Advertisement

அத்தியாயம் இருபது:

நாட்கள் நகரவேயில்லை, ஊர்ந்தன போல தான் ஒரு தோற்றம் நர்மதாவிற்கு. அர்ஜுன் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. இவளும் காம்பன்ஷேஷன் கொடுத்து வேலையில் இருந்து ரிலீவ் ஆகிவிட்டாள்.

தினமும் அர்ஜுனுடன் பேசினாள், ஆனால் மிஸ் செய்கிறேன் என்ற வாரத்தை மட்டும் வாயில் வராது. நிஜமாக அதிகம் அவனை மிஸ் செய்தாள் தான், ஏதோ குறைவது போன்ற ஒரு உணர்வு. அதுதான் என்று சரியாக பகுத்தறிய முடியாத ஒரு உணர்வு. எப்போதும் போல விளையாட்டுத்தனம். ஏதோ வாழ்கையில் குறைகிறது. என்ன என்று யோசிக்க மாட்டாள். அவள் கண்டு கொண்டால் தானே அர்ஜுனிடம் சொல்லுவாள்.        

கௌரி அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டாரா இல்லை இவள் அவர்களோடு ஒன்றி விட்டாளா தெரியாது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை நேரங்களில் அம்மா வீட்டிற்கும் சென்று விடுவாள். அம்மாவிடமும் செல்லம் கொண்டாடிக் கொண்டிருந்தாள். மொத்தத்தில் வாழ்கையை அர்ஜுன் இல்லாமல் அனுபவிக்க முயன்று கொண்டிருந்தாள். எல்லாம் சரியாக இருப்பது போல தோன்றினாலும் மனதில் ஏதோ குறைந்தது.       

தினமும் நர்மதாவை மில்லுக்குக் கூட்டிக்கொண்டு சென்றார் ஷண்முக சுந்தரம். அது ஒரு நூர்ப்பு ஆலை. அவர் சொல்லும் வேலைகளைக் காலையில் இருந்து மதியம் வரை செய்வாள். மதியம் வீடு வந்தால் பிறகு அழைத்துக் கொண்டு போக மாட்டார். ஏனென்றால் திரும்ப அவர் மில்லுக்கு போக மாட்டார், வேறு சில தொழில்கள் பார்க்க சென்று விடுவார். நான் போகிறேன் மாமா என்று நர்மதா சொன்னாலும் தனியாக அனுப்ப மாட்டார். வீட்ல இரும்மா போதும் என்று விடுவார்.

முதலில் தலையும் புரியவில்லை, வாலும்  புரியவில்லை. சொல்வதை செய்வதற்கே தடுமாருவாள். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஏதோ புரியத் துவங்கியது.

அங்கே நிறைய பெண்கள் வேலை செய்தனர். நர்மதா வேலைகளுக்கு நடுவில் இந்த பத்து நாட்களாக ஆலையை சுற்றி வர, அவளுக்கு பேச்சுக் கொடுக்கக் கற்றுக் கொடுக்கவா வேண்டும், அவளுடைய சிரித்து பேசும் தன்மை ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டது. 

நர்மதா அழகு, கூடவே தனக்குப் பொருத்தமாக அழகாக உடை அணியத் தெரிந்தவள். அங்கே நிறைய இளவயது பெண்கள் தான். அவளின் புடவை உடுத்தும் நேர்த்தி, சுரிதார் அணியும் பாங்கு, எல்லாம் தினமும் பார்ப்பார்கள். எல்லோரையும் கவரும் பாங்கு வெகு சிலருக்கே அமையும். அது நர்மதாவிற்கு தானாக வந்தது.     

சத்யா திருமணமாகி சென்றது முதல் வீட்டில் இல்லாத ஒரு கலகலப்பு திரும்பியது. அர்ஜுனும் பல வருடங்களாக வீட்டில் இல்லை.

