Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

பாஸ்போர்ட் ஆபிஸ் வந்து தான் எழுந்தாள் நர்மதா, இப்போது சற்று தெளிந்திருந்தாள், அது அவளின் சிரிப்பிலேயே தெரிந்தது.

தூக்கம் கண்களில் இருந்தாலும் ஒரு மலர்ந்த சிரிப்பு, அர்ஜுனை கொள்ளை கொள்ளும் சிரிப்பு. அதைக் கண்களால் சிறை செய்தான்.

கௌரி காரிலேயே அமர்ந்திருக்க, இவர்கள் ஒன்பது மணிக்கு உள்ளே சென்றனர். ஒன்பது பதினைந்திற்கு வெளியே வந்து விட்டனர்.

“இப்படி கூட பெர்ஃபெக்ட்டா வேலை நடக்குமா” என்று சிலாகித்துக் கொண்டாள் நர்மதா.  

“எப்படி பெர்ஃபெக்டா நடந்தாலும் அதுலயும் நம்ம மக்கள் சில பேர் கோல்மால் பண்ணிடுவாங்க, அதனால பெர்ஃபெக்டா இருக்குறவங்களுக்கும் கெட்ட பேர்” என்றான் அர்ஜுன்.

இந்த பேச்சு நடந்தது காரில், “கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல நாட்ல மனுஷங்க வேலையை பத்தி பேசறாங்க ரெண்டு பேரும், அவ்வளவு புத்திசாலிங்க” என்று இருவரையும் ஒரு லுக் விட்டார் கௌரி.

அவரின் பார்வையை புரிந்த அர்ஜுன், “அதுக்காவது என்கிட்டே பேசறான்னு சந்தோஷப்ப்படுங்கம்மா” என்றான் கெளரியை பார்த்து, நர்மதா புரியாமல், “என்ன? என்ன?” என்க.

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!” நான் வல்லவன் நல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு அம்மா கிட்ட சொல்லிக்கறேன்” என்றான் பாவனையாக,

“ஈஈஈஈ” என்று அத்தனை பல்லையும் இழுத்துப் பிடித்து, “நம்பிட்டேன்” என்றாள் நர்மதா, இப்படியாக பன்னிரெண்டு மணிக்கு ஊர் வந்து சேர்ந்தனர், அதன் பின் தான் உணவு உண்டனர், அர்ஜுனிற்கு ஹோட்டல் உணவு வேண்டாம் என்று நினைத்ததால் யாரும் உண்ணவில்லை.

உணவு உண்டு கிடைத்த தனிமையில் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றனர்,

“அம்மு நான் நாளைக்கு ஊருக்கு போகணும், நