Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு:

அர்ஜுனின் அணைப்பில் இருந்து அவளாக விலகியவள், “இப்ப செலக்ட் பண்ணுங்க. நான் என்ன புடவை கட்டட்டும்” என்றாள் குரலில் ஒரு குதூகலத்தோடு.

அர்ஜுன் அவளையே விழியெடுக்காமல் பார்த்து நிற்க, “செலக்ட் பண்ணுங்க, சீக்கிரம், சீக்கிரம்” என்று அதட்டினாள்.  

“ம், புடவை செலக்ட் பண்ணவா அங்க இருந்து ஓடி வந்தேன்”

“ஏன்? ப்ளைட்ல ஏத்த மாட்டேன் சொல்லிடாங்களா”

“ஆமாம்” என்பது போல தலையாட்டினான்.

“யாரு அது மிஸ்டர் நர்மதாவை பிளைட்ல ஏத்த மாட்டேன் சொன்னது” என்று இடுப்பில் கை வைத்துக் கேட்க,

“ஹா, ஹா” என்று சிரித்தான். “என்ன மிஸ்டர் நர்மதாவா” என்று இன்னமும் பெரிதாக சிரித்தான்.

ரசனையோடு அதைப் பார்த்தபடி நர்மதா நின்றவள், “நான் மிசஸ் அர்ஜுன்னா நீங்க மிஸ்டர் நர்மதா தானே” என்று கேள்வி கேட்டாள்.   

“எஸ், எஸ், நான் மிசஸ் அர்ஜுன் எனக்காக காத்துட்டு இருக்கா, டிக்கெட் இல்லைன்னா கூட பரவாயில்லை, என்னை வித் அவுட்லயாவது ஏத்திட்டு போங்க கேட்டேன்”

“யாரது உங்களுக்காக வெயிட் பண்ணினது, நான் ஒன்னும் காத்துட்டு இருக்கலை” என்று முகத்தை சுழித்தபடி சொன்னாள்.

அதற்கு பதில் சொல்லாதவன், “எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும், இவ்வளவு குறும்பா” என்றான்.

“அச்சச்சோ இன்னொன்னை என்ன பண்ண”

“நீ சொல்ல மாட்டியா உங்களை மாதிரி ஒரு பையன் வேணும்னு”

“ம்கூம், சொல்ல மாட்டேன்! நீங்க, நீங்க தான்! எனக்கு நீங்க தான் வேணும்! என் பையன் அவனை மாதிரி இருக்கட்டும். ஏன் நம்மளை மாதிரி இருக்கணும்” என்றாள் ஒரு சிறு புன்னகையுடன்.

அவ்வளவு சிரமப்பட்டு வந்தது எல்லாம் அவளின் புன்னகையில் மறைந்து  போனது.  

புன்னகைத்த உதடுகளை களவாட மனம் தவிக்க, அருகில் நெருங்கியவனை “ம்ம்ம், கோவிலுக்கு போகணும், நீங்களும் போய் குளிச்சிட்டு வாங்க” என்று துரத்தினாள்.

சலித்துக் கொண்டான் என்றாலும் மீறாமல் சென்றான். குளித்து வந்த போது புடவையில் அழகாய் தயாராகி நின்றவளை அள்ளி அணைக்க கைகள் துடித்தன.

அவனின் பார்வையை உணர்ந்தவள், “ஊர்ல இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க” என்ற கேள்வியை முன் வைக்க, என்னுடைய பார்வை வித்தியாசங்கள் கூட இவளுக்கு தெரிகிறதா என்று மனதினில் ஓடினாலும் பார்வையை மாற்றவில்லை.

“கோவிலுக்குப் போகணும்” என்றவளைப் பார்த்து, “இப்படி அழகா முன்னாடி நின்னு கோவிலுக்குப் போகணும்னு சொன்னா, நான் என்ன பண்ண?”

“நான் வெளில இருக்கேன் வாங்க” என்று புன்னகைத்து சொல்லி சென்றவளுக்கு ஏனோ குறைவாய் இருந்தது எல்லாம் நிறைவாய் தோன்றியது.