நர்மதாவின் வரவு ஒரு வகையில் ஷண்முக சுந்தரத்தையும் கெளரியையும் உற்சாகப்படுத்தியது. நிறைய உறவினர்கள் என்பதால் ஏதாவது விசேஷங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

வித விதமான நகைகளை போட்டு நர்மதாவை அழைத்து செல்வார். வந்து உறவினர்கள் கண்ணு படும் என்று சுற்றிப் போடுவார். போட்டோ எடுத்து தன்னை தினமும் அர்ஜுனிற்கு நர்மதா அனுப்பி வேறு வைக்க, மிகவும் விரும்பித் திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி, அர்ஜுன் தான் ஏங்கிப் போவான். ஒரு நாள் அனுபவித்த உருகிக் கரைந்த உறவு, மனதையும் சூடாக்கும் உடலையும். 

அதன் பிரதிபலிப்பு நர்மதாவிடம் இருக்கிறதா என்று பேச்சில் தேடுவான். ம்கூம் இல்லையா? இல்லை தன்னால் கண்டு கொள்ள முடியவில்லையா? அறியான்.   

வித விதமா மேக் அப் போட்டே என்னை கொல்றாடா, இந்த மண்டுக்குப் புரியலை அவ மேக் அப் போடாமா தான் அழகுன்னு என்று மனதிற்குள் புலம்பிக் கொள்வான்.    

ஷண்முக சுந்தரம் ஓய்வின்றி உழைப்பவர். நர்மதா வந்த ஒரு மாதத்திலேயே கண்டு கொண்டாள்.

அன்று அவர் உணவருந்தும் போது, “த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஒன்னு புதுசா கட்டப் போறாங்க. என்னை பார்ட்னர் ஷிப்க்கு கூப்பிடறாங்க, போகட்டுமா வேண்டாமான்னு ஓரே யோசனையா இருக்கு கௌரி”

“இருக்கறதே பார்க்க முடியலை. இதுல புதுசா ஏதாவது இழுத்து விட்டுக்காதீங்க போதும்” என்றார் கௌரி.

“ஆசையா இருக்கு, இப்படி தான் போனவாரம் இன்னொரு மில் விலைக்கு வருதுன்னு சொன்னேன் அதையும் வேண்டாம் சொல்லிட்ட”

“அது இங்க இல்லை, பவானில வருது. டெய்லி அங்க போயிட்டு வந்தா அலைச்சல் உங்களுக்கு. இருக்குறது போதும்”, என்று விட்டார் கட் அண்ட் ரைட்டாக.   

மனைவியிடம் வாதாடிக் கொண்டிருந்தார் ஷண்முக சுந்தரம். இதெல்லாம் அர்ஜுன் செய்ய வேண்டாமா, அவர் கூட நின்று என்று நர்மதா யோசித்துக் கொண்டிருந்த போது அர்ஜுன் அன்று வசமாக மாட்டினான் நர்மதாவிடம்.

“என்ன பையன் நீ?” என்றாள் எடுத்தவுடனே.

“என்ன”, என்றான் புரியாமல்.

“என்ன மகன் நீ?”, என்று கேள்வியை மாற்றினாள்.

“என்ன நர்மதா புரியலை?”

“என்ன புரியலை, இல்லை என்ன புரியலை, என்ன சம்பளம் வாங்கற நீ?” என்றாள்.

“ஏய், இம்சை ஒழுங்கா பேசு?”,

“ம்ம்ம்ம்ம்ம், அப்படீங்களா நீங்க என்ன சம்பளம் வாங்கறீங்க சாஅஆர்”, என்று இழுத்துப் பிடித்து கத்தினாள்.

