Advertisement

அத்தியாயம் ஒன்பது:

வீட்டிற்கு வந்த அர்ஜுன் தந்தையின் முன் வந்து நின்றான், “என்ன செய்திருகிறீர்கள்”, என்ற கேள்வியைக் கண்களில் தாங்கி…

முகத்திலும் அவ்வளவு கோபம்… இப்படித் தந்தையின் முன் எப்பொழுதும் பாவனையைக் காட்டியதில்லை. முதன் முறை நிற்கிறான், ஷண்முகசுந்தரம் இதனை எதிர்பார்க்கவில்லை.

“என்ன தம்பி இப்படிப் பார்க்கறீங்க”, என்று கேட்க..

“நான் இதை உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கலைப்பா.. நம்ம பெரிய மனுஷங்கன்னு நம்மளே சொல்லிகிட்டா ஆகாது, அப்படி இருந்தும் காட்டணும்”.

“ஏன்? என்ன குறை வந்திருச்சு இப்ப அதுக்கு?”, என்று அவர் கோபமாக எழவும்,

அவர் எழுந்த தோரணையில் கௌரி பயந்து விட்டார். ஆனால் அர்ஜுன் அவரை நேர்ப் பார்வை பார்த்தான்.

“குறை தான் வந்திடுச்சு, அந்த சின்ன பொண்ணு முன்ன நான் அசிங்கப்பட்டு வந்து நிக்கறேன்”,

“என்ன? என்ன சொல்ற?”, என்றார் அதிர்ந்து.

அப்பாவிடம் எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாதவனா அர்ஜுன். யோசித்து நிதானித்து செய்பவன் அர்ஜுன். அதனால் தான் விருப்பத்தை சொல்லக் கூட யோசித்து இருந்தான். ஆனாலும் நான்கு நாட்கள் அதிகமில்லை தான்.

அதற்கு அப்படியே நேர் மார் அவனின் தந்தை… சற்று சீண்டி விட்டால் போதும் காரியத்தைக் கச்சிதமாய் முடித்து விடுவார்.

“பின்ன அவளுக்கு சரியான திமிர் பா, நம்ம கிட்ட பணம், அந்தஸ்து, வழி வழியா வர்ற குலப் பேர் இப்படி இருக்கறதால பெருமை! ஆனா அவளுக்கு அப்படி எதுவுமே கிடையாது! ஆனாலும் திமிர்! சொல்றா, நான் உன்னை விரும்பவேயில்லை, ஆனா ஊர் பூரா எதுக்கு அப்படி சொல்லிட்டுத் திரியறன்னு… செத்தாக் கூட என்னை கல்யாணம் செஞ்சுக்க மாட்டாளாம்”,

“நான் சொல்லிட்டு வந்திருக்கேன், சாகறதுன்னா கூட என்னைக் கல்யாணம் பண்ணின அப்புறம் தான் சாக முடியும்னு சொல்லிட்டு வந்துட்டேன்”,

“இனி அவ கிட்ட தோத்துப் போறதா ஜெயிக்கிறதா, நீங்க தான் சொல்லணும்”,

கௌரிக்கு ஒரே யோசனை, “இவன் நர்மாதவை திட்டுவது போல தான் இருக்கு, ஆனா இல்லையே!”,

“அவங்க சாதாரண இடம்டா தம்பி”,

“நான் அவளைக் கல்யாணம் பண்ண கேட்கறேன். அவ முடியாது சொல்றா! அப்போ யார் சாதாரணம்… நாம் தானே!”,

“இவன் அவளை திட்டவேயில்லை புகழ்கிறான்.. ஹேய்! நீ கொடுத்து வைத்தவள் பெண்ணே!”, என்று தான் கௌரிக்கு தோன்றியது.

முகத்தில் புன்னகை வராமல் இருக்க மிகுந்த பிரயர்தனப்பட்டார்.

ஷண்முக சுந்தரத்தின் முகம், “சாதாரணம்”, என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை என்ற பாவனையைக் காட்ட.. “அப்பா எனக்குத் தெரியும்! அவங்க சாதாரணம்னு, அதான் பிடிச்சு இருக்குன்றதைக் கூட சொல்லாம இருந்தேன்.. அதுக்குள்ள நீங்க தான் இவ்வளவு பிரச்சனை செஞ்சிட்டீங்க”,

“இனி என்ன பண்றதுன்னு நீங்க முடிவு பண்ணுங்க, ஒரு பொண்ணுக் கிட்ட நான் தோத்துப் போறதா.. இப்போ நாங்க காதலிக்கறோம்னு நீங்க எல்லார் கிட்டயும் சொல்லி வெச்சிருக்கீங்க… இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா நான் தான் அவரை வேண்டாம்னு சொல்லிட்டேன்னு ஊர் பூராவும் சொல்வாப்பா! ஏன்னா நிஜமா என்னை வேண்டாம்னு தான் சொல்லிட்டு இருக்கா!”, என்று சொல்லி அப்பாவை யோசனை செய்ய விட்டு அகன்றுவிட்டான்.

“தேங்க்ஸ் அர்ஜுன்! பயந்துட்டே இருந்தேன்! அப்பாவை சமாளிச்சிட்ட”,

இருந்தாலும் அவன் முகம் வருத்தத்தைத் தான் காட்டியது.

“ஏன் அர்ஜுன்?”,

“ப்ச்! நர்மதாகிட்ட ரொம்ப தப்பா….”, என்று அவன் ஆரம்பிக்கும் போதே,

“அர்ஜுன்”, என்று அதிர்ந்து வாய் பொத்திக் கொள்ள,

அவர் சிந்தனை போகும் திசை அறிந்து, இருந்த டென்ஷனிலும் சிரிப்பு வந்து விட்டது அர்ஜுனிற்கு,

“அம்மா டிராஜிடியும் பண்ற, காமெடியும் பண்ற, என்னம்மா நீ, நிறைய சினிமா பார்த்துக் கெட்டுப் போயிட்ட, ரொம்ப தப்பா பேசிட்டேன்னு சொல்ல வந்தேன்”.

“என்ன தப்பா பேசின”, என்றார் கவலையாக.  

“அவளுக்கு இஷ்டம் இருக்கா இல்லையான்னு கேட்கவேயில்லை, உன்னை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்! தப்பு தானே! ஆனா இப்படி செய்யணும்னு நான் நினைக்கலை, இந்த அப்பா பண்ணின வேலை”,

“எல்லாம் என்னால தானே!”, என்று மளமளவென்று அம்மாவின் கண்கள் கண்ணீரை சொரிய,

“அம்மா எல்லாம் சரி பண்ணிடலாம், ஆனா நர்மதாவைப் பண்றது தான் கொஞ்சம் கஷ்டம், முடியாதது இல்லை, கொஞ்சம் டைம் எடுக்கும்…”,

“அப்போக் கல்யாணம்”,

“அவ கல்யாணத்தை அவளா முடிவு பண்ணுவா! அவங்கப்பாதான்! அதெல்லாம் பேசிட்டேன்!”,

“ம்ம்ம்ம்! என்ன? என்னடா வரிசையா சொல்ற… மண்டபம் பார்த்து நாள் கூட குறிச்சிட்டியா…?”,

“ம்! அதுவும் நானே பண்ணுவனா! நீங்க பண்ணுங்க…”,

“அவருக்கு விஷயமே தெரியாது… அவங்கப்பா கிட்ட என்ன பேசினேன்… இந்த மாதிரி பிடிச்சிருக்குன்னு அம்மாக் கிட்ட சொன்னேன் அவங்க ஏதோ சந்தர்ப்பம் தெரியாம அப்பாக்கிட்ட பேசி.. அவங்க சத்யாக்கு பேசி.. நாங்க காதலிக்கற மாதிரி வந்துடுச்சு… அப்படியெல்லாம் எதுவுமில்லை… நான் தான் இஷ்டப்பட்டேன்! உங்க பொண்ணு கிடையவே கிடையாது… அதுக்குள்ள இப்படி பேச்சு வந்துடுச்சுன்னு சாரி கேட்டேன்!”,