வேகமாக தயாராகி சென்றான்.   கௌரி மூலமாக அர்ஜுன் வந்த செய்தியறிந்து ஷண்முக சுந்தரம் வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்து வந்துவிட்டார் என்னவோ ஏதோவென்று.

“என்ன தம்பி? சொல்லாம கொள்ளாம வந்து நிக்கற!” என்று வாய் மொழியாகக் கேட்க, அந்த கேள்வியை கண்களில் தாங்கி கௌரி நின்றார்.

“ஏன்பா வரக் கூடாதா”

“நீ என்ன பக்கத்து ஊர்ல இருந்தா வந்திருக்க, பக்கத்து தேசம் கூட இல்லடா! அது ஒரு கோடி, நாம் ஒரு கோடி, நீ ரெண்டு நாளா போன் பண்ணலைன்னு நேத்துல இருந்து உங்கம்மா சரியாத் தூங்கக் கூட இல்லை. அதனால தான் அம்மா வீட்ல இருந்த நர்மதாவைக் கூட அவசரமா வரச் சொல்லிப் பூஜைக்கு குடுத்திருக்கா, வர்றேன்னா ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா. என்ன இது விளையாட்டுத்தனம்?”

“வந்துட்டேன்! இப்ப என்ன பண்ணட்டும்! அப்படியே போகட்டுமா?”

“திரும்ப விளையாடுத்தனமா பேசாத, இனிமே இப்படி செய்யாத,  சதா சர்வ காலமும் உன்னையே நினைச்சிக்கிட்டு இங்க மூணு பேர் இருக்கோம்” என்று கோபப்பட்டார்.

“விடுங்க” என்று கௌரி சொன்ன பிறகு தான் சற்று தணிந்தார்.

“நீங்களே போங்க, நான் எங்கயும் வரலை” என்று அர்ஜுனும் முறுக்கிக் கொண்டு ரூமிற்குள் போக முற்பட,

“அர்ஜுன்” என்று அம்மா அதட்ட கிளம்பினான். எல்லாவற்றையும்  சுவாரசியமாக சில்லென்ற மனநிலையில் ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா.

கோவிலுக்குச் சென்று குடும்ப சகிதமாக கடவுளை வணங்கி அங்கே அமர்ந்தனர். நேரத்தை பார்த்த ஷண்முக சுந்தரம், “நீங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு கார் வரச் சொல்லி வீட்டுக்கு கிளம்புங்க, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு” என்று கிளம்பினார்.

“நம்ம வீட்டு வழியா போனா என்னை விட்டுட்டு போங்க” என்று கௌரியும் எழுந்தார்.

“அப்போ நம்மளும் போகலாம்” என்று நர்மதா சட்டென்று எழ,

அவளைக் கடிந்தான், “இப்படி தான் சடார்ன்னு எழுந்துக்குவியா, மெதுவா எழணும்”  

அதைப் பார்த்த கெளரிக்கும் ஷண்முக சுந்தரத்திற்கும் புன்னகை. 

அதைப் பார்த்த நர்மதா, “யு எஸ் ல இருந்து இதையெல்லாம் எப்படி சொல்வீங்கலாம்” என்று கேட்க,

“கேட்கறதுக்கு பதில் சொல்லுடா” என்று அப்பா அதட்டினார்.   

இரண்டு பேருக்கும் பதில் சொல்லாமல், “அம்மா நீங்க போய் கார் அனுப்புங்க, நாங்க வர்றோம்” என்றான் இடத்தை விட்டு அசையாமல்.

“லேட் பண்ணாதாடா இந்த மாதிரி நேரத்துல வெளில சுத்தக் கூடாது”.

“எங்கயும் போகலைம்மா, இவ வீட்டுக்குப் போயிட்டு வந்துடறோம்”

நர்மதா நின்று கொண்டே இருக்க, “உட்காரு அம்மு”

அருகில் அமர்ந்தவள், “எப்படி லீவ் கிடைச்சது”,

“எமெர்ஜென்சி போகணும், லீவ் குடுத்தா ஓகே! இல்லைன்னா ரிசைன் பண்றேன்னு சொன்னேன்! குடுத்துட்டான்!, அவன் டிக்கெட் செலவு பண்ற மாதிரி இருந்தா தான் ரொம்ப யோசிப்பான்! நம்ம காசு தானே, அவனுக்கு என்ன குடுத்துட்டான்”

“டிக்கெட் எப்படிக் கிடைச்சது உடனே”,

“மணி, அம்மு, மணி , அதே எமெர்ஜென்சி சொல்லி ஒரு ஏஜன்ட் மூலமா லண்டன் போய், அங்க இருந்து பாம்பே வந்து, அங்க இருந்து கோவை வந்து வந்தேன். டைரக்ட் பிளைட் கிடைக்கலை. அதான் லேட்! இல்லைன்னா நேத்தே வந்திருப்பேன்”.

