Advertisement

அத்தியாயம் ஏழு:

அர்ஜுன் காரில் அமர்ந்ததும், கௌரியும் நர்மதாவும் பின் சீட்டில் அமர்ந்தனர். புது ஆட்கள் என்றாலும் எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும் நர்மதா அன்று மிகவும் அமைதியாகத்தான் இருந்தாள்.

கௌரிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, சிறிது நேரம் கழித்து அவராக, “வேலை எப்படி இருக்கு, பிடிச்சிருக்கா”, என்று பேச ஆரம்பித்து, அவளின் வேலை, ஹாஸ்டல் என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தார்.

அவருக்கு பதில் கொடுக்க ஆரம்பித்த நர்மதா, பின்பு எப்போதும் போல பேச ஆரம்பித்து விட, இருவரும் தான் பேசிக்கொண்டு வந்தனர். அர்ஜுன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

நர்மதாவிடம் பேசிக்கொண்டே வந்தாலும், கௌரி தன் கவனத்தை மகன் மேலும் வைத்து தான் இருந்தார். கிட்ட தட்ட ஒரு மணிநேர பயணம் அர்ஜுன் பேசவேயில்லை.

அவளின் ஹாஸ்டல் இருந்த ஏரியா வந்ததும், “அம்மா விட்டுடலாமா”, என்றான் நர்மதாவைக் காட்டி,

“மணி என்ன பாரு? பத்து ஆகப் போகுது! சாப்பிடாம எப்படி விட”,

“இல்லை ஆன்ட்டி, நான் ஹாஸ்டல் மேட் கிட்ட சொல்லியிருக்கேன் எனக்கு எடுத்து வைச்சிருப்பா”, என்றாள்.

“அதெல்லாமில்லை, சாப்பிட்டிட்டு தான் போகணும்!”, என்று அதட்டலாக சொன்ன கௌரி, “ஹோட்டல் போடா”, என்று அர்ஜுனிடம் சொல்லவும், அர்ஜுன் அந்த ஏரியாவில் இருந்த ஒரு ஸ்டார் ஹோட்டல் நோக்கி காரை விட…

“என்னடா இது? மொத்த குடும்பமும் அடுத்தவங்களை மிரட்டிட்டே இருக்காங்க! அவ்வளவு பெரிய அப்பாடக்கர்ஸ் போல, ஏதோ போனா போகுதுன்னு நர்மதா சொல் பேச்சுக் கேட்டா, மிரட்டுவாங்களா, கார் நின்னதும் இறங்கி ஓடிப் போயிடலாமா, உங்கப்பா என்னை பார்த்துக்க சொன்னார்ன்னு இவங்க பையன் என்னை துரத்துவானோ, இவனை ஓட விடலாமா”, என்று நர்மதா மனதிற்குள் நினைக்க,

அவளின் முகத்தில் புன்னகை.. அதுதான் நர்மதா! எதையும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்க மாட்டாள், எல்லாவற்றையும் லகுவாக எடுத்துக் கொள்வாள்.

அர்ஜுன் திட்டியதையும் மீறி அவள் சகஜமாகி விட்டாள், ஆனால் திட்டிய அர்ஜுன் இன்னும் சகஜ நிலைக்கு வரவில்லை.

இவள் முகம் புன்னகையோடு இருக்க, ரிவர்வியு மிர்ரரில் பார்த்த அர்ஜுனின் மனதிற்கு சற்று இதமாக இருந்தது. முகத்தின் கடுமை சற்று குறைந்தது. என்ன தான் பார்வையை திருப்பினாலும் கண்கள் அவளைத் தான் பார்த்தது.

அதுவும் அம்மா உடன் இருக்கும் பொழுது அம்மாவிற்கு தெரியாமல் பார்க்க வேண்டும், இல்லையென்றால் அம்மா கண்டுகொள்வார், ஆனால் இந்த லூசிற்கு இன்னும் புரியவில்லை என்று நர்மதாவைப் பார்த்து இருந்தான்.

உண்மையாக நர்மதா அர்ஜுன் தன்னை ஆர்வத்தோடு பார்க்க கூடும் என்று கூட நினைக்கவில்லை. இதில் விரும்புவான் என்று எப்படி நினைப்பாள்.

