Advertisement

அத்தியாயம் ஐந்து:

“என்ன நடக்குது அர்ஜுன்?”,

“நான் என்ன சொல்லணும்னு எதிர் பார்க்கறீங்க மா…”, என்றான்.

“அப்பா ஒத்துக்க மாட்டார்டா”, என்றார் கவலையாக.

சிரித்தான்…. “என்னடா சிரிக்கற! அப்பாவை மீறி கல்யாணம் செஞ்சுக்குவியா”, என்று கோபமாக கேட்கவும், இன்னும் சிரித்தான்

“அம்மா! அம்மா! அப்பா ஒத்துக்கறது எல்லாம் அப்புறம்! முதல்ல பொண்ணு ஒத்துக்கணும்மா!”, என்றான்.

“அப்போ நாங்க ஒத்துக்கலைன்னாலும் கல்யாணம் செஞ்சுக்குவியா”,

“அம்மா!”, என்று டென்ஷன் ஆனவன்… “நான் இப்போ நர்மதாவைக் கல்யாணம் செஞ்சிக்கறேன்னு எப்போ சொன்னேன்?”, என்று கேட்டான்…

“நீ அதைத்தானே சொல்ல வர்ற… நீ எந்தப் பொண்ணை பத்தியும் இவ்வளவு ஆர்வத்தோட பேசினதில்லை..”,

“முதல்ல நான் இன்னும் முடிவு பண்ணவேயில்லை.. அதுக்குள்ளயே நீங்க இவ்வளவு பேசினீங்கன்னா…. எனக்கு பிடிக்குதா பிடிக்கலையான்னு யோசிக்கவே மாட்டேன்.. அவளைக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிடுவேன்… சும்மா அப்பாக்கு பிடிக்காது! அது, இதுன்னு பூச்சாண்டி காட்டக் கூடாது… கல்யாணம் எனக்கு! அவருக்கு இல்லை..”,     

“அவரை விட நீங்க விடற பில்ட் அப் இன்னும் அதிகம்மா”, என்றான். பின்னே சொல்ல மாட்டானா என்ன?… இப்போது அவனுக்கு இருபத்தி எட்டு வயது… அவனுடைய இருபத்தி ஆறாவது வயதில் இருந்து அவனுக்கு அவனுடைய பெற்றோர்கள் பெண் தேடுகிறார்கள்.

பெண்களின் ஜாதகமும் நிறைய வருகிறது.

பெண்ணை பிடித்தால் ஜாதகம் சரியில்லை… இரண்டும் சரி வந்தால் வசதி இல்லை… வசதி இருந்தால் பெண் நன்றாக இல்லை… இரண்டும் இருந்தால் ஜாதகம் சரியில்லை… எல்லாம் சரி இருந்தால் இவர்களுக்குப் பிடிக்காது… இவர்களுக்கு பிடித்தால் சத்யாவிற்கு பிடிக்காது, இவர்களுக்கு எல்லாம் பிடித்தால், மற்ற ஆட்கள் பெரியப்பா சித்தப்பா இவர்கள் பிடிதமின்மையைக் காட்டுவர்.  இப்படி ஏதோ ஒன்று…

இதுவரை ஒரு பெண்ணைக் கூட திருமணதிற்காக  என்று அர்ஜுன் பார்த்ததில்லை.. இவர்கள் வரையிலேயே, இது அர்ஜுனிற்கு சரிவராது நொட்டை, நொள்ளை என்று குடும்ப ஆட்கள் சொந்த பந்தங்கள் நிராகரித்து விடுவர்.      

இதுநாள் வரை திருமணத்தில் அர்ஜுனிற்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்பது தான் உண்மை. அதனால் எந்தப் பெண்ணையும் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்ததில்லை. பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்றும் கண்டு கொண்டது இல்லை.    