“நீ ட்வின்ஸ் சொன்ன அன்னைகே ப்ளான் பண்ணிட்டேன்”

“அப்போ ட்வின்ஸ் பார்க்கத்தான் வந்தீங்களா? என்னைப் பார்க்க வரலையா?” என்று முகம் சுருக்கினாள்.

“அவங்க உனக்குள்ள தான் இருக்காங்க அம்மு”

“ஆனா அது சொன்னதுக்கு அப்புறம் தானே வந்திங்க. அப்போ அவங்களைப் பார்க்கத்தானே வந்திங்க” என்று குழந்தைத் தனமாக சண்டையிட்டாள்.

“அது சொன்னதுக்கு அப்புறம் வரலை, அவங்கம்மா எப்போ வர்றிங்கன்னு கேட்டா, அதுக்கு அப்புறம் தான் வந்தேன். கேட்டது ஞாபகம் இருக்கா”

“நான் கேட்டேனா, எப்போ?” என்று சொல்ல வந்தவள், அவனின் ஊடுருவும் பார்வையில், 

“ஆமாம்! ஆமாம்! கேட்டேன்! கேட்டேன்! கேட்டேன்! போதும்மா! அதனால தான் வந்திங்க! இப்ப ஓகே வா!” என்றாள்.

அப்போதும் பார்வை மாற்றாமல் நர்மதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் என்ன?” என்றவளிடம்,

“உன் கண்ணெல்லாம் ஏன் இப்படி இருக்கு”

“எப்படி இருக்கு?”

கண்ணுக்கு கீழ லேசா கருப்பு வளையம், ஆம், சரியான உறக்கம் இல்லாததால் கண்கள் அப்படித்தான் இருந்தன, அவளின் வெண்மையான மென்மையான சருமத்திற்கு நன்கு தெரிந்தது.  

நர்மதாவுமே கவனித்து இருந்தாள். அதனால் அவளால் உடனே பதில் சொல்ல முடிந்தது. “அது சரியா தூங்காததுனால இருக்கும், தனியா தூங்க பயம். எப்பவும் எழுந்து எழுந்து பார்த்துட்டு தூங்குவேன். இப்ப கெளரிம்மா கூடப் படுக்கறாங்க. அதனாலா இந்த ஒரு வாரமா நல்லா தூங்கறேன், அது போயிடும்”.

அப்போதும் அர்ஜுன் கவலையாக பார்க்க, “போயிடும்” என்று சிரித்தாள்.

அதற்குள் கார் வந்திருக்க, அவளின் அம்மா வீடு சென்றனர்.

அர்ஜுனை பார்த்ததும் நர்மதாவின் அம்மாவிற்கு கண்களில் நீரே வந்து விட்டது.

“மா, ஏன் அழற?” என்று நர்மதா பதற,

“ஒன்னுமில்லை உங்களை ஜோடியா பார்த்தும் சந்தோஷம், அதுதான்”

“அதுங்க தம்பி, ஆனந்தக் கண்ணீர்” என்று நர்மதாவின் அப்பாவும் புன்னகையோடு சொல்ல,

“இல்லைப்பா இது அர்ஜுன் கண்ணீர்” என்று நர்மதா சொல்லியவள், “நீங்க அழற மாதிரி இருக்கீங்க போல” என்று கிண்டல் செய்தாள்.  