எப்பொழுதும் இருக்கும் விளையாட்டுத்தனம் தான் அவளிடம். கார் ஹோட்டல் உள் நுழைந்ததும் அதன் பிரமாண்டத்தை தான் பார்த்திருந்தாள். அவன் ஹோட்டல் உள் நுழைந்ததும், இறங்க, இவர்கள் இருவரும் இறங்கினர், காரை வேறொருவன் வந்து பார்கிங்கிற்கு எடுத்து செல்ல, அதையெல்லாம் பார்த்திருந்தாள்.

இது கண்டிப்பாக நர்மதாவிற்கு புதிது, இன்னும் இது போல ஹோட்டலிற்கு வந்ததில்லை. அர்ஜுன் முன் நடக்கவும், இருவரும் உடன் நடந்தனர். அர்ஜுன் அங்கே நண்பர்களுடன் பல முறை வந்திருக்கிறான் அவன் எப்போதும் வருவது தான்.

டைனிங் ஹால் உள் நுழைந்ததும்… அங்கிருந்த மேனேஜர் வந்து, “எங்க சார் ரொம்ப நாளா வரவேயில்லை”, என்று ஸ்நேகமாக கேட்க..

“இங்க இந்தியால இல்லை ஒரு ப்ராஜெக்ட்காக ஓமன் போயிருந்தேன்! இப்போ வந்து பத்து நாள் தான் ஆச்சு!”, எனவும்…

“வாங்க சார், உங்க டேபிள் இருக்கு!”, என்று அழைத்து சென்றவர், “வெல்கம்  மேம்”, என்று தனித்தனியாக கௌரியையும் அழைத்தார், நர்மதாவையும்.

பதிலுக்கு நர்மதா ஒரு பளிச் புன்னகையுடன், “தேங்க்யூ”, என்க, அந்தப் புன்னகையை விழிஎடுக்காமல் பார்த்திருந்தான் அர்ஜுன். கௌரியின் கவனம் அங்கில்லை என்று புரிந்து.  .

எப்போதும் ஒரு இடத்தில் அமர்வதை தான் விரும்புவான் அர்ஜுன். அங்கே சென்று அமர்ந்தனர். “நான் வெஜ் சாப்பிடுவ தானே”, என்றான் நர்மதாவைப் பார்த்து.

“ம்”, என்பது போல தலையசைத்தாள். “என்ன சொல்லட்டும்”, என்று அம்மாவையும் அவளையும் பார்த்து பொதுவாக கேட்க… கௌரி அங்கிருந்த லிஸ்ட் பார்த்து சொல்ல, நர்மதா, “எதுன்னாலும் ஓகே”, எனவும்,

அர்ஜுன் வரிசையாக ஸ்டார்டர்ஸில் இருந்து ஆரம்பித்தான். கிட்ட தட்ட ஒரு மணிநேரம் அவர்கள் உண்டு முடிக்க, நேரம் பதினொன்றை தொட்டிருந்தது.

பத்து மணியில் இருந்தே நர்மதா வாட்சை பார்க்க, “உன்னை பத்திரமா கொண்டு போய் விடறது என் பொறுப்பு, சாப்பிடறதை மட்டும் பாரு”, என்று அர்ஜுன் சொல்ல, கவலையகன்றவளாக உண்பதில் கவனம் செலுத்தினாள்.

அர்ஜுன் அவன் மட்டும் உண்ணாமல் அவர்கள் என்ன உண்கிறார்கள் என்று இடையில் இடையில் பார்த்து, வேண்டிய பொருட்களை நகர்த்திக் கொடுக்க, அது நர்மதாவை வெகுவாக கவர்ந்தது. 

அவனும் எதுவும் பேசவில்லை, அவனுடனும் யாரும் பேசவில்லை… நர்மதாவும் கௌரியும் மட்டுமே பேசினர்.

