Advertisement

அத்தியாயம் எட்டு:

கணவரிடம் சொல்வோமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரிய பட்டி மன்றம் நடத்திய கௌரி பிறகு வேண்டாம் தான் ஏதாவது சொதப்பி விட்டாள் அர்ஜுன் ஏமாந்து விடுவான் என்று சொல்லவில்லை.

காலையில் அர்ஜுன் ஆஃபிஸ் கிளம்பவும், “நேத்து அம்மா தூங்கவேயில்லைன்னு சொன்னா, இப்போ மறுபடியும் கிளம்பற நீ!”, என்று ஷண்முக சுந்தரம் சத்தமிட…

“அப்பா! ஒரு வேலை முடிச்சிருக்கேன்! அதை போய் ரிப்போர்ட் பண்ணிட்டு வந்துடுவேன்.. லீவ் தான் போட்டிருக்கேன், மதியதுக்குள்ள வந்துடுவேன்!”, என்று சமாளித்துக் காரை எடுக்கப் போனான்…

“உன் ஆளைப் பார்க்கப் போறியா”, என்று கௌரி ரகசியம் பேச ,

“அம்மா நிஜமாவே வேலைம்மா! நைட் செஞ்சேன் இல்லையா!, சும்மா அவளைப் பத்தி பேசிட்டே இருக்காத… அந்த லூசு என்னை இன்னும் திரும்பிக் கூட பார்க்கலை!”, என்று கத்திவிட்டு செல்ல,

“அய்யோடா! இவனை என்ன செய்ய!”, என்று கன்னத்தில் கை வைத்து படியில் அமர்ந்து விட்டார்.

“கார் கிளம்பும் சத்தம் கேட்டு, இவ்வளவு நேரமாகி விட்டது! எங்கே இவளைக் காணோம்!” என்று வந்த ஷண்முக சுந்தரம், படியில் கவலையாக அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தார்.

“என்ன கௌரி?”, என்று கேட்க….

“என்ன? ஒண்ணுமில்லையே!”,

“எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்குற? கன்னத்துல கை வெச்சு!”, என்று கேட்க,

“ஒன்னுமில்லை”, என்றார் தயங்கியபடி,  

“எதுக்கு அவ்வளவு அவசரமா உன்னை பார்க்கணும்னு வர சொன்னான்”.

“அது, அது….”, என்று தடுமாறி, “சும்மா தான் சொன்னான் போல!”, என்று உளற,

அதிலேயே ஏதோ விஷயம் என்று  தெரிந்தவர், “என்ன?”,  என்று ஒரு தீர்க்கமான பார்வையோடுக் கேட்க,

அந்தப் பார்வைக்கு கௌரியால்  மறைக்க முடியவில்லை, “அது.. வந்து.. நர்மதா…”, என்று மீண்டும் உளற,

“உள்ள வா முதல்ல!”, என்று இன்னும் அதட்டி விட்டு செல்ல,

“ஐயோ! அர்ஜுன்! என்னைத் தொலைத்து விடுவானே, காரியம் கெட்டுவிட்டால்”. பயந்து விட்டார், அந்த பயம் கலக்கம் அப்படியே முகத்தில் இருந்தது.

உள் வந்ததும், “சொல்லு!”, என்று மீண்டும் அதட்ட,

“அர்ஜுன், நர்மதாவை இஷ்டப்படறான்!”, என்று ஒரு வழியாக சொல்லியே விட்டார்.

“என்ன?”, என்று அதிர்ந்து கேட்டார் ஷண்முக சுந்தரம், அவர் மகன் காதலிக்கிறானா, ஊர் உலகத்தில் அவரின் மரியாதை என்ன ஆவது. அவரின் முகம் அவ்வளவு கோபத்தைப் பூசியது.

“யாரு நர்மதா? என்ன ஆளுங்க?”, என்றார்.

“நம்ம ஆளுங்க தான்!”, என்று அவசரமாக கௌரி சொல்லி, “சத்யா சொல்லி நம்ம சொன்னோமே, இங்க வேலைக்கு வருதுன்னு அந்தப் பொண்ணு”.

