Advertisement

அத்தியாயம் 10
அவளது அட்ரஸை வாங்கிய தினத்திலிருந்து ஒருமுறையாவது சென்றுவர  வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சஞ்ஜீவன் அங்கு சென்றபோது¸ வீடு வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
அருகில் விசாரித்தான்.
“தாயும் மகளும் இப்போது இங்கு இல்லை¸ எங்கே போனார்கள் என்று தெரியாது சார். இரண்டு நாட்களாக வீடு இப்படித்தான் இருக்கிறது” என்று ஒரு பெரியவர் கூற¸ அவரருகில் இருந்த அவரது மனைவி “எங்கயாவது ஊர்மேய போயிருப்பாள்¸ அவளைப் பற்றி எங்ககிட்ட கேட்காதீங்க” என்று அவனிடம் சொல்லிவிட்டு “நீங்க வாங்க” என்று கணவனையும் அதட்டி உள்ளே வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
அந்தப் பெண்மணி சொல்வது போல சத்யா இல்லை என்றாலும்¸ ‘இவள் எங்கே போயிருப்பாள்? வேறு வேலைக்குப் போயிருப்பாளோ? எப்படி அறிவது?’ என்று சிந்தித்தான்.
அவள் எங்கும் நிரந்தரமாக வேலை செய்யக்கூடாது என்றுதான் அவள் வேலை செய்யும் இடங்களுக்கெல்லாம் எதார்த்தமாக சென்றாலும்¸ ஏதாவது செய்து அவளையே வேலையை விட்டுவிடுமாறு செய்துகொண்டிருந்தான்.
‘இப்போது எங்கிருப்பாள் என்று எப்படித் தேடுவது?’ என்று யோசித்தவன்¸ அந்த எண்ணத்தைக் கைவிடலானான். ஏனெனில்¸ அவளைப் பழிவாங்கும் எண்ணம் மனதில் இருந்தாலும் இதுவரை அவளைத் தேடிப்பிடித்து அவன் செல்லவில்லை. அது இயல்பாகவே நடந்தது. அவன் தன் பங்கை செவ்வனே செய்தான்… அதுபோலவே இனியும் நடக்கும் என்று வீட்டிற்கு புறப்பட்டான்.
தாயாருக்குத் தேவையான பொருட்கள்¸ துணிமணிகள் மற்றும் மருத்துவக் குறிப்பு சம்பந்தப்பட்ட அனைத்தையும் எடுத்துச் சென்று மருத்துவமனையில் அட்மிட் செய்தாள் சத்யா.
“தேவைப்படும்போது என்னைக் கூப்பிடுங்கள்…” என்று தன் போன் நம்பரைக் கொடுத்தவள்¸ தாயாரிடமும் எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறிவிட்டு பார்வதியம்மாளின் இல்லத்திற்குச் சென்றாள்.
நுழைவாயில் அருகில் இருந்த குவார்ட்டஸில் சற்று பெரிய வீடாகப் பார்த்து அவளைத் தங்க வைத்தனர். காலை¸ மதியம் என அவளது சாப்பாட்டை தங்கள் வீட்டில் வந்து சாப்பிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார் பார்வதியம்மாள்.
‘நானே சமைத்துக் கொள்வேன்!’ என்று அவள் சொன்ன போதும்கூட விடாமல் “உன்னை இங்கு என்னுடனே தங்க வைத்துக் கொள்ளத்தான் எனக்கு ஆசை சத்யா… ஆனாலும் வயதுப் பெண்ணை இப்படிக் கேட்பது சரியில்லை என்றுதான்… வீட்டிற்கு மிக அருகிலிருக்கும் அந்த குவார்ட்டஸில் தங்கவைத்தேன். அதனால் என் ஆசையை மதித்து என்னுடனே சாப்பிட வாம்மா..” என்று அவர் கேட்க¸ சத்யா சிரித்தாள்.
“அட¸ சத்யா சிரிக்கிறாளே!” என்றவர்¸ இதை பெரிய விஷயமாகச் சென்று கணவரிடம் கூறினார். அவர் “அவளது சூழ்நிலை அவளை இறுக்கமாக மாற்றிவிட்டது… நம் மகனைப் போல..” என்று வருத்தமாகக் கூற¸ “விரைவில் சரியாகிவிடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் பார்வதி.
‘இந்த இடம் எவ்வளவு அருமையாக இருக்கிறது?’ என்று தோட்டத்தை ரசித்தவாறே நடந்து கொண்டிருந்தாள் அவள்.
