Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

                 சில வருடங்களுக்குப் பிறகு

இரவு பதினொன்றை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தூக்கத்தினால் கண்கள் தானாக மூடிய போதும், பிடிவாதமாக கண்களைத் திறந்து வைத்து அமர்ந்து இருந்தாள் நர்மதா.

வீடே உறக்கத்தில் இருந்தது, இந்த வீடு என்பது ஷண்முக சுந்தரம் , கௌரி , அர்ஜுன் நர்மதா தம்பதியினரின் மக்கள் விஷ்ணுவர்தன் , ஸ்ரீ ஜானகி. இருவரும் பாட்டி தாத்தாவோடு உறங்கி இருந்தனர்.

ஐந்து வயதை நெருங்கிக் கொண்டிருந்தனர். செய்யும் குறும்புகள் சொல்லி மாளாது என்ற வகையறாக்குள் வரவே மாட்டர். இருவருமே பொறுப்பின் சிகரங்கள். இப்போதே பெரிய மனிதத் தன்மை இருவரிடமும் தானாக இருக்கும்.

இப்போதும் அப்பா வரவில்லை என்றதும் அம்மா தூங்க மாட்டார் என்றறிந்து விழித்து தான் அமர்ந்து இருந்தனர். அர்ஜுன் ஃபோன் செய்து நான் வந்து விடுவேன் சிறிது நேரத்தில் என்று சொன்னதும் தான் உறங்க சென்றனர்.

அப்படியே ஹாலில் சோபாவில் உறங்கி விட்டாள். அர்ஜுனும் சிறிது நேரத்தில் வந்து விட, நர்மதா அழ்ந்த உறக்கத்தில். மிகுந்த களைப்போடு அர்ஜுன் வந்தாலும் களைபெல்லாம், நர்மதாவின் பூ முகத்தைப் பார்த்தும் மறைந்தது.

உறங்கும் மனைவியை தலையில் இருந்து கால் வரை ரசித்தான். அழகாக உடுத்தி அம்சமாக இருந்தாள். எப்போதும் விட சற்று ஸ்பெஷலாக அலங்கரித்து இருந்தாள். அதுவே சொன்னது தனக்காகப் பார்த்து பார்த்து அலங்கரித்து இருக்கிறாள், நீண்ட நேரம் காத்து இருந்திருக்கிறாள் என்று.

நர்மதாவின் ஒவ்வொரு செய்கையும் அர்ஜுனிற்கு அத்துப்படி.   

“அம்மு” என்றழைத்தான் அவள் விழிக்கவில்லை என்றதும் அப்படியே இரு கைகளால் தூக்கி அவன் ரூம் நோக்கி சென்றான். அப்போதும் உறக்கம் கலையவில்லை. அவளைப் படுக்கையில் விட்டு திரும்ப முயலும் போது உறக்கம் கலைந்தவள், அர்ஜுனைப் பார்த்ததும் அப்படியே இழுத்தாள், இதனை எதிர்பாராத அர்ஜுன் அப்படியே படுக்கையில் விழ, அவனை அணைத்துப் பிடித்து “குட் நைட்” என்று உறங்க முற்பட்டாள்.

“அம்மு பசிக்குது” என்றான் பாவமாக.

“உங்களை யாரு லேட்டா வரச் சொன்னா, டின்னர் டைம் முடிஞ்சு போச்சு! நோ டின்னர்! அப்படியே தூங்குங்க!” என்றவள் அவனை விலக விடாமல் மேலே வேறு ஏறிப் படுத்துக் கொள்ள,

அவஸ்தையாக நெளிந்தவன் “எனக்கு இல்லை அம்மு, உனக்குப் பசிக்கும்” என்றான். ஆம் அர்ஜுன் வராமல் இரவு உணவு உண்ண மாட்டாள் நர்மதா.

“அர்ஜுன் லேட்டா வந்ததால நர்மதாக்கும் சாப்பாடு கட்” என்று சொல்லி கண் திறக்க மாட்டேன் என்பது போல படுத்தே இருந்தாள்.  