“என்ன அவனுக்கு முன்னயே அந்தப் பொண்ணை தெரியுமா!”,

“இல்லை, இல்லை, இப்ப தான்!”, என்று அவசரமாக மறுத்தார்.

“என்ன பார்த்த நாலஞ்சு நாள்லையா, இப்படி தான் நீ பையனை வளர்த்து வெச்சிருக்கியா”, என்று கேட்க… கௌரி மெளனமாக தான் நின்றார்.

பின்னே ஷண்முக சுந்தரத்திற்கு மனைவியுடன் சரியாக பேசவே வருடம் ஆகிற்று திருமணத்திற்கு பின்.. அவ்வளவு ஆண்திமிர், எங்கே மனைவியின் பின் போய் விட்டானோ என்று யாரும் சொல்லி விடுவர் என்று சரியாகக் பேசக் கூட மாட்டார். கூட்டுக் குடும்பம் வேறு, அந்தத் தளைகளும் கூட…

அவருக்கு நான்கு நாளில் மகன் ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னால் அப்படித்தான் இருக்கும்! என்ன சொல்ல?

“அந்தப் பொண்ணு எவ்வளவு விவரமா இருக்கும், பார்த்த நாலு நாள்ல என் பையனை இப்படி சொல்ல வெச்சிடுச்சு, இந்த சத்யாவை……”, என்று மகளுக்கு கோபத்தோடு கைபேசியில் அழைக்கப் போக…

“இருங்க, இன்னும் அந்தப் பொண்ணுக்குத் தெரியவே தெரியாது, உங்கப் பையன் என்கிட்டே மட்டும் தான் சொல்லியிருக்கான், யார்கிட்டயும் சொல்லாதீங்க, ஊர் பூரா பரவிடும்”,

“அந்தப் பொண்ணு நல்ல மாதிரி தான்! அதான் உங்கப் பையன் பயந்து இன்னும் சொல்லாம இருக்கான்”, என்றும் சொல்லச் சொல்ல கேட்காமல் சத்யாவை அழைத்தார்…

“யார் அந்த ஆளுங்க? என் முன்னாடி நின்னு பேசக் கூட பயப்படுவானுங்க, அவனுங்க பொண்ணை இவன் பிடிச்சிருக்குன்னு சொல்றதா, ஒரு தராதரம் வேண்டாம்..”,

“ஐயோ! சொல்லாதீங்க!”, என்று கௌரி கெஞ்சக் கெஞ்ச, மகளிடம் விஷயத்தை சொன்னவர், “இதுதான் நீ தெரிஞ்சவங்கன்னு அனுப்பி வெச்ச லட்சணமா!”, என்று மகளிடம் ஏகத்திற்கும் சத்தம் போட,  

யாரும் எதிர்பாராத வகையில் மிகுந்த பிரச்சனையாகி விட்டது. ஷண்முக சுந்தரம் கூட விஷயத்தைப் பரப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. இருந்த கோபத்தில் மகளை அழைத்து சத்தம் போட… அவர் அழைத்த சமயம் அவருடைய மகளும் மாமியாரும் ஒரு விஷேஷத்தில் இருக்க, விஷயம் செவ்வனே பரவியது.  

அர்ஜுன் மட்டும் விரும்புகிறான் என்பது போல வரவில்லை, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது போலக் கிளம்பிவிட,

அர்ஜுன் அவளிடம் சொல்ல நினைக்கும் முன்பே… சொந்த பந்தங்களின் வாய்க்கு அவலாகிப் போனால் நர்மதா.

அதையும் விட அர்ஜுனை எப்படி எதிர்கொள்வது என்று கௌரி பயந்து போனார். இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லை. கணவர் கோபப்படுவார் என்று தெரியும், ஆனால் இப்படி சத்யாவிடம் உடனே சத்தம் போடுவார், விஷயம் பரவிவிடும் என்று அவர் என்ன கண்டார்.

சத்யாவிடம் ஒரு விஷயமும் தங்காது, முதலில் அவளின் மாமாயாரிடம் சொல்ல, அந்த அம்மாள் எல்லோரிடமும் தம்பட்டம் அடித்து விடுவார்.

