Advertisement

        அத்தியாயம் ஒன்று:

சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருந்த அந்த மென்பொருள் நிறுவனம் காலை வேலையின் பரபரப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஆளுக்கொருவராக அங்கும் இங்கும் உள் நுழைந்து கொண்டிருந்தனர்.

அர்ஜுன், பெயருக்கேற்ற வசீகரத்துடனும் கம்பீரத்துடனும் படியேறிக் கொண்டிருந்தான்… அவனுடன் படியேறிக் கொண்டிருந்த பல பெண்களில் சில பெண்களின் பார்வை அவனைத் தொடர்ந்தது… இப்படி ஒரு ஆண்மகன் தங்களுக்கு மணமகனாய் வரவேண்டும் என்ற ஆசையோடு.

ஆனால் அர்ஜுன் வரவேண்டும் என்று அவனைத் தெரிந்தவர் யாரும் நினைக்க மாட்டர். ஏனென்றால் அவன் யாரையும் திரும்பிப் பார்ப்பது இல்லை.. அதுமட்டுமன்று ஒரு வித அலட்சியத்தோடு பார்க்கும் அவன் பார்வையே பெண்களை தள்ளி நிறுத்தும். 

இளம் பெண்களிடம் மட்டும் தான் அந்தப் பார்வை தள்ளி நிறுத்த, யாரும் தன்னை நெருங்க விடாமல் செய்ய. மற்றபடி பெண்களை மதிப்பவன் மரியாதையாக நடத்துபவன்.

அவனின் தொலைபேசி அழைக்கவும் எடுத்து பார்த்தால் அவனின் அப்பா…

“ஐயோ! காலையில இவரு கொல்றாரே என்னை!”, என்று கடுப்பாக வந்தது அர்ஜுனிற்கு…

“என்னப்பாஆஆஆஆஆ?”, என்று கத்தினான் எடுத்தவுடனேயே… அவன் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கம் சென்று கொண்டிருந்தவர்கள் பார்த்தனர்.

யார் பார்ப்பதும் எனக்கு கவலையில்லை என்பது போல கத்தினான். அந்த சாப்ட்வேர் உலகத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு அணுகுமுறை..

அவன் அங்கே ஆறு வருடத்திற்கும் மேலாக வேலை பார்க்கிறான்… நடுநடுவே ஆன்சைட்டாக வெளிநாட்டிற்குப் போவதும் வருவதுமாக இருந்தாலும்… அங்கே அவனை எல்லோருக்கும் தெரியும்…

“சொல்லுங்கப்பா…..”, என்று மறுபடியும் அங்கேயே நின்று கத்தினான்… இன்னும் அலுவலகம் உள் நுழையவில்லை… அவன் கடிந்து விழுந்ததில் பயந்து, அவனின் அப்பா சண்முகசுந்தரம், பக்கத்தில் இருந்த அவனின் அம்மாவிடம் கொடுத்து விட…

“என்னடா அப்பா கிட்ட கத்திப் பேசற… என்ன பழக்கம் இது?”, என்று அம்மா கௌரி ஒரு அதட்டல் போட அடங்கினான்.

          “அவர் பண்ற வேலைக்குக் கத்தாம வேற என்ன பண்ணுவாங்க..”, என்றான் காட்டமாக…

“அப்படி என்னடா பண்றார்?”,

“என்ன பண்றாரா…….. கெ…ள….ரி நீ மட்டும் எதிர்ல இருந்த…”,

“என்னடா பண்ணுவ?”, என்று அவனின் அம்மாவும் அலட்சியமாக கேட்டு அர்ஜுனின் அம்மா என்று நிரூபணம் செய்தார்…

“ஒன்னும் பண்ண முடியாதுன்ற தைரியம் தானே என்னை இப்படி உயிரை எடுக்கறீங்க… ஊர்ல இருந்து வர்ற அத்தனை பேர் கிட்டயும் ஒன்னு வீட்டு அட்ரெஸ் குடுக்கறது, இல்லை ஆஃபிஸ் அட்ரெஸ் குடுக்கறது… எவன் பசங்களை காலேஜ் சேர்க்க வந்தாலும் என்னை பார்க்கறது இல்லை வேலைக்கு வந்தாலும் என்னை பார்க்கறது… வீட்ல வந்து தங்கறது…”,

“நான் என்ன ஆளா வெச்சிருக்கேன்….. எல்லா வேலையும் நான் பண்றேன்…. பாத்ரூம் டாய்லெட்ல இருந்து நான் சுத்தம் பண்றேன்… என்னோட பிரைவசி போகுது… மாசம் ஒரு தடவை யாராவது வந்துடறாங்க”, 

