Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

நாட்கள் மீண்டும் ஊர்ந்தன தான் நர்மதாவிற்கு. எல்லோரும் கண்ணுக்குள் வைத்து தாங்கினர். மில்லிற்கு கூட வரவேண்டாம் என்றார் ஷண்முக சுந்தரம்.

“அப்பா, எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை, நல்லா இருக்க்கேன். இங்க இருந்தா சும்மா சாப்ட்டு தூங்குவேன், ஆக்டிவா இருக்க மாட்டேன். ஹால்ஃப் டே தானே வர்றேன்”, என்று வெகுவாக கேட்டு சென்றாள்.

ஆம் ஒரு உடல் உபாதையுமில்லை, மசக்கையின் அறிகுறிகள் என்று எதுவுமில்லை. உடல் சோர்வு இல்லை. கர்ப்பமானது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும்  ஏதோ குறைந்தது நர்மதாவிற்கு. என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

வளவள என்று பேசுபவள் தான், எல்லோரிடம் மிக விரைவில் சிநேகிதம் செய்து கொள்ளுவாள் தான். ஒரு ஜாலியான உற்சாகமான பேச்சு அவ்வளவே. ஆனால் தான் மன உணர்வுகளை எல்லாம் யாரோடும் பகிர மாட்டாள்.    

அர்ஜுனுடன் இருந்தது மிக சொற்ப நாட்கள், அதனால் அவனை தான் மிஸ் செய்கிறாளா என்று அவளுக்கு தெரியவில்லை. பல தடவை சுய ஆய்வு செய்தாலும் அவளால் பகுத்தறிய முடியவில்லை. இருந்தது சொற்ப நாட்கள். அவனைப் பற்றி எதுவும் தெரியாது என்ற போது என்ன நினைவுகள் வரும். அவர்களின் வாக்குவாதங்கள் தான் அவளின் நினைவுகள்.  

எல்லோருடனும் பேசினாலும் யாருடனும் பேசாதது போல தான் ஒரு தோற்றம்.

காதல் என்ற உணர்வு என்று சொல்வதை விட, துணை உடன் இல்லாத தன்மை என்ற ஒரு உணர்வு தான். காதலிக்கும் உணர்வை இன்னும் அர்ஜுன் அவளை உணர வைக்கவில்லை.

காலையில் எழுந்தாள் ஆஃபிஸ் சென்றாள், வந்தாள், உறங்கினாள், மீண்டும்  அடுத்த நாள் எழுந்தாள், இடையில் அர்ஜுனிடம் பேசினாள் என்று நாட்கள் சென்றன.

ஆனாலும் செய்ய ஒன்றுமே இல்லாதது போல ஒரு உணர்வு. ஒரு மாதிரி அமைதியாக ஆரம்பித்தாள்.

இங்கு அர்ஜுன் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. அவளை சில மாதங்களாக தானே தெரியும். ஏன் அர்ஜுனிற்கே தெரியவில்லை.

அனால் அவளின் அம்மாவிற்கு நன்கு தெரிந்தது. அங்கு வீட்டில் ஏதாவது குறையா என்று கேட்க முடியாது. ஏனென்றால் அவருக்கே நன்கு தெரியும் கௌரியும் ஷண்முக சுந்தரமும் கண்ணுக்குள் வைத்து தாங்கினர். தங்களுடன் இருந்தால் பார்ப்பதை விட நன்றாக பார்த்துக் கொண்டனர் என்று. 

கர்ப்பமானது ஒரு அமைதியை கொடுத்து விட்டதா என்று ஆராயத் துவங்கினார்.   

எப்போதும் தனியாக படுக்க நர்மதாவிற்கு பயம் தான். அர்ஜுன் சென்ற இரு மாதங்களாக தனியாக தான் உறங்கினாள். சில நாட்களாக வீட்டில் தான் இருந்தாலும் தனியாக உறக்கம் அணுகவில்லை. ஏதேதோ கனவுகள்.

