Advertisement
அத்தியாயம் நான்கு:
அர்ஜுன் மெதுவாக காரை விட்டு இறங்கி நடந்த போது மனம் என்றுமில்லா உற்சாகதில் இருந்தது. “இது என்ன உணர்வு”, என்று கண்டறிய முற்பட்டான்.
ஏனென்றால் இந்த இருபத்தி எட்டு வயது வரை அவன் உணர்ந்திராத உணர்வு. பெண்களை பார்க்க மாட்டான் என்று கிடையாது…. பார்ப்பான், ரசிப்பான், அந்தந்த வயதுக்குரிய செய்கை… ஆனால் காலேஜ் முடிந்து வேலை என்றான பிறகு மிகவும் ஃபெர்பெக்ட் ஜென்டில் மேன்… பல நாடுகளுக்கும் வேலையின் நிமித்தம் போய் வந்துவிட்டான்.
சில பெண்கள் திரும்பிப் பார்க்க வைப்பார்கள். ஆனால் யாரும் நர்மதாவைப் போல ஈர்க்கவில்லை, ரசிக்க வைக்கவில்லை. என்னுள் வந்திருக்கும் இந்த மாற்றம் என்ன? யோசித்துக் கொண்டே சென்றாலும், நேற்று போல அல்லாமல் லிஃப்டில் ஏறி அவனின் பிரிவை அடைந்து வேலையையும் ஆரம்பித்து விட்டான்.
அன்று ஒரு கான்பாரன்ஸ் கால் இருக்க, அதை முடித்து நிமிரும் போது நேரம் பன்னிரெண்டு…
ஏதாவது குடித்தால் தேவலாம் போல தோன்ற, புஃட் கோர்ட் சென்றான். அங்கே சென்றால் நர்மதா தனியாக ஒரு டேபிளில் அமர்ந்திருந்தாள்.
நர்மதாவைப் பார்த்ததும் ஒரு தனி உற்சாகம். அவள் முன் சென்று அமர்ந்தவன், “ஹேய், என்ன இந்த டைம் இங்க இருக்க! அதுவும் தனியா உன்னோட நண்பர்கள் இல்லாம!”, என்றான்.
“ம், வேண்டுதல்… இன்னைக்கு இங்க சாப்பிட வர்றவங்களை எல்லாம் வேடிக்கை பார்க்கணும்னு”,
அவள் கன்னத்தில் கை வைத்து சொன்ன பாவனையில் சிரிப்பு வந்து விட, “ஏன்மா அப்படி ஒரு வேண்டுதல்?”, என்றான் அவனும் அதே பாவனையில்.
“ம், கைல காசில்லை! பசிக்குது! வேடிக்கை தானே பார்க்க முடியும்!”,
“என்ன காசில்லையா? அதுக்குள்ள உங்கப்பா கொடுத்ததை செலவு செஞ்சிட்டியா!”, என்றான்.
நர்மதா முறைக்கவும், “டேய், கோபத்துல எழுந்து போயிடப் போறா”, என்று நினைத்து, “எடுத்துட்டு வரலையா? மறந்துட்டியா!”, என்று பேச்சை மாற்றினான்.
“ம்கூம்! விட்டுட்டு வந்துட்டேன்.. மிஸ்டர் ராவ் கிளாஸ்ல இருந்து வெளில போன்னு சொல்லாம சொன்னாரா, அதான் அவசரத்துல மறந்து விட்டுட்டு வந்துட்டேன்”,
“என்ன வெளில போன்னு சொன்னானா! ஏன்?”, என்றான் வியப்பாக.
“ம், தூங்கினேன்.. பக்கத்துல இருந்தவ வேற என்னை எழுப்பி விடலை! ராவ்கிட்ட மாட்டிக்கிட்டேன்.. i dont want to see your face அப்படின்னார்! அப்போ வெளில போன்னு தானே அர்த்தம்! ஓகே! தேங்க்யூ! அப்படின்னு சொல்லி வந்திட்டேன்”, என்றாள்.