வெளியே செல்ல காரில் கிளம்பிய சஞ்ஜீவன்¸ கேட் திறப்பதற்காக காத்திருந்தபோது சைட் மிரரைப் பார்த்தான்.
ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள்¸ அவளது பின்புறத்தைத்தான் இவனால் பார்க்க முடிந்தது. தோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்திருப்பாள் போல.. அடுத்ததாக அவள் மேலே ஏற வேண்டிய சிமெண்ட் தளத்தைக் கவனிக்காமல் சமதளத்தில் நடப்பதற்காக அடியெடுத்து வைக்க¸ கால் அந்த தளத்தில் இடித்துக் கொள்ள கீழே விழுந்துவிட்டாள்.
சட்டென கார் கதவைத் திறந்தவனை நோக்கி ஓடிவந்த காவலாளி “தம்பி மன்னிச்சிடுங்க¸ இப்ப கேட்டைத் திறந்துவிடுகிறேன்” என்று ஓடினார்.
கார் கேட்டருகில் சென்றபோது¸ நிறுத்தியவன் சத்யா இருந்த திசையை சுட்டிக் காட்டி “யார் அந்தப் பெண்?” என்று கேட்டான்.
“நம்ம வீட்டிற்கு புதுசாக வேலைக்கு வந்திருக்கிற பெண் தம்பி” என்றார் அவர்.
“ஓ…!” என்றவன்¸ ‘நான் இதுவரை பார்க்கவில்லையே!’ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு “அந்தப் பெண் கீழே விழுந்துவிட்டாள். அநேகமாக கால் விரலில் அடிபட்டிருக்கும்¸ உங்களிடம் மருந்து இருந்தால் எடுத்துக் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டுக் காரை கிளப்பினான்.
அவன் சென்றதும் கேட்டை அடைத்தவர்¸ மருந்து எடுத்துக் கொண்டு சத்யாவிடம் சென்றார். அவளது கால் பெருவிரல் நகம் பிய்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்க¸ அவள் தன் கையிலிருந்த கைக்குட்டையால் அழுத்திப் பிடித்து ரத்தத்தை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா இந்தாங்க மருந்து” என்று காவலாளி நீட்டவும்¸ நிமிர்ந்து பார்த்தவள் “சுந்தரம் அண்ணா… உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டவாறே மருந்திருந்த பாக்ஸை வாங்கி அடிபட்ட இடத்தை டெட்டால் விட்டுக் கழுவி மருந்திட்டுக் கட்டினாள்.
அதுவரை அவள் செய்வதை பார்த்துக் கொண்டும் சிறு உதவிகள் செய்து கொண்டும் இருந்தவர்¸ அவள் கட்டுப் போட்டு முடித்ததும் “சின்ன முதலாளிதான் பார்த்து சொல்லிட்டுப் போனாரம்மா” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையை கவனிக்கச் சென்றார்.
மனதிற்குள் அந்த சின்ன முதலாளிக்கு நன்றி சொல்லிக் கொண்டவள்¸ வீட்டை நோக்கி நடந்தாள்.
விந்தி விந்தி நடந்தவளைப் பார்த்த பார்வதி “என்னாச்சு சத்யா?” என்று வந்தார்.
அடிபட்டதைக் கூறவும் “இதுக்கு உடனே ஒரு டி.டி. போடணும். நீ வா… ஏங்க வேல்சாமியை காரை எடுக்க சொல்லுங்க…” என்று கணவனை அவசரப்படுத்தினார்.
“இல்லம்மா.. இது தானாகவே சரியாயிடும். ஹாஸ்பிட்டல் எல்லாம் வேண்டாம்” என்று அவள் மறுக்க¸ சங்கரனும் போகுமாறு அறிவுறுத்தினார்.
அப்போதும் அவள் தாயாராகவில்லை என்றதும் “என்ன சத்யா இப்படி மறுக்கிறே? என்கூட வரப் பிடிக்கவில்லையா? இல்லை ஊசி போட பயமா?” என்று கேட்டார் அவர்.
தயக்கத்துடனே “வந்தும்மா… எனக்கு ஊசிப் போடுறதுன்னா சின்ன வயசிலிருந்தே பயம். அதனால்தான் வேண்டாம் என்றேன்” என்று தான் மறுத்ததன் காரணத்தைக் கூறியவளின் முகம் வாடவும்¸ “ம்… நான் இதைத்தான் நினைத்தேன். பரவாயில்லை… நான் உன்கூடவே இருப்பேன்¸ பயப்படாதே!” என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.
மருத்துவமனை சென்றவர்கள் வீடு திரும்பியபோது¸ கல்பனா அவளது பெற்றோருடன் அமர்ந்திருந்தாள்.