“என்ன மன்னிப்பு கேட்டியா?”, என்றார் அதிர்ந்து,

“வேற என்ன பண்ண, முன்ன பின்ன தெரியாத என்னை பெரிய மனுஷங்கன்னு நம்பி பொண்ணைப் பார்த்துக்க சொன்னா, நாம இப்படிப் பண்ணுவோமா? தப்புமா அதான்…”,

“அவர் ஏதாவது கோபப்பட்டு பொண்ணைப் பொசுக்குன்னு கூட்டிட்டுப் போய்ட்டா வேலையை விட்டு… அதான் சாரி கேட்டேன், எதுவா இருந்தாலும் வீட்ல பெரியவங்க பேசுவாங்கன்னு சொல்லியிருக்கேன்”,

“இனி எல்லாம் உங்க கைலதான்மா… என்னவோ போங்கம்மா! என் கல்யாணத்தை இப்படி எல்லாம் நானே நடத்திக்கிற மாதிரி வரும்னு நான் நினைக்கவேயில்லை”, என்று ஆதங்கத்தோடு அவன் சொல்லிக் கொண்டிருக்க… அந்த நேரம் சரியாக வந்த ஷண்முக சுந்தரம் மகன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டார்.

அந்தக் குரல் அவருக்கே கேட்க ஒரு மாதிரி இருந்தது…

“ஊர்ல இருக்குற அத்தனை பேருக்கும் பண்ணுங்க, என்னை விட்டுடுங்க, இவர் பண்ணின ஒரு வேலையால இப்போ எத்தனை பேர்கிட்ட கீழ இறங்கிப் பேச வேண்டியிருக்கு, நான் பிடிச்சிருக்குன்னு அந்தப் பொண்ணுக் கிட்ட கூட சொல்லலை! சொன்னா, சரி வருமா வராதான்னு நான் யோசிக்கறதுக்குள்ள எவ்வளவு கலாட்டா”, “செத்தாக் கூட கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்ற அளவுக்கா நான் இருக்கேன்!”, என்று இருந்த மன உளைச்சலில் கத்தியே விட்டான்.                               

கௌரி ஏதோ சொல்ல வர.. “என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடுங்கம்மா”, என்று சொல்லி ரூமிற்குள் புகுந்து கொண்டான்.    

 என்ன தான் மனதை சமன்படுத்தினாலும், அது சமன்பட மறுத்தது. நர்மதாவின் வார்த்தைகள் அவனை மிகவும் காயப்படுத்தி இருந்தது. நடந்தது சரியல்ல என்று தெரியும்! ஆனாலும், “செத்தால் கூட உன்னைத் திருமணம் செய்ய மாட்டேன்!”, என்று எப்படி யோசிக்காமல் பேசிவிட்டால்.

“வேண்டாம்! நீ தேவையில்லை போடி! என்று சொல்லி விடலாமா”, என்று தான் கோபத்தில் தோன்றியது. “நான் எதற்கும் பொறுப்பில்லை. ஏன் நான் பிடித்ததைக் கூட அவளிடம் சொல்லி அவளைத் தொந்தரவு செய்யவில்லை. பிறகு என்னைப் பற்றி இப்படி நினைக்க வேண்டிய அவசியம் என்ன?”,

இத்தனை வருட காலத்தில் இல்லாத மனஉளைச்சல்.

வெளியே கணவரிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை கௌரி…. அவனையும் மீறி மகன் கத்திவிட்டு சென்றது, அவரை அப்படியே அமர்த்தி விட்டது.

எத்தனை திட்டினாலும், எத்தனை சண்டையிட்டாலும் அடுத்த நிமிடம் வந்து பேசி விடும் மனைவி, காலையில் பிரச்சனையான பிறகும், “என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?”, என்று வருத்ததோடு பேசிக் கொண்டிருந்தவள், மகன் இப்படிப் பேசியதும் முதல் முறையாக முகத்தைத் திருப்பி அமர்ந்தது,

நேரத்திற்கு என்ன இருந்தாலும் உணவை உண்ணச் சொல்பவள், இன்று அப்படியே அமர்ந்துவிட்டாள் என்பதை கவனித்தார். மகனை மிகவும் காயப் படுத்தி விட்டது அப்பெண்ணின் வார்த்தைகள் என்று புரிந்தது.