“என்ன சொல்ற?”, என்றான் ஆச்சர்யமாக…. “இதென்ன காலேஜ்ன்னு நினைச்சியா…… இந்த கலாட்டா பண்ணியிருக்க.. ராவ் கிளாஸ் தூங்கற மாதிரி இருக்காதே! நல்லா தானே எடுப்பான்!”,
“நான் எப்போ நல்லா எடுக்கலைன்னு சொன்னேன்… புது இடம்! இதுவரை தனியா தங்கினதும் இல்லை தூங்கினதும் இல்லை, பயத்துல முழிச்சிட்டே இருந்தேன், சரியா தூங்கலை!”,
“இங்க வந்தா ஏ சீ குளிர், கிளாஸ் வேற தாலாட்டு பாடற மாதிரி இருந்தது! தூங்கிட்டேன்!”,
“ஒரு சாரி கேட்டிருந்தா விட்டிருப்பான்!”,
“எதுக்கு கேட்கணும்? நான் தூங்கினதுக்கு திட்டினா ஓகே! கெட் அவுட் சொல்லியிருந்தா கூட ஓகே! ஆனா என் முகத்தை பார்க்க பிடிக்கலையாம்.. இவனை பார்க்கச் சொல்லி நான் கூப்பிட்டேனா! என்ன வார்த்தை இது..! இவன் முகத்தை டெய்லி இவன் கண்ணாடில பார்ப்பான் தானே! அதை விட வா என் முகம் சகிக்காம இருக்கு! இடியட்! கேட்டிருப்பேன்! போனா போறான்னு விட்டுடேன்!”, என்றாள்.
நர்மதா சொன்ன பாவனையில் அப்படி சிரிப்பு பொங்கி வந்தது அர்ஜுனிற்கு.. ஆனாலும் புன்னகையோடு நிறுத்தியவன்.. “இப்படி மரியாதையில்லாம பேசறது தப்பு!”, என்று ஆரம்பிக்க….
கையெடுத்து அவனை கும்பிடுவது போல பாவனை செய்தவள், “தெய்வமே! தெய்வமே! தயவு செஞ்சு அட்வைஸ் வேண்டாம்! நீங்க நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்.. நான் ஒத்துக்கறேன்.. நீங்க அறிவாளி, நான் முட்டாள், இந்த ஈக்குவேஷனே இருக்கட்டும்! நேத்து இருந்து உங்க கிட்ட என்னவோ சொதப்பிட்டு இருக்கேன்”, “அதுக்காக அட்வைஸ் பண்ணாதீங்க.. எங்கப்பா அம்மா என்னை அட்வைஸ் செஞ்சு கொல்லுவாங்க! இப்போ அந்த வேலையை நீங்க செய்யாதீங்க!”,
“நான் செய்யறது தப்பாவே இருக்கட்டும்! நான் என்னோட தப்புல இருந்தே கத்துக்கறேன்… ஓகே!”, என்றாள்.
இந்த முறை அர்ஜுனிற்கு விரிந்த சிரிப்பு! “ஊப்ஸ்! அதுக்கு ஏன் இவ்வளவு பேசற… நான் அட்வைஸ் பண்ணலை! நான் பண்ணலை! ஏன்னா தெரியாம தப்பு பண்ணினா அட்வைஸ் பண்ணலாம்! தெரிஞ்சே பண்றவங்க கிட்ட பேச முடியாது!”,
இப்போது நர்மதா சிரித்தாள்.. “ப்ச்! கண்டுபிடிச்சிட்டீங்களா! நிஜமா புத்திசாலி தான்! என்னோட லைஃப் என்னோட இஷ்டம் தான்!”, என்றாள் சிரிப்போடு.
“தைரியம் தான்! சரி! என்ன சாப்பிடற? காஃபி!”,
“இல்லை! வேண்டாம்!”,
“இல்லை! வேடிக்கை பார்க்குற உன் வேண்டுதல் முடிச்சிக்கோ! என்ன சாப்பிடற?”, என்று குறும்பாக வற்புறுத்தலோடு கேட்கவும்…
“எதுனாலும்!”, என்று சொல்லும் போது ஒரு தயக்கம், இதுவரை இருந்த குறும்புத்தனம் மறைந்தது.