பார்வதி வந்தவர்களை வரவேற்று உபசரிப்பதில் ஈடுபட¸ வீட்டிற்குள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணான சத்யாவைக் கவனித்த கல்பனா அதிர்ந்தாள்.
இவள்… இவள் அன்று அந்த ஷோரூமில் வைத்து அத்தானை அடித்தவள் அல்லவா? இவளை எப்படி அத்தான் இங்கு அனுமதித்தார்? குழம்பியவளின் மனம் ஒருவேளை இவள் அழகில் மயங்கிய அத்தான் அன்று நடந்ததை மறந்துவிட்டாரோ என்றும் எண்ண வைத்தது.
சத்யாவும் வந்திருந்தவளை இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவளது முகமே காட்டியது.
கல்பனாவின் பெற்றோர் தாங்கள் வந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார். கணவன்-மனைவி இருவரும் உலக நாடுகளை சுற்றிப் பார்க்கச் செல்வதாகவும்¸ அவர்கள் திரும்ப இரண்டு மாதங்கள்வரை ஆகலாம் என்பதால்… அவர்கள் வரும்வரை தங்கள் மகளை இங்கு தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
“என்ன அண்ணி… இது உங்க வீடு நீங்க இப்படிக் கேட்கலாமா? நீங்க தாராளமா அவளை விட்டுட்டுப் போகலாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பார்வதி கூற¸ மூவருக்கும் மகிழ்ச்சி.
பெற்றவர்கள் சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப அவர்களை வழியனுப்புவதற்காக உடன் சென்றாள் கல்பனா.
முன்பொரு நாள் இங்கு வந்தவள் சத்யா என்ற பெண் புதிதாக வேலைக்கு வரப்போவதைக் கேள்விப்பட்டு¸ அதனால் ஏற்பட்டதுதான் அவர்களது வேர்ல்டு டூரும் அவளது இந்த வருகையும். முன்பே சஞ்ஜீவன் தன்னைத்தான் மணப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் நித்யாவை மணந்தது பேரிடியாகத்தான் இருந்தது. சரி அவள்தான் போய்விட்டாளே இனி நம்மைத்தான் மணப்பான் என்றெண்ணிக் கொண்டிருக்க அதற்கும் தடையாக ஒருத்தி வரப்போகிறாள் என்று கேள்விப்பட்டதும்¸ அவனது பார்வையிலே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான் பெற்றோரை இப்படித் தூண்டிவிட்டு வீட்டிற்குள் வந்திருக்கிறாள்.
“என்னம்மா நீ சொன்னமாதிரியே எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டோம். இனி மாப்பிள்ளையை மயக்கித் திருமணம் செய்துகொள்வது உன் பொறுப்பு” என்றார் தகப்பனார்.
அதைத்தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி பெற்றவர்களை அனுப்பிவிட்டு வரும்போதும் அவளது மனம் ஆற்றாமையுடனே இருந்தது. வருவதாக இருந்தவள் அவலட்சணமாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை… இவள் வேறு பார்ப்பதற்கு மூக்கும் முழியுமாக இருக்கிறாள். இந்த அத்தானின் அம்மாவும் அப்பாவும் அறிவில்லாமல் அவளை வீட்டிற்குள்ளேயே நடமாட விட்டிருக்கிறார்கள். இவளை பார்த்து மயங்கி அத்தான் இவளைத் திருமணம் செய்துகொள்வார் அதைப் பார்த்துக் கொண்டிருக்க நான் என்ன முட்டாளா? அதுதான் வீட்டுக்குள் வந்துவிட்டேனே இனி சீக்கிரமாக ஏதாவது செய்து இவளை விரட்டிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னரே அவளால் இயல்பாக இருக்க முடிந்தது.
“அம்மா நீங்க ஏற்பாடு செய்த ஆள் எப்படி வேலை செய்கிறாள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் மைந்தன்.
“ம்… ரொம்ப நல்லப் பெண். எதையும் ஒருமுறை சொன்னால் போதும் புரிந்து கொண்டு குழப்பமடையாமல் செய்து முடிக்கிறாள். கணக்கு வழக்கையெல்லாம் தெளிவாக கணினியில் பதிவேற்றிவிட்டாள். நான் ஒருமுறை பார்த்தால் மட்டும் போதும்..” என்று புகழ்ந்தார் சங்கரன்.
உடனிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்பனாவிற்கு கடுப்பாகியது. ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரங்களில் எப்படியாவது அந்த சத்யாவின் பேச்சு வந்துவிடுகிறது. எரிச்சலை யாரிடமும் காட்ட முடியாதது வேறு ஆத்திரத்தை ஏற்படுத்த¸ வேகமாக சட்னி இருந்த பாத்திரத்தை எடுத்தவள் சஞ்ஜீவன்மேல் கொட்டிவிட்டாள்.