மெதுவாக கௌரியிடம், “உங்கப் பையனை நல்லா வளர்த்திருக்கீங்க ஆன்ட்டி”, என்று சர்டிஃபிகேட் கொடுக்க,

“அவன்கிட்டயே சொல்லு”, என்று அவர் சொல்லவும்,

“ம்கூம், இது நமக்குள்ள இருக்குற ரகசியம், ஏற்கனவே உங்க பையனுக்கு ரொம்ப கர்வம், அதுவும் முதல் நாள் தெரிஞ்சவங்கன்னு எங்களை இங்க அனுப்பி விட்டதுக்கு, உங்க கூட அவ்வளவு சண்டை போட்டார் தானே! நான் கேட்டேன். ஏதோ போனா போகுதுன்னு என்னை இங்க கூட்டிட்டி வந்திருக்கார். இதுல இதை சொன்னோம் அவ்வளவு தான்,  நம்ம மட்டும் சொல்லிக்குவோம்”, என்று சொல்லிச் சிரிக்க,

“இந்தப் பெண் என் மகனை கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை”, என்று தான் தோன்றியது கௌரிக்கு.    

பின்னர் அவளை ஹாஸ்டலில் விடவும், “தேங்க் யூ ஆன்ட்டி”, என்றவள், கௌரியிடம் மெதுவான குரலில், “அப்படியே உங்க பையனையும் உங்க மாதிரி ஸ்வீட்டா மாத்திடுங்க, எப்பவும் கோபப்பட்டுட்டே இருக்கார்”, என்று சொல்ல,

“உன்னைப் பார்த்த பிறகு அப்படி ஆகிட்டான்”, என்றா சொல்ல முடியும், “நான் ட்ரை பண்ணிட்டேன், முடியலை! நீ சொல்லேன்!”, என்றார்.

“அம்மாடியோ! வை திஸ் கொலவெறி ஆன்ட்டி, நான் வர்றேன் பை!”, என்று சொல்லிச் சென்றவள், எப்போதும் போல பேச்சு சுவாரசியத்தில் அர்ஜுனிடம் சொல்ல மறந்தாள். அர்ஜுனின் முகம் தானாக சுருங்கி விட்டது. கௌரியும் கவனித்தார். 

வாட்ச்மேன் கேட்டை திறக்க உள்ளேயும் சென்று விட்டாள். பிறகு தான் ஞாபகம் வர… “ஐயோ”, என்று தலையில் கைவைத்து, “இருங்க வாட்ச்மேன்!”, என்று சொல்லி வெளியே விரைந்து வர,

அம்மாவும் மகனும் காரில் ஏறி இருந்தனர். அதைப் பார்த்தும் ஓடி வந்தவள்.. அர்ஜுனின் கதவின் புறம் வந்து, “சாரி! சொல்ல மறந்துட்டேன்! தேங்க்ஸ் ஃபார் தி டின்னர், குட் நைட் சார்!”, என்று மூச்சு வாங்க சொல்ல…

“ஓடி வராதன்னு எத்தனை தடவை சொல்றது”, என்றான் அர்ஜுன் கடுப்பாக,

“நீங்க தான் என்னை எப்போ பார்த்தாலும் ஓட வைக்கறீங்க! நான் தான் சொல்ல மறந்துட்டேனே! வருவேன்னு தெரியாது! உங்களை யார் கார்ல ஏறச் சொன்னா!”, என்று கௌரி இருப்பதையும் மீறி சண்டையிட்டவள்..

திரும்ப கௌரியைப் பார்த்து, “சாரி ஆன்ட்டி! எப்போ பார்த்தாலும் திட்டறாங்களா.. அதான்!”, என்று அசடு வழிந்தவள், “ஓகே ஆன்ட்டி, பை!”, என்றபடி உள்ளே விரைந்து விட…

இதைச் சொல்லி முடிப்பதற்குள் நர்மதாவின் முகத்தில் தோன்றிய பாவனைகள் கௌரியையே ரசிக்க வைத்தது. இதில் அர்ஜுன் எம்மாத்திரம். நர்மதா பேசிய பாவனையில் புரிந்தது, சிறு தடுமாற்றமும் அர்ஜுன் குறித்து அவளுக்கு இல்லை என்பது. அதில் தெரிந்தவர் என்ற நட்புணர்வு மட்டுமே.              

அர்ஜுனை கௌரி பார்க்க, “அவளுக்கு இன்னும் எனக்கு அவளை பிடிக்கக்கூடும்னு தோணவே இல்லைம்மா! அதான் இவ்வளவு சகஜமா பேசிட்டு போறா!, தோணினா தூர நின்னிருப்பா!”, என்று அர்ஜுன் விளக்கம் கொடுத்தான். 