“பசிக்கும் எழுந்துரு” என்று அவளை எழுப்பவுதற்குள் ஒரு வழியாகிப் போனான்.

முறைத்துக் கொண்டே எழுந்தவள் போய் சாப்பாட்டு மேஜையில் எதையும் எடுத்து வைக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.   

அவசரமாக ஒரு குளியல் முடித்து வந்தான்.

“உங்களை யாரு இப்ப குளிக்க சொன்னா” என்று சண்டையிட,

அர்ஜுன் பதிலே பேசவில்லை அவளுக்கும் தட்டு எடுத்து தனக்கும் தட்டு எடுத்து அதில் சப்பாத்தியை வைத்து குர்மாவை ஊற்றி “சாப்பிடு” என்றான்.

அதுவரை தெரியாத பசி உணவைப் பார்த்ததும் தெரிய, சாப்பிட துவங்கியவள் அவன் வைத்த மூன்று சப்பாத்திகளை உள்ளே தள்ளியதும் இன்னொன்றை அவளே வைத்துக் கொள்ளப் போக, “போதும்” என்றவன், அங்கே இருந்த ஆப்பிள் பழத்தைக் காட்டி “சாப்பிடு” என்றான்.

“இன்னும் ஒரு சப்பாத்தி சாப்பிட்டுட்டு சாப்பிடறேன், இன்னும் பசிக்குது” என்று சொல்ல,

“ஃபுல்லா சாப்பிட்டா நீ தூங்கிடுவ அம்மு, போதும்!” என்றான் ஒரு சிறு புன்னகையுடன்.

அவன் சொல்லலும் விஷயம் புரிந்து “ஆங்” என்று வாயைத் திறந்தவள், “என்னால எல்லாம் ஒன்னும் முடியாது. எவ்வளவு நேரம் வெயிட் பண்ணறது. எப்பவும் இப்படி லேட் நைட் வந்து டிஸ்டர்ப் பண்றதே வேலை” என்று கடுப்பாகச் சொல்லி எழுந்து போகப் போக,

“யாரு நான் உன்னை டிஸ்டர்ப் பண்றனா” என்று அர்ஜுன் கண்சிமிட்டிக் கேட்க,

அவனை முறைத்து விட்டு பழத்தைக் கூட சாப்பிடாமல் எழுந்து சென்று விட்டாள்.

உடனே அர்ஜுன் பின் எல்லாம் செல்லவில்லை, நிதானமாக உண்டு, அவளுக்காக சப்பாத்தியையும் பழத்தையும் எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் மீதம் இருந்ததை எடுத்து பிரிட்ஜில் வைத்து ரூமின் உள் சென்ற போது, முகம் மட்டும் வெளியே தெரிய முழுவதுமாக போர்த்தி படுத்து இருந்தாள்.

எல்லாம் வைத்து விட்டு லைட் ஆப் செய்து அவளின் அருகில் படுத்து “அம்மு” என்றழைத்தான்.

“அம்மு தூங்கிட்டா”  

“அப்ப இப்ப யாரு பேசறதாம்” என்று கேட்டுக் கொண்டே போர்வையை விலக்க,

“ம், அவளோட பேய்” என்று அவனைப் பார்த்து திரும்பிப் படுத்து முறைத்தாள்.

“நீ பேய் இல்லை, ரத்தக் காட்டேரி, நான் பாட்டுக்கு வந்து தூங்கப் போனவனை மேல ஏறி படுத்து உசுபேத்தி விட்டுட்டு இப்ப நான் டிஸ்டர்ப் பண்றேன்னு சொல்லி தூங்கப் போறியா, உன்னை…..” என்றவன் சில பல வேலைகளை ஆரம்பித்து இருக்க,

“ஒன்னும் வேண்டாம் போ” என்று முறுக்கிக் கொண்டவளை,

“ஒரு மெஷினரி பிக்ஸ் பண்ணினாங்க, அதுதான் லேட்! சாரி!” என்றான்.

கூடவே “நிமிஷத்துல கலைக்கப்போறேன், அதுக்கு எதுக்கு இவ்வளவு டைம் எடுத்து அழகா டிரஸ் பண்ற” என்று விஷமமாக கேட்டவனை பார்த்து முறைக்க முற்பட்டு முடியாமல், அவனின் நெஞ்சினில் முகம் புதைத்து, மேலே பேசி விடாதே என்பது போல அவனின் உதடுகளை விரல்களால் மூட,

விரல்களை விலக்கியவன், “இதுல மூடக் கூடாது அம்மு” என்றவனை நிமிர்ந்து பார்க்க, பார்த்த கண்களுக்கு கீழே இருந்த உதடுகளை வருடியவன், “இதுல மூடணும்” என்று சொல்லும் போதே நர்மதாவின் சிப்பி இமைகள் அர்ஜுன் தன்னுள் தேடப் போகும் தேடுதலை எதிர்பார்த்து மூடத் துவங்க, அதன் பின் பேச்சற்ற மௌனங்கள்.   

காலையில் நர்மதா விழித்த போது அர்ஜுன் ஆழ்ந்த உறக்கத்தில், எழாமல் அவனையே பார்த்து இருந்தாள். பிறகு கட்டுப் படுத்த முடியாமல் தானாக அவனின் இதழ்களில் இதழொற்றி எழுந்தவள், முகம் திருத்தி வெளியே போக,

ஆறு மணி தான் ஆகியிருந்தது, அதற்குள் மக்கள் இருவரும் அவளின் வரவை எதிர்பார்த்து சோபாவில் அமர்ந்து இருந்தனர். கௌரி பக்கத்தில் கோபமாக அமர்ந்து இருந்தார்.

இது தினமும் நடக்கும் கூத்து தான்.

அவளைப் பார்த்தும் பொரிய ஆரம்பித்தார் “அஞ்சு மணிக்கே ரெண்டு பேரும் எழுந்துகிட்டாங்க, பால் விடறேன்னு சொன்னா அம்மா வரட்டும்னு ரெண்டும் உட்கார்ந்து இருக்குது, நாளையில இருந்து என்கூட படுக்க வேண்டாம், உன் கூடவே படுக்க வெச்சிக்கோ” என்று சொல்லி ஷண்முக சுந்தரம் வராண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டு அமர்ந்து இருக்க, அவரோடு போய் அமர்ந்து கொண்டார்.

“என்ன கூடப் படுக்க வைக்க மாட்டியா” என்ற ஷண்முக சுந்தரத்தைப் பார்த்து,

“நாளைக்கு தான் படுக்க வைக்க மாட்டேன்னு சொன்னேன், தினமும் நாளை வரும்” என்று சொல்ல இருவருக்குமே புன்னகை.

“எழுந்தவுடனே அம்மாவை எழுப்பணும் சொல்லி இருக்கேன் தானே” என்றாள் மக்களிடம்.

“அப்பா தான் அம்மா தூங்கும் போது எழுப்பக் கூடாது சொல்லியிருக்காங்க” என்று ஸ்ரீ ஜானகி என்ற ஸ்ரீஜா கொஞ்சல் மொழி பேச,

எபோதோ அர்ஜுன் அவளுக்கு உடம்பு சரியில்லாத போது சொன்னதை அப்படியே கடை பிடித்தனர்.  

“அப்பா சொன்னா சொல்லிட்டு போறார். நீ எழுப்பணும் கன்னுக்குட்டி” என்று அவளை வாரி எடுத்து உச்சி முகர்ந்தவள், விஷ்ணுவைப் பார்த்தாள், அவளின் பார்வைக்காக காத்து இருந்தவன், அருகில் இருந்த சேர் மேல் ஏறி நிற்க, அவனை இன்னொரு கையில் தூக்கிக் கொண்டாள்.

இருவரையும் தூக்கி சமையலறை சென்று அங்கிருந்த சமையல் மேடை மேல் அமர்த்தி காய்ச்சி வைத்திருந்த பாலை இருவருக்கும் கலக்கினாள். பிறகு ஷண்முக சுந்தரத்திற்கும் கௌரிக்கும் கலக்கினாள். பிள்ளைகள் சாப்பிடாமல் அவர்கள் சாப்பிட்டு இருக்க மாட்டர்கள் என்று தெரிந்தவளாக.