“என்ன கல்பனா இது? என்னிடம் எடுத்துக் கேட்டிருக்கலாம்தானே..!” என்று கோபப்பட்டான் அவன்.
“சாரி அத்தான்… சாரி… கைத்தவறி கொட்டிவிட்டது” என்று மன்னிப்பு கேட்க¸ “ப்ச்!” என்று எரிச்சலை மறையாது காட்டியபடி கைகழுவிவிட்டு மாடியேறியவன்¸ “என்னப்பா நீ சாப்பிடாமலே போகிறாய்…?” என்று தாயார் கேட்டதைக்கூட கவனிக்காமலே சென்றுவிட்டான்.
அப்போதுதான் உள்ளே வந்தாள் சத்யா.
“வா சத்யா¸ வந்து சாப்பிடு” என்று பார்வதி சொல்ல¸ தான் கொண்டு வந்த  மலர்ச்சரத்தை அவரிடம் கொடுத்தாள்.
சந்தோஷமாக வாங்கிக் கொண்டவருக்கு தானே பரிமாறினாள். அதைக் கண்டதும் கல்பனாவின் ஆத்திரம் அதிகரித்தது. இன்னும் இவளை இங்கு எப்படி அனுமதித்திருக்கிறான் என்று அவன் மேலும் கோபமானாள்.
தான் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து தன்னையே முறைத்துக் கொண்டிருந்தவளை கவனித்திருந்த சத்யாவிற்கு அவளது அந்த கனல் பார்வையில் புரையேறியது.
“மெல்ல… மெல்ல… ” என்று பார்வதி தலையைத் தட்ட¸ சங்கரன் தன் பங்கிற்கு “மெதுவாக சாப்பிடும்மா…” என்று சொல்ல… அந்த நேரத்தில் கல்பனாவின் பார்வைக்கு எதிராக யாரேனும் இருந்திருந்தால் நிச்சயம் பஸ்பமாகியிருப்பார்கள்.
‘இவளது இந்த முறைப்பிற்கு என்ன அர்த்தம்?’ என்று கலங்கிக் கொண்டிருந்தாள் சத்யா.
சற்று நேரத்தில் சத்யா தன் வேலையை கவனிப்பதற்காக ஆபீஸ் அறைக்குள் நுழைய¸ சஞ்ஜீவன் தன் அலுவலை கவனிக்கப் புறப்பட்டான்.
காரில் கிளம்பியவனிடம் ஓடி வந்தவள் தன்னை வழியிலிருக்கும் நெட் சென்டரில் விட்டுவிடுமாறு கேட்க¸ ஏறிக் கொள்ள சொன்னான்.
கொஞ்சதூரம் சென்றதும் “அத்தான் நம் வீட்டிற்கு ஆபீஸ் வேலை பார்க்க வந்திருக்கும் பெண் யாரென்று தெரியுமா?” என்று கேட்டாள்.
“தெரியும்¸ சத்யா!” என்றான் அவன் சாதாரணமாக.
“தெரிந்துமா அனுமதித்தீர்கள்?” என்று கேட்டாள் அவள் ஆச்சர்யத்துடன்.
“ஏன்? அனுமதிப்பதற்கென்ன அம்மாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறாள்…. ரொம்ப நல்ல பெண் என்றும்கூட அம்மா சொன்னார்கள். போகப் போக நீயும் புரிந்து கொள்வாய்” என்றவன்¸ அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவளை இறக்கி விட்டுவிட்டுச் சென்றான்.
மழை பெய்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேரமாகவே வேலையை கவனிக்கச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால் பக்கத்தில் உள்ள வேலையாட்களின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சத்யா.
மழை காரணமாக கல்பனா படுக்கையை விட்டு எழவேயில்லை.
வழக்கம்போலவே எழுந்த சஞ்ஜீவன் ஜாகிங் போக முடியாததால் பால்கனியில் நின்று மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நின்ற இடத்திலிருந்து சத்யா மற்றும் அவளது விளையாட்டு நண்பர்கள் சின்ன உருவங்களாகவே தெரிந்தனர்.
அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு சற்று நேரத்தில் அவர்கள் அங்குமிங்கும் ஓடுவதும்¸ அவர்களது கூச்சலும் கேட்டது. என்னவோ ஏதோ என்று கீழே விரைந்தான் அவன்.