“எதுக்கு இப்ப இந்தக் கேள்வி? என்ன ஆச்சு?”,

“ம்ம்ம், இங்க மாமா எப்படி ரவுண்ட் தி க்ளோக் வொர்க் பண்றார், நீங்க என்ன ஜாலியா போய், வீக்என்ட்ஸ் எல்லாம் ஜாலியா ஸ்பென்ட் பண்ற கண்ட்ரில உட்கார்ந்து இருக்கீங்க” 

“நான் இங்க வேலை பார்க்கிறேன் ராத்திரி பகல்ன்னு பார்க்காம, எப்ப வேணா போன் பண்ணுவாங்க. எப்ப வேணா மெயில் பண்ணுவாங்க. நீ என்ன பேசற? எவ்வளவு கஷ்டம் தெரியுமா. ஓரே கம்ப்யுட்டர் முன்ன முறைச்சு பார்த்துட்டு கழுத்து வலியோட உட்கார்ந்து இருக்கேன்”

“அஃப்கோர்ஸ் எந்த வேலையும் ஈசி கிடையாது தான். ஆனா நம்ம நெஸ்ஸசிடீஸ், நம்ம ப்ரியாரிடீஸ் பார்க்கணும்”.

“இங்க காலையில ஆறு மணிக்கு ஆரம்பிச்சா பத்து மணி வரை கொஞ்சம் கூட கேப் இல்லாம வொர்க் பண்றார். இதுல நிறைய டென்ஷன்ஸ் கூட. இத இன்னும் பார்க்கணும் அதை பார்க்கணும்னு”.

“நீங்க இங்க இருந்தா அவர் சொல்றதை கேட்கம்ணும்னு வர மாட்டேங்கறீங்க, அங்க யார் சொல்றதை கேட்கறீங்க, உங்க ஹையர் அஃபிசியல் சொல்றதை தானே”

“அப்படி உங்களால இங்க ஏன் இருக்க முடியலை, இதை இன்னும் டெவலப் செஞ்சு இன்னும் நிறைய பேருக்கு வேலை கொடுக்கலாம். அதை விட்டிட்டு லைஃப்ல நிறைய வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க. யோசிங்க, எனக்கு இப்ப தூக்கம் வருது, தூங்கப் போறேன்” என்று சொல்லி ஸ்கைப்பை டிஸ்கனச்ட் செய்து விட்டாள்.

“தூக்கம் வருது அத்தை”, என்று சொல்லி எட்டு மணிக்கெல்லாம் உறங்கியும் விட்டாள்.

திரும்ப திரும்ப அர்ஜுன் போனில் அழைத்தும் எடுக்கவில்லை.

அம்மாவிற்கு அழைத்தவன், “என்ன பண்றாம்மா அவ, போன் எடுக்க மாட்டேங்கறா”

“தூங்கிட்டாடா”

“அப்பா எப்படி இருக்கார்?”

“நல்லா இருக்கார், ஏன் அர்ஜுன்”

“பின்ன எதுக்கும்மா இவ என்கூட சண்டை போடறா? அப்பா ஃபுல் டைம் வொர்க் பண்றாங்க, நீ அங்க போய் உட்கார்ந்துட்டு என்ன பண்றேன்னு கேள்வி கேட்டுட்டு கட் பண்ணிட்டா” என்று சலித்துக் கொண்டான்.

“சரிம்மா, நான் உங்களுக்கு காலையில கூப்பிடறேன். அவளை பேச சொல்லுங்க இல்லை எனக்கு வேலையே ஓடாது” என்றான்.

“ம்ம், சரி! நீ வேலையை பாரு” என்று அர்ஜுனை சமாதனம் செய்தார் கௌரி. பின்பு விஷயத்தை ஷண்முக சுந்தரத்திடம் சொன்னார்.

காலையில் நர்மதா எழுந்ததும் ஷண்முக சுந்தரமும் கௌரியும் பிடித்துக் கொண்டார்கள், “அர்ஜுன், போன் பண்ண சொன்னான், பண்ணு!” என்பது போல, “அதெல்லாம் முடியாது” என்பது போல நர்மதாவும் பிடிவாதமாக நின்றாள்.

