Advertisement

அத்தியாயம் ஆறு:

நர்மதாவிடம் பேசிவிட்டு வந்த அர்ஜுனும் மனதிற்குள், “நீ என்ன பெரிய இவனாடா, இப்படி அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கணும்னு லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க! அவ உன்னை கவனிக்கவேயில்லை! இப்படி நீ அவளைப் பத்தி நினைக்காதா! ஸ்டே அவே அர்ஜுன்!”, என்று மனதிற்குள் உரு போட்டுக் கொண்டான்.

நாம் ஒன்றைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று நினைக்க நினைக்க மனம் அதைப் பற்றி அதிகம் நினைக்கும்…  அந்த நிலை தான் அர்ஜுனிற்கும்.. அவளைப் பற்றியே மனம் நினைத்தது.. வேலையிலும் கவனம் செல்லவில்லை.

மாலை வரை பிரயோஜனமாக எந்த வேலையும் செய்யாமல், அதையும் இதையும்  வேலை செய்வது போல பாவ்லா காட்டி அமர்ந்து இருந்து கிளம்பினான்.

கீழிறங்கும் சமயம் வேறு பலரும் இறங்கிக் கொண்டிருக்க… கண்கள் தானாக எங்காவது தென்படுகிறாளா என்று அலசியது.

முயன்று, “பார்க்காதே, தேடாதே”, என்று சொல்லியபடி.. “நீ என்ன இவ்வளவு கட்டுப்பாடு இல்லாதவனா மனதை ஒரு பெண்ணின் புறம் இப்படி அலைபாய விட”, என்று சொல்லி… வீட்டிற்கு கிளம்பினான்.

வீடு வந்ததும், அம்மாவிடம், “அம்மா! ஷாப்பிங் போகலாம், கிளம்பு!”, என்று கிளப்பி விட்டான். கௌரியும் அவனும் கிளம்பினர்… எப்போதும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் கடைகளுக்குப் போவதை கௌரி விரும்புவார், ஆனால் அர்ஜுன் அப்படி விரும்ப மாட்டான். “ஏம்மா, இந்தக் கூட்டத்துக்குள்ள கூட்டிட்டு வர்ற, இடிக்காம நடக்கவே ரொம்ப ப்ராக்டிஸ் வேணும்”, என்று சண்டை தான் இடுவான்.

ஆனால் அன்று அம்மா கேட்காமலேயே ரங்கநாதன் தெரு நோக்கி தான் கார் சென்றது. அம்மாவிடம் பேசிக்கொண்டே கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும்… உற்சாகம் அவனிடம் குறைந்தே காணப்பட்டது எப்போதும் இருக்கும் கலகலப்பு இல்லை.

“என்னடா கண்ணா டல்லா இருக்க?”, என்ற அம்மாவின் கேள்வியையும் புறம் தள்ளினான், “ஐ அம் ஓகே!”, என்ற பதிலோடு.. அவனை அறியாதவரா கௌரி, ஆனாலும் தோண்டித் துருவவில்லை. அவனாக சொன்னால் தான், இல்லையென்றால் ஒரு வார்த்தைக் கூட அர்ஜுனிடம் வாங்க முடியாது என்று அறிந்தவர்.

ரங்கநாதன் தெரு முன்பே இருந்த ஒரு புகழ் பெற்ற நகைக்கடையின் கார் பார்க்கிங்கில் நிறுத்தினான்.

“அர்ஜுன், நகை வேண்டாம்டா…”,

“நான் உன்கிட்ட எப்போ வேணுமா வேண்டாமான்னு கேட்டேன்மா காரை நிறுத்த வேற இடம் கிடையாது.. ஒரு நகை தானே வாங்கிடுவோம்!”,

வாய் மேல் கை வைத்து மகனை முறைத்தவர்… “இது ரொம்ப ரொம்ப ஓவர், கார் பார்க்கிங்க்கு நகை வாங்குவியா…”,

“வாம்மா! வாம்மா!.. வாங்கிக் கொடுக்கறது நான், உனக்கென்ன… நான் உனக்கு வாங்கியே ரொம்ப நாள் ஆகிடுச்சு..”, என்று உள் அழைத்து சென்றான்.