செலவு வைக்க தயங்குகிறாள் என்று புரிந்தது.
“கணக்கு வெச்சிக்கோ! பதிலுக்கு உன் சாலரி வாங்கின பிறகு, எனக்கு வாங்கிக் கொடுப்பியாம்”, என்றான்.
நர்மதாவின் முகத்தில் குறும்புத்தனம் மறைந்து, முகத்தில் ஒரு இதமான புன்னகை… பார்க்க, பார்க்க, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல ஒரு ஆர்வம்..
பார்வை மாற்றம் வராமல் இருக்க அர்ஜுன் பெரும் முயற்சி எடுத்தான். நர்மதா குறும்புப் பெண்தான்! ஆனால் எதுவும் புரிய முடியாதவள் அல்ல என்று தோன்றியது! சிறு பார்வை மாற்றமும் அவளை விலக்கி விடும்! இந்த சகஜத்தன்மை வராது என்று உள் மனது சொல்ல.. “டேய், அடங்குடா!”, என்று மனதை பெரிதும் கடிவாளமிட்டு அடக்கினான்.
“ம்! அப்போ காலையில கார்ல வந்ததுக்கு கூட கணக்கு வெச்சிக்கட்டுமா!”, என்றாள் ஆர்வமாக நர்மதா…
“இவ, என்னடா இவ, நம்மளை ஆட்டோக்காரன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டா போல!”, என்று மனதிற்குள் கடுப்பானவன்.. “வெச்சிக்கோ! ஆனா டெய்லி என்னோட வர்றதானா கணக்கு வெச்சிக்கோ!”, என்றான்.
“ஆங்! அது எப்படி முடியும்…”, என்று கண்களை விரிக்க..
“ம், முடியாதுள்ள! அப்போ வாயை மூடு! நான் வாங்கிக் கொடுக்கறதை சாப்பிடு!”, என்று எழுந்து போனான்.
“ஆங்! இவன் என்னை மிரட்டுகிறானா!”, என்று அவன் செல்வதையே முறைத்துப் பார்த்து அமர்ந்திருந்தாள்.
அர்ஜுன் பிரட் சான்ட்விச்சும் காஃபியும் வாங்கி வரவும், காலையில் கூட உண்ணாத நர்மதாவின் யானைப் பசிக்கு அது சோலப்பொறியாக கூட இல்லை!
ஆனால் ஏதோ ஒன்று, இதாவது கிடைத்ததே என்று மளமள வென்று காலி செய்தாள்.. அவள் சாப்பிட்ட தோரணையில், தண்ணீரை அவள் புறம் நகர்த்தியவன், “காலையில என்ன சாப்பிட்ட..?”,
“ஒன்னும் சாப்பிடலை!”,
“ஏன்?”, என்றவனைப் பார்த்து,
“நான் என்ன கதையா சொல்றேன்! தனியா தூங்கினதால சரியா தூங்காம, லேட்டா எழுந்தேன்! பஸ் விட்டேன்! அப்புறம் இங்க தூங்கினேன்!”, என்று ஆரம்பிக்க…..
“துப்பட்டா கூட விட்ட”, என்று சொல்ல வந்தவன்.. “டேய், அடங்குடா!”, என்று மனதை அடக்கினான்.
“சரி! சரி! சாப்பிடு! இன்னொன்னு வாங்கட்டுமா!”, என்றான் தோரணையாக, ஏதோ போனால் போகிறது என்பது போல.. ஆனால் மனமோ அவனையும் மீறி முழு சரணாகதி தான்.
“கணக்கு வெச்சிக்குவீங்க தானே”, என்றாள் சந்தேகமாக.
“டெய்லி என்னோட சாப்பிடறதானா”, என்று புது ரூல்ஸ் போட…
“எனக்கு இதுவே போதும்”, என்றாள் முகத்தைத் தூக்கி வைத்து…
“சரி, சரி, கணக்கு வைக்கிறேன்”, என்று எழுந்து மீண்டும் வாங்கிக் கொடுத்தான்.