பின்பு பிள்ளைகள் இருவரையும் தூக்கி தாத்தா பாட்டியிடம் வந்தவள் அவர்களை அங்கே அமர்த்தி நால்வருக்கும் கலக்கியதை கொடுத்தாள்.

நால்வரும் குடித்து முடித்தவுடன், டம்ளர்களை எடுக்கப் போக, “அம்மா நானு….” என்று ஆளுக்கு ஒன்றாக விஷ்ணுவும் ஸ்ரீஜாவும் தூக்கிக் கொண்டு ஓடினர்.

“ஓடாதீங்க விழுந்துடப் போறீங்க” என்று சொல்லியபடி நர்மதாவும் பின்னால் ஓடினாள்.

அவள் ஓடி உள்ளே வரவும் அர்ஜுன் எழுந்து வரவும் சரியாக இருந்தது. மக்கள் இருவரும் சமையலறை நோக்கி சென்று இருந்தனர்.

ஓடி வந்த இவளைப் பார்த்தவன் “இப்படி ஓடாதன்னு எத்தனை தடவை சொல்றது” என்று அவளை ரசனையாகப் பார்த்தபடி சொல்ல,

“பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முனுமுனுத்தபடி சென்றாள், அதற்குள் பிள்ளைகள் வர, இருவரையும் வாரி இருகைகளிலும் தூக்கியவன் அவர்களை கொஞ்சத் துவங்கினான்.

அதன் பிறகு கணவனுக்கும் மனைவிக்கும் குழந்தைகளிடமே நேரம் சரியாக இருந்தது.

ஆளுக்கு ஒருவராக குளிக்க வைத்து கதை பேசியபடி அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி, யுனிபார்ம் அணிவித்தனர்.

டிரைவர் காருடன் தயாராக நிற்க, அர்ஜுன் டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான். விஷ்ணுவும் ஸ்ரீஜாவும் முன் அப்பாவுடன் அமர்ந்து கொண்டு கேள்வி கேட்டுக் கொண்டே வர, பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தான், பின்னால் டிரைவர் அமர்ந்து இருந்தார். ஒரு இருபது நிமிட பயணம்.

பிள்ளைகளை ஸ்கூல் வாயிலில் விட்டவன், “விஷ்ணு, நேத்து சொல்லிக் கொடுத்ததையே இன்னைக்கு ஏன் சொல்லிக் கொடுக்கறீங்கன்னு உங்க மேம் கிட்ட கேட்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரு டைம்ல ஞாபகம் வைக்க முடியாது அதனால ரிபீட் பண்ணுவாங்க” என்று மகனுக்கு புரிய வைத்தான்.

ஓரே நாளில் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வான் விஷ்ணு, மற்ற பிள்ளைகளுக்காக டீச்சர் அடுத்த நாளும் அந்த ரைம்ஸ் மறு முறை சொல்லிக் கொடுத்தால்,

“how many times you will repeat the same thing mam” என்று சொல்லிக் கொடுப்பவரிடம் கேள்வி கேட்பான்.

“ஸ்ரீஜா, அவனைக் கேள்வி கேட்காம பார்த்துக்கோ” என்று மகளிடமும் சொல்லி விட்டு சென்றான்.

இருவரும் சமர்த்தாக தலையாட்டி சென்றனர். ஆனாலும் சொல் பேச்சுக் கேட்க மாட்டார்கள் அவர்களுக்கு தோன்றியதை தான் செய்வார்கள். அப்படியே அம்மாவைப் போல என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறினான்.

இப்போது டிரைவர் வண்டிய ஓட்ட அவன் பின் அமர்ந்து அன்று செய்ய வேண்டிய வேலைகளை யோசித்து வரிசை படுத்தியபடி வந்தான்.

வீட்டின் உள் வந்தால் ஷண்முக சுந்தரம் கிளம்பிக் கொண்டு இருந்தார்.. அவர் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார், இவன் பத்து மணி போல மெதுவாக போவான்.