ஷண்முக சுந்தரம், “உட்காரும்மா” என்று அமர வைத்து பொறுமையாக அவளிடம் பேசினார். எல்லோருக்கும் ஒரு ஒரு ஆசை. அவனுக்கு அந்த ஃபீல்ட் பிடிச்சிருக்கு, இருந்துட்டு போறான். இப்ப என்னால எல்லாத்தையும் பார்த்துக்க முடியும்னு அவனுக்கு ஒரு நம்பிக்கை. அதான் தள்ளி இருக்கான். எனக்கு முடியாதுன்றப்போ கண்டிப்பா வந்துடுவான்”.

“அவனுக்கு எந்த டென்ஷனும் கொடுக்காத, அவன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம். அவனா வரணும், எந்த கம்பல்ஷனும் கொடுக்காதம்மா, எனக்கு புரியுது நீ எங்களுக்காக தான் சொல்ற, இருந்தாலும் அவன் கிட்ட பேசு” என்றார்.

“என்னங்கடா இது” என்று நினைத்தவள், “ரொம்ப செல்லம் கொடுக்கறீங்க அப்பா நீங்க” என்றவள், “நான் உங்களை அப்படிக் கூப்பிடட்டுமா” என்றவள்,

“எங்கப்பாக்கு எல்லாம் ஒரு வார்த்தை சொல்லிட்டா அப்படியே செய்யணும், மாறாவே மாட்டார். ஆனா நீங்க ஸ்ட்ரிக்ட் மாதிரி ஒரு லுக் குடுக்கறீங்க. ஆனா அப்படியில்லை” என்றாள்.

கௌரி அச்சர்யமாகப் பார்த்தார், நர்மதா கொஞ்சமும் பயமோ தயக்கமோ இல்லாமல் சகஜமாகப் பேசினாள். ஷண்முக சுந்தரமும் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டார்.

“இப்ப ஆஃபிஸ் கிளம்பும் முன்ன பேசிடு” என்றார் காரியத்தில் கண்ணாய்.

“ம்ம்ம்ம் சரி” என்று மறுத்துப் பேசாமல் ரூமிற்குள் சென்றவள், “கால் மீ” என்று வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் செய்தாள்,

அனுப்பிய அடுத்த நிமிடம் அழைத்தான்.

“என்ன நீங்க ஃபோனையே பார்த்துட்டு இருந்தீங்களா”

“ஊர்ல மனைவிய விட்டுட்டு இங்க அவங்க ஞாபகமா இருக்குற எல்லோரும் இதைத்தான் பண்ணுவாங்க” என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியில் சொல்லவில்லை, ஏன் பேசவேயில்லை அமைதியாக தான் இருந்தான்.

“ஹலோ, ஹலோ, லொ, லொ, லோஒ” என்று கத்திய போதும் அமைதியாகத் தான் இருந்தான்.

“டிஸ்கனக்ட் ஆகிடுச்சா?” என்று அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டு கனக்ஷனை சரி பார்த்தாள். சரியாகத் தான் இருந்தது.

“பேசுவீங்களா? மாட்டீங்களா?”

“அதுதான் நான் பேசினா உனக்குப் பிடிக்க மாட்டேங்குதே. நான் பேசிட்டு இருக்கும் போதே எனக்குத் தூக்கம் வருதுன்னு சொல்லிக் கட் பண்ற, திரும்பக் கூப்பிட்டாலும், எடுக்க மாட்டேங்கற. காலையில இருந்து இப்ப வரைக்கும் மனசு எனக்கு எவ்வளவு டிஸ்டர்ப்டா இருந்தது தெரியுமா? எல்லாமே விளையாட்டு தானா உனக்கு?” என்றான் ஆதங்கமாக.  