வாழ்கையில் எத்தனையோ பார்த்து வந்தவர், யோசிக்காமல் எதையும் செய்பவர், ஆனாலும் மகன் விஷயத்தில் அப்படி உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லை. அப்பாவும் மகனும் இருவரில் யார் புத்திசாலி என்று சொல்ல முடியாது. அதை அறிந்தவன் அர்ஜுன். அதுதான் தொழில்களை அப்பா பார்க்கட்டும் என்று வந்துவிட்டான்.

தன்னை சீண்டி விட மகன் பேசுகிறானோ என்ற எண்ணம் தான் ஷண்முக சுந்தரத்திற்கு, ஆனால் ஒரு வார்த்தைக் கூட அவன் இல்லாததை சொல்லவில்லை நடந்ததை சொல்கிறான்..என்று புரிந்து கொண்டார்.

கூடவே அவன் மிகவும் வருத்தத்தில் இருக்கிறான் என்றும் தெரிந்து கொண்டார். எப்போதும் கெளரியிடம் இப்படி நடந்து கொள்ளவே மாட்டான்.

“எழுந்திரு, சாப்பாடு எடுத்து வை!”, என்று மனைவியை அதட்டியவர், “நான் அவனைக் கூட்டிட்டு வர்றேன்”, என்று சொன்னார்.

அந்தத் தொனியில் சொன்னால் செய்தே ஆகவேண்டும். எழுந்து கௌரி மெளனமாக செல்ல, அர்ஜுனை தேடிச் சென்றவர், அங்கே அவன் ரூமில் உடைக் கூட மாற்றாமல் படுத்திருந்தவனைப் பார்த்து, “வா, சாப்பிடலாம்!”, என்றார்.

“வேணாம்பா எனக்கு”,

“பிரச்சனை பண்ணினது நான், பிரச்சனை உனக்கு, உங்கம்மா ஏன் சாப்பிடாம இருக்கணும், காலையிலயும் என்னால அவ சாப்பிடலை, இப்போ நீ சாப்பிடலைன்னா அவ எப்படி சாப்பிடுவா, பசியில யாருமே சரியா யோசிக்க முடியாது”,

“ஒன்னும் பண்ண முடியாது! இந்த ஜென்மத்துக்கு நான் தான் உன் அப்பா! நீ தான் என் மகன்!  என்ன செய்யலாம்னு யோசிக்கலாம் வா!”, என்றார்.

எப்போதும் இப்படி இறங்கி வந்து பேசுபவறல்ல… மனமேயில்லாத போதும் எழுந்து சென்றான்.

அவர்கள் இருவரும் அமர, பரிமாறப் போன கெளரியைப் பார்த்தவன், “அம்மாவை உட்கார சொல்லுங்க”, என்றான்.

“உட்காரு!”, என்று கணவர் சொல்லவும் தான் அமர, “அம்மாவும் மகனும் சாப்பிடுங்க, ஒரு வாரம் போகட்டும், இது ஆத்திரத்துலையோ, அவசரத்துலையோ எடுக்குற முடிவு கிடையாது, யோசிக்கலாம்”, என்றார்.

இப்படி பேசினால் யோசிப்பார் என்று அர்ஜுனிற்கு புரிந்த போதும், “இந்த ஜென்மத்துல யோசிச்சு, யோசிச்சே இவர் எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டார்”, என்று தான் தோன்றியது.

ஆனாலும் இதற்கு மேல் பெற்றவர்களிடமோ, அவளிடமோ பேச முடியாது என்று தான் தோன்றியது.  

எதுவாகினும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன், அமைதியாக உணவு உண்ண ஆரம்பித்தான்.

அப்போதும் தோன்றியது ஒன்று தான்! “அவள் சாப்பிட்டாளோ? இல்லையோ? நான் மிகவும் திமிராக வேறு பேசி வந்தேன்”, என்று தான் தோன்றியது.

“அர்ஜுனைக் காதலிக்கிறாள் என்று ஊருக்குள் பேசிக் கொள்வது, அவ்வளவு கேவலமான விஷயமா?”, நினைக்க நினைக்க அவனையறியாமல் தலையில் கைவைத்தான்.