அவன் ஹால் வாசலை அடைந்தபோது¸ “ஐயா..! ஐயா..!” என்றழைத்தவாறே வேகமாக ஓடிவந்தான் முத்து- தோட்ட வேலை செய்பவன்.
“என்னாச்சு முத்து?” என்று அவன் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே¸ இவனது பதற்றமான குரலைக் கேட்டுவிட்ட சங்கரனும் பார்வதியும் வந்துவிட்டனர். அப்போதும் “என்ன விஷயம் முத்து? ஏன் இப்படி மழையில் நனைந்துவந்தாய்? ஒரு குடை எடுத்து வருவதற்கென்ன?” என்று கனிவாகக் கேட்டார் பார்வதியம்மாள்.
“வந்தும்மா… நம்ம… புதுப்பொண்ணு சத்யா இருக்குதுல்ல…” என்று அவன் சொல்ல முடியாமல் மூச்சுவாங்க…
“சத்யாவுக்கு என்னாச்சு?” என்று பதறினார் பார்வதி.
பதில்வரத் தாமதமானதும் “சொல்லு முத்து…” என்று அவசரப்படுத்தினார் சங்கரன்.
“அந்தப் பொண்ணை பாம்பு கடித்துவிட்டதுய்யா… அந்தப் பொண்ணு மயங்கி கீழே விழுந்துடிச்சு… எங்களுக்கு பயமாக இருக்கிறது. நீங்கள் வந்து கொஞ்சம் பார்க்கிறீர்…” என்று அவன் கேட்டு முடிப்பதற்குள்¸ நிலைமையை புரிந்து கொண்ட சஞ்ஜீவன் மூவரையும் உடன் வருமாறு அழைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு அவ்விடம் விரைந்தான்.
கார் வந்ததும் மற்ற வேலையாட்களும் அங்கு கூடிவிட்டனர்.
“என்ன பாம்பு?” என்று சங்கரன் கேட்க¸ “தெரியலைங்கய்யா… நாங்க வரும்போது பாம்பு போய்விட்டது” என்றான் முத்து.
“பாம்பு எப்படி கடித்தது?” என்று அவர் கேட்க¸ “பிள்ளைங்களோட விளையாடிட்டிருக்கும் போது வந்த பாம்பு¸ எம்பொண்ணை கொத்த வந்ததுங்களாம்… அதைத் தடுக்கிறதுக்காக சத்யா பொண்ணு பாம்பை பிடிக்கப் போக… அது கையில் கொத்திவிட்டது. மயங்கி கீழே விழுந்ததுக்கப்புறம்தான் பயந்த சின்னப் பிள்ளைக வந்து என்கிட்ட சொன்னாங்க” என்றான்.
மயங்கிக் கிடந்தவளின் அருகே சென்று கொண்டிருந்தவன் “விஷம் ஏறாமலிருக்க கையில் துணி கட்டினீர்களா?” என்று கேட்டுக் கொண்டே அவளை அடைந்துவிட்டான்.
“என்ன பாம்பு என்று தெரியாமல் எப்படி மருந்து…” என்று தனக்குள் பேசிக்கொண்டே குனிந்து அவளைத் தூக்கியவன் அதிர்ந்தான்.
‘சத்யா!’
அதுவும் அவனுக்குப் பிடிக்காத சத்யா.
மழையில் விளையாடியதும் ஈரத்தில் அதிகநேரம் இருந்ததுமாக வெண்மையாகக் காட்சியளித்தது அவளது பளிங்கு முகம்.
ஒருவேளை இன்று இவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அப்புறம் இவளைப் பழிவாங்குவது எப்படி? என்று ஒரு பக்கம் எண்ணினாலும்¸ இவளைப் பழிவாங்க வேண்டுமென்பதுதானே உன் நோக்கம்!
அதற்கு இவள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்ற ஒரு எண்ணம் தோன்றியதும் ‘இல்லை! இல்லை! அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்¸ அவளை அப்படியே அள்ளிக் கொண்டு காருக்குச் சென்றான்.
“பிள்ளைக சொன்னதை வைத்துப் பார்த்தால் பாம்பு என்றுதான் நினைக்கிறேன் ஐயா. அது விஷம் கூடின பாம்பா¸ இல்லையான்னு எனக்குத் தெரியாதே..!” என்று சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த சங்கரன் தம்பதியர் மகன் காருக்குச் செல்வதைக் கண்டதும் தாங்களும் வந்து காரில் ஏறினர்.
அமர்ந்ததும் பார்வதியம்மாள் “சீக்கிரம்” என்று துரிதப்படுத்த கார் மருத்துவமனைக்கு விரைந்தது.

Advertisement