அந்த விஷேஷ வீட்டில் நர்மதாவின் மாமா வீட்டினரும் இருக்க அவர்களுக்கும் விஷயம் தெரிய, உடனே நர்மதாவிற்கு அழைத்தார் அவர். அவரின் பயம் அவருக்கு நர்மதாவின் அப்பாவிற்கு விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான். 

மாமா போன் செய்து, “என்ன நர்மதா உன்னைப் பத்தி இப்படி சொல்றாங்க!”, என்று விஷயத்தை சொல்லவும்,

“இல்லை மாமா! அப்படி எல்லாம் எதுவுமில்லை.. யாரோ தப்பா சொல்லியிருக்காங்க!”, என்று சமாதானம் செய்தாலும்,

“இப்படி ஒரு பேச்சு எப்படி வரும்! நர்மதா உன்னோட விளையாட்டுத்தனம் தான் இதுக்கு காரணமாயிருக்கும்! உங்கப்பாக்கு நான் என்ன பதில் சொல்வேன்”, என்று அவர் நர்மதாவைக் கடிந்து பேசிவிட, நர்மதாவிற்கு மிகுந்த மனஉளைச்சல்.

மதியமாகி விட்டது அர்ஜுன் ஆபிசில் இருந்து கிளம்ப, அவன் கேபின் விட்டு வெளியே வந்த போது நர்மதா அவனைக் காண கோபத்துடன் நின்றிருந்தாள். “ஏன் இப்படி பண்ணுனீங்க?”, என்று கண்கள் கலங்கியபடி அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க..

அர்ஜுனிற்கு எதுவும் புரியவில்லை, “என்ன? என்ன ஆச்சு?”, என்று கேட்க, அவளால் பேசக் கூட முடியவில்லை, “இத்தனை வருஷம் நான் எடுத்த நல்ல பேரை உங்களைப் பார்த்த இந்த சில நாள்ல கெடுத்துடீங்க…”,

“உங்களை நல்லவர்ன்னு நினைச்சதால தான் உங்க கூட பேசினேன் இல்லைன்னா தூர நின்னிருபேன்.. முன்ன பின்ன தெரியாத உங்களை நம்பி எங்கப்பா விட்டாரே! சே! சே! என்ன மனுஷங்க நீங்கல்லாம், என்ன குடும்பமோ, உங்கம்மா கிட்ட நேத்து தான் சொன்னேன் பையனை நல்லா வளர்திருக்கீங்க ஆன்ட்டின்னு, ஆனா உங்கம்மா கூட ச்சே! ச்சே!, எங்கப்பாவை சொல்லணும், பொண்ணை நம்பாம யாரையோ நம்பி கொண்டு வந்து விட்டாரில்லை! அவருக்கு இது வேணும்!”, என்று பட பட வென்று சொல்லி அவள் சென்று விட,

அர்ஜுன் அப்படியே நின்றுவிட்டான். என்னவென்று புரியவேயில்லை. “ஏய், என்ன பேசற நீ!”, என்று கோபத்துடன் சொல்லப் பார்க்கும் போது அவள் இல்லவே இல்லை.

அவனுக்கு எதுவும் தெரியாது, ஆனாலும், “என்ன திமிர்! என் குடும்பம்! அம்மா! என்று அத்தனை பேரையும் இழுக்கிறாள், இவளை!!!”, என்று பல்லைக் கடித்தான்.

 தன்னுடைய கைப்பேசியை அப்போதுதான் எடுத்துப் பார்த்தான், நிறைய ஃபோன் கால்கள், முக்கியமான வேலை என்பதால் சைலென்ட் மோடில் போட்டிருந்தான்…

அம்மா, சத்யா, சத்யாவின் கணவர் என்று நிறைய கால்கள்..

