Advertisement

அத்தியாயம் மூன்று:

எப்போதும் உற்சாகமான இளைஞன் தான் அர்ஜுன்… அன்று உற்சாகத்தின் அளவு இன்னும் அதிகமாக இருந்தது. நர்மதாவை பற்றிய யோசனைகளோடு ஐந்து மாடிகள் அவன் நினைவே இல்லாமல்  படி ஏறிவிட்டான் .. லிப்டின் கதவு திறக்க, அதில் இருந்த வந்த இவனின் டீம் மெம்பர் ஒருவன், “வை அர்ஜுன்….. ஸ்டெப்ஸ்?”, என்று கேட்கவும் தான், அவனின் முட்டாள்தனம் புரிந்தது.

“ஜஸ்ட் எக்ஸசர்சைஸ் மேன்” என்று ஜாலியான ஒரு புன்னகையை சிந்தி, அவன் சென்றவுடன், “என்னடா பண்ணிவச்சிருக்குற நீ? இப்படி எப்பவுமே ஆனதே இல்லையே?”, என்று அவனுக்கு அவனே சலித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அவனின் கேபின் சென்று, அன்றைய வேலைகளை ஆரம்பித்து வைத்து ஒரு பிரேக் எடுத்து வந்தவன்.. அழைத்தது தன் அக்காவை…. “யாரு அவங்க, அனுப்பி வெச்சிருக்க?”,

“அவனவன் படிச்சிட்டு வேலையில்லைன்னு அலைஞ்சிட்டு இருக்கான்! இவங்க என்னடான்னா இன்னைக்கு காலையில வந்து பொண்ணுக்கு தங்க பாதுக்காப்பா இடம் இருக்கான்னு என்னை கேட்காறாங்க… இல்லைனா பொண்ணை இப்பவே கூட்டிட்டுப் போறேன்னு சொல்றாங்க, லூசா இவங்க?”, என்றான்.

திட்டுவானோ என்று பயந்து பயந்து போனை எடுத்த சத்யா.. அர்ஜுன் இப்படிக் கேட்கவும்…

சிறிது தளர்ந்தவளாக பேச ஆரம்பித்தாள்… “நிஜம்மா லூசு தாண்டா… அப்படி ஒன்னும் வசதியெல்லாம் கிடையாது… ஆனாலும் காசைக் கொட்டி பொண்ணை இன்ஜினீயரிங் படிக்க வெச்சாங்க… அதனால கடனாளியும் ஆனாங்க”,

“இப்ப வேலை வந்ததுக்கு அப்புறம்… அவங்க சொந்தத்துல யாரோ ஒரு பொண்ணு இப்படி வேலைக்கு போன இடத்துல திடு திப்புன்னு வேற ஜாதில கல்யாணம் செஞ்சிகிட்டு வந்திடுச்சாம்… அதனால பொண்ணை வேலைக்கு அனுப்ப வேண்டாம்… எனக்கு கௌரவம் தான் முக்கியம் அது இதுன்னு…”,

“ரெண்டு நாள் முன்னாடி வரைக் கூட ஒதுக்கவேயில்லை. அந்தப் பொண்ணு ஒரே அழுகை போல… அவங்க மச்சான் எங்களுக்கு பங்காளிடா… அவர் தான் உங்க தம்பி அங்க தானே இருக்காங்க, சொல்றீங்களான்னு கேக்க… அப்பாவுக்கும் ஊருக்குள்ள ரொம்ப நல்ல பேரு.. அதை வெச்சு பேசி நேத்து தான் முடிவு செஞ்சு, இப்ப அவசரமா கிளம்பி வந்திருக்காங்க! அதான் தங்க இடம் கூட பார்க்கலை..”,

“இப்படியும் ஆளுங்க என்ன சொல்ல…  நம்ம பசங்க மேல நமக்கு நம்பிக்கை வேண்டாமா?”, என்றாள் சத்யா.