“இன்னும் எனக்குப் பிடிக்கிறதா? அவளுக்குப் பிடிக்கிறதா? எதுவும் தெரியவில்லை! அதற்குள் இவர்கள் என்ன இந்த பேச்சு பேச்சு பேசுகிறார்கள்!”, என்று கடுப்பாக வந்தது.

மகனின் முகத்தில் கோபத்தை பார்த்தவர்.. “வா, முதல்ல சாப்பிடு! அப்புறம் சண்டை போடலாம்!”, என்றார்.

“முதல்ல அந்த வேலையைச் செய்ங்க”, என்று அம்மாவை கடிந்தவனாக.. டைனிங் டேபிள் முன் அமர்ந்தான்..

கொஞ்சம் ரவா கிச்சிடியும், சப்பாத்தி குர்மாவும் செய்திருந்தார். முடிந்தவரை கடையில் சாப்பிடாமல் தானே சமையல் செய்து கொள்வான் அர்ஜுன். அதனால் வீட்டில் காய்கறி, எல்லா சாமான்களும் இருக்கும். ஏன் இட்லிக்கு மாவு கூட அரைத்துக் கொள்வான் கொஞ்சமாக. சமையல் அவனுக்கு பிடித்த விஷயம். முடிந்தவரை அவனுடைய வேலைகளை அவனே செய்து கொள்வான் யாரையும் எதிர்பார்க்க மாட்டான்…

அம்மாவைத் தேடுவது கூட மன ரீதியாக தான், அவனுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்வதற்காக அல்ல.

சத்யா கூட வீட்டிற்கு வரும் போது எல்லாம் சலித்துக் கொள்ளுவாள், “பாருங்க என்னோட தம்பி எல்லா வேலையையும் அவனே செஞ்சுக்கறான். நீங்க சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட என்னை எதிர்பார்க்கறீங்க”, என்று  கணவனிடம் சண்டையிடுவாள்.      

“நீ குடுத்து வெச்சது அவ்வளவுதான். உன் தம்பிக்கு மனைவியா வரப்  போற பொண்ணு அதிகமா கொடுத்து வெச்சிருக்கா”, என்று சிரித்துப் போய் விடுவான் அவளின் கணவன்.

சாப்பிட்டுக் கொண்டே, “நீயும் சாப்பிடும்மா, இது அங்க ஊர்ல உள்ள வீடு இல்லை வீட்டு ஆம்பிளைங்க சாப்பிட்ட அப்புறம் சாப்பிட.. நம்ம வீடு என்னோட உட்காருங்க”, என்று அதட்ட..

கௌரியும் சாப்பிட அமர்ந்தார். சற்று பழமையில் ஊறியவர் அவனின் தந்தை.. பெண்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும், குலப் பெருமை, கௌரவம் என்று பெரிய லிஸ்ட் வைத்திருப்பார்.

எல்லாம் சற்றும் அர்ஜுனிற்கு பொருந்தாத கொள்கைகள். அவர்கள் வீட்டில் ஆண்மக்கள் மிகுந்த முக்கியம்… அதன் பொருட்டே அர்ஜுன் அழைத்தான் என்று சொன்னவுடன் உடனேயே ட்ரெயின் ஏற்றி விட்டார்.  

அம்மாவும் மகனும் ஊர் கதைகள் பேசியபடி சாப்பிட்டு எழுந்தனர். ஆஃபிசில் முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன. அதனால் கிளம்பினான்.

“டேய் தம்பி, இங்க என்னோட புடவை ஒன்னு இருக்கு பிரச்சனையில்லை! ஆனா நாளைக்குக் கட்ட இல்லை… அம்மா துவைச்சு காட்ட மாட்டேன்”, என்று கௌரி சொல்ல,

“புடவை வேணும்னா எடுத்துக்கலாம்! எதுக்கு திரும்ப பில்ட் அப்!”,

“இந்த பில்ட் அப் குடுத்தா, உடனே நீ வந்து எடுத்துக் கொடுத்துடுவியா”,

“அம்மா! போன தடவை எனக்கொரு மீட்டிங் அதனால வரமுடியலை.. இந்த தடவை கண்டிப்பா சீக்கிரம் வர்றேன்”, என்று சொல்லி காரை எடுத்தவன்,