ஒரு காதணியை அம்மாவும் மகனுமாக ஒரு மணிநேரம் தேர்ந்தெடுத்தனர்… எப்போதும் வரும் பிரச்சனை தான்.. அவனுக்கு பிடித்தால் கௌரிக்கு பிடிக்காது, கெளரிக்குக்கு பிடித்தால் அவனுக்கு பிடிக்காது.

இருவரும் பிடிவாதத்திற்கு மிகவும் பெயர் போனவர்கள்,  கௌரியிடம் அத்தனை நகைகள்.. ஒரு காதணி பெரிய விஷயமில்லை, ஆனால் அதற்கே இந்த வாக்குவாதம். அம்மா ஏதோ வாங்கிகொள்ளட்டும் என்று அர்ஜுனும் விடவில்லை.

இந்த களேபாரத்தில், நர்மதா சற்று அவன் நினைவுகளில் பின் சென்றிருந்தாள். ஒரு வழியாக வாங்கி வந்து.. அதன் பிறகு அங்கிருந்து நடந்து ரங்கநாதன் தெருவிற்குள் நுழைந்தனர்.

அங்கிருந்த கடைகளுக்கு கௌரி சலிக்காமல் ஏறி இறங்க… நேரம் ஓடியதே தெரியவில்லை… அங்கே முடித்து அதன் பிறகும் ஒரு புகழ் பெற்ற துணிக்கடையினுள் நுழைந்தார்.

“அம்மா, போதும்!”, என்று அர்ஜுன் சலிக்க சலிக்க.. “இதுவரைக்கும் நான் எனக்கு தான் எடுத்தேன்… சத்யாக்கு, அவ இங்க எடுக்க தான் இஷ்டப்படுவா”, என்று சொல்ல… வேறு வழியில்லாமல் சென்றான்… அப்போது மணி எட்டு.

கௌரி புடவையை தேர்ந்தெடுக்க…. அர்ஜுன் கண்களை சுழல விட்டான். ஒரு இடத்தில் பார்வை நிலைத்து நிற்க, அங்கே நர்மதா தனது தோழிகளுடன். “என்னடா இவ? நம்ம நினைக்கக் கூடாதுன்னு நினைச்சாலும், கண்ணு முன்னாடி வந்து நிற்கரா”, என்றபடி அவளை பார்த்திருக்க ,

யாரோ பார்ப்பது போன்ற உந்துதல் நர்மதாவிற்கு, திரும்பி யார் என்பது போல பார்க்க அர்ஜுன் கைகளை கட்டியபடி விடாமல் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான், முகத்தில் ஒரு கோபம் கூட தென்பட்டது.

அவனைப் பார்த்தபிறகு அருகில் போவதா, வேண்டாமா, இல்லை தெரியாத மாதிரி போவதா, ஒரே குழப்பம். அர்ஜுன் அங்கே நிற்கிறான் என்று தோழிகளிடம், “இருங்க வந்துடறேன்”, என்று சொல்லி அர்ஜுன் புறம் வந்தாள்.                          

அர்ஜுன் அசையாமல் அவளை முறைத்தபடி நிற்கவும், அதை புறம் தள்ளி, “ஏன் இப்படி முறைச்சு நிற்கறீங்க, அதுவும் புடவை பிரிவுல, உங்க அம்மா சொன்ன உங்க கேர்ள் ஃபிரண்ட் நிறைய செலவு வெச்சிடாங்களா”, என்று புன்னகையோடு கேட்க..

“ஐயோ! உளருகிராளே, இவளை என் செய்வது”, என்று இன்னும் அவளை முறைத்தபடி, அம்மாவிற்கு கேட்டுவிட்டதா என்று அவசரமாக திரும்பி பார்க்க, கௌரி இவர்களைப் பார்த்து தான் நின்றிருந்தார். சற்று தள்ளி தான் இருந்தார், ஆனால் பேசியது கேட்கும் தூரத்தில். 

ஆனால் இடையிடவில்லை. அவர் பேச்சினுள் நுழையாததைப் பார்த்தவன், நர்மதாவின் புறமே திரும்பினான்.