“இந்த மாதிரி இருந்தா கத்தாம கொஞ்சுவாங்களா… இதுல சில பேர் வந்து கொண்டு வந்த பணமெல்லாம் செலவாயிப் போச்சு தம்பி.. பணம் குடுங்க அப்பா கிட்ட குடுத்துடுறேன்னு என்னமோ குடுத்து வச்சவன் மாதிரி வாங்கிட்டுப் போறான்…”,

“போன தடவை வந்த ஒரு பையன் பத்து நாள் வீட்ல தங்கினான்.. நானா ஒரு ரூம் பார்த்து, கிளம்புடா தம்பின்னு அனுப்பிவெச்சேன்! ஏன்மா இப்படி பண்றீங்க?”, 

“அதுக்கென்ன பண்றது! அப்பா நம்ம ஜாதி ஜனதுக்குள்ள பெரிய ஆளு! யாரவது ஒரு உதவின்னு வந்தா அப்படி தான் செய்வாங்க…”,

“என்னவோ போ! உன்னோட பதி பக்திக்கு அளவே இல்லாம போச்சு.. அவர் என்ன சொன்னாலும் தலையாட்டுற.. நல்லா சேர்ந்திங்க புருஷனும் பொண்டாட்டியும்…”,

“உனக்குப் பொறாமைடா எங்களைப் பார்த்து, இந்த மாதிரி ஒரு வாழ்க்கை அமையுமோ அமையாதோன்னு….”, என்று அம்மா சொன்ன விதத்தில் சிரித்து விட்டான்.

“ஆமாம்! ரூம்முக்குள்ள நேத்து கூட நீ அப்பாவா நாலு அடி வெச்ச தானே!”,

“இல்லைடா ரெண்டு தான் வெச்சேன்”, என்றார் பாவம் போல…

“அம்மா!”, என்று இன்னும் சிரித்து விட்டான்… அவன் சிரிப்பதை அவனின் டீம் மெம்பர்ஸ் சில பேர் அதிசயமாக பார்த்து சென்றனர்… இப்படி சிரிப்பவன் அல்ல அவன் ஆஃபிசினுள்…

“சொல்லுமா நேரமாகுது!”, என்று சொல்லவும்…

அந்த நேரம் அவர்களின் பில்டிங் முன் ஒரு ஆம்னி வந்து நிற்க… அதிலிருந்து நடுத்தர வயதில் இரு ஆடவர்கள் இறங்க, கூட அந்த வயதையொத்த பெண்மணிகள் இருவர் இறங்க… கூட ஒரு இளம்பெண் இறங்கினாள். 

இங்கே கெளரி, அர்ஜுனிடம், “நம்ம சத்யாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோமில்ல அவங்களுக்குச் சொந்தம்… அந்தப் பொண்ணு உன் கம்பனில தான் வேலைக்கு வருதாம்…  சென்னையில அவங்களுக்கு யாரையும் தெரியாதாம்! என்ன உதவி வேணுமோ செஞ்சிக் கொடு!”, என்றார்.

“என்னமா நீ? அது பொண்ணு! நான் என்ன உதவி செய்ய முடியும்…”,

“செய்டா தம்பி… உன் அக்கா சொந்தம்..”,

“எப்படி சொந்தம்? சொல்லு!”,

“ம்! அது!”, என்று விழித்தார்… அர்ஜுனிற்கு தெரியும், எங்காவது சுற்றி ஒரு உறவு முறை இருக்கும் அதற்கு இந்த பில்ட் அப் என்று.

“அம்மா! வெளிலன்னா கூட செய்யலாம்! நான் வேலை பார்க்குற இடத்துல எல்லாம் எதுவும் செய்ய முடியாது… அது எப்படியோ என்னவோ… இங்க வந்து என்னை தெரியும்ன்னு எல்லார் கிட்டயும் சொல்ல செஞ்சா… எனக்குப் பிடிக்காது…”,

“என் பையன் பெரிய வேலைல இருக்கான்னு சொன்னா மட்டும் போதுமா… சும்மா எல்லோரையும் கொண்டு வந்து என் தலையில கட்டுவீங்களா… யாரையும் நான் பார்க்க மாட்டேன்! யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டேன்.. என்னை தெரியும்னு யாரும் சொல்லக் கூடாது…”,

“தம்பி! தம்பி! அப்பா சொல்லிட்டாருடா… இப்போ காலையில அங்க வருவாங்க… ஒரு ரெண்டு வார்த்தை நல்ல மாதிரி பேசி அனுப்புடா”, என்று அம்மா சொல்லச் சொல்ல…

“உயிரை எடுக்கறீங்க… செஞ்சுத் தொலைக்கிறேன்!”, என்று கத்திப் பேசிவிட்டு ஃபோனை வைத்து திரும்ப…

அங்கே அந்தக் காரில் இருந்து இறங்கிய இளம்பெண் இவனைப் பார்பதற்காக நின்று கொண்டிருந்தாள்.