“அக்கா,  உன் மொக்கை ஜோக்ஸ் எல்லாம் நீ விட்டுட்டன்னு நினைச்சேன், நாலு நாளா நீ சொல்லவேயில்லை, இப்ப மட்டும் எப்படி வருது” என்று தம்பி கேட்க,

“அதெல்லாம் தானா வரணும்! யாராவது வரவைப்பாங்களா”

“அப்போ இங்க இருந்த நாலு நாளா உனக்கு ஏன் வரலை, எனக்கு மட்டும் எப்பவுமே ஏன் வரமாட்டேங்குது” என்று அதி முக்கியமான கேள்வியை அவளின் தம்பி கேட்டான்.

என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அர்ஜுன் பார்க்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முதல் முறையாக முழித்தாள்.

தான் அருகில் இல்லாதது அவளின் இயல்பை பாதித்து இருக்கிறது என்பது அர்ஜுனின் மனதை ஆகர்ஷித்தது.

அதற்குள் அவளின் அம்மா பரபரப்பாக சமைக்கப்போக,

“இன்னொரு நாள் வர்றோம் அத்தை, அம்மா ரொம்ப நேரம் கழிச்சு வரவேண்டாம் சொல்லியிருக்காங்க, உங்களைப் பார்க்கத் தான் வந்தோம்” என்று உடனே கிளம்பி விட்டான்.

வீடு சென்றால் வாசலிலேயே நின்றிருந்தார் கௌரி, எங்கே இன்னம் காணோம் என்பது போல, “கர்ப்பமா இருக்கா. இந்த நேரம் எல்லாம் வெளில இருக்காதீங்க. எனக்கு டென்ஷனா இருக்கு, நேரம் கழிச்சு இவ சாப்பிடக் கூடாது, வா, வா” என்றழைத்துப் போய் இருவரையும் உண்ண வைத்து தான் விட்டார்.

“நீங்க சாப்பிடலை மா”,

“அப்பா இன்னும் வரலைடா”

“எப்பவும் எட்டு மணிக்கே வந்துடுவாறே”,

“இப்பல்லாம் ஆறு மாசமா நேரம் கழிச்சு தான் வர்றார். புதுசா அதை ஆரம்பிக்கணும், இதை ஆரம்பிக்கணும்னு, ரொம்ப ஆர்வக் கோளாறு ஆகிடுச்சு! அதுவும் இப்ப குழந்தைங்க விஷயம் தெரிஞ்சதுல இருந்து, உனக்கு சேர்த்தது போய், உன் பசங்களுக்கு சேர்க்கறராம். என்ன சொல்ல?, போடா சலிப்பா இருக்கு கொஞ்ச நேரம் கூட அமைதியா உட்கார மாட்டேங்கறார். உடம்பைக் கேடுதுக்குவாரோன்னு பயமா இருக்கு”

அம்மாவின் குரலில் ஒரு வருத்தம், இயலாமை, கவலை என்று அத்தனையும் இருந்தது. ஒரு வார்த்தை என்ன என்று கேட்டாலும் அழுதுவிடுவார் என்று தோன்றியது. 

இங்கே வருவோமா வேண்டாமா என்று ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருந்த மனம் அதன் ஆட்டத்தை நிறுத்தி ஒரு முடிவிற்கு வந்தது. அப்பா வருவதற்காக அர்ஜுன் அமர்ந்தான்.

“நான் இருக்கேன்ல, நீ போ, ஜர்னி டயர்ட் நெஸ் இருக்கும் போ” என்று அவர்களை அனுப்பினார்.

அர்ஜுனிற்கும் மிகுந்த களைப்பு, நாளை பேசிக்கொள்ளலாம் என்று வந்து படுத்துக் கொண்டான்.

நர்மதாவும் படுக்க, எதுவும் பேசத் தோன்றவில்லை அர்ஜுனிற்கு, மனம் அமைதியாக விஷயங்களை கிரகிக்க முற்பட்டாலும். சில நிமிடங்களில் எல்லாம் உறக்கம் தழுவியது.

நேர மாற்றம் காரணமாக நடு இரவில் உறக்கம் கலைந்தது. ஆனால் அவனால் அசையக் கூட முடியவில்லை. நர்மதா அவன் மேலேறி படுத்துக் கொண்டிருந்தாள்.

அருகில் படுத்தால் கூட உறக்கம் வராது என்று சொன்னவள்,

முழித்துக் கொண்டிருக்கிறாளா என்று பார்க்க நினைத்தான் முடியவில்லை. அவனின் நெஞ்சோடு இறுகக் கட்டிக் கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைத்து இருந்தாள். அதனால் அவனுக்கு முகம் தெரியில்லை.

நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என்று சில நொடிகளில் உணர்ந்தான்.    

அவனைப் போல மிஸ் யு என்ற வார்த்தை சொல்லவில்லை, உங்க நினைப்பாவே இருக்கு என்ற வார்த்தையை சொல்லவில்லை, உன்னை பிடித்திருக்கிறது என்ற வார்த்தையை சொல்லவில்லை, உன்னை காதலிக்கிறேன் என்பது போலவும் சொல்லவில்லை,

சொல்லத்தான் இல்லை, ஆனால் இதெல்லாம் அவளுக்குள் அவனுக்காக இருக்கின்றன என்று புரிந்தது,

இருந்த இரண்டு நாட்கள் இரவும், பெண்கள் ஏன் அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று ஆயிரம் கேள்விகள் கேட்டு சண்டை வளர்த்தாலும், அவனுக்காக சற்றும் யோசிக்காமல் வேலையை விட்டாள்.

அவனில்லாத போதும் அவனின் பெற்றோருடன் தான் இருந்தாள். அவன் அப்பா உழைப்பதற்காக இவனிடம் சண்டையிட்டாள், ஏன் அவரை சிரமப்படுத்துகிறாய் என்று.

நினைக்க நினைக்க காதல் இன்னமும் பெருகியது. ஆதரவாக அவன் அணைத்துப் பிடிக்க, அனிச்சை செயலாக தூக்கத்திலேயே இன்னமும் இறுகக்கட்டிக் கொண்டாள். திரும்ப இறுக்கிக் கொள்ள வேண்டும் என்று கைகள் பரபரத்தாலும் அவளின் உறக்கம் கலைந்துவிடும் விடும் என்று முயன்று கட்டுப்படுத்திக் கொண்டான்.     

ஆடாது அசங்காது அப்படியே இருந்தான். பின்பு அவனையறியாமல் உறங்கி விட்டான்.

காலையில் கண்விழித்த போதும் அவள் துயில் கலையவில்லை. என்ன ஒரு மாற்றம் மேலே படுத்திருந்தவள், இப்போது அருகில் அவனை அணைத்துப் பிடித்து படுத்து இருந்தாள்.

சில நிமிடங்கள் பூரணமாக அதை அனுபவித்தவன், பின்பு அவள் உறக்கம் கலைந்துவிடாமல் விலகி எழுந்தான். கண்டிப்பாக அர்ஜுன் எப்போது எழுந்து வருவான் என்று அம்மாவும் அப்பாவும் பார்த்துக் கொண்டே இருப்பர் என்று தெரியும்.

வெளியே சென்றால் சோபாவில் இவனுக்காக காத்து இருந்தனர்.

“என்னடா இப்படி திடுதிப்புன்னு வந்துட்ட ஏதும் பிரச்சனையா” என்றார் ஷண்முக சுந்தரம்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லைப்பா, பார்க்கணும் போல இருந்தது வந்துட்டேன்”

“யாரை நர்மதாவையா”

“ஆமாம்” என்பது போல தலையாட்டியவன், “ட்வின்ஸ்ன்னு சொன்னதுல இருந்து கொஞ்சம் பயந்து இருக்கா, அதுதான் வந்த்துட்டேன்”.

“எத்தனை நாள் லீவ்?”

“ஒரு வாரம்”

“என்ன” என்றவர், திடீரென்று டென்ஷனாகி கோபமாக சத்தமிட துவங்கினார். “போடா, உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா? அப்பா பேச்சை தான் கேட்கறது இல்லை, இப்ப உன் மனைவி குழந்தைங்களை கூட பார்க்கலைன்னா எப்படி? நான் கண்டிப்பா நர்மதாவை உன் கூட அனுப்ப மாட்டேன். ட்வின்ஸ் வேற ஜாக்கிரதையா பார்த்துக்கணும்,  அவ்வளவு தான்”  

“நான் உங்களை அனுப்புங்கன்னு சொல்லலியே”

“அப்போ விட்டுட்டு அப்ப அப்ப வந்து பார்த்துக்க போறியா” என்று கோபமாக பேசியவர்.