“என் மேல யாரும் எதுவும் திணிக்கிறதை எப்பவும் விரும்ப மாட்டேன். கொஞ்ச நாள்ல அங்க இருக்குறதை எவ்வளவு டெவலப் பண்ணலாம்னு உனக்கு தெரியும் போது, எனக்குத் தெரியாதா? யாரும் என்னை கட்டாயப்படுத்துறதை எப்பவும் விரும்ப மாட்டேன். டோன்ட் ஃபோர்ஸ் மீ”

“என்ன கட்டாயப்படுத்தினேன் யோசிங்கன்னு தான் சொன்னேன்” என்றாள் இறங்கிய குரலில்.   

“யோசிங்கன்னு சொல்லி என் கிட்ட பேசாம வெச்சிட்டா, என்ன அர்த்தம்?”

சில நொடி மௌனங்களுக்கு பிறகு “சாரி” என்றாள்.

“புரிஞ்சிக்கோ! பக்கத்துல இருக்கும் போது அடிச்சிக்க பிடிச்சிக்க இருக்குறது தான். ஆனா தூரமா இருக்கும் போது அதோட இம்பேக்ட்  ஃபேக்டர் வேற?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“அய்யய்யோ! இவ்வளவு ஃபீலிங்க்ஸ் எல்லாம் ஆகாது,  நான் சொன்ன விதம் சரியா தப்பா தெரியாது. பட் ரியலி ஐ மீன் இட். யோசிங்க, இப்ப அதைப் பத்தி பேச வேண்டாம், ஓகே வா” என்று பேச்சை இலகுவாக்க முயன்றாள்,

ஆனால் முடியவில்லை, 

“வேற என்ன பேச? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு, உன்னைக் கட்டிப் பிடிக்கணும் போல இருக்கு, முத்தம் குடுக்கணும் போல இருக்கு, எனக்கு தலைவலி வரும்போதெல்லாம் உன் ஞாபகம் வருது, இப்படியா? ஆனா உனக்கு இப்படி தோணாதே” என்றான் ஆழ்ந்த குரலில்.

“என்ன எதிர்பார்க்கிறான் இவன்” என்று மீண்டும் புரியவில்லை நர்மதாவிற்கு.   

“எனக்குத் தோணினா தான் பேசுவீங்களா, இல்லை எனக்கு தோணலைன்னு உங்க கிட்ட சொன்னேனா” என்றாள் நர்மதாவும் உணர்ந்து.

“அப்போ பாஸ்போர்ட் வந்துடுச்சு தானே! விசா அப்ளை பண்றியா. ஜஸ்ட் டூரிஸ்ட் விசா. நான் இங்க இருக்கறேன்னு குடுக்க நிறைய வாய்ப்பு இருக்கு, வர்றியா?” 

“நீங்க வரமுடியாதா”

“இப்போதைக்கு முடியாது, சிக்ஸ் மந்த்ஸ் ஆகும்”

“அப்பா கிட்ட சொல்லுங்க” என்றாள்.

“சரி, நான் பேசறேன்” என்று உடனே வைத்து விட்டான்.

என்னவோ மனதிற்கு பிசைந்தது. மிகவும் கனமான மனநிலையில் அர்ஜுன் இருப்பது போல தோன்றியது.

“இனிமே இப்படி பேசாம அவனை டென்ஷன் பண்ணாத. உன்னோட விளையாட்டுத்தனத்தை கை விட்டு வளர்ந்த பொண்ணா மாறு. உன்னை எவ்வளவு லவ் பண்றான். உன்னை எவ்வளவு மிஸ் பண்றான். நீயும் அப்படி தான் இருக்கியா” என்று ஒரு சுய ஆராய்ச்சி.

அவள் வெளியே வந்த போது அப்பாவிடம் அர்ஜுன் போனில் பேசிக் கொண்டு இருந்தான்.

“ம், சரி, சரி” என்று வார்த்தைகள் மட்டுமே அவர் சொல்லிக் கொண்டு இருந்தார். வைத்தவுடன், “விசா அப்பளை பண்ண சொல்றான், பண்ணிடலாமா?” என்றார்.