“நீ இன்னும் அவளுக்கு காட்டவேயில்லைன்னு சொல்லு!”, என்று கௌரி சொல்ல, அர்ஜுன் அம்மாவின் புறம் திரும்பவேயில்லை. கவனமாக ரோட்டை பார்த்திருந்தான். வீடு வரும் வரை அம்மாவும் மகனும் பேசிக்கொள்ளவில்லை.

வீடு வந்ததும் அம்மாவிற்கு ரூமை ரெடி செய்து கொடுத்தான், படுக்கையைத் தட்டி, புது விரிப்பைப் போட்டு, “அர்ஜுன்! நான் பண்ணிக்கறேன்!”, என்று கௌரி சொன்ன போதும்,

“தினமும் உன் வீட்ல நீதான் செய்வ, உன் வீட்டுக்காரர் இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டார், உன் பொண்ணு வீட்டுக்கு வந்தா அவளுக்கு தூங்கவே நேரம் சரியா இருக்கும், உன்னை யார் பார்த்துக்குவா, இங்க இருக்குற டைம்மாவது நான் செய்யறேன் மா!”, என்று சொல்லி, எல்லாம் செய்து கொடுத்து, அவரை படுக்க செய்து போர்த்தி விட்டு, ஏ சீ ஆன் செய்து, லைட் ஆஃப் செய்து, குட் நைட் சொல்லி, சத்தம் செய்யாமல் கதவை மூடி சென்றான்.

நர்மதாவை பற்றி பேசவேண்டும் என்று தோன்றினாலும், தான் பேசுவதால் அர்ஜுன் மனதை மாற்றப் போவதில்லை என்று புரிந்தவர், அவனாக பேசும் வரை விடுவோம் என்று விட்டுவிட்டார்.

அம்மா கேட்டிருந்தாலும் அர்ஜுன் எதுவும் சொல்லியிருக்க மாட்டான் என்பது தான் நிஜம்…. நர்மதா அவனை எந்தளவு ஈர்த்தாளோ, அந்த அளவு வருத்தப்படவும் வைத்தாள்…

ஆம்! அவனாகினால் அவளையே நினைத்திருக்க, அதன் எதிரொலி சற்றும் அவளிடத்தில் இல்லை. மனிதர்களை எப்பொழுதும் சரியாக எடை போட்டு விடுவான் அர்ஜுன்.

அதனால் தான் பிடித்ததை காட்ட கூடத் தயக்கம். கண்டிப்பாக நர்மதா பிடித்திருக்கிறது என்று சொன்னால், “அப்படியா”, என்று செய்தி போலவோ, இல்லை, “எனக்குப் பிடிக்கலை”, என்று சொல்லவோ, இல்லை, “உங்களுக்குப் பிடிச்சா, எனக்குப் பிடிக்கணும்னு என்ன?”, என்று சொல்லவோ வாய்ப்புகள் அதிகம் என்று தெரியும்.

இதில், “நான் அவளை ஈர்க்கவே இல்லையே, வேறு யாரையாவது விரும்புகிறாளோ”, என்ற சந்தேகமும் கூட இப்போழுது. ஆனாலும் அவள் யாரையாவது விரும்பக் கூடும் என்றும் தோன்றவில்லை.

இதெல்லாம் தன்னை அவள் பால் இழுத்துச் செல்கிறது என்று புரிந்தது, ஆனாலும் பார்த்த நான்கு நாட்களிலா?, இதற்கு பெயர் என்ன காதலா?, ஆனால் காதலிப்பவர்கள் எல்லாம் இதுவரை அவனின் கண்களுக்கு பைத்தியக்காரர்கள் போலத் தான் தெரிந்திருக்கிறார்கள்.

அதுவும் காதல் கைக்கூடாத நண்பர்களை பார்க்கும் போது, “இந்தப் பொண்ணு இல்லைன்னா இன்னொரு பொண்ணு, அதுக்கு எதுக்கு இவனுங்க இவ்வளவு பீல் பண்றானுங்க!”, என்பது போல தான் எண்ணம்.

