள்.
அவளுக்குத் தன்னிடம் சொல்வதால் மனபாரம் சற்றேனும் குறையும் என்றெண்ணியவர் விடாமல் “எதனால் நின்றது?” என்று கேட்டார்.
என்னைத் திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளை கல்யாணத்திற்கு ஒருநாள் முன்பாக வந்து வேண்டாம் என்றுவிட்டார்…” என்று எதையோ சொல்ல விரும்பாதவளாகவே பேசினாள்.
ஏனாம்? எதற்காக அவன் உன்னை வேண்டாம் என்றானாம்?” என்று ஆச்சரியமும் ஆதங்கமுமாகக் கேட்டார். அவருக்கு இப்படிப்பட்ட ஒரு நல்ல பெண்ணை ஒருவன் வேண்டாம் என்பானா என்பதுதான்.
காரணமென்று மற்றவர்கள் கேட்டபோது…. என்…. என்னை… விபச்…” என்று அவள் சொல்லமுடியாமல் திணறுகையிலே “வேண்டாம்மா… வேண்டாம்” என்று அவளை அணைத்துக் கொண்டார் பார்வதியம்மாள்.
அவளை ஆறுதல்படுத்தியபடி பார்வதியம்மாளும்¸ அவள் அழுவதையே பார்த்துக் கொண்டு சங்கரனும் சற்றுநேரம் இருந்தனர். சற்றுநேரத்தில் தானாகவே சமாதானமடைந்தவள் “சாரி… சார்¸ சாரிம்மா கொஞ்சம் எமோஷ்னல் ஆயிட்டேன்” என்று சிரிக்க முயன்றவள்¸ பின்னர் சற்றும் தயங்காமல் எல்லாவற்றையும் கூறினாள் வெகுஇயல்பாக.
அன்றைக்கு ஒரொருத்தரும் பேசியதைக் கேட்டே அப்பாவுக்கு ரெண்டு அட்டாக்கையும் கொண்டு வந்து அவர் உயிரை வாங்கிவிட்டது. அப்பா போன துக்கம் தாளாமல் அம்மா விஷம் குடிச்சிட்டாங்க… ஏதோ என் நல்லநேரம் நான் பார்த்ததால… இன்றைக்கு அம்மா மட்டுமாவது என்கூட இருக்குறாங்க. ஆனாலும் அம்மா பார்வை இழந்து தடுமாறுவதைப் பார்க்கும்போது ரொம்பவே கஷ்டமா இருக்குது. அம்மாவுக்கு… அவங்க முடியாமல் தடுமாறும்போதும் என்னையும் எண்ணி வருத்தம் தாளாமல் ‘அன்றைக்கு யோசிக்காமல் செய்து இப்படி உன்னைக் கஷ்டப்படுத்துறேனே!’ ன்னு இப்பவெல்லாம் அடிக்கடி சொல்றாங்க…. அம்மாவோட வருத்தத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்தானே சார்….” என்று சங்கரனையே பார்த்தாள் கேள்வியாக.

Advertisement