அவனுடைய பாவனையில் கௌரி பதறி விட்டார், “என்ன கண்ணா? என்ன பண்ணுது?”, என்று.

அப்போதுதான் தலையில் கை வைத்து சாப்பிடாமல் அமர்ந்து இருப்பதை உணர்ந்தான்.

“ப்ச்! ஒன்னுமில்லைம்மா! ஏதோ யோசனை!”, என்று மீண்டும் உணவில் கவன செலுத்தினான். “ஸ்டே கூல்”, என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு,  

மகனின் இந்தத் தடுமாற்றம் பெற்றோருக்கு புதிது. “என்ன யோசனை?”, என்றார் கௌரி.

மெல்லிய புன்னகை… “ம்ம்ம், விடாது கருப்பும்மா”, என்றான்.

மகனின் புன்னகையை பார்த்து, “என்ன?”, என்றார் கௌரி.

அப்பா இல்லையென்றால் சொல்லியிருப்பான், ஆனாலும் மகனின் புன்னகை, பேச்சுக்கள்… “சொல் பேச்சுத் தட்டாத மகன், வீணாக அவனை திருமண பந்தத்தில் மாட்டி வைக்காமல் தானாகத் தான் இதில் தள்ளி விட்டேனோ”, என்று அவருக்கு அவரே தோன்றியது.

“அந்தப் பொண்ணை  நான் ஒரு தடவை பார்த்துட்டு சொல்றேனே”, என்றார் அவராகவே.

கெளரியின் முகம் பளிச்சென்று மலர. “ம்ம்ம்! வேண்டாம்பா!”, என்றான் உடனே அர்ஜுன்.

“ஏண்டா? ஏண்டா வேண்டான்ற”,

“இல்லைம்மா! நான் ஏற்கனவே ரொம்ப மிரட்ற மாதிரி பேசிட்டு வந்திருக்கேன். இதுல அப்பா வேற போய் பார்த்தாங்கன்னா… நல்லா இருக்காது… அதுவுமில்லாமா, அது சரி கிடையாதும்மா… சும்மா பார்க்கறது வேற, இப்படி பார்க்கறது வேற”,

“எனக்குப் பார்க்காம சொல்ல முடியாது”, என்றார் கட் அண்ட் ரைட்டாக அவன் தந்தை.

“தெரியாம பார்க்கலாம்”, என்றார் அம்மா.

“அம்மா! அசட்டுத்தனமா பேசக் கூடாது”.

“என்ன அசட்டுத்தனம், அவ பஸ் விட்டு இறங்கி ஹாஸ்டல் வரை நடந்து வருவா தானே! அப்போ பார்க்கலாம் கார்ல இருந்து”,

“நம்ம கார் அவளுக்குத் தெரியாதா என்ன.. இப்ப இருக்குற கோவத்துக்கு என் கார் பார்த்தா கல்லு விட்டெறிவா, அவ்வளவு கோபத்துல இருக்கா.. என்னை அடிக்க முடியலைன்னு செஞ்சாலும் செய்வா”.

“எப்பாடியாவது கணவர் சம்மதம் சொன்னால் போதும் என்றிருக்க, இந்தப் பையன் இப்படி எதைச் சொன்னாலும் மறுக்கிறானே”, என்றிருந்தது.

அர்ஜுனின் குரலில் ஒலித்த சொந்தம், அவனுடைய நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் மனோபாவங்கள்… “பார்த்து முடிவெடுத்து விடுவோம்”, என்று  ஷண்முக சுந்தரம் முடிவெடுத்து விட்டார்.

அவளுடைய பஸ் வரும் நேரம் கணக்கிட்டு காத்து இருந்தனர்.   

நேற்றுப் பார்த்த பெண்ணா இவள் என்று கௌரி அயர்ந்து விட்டார். நேற்றும் அர்ஜுன் திட்டி கலங்கிய முகத்துடன் தான் பார்த்தார், ஆனால் இன்று அதை விட அதிகம்….. அவ்வளவு கலக்கம்..