பிறகு தன் மணிக்கட்டை திருப்பி நேரத்தைப் பார்த்தான்.. எட்டு பதினைந்து, அவன் நேரத்தைப் பார்க்கவும்… “ஷாப்பிங் முடிச்சிட்டோம்! கிளம்பிட்டே இருக்கோம்!” என்று விளக்கம் கொடுத்த நர்மதா, “நீங்க என்ன பண்றீங்க இங்க?”, என்று பார்வையை யார் உடன் இருக்கிறார்கள் என்று சுழல விட,

“நீ என்ன பண்ற இங்க?”, என்றான் கடுமையாக அர்ஜுன்.

அவன் கேட்ட தொனியில் சகஜமாக பேசிக்கொண்டிருந்த நர்மதாவின் முகம் சுருங்கி விட்டது.    

“ஷாப்பிங்”, என்றவளைப் பார்த்து,

“மணி என்ன தெரியுமா? இந்த நேரத்துக்கு மேல எப்படி நீ ஹாஸ்டல் போவ… இங்கிருந்து கார்ல போனாலே ஒரு மணிநேரம் ஆகும், பஸ்ல போனா இன்னும் நேரம் ஆகும்… எப்படிப் போவ… தெரியாத ஊர்ல… இங்க வந்து ஒரு வாரம் கூட முடியலை”, என்று அதட்டிப் பேச,

“இல்லை, ஆட்டோல சீக்கிரம் போயிடுவேன்..”,

“நீ ஆட்டோல  போயிடுவ, முதல் நாள் ஆபிஸ்க்கு ஆட்டோல போக யோசிச்ச, பஸ்சாவது பாதுகாப்பு, ஆட்டோல எப்படி தனியா போவ… உன் ஃபிரண்ட்ஸ் வேற இடத்துல இருக்காங்க, உன்னை விட்டுட்டு அவங்க மட்டும் எப்படி தனியா போவாங்க.. எவ்வளவு இன்சிடன்ட்ஸ் பேப்பர்ல படிக்கற! உனக்கு அறிவே கிடையாதா!”, என்று குரலை உயர்த்தாமல் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவன் திட்டவும் நர்மதா, முகம் கலங்கி நிற்கவும், “எதற்கு இப்படி ஒரு தெரியாத பெண்ணை திட்டிக் கொண்டிருக்கிறான்”, என்று அருகில் வந்த கௌரி, “என்ன அர்ஜுன்?”, என்றார்.

“எட்டு மணிமேல ஆச்சு, இங்க வந்து நாலஞ்சு நாள் தான் ஆகுது, எப்ப ஹாஸ்டல் போய் சேர்றது இவ”, என்று அம்மாவிடமும் திட்ட,

“யாரு இது?”, என்றார், அர்ஜுன் சொன்ன பெண்ணாய் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டே…   

“அம்மா! இது நர்மதா! நீங்க என் கன்சென்ர்ல ஜாயின் பண்றா சொன்னிங்கள்ள அந்தப் பொண்ணு..”.

“ஓஹ்! காலையில என்னோட பேசின பொண்ணு!”, என்றார் புன்னகையுடன் நர்மதாவைப் பார்வையால் அளந்து கொண்டே. அந்தப் பேச்சு சற்று  லகுத்தன்மையைக் கொடுத்தது. அழகான பெண்! குழந்தைத்தனம் மாறாத முகம், அர்ஜுனை அதுதான் ஈர்த்திருக்க வேண்டும் என்று புரிந்தது.  

அதுவரை திட்டு வாங்கியது ஒரு கலக்கத்தை கொடுத்தது.. அது அர்ஜுனின் அம்மா முன்னிலையில் என்று தெரிந்தவுடன் கண்ணீராய் மாறியது. இமை கொட்டி அழுகையை அடக்கினாள்.

அதைப் பார்த்த கௌரிக்கு கோபம் வர.. மகனை முறைத்தார்.