“என்ன வாகிற்றோ”, என்று பதட்டமாக அம்மாவை அழைக்க… அவர் தேம்பிக் கொண்டே, விஷயத்தை சொன்னார், “என்கிட்டே அப்பா துருவி துருவி கேட்டாரா, நான் உளறிடேன், அப்பா உடனே கோபமா சத்யாகிட்ட சத்தம் போட்டாரா, அவ ஏதோ விஷேஷத்துல இருந்திருப்பா போல, அவ மாமியார் கிட்ட சொல்ல.. அந்தம்மா எல்லோர் கிட்டயும் சொல்லிடிச்சு போல..”,

“என்ன சொன்னாங்க?”,

“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு!”,

“ஓஹ்”, என்று விஷயத்தை உள் வாங்கியவன், “அம்மா, அழாத விடு பார்த்துக்கலாம், அப்பாவைப் பத்தி தெரியாதா! எல்லாத்துலையும் அவசரம்! அப்புறம் செஞ்சிட்டு வருத்தப்படுவார் விடு, இந்த சத்யாக்கு எப்பவும் அறிவே கிடையாது… விடு! நீ அழாத! நான் பார்த்துக்கறேன்!”, என்று வெகுவாக அவரை சமாதனம் செய்யவும்…

“ம்! சரி! ஆனா நர்மதா என்னை தப்பா நினைப்பாளே! நேத்து தானே என்னோட நல்லா பேசிட்டு இருந்தா..”,

“விடு! உன்னை நினைக்க மாட்டா.. நான் பார்த்துக்கறேன்! சொன்னனில்லை!”, என்று சொன்னவன்,

நேராக சென்றது நர்மதாவிடம் தான், உணவு உண்ணப் பிடிக்காமல் அவளின் ட்ரைனிங் நடக்கும் இடத்தில் தான் இருந்தால் யாருமில்லை,

“என்ன?”, என்று அவள் முன் நின்றான்…

அழுதிருப்பாள் போல, கண்கள் சுருங்கி, மூக்கு சிவந்து இருந்தாள், இவனைப் பார்த்தும் முகம் கோபத்தைக் காட்ட,

“என்ன சொன்னாங்கன்னு இப்படி இருக்க, நம்ம லவ் பண்றோம்னு தானே சொன்னாங்க…”,

நர்மதா ஆவேசமாகப் பார்க்கவும்….

“வேணும்னு யாரும் செய்யலை, ஆனா நடந்திடுச்சு.. நடந்த விஷயம் இதுதான்! எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு அம்மா கிட்ட சொன்னேன், அவங்க சந்தர்ப்பம் தெரியாம அப்பா கிட்ட சொல்லிட்டாங்க, அவர் கோபத்துல சத்யா, என் அக்கா கிட்ட சத்தம் போட, அவ ஏதோ விஷேஷத்துல இருந்திருப்பா போல.. அப்படியே பரவிடுச்சு”, என்றான்.

“என்ன பரவிடுச்சுன்னு இவ்வளவு ஈசியா சொல்றீங்க… நான் உங்களை லவ் பண்றேனா”,

“பண்ணலை தான்! நான் அப்படி சொல்லவும் இல்லை, என்னை மட்டும் பேசு, என் குடும்பம்! அம்மா! இந்த மனுஷங்க! இந்த வார்த்தையெல்லாம் பேசின, தொலைச்சிடுவேன்!”, என்றான்.

“என்ன பண்றதும் பண்ணிட்டு, மிரட்ட வேற செய்றீங்களா”, என்று ஆவேசமாக கேட்க..

“என்ன பண்ணினேன் உன்னை….. ஒன்னும் பண்ணலை!.. அதான் தெரியாம நடந்திடுச்சுன்னு சொல்றேனில்லை, உங்கப்பா கிட்ட நான் பேசறேன்! நான் சாரி கேட்கறேன்! போதுமா!…”,

“அதுக்காக நீ யாரையும் மரியாதையில்லாம பேசறதை அல்லோவ் பண்ண முடியாது… அந்தக் குடும்பத்துல தான் நீ வாழப் போற! யாரையும் மரியாதையில்லாம பேசாத!”, என்றான்.

விழிவிரித்து, “என்ன இது?”, என்பது போலப் பார்த்தாள்.

“சாரி! ஐ நோ இந்த மாதிரி யாரும் மோசமா ப்ரபோஸ் பண்ண முடியாது, நானும் இப்படி நினைக்கவேயில்லை!”,  என்றான் பொறுமையாக.