அவரைப் பார்த்ததும் “நான் வொர்கர்ஸ் கிட்ட இதை ஃபாலோ பண்ணுங்க சொன்னா நீங்க ஏன்பா வேண்டாம் சொல்றீங்க” என்று தந்தையிடம் ஏதோ தொழில் விஷயமாக வாக்குவாதம் செய்தான்.

சத்தம் கேட்டு வெளியே வந்தாள் நர்மதா.

“அது சரி வராதுன்னு சொன்னேன். அதுல என்ன?” என்று அவரும் பதிலுக்கு சத்தமிட,

“செய்யறதுக்கு முன்னயே வரும் வராதுன்னு எப்படி தெரியும்” என்று மீண்டும் அவன் சத்தமிட

சில சீரியஸ் வாக்குவாதங்கள் கௌரி எப்போதும் போல பயந்து பார்த்து நிற்க,

நர்மதா தான் நடுவில் சென்றாள், “கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று அர்ஜுனை அதட்டியவள்,

ஷண்முக சுந்தரத்திடம் “அப்பா! நீங்க சொல்றதும் சரி! இவர் சொல்றதும் சரி! ரெண்டு மாதிரியும் பண்ணலாம், நீங்க சொல்ற மாதிரி தான் பண்ணனும்னா, நீங்க இவர் கிட்ட சொல்லி அந்த மாதிரி செய்ங்கன்னு சொல்லுங்க!”

“அதை விட்டுட்டு இவர் ஒரு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திருக்க, அதை மாத்தி செய்ங்க நீங்க வொர்கர்ஸ் கிட்ட சொன்னா என்ன அட்மினிஸ்ட்ரேஷன்.  எப்பவும் ஒரு வாய்ஸ் தான் இருக்கணும், ஒன்னு நீங்க சொல்லுங்க, இல்லை இவர் சொல்லட்டும்” என்றாள்.

அர்ஜுன் தான் அதை சொல்லுமாறு பணித்திருந்தான். தான் சொன்னால் கேட்க மாட்டார், நர்மதா சொன்னால் சற்று கேட்டுக் கொள்வார் என்று சொல்ல செய்தான்.   

தான் செய்யும் தவறு சற்று புரிய “ம், சரி” என்றபடி ஷண்முக சுந்தரம் சென்றார்.

அவர் நகர்ந்ததும் ஆசுவாசப் பெருமூச்சு விட்ட கௌரி “அவர் அப்படித்தான் எத்தனை தடவை சொன்னாலும் அவர் மாறமாட்டார்” என்றார் சமாதானமாக,

“அவர் மாறலைன்னாலும் பரவாயில்லைம்மா ஆனா நாம் சொல்லாம இருக்கக் கூடாது” என்றாள் நர்மதா.

ஆம்! இப்போது இன்னும் பல தொழில்கள். அப்பா மகன் இருவருமே பிசி, நீங்கள் இதை பாருங்கள் நான் இதை பார்க்கிறேன் என்று வேலைகளைப் பிரித்துக் கொண்டாலும் சில சமயங்களில் இப்படி பிரச்சனைகள் வந்து விடும்.

நர்மதாவும் காலை வேளைகளில் செல்வாள் எங்கு வேண்டுமானாலும், மேற்பார்வை மட்டும்.  

ஒரு ரைஸ் மில்லை நர்மதாவின் பெயரில் வாங்கி அதன் பொறுப்பை நர்மதாவின் தந்தையிடம் விட்டிருந்தான். அதனால் நர்மதாவின் வீட்டினர் வாழ்வும் செல்வ செழிப்பாக மாறியிருந்தது.

அர்ஜுன் நேரமாகி விட்டது என்று தயராக சென்று குளித்து வரும் போது கண்ணாடி முன் நின்று நர்மதா தலை வாரிக் கொண்டிருக்க,

வேகமாக சென்று ரூமின் கதவை தாளிட்டு வந்தான்.