“ம்மா, தனியா படுக்க பயமா இருக்கு! கெட்ட கெட்ட கனவா வருது!”, என்று சொல்ல, அன்றிலிருந்து கௌரி உடன் படுத்துக் கொண்டார். அதை நர்மதா அர்ஜுனிடம் சொல்லவில்லை. கௌரி தான் சொன்னார். 

“மா, செக் அப் எப்போ போறீங்க”,

“செகன்ட் மந்த எண்ட்ல ஸ்கேன் பண்ணலாம்னு சொலியிருக்காங்க டா, இன்னும் ரெண்டு நாள்ல போறோம்” என்றார்.

நர்மதாவிடம் பேசும் போது, “என்ன கெட்ட கனவு வருது”, என்றான் அர்ஜுன்.

“தெரியலை எழுந்தா ஞாபகமில்லை”

“எனக்கு எழுந்தாலும் உன் ஞாபகம் தான். தூங்கினாலும் உன் ஞாபம் தான்” என்றவனிடம் என்ன பதில் சொல்வது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.

“உடம்பு எப்படி இருக்கு?”

“எப்பவும் போல தான் இருக்கேன் ஒன்னும் வித்தியாசம் தெரியலை” என்றவளிடம் இன்னும் சிலது பேசி வைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து ஸ்கேன் சென்ற போது இன்னமும் ஒரு இன்ப அதிர்ச்சி, இரட்டை குழந்தைகள். அதை மருத்துவர் சொன்ன போது அதிர்ச்சி, சந்தோஷம், கூடவே ஒரு கலக்கம் நர்மதாவிற்கு.

அனைவருக்கும் அத்துணை மகிழ்வு.

வீடு சென்று உடனே அர்ஜுனிற்கு அழைத்தாள், மீண்டும் ஒரு பின்னிரவு நேரம். எந்த பீடிகையுமின்றி அவன் எடுத்தவுடனே, “ட்வின்ஸ் போல” என்றாள்.

தூக்க கலக்கத்தில் சட்டென்று புரியவில்லை. புரிந்த நொடி “ஹேய்” என்று கத்தியவன் “நிஜமாவா” என்றான்.

“டாக்டர் அப்படி தான் சொன்னாங்க” என்றவள் குரலில் உற்சாகமில்லை ஒரு கலக்கம் தான்.

“என்ன நர்மதா சந்தோஷமாயில்லையா?”

“தெரியலை பயமாயிருக்கு, நீங்க வர்றீங்களா”,  என்ற வார்த்தை தானாக வந்தது.

“நானா”

“ம்ம்ம்”

“இன்னும் நாலு மாசம் ஆகும் அம்மு”

பதிலேயில்லை

“முடிஞ்சவரை சீக்கிரம் வரப் பார்க்கிறேன்”  

“சரி, தூங்குங்க” என்று சொல்லி வைத்து விட்டாள். திரும்ப அழைத்தான் எடுத்ததும் “என்ன அம்மு? சொல்லுடா! கோபமா?”

“இல்லை, எதுக்குக் கோபம், ஒன்னுமில்லை சொல்ல, ஐ ஆம் ஓகே ஸ்கேன் போனது டையர்டா இருக்கு. அது தான் வெச்சேன்”

“சரி, ரெஸ்ட் எடு” என்று வைத்து விட்டான். ஒரு உற்சாகமில்லையோ அவளிடம் என்று அர்ஜுனிற்கு தோன்றியது.  

விஷயம் கேள்விப்பட்டவுடன் மாலை அவளை பார்க்க அம்மாவும் அப்பாவும் வந்தனர்.

நன்றாக தான் பேசினாள், சிரித்தாள், ஆனால் ஏதோ குறைவது போல அம்மாவிற்கு தோன்றியது. “தம்பிக்கிட்ட சொல்லிட்டியா நர்மதா”

“ம், சொல்லிட்டேன்மா”

“என்ன சொன்னங்க”

“என்ன சொல்லுவாங்க” என்று கேட்டு அம்மாவைப் பார்த்தாள்.  