“கேட் பூட்டிக்கங்க, கதவை தாள் போடுங்க”, என்று பல ஜாக்கிரதைகள் சொல்லவும்,

“எதுக்குடா இவ்வளவு ஜாக்கிரதை! எனக்கு பயம் ஒன்னுமில்லை!”,

“அம்மா! இந்த ஜாக்கிரதை உங்களுக்கு இல்லை, நீங்க வெளில வந்து அடுத்தவங்களை தொந்தரவு கொடுக்காம இருக்க”, என்று சொல்லவும்,

“அர்ஜுன்!!!!”, என்று கௌரி கத்த… சிரித்துக் கொண்டே சென்று விட்டான். 

அவன் செல்லவும் கௌரியின் முகத்திலும் புன்னகை, கூடவே கவலையும் கூட.. அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது என்று நின்றால் என்ன செய்ய.. அவனின் அப்பா மட்டுமென்றால் பரவாயில்லை, இங்கே அவரின் அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மனைவிமார்கள் என்று பெரிய கூட்டமே சம்மதிக்க வேண்டுமே. 

வேலையின் நடுவில் நர்மதாவின் ட்ரைனிங்கில் பிரேக் விடும் நேரம் அனுமானித்து கேண்டீன் வந்தான்… காலையில் அம்மா அவ்வளவு பேசிய பிறகு அவளைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்து தான் இருந்தான்.

ஆனால் ஆஃபிஸ் வந்தவுடன் பரபரப்பு தொற்றிக் கொண்டது, அவளைப் பார்க்க வேண்டும் என்பது போல..

கேண்டீன் சென்றால். அவளில்லை.. ஆனால் அவளின் நண்பர்கள் இருந்தனர்.

“எங்கே நர்மதா?”, என்று கேட்கவும் முடியவில்லை.. திரும்ப லஞ்ச் டைமில் வந்தான். இருக்கிறாளா என்பது போல… இருந்தாள்… மனதில் அப்படி ஒரு உவகை.

நண்பர்களுடன் அமர்ந்து இருந்தாள், பேசி சிரித்தபடி… அதற்குள் அர்ஜுனின் டீமில் முன்பு இருந்த ஒரு பெண், “ஹாய் அர்ஜுன்! ஹவ் ஆர் யூ?”, என்றபடி வந்தாள்.

“ஃபைன் நீங்க எப்படி இருக்கீங்க…”, என்று ஆரம்பிக்க.. அந்தப் பெண் வேலை நிமித்தம் ஏதோ சந்தேகம் கேட்க… அங்கிருந்த ஒரு டேபிளில் அமர்ந்து அவளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.

பதிலளித்து முடித்து, “எங்கே நர்மதா?”, என்று தேட அப்போதும் அவள் சுவாரசியமாக பேசிக் கொண்டு தான் இருந்தாள். சுற்றுபுறம் கவனிக்கவேயில்லை.

சில நிமிடங்களில் எழுந்து வெளியே செல்லும் நேரம் தான், அர்ஜுனைப் பார்த்தாள்.

பார்த்தவுடன் அருகில் வந்து, “சாரி! அது உங்கம்மா தெரியாது… உங்க மனைவியான்னு கேட்டுட்டேன்!”, என்றாள்.

“வேற என்ன பேசின?”, என்றான்.

நண்பர்கள் உடன் நிற்க, “நீங்க போங்க, நான் வர்றேன்!”, என்று சொல்லி அனுப்பினாள்…

“என்ன பேசினேன்?”, என்று அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டு… “சாரி ஞாபகமில்லை! நர்மதா ஒரு நாளைக்கு எத்தனை பேசறா! ரீவைண்ட் செய்ய முடியாது”, என்றாள்.