“சாப்பாடு மாதிரி வருமா இதெல்லாம்! எங்க போய் எனக்கு பத்தும்!”, என்று மனதினில் நினைத்தவளாக உள்ளே தள்ளினாள்.
நேரத்தை பார்த்தவன், “எனக்குப் போகணும்”, என்றான்.
“போங்க”, என்று சொல்லி அவள் காரியத்தில் கண்ணாய், சாப்பிடுவதில் இருக்க…
“டேய், அர்ஜுன்! இதுக்கு மேல உன்னை யார் காமெடி பீஸ் ஆக்க முடியும்! என்ன எக்ஸ்ப்ரஷன் டா இது!”, என்று நினைத்தவன்…
அந்தக் கடுப்பில், “இது என்னோட காஃபி நீயே குடி!”, என்று தள்ளி வைக்க,
“ஓஹ்! டைம் ஆச்சா! போங்க! போங்க! வேஸ்ட் ஆகாது! நான் குடிச்சிடுவேன்!”, என்றாள் சீரியசாக.
கடுப்பின் உச்சிக்கு சென்றவன், அவளை முறைக்க முயன்று, “ஏன் முறைக்கறீங்க”, என்று கேட்டுவிடுவாள், என்ன செய்ய? என்று எழுந்து சென்று விட்டான்.
“என்னடா கொடுமை இது! நீ இவ்வளவு நல்லவன்னு வயசுப் பொண்ணு நம்புறா! இவ்வளவு நல்லவன் லுக் நீ குடுக்க வேண்டிய அவசியம் என்ன?”, என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டு சென்றான்.
“இவளை எப்போ பார்த்தாலும் நம்மை நாமே திட்ட வெச்சிடறா…”, என்று புலம்பிக் கொண்டே சென்றான்.
பின்பு மாலை வரை அர்ஜுனிற்கு வேலை சரியாக இருக்க… “வேலை”, என்று வந்துவிட்டால் முழு கவனமும் அதில் தான் இருக்கும். ஆனால் எப்போதும் இல்லாத படி நர்மதாவின் ஞாபகம், அவளின் முகம், பேச்சு என்று மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அவன் வெளியே வந்த நேரம்… நர்மதாவின் பஸ் கிளம்பியிருந்தது.
அவளைப் பார்க்கும் ஆவலில் தான் வந்திருந்தான், நர்மதா கிளம்பியிருக்கவும் வீடு செல்ல பிடிக்காமல், பின்பு அவனின் கேபினே சென்று வேலைகளை தொடர்ந்தான்.
இரவு மணி எட்டை நெருங்கவும் சோர்வாக எழுந்தவன்… “என்ன இது? அவளை நேற்று காலையில் தான் பார்த்தோம்! ஏன் இப்படி மனது தடுமாறுகிறது… அவளின் அண்மை வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் பெண் உன்னை கவனிக்கக் கூட இல்லை… நீ ஏன் யோசித்துக் கொண்டு இருக்கிறாய்”,
திரும்ப காரில் வரும் போதும் தீவிரமாக யோசித்துக் கொண்டே வந்தான். வந்தவுடனே அம்மாவை அழைத்தான்…
“அர்ஜுன் சாப்பிட்டியா”, என்றார்.
“இல்லை! நீ வந்து சமைச்சு கொடு… பசிக்குது!”, என்றான்.
“என்னடா விளையாடுறியா? வரும் போது சாப்பிட்டுட்டு வரணும் தானே!”,
“நீ வருவியா? மாட்டியா? அதை சொல்லு!”, என்றான் பிடிவாதமான குரலில்.
“அர்ஜுன் பக்கத்துலையா இருக்கோம்! எட்டு மணிநேரம் ஆகும்! ஆமாம் என்ன? என்ன பிரச்சனை? என்னைத் தேடுற?”, என்றார். எப்போதும் ஏதாவது சஞ்சலம் என்றால் அர்ஜுன் தஞ்சமடையும் இடம் அம்மா தான். சிறு வயதில் அடிக்கடி அப்படிதான். வளர்ந்த பிறகு அந்தப் பொழுதுகள் மிகவும் குறைவு…
“அதெல்லாம் சொல்ல முடியாது! வா! எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு…”,
“என்னடா இது? புதுசா சின்ன பையன் மாதிரி திடீர்ன்னு வான்னா எப்படி வருவேன்! அப்பாக்கு இங்க வேலை இருக்கான்னு தெரியலையே!”, என்றார்.