அர்ஜுனுக்கு என்ன தெரியும்… அருகில் இருந்த இளம்பெண்ணை பார்த்தவன்… “யாருடா இது சூப்பர் ஃபிகர்”, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவளைப் பார்வையால் அளவெடுத்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான்…

“எக்ஸ்கியுஸ் மீ! ஆர் யூ மிஸ்டர் அர்ஜுன், ஈரோடு ல உங்க வீடு ”, என்றது .

“எஸ்!”, என்றபடி அவன் நிற்க…

அவனுக்கு பதில் சொல்லாமல், “இவர் தான் நாங்க தேடி வந்தவர்!”, என்று சற்று தொலைவில் இருந்த இரு இளைஞர்களிடம் சொல்லவும்… அவர்கள், “ஓகே”, என்றபடி நகர்ந்தனர். அவர்களிடம் தான் கேட்டிருந்தாள்.    

பிறகும் அவன் புறம் திரும்பாமல், “அப்பா! இவங்க தான் நீங்க பார்க்க வந்தவங்க”, என்று சற்று தொலைவில் இருந்த அப்பாவிடம் சொன்னாள்.

“ஐயோ இந்த பெண் தான் இங்கே சேருகிறதா… நான் பேசியதைக் கேட்டிருப்பாளோ!”, என்று பார்க்க..

அப்பா வருவதற்குள்… “பயப்படாதீங்க உங்களை தெரியும்னு நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. ஏன்னா நிஜம்மா உங்களை எனக்குத் தெரியாது”, என்றாள்.

“ஓஹ்.. பேசியதைக் கேட்டிருக்கிறா.. அதுக்கென்ன? அவங்க அவங்க கஷ்டம் அவங்க அவங்களுக்கு… இதுக்கு பதில் குடுக்கணும்னு அவசியம் என்ன?”, என்று தோன்றிய போதும்…   அர்ஜுனின் கண்களில் சுவாரசியம் கூட… “தோடா! யாரு இது நம்ம கிட்ட…ரொம்ப தைரியம்!”, என்பது போல ஒரு லுக் விட்டான். ஆனால் அவன் பதில் எதுவும் பேசவில்லை.

அம்மா அப்பாவிடம், அக்காவிடம், நண்பர்களிடம் என்று வாயடிப்பான் தான். ஆனால் மற்றபடி மிகுந்த அழுத்தம்.. ஒரு வார்த்தைக் கூட அனாவசியமாக வாயில் இருந்து உதிராது. பார்க்கும் பார்வையே அடுத்தவரை வேலை செய்ய வைக்கும்.

இப்போதும் ஒரு ஆளை ஊடுருவும் பார்வை அந்தப் பெண்ணை பார்த்தவன், வேறு பேசவில்லை.

அவளை விடுத்து அவளின் அப்பாவிடம் பார்வையை திருப்பினான்.

ஊர் வழக்கமாக, மரியாதை நிமித்தம் கை கூப்பினான். அதிலேயே அகமகிழ்ந்து, “வணக்கம் தம்பி”, என்று அந்த இரு ஆண்களும் விரைந்து வந்தனர்.

“அப்பா சொன்னாருங்களா!”, என்றபடி..

“ம்! இப்போ தான் சொன்னாங்க!”, என்று அவன் சொல்லவும்..

“இந்த வருஷம் தாங்க நர்மதா படிப்பை முடிச்சதுங்க… காலேஜ்லயே செலக்ட் ஆகிடுச்சுங்க… இங்க வேலைக்கு போட்டிருக்காங்க”.

“நான் தான் கல்யாணம் முடிஞ்சா நம்ம கடமை தீர்ந்திடும்! அதுக்கு முன்ன பொண்ணு பிள்ளையை தனியா வேலைக்கு அனுப்பறதான்னு யோசிச்சேன். உங்க அக்கா தான் ஒன்னும் பயமில்லை! இவ்வளவு படிக்க வெச்சு வர்ற வேலையை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க… இப்போல்லாம் மாப்பிள்ளைங்க வேலைக்கு போற பொண்ணை தான் கட்டுறாங்க..”,

“என் தம்பி அங்க தான் கொஞ்ச வருஷமா இருக்கான் பயப்படமா அனுப்புங்கன்னு சொல்லுச்சு… அதான் ஒரு வார்த்தை தம்பியைப் பார்த்து சொல்லலாம்னு வந்தோமுங்க”, என்றார்.