“எப்போ வர்றாங்களாம்?”

“கேட்டேன் மா, இன்னும் நாலு மாசம் ஆகுமாம்”

“ஓஹ்” என்றார், மகளைப் பார்த்து மனதிற்குள் ஓரே யோசனை, “இவரை யாரு இவ்வளவு அவசரமா கல்யாணம் செஞ்சு மூணு நாள்ல போக சொன்னா, இதுல ரெட்டைக் குழந்தைங்க வேற. இவ இப்படி இருந்தா குழந்தைங்க எப்படி உற்சாகமா வளரும்”   

“நாங்க மாப்பிள்ளை கூட அவர் ஊருக்கு போனதுக்கு அப்புறம் ஒரு தடவை தான் பேசினோம், எங்ககிட்ட பேச சொல்றியா? எப்படி இருக்கார்ன்னு கேட்கறோம்” என்றார்.

“இப்ப பண்றேன்?” என்று நர்மதா போனை எடுக்க,

“இப்ப வேண்டாம்! வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் பேச சொல்லு” என்றவர் கெளரியிடம், “அண்ணி, நர்மதாவை ஒரு ரெண்டு நாள் வீட்டுக்கு இருக்க அனுப்பறீங்ளா” என்றார்.

“நாளைக்கு காலையில அனுப்பறேன்” என்று கௌரியும்  சம்மதம் சொன்னார்.   

அன்று இரவு அவர்களை அர்ஜுன் தொடர்பு கொண்டான். “அத்தை என்கூட பேசணும்னு சொன்னீங்களாம்” என்றவனிடம்,

“ஆமாம், தம்பி!” என்று விஷயத்தை சொல்ல வெகுவாக தயங்கினார். நர்மதாவை உற்சாகம் குறைந்து பார்த்தவுடனும் ஒரு ஆவேசத்தில் அர்ஜுனுடன் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

இப்போது அவன் கூப்பிடும் போது விஷயத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை.

“என்னங்க அத்தை? சொல்லுங்க!” என்றான்.

“நர்மதாவை உங்களோட கூட்டிட்டுப் போகலையா” என்றார் ஒரு வழியாக.

“ஏன் அத்தை, நானே இன்னும் ஒரு நாலு மாசத்துல அங்க வந்துடுவேன்”

“அதுங்க தம்பி, நீங்க தப்பா எடுத்துக்க கூடாது, இங்க எல்லோரும் அவளை நல்லாப் பார்த்துக்கறாங்க, அதுவும் உங்க அப்பா அம்மா எங்களை விட நல்லா பார்த்துக்கறாங்க, ஒரு சின்ன குறைக் கூட சொல்ல முடியாது”

“ஆனா நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும், நீங்க அவ பக்கத்துல இருக்கணும். கல்யாணம் நடக்குமா நடக்காதா அப்படி ஒரு சந்தேகமாவே கல்யாணம் நடந்தது, நீங்கு நாலஞ்சு நாள்ல ஊருக்கு போயிட்டீங்க, உடனே குழந்தைங்க, அவளுக்கு சொல்லத் தெரியலை, எப்பவும் இதுதான் வேணும்னு சொல்ல மாட்டா, சின்ன வயசுல இருந்தே அப்படித் தான் இருக்குறதை வெச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்குவா”.

“இப்ப உங்களைத் தேடறா போல, நர்மதா சந்தோஷமா இருக்கா. அதுல ஒரு சந்தேகமும் வேண்டாம் உங்களுக்கு. ஆனா பழைய ஒரு உற்சாகமில்லை. இப்ப ரெண்டு மாசம் தான், ஆனா இன்னம் கொஞ்சம் மாசம் கழிச்சு அவ கலகலப்பா இருந்தா தானுங்க தம்பி குழந்தைங்க துறுதுறுப்பா இருக்கும்”.

“நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவளைக் கூட கூப்பிட்டுகங்க, நான் பேசினது யாருக்கு தெரிய வேண்டாம். ப்ளீஸ் வீட்ல சொல்லிடாதிங்க, தங்கம் மாதிரி அவளைப் பார்த்துக்கறாங்க, வருத்தமாகிடும். நர்மதா கிட்டயும் சொல்லிடாதீங்க வீம்புக்குன்னு என்கூட சண்டை போடுவா, நான் நல்லா தான் இருக்கேன், நீயேன்மா அவர் வேலையைக் கெடுக்கறேன்னு, நர்மதா அப்பாவுக்குக் கூட தெரியாம பேசறேன், யார்கிட்டயும் சொல்லிடாதீங்க” என்றார் அவர் பயந்து.

“அத்தை, ஏன் இவ்வளவு பயந்துக்கறீங்க. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ரிலாக்ஸ்டா இருங்க” என்று அவரிடம் சமாதானம் சொல்லி வைத்தான்.

அதன் பிறகு ஓரே  யோசனை அர்ஜுனிற்கு.

நர்மதா இங்கே அம்மா வீடிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன, “ஒரு வாரம் இருந்து விட்டு வா” என்று கௌரி அனுப்பியிருந்தார். 

அங்கேயிருந்தும் காலை மில்லிற்கு சென்று விடுவாள். கார் வந்து அழைத்து செல்லும், பிறகு மதியம் வந்து இறக்கி விடும். “வீட்ல இருந்தா போர் அடிக்கும் பா” என்று சொல்லி ஷண்முக சுந்தரத்திடம் சம்மதம் வாங்கியிருந்தாள்.

மதியம் வந்து சாப்பிட்டு குட்டி உறக்கம் போட, அவள் விழித்த போது அம்மா சூடான பாலோடு காத்திருந்தார்.

“எப்படிம்மா நான் இப்ப முழிப்பேன்னு தெரிஞ்சது”

“பத்து நிமிஷத்துக்கு முன்னயே நீ அசைய ஆரம்பிச்சிட்ட, குடி” என்று அவளிடம் நீட்ட, வாங்கி பருக ஆரம்பித்தவளிடம்,

“மாப்பிள்ளை ஏதாவது சொன்னாரா?” என்றார், பேசியதை அவளிடம் சொல்லிவிட்டாரா என்ற சந்தேகத்தில்.

“என்ன சொல்லிட்டாரா?”  

“சும்மா கேட்டேண்டி, உடனே துருவாத”

“அவர் பேசவேயில்லைம்மா  ரெண்டு நாள் ஆச்சு. இங்க வந்தேன் பார்த்தியா அன்னைக்கு பேசினது தான்”

“ஏன் பேசலை?” என்றார் கலவரமாக.

“ஏதோ வேலையாம் அங்கேயே வேற ஸ்டேட்க்கு போறாராம் ரொம்ப பிசியா இருப்பாராம், நானே கூப்பிடறேன்னு சொன்னார், இன்னம் கூப்பிடலை”

“ரெண்டு நாள் இல்லை மூணு நாள் ஆச்சுடி”

“ஒரு பேச்சுக்கு சொல்றதுதான்மா”

“அப்புறம் யாரோட நேத்து ரொம்ப நேரம் பேசின?”

“ஆஷாவோட மா, ரொம்ப நாள் ஆச்சும்மா பேசி”   

“நான் பேசினதை தப்பாக எடுத்துக் கொண்டாரா, அதுதான் மகளிடம் கூட பேசவில்லையா” பயந்து விட்டார்.

“மா, நீ ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட”

“ஏன் மாப்பிள்ளை பேசவேயில்லை?”

“தெரியலைம்மா, ஏதாவது வேலையா இருக்கும். அதுக்கு நீ ஏன் இவ்வளவு கவலைப் படற, ஹய்யோ அம்மா” என்று சொல்லி அவரின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டாள்.