அவ்வளவு தான் அர்ஜுனிற்கு கோபம் வர… “நீ வராத போ!”, என்றவன், போனை வைத்து ஸ்விட்ச் ஆஃப் செய்து தூக்கி தூர எறிந்தான்.
சாப்பிடாமல் அப்படியே படுத்தும் கொண்டான். மிகவும் கர்வமான மனிதன்.. பார்த்த இரண்டு நாளில் ஒரு பெண் சுற்ற வைக்கிறாள் அவளின் பின் புறம் என்பது அவனுக்கு அவ்வளவு சஞ்சலதைக் கொடுத்தது! ஏனென்றால் அதன் பிரதிபலிப்பு சற்றும் நர்மதாவினடத்தில் இல்லை.
தூக்கம் தான் வருவேனா என்றது. எழுந்து டீ வீ பார்த்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தவன், அப்படியே உறங்கியும் விட… காலையில் விடாமல் காலிங் பெல் அடிக்கவும் தான் எழுந்தான்.
நேரம் பார்த்தால் மணி ஆறு! யாருடா இந்த நேரம் என்று தூக்க கலக்கத்தில் கதவை திறக்க… கேட்டின் வெளியே அம்மா நின்றிருக்க… கதவை திறந்து விட்டு கேட்டை திறக்கக் ஓடினான்.
“கெ..ள…ரி வந்துட்டியா”, என்றபடி…
கேட்டை திறந்து, “வா! வா!”, என…
“அதான் வந்துட்டேன் இல்லை! அப்புறம் என்ன வா! வா! வரக் கூடாதுன்னு இருந்தேன்! உங்கப்பா தான் உன் போன் ஸ்விட்ச் ஆஃப்ன்ன உடனே அரைமணி நேரத்துல என்னை ட்ரெயின் ஏத்தி விட்டுட்டார்”.
“ஏண்டா அப்பாவும் மகனும் என் வயசைக் கூட பார்க்க மாட்டீங்களா… விட்டா ஓடற ட்ரெயின்ல என்னை போய் ஏறுன்னு சொல்வார் போல!”,
“என்ன வயசு உனக்கு! அம்பது வயசு! சத்யாக்கு அக்கா மாதிரி தான் இருக்க! அதெல்லாம் ஒரு வயசா… எங்க உன் பேக்”,
“என்ன பேக்கா அடிச்சிடப் போறேன்… நீ வர சொன்ன அடுத்த நிமிஷம் அப்படியே கார் கூட எடுக்க நேரமில்லாம பைக்ல கொண்டு வந்து அதுக்கு முன்னயே யாரையோ டிக்கெட் வாங்க சொல்லி ஏத்தி விட்டு ஏதாவது ட்ரெயின் ல வாங்கி சாப்டுக்கோன்னுடார் உங்கப்பா.. இதுல எங்க டிரஸ் எடுக்க நேரம்”,
“நான் இப்போ போன் செஞ்சு சொல்லிட மாட்டேன்! இனிமே நான் அங்க வரமாட்டேன்! இங்க தான் இருப்பேன்னு!”,
“நீ, நீ அப்பாவை விட்டுட்டு இருப்ப… ரெண்டு நாள் தான்! அதுக்கு அப்புறம் நான் போறேன்னு எப்படி பிடிவாதம் பிடிப்பேன்னு எனக்கு தான் தெரியும்!”,
“இந்த முறை அது நடக்காது!”, என்றார் தீர்மானமாக கௌரி.
“ஐ! எப்படி, அப்படி, சொல்ற! அவரை இங்க வர சொல்லிடுவியா”, எனவும்,
“அட! கண்டுபிடிச்சிட்டியா! புத்திசாலி தான் போ!”, என அம்மா சொல்லவும், “நேற்று இதே வார்த்தைகளை தானே அவளும் சொன்னாள்..”, நர்மதாவின் ஞாபகம்..