“என்ன அர்ஜுன் பண்ணின அவளை?”, என்று ஆற்றாமை தாங்காமல் கேட்டே விட்டார்

“ஒன்னுமே பண்ணலைம்மா”, என்று அர்ஜுன் சொன்ன போதும்,

“உனக்குப் பிடிச்சிருக்குன்றதுக்காக இப்படி ஒரு பொண்ணை வருத்தப்பட வைப்பியா”, என்று கேட்டே விட்டார்.

“அம்மா நான் ஒன்னும் பண்ணலை”.

“நேத்து நீ அவளை எப்படி திட்டினன்னு நான் பார்த்துட்டு தான் இருந்தேன். ரொம்ப தப்பு அர்ஜுன்!”, என்று மீண்டும் கடிந்தார்.

இப்படி தன் மனைவியை, தன் மகனை, கவர்ந்த அந்தப் பெண்ணை தான் பார்த்துக் கொண்டிருந்தார் ஷண்முக சுந்தரம். இவர்கள் இருந்த காரை கடந்து தான் நடந்து சென்றாள், ஆனால் இவர்களின் காரை கவனிக்கவில்லை… தன் பாதையை மட்டுமே கவனித்து நடந்தாள்,

அவர் முன்பு நர்மதாவை பார்த்து இராததால் அவருக்கு ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை… தன் மனைவி சொல்வது போல கலக்கமெல்லாம் இல்லை ஒரு தீவிரம் தான் தெரிந்தது. நடையில் ஒரு மிதமான வேகம்… ஒரு மரியாதைக்குரிய தோற்றம்… நிச்சயம் அழகான பெண் தான். 

ஆனாலும் இதையும் விட அழகான பெண்களை நிச்சயம் அர்ஜுன் கடந்து வந்திருப்பான். ஆதலால் இங்கு அழகு மட்டும் பிரதானமல்ல என்று புரிந்தது.   

வசதி வாய்ப்பு பெரிய குறை தான். ஆனால் இவ்வளவு இவனுக்கு பிடித்திருக்கும் போது ஒன்றும் செய்ய முடியாது என்று அவருக்கு தோன்றிய க்ஷணம்.

“அப்பா! நீங்க வீட்டுக்குப் போங்க… இங்க இருந்து கொஞ்ச தூரம் தான்… நீங்க டிரைவ் பண்ணிடுங்க… நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்”, என்று சொல்லி அவரின் பதிலிற்காக  கூட நிற்கவில்லை…

இறங்கி சில எட்டுக்கள் முன் சென்றிருந்த நர்மாதவை வேகமாக பிடித்தான்.   சில அடிகள் நடந்த பிறகு  தான் யாரோ உடன் வருவது போல தோன்ற, யார் என்பது போல பார்த்தாள், அர்ஜுன்!

“விடாது கருப்பு!”, என்று கோபத்தில் அவளின் வாய் முணுமுணுக்க. அர்ஜுனிற்கு சிரிப்பு தாங்கவில்லை, வாய் விட்டு சிரித்தான்.

“நானெல்லாம் என் பொண்டாட்டிக் கூட சிரிச்சு பேசவே ஒரு வருஷம் ஆச்சு, இவன் மானத்தை வாங்கறான்! அந்தப் பொண்ணு முறைக்குது! இவன் சிரிக்கிறான்! எப்படியும் கல்யாணம் பண்ணிக்குவான்! பேசாம நாம பண்ணி வெச்சிட்டா நமக்கு மரியாதை!”, என்று நொடித்துக் கொண்டே ஷண்முக சுந்தரம் காரை எடுத்தார்.

“இதுல அசிங்கப்பட்டு வந்துட்டேன்னு என்கிட்ட சண்டை போடறான்! என்னத்தை சொல்ல?”,

கூடவே, “என்ன பையனை வளர்த்து வெச்சிருக்கியோ”, என்று மனைவியை முறைக்கவும் தவறவில்லை.    