“அதெல்லாம் இருக்கு சத்யா! இல்லைன்னு சொல்ல முடியாது, இல்லைன்னா தைரியமா யாரு என்னன்னு தெரியாம என்கிட்டே பார்த்துக்கங்கன்னு சொல்வாரா வயசுப் பொண்ணை”,   

“அப்படியா சொல்ற?”,

“அப்படித்தான் சொல்றேன்! நீ நர்மதாவை பார்த்து இருக்கியா?”, என்று கர்ம சிரத்தையாக ஒரு அர்ஜுன் ஒரு கேள்வி கேட்டான்.

“யாரு நர்மதா?”, என்றாள் சத்யா.

அதிலேயே தெரிந்தது சத்யா பார்த்ததில்லை என்று..

“நீ அனுப்பியிருக்குற பொண்ணு”,

“எனக்கு அவங்களைத் தெரியாதுடா… அந்தப் பொண்ணோட மாமா தான் எங்களுக்கு சொந்தம்.. அந்தப் பொண்ணோட அப்பா அம்ம்மாவை ஏதாவது விஷேஷத்துல பார்த்திருக்கேன்! எனக்குக் கல்யாணமாகி எட்டு வருஷம் தானேடா ஆகுது.. அவங்க பொண்ணை பார்த்தது இல்லை. தெரியவே தெரியாது”.

“ஏதோ கஷ்டப்படுற குடும்பம், வர்ற நல்ல வேலையை வேண்டாம்னு, சொல்ல வேண்டாம்னு அவங்க மாமா கேட்டதால உன் பேரை சொல்லி அனுப்பிச்சேன்”.

“எதுக்கு அனுப்பின”, என்று திட்டுவான் என்று சத்யா நினைக்க அர்ஜுன் திட்டவேயில்லை.

பொறுமையாக, “இங்க ஆஃபிஸ் ஓகே! யாராவது தெரிஞ்சவங்க இருந்தா எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு ஒரு வார்த்தை சொல்லலாம், ஆனா தங்க இடம்.. அதில்லைன்னா பொண்ணை திருப்பி கூட்டிட்டு போறேன்றாங்க, சரியான பிழைக்கத் தெரியாத மனுஷன் போல..”,

“நான் யார்கிட்டயும் எந்த ஹெஃல்பும் இதுவரை கேட்டது கிடையாது.. பொண்ணுங்க எல்லோரையும் டிஸ்டன்ஸ்ல தான் வைப்பேன். எல்லாரோடையும் நல்லா பேசினாலும், அது அஃபிஷியல் மட்டும் தான். ஒரு பெர்சனல் டால்க் கூட கிடையாது. இதுல யாரு லோக்கல், யாரு ஹாஸ்டல் தெரியாது! இதுல எந்தப் பொண்ணுங்க கிட்ட போய் உங்களுக்குத் தெரிஞ்ச லேடீஸ் ஹாஸ்டல் இருக்கான்னு கேட்பேன்… என்ன செய்ய.. ஏதாவது சொல்லு”, என்றான்.

“இதுல நம்ம ஒன்னும் செய்ய முடியாது! ஆஃபிஸ்னா ஹெஃல்ப் பண்ணு… தங்க இடம் நம்ம எப்படி சொல்லுவோம்.. நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா, அந்தப் பொண்ணு யாரோடையாவது ஓடிப்போயிட்டா, நம்மை கேட்பாங்க.. அதெல்லாம் தெரியாது சொல்லு..”,

“அந்தப் பொண்ணு ஓடிப் போயிட்டா”, என்ற வார்த்தை அர்ஜுனிற்கு கோபத்தை கொடுத்தது.

“ஏதோ கஷ்டப்படறாங்களேன்னு வேலைக்கு சொன்னா… முடியாதுன்னு சொல்லிடு!”, என்று சத்யா அசால்டாக சொல்லவும்,  

“என்ன விளையாடுறியா?”, என்று கத்தினான். அவன் கத்திய கத்தலுக்கு பயந்து விட்டாள் சத்யா.

“என்னடா?”,

“என்னவா… நீங்க சொன்னீங்கன்னு பார்த்து…. செஞ்சிக்கலாம், தங்க இடம் பார்த்துக்கலாம் சொல்லிட்டு, இப்ப முடியாதுன்னு எப்படி சொல்வேன்.. எனக்கு ஒரு மரியாதையில்லையா? என் மரியாதை என்ன ஆகறது, நான் பேச்சு மாறுவேனா.. அர்ஜுன் என்னைக்கும் பேச்சு மாறமாட்டான்னு உனக்கு தெரியாதா!”, என்று கத்தினான்.