இருவருக்கும் பொதுவாய், “நான் கிளம்பறேன்!”, என்று சொல்லி நர்மதா திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

பில்லில் பொருட்கள் இருக்க, தோழிகள் அங்கிருக்க, “நான் கிளம்பறேன் டைம் ஆகிடுச்சு!”, என்று சொல்லி வெளியேப் போக, ஆஷா வெளியே விரைந்தாள் அவளுடன், “ஹேய் நர்மி! எங்க போற தனியா, இரு உன்னை விட்டுட்டு தான் நாங்க வீட்டுக்கு போவோம்!”, என்று சொல்ல சொல்ல நடந்தாள்.

“என்ன அர்ஜுன் இப்படி! அடுத்த வீட்டு பொண்ணுங்களை திட்டுவியா! என்ன ஆச்சு உனக்கு.. இப்படி எப்பவுமே நடந்ததே இல்லையே.. இது ரொம்ப தப்பு!”, என்று திட்டிக் கொண்டிருந்தார்.

“நீங்க உங்க பர்ச்சேஸ் முடிச்சு கூப்பிடுங்க… நான் அவளை இருக்க வெக்கறேன்.. நாம கொண்டு போய் விடலாம்”, என்று சொல்ல..

“ரொம்ப உரிமை எடுத்துக்க வேண்டாம் அர்ஜுன்! அது சரியில்லை!”, என்று அம்மா சொல்ல…

அவரை ஒரு பார்வை பார்த்தவன், வேறு பதில் சொல்லாமல் நடந்தான்.

அந்தப் பார்வையே சொன்னது, இனி அர்ஜுன் பின் வாங்க மாட்டான் என்பது போல… கௌரிக்கு இன்னும் கவலையாகிப் போயிற்று.. “இவன் ஏன் இப்படி செய்கிறான். அந்தப் பெண்ணிற்கும் ஆர்வம் இருப்பது போல தெரியவில்லை… கணவர் கண்டிப்பாக சம்மதம் சொல்ல மாட்டார்… இது எப்படி நடக்கும்”, என்பது போல.   

ஆஷா நர்மதாவிடம் பேசிக் கொண்டு இருந்த போதே அங்கே சென்ற அர்ஜுன், “நான் அவளை ஹாஸ்டல் ட்ராப் பண்ணிடறேன்.. நீங்க கிளம்புங்க! உங்களுக்கும் டைம் ஆச்சு!”, என்றான் நல்ல விதமாகவே.

“உங்களோட தனியாவா!!!”, என்று ஆஷா வாய்விட்டுக் கேட்டு விட.. அர்ஜுனின் முகம் அவ்வளவு கோபத்தை பூசியது.

“இரு, அவங்கப்பா கிட்ட கேட்கறேன், உங்களோட போகட்டுமா, இல்லை என்னோட போகட்டுமான்னு”, என்று ஆஷாவிடம் சொல்ல..

நர்மதா இப்போது இடை புகுந்தாள்.. ஆஷாவை மேலே பேசாதே என்று பார்த்தபடி. முகத்திலும் குரலிலும் அவ்வளவு சலிப்பு, “அவ என் ஃபிரண்ட் என்மேல இருக்குற அக்கறையில கேட்டுட்டா, ஜஸ்ட் லீவ் இட், அவளுக்காக நான் சாரி கேட்கறேன்”,

“ஏன்? என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா, உன்னை கூட்டிட்டு போய் என்ன பண்ணிடுவேன், உன் மேல இருக்குற அக்கறையில அவ கேட்டான்னா, அப்போ உன் மேல எனக்கு என்ன இருக்கு”, என்றான்.

என்னவோ கோபத்தை அடக்கவே முடியவில்லை அர்ஜுனால்.

ஏதோ தப்பாகி விட்டது என்று ஆஷாவிற்கும் நர்மதாவிற்கும் புரிந்தது.

“அவ்வளவு உன் மேல அக்கறை இருக்குறவங்க உன்னை இந்த டைம் கூட்டிட்டு வந்திருக்க கூடாது, அவங்க வீடு இருக்குற ஏரியா இங்க இருந்து ஜஸ்ட் இருபது நிமிஷம் கூட ஆகாது, ஆனா உனக்கு எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? ரெண்டு பஸ் மாத்தணும்”, என்றான்.                                                                                 

“நாளைக்கு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”, என்று நர்மாதவிடம் சீற,

“எதுவும் ஆகாது! நாங்க பத்திரமா விட்டுட்டு தான் போவோம்!”, என்று ஆஷா அர்ஜுனிடம் சொல்ல..