“இப்ப நான் பேசலை ரொம்ப சண்டை தான் வரும்” என்று எழுந்து போய் விட்டார்.                  

“ஏதாவது பேச விடறாரா இவர்?” என்றான் அம்மாவைப் பார்த்து. அர்ஜுன் கூலாகத் தான் அமர்ந்து இருந்தான்.  

“என்ன பேசப் போற? இங்க தான் இருக்கப்போறேன்னா சொல்லப் போற!” என்றார் அவரும் சற்று அதிருப்தியோடு.

“சொல்லலாம்னு நினைச்சாலும் நீங்க விட மாட்டேங்கறீங்க? நான் என்ன பண்ணட்டும்!”

“நிஜமாவா சொல்ற” என்று அதிர்ச்சியோடு கண்களை விரித்தார்.  

“ஆம்”, என்பது போல தலையசைத்தவன், “அப்புறம் நான் இவ்வளவு நாள் கூப்பிட்டேன் வரலை! இப்ப பொண்டாட்டி வந்தவுடனே வந்துட்டான்னு சொன்னாரு அவளையும் கூப்டுகிட்டு வெளிய போயிடுவேன்”

“அப்போ என்னை என்ன பண்ணுவ”

“ம்ம்ம், உங்க வீட்டுக்காரரை கூப்டுகிட்டு நீங்களும் என்னோட வந்துடுங்க, இப்ப போங்க! போய் அவரை மலை இறக்குங்க! போங்க!” என்று எழுந்து சென்றான்.

“இவங்க ரெண்டு பேரையும் நான் எப்படி சமாளிப்பது” என்று கன்னத்தில் கை வைத்து அமர்ந்தார்.

உள்ளே சென்றால் அப்போது தான் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள் விழிக்கலாமா வேண்டாமா என்பது போல, இவனைப் பார்த்ததும் எழ முற்பட,  

அவள் எழுவதற்குள் வேகமாக சென்று அவளருகில் படுத்து அவளை எழ விடாமல் கையணைப்பில் கொண்டு வந்தவன், “ஹேப்பி மார்னிங்” என்றான்.

“ஹேப்பி, ஹேப்பி, மார்னிங்” என்றவள் சுகமாக அவன் நெஞ்சினில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“எனக்கு என்ன கிப்ட்”

“என்ன வேணும்” என்றான், அவள் என்ன கேட்பாள் என்று அறிந்தவனாக.

ஆனால் கேட்கவில்லை “நீங்களே குடுங்க”

“அதான் குடுத்துட்டேனே”, என்று அவளின் வெற்றிடையில் கைவைக்க,

“அது நீங்க கொடுக்கலை, நான் உங்களுக்கு குடுக்கறேன்” என்ற வார்த்தையை சொன்னாலும் கணவனும் மனைவியும் அந்தக் க்ஷணத்தை பூரணமாக அனுபவித்தனர்.  பலரும் ஏங்கிக் கிடைக்கும் சொர்க்கம் விளையாட்டு போல அவர்களின் வாழ்வில் வந்து விட்டது. மனதினில் இருவருமே இன்னம் பொறுப்பாக இருக்க வேண்டும். குழந்தைகள் நன்றாக பிறக்க வேண்டும் என்ற சிந்தனை தான். சில நிமிட மௌனம்.    

“என்ன கிஃப்ட் வேணும் நீயே கேளு”

“வேண்டாம், நான் சொன்னா யாரும் என்னை கம்பெல் பண்றது பிடிக்காது சொல்வீங்க”

“சொல்லி தான் பாரேன்”

“இங்கயே வந்துடறீங்களா”

“அதான் வந்துட்டேனே, அப்புறம் என்ன?”

“நான் லீவுக்கு சொல்லலை, எப்பவும் சொல்றேன்”

“நானும் லீவுக்கு சொல்லலை, எப்பவும் சொல்றேன்” என்றான் அவளைப் போலவே.