“ஆனா எங்கம்மா கேட்டாங்க? யாரு இந்தப் பொண்ணு, உன் கேர்ள் ஃபிரண்டான்னு”, என்று எடுத்துக் கொடுத்தான், அவளின் பதிலைக் கேட்க வேண்டி,          

“ஏன்? உங்களுக்கு நிறைய கேர்ள் பிரிண்ட்ஸ்ஸா, அதனால எந்தப் பொண்ணு ஃபோன் பண்ணினாலும் அப்படி கேட்பாங்களா?”, என்று அவள் கேட்டவுடன்…

அர்ஜுன் விழித்தான், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்… “இவ என்னடா இவ? நாம போட்டு வாங்கலாம்னா, நம்ம கிட்ட இவ வாங்கறா”, என்று.

“ஏன் என்னைப் பார்த்தா நிறைய கேர்ள் பிரிண்ட்ஸ் இருக்குற மாதிரி தோணுதா”, என்று அர்ஜுன் சற்று கடுப்பாகக் கேட்க…

“எஸ்! கண்டிப்பா! உங்க அப்பியரன்ஸ் நிறைய பொண்ணுங்களுக்கு பிடிக்கும்! ஸோ, வாய்ப்பு இருக்கு! ஆனா பேசினா உங்களுக்கு ஃபிரண்ட்ஸ் இருக்கவே வாய்ப்பில்லைன்னு புரிஞ்சிடும்”, என சொல்ல..

குழம்பிவிட்டான்.. இவள் இப்போது என்ன சொல்கிறாள் என்பது போல.. அவள் தன்னை கிண்டல் செய்கிறாள் என்றுக் கூட புரியவில்லை. அவனுக்கு வேண்டியது கேர்ள் ஃபிரண்டிற்கு என்ன பதில் என்பது தான். 

“நீ தெளிவா பேச மாட்டியா”, என்று அந்தக் கடுப்பில் கேட்க,

“என்ன தெளிவா பேசணும்?”,

“எங்கம்மா உன்னை என் கேர்ள் ஃபிரண்டான்னு கேட்டாங்கன்னு சொன்னேன்! நீ என்ன பேசற..?”,

முதல் முறை அர்ஜுன் பேசும் போதே வேண்டுமென்றே பேச்சை மாற்றி விட்டாள் நர்மதா, இப்போது அர்ஜுன் திரும்ப சொல்லவும்,  “உங்கம்மாக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க, பதில் சொல்றேன்!”, என்றாள் சீரியசாக, விளையாட்டுத்தனத்தைக் கைவிட்டு.

அவளின் மாற்றத்தை கவனித்தவன், “என்ன ஆச்சு? சும்மா ஜாலியா கேட்டாங்க! அவ்வளவு தான்! ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக்”, என்றான்.

“என்ன ஜாலி? உங்கம்மா கிட்ட சொல்றேன்! மா, உங்க பையன் ஹேண்ட்சம்மா இருக்கலாம்! அதுக்காக எல்லா பொண்ணுங்களும் அவர் பின்னாடி சுத்துவாங்கன்னு நீங்க முடிவு பண்ணக் கூடாதுன்னு!”, என்று பதில் சொல்ல..

“என்னடா இது? இவ்வளவு பல்ப் வாங்கற இந்தப் பொண்ணுக் கிட்ட”, என்று நொந்தே விட்டான் அர்ஜுன்.  

“நானே பேசறப்போ உங்க மனைவியான்னு கேட்கறேன்! எந்த கேர்ள் ஃபிரண்ட் அப்படி கேட்பா.. அப்புறமும் கேட்கறாங்கன்னா ஒன்னு நான் தப்பா தெரியணும், இல்லை  நான் சொன்ன மாதிரி நீங்க நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர், அதனால் பொண்ணுங்க எல்லாம் உங்க பின்னாடி சுத்துவாங்கன்னு நினைக்கணும்”,

எஸ்! அர்ஜுன் நினைத்து போல நர்மதா சிறு முகபாவதிலும் பேச்சிலும் வித்தியாசம் காண்கிறாள். அவன் சொன்னது தப்பு தானே! “சே! சே! உன்னை ஏன் தப்பா நினைப்பாங்க.. நீ சொன்ன மாதிரி அவங்களுக்கு அவங்க பையன் பெரிய ஆள்ன்னு நினைப்பாயிருக்கும்! சாரி! விட்டுடு!”, என்றான்.