அதற்குப் பிறகு அக்காவிற்கும் தம்பிக்கும் மிகுந்த வாக்குவாதம்… “நான் என் சொந்தக்காரங்க அப்படி தான் சொல்லி அனுப்புவேன்.. உனக்கு முடியாதுன்னா நீ தான் சொல்லணும்! என்கிட்டே கத்துவியா?”, என்று போனை வைத்து விட..

இருந்த கடுப்பில் அவனின் மாமாவிற்கு அழைத்தவன், “என்ன நினைச்சிட்டு இருக்காங்க உங்க மனைவி, மாத்தி, மாத்தி, பேசறாங்க?”, என்று ஆரம்பித்து அவரிடம் புகார் வாசித்தான்.

“விடு, விடு, அர்ஜுன்! அவளுக்கு இன்னும் விவரம் பத்தாது! நீயே பார்த்து செய்! கொஞ்சம் சிரமப்படுற குடும்பம்.. அந்த பொண்ணு சம்பாதனை வந்தா நல்லாயிருக்கும், ஏதாவது பார்த்து செய்!”, என்று சொல்ல…

நர்மதாவின் முகம் நினைவு வர, செய்ய வேண்டும் போல தோன்றியது… ஆனாலும் எதற்கு செய்ய வேண்டும்.. நாளை ஏதாவது சங்கடம் என்றால் தன்னை கேள்வி கேட்பார்கள் என்றும் தோன்ற, வேண்டாம் என்றும் தோன்றியது. குழம்பினான். “ஆனால் பார்த்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டேனே! இனி பின் வாங்க முடியாது!”

பின்பு கேபினில் போய் அமர்ந்தவன்… அவனுடைய டீமில் இருக்கும் நளினியை அழைத்தான். அவள் அங்கே சற்று சீனியர்.. அவனுடைய டீமில் அவனுக்கு அடுத்து எக்ஸ்பீரியன்ஸ் இருப்பவள்..இந்த மாதிரி தனக்கு தெரிந்த பெண் தங்க பாதுகாப்பாக ஒரு இடம் வேண்டும், ஏதாவது தெரிந்த லேடீஸ் ஹாஸ்டல் இருக்கிறதா என்று கேட்டான்.

இப்போது நளினிக்குத் திருமணமாகி விட்டது, கணவனுடம் வசிக்கிறாள். கணவனும் இங்கே வேறு பிரிவில் பணிபுரிபவனே! அதற்கு முன் இருந்த ஹாஸ்டல் நன்றாக இருக்கும், மிகுந்த சேஃப் என்று சொல்ல… அது அர்ஜுன் வீடு செல்லும் வழியில் தான் இருந்தது.

“போன் செய்து கேளுங்கள்”, என்று சொல்லி.. கேட்டு… இடம் இருந்தது, ஒரு வழியாக பிரச்சனை தீர ஊப்ஸ் என்று பெருமூச்சு விட்டான். “தாங்க்யூ நளினி”, என்று அர்ஜுன் சொல்ல.

“டு டூ சம்திங் ஃபார் யூ, இட்ஸ் மை பிளஷர் அர்ஜுன்.. யாரு இந்தப் பொண்ணு உங்களுக்கு, இவ்வளவு அக்கறையா யாருக்கும் கேட்டது இல்லையே”, என்று கேட்க..

“என்னோட அக்காவுக்கு தெரிஞ்சவங்க! ஸோ பார் மை சிஸ்டர்!”, என்று சொல்லி மேலே ஒரு சொல் வராமல் இருக்கச் செய்தான்.

“ரொம்ப நன்றி தம்பி! எல்லாம் சுளுவா முடிச்சி குடுத்துட்டீங்க”, என்று நர்மதாவின் தந்தை அவனுக்கு வருந்தி வருந்தி நன்றி சொல்லி, பெண்ணை ஹாஸ்டலில் விட அழைத்து சென்றார். 