“சரிப்பா” என்றாள்.

பிறகு அதற்கான வேலைகள் ஆரம்பிக்க… முத்தாய்ப்பாக ஒரு மெடிக்கல் செக் அப் செய்து விடுவோம் என்று சில டெஸ்ட்களுக்கு கொடுக்க,

அப்போதுதான் தெரிந்தது நர்மதா கர்ப்பம் என்று.

இனிய அதிர்ச்சி அவளுக்கு, அவ்வளவு சந்தோஷம் கௌரிக்கும் ஷண்முக சுந்தரத்திற்கும்,

தனியாக அவளிடம், “உனக்குத் தெரியவேயில்லையா” என்றார் கௌரி,

“எனக்கு எப்பவும் சரியா கரக்ட் டேட்ல ஆகாது. சோ நான் கவனிக்கலை” என்று அசடு வழிந்தாள்.

“நல்ல பொண்ணு போ” என்று அவளை அமர வைத்து திருஷ்டி சுற்றினார்.

“எனக்கு வாமிட் வரலை, தலை சுத்தலை, எதுவுமே வித்தியாசமா தோணலை” என்று சந்தேகம் கேட்க,

“எல்லோருக்கும் ஓரே மாதிரி இருக்காது, உங்க அப்பா அம்மாக்கு அர்ஜுன்க்கு நீ சொல்லு! அப்புறம் நான் பேசறேன்!”

“ம்ம்ம் சரி” என்றவள் முதலில் அர்ஜுனிற்கு அழைத்தாள். அங்கே  பின்னிரவு நேரம். நல்ல உறக்கத்தில் இருந்தான். விடாமல் அடித்தாள், ஒரு வழியாக மூன்றாவது முறை விழித்த அர்ஜுன், நம்பர் யாரது என்று கூட பாராமல் எடுதத்தவன் “ஹலோ” என்க,

“எனக்கொரு டவுட்டு” என்ற அவனின் மனைவி குரல் கேட்டது.

“ஹேய்ய் அம்மு, என்ன இந்த நேரத்துல” என்று அவசரமாக எழுந்து அமர்ந்தான்.

“அதான் டவுட்டுன்னு சொன்னேனே” என்றாள் ராகமாக.

அந்தக் குரலில் தெரிந்த குதூகலம், ஒரு கொஞ்சல் “என்ன டவுட்டு?” என்று அவனையும் உற்சாகமாகக் கேட்க வைத்தது.

“இல்லை, இந்த சினிமால வில்லன் ஒரு தடவை ரேப் பண்ணினா உடனே பேபி ஃபார்ம் ஆகிடும், எப்படி இது பாசிபிள்ன்னு யோசிப்பேன்” என்றாள்.

சில நொடிகள் என்ன பேசுகிறாள் என்பது போல யோசித்தவன்,

“ஹேய்ய்ய் நிஜமா தான் சொல்றியா” என்று கத்தினான்.

“எஸ், எனக்கும் ஃபார்ம் ஆகிடுச்சு போல” என்று கொஞ்சி சொல்ல,

சந்தோஷம் கூடவே, அவளின் பேச்சு கொடுத்த சிரிப்பு, “ஹ, ஹ” என்று சிரித்தவன், “உலகத்துலயே குழந்தை உருவானதை எந்த மனைவியும் அவங்க கணவன் கிட்ட இப்படி சொல்லியிருக்க மாட்டாங்க. மொத்ததுல என்னை வில்லன் சொல்லிட்ட” என்று பெரும் சிரிப்பு சிரித்தான் சந்தோஷத்தில்.

“நோட் தி பாயின்ட். நான் என்னை ஹீரோயின்னு சொல்லிக்கலை”

“நீ சொல்லிக்கலைன்னாலும் எனக்கு நீ ஹீரோயின் தான் அம்மு” என்றான் காதலாக.