“என்ன இது? ரொம்ப பேசறீங்க நான் ஒன்னும் உங்களை கல்யாணம் பண்ண மாட்டேன்”,

“நீ என்னைப் பண்ணப் போறது இல்லை, நான் தான் உன்னை பண்ணப் போறேன்”,

“எவ்வளவு திமிர் உங்களுக்கு…”,

“திமிர்தானே, இருக்கும்! உன்னை இஷ்டப்பட்டு இருக்கேன் தானே! நீதானே சொல்வ நர்மதா அவ்வளவு ஈசியான்னு, அதான் திமிர்!”,

“நான் செத்தாலும் உங்களைக் கல்யாணம் பண்ண மாட்டேன்”,

அர்ஜுனிற்கு அப்படி ஒரு கோபம் பொங்கியது.. “நல்ல விஷயம் பேசிட்டு இருக்கேன், என்ன இது அபசகுனமா பேசற… செத்துப் பாரு, உன் மொத்த குடும்பத்தையும் கூட அனுப்பறேன்…”,   

“நடந்தது தப்பு தான்! ஐ ஃபீல் சாரி ஃபார் தட், ஆனா இனிமே ஒன்னும் பண்ண முடியாது, இந்த மாதிரி விஷயத்தை இல்லைன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க, என்ன இப்போ காதலிச்சு கல்யாணம் பண்றவங்க இல்லையா நம்ம கல்யாணம் செஞ்சிக்கலாம், நீ மட்டுமில்லை, எங்க அப்பா கூட சம்மதிக்க மாட்டார்! ஆனா யார் சம்மதிச்சாலும் சம்மதிக்கலைன்னாலும் இந்தக் கல்யாணம் நடக்கும் புரிஞ்சதா, ஒரு வார்த்தைக் கூட தப்பா உன் வாயில இருந்து வரக் கூடாது”.

“உனக்கு என்ன சொல்றதுன்னாலும் செய்யறதுன்னாலும் என்னை மட்டும் தான் செய்ய ரைட்ஸ் இருக்குப் புரிஞ்சதா… அன்னைக்கு அம்மா உன்னை கேர்ள் ஃபிரண்ட்ன்னு சொன்னாங்கன்னு சொன்னது கூட நான் சொன்னது தான்! உன் பல்ஸ் பார்க்க சொன்னேன்! அம்மா ஒரு வார்த்தைக் கூட தப்பா யாரையும் பேச மாட்டாங்க”, என்று சொல்லும் போதே வேறு ஆட்கள் உள் நுழைய..

“போய் சாப்பிடு, எனக்கு வீட்டுக்கு போகணும், இல்லைன்னா இன்னும் எங்கப்பா என்ன செஞ்சு வைப்பார்ன்னு தெரியாது”, என்று சொல்லி அர்ஜுன் சென்று விட,

“என்ன சொன்னான் இவன்! என்ன சொல்கிறான் இவன்! என்ன செய்யப் போகிறான் இவன்!”, நர்மதா என்ன நடக்கிறது… தடுமாறிப் போனாள்.

இதுவரையிலும் அவளின் அப்பாவிற்கு தெரியாது. மனதிற்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. “அப்பா என்ன சொல்வாரோ? என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுவாரா? இன்னும் என் குடும்பத்தின் கஷ்டம் தீராதா?”,

“எவ்வளவு திமிர் செய்வதையும் செய்து விட்டு, எவ்வளவு தெனாவெட்டாகப் பேசிப் போகிறான்”. 

“மனிதர்களுக்கு மரியாதையே இல்லையா? நான் பெண் என்பதாலா? இல்லை வசதி வாய்ப்பில் இவர்களை விட கீழ் இருப்பதாலா? நான் இவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்! பார்த்துவிடுகிறேன்! இவன் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தால் எனக்கென்ன”,… இன்னும் அழுகை அழுகை யாய் வந்தது.   

அர்ஜுன் அவளைப் பிடித்திருக்கிறது என்று சொன்னது அவளின் கவனத்தில், கருத்தில், மனதில், மூளையில் என்று எதிலும் பதியவில்லை.   

அவளுக்கு மரியாதை கொடுத்துதான், அவளுக்குப் பிடித்தம் இருக்காது என்று தெரிந்து தான், அர்ஜுன் அவளிடம் சொல்லவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அர்ஜுனையும் மீறித் தான் இது நடந்து விட்டது.  

 

Advertisement