நர்மதா என்ன சொல்கிறாள் என்று பார்க்க.. அவள் பார்த்தால் தானே! அம்மாவிடமே வளவள என்று பேசிக்கொண்டு இருந்தாள். அவனை கவனிக்கவேயில்லை. “நானானால் இந்தப் பெண்ணிற்காக என் அக்காவுடன் சண்டையிட்டு, பிறகு இவளுக்கு இடம் பார்த்து, வேலையில் தொடர உதவி செய்தால், இவள் நம்மை பார்க்கக் கூட இல்லை”.

“எல்லாம் உன் நேரம் அர்ஜுன், உனக்கு இது தேவையாடா.. கிளம்பு! கிளம்பு! இங்க நின்னா உனக்கு மரியாதையேயில்லை”, என்று நினைத்தவன்.. “அப்போ நான் கிளம்பறேங்க.. இதுக்கு மேல என்னவோ பார்த்துக்கோங்க!”, என்று சொல்லி, அவர் மேலே எதுவும் பேசும் முன் தன்னுடைய காரை நோக்கி விரைந்து விட்டான்.

அம்மாவிடம் பேசி முடித்து திரும்பிய நர்மதா, எங்கே அர்ஜுன் என்று பார்க்க.. அவன் இருந்தால் தானே சென்றிருந்தான்.

நர்மதாவின் அம்மா, “எங்கங்க அந்த தம்பி”, என்று கேட்க…

“அந்த தம்பி சொல்லிக்கிட்டு கிளம்பிடிச்சேம்மா”,

“ஒரு நன்றி சொல்லாம போயிட்டேனே..”, என்று சொன்னவர்… அதன் பிறகு நர்மதாவை ஹாஸ்டலில் விட்டு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவளின் பத்திரத்தை பலமுறை சொல்லி, அவளின் ஆஃபிஸ் பஸ் நிற்குமிடம் தெரியுமா என்று கேட்டு, அதை அங்கிருப்பவர்களிடம் கேட்டு, காட்டிக் கொடுத்து, அங்கே நேரத்திற்கு சென்று விடும்படி, வீணாக அதை விட்டு வேறு எதிலும் அலைய வேண்டாம் என்று சொல்லி, ஒரு வாராக இரவு எட்டு மணிக்கு கிளம்பிச் சென்றனர்.

ஆம்னியில் திரும்பப் போகும்போது மெதுவாக தனது தம்பியிடம் நர்மதாவின் அம்மா, “அந்தத் தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”, என்றார்.

“பெண்ணையோ பையனையோ பெற்றவர்கள் திருமண வயதில் அவர்கள் இருக்கும் பொழுது, அப்படித்தான் தென்படுபவர்களையெல்லாம் பார்ப்பர். அதுவும் அர்ஜுன் யாரையும் கவருவான்.

அந்தக் கேள்வியிலேயே அவரின் எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.

அவரின் தம்பி பொறுமையாக, “நம்ம பொண்ணுகிட்ட குறை எதுவும் கிடையாதுக்கா… அவளைக் கல்யாணம் செஞ்சிக்க யாருன்னாலும் குடுத்து வெச்சிருக்கணும், அழகு, அறிவு, படிப்பு, நல்ல குணம், எல்லாம் இருக்கு! ஆனா கல்யாண சந்தையில இது போதாதுக்கா.. அங்க பணம் தான் முக்கியம்.. அவங்க எதிர்பார்ப்புக்கு நம்ம ஒரு கால் வாசி கூட செய்ய முடியாது.. அதுவுமில்லாம் அவங்க ஆளுங்க, குடும்ப பாரம்பர்யம் இப்படி நிறைய பார்ப்பாங்க, நம்ம அதுல வரமாட்டோம்”, என்றார்.  

பிறகு அதைப் பற்றி யாரும் பேசவில்லை.       

நர்மதாவினது தனி ரூம், இன்னொருவர் கூட இருக்கலாம்.. ஆனால் இன்னம் அதற்கு ஆள் வரவில்லை. தனியாக படுக்க அவளுக்கு பயம்… அதனால் விழிப்பதும் உறங்குவதுமாக இருக்க… காலையில் விழித்த போது மிகவும் சோர்வாக இருந்தது, சற்று நேரமும் ஆகிவிட்டது. அதுவும் அம்மா போனில் அழைத்து எழுப்பினார்.