அப்போது பார்த்து கௌரி அழைத்தவர், “வீட்டுக்கு வா இன்னைக்கு சாயந்தரம் கோவிலுக்கு பூஜைக்கு கொடுத்திருக்கேன் நீ வரணும், மாமா வேலை இருக்குன்னு வரமாட்டேன் சொல்லிட்டார், சத்யா கூப்பிட்டா அவ வரக் கூடாதாம், நீ வா, நாளைக்கு திரும்ப போவியாம்” என்றார்.

“இருங்கம்மா, அம்மா கிட்ட சொல்றேன்” என்றவள் சொல்லி, அம்மா சரி என்றதும் கிளம்பினாள்.

“என்னம்மா திடீர்ன்னு பூஜை” என்று கெளரியிடம் கேட்க,

“மார்கழி மாசம் கொடுக்கறதுதான், அடுத்தவாரம் தான் கொடுப்போம், அய்யர் இன்னைக்கு என்னவோ அர்ஜுன்க்கு உகந்த நட்சத்திரம் குடுங்கன்னு காலையில கோவிலுக்கு போனப்ப சொன்னார், சரின்னுட்டேன்”

“உங்க கிட்ட பேசினாராம்மா அவர்”

“யாரு, அர்ஜுனா? இல்லையே, ரெண்டு மூணு நாள் ஆச்சே”

“என்கிட்டயும் பேசலை”

“சில சமயம் ரொம்ப வேலையா இருந்தா கூப்பிட மாட்டான். எப்பவும் அப்படித்தான்” என்றார்.

“ம்ம், சரிங்கம்மா” என்று சொன்னாலும், “என்ன பெரிய வேலை, என்ன இவன் நம்ம பார்டர்லயா நிக்கறான், எப்பவும் அலெர்டா இருக்க. ஓவர் பில்ட் அப்” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.  

“சல்வார் வேண்டாம், புடவை மாத்திட்டு வா” என்றவரிடம்,

“டைம் ஆகிடும்மா”

“இப்ப தான் அஞ்சரை மணி, ஏழு மணிக்கு தான் பூஜை. நிறைய நேரம் இருக்கு. மாத்து, அவசரமேயில்லை”.

உள்ளே சென்றவள், பீரோவைத் திறந்து வைத்து, என்ன புடவை கட்ட என்று பார்த்துக் கொண்டிருந்தாள்  பத்து நிமிடத்திற்கும் மேலாக.

மும்முரமாக புடவையை பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் வந்து நின்ற உருவத்தை கவனிக்கவில்லை.

அவள் கவனிக்கவில்லை என்றதும், “நான் ஹெல்ப் பண்ணட்டுமா” என்ற குரல் கேட்க, சற்று அதிர்ச்சியோடு திரும்பியவள்,

ஆனந்தமாக “அர்ஜுன்” என்று கத்தி விட்டாள்.

அவள் பயந்து விடக் கூடாது என்று மென்மையாக தான் கேட்டான். “எஸ், அர்ஜுன்” என்று அவன் சிரித்துக் கொண்டு நின்றிருக்க, அவளின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி,

அவன் கைவிரிக்கவும், அதில் சுகமாக அடங்கியவள், “எப்போ வந்தீங்க? ஏன் வர்றேன்னு சொல்லவேயில்லை” என்று கேள்விகளை அடுக்க,

“ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு” என்றவனை இறுக்கிக் கொண்டவள், அதன் பிறகு எதுவும் பேசவில்லை, அப்படியே இறுகக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.  சில நிமிடங்கள் வரை அப்படியே இருந்தாள். 

“முகத்தை காட்டுடி” என்றவனை தலை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. இன்னும் அவனின் கழுத்து வளைவில் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்.

“அம்மு” என்றழைத்தவனின் உதடுகளில், “பேசாதே” என்பது போல கைவைத்து, மீண்டும் அப்படியே நின்றிருந்தாள். சில நிமிடங்கள் அல்ல பல நிமிடங்கள்.

 

Advertisement