இப்படி மனது மிகவும் அலைபாய. லேப் டேப் எடுத்து வைத்து ஆஃபிஸ் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். நேரம் ஓடியதே தெரியவில்லை. அம்மா காலையில் எழுந்து வந்த போதும் செய்து கொண்டிருந்தான்.

“அர்ஜுன்! எப்போ எழுந்த? அவசர வேலையா?”, என்று கேட்டுக் கொண்டே கௌரி அருகமர, அப்போது தான் நேரம் பார்த்தான் ஆறு மணி.

“காலையில ஆகிடுச்சா அம்மா! நேரமே பார்க்கலை!”, என்றான்.

“அப்போ நீ தூங்கவே இல்லையா”, என்றார் அதிர்ச்சியாக.

“இல்லை”, என்பது போல அர்ஜுன் தலையசைக்க..

சமன்ப்பட்ட மனது, இப்போது மீண்டும் கவலையாகிப் போயிற்று கௌரிக்கு, “நர்மதா..”, என்று கௌரி பேச ஆரம்பிக்க,

“மா, நானே அவளை கஷ்டப்பட்டு ஞாபகத்துல கொண்டு வராம இருக்கேன்! இதுல நீங்க வேற பேசாதீங்க! வேற பேசுங்க!”, என்றான்.

“ஏன் பிடிச்சிருந்தா, ஏன் கஷ்டப்பட்டு மறக்க நினைக்கற! அப்பா வேண்டாம்னு சொல்வாங்கன்னா”,

திரும்பி அம்மாவை முறைத்தான், “இப்போ என்ன ஓகே ன்றையா வேண்டாம்ன்றையா…”,

“ஏன்டா…….. நீயே இன்னும் முடிவு பண்ணலை! அவகிட்ட சொல்லலை! அப்புறம் நாங்க எப்படி யோசிக்க”,

“அவகிட்ட சொல்ல முடியாதும்மா”,

“ஏன்டா?”,

“ஒத்துக்க மாட்டான்னு தோணுது, அப்புறம் எப்படி சொல்ல, அதுவும் நாலு நாள்ல சொன்னா என்னை காமெடி பீஸ் ஆக்கிடுவா”,

“அப்போ என்ன பண்ண போற…”,

“அம்மா! வேற பேசும்மா! விட்டா நீ போய் சொல்வ போல”, என்றான் சலிப்பாக.

“எப்பவும் டைரக்டா காதலை சொல்ற பசங்களைத் தான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்! இப்படி அடுத்தவங்க மூலமா சொல்றவங்களை, பொண்ணுங்களை பிடிக்காது!”, என்று கௌரி சொல்லவும்,

“கெ.. ள… ரி…”, என்று இன்னும் கத்தினான் அர்ஜுன்,

“என்னடா கத்துற?”, என்றார் அசால்ட்டாக.  

“நான் உன்கிட்ட எப்போ போய் சொல்லுன்னு சொன்னேன், நானே சொல்லமாட்டேன்றேன், உன்னை ஏன் சொல்லச் சொல்லப் போறேன்”,

“அவ்வளவு திமிரா உனக்கு! இரு, நர்மதா கிட்ட சொல்றேன், இவன் சொன்னாலும் ஒத்துக்காதன்னு..”,

“ம், சொல்லேன்! கேட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பா… யார் பேச்சையும் கேட்க மாட்டாம்மா! அதனால தான் எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு”, என்றான்.

“பார்த்து நாலு நாள் தானேடா ஆகுது..”,

“நாலு நாள்…… தொன்னுற்றியாறு மணிநேரம், நாலு வருஷம் கல்யாணம் ஆனவன் கூட இப்படி நினைச்சிருக்க மாட்டான்”, என்று அர்ஜுன் விளக்கம் கொடுக்க..

“என்ன நடக்கும்? இது சரியா வருமா!”, என்று கௌரி கன்னத்தில் கை வைத்துக் கேட்கவும்,

“உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா? இல்லையா?”, என்றான் அர்ஜுன்.

“பிடிச்ச மாதிரியும் இருக்கு, பிடிக்காத மாதிரியும் இருக்கு”,

“உனக்கு ஏன் பிடிக்கலைம்மா”, என்றான் வியப்பாக.