விரைந்து கிளம்பி, சாப்பிட கூட இல்லாமல், வேகமாக அவளின் ஆஃபிஸ் பஸ் நிற்கும் என்று சொன்ன இடத்திற்கு விரைந்து வந்த போது… அங்கிருந்து சற்று தூரத்திற்கு பஸ் மெதுவாக நகர ஆரம்பித்தது.. அவள் பஸ்சின் பின்னால் இருந்த பெயரை படித்து தன்னுடைய பஸ் தான் என்று கன்ஃபர்ம் செய்யவும், அது பார்க்கப் பார்க்க சென்றே விட்டது.

“அய்யயோ! போயிடுச்சே!”, என்று அவள் தலையில் கை வைத்து நிற்க.. அந்தத் தோற்றம் வெகுவாக அர்ஜுனை ஈர்க்க.. அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான், அவனின் காரில் அமர்ந்தபடி..

ஆம்! கால் மணிநேரத்திற்கு முன்பே வந்து விட்டான். நர்மதா பஸ்ஸில் சரியாக ஏறுகிறாளா இல்லையா என்று பார்க்க… ஆம்! இது அவனுக்கு அவனே சொல்லிக் கொண்ட காரணம்…

அப்படி முறுக்கிக் கொண்டு கிளம்பினான் தான்… இருந்தாலும் காலையில் சரியாக வந்து விட்டான்.

பஸ் போகவும், இவள் வரவும் சரியாக இருக்க, ஐயோ போயிற்றே என்று அவள் தலையில் கை வைத்து, நின்ற விதம் ரசிக்க வைத்தது.

திரும்ப நேரம் பார்த்தவள், ஒரு ஆட்டோவைக் நிறுத்த… அவனிடம் என்ன பேசினாள் என்று தெரியவில்லை… அந்த ஆட்டோ சென்று விட்டது. திரும்ப இன்னொரு ஆட்டோவை நிறுத்தினாள், அதுவும் சென்று விட்டது.

அங்கிருந்து ஒரு இருபது நிமிட பயணம் தான். ஆனால் காலை ட்ராஃபிக்கிற்கு எப்படியும் நாற்பது நிமிடம் ஆகும், அதையும் விட  ஆட்டோவிற்கு நூற்றி ஐம்பது அல்லது அதற்கு மேல் கேட்பார்கள்.

அதன் பிறகு இரண்டு ஆட்டோவை நிறுத்த முயன்றாள், ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை. வாட்சைப் பார்ப்பதும் வரப் போகும் ஆட்டோக்களை பார்ப்பதுமாக நின்றிருக்க..

அவளின் முகத்தில் தவிப்பை பார்த்தவன், கீழே இறங்கி அவளருகில் சென்றான். இவனைப் பார்த்ததும், தெரியாத ஊரில் தெரிந்த முகத்தை பார்த்ததும் அவ்வளவு நிம்மதி. என்ன பேசுவது என்று தெரியாமல், “பஸ் போயிடுச்சு..”, என்றாள்.

“இன்னைக்கும் லேட்டா போனா ராவ் உன்னை உள்ளயே விடமாட்டான்”, என்றான் அர்ஜுன். ராவ் தான் நர்மதாவின் ட்ரைனிங் ஹெட்.

கலவரமாக பார்த்தவள்.. “ஆட்டோல நிறைய பணம் கேட்டான்.. அதனால ரெண்டு ஆட்டோ விட்டுட்டேன்… எவ்வளவுன்னாலும் போயிடறேன்”, என்று சொல்லிக் கிளம்ப யத்தனிக்க… அருகில் வந்தவுடனே அர்ஜுன் வித்யாசத்தை உணர்ந்து விட்டான்.

ஆனால் சரியா என்று தெரியவில்லை… எப்படி சொல்வது என்றும் தெரியவில்லை.

“நான் அங்க தான் போறேன்! என்னோட வர்றியா!”, என்றான்.

நர்மதா, “இல்லை! நான் ஆட்டோல போயிக்கறேன்”, என்று தயங்க..