அவன் சற்று மௌனிக்கவும் தான் கௌரி அவனை கவனித்தார். ஆபிஸ் உடையில் அப்படியே இருந்தான்… ஏன் சாக்ஸ் கூட கழற்றவில்லை.
“என்னடா கண்ணா! அப்படியே தூங்குனியா! வேலை அதிகமா! அப்போ நீ சாப்பிட வேயில்லையா!”, என்றார் கரிசனமாக வரிசையாக கேள்விகளை அடுக்கியபடி.
“இல்லைம்மா எப்பவும் இருக்குற வேலை தான்…”,
உள்ளே வந்தவர் வீட்டை பார்த்தார்…. அலங்கோலம்.. எல்லாம் அப்படி அப்படியே அந்த அந்த இடத்தில். இப்படி அர்ஜுன் எப்போதும் வீட்டை வைத்திருக்க மாட்டான் எப்போதும் நீட்டாக இருக்கும். ஏதோ சரியில்லை அவனிடத்தில் என்று உணர்ந்தவராக…
“என்னடா வீட்டை வெச்சிருக்க..”, என்று ஒழுங்குப்படுத்த ஆரம்பித்தார்.
“யாரையாவது வேலைக்கு வைன்னாலும் கேட்க மாட்ட!”, என்று சொல்லிக் கொண்டே திரும்ப… “மா, நான் தூங்கறேன்!”, என்று உடை மாற்றி பெட்ரூமில் உறங்க ஆரம்பித்தான்.
திரும்ப விழிக்கும் போது மணி எட்டு… நேரம் பார்த்தவுடன் தோன்றியது ஒன்றே தான்! சரியான நேரத்திற்கு சென்றிருப்பாளா? இல்லை நேற்றைப் போல விட்டிருப்பாளா? நேற்றே துப்பட்டாவை வேறு விட்டாளே! எப்படி சென்றாளோ? என்று தோன்றிய க்ஷணம்… கைபேசியில் அவளின் நம்பரை தேடினான்.
அவள் அப்பா கொடுத்தார் தான்… ஜஸ்ட் ஒரு மிஸ்ட் கால் மட்டும் விட்டு வைத்திருந்தான்… பிறகு பதிந்து கொள்ளலாம் என்று இப்போது தான் ஞாபகம் வர…
தேடினான்… இரண்டு நாட்களுக்கு முன் இருந்த கால் ஹிஸ்டரியில் ஒரு வழியாக கண்டுபிடித்து.. நர்மதாவை அழைத்தான்.
நர்மதா எடுத்த நொடி, “நான் அர்ஜுன்”, எனவும்..
“அர்ஜுனா? அது யாரு?”, என்றாள்.
கடுப்பானவன் போன் கட் செய்து விட்டு பாத்ருமினுள் புகுந்தான்… பேருந்தில் பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் அப்போது தான் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருந்தாள் நர்மதா.
“யாரு அர்ஜுன்?”, என்று யோசித்தவள் ஞாபகம் வந்தவளாக… ஐயோ நல்லவர் வல்லவர் நாலும் தெரிஞ்சவர்… இப்படி பண்ணறியேடி! நேத்து தானே உனக்கு சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க! அதுக்காகவாவது ஞாபகம் வைக்க மாட்ட! இடியட்!”, என்று அவளை திட்டிக் கொண்டே அர்ஜுனை அழைத்தாள்.
அவனின் போன் அடிக்கவும், “தூங்குகிறானா? முழித்து விட்டனா?”, என்று பார்க்க உள்ளே வந்த அவனின் அம்மா.. அவன் இல்லாததைப் பார்த்து அதை எடுத்தார்.
அவ்வளவு தான் அவருக்கு தெரியும், எதிர்புறம், “ஹெல்லோ! தெய்வமே! தெய்வமே! நல்லவர் சார்! வல்லவர் சார்! நாலும் தெரிஞ்சவர் சார்! சாரி சார்! உங்க பேர் மறந்துட்டேன் நர்மதா! தப்பா எடுத்துக்காதீங்க! ஞாபகம் வந்துடுச்சு! இப்போ சொல்லுங்க! நர்மதா அலெர்ட் ஆகிட்டா!”, என்று சொல்லவும்..