அர்ஜுன் நர்மதாவைப் பார்த்ததும், இருந்த கோபமெல்லாம் மறைய, அவளை சமாதனப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவன், அவளின் விடாது கருப்புவில் அவளை திரும்பவும் சீண்டினான், “மாப்பிள்ளை அவரு தான்! அவரு போட்டிருக்குற டிரஸ் எங்கப்பா வாங்கிக் கொடுத்ததுன்னு எப்போ சொல்லப்போற!”, என்று சொல்லவும்,

“நாம பேசினது இவனுக்கு எப்படித் தெரியும்?”, என்று நர்மதா முறைத்துப் பார்க்க,

“வந்த முதல் நாள் இருந்து சைட் அடிக்கறேன்!”, என்று கண்ணடித்து சொல்ல,

“அற்பப்பதரே!”, என்ற பார்வையை நர்மதா செலுத்த…

அசராமல் நின்றான் அர்ஜுன்.    

“உங்கப்பா பேசினாரா.. நான் உனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லைன்னு சொல்லிட்டேன்! சொன்னாரா!”,

“அது மட்டுமா சொன்னார், தம்பி வீட்ல வந்து பேசுவாங்கன்னு சொன்னார், நான் சரின்னு சொல்லிடட்டுமா”, என்றும் கூடவே கேட்டார், அதை நர்மதாவால் சொல்ல முடியவில்லை.  

“இல்லைப்பா! வேண்டாம்! நான் எதுவுமே பண்ணலை என் பேரை இழுத்து விட்டுடாங்க”, என்று நர்மதா சொன்னது காதில் வாங்கவேயில்லை,

“வேலைக்குப் போகும் போது என்ன சொன்ன? நீங்க எந்த மாப்பிள்ளை சொன்னாலும் சரின்னு சொல்றேன்னு தானே சொன்ன! இப்போ ஏன் வேண்டாம்? என்ன குறை அவருக்கு, இப்படி ஒரு சம்மந்தம் கனவுல கூட நம்மளால நினைக்க முடியாதுன்றது தான் உண்மை!”,

“ஆனா அதுக்காக நான் சம்மதம் சொல்ல நினைக்கலை, அந்த தம்பியை எனக்கு பிடிச்சிருக்கு! இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை நான் தேடினாலும் கிடைக்காது. சும்மா முட்டாள்தனமா யோசிக்காம வேண்டாம்னு வீம்புக்கு சொல்லக் கூடாது, அந்தப் பேச்சு தான் தெரியாம வந்திடுச்சுன்னு மன்னிப்பு கேட்கறாங்க, இந்த குணம் எத்தனை பேருக்கு வரும். தங்கமான பையன், எனக்குப் பிடிச்சிருக்கு”,

“ஊர்ல இருக்குற அத்தனை தெய்வத்துக் கிட்டயும் உங்கம்மா இப்போவே வேண்டுதல் வைக்கிறா இந்த சம்மந்தம் தகையணும்னு… சரின்னு சொல்லிடுவோம், மறுத்துப் பேசாத!”, என்று விட்டார் ஒரே முடிவாக..

நினைக்க நினைக்க கண்களில் நீர் நிறைந்தது, “இவன் வேண்டாம் என்று சொல்லும் என் முடிவு அரை நாள் கூட நிற்கவில்லை, என்ன சொல்ல”,

அவளின் கண்களில் நீர் காணவும், “என்ன? அப்பா திட்டினாரா! நான் உனக்கு இதுல சம்மந்தம் இல்லைன்னு சொல்லியுமா!”, என்று போனை எடுக்கப் போனான்.

உதட்டின் மேல் கை வைத்து, “பேசாதே!”, என்பது போல சைகை மட்டும் காட்டியவள்,

“பின்னாடி எப்படியோ தெரியலை, இப்ப தயவு செஞ்சு என்னை விடுங்க, ப்ளீஸ் டோன்ட் டார்ச்சர் மீ! காலையில இருந்து எல்லோரும் மாத்தி மாத்தி பேசி, என் அப்பா அம்மாவே எனக்கு இப்ப வேறையா தெரியறாங்க, தயவு செஞ்சு என்னை விடுங்க”, என்று இரு கைகள் கூப்பிக் கேட்கவும்

அர்ஜுனின் மனோபாவம் அப்படியே மாறிற்று. 

 

Advertisement