அதுவரையிலும் அவன் முகம் பாராமல் நெஞ்சில் முகம் பதித்தே பேசிக் கொண்டு இருந்தவள்,

“என்ன நிஜமாவா” என்று முகம் நிமிர்ந்து பார்க்க,

“எஸ் நிஜமா” என்று சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட,

“தேங்க்யுயுயுயு” கத்தியவள், “இருங்க, நான் அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சொல்றேன்” என்று அவனை விட்டு விலகப் போக,

“அதெல்லாம் சொல்லிக்கலாம், நீ இப்ப எங்கயும் போகாத” என்று இறுக்கிக் கொண்டான்.

மனதினில் பல புதிய முடிவுகள், அப்பாவோடு தொழிலில் இருப்பது என்பது மிகவும் கடினம் என்று அறிந்தவன். சிறு சிறு விஷயங்களில் கூட தலையிடுவார் சொல் பேச்சு கேட்க வேண்டும் எதிர்பார்ப்பார். அது அவரின் குணம்.

இனி எல்லாம் தான் நிறைய அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று புரிந்தது. வரப் போகும் மக்களுக்காக தான் இவ்வளவு பார்க்கும் போது தனக்காக அவர் இன்னமும் எவ்வளவு பார்க்கிறார் என்று நினைவில் வந்தது.

இனி அவரை தான் பார்த்துக் கொள்ள வேண்டிய தருணம் என்று புரிந்தது. இருந்து தான் பார்ப்போமே என்று முடிவெடுத்து விட்டான்.

“என்ன யோசனை” என்று அவனின் முகம் பார்த்துக் கேட்க,  “ஒன்னுமில்லையே” என்று புன்னகைக்க.

“ஏதோ சீரியஸ் மாதிரி தோணுது”

“ம்ம், நீ என்னை லவ் பண்றியா இல்லையா யோசிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றான் சிரிப்போடு.

“அப்ப நிஜமா இது சீரியஸ் தான்” என்று எழுந்தமர்ந்தாள்.  

அவளின் பாவனையில் மறுபடியும் பல்ப் வாங்கப் போற போல அர்ஜுன் என்று நினைத்துக் கொண்டவன் “என்ன சீரியஸ்” என்றான்.  

“எனக்கே தெரியாத போது உங்களுக்கு எப்படி தெரியும்”,

“எனக்கு தெரியும், யு லவ் மீ” என்ற வார்த்தைகளைச் சொல்ல வந்தவன்,

“ம்ம்ம், யோசிச்சு தெரியும் போது சொல்லு, இப்படி சடார்ன்னு எழுந்துக்காதன்னு நேத்து தானே சொன்னேன், சொல் பேச்சுக் கேட்கவே மாட்டியா நீ” என்று அதட்டினான்.

“மறந்து, மறந்து, போயிடுது, அதுதான் நீங்க இங்க தானே இருப்பீங்க பார்த்துக்கோங்க” என்றாள் லகுவாக.

“விளையாட்டில்லை அம்மு பதவிசா நடந்துக்கோ” என்றான் கவலையாக.

“ஹச்சோ என்ன இது, நான் அடி மேல அடி வெச்சு நடக்கறேன் போதுமா நோ வொர்ரிஸ்” என்றாள் விளையாட்டு தனத்தைக் கைவிட்டு.

என்ன பேசினாலும் சண்டையிட்டாலும் அடுத்த நிமிடம் விட்டுக் கொடுத்து விடுகிறாள். இது எல்லோரிடமும் காண முடியாது ஒரு அரிதான குணம் என்று புரிந்தவன்,

“ஐ லவ் யு அம்மு” என்றான்.

“ஷப்பா என்ன இது, மறந்து போயிடும்னு அடிக்கடி மனப்ப்பாடம் பண்றீங்களா” என்றாள் ஒரு குறும்புப் புன்னகையுடன்.

“மறுபடியும் பல்ப் வாங்கிட்டியேடா அர்ஜுன்” என்று அவன் வாய்விட்டு சொல்ல,

கலகல வென்று நர்மதா சிரித்தாள், அதை ஆசையோடும் காதலோடும் ரசித்திருந்தான் அர்ஜுன், என் வாழ்வில் வந்த தென்றல் இவள் என்ற உணர்வோடு.  

                       (நிறைவுற்றது)

இன்னம் ஒரு எபிலாக்………. நிறைய அல்ல…….. இரண்டு மூன்று பக்கங்கள்  உள்ளது மக்களே!                       

 

Advertisement