சத்தமாக சிரித்து விட்டார் கௌரி.
பெண்ணின் குரல் கேட்கவும்… “ஏய் நர்மதா! யாருக்கு பண்ணின!”, என்று போனை காதில் இருந்து எடுத்து நம்பர் பார்த்தாள்.. “சரியாத்தான் பண்ணியிருக்க”, என்று சொல்லிக் கொண்டு..
“ஹெல்லோ சாரி! நான் அர்ஜுன் சார்ன்னு நினைச்சேன்… நீங்க யாரு அவங்க மனைவியா!”, என்று ஆர்வமாக கேட்கவும்…
இன்னும் சிரிப்பு கௌரிக்கு……
சிரிப்பு சத்தம் கேட்கவும்… “என்னன்னு சொல்லிட்டு சிரிங்க! நானும் சிரிபேன்ல!”, என்றாள். எதிரில் இருப்பவரோடு சேர்ந்து சிரிக்க நினைக்கும் பாவனை கௌரியை ஈர்த்தது.
அதற்குள் அர்ஜுன் வந்திருக்க… “யாருடா இந்த காமெடி பீஸ்?”, என்று கௌரி கேட்க…
“யாரும்மா?”, என்றபடி போன் வாங்கினான் அர்ஜுன்… “ஹலோ!”, என்று அர்ஜுன் சொல்லவும்….
“யாரு அது? என்னை காமெடி பீஸ் சொன்னது!”, என்று நர்மதாவின் குரல் கேட்கவும்,
“எங்க அம்மா?”, என்று அர்ஜுன் சொல்லவும்..
“ஐயோ சொதப்பிட்டியேடி!”, என்று அவளுக்கு அவளே சொல்லி, அவசரமாக நர்மதா போனை வைக்க…
அவளின் தலையில் கைவைக்கும் பாவனையை கண்களில் கொண்டு வந்து அர்ஜுன் ரசித்தான்.
“யாருடா இது? என்னை உன் வைஃப்பான்னு கேட்குது, இன்னும் உனக்கு கல்யாணம் ஆகாதது கூட தெரியலை.. அப்போ உன்னை அந்தப் பொண்ணு சைட் அடிக்கவேயில்லை.. யாரு அது, செம காமெடியா பேசறா?”, என்றார்.
“அம்மா அவ காமெடி பீஸ் இல்லை! என்னை அந்த மாதிரி மாத்திட்டு இருக்கா!”, என்றான்.
“ஓஹ்! அவ சைட் அடிக்காதது தான் உன் பிரச்சனையா!”, என்று விஷயத்தை சரியாக கணித்தார்.
தலையை ஆட்டி ஒப்புக் கொடுப்பதா வேண்டாமா என்று அர்ஜுன் யோசித்தபடி அம்மாவை பார்த்தான். அம்மா இதுவரை இருந்த லகுத்தன்மையை கைவிட்டு அவனை தீர்க்கமாக பார்க்கவும்.. “தெரியலை!”, என்றான்.
“ஆமாம்”, என்றும் சொல்லவில்லை, “இல்லை”, என்றும் சொல்லவில்லை. அவனுக்கு தெரியும் என்ன தான் ஜாலியாக அவனும் அம்மாவும் பேசிக் கொண்டாலும், காதல் என்ற வார்த்தை எல்லாம் அவனின் குடும்பத்தில் சகஜமில்லை.
அவன் பார்க்க வேண்டும் என்று சொன்ன நிமிடம் அம்மாவை அனுப்பிவிடும் அப்பா.. இப்படி என்று சொன்னால் அவ்வளவு தான். அவனும் இத்தனை நாட்கள் காதலாவது கத்திரிக்காயாவது என்று பேசி திரிந்தவன் தானே! தனக்கு வந்திருப்பது ஈர்ப்பையும் மீறிய காதலோ என்று தான் யோசனை ஓடியது. “தெரியவில்லை”, என்று சொன்ன மகனை… விடாது பார்த்தார் கௌரி.