அர்ஜுன் ஆஷாவின் புறம் திரும்பக் கூட இல்லை… “இப்போ நீ வருவியா? மாட்டியா?”, என்றான் நர்மதாவிடம்.

“நீ போகாத நர்மதா! என்ன இது இப்படி மிரட்டுறாங்க.. இவங்களுக்கு உன்னை எத்தனை நாளா தெரியும்! ஒரு நாலு நாளா! ஆனா உன்னை எனக்கு நாலு வருஷமா தெரியும்.. உன்னோட பாதுகாப்பு எங்களுக்கு தெரியும்!”, என்று ஆஷாவும் சொல்ல..

“எதுக்கு இப்படி ரெண்டு பேரும் கோபப்படறீங்க..”, என்று நர்மதா கலக்கமாக கேட்க.. அர்ஜுன் அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை, கை கட்டி நர்மதா என்ன செய்யப் போகிறாள் என்று பார்த்திருந்தான்.

“உங்களுக்கு லேட் ஆகிடும், நீங்க கிளம்புங்க! நான் இவங்களோட போறேன், இவர் கூட இவர் அம்மாவும் இருக்காங்க!”, என்று நர்மதா சொல்ல,

“என்ன, அவங்க அம்மா இருக்காங்களா?”, என்றாள் ஆஷா,

“ஆமாம்!”, என்பது போல நர்மதா தலையாட்ட, இப்போது ஆஷாவிற்கு தர்மசங்கடம் ஆனது. இப்போது அவள் புறம் பார்த்த அர்ஜுன், “அம்மா இருக்குறதால நான் கூட்டிட்டு போகலை, அவங்க இல்லைன்னாலும் நான் கூட்டிட்டு தான் போவேன்! நீ கிளம்பு!”, என்றான் கடுமையாக.

“என்ன இது? இவர் இப்படி பேசுகிறார்!”, என்று கவலையாகிப் போயிற்று ஆஷாவிற்கு, நர்மாதவைப் பார்க்க..  அதற்குள் இன்னும் இரு தோழிகள் வர, “நீங்க கிளம்புங்க டைம் ஆச்சு”, என்றாள், பார்வையாலும் தோழிகளை கெஞ்சியபடி, இன்னும் அர்ஜுன் என்ன பேசிவைப்பான் என்று தெரியாமல்.

தோழிகள் செய்வதறியாது கிளம்பினர். “கௌரி எடுத்து விட்டேன், உள்ளே வாடா!”, என்று கைப்பேசியில் சொல்ல.. “உள்ள வா! பில் பே பண்ணிட்டு கிளம்பலாம்”, என்றான்.

“இல்லை, நான் இங்கயே இருக்கேன்..”,

“வான்னு சொன்னா வரணும்!”,

“வரமுடியாதுன்னு சொன்னா, என்ன பண்ணுவீங்க!”, என்று பதிலுக்கு நர்மதாவும் கோபமாக பேச..

“உங்கப்பாக்கு ஃபோன் பண்ணுவேன்.. உங்க பொண்ணு இந்த நேரத்துல இங்க ஷாப்பிங்ன்னு சுத்திட்டு இருக்கான்னு சொல்லுவேன், நாளைக்கு காலையில உங்கப்பா வந்து உன்னை கூட்டிட்டுப் போயிடுவார்! பரவாயில்லையா!”, என்றான்.

நர்மதாவின் முகம் அப்படி ஒரு இயலாமையை காட்டியது, அர்ஜுன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. அவளின் அப்பாவிற்கு தெரிந்தால் அடுத்த நிமிடம் வந்து அழைத்து சென்று விடுவார்… அது நிஜம்..

அவனிற்கு முன் கடைக்குள் அவள் நுழைய, அர்ஜுன் அவளை பின் தொடர்ந்தான். இருவரும் வருவதைப் பார்த்தார் கௌரி, அதுவும் நர்மாதவின் முகத்தில் இருந்த பாவனை, அர்ஜுன் அவளைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறான் என்று காட்டியது.