அவன் வந்த வேகத்திற்கு “என்ன” என்றாள்,

அவளைப் பின்னிருந்து அணைத்து அவளின் ஈரக் கூந்தலில் முகம்’ புதைத்தவன், அதை வாசம் பிடித்துக் கொண்டே “ஒரு பஞ்சாயத்து இருக்கு” என்றான்.  

“என்ன பஞ்சாயத்து” என்று கேட்கும் போதே கணவனின் அணைப்பில் குரல் கொஞ்சியது.  

“பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை சொன்னியே, வேற எதுல குறைச்சல்” என்றான் அணைப்பை இன்னும் இறுக்கி.

“அதெல்லாம் சொல்ல முடியாது”

“சொல்லணும்”

“சொல்ல முடியாது”

“அப்போ எவ்வளவு நேரம் ஆனாலும் இப்படித் தான் நிற்கணும் விடமாட்டேன்”, என்று அழிச்சாட்டியம் செய்தான்.

“ம், பின்ன சும்மா பார்த்தா மட்டும் போதுமா, நான் மட்டும் உங்களை இழுத்துக் கீழ தள்ளி மேல ஏறிப் படுக்கலைன்னா நல்லா சாப்பிட்டு தூங்கியிருப்பீங்க” என்று கிண்டல் செய்ய,

இப்போது அவசரமாக அவளின் இதழ்களை மேலே பேசாதே என்பது போல விரல்களால் மூடியவன், கண்ணாடி தெரிந்த நர்மதாவின் முகத்தை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தவன்,

“அது ரொம்ப டையர்ட் ஆகிடறேன் வரும் போது”  என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் அவளின் முறைப்பை பார்த்து நிறுத்தினான், “என்னை படுத்தி எடுத்துட்டு நீங்க டயர்டா” என்று இன்னும் நக்கலாக கண்களின் வழியாக நர்மதா செய்தி சொல்ல, 

“நீ எனக்கு பல்ப் கொடுக்கறதை நிறுத்தவே மாட்டியா” என்று  பாவமாக கேட்க, நர்மதாவின் முகத்தில் அப்படி ஒரு மலர்ந்த சிரிப்பு.

அதைப் பார்த்தவனுக்கும் சிரிப்பு தொற்ற “ஐ லவ் யு டி அம்மு” என்று அணைப்பை இறுக்கினான்.

“இதை மனப்பாடம் பண்றதை நீங்க எப்ப விடுவீங்க” என்று கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைப் பார்த்தே நர்மதா கேட்க,  

“இந்த ஜென்மம் முடியும் போது” என்று சொல்ல வந்தவன் அதை சொன்னால் “என்ன அபசகுனமான பேச்சு இது” என்று வாய் மேல் அடி வைப்பாள் என்று தெரியும். அதனால் விடமாட்டேன் என்பது போல தலையை மட்டும் அசைத்தான். 

கண்ணாடியில் தெரிந்த அவனின் தலை அசைப்பை பார்த்தவள், அந்த முகத்தை கண்களால் பார்க்க விரும்பி திரும்ப,

“மனப்பாடம் பண்ணினது மறந்து போச்சு நீ சொல்லிக்குடு” என்றான் நர்மதாவின் வாய் மொழியாக அந்த வார்த்தைகளை வாங்க விரும்பி,

அனால் அவளாவுது சொல்வதாவது “என் முகத்தை பார்த்துட்டே இருங்க மறந்து போனது ஞாபகம் வரும்” என்று ஒரு தியரி பேச

“உன் முகத்தை பார்த்தா பார்த்துட்டு மட்டும் இருக்க முடியாது அம்மு” என்று சொல்லி அவள் இதழ் நோக்கி குனியும் முன்னே

அர்ஜுனின் கன்னத்தில் இதழ் பத்திதவள், “சீக்கிரம் வாங்க டைம் ஆகுது” என்று சொல்லி வெளிய  விரைந்து விட. முகம் முழுவதும் புன்னகையோடு தயாராக ஆரம்பித்தான் அர்ஜுன். 

              நிறைவுற்றது.  

 

 

Advertisement