“இந்த அப்பா ஹிஸ்டிரி ஜியோகரபி எல்லாம் சொல்றார்.. இவரை என்ன பண்ண?”, என்பதுப் போல பார்க்க…

“இது அக்கா வோட வேலையா.. அவ சொன்னா திட்டுவேன்னு அப்பாவை விட்டு சொல்லியிருக்கா!”, என்று மனதிற்குள் படம் ஓட்டினாலும்.. முகத்தை மிகவும் மரியாதையாக வைத்து…

“அதுக்கென்னங்க.. நம்ம ஊர்க்காரங்க.. நீங்க சொல்ல வேண்டியதேயில்லை..”, என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தவன்..

“எங்க இங்க ப்ளேஸ்மென்ட் மிஸ்….”, என்று அவன் இழுக்க…

“நர்மதாங்க பேரு!”, என்று அவளின் அப்பா எடுத்து கொடுத்தார்.

அந்த நர்மதாவானவள், “எங்களை இவ்வளவு நேரம் கடிச்சு துப்பிட்டு இப்போ என்னமா ஆக்டிங் கொடுக்கிறான்”, என்பது போல பார்த்து நிற்க..

அந்தப் பார்வைக்கெல்லாம் அசராமல் “எங்க ப்ளேஸ் மென்ட்?”, என்றான் திரும்பவும்..

“ட்ரைனிங் தான் இப்போ! அப்படி தான் சொன்னாங்க!”, என்று சொல்லி அவளின் கையில் இருந்த ஒரு லெட்டரை கொடுக்க..

அதை வாங்கிப் பார்த்தவன்.. “இப்போ ட்ரைனிங் தாங்க, அப்புறம் தான் எங்கேன்னு சொல்லுவாங்க”, என்றான் அவளின் அப்பாவிடம்.

அவளிடம், “செகண்ட் ப்ளோர் போகணும்!”, என்றும் சொன்னான்.

“மேல போக சொல்லுங்க! உங்க பொண்ணு மட்டும் தான் போகணும்! இங்கயே நான் வேலை செஞ்சாலும் கூட அப்படி அங்கல்லாம் சட்டுன்னு போக முடியாது… அந்த அந்த பிரிவு தனி”, என்று விளக்கம் சொல்லி,

“அப்போ எனக்கு நேரமாச்சு! நான் போகட்டுங்களா! எந்த உதவின்னாலும் என்கிட்டே கேட்க சொல்லுங்க!”, என்று கிளம்ப எத்தனிக்க..

“சரிங்க தம்பி! நீங்க முடிச்சிட்டு வாங்க… நர்மதாவும் போகட்டும்! நாங்க இங்க இருக்கோம்!”, என்றார்.

“இங்க ஏன் இருக்கீங்க? உங்க பொண்ணு வர சாயந்தரம் ஆகும் கிளம்புங்க”, என்றான்.

“ஊர்ல இருந்து இப்படியே வர்றோம்ங்க.. நர்மதா தங்க இடம் பார்த்து குடுத்துட்டு போகணும்”, என்றனர். கூடவே, “உங்களுக்கு ஏதாவது தெரியுங்களா”, என்றனர்.

கடுப்பாக வந்தது அர்ஜுனிற்கு.. அதை மறையாது காட்டினான்.. “என்னங்க நீங்க? இங்க தான் வேலைன்னு ஆனதுக்கு அப்புறம் முதல்லயே வந்து இடம் பார்த்திருக்க வேண்டாமா.. இப்படி அவசரத்துக்கு எங்க நல்ல இடம் கிடைக்கும்.. பாதுகாப்பு ரொம்ப முக்கியம் இல்லையா”, என்றான்.

“இவன் யார் என் அப்பாவை அதட்ட?”, என்று நர்மதா முறைத்து நிற்க…

அர்ஜுன் அவள் புறம் எல்லாம் திரும்பவில்லை.. பெரியவர்களை பார்த்து தான் பேசிக்கொண்டு இருந்தான். அந்த குணம் அங்கிருந்த நர்மதாவின் அம்மாவையும் அத்தையையும் வெகுவாக கவர்ந்தது.

“தம்பி! அப்பா மாதிரியே பொறுப்பா பேசறீங்க!”, என்று பக்கத்தில் இருந்த மற்றொருவர் கூற, “இவர் யார்?”, என்பது போல பார்த்தான்.