“யாருன்னே தெரியாது! ஆட்டோக்காரரை நம்பிப் போவ, என்னை நம்பி வரமாட்டியா?”,

“அது உங்களை எனக்கு தெரியாது, தெரியும்னு சொன்னாலும் உங்களுக்கு பிடிக்காது”, என்று சொல்லியே விட்டாள்.

“இரு, இனிமே ஊர்ல இருந்து யார் வந்தாலும் உன்கிட்ட அனுப்பி விடறேன்”,

“ஆங், நான் ஏன் பார்க்கணும்”,

“நான் மட்டும் ஏன் பார்க்கணும்? அதுக்கு தான் போன்ல சண்டை போட்டேன்”, என்றான்.

நர்மதா நம்பாமல் பார்க்க.. “சொன்னா புரியாது கஷ்டம், அனுபவிச்சா தான் தெரியு”,ம் என்று சொல்ல.. நர்மதா அப்போதும் ஏறாமல் நிற்க…. 

சில நொடிகள் உற்றுப் பார்த்தவன்.. “ஏறு முதல்ல கார்ல”, என்று சற்று கடுமையாக சொல்ல… “முடியாது போ!”, என்று சொல்ல வந்தவள், அவனின் பார்வையில் தீவிரத்தில் அதை சொல்ல முடியாமல் தயங்கினாள்.

பிறகு தயங்கி, தயங்கி சில அடிகள் தூரத்தில் இருந்த அவனின் காரிற்கு செல்ல…

அவனே முன் புற கதவைத் திறந்து விடவும், வேறு வழியின்றி ஏறினாள். காரைத் திருப்பி அவளின் ஹாஸ்டல் வழியில் போக…

“எங்க போறீங்க இந்த வழியிலையும் போகலாமா”, என்றாள்.

“உன்னோட ஹாஸ்டல் போறோம்”, என்றான்.

“ஏன்?”, என்று புரியாமல் கேட்க…

“இது தான் உன்னோட டிரஸ்ஸா”, என்றான்.

“ஆமாம்! ஏன் சல்வார் தானே போட்டிருக்கேன், நீட்டா தானே இருக்கு! என்ன?”, என்று குனிந்து தன்னைப் பார்த்தாள், அவளுக்கு அப்போதும் புரியவில்லை.

அவளின் பாவனையில் அர்ஜுன் தான் குழம்பிவிட்டான்… தனக்கு தான் தெரியவில்லையோ என்று.

“உன்னோட துப்பாட்டா எங்கே?”, என்றான்.

“அய்யோ!”, என்று தலையில் கைவைத்தாள்… “ஆம், மறந்து விட்டாள்… கண்டிப்பாக, அந்த உடையில் எதுவும் தெரியவில்லை. ஆனாலும்..”,

முகம் கலங்கி விட்டது… இப்படியே ஆஃபிஸ் சென்றிருந்தாள்…

“எப்பவுமே இப்படிதானா”, என்றும் அர்ஜுன் கேட்க…

அந்தக் கேள்வியில் கண்கள் கலங்கி விட்டது… “இல்லை, இப்படி ஆனதே இல்லை… அவசரம் அதனால கவனிக்கலை… எல்லாம் கைல எடுத்து கிட்டு இதை மேல போடலாம் இருந்தேன்”, என்றாள்.

அர்ஜுனிற்கு கோபம்…  என்ன கவனமின்மை என்று..

அதற்குள் ஹாஸ்டல் வந்திருக்க… “போ! போய் எடுத்துட்டு வா!”, என்று சொல்ல… இறங்கி ஓடினாள்.

“இவளுக்கு எத்தனை தடவை சொல்றது ஓடாதன்னு… இன்னும் இவ என்ன சின்ன பொண்ணா…”, என்று கடுப்பாக வந்தது.