“ஏன் இவன் இப்படி செய்கிறான்? என்னவாயிற்று இவனுக்கு?”, என்று இன்னும் கவலையாகிப் போயிற்று கௌரிக்கு.

“பில் பே பண்ணுடா”, என்று அர்ஜுனிடம் சொன்னவர், நர்மாதவிடம் சமாதானமாக, “பொண்ணுங்க இந்த டைம் தனியா போனா பாதுக்காப்பு இல்லைன்னு கோவமா பேசறான், மனசுல வெச்சிக்காதம்மா”, என்று நர்மதாவைப் சொன்னார்.

நர்மதா வேறு வழியில்லாமல், தலையசைத்து வைத்தாள். ஆனாலும் முகம் தெளியவில்லை.

“நீதானே நல்லவர் வல்லவர் நாளும் தெரிஞ்சவர்ன்னு சொன்ன.. அதான் இந்த பில்ட் அப் அவனுக்கு, வேற ஒன்னுமில்லை, எல்லாம் அவனுக்கு தான் தெரிஞ்ச மாதிரி..”,

காலையில் கௌரியுடன் பேசியது வேறு ஞபாகத்திற்கு வர.. “சாரி ஆன்ட்டி, அது நீங்கன்னு தெரியாம விளையாட்டுத்தனமா பேசிட்டேன்”, என்று சொல்ல,

“ஹேய், விடுமா! எனக்கு அப்படி ஒரு சிரிப்பு! அதான் உன்னைக் காமெடி பீஸ்ன்னு சொல்லிட்டேன்! நானும் சாரி!”, என்று கௌரி லகுவாக சொல்ல..

“நீங்க நல்லா தானே பேசறீங்க ஆன்ட்டி, ஆனா உங்க பையன் ஏன் இப்படி பேசறாங்க, முன்னமே வந்தோம், இவ்வளவு நேரம் ஆகும்னு எதிர்பார்க்கலை, இந்த டைம் ஆனது தப்பு தான், ஆனா அதை நல்ல மாதிரியா சொல்லலாம் தானே! ஏன் இப்படி திட்டறாங்க! என் ஃபிரண்ட்ஸ் ஆஷாவையும் ரொம்ப திட்டிடாங்க..”, என்று நர்மதா சொல்ல..

“அது நீன்றதால தான் திட்டினான், விட்டுடு!”, என்றார்.

“ஏன் நான் என்ன? காலையிலையும் அர்ஜுன் சார், நீன்றதால தான் சொன்னேன்னு ஒரு விஷயம் சொன்னார், ஏன் நான் என்ன?”, என்று நர்மதா கேட்கவும்,

அந்த சமயம் அர்ஜுனும் வந்துவிட்டான், அவள் அம்மாவிடம் கேட்டுக் கொண்டு இருப்பதையும் பார்த்தான்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கௌரி தடுமாற, அதற்கு எந்த பதிலும் அவனும் கூறாது கௌரியையும் கூற விடாது… “அம்மா, கிளம்பலாம்!”, என்றான்.

“வாம்மா! கிளம்பலாம்!”, என்று கௌரி கூற, அர்ஜுனின் முகம் பார்க்காது அவர்களுடன் நடந்தால் நர்மதா. தன்னுடைய முகத்தை அவள் பாராதது இன்னும் அர்ஜுனிற்குள் கோபத்தை கிளப்பியது.

அர்ஜுன் கையில் நிறைய பார்சல்கள், கௌரி கையிலும்.. நர்மதா கையில் ஒரு பர்ஸ் மட்டுமே. கௌரி கையில் இருந்ததை, “குடுங்க ஆன்ட்டி”, என்று வாங்க முற்பட, “வேண்டாம்மா”, என்றார்.

“இல்லை, குடுங்க ஆன்ட்டி!”, என்று வற்புறுத்தி வாங்கிக் கொண்டாள்.     

கார் இருக்கும் தூரம் வரை நடந்தனர்.. ஆனால் ஒரு பேச்சுமில்லை. அர்ஜுனின் முகம் அவ்வளவு சீரியசாக இருந்தது.

                                            

Advertisement