“நம்ம நர்மதாவோட தாய் மாமா…”,

“ஐயோ!”, என்று இருந்தது நர்மதாவிற்கு.

“என்ன நம்ம நர்மதாவா? இந்த அப்பாக்கு அறிவே கிடையாது.. அவன் என்னவோ பெரிய இவன் மாதிரி பேசறான்! இவர் பணிஞ்சு பதில் சொல்லிட்டு இருக்கார்!”, என்பது போல பார்த்தவள்…

அப்பாவிடம் திரும்பி.. “என் சீனியர்ஸ், ஃபிரிண்ட்ஸ் இருக்காங்கப்பா! இங்க அவங்க கூட தங்கலாம்!”, என்றாள்.

“நீ சும்மாயிரு கண்ணு! உனக்கு தெரியாது! நமக்கு அதெல்லாம் சரிபடாது எல்லாம் பேன்ட் சட்டை போட்டுட்டு இருக்காங்க! அங்கல்லாம் விட முடியாது!”, என்றார் பட்டென்று.

அர்ஜுனிற்கு மெல்லிய சிரிப்பு முகத்தில்… “அப்பா இவன் முன்னாடி மானத்தை வாங்கறார்”, என்று இருந்தது நர்மதாவிற்கு.

ஆனால் அர்ஜுன் பொறுப்பாக… “அந்த உடுப்பெல்லாம் இங்க சகஜம்ங்க! அதுக்காக பொண்ணுங்களை தப்பு சொல்ல முடியாதுங்க…. நாளைக்கே உங்க பொண்ணு வேலை காரணமா வெளிநாடு போனாலும் அப்படிதான்! அது அவங்க பக்கம் உடுப்பு! அது தப்பில்லைங்க!”, என்றான்.

“அய்ய! தம்பி! அது தப்புன்னு நான் சொல்லலீங்க! அது நமக்கு சரிவராது… சரிவராத ஒரு விஷயத்தோட பொண்ணை எப்படி விட முடியும்”.

“எங்கன்னாலும் இப்படி தாங்க இருக்கும்!”, என்று அவரிடம் சொல்லிக்கொண்டே நர்மதாவின் உடையை ஆராய்ந்தான்.  சுரிதாரில் இருந்தாள்… ஆனால் முகம் கை கால்களை தவிர எந்த பாகமும் தெரியவில்லை. கை கூட புல் ஹேண்ட்… ஆனால் அந்த உடை ஒரு மாடர்ன் லுக்கை தான் கொடுத்தது.

அவள் உடையணிந்திருந்த விதத்திலேயே பெற்றோர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வாள், அதே சமயம் கட்டுப் பெட்டியும் அல்ல என்று புரிந்தது. அங்கே தான் அர்ஜுன் தவறாகக் கணித்தான். அவள் கட்டுப் பெட்டி அல்ல என்பது சரி.. ஆனால் பெற்றோர் மனம் கோணாமல் நடந்து கொள்ள முயலுவாள்… அது அவளால் முடியாது விஷயம். விளையாட்டுத்தனம் அதிகம், அத்தனை பிரச்சனை இழுத்து வைப்பாள்.   

“இந்த அப்பா இப்படி மானத்தை வாங்குகிறாரே!”, என்ற சங்கடம் அவளின் முகத்தில் இருந்ததைப் பார்த்தான். அதே சமயம் அர்ஜுன் தன்னை கவனிப்பதை கவனித்து விட்டவள் முகத்தில் ஒரு கோபத்தை காட்ட..

“ஐயோ! இது எனக்கு தேவையா!”, என்பது போல பார்வையைத் திருப்பினான். 

“அழகா தான் இருக்கா! அதுக்காக நான் சைட் அடிக்கணுமா என்ன? நான் அடிக்கவேயில்லை! இந்தப் பொண்ணு முறைச்சு பார்க்குது… இந்த அப்பா பண்ற வேலை….”, என்று அப்பாவை மனதிற்குள் வசைபாடினான்.     

அவன் அலட்சியமாக பார்வையை திருப்பியதைப் பார்த்தவள், “ஹேய் நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா… இரு! உன்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன்னு சொன்னது வாபஸ்..”, என்று நம்பியார் ஸ்டைலில் மனதில் கையை பிசைந்து சொல்லிக் கொண்டாள்.

இந்த ஒரு விளையாட்டுத்தனம் தான் அவளின் அப்பா அவளைத் தனியாக விட பயம் கொள்வதற்கு காரணம்.       

Advertisement