இது அவனுக்கு சேர்த்தே சொல்லிக்கொண்டான்! “என்ன கான்பிடன்ஸ்டா உனக்கு”, என்பது போல… முதல் முறையாக இப்படி ஒரு பெண்ணிடம், “சாரி”, கேட்கிறான்.

எவ்வளவு புத்திசாலி என்றாலும் காதல் என்று வரும் போது, எப்படிப் பேசுவது? பெண்ணை கவனிக்க வைப்பது? என்று தெரிவதில்லை. 

அவன் சாரி கேட்ட முறையிலேயே யாரிடம் சாரி கேட்டிராதவன் என்று புரிய…  “நீங்க சாரி கேட்கணும்னு நான் சொல்லலை? என்ன தோணினதோ சொன்னேன்!”, என்றாள் தயங்கியபடி.

“பேசி பயப்படுத்திவிட்டு,  இப்போது சாரி தேவையில்லையாம்”, என்று மனதிற்குள் கடுப்பானவன்.. “அம்மாவைப் பத்தி தப்பா நினைக்க வேண்டாம்”, என்றும் சொன்னான்.

பின்னே அம்மா சொல்லியிராததை, இவன் தெரிந்து கொள்ள வேண்டி அல்ல சொன்னான்.

“இல்லையில்லை”, என்பது போல தலையட்டியவள்.. “அவங்க சொன்னாலும் நீங்க என் கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை! ஏன் சொன்னீங்க?”, என்று கேள்வி கேட்க..

“அம்மாடி!”, என்றாகிவிட்டது அர்ஜுனிற்கு.. சில நொடி பார்த்தவன், “நான் தான் கேட்டேன்! இப்ப என்ன அதுக்கு?”, என்ற வாய் வரை வந்த வார்த்தைகளை நிறுத்தினான்.

பின்பு, “பொறுமை”, என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு.. “என்ன போலிஸ் ஆகப் போறியா நீ! இப்படி வளைச்சு வளைச்சு ஏதோ குற்றவாளிக்கிட்ட கேட்கற மாதிரி கேட்கற..”,

“இதுக்கு பதில் ஒன்னு தான்! வேற யார் கிட்டயும் அம்மா சொன்னதை சொல்லியிருக்க மாட்டேன்! உன் கிட்ட தான் சொன்னேன்! அது நீன்றதால தான் சொனேன்! எனக்கு வேலையிருக்கு”, என்று இடத்தை விட்டு அகன்றான்.

இப்போது நர்மதா குழம்பிவிட்டாள், “நான் ஸ்போர்டிவாக தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னானா? இல்லை வேறு அர்த்தம் வருகிறதா?”, சுத்தமாகப் புரியவில்லை.   

வேக நடையுடன் செல்லும் அர்ஜுனை பார்த்தபடி இருந்தாள். “நல்ல மாதிரி தான் தெரியறாங்க! தப்பா பேச வாய்ப்பில்லை… நான் எதுக்கு இப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேட்டேன்.. ஆனா எப்படி கேர்ள் ஃபிரண்டான்னு கேட்கலாம். நர்மதாவை பார்த்தா எப்படி தெரியுது, பாய் ஃபிரண்ட்ஸ்ஸோட சுத்துற மாதிரியா! இடியட்.. அவங்கம்மா கிடைக்கட்டும், பார்த்துக்கறேன். ஆனாலும் இவ்வளவு ஆகாது, இவங்க பையன் பெரிய இவனா?”, என்று மனதிற்குள் திட்டியபடி எழுந்து சென்றாள்.      

 

Advertisement