“என் பையனை அவ பார்க்கவேயில்லயே… அதான்!”, என்று கௌரி பாவனையாக சொல்லவும்,

“அம்மா!”, என்று செல்லமாக அர்ஜுன் கத்தினான்.

“சும்மா என் கிட்ட கத்திட்டே இருக்காத, இப்ப ஒருத்தர் வர்றார், அவர்கிட்ட சொல்லு!”,

“யார்கிட்ட”,

“அப்பா கிட்ட”,

“வர்றாரா, என்கிட்டே சொல்லவேயில்லை”,

“எனக்கே இப்போ தான் தெரியும், அவர் தான் ட்ரெயின் இப்போதான் வந்ததுன்னு போன் செஞ்சு என்னை எழுப்பி விட்டார்”, என்று சொல்லவும்..

காலிங் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

கௌரி வேகமாக சென்று கதவை திறக்கப் போக, “அம்மா நான் போய் திறக்கறேன், பார்த்து ஒரு நாள் தானே ஆச்சு! அதுக்குள்ள இப்படி ஓடுவீங்களா, விழுந்து வெச்சீங்க, உங்க வீட்டுக்காரர் என்னை பிச்சு எடுத்துடுவார்! இருங்க!”, என்று அவரை விட வேகமாக சென்று கதவை திறந்து, கேட்டை திறக்க போனான்.     

கேட்டை திறந்து கொண்டே, “நேத்து அம்மாவும் சொல்லாம வந்தாங்க! இன்னைக்கு நீங்களும்! சொன்னா ஸ்டேஷன் வந்திருப்பேன்ல!”, என்று அப்பாவைக் கடிய,

“விடுடா தூங்குவ, ஏன் தூக்கத்தைக் கெடுக்கணும்னு தான்!”, என்று ஷண்முக சுந்தரம் சொல்ல,

பின்னே வந்த அவனின் அம்மா, “இவன் எங்கத் தூங்கினான்”, என்று போட்டுக் கொடுக்க,

“ஏன் அர்ஜுன் தூங்கலை, தூக்கம் கெடறது உடம்புக்கு அவ்வளவு கெடுதி”, என்று ஒரு அதட்டல் போட,

“அவசரமா முடிக்க வேண்டிய வேலைப்பா”, என்று சமாளித்தான்.

“என்னவோ போ, என்ன வேலையோ? நமக்கு இந்த வேலை அவசியமேயில்லை!”, என்று ஆரம்பிக்க, அம்மாவைப் பார்த்து முறைத்தான்.

“ஆரம்பிக்காதீங்க, என் கூட சண்டை போடுவான்!”, என்று கௌரி சொல்ல,

அதற்குள் வீட்டின் உள் வந்திருந்தனர். “இதுல சண்டை என்னம்மா? ஒரு உரையில ரெண்டு கத்தி இருக்க முடியாது. அப்பா நல்லா பண்ணிட்டு இருக்காங்க! இதுல நான் வந்து புதுசா என்ன செய்ய, உங்களால முடியாதப்ப சொல்லுங்க”,

“அப்போ நீ வந்துடுவியா?”, என்று அப்பா ஆர்வமாக கேட்க,

“ம், என் பையனையோ, பொண்ணையோ அனுப்பிவிடுவேன்! அதுவரை நீங்க நல்லா பார்த்துக்குவீங்க”, என்றான்.

எப்போதும் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் வாக்குவாதம் தான், மீண்டும் ஆரம்பிக்க,

ஷண்முக சுந்தரத்தைப் பார்த்து, “விடுங்க, இப்ப தானே வந்தீங்க, முதல்ல பாத்ரூமாவது போங்க!”, என்று கணவரை ரூமின் உள் தள்ளினார்.

அவர் உள் செல்லவும், அர்ஜுனைப் பார்த்து, “போடா டேய் போடா! பொண்ணுக் கிட்ட இன்னும் ஐ லவ் யூ சொல்ல முடியலை, இவன் எங்க துணைக்கு இவன் பையனையோ பொண்ணையோ அனுப்பறானாம். போடா!”, என்று நக்கலாக சொல்லிச் செல்ல,

“கெ..ள..ரி..”, என்று எப்போதும் போல பல்லைக் கடித்தான் அர்ஜுன்.

 

 

Advertisement