“இப்படி துணிஞ்சு பயங்கரமா எனக்கு ஒரு காம்ப்ளிமென்ட் நீங்க குடுக்கறதாலா, நானும் உங்களை ஹீரோன்னு ஒத்துக்கறேன்” என்றாள் போனால் போகிறது என்பது போல.

“நீ பேசியே என்னை கொல்ற, அம்மூ ஐ லவ் யு” என்றான் இன்னும் காதலாக.

“ஐயோ, கனவு கண்டுட்டு இருந்தீங்களா எழுப்பிட்டேனா இப்படி உளறீங்க”

“வாழ்க்கை முழுசும் இப்படி எப்பவுமே உளறிட்டே இருக்கணும் உன்னோட” என்றான்.

“ம்கூம், இது ஆகாது! ஏதோ மந்திரிச்சு தான் தெளிய வைக்கணும் போல”

“நீ மந்திரம் போட்டதுனால தான் நான் இப்படி ஆகிட்டேன். எப்படி தெளிய வைப்ப” என்று இன்னும் பேச ஆரம்பித்தவர்கள் பேசிக்கொண்டே இருக்க,

“எங்கேடா இவளை ஒரு மணிநேரமாக காணோம், சாப்பிடக் கூட இல்லை” என்று எட்டிப் பார்த்த கௌரி பேசிக்கொண்டே இருப்பதைப் பார்த்து, “அவனைக் கொஞ்ச நேரம் தூங்கவிடு, நீ சாப்பிட வா நர்மதா” என்று சொல்ல,

“மா, நீங்க பேசறீங்களா?”

“அவன் ஃப்ரீயா இருக்கும் போது கூப்பிடச் சொல்லு, நீ வா உங்க அம்மா கிட்ட சொல்லு” என்று சொல்லிச் சென்றார்.

“ஹேய், என்ன இது? எங்கம்மா கிட்ட பேச சொல்ற இப்ப, i am excited now நான் இப்படி உன்கிட்ட வழியறதை நீ மட்டும் தான் ரகசியமா வெச்சிக்கணும். மானத்தை வாங்கிடாத” என்றவன்,

“அது என்ன அத்தைல இருந்து அம்மா ஆகிட்டாங்க?” .    

“அதுவா உங்களை ரொம்ப செல்லம் கொஞ்சறாங்க, கொஞ்சம் நானும் எடுத்துக்கலாம்னு”

“அதையேன் எடுத்துக்குற? உன்னை தான் வாழ்க்கை முழுசும் நான் கொஞ்சப் போறேனே”

“அது எனக்குத் தெரியும், ஆனா உங்களை கொஞ்சறதுல பங்கு வாங்கணும் தானே” என்று சொல்லும்போதே,

“நர்மதா, வந்தியா நீ” என்று கெளரியின் குரல் கேட்க,

“வந்துட்டேன்”, என்றவள் “பய்” என்று சொல்லி வைத்து விட்டாள்.

வெளியே சென்றவுடன் “அம்மாகிட்ட பேசு முதல்ல”

“இல்லை, பேசலை, நான் நேர்ல போகட்டுமா?”

“சாப்டுட்டு போ”

“அங்க போய் சாப்பிடறேன் மா, ப்ளீஸ்” என்று கெளரியிடம் சம்மதம் வாங்கி அம்மா வீடு கிளம்பினாள். மனம் முழுவதும் சந்தோஷம் சிறகடித்தது.

அதற்கு சற்றும் குறையாமல் அர்ஜுனிற்கும், அவனுக்குப் பிறகு எங்கே உறக்கம் வரும். ஆனால் கூடவே ஒரு கவலை கூட. கண்டிப்பாக ஷண்முக சுந்தரம் நர்மதாவை இங்கே அனுப்ப மாட்டார், இனி அவன் இந்தியா சென்றால் தான். நன்கு அறிவான்.

செல்லும் நாளுக்காய் காத்திருக்க ஆரம்பித்தான்.   

 

Advertisement