அவள் திரும்ப வந்து ஏறிய பிறகு, வேறு எதுவும் பேசவில்லை… ஆபிஸ் நோக்கி செலுத்த ஆரம்பித்தான். அவள் போகும் போதும், இறங்கி வரும்போதும் அவளின் தோற்றத்தை தான் ஆராய்ந்தான்… குளித்து அப்படியே வந்திருப்பாள் போல… அவளுடைய நீண்ட கூந்தலை அவசரமாக பின்னி, ஒரு ரப்பர் பேன்ட் போட்டிருந்தாள்… நிச்சயம் அது சீராக இல்லை.. முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை, ஒரு சிறு பொட்டு…

இத்தனையிலும் நர்மதாவின் தோற்றம் அவனை ஈர்த்தது… மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.

அந்தோ பரிதாபம்! அதற்குள் ஆஃபிஸ் வந்திருந்தது. முகக்கன்றலுடன் அவள் இறங்க முயல… “ஒன்னும் வித்யாசமா தெரியலை, ஃபீல் பண்ணாத.. என் அக்காவோட தானே வளர்ந்தேன்! அதனால பொண்ணுங்க டிரஸ் நல்லா தெரியும்… நேத்தே சொன்னேன், எதுக்கும் பதட்டப்படாதன்னு… இப்பவும் சொல்றேன்! ஸ்டே கூல்… இந்த மாதிரி ஆகாது… போ!”, என்றான்.

பிறகே சற்று முகம் தெளிந்தாள் நர்மதா.  “தேங்கயூ”, என்றவளைப் பார்த்து..

“நான் உன்கிட்ட இல்லைன்னு நினைச்சேன்”, என்றான்.

“என்னது?”, என்றாள் புரியாமல்,

“நேத்து உங்கப்பா என்கிட்டே ஒரு பத்து நிமிஷம் இந்த தேங்க்ஸ் தான் சொல்லிட்டு இருந்தார்… ஆனா நீ உங்கம்மா கிட்ட பிசியா பேசிட்டு இருந்த… ஸோ இது உன்கிட்ட இல்லைன்னு நினைச்சேன்..”.  

“அது, அது”, என்று தடுமாறினாள்… கண்டிப்பாக தேங்க்ஸ் அவனுக்குத் தேவையில்லை, ஆனால் நர்மதா அவனைப் பார்க்கவேயில்லையே!

“உன்கிட்ட இருக்குன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டேன், ஆனா நீ என்னை பார்க்கலை, அதனால் எனக்கு தெரியலை”, என்றான்.

சுத்தமாக நர்மதா குழம்பினாள். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவேயில்லை.

“எனக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை”, என்று சொல்லி விட..

“நேரமாச்சு போ! அப்புறம் பார்க்கும் போது சொல்றேன்”, எனவும்,

விட்டால் போதும் என்று வேகமாக இறங்க… “அம்மா! தாயே! ஓடிடாத! நடந்து போ!”, எனவும்…

அவனைப் பார்த்து முறைக்கவும் முடியாமல், பதில் பேசவும் முடியாமல்… “ஏண்டி இப்படிப் பண்ற… மாத்தி மாத்தி இவன்கிட்ட வாங்கிக் கட்டிக்கற… ஒரே சொதப்பல் மன்னியாகிட்ட, அதுவும் துப்பட்டா இல்லாம, இடியட், ஸ்டுபிட்”, என்று அவளுக்கு அவளே கலங்கிய மனதை தேற்றிக் கொண்டும் திட்டிக் கொண்டு விரைந்தவள்…

“என்ன நினைச்சிருப்பான் உன்னை பத்தி…”, என்று யோசித்துக் கொண்டே அப்படியே குனிந்து அவளை அவளே பார்த்துக் கொண்டு, “நீட்டா தான் இருக்கு, இந்த டிரஸ் ஒன்னும் லோ கட் இல்லை”, என்று சொல்லிக் கொண்டு,  ஒரு மாதிரியான பதட்டமான மனநிலையில் தான் சென்றாள்.  

அவள் செல்லும் அழகை ரசித்துக் கொண்டு, தன்னையே நர்மதா குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டு செல்வதை, காரை விட்டு இறங்காமல் பார்த்திருந்தவன்.. “ஒன்னும் தெரியலைடி லூசு”, அவனும் மனதிற்குள் பேசியபடி, அவள் சென்ற பிறகு தான் புன்னகையோடு இறங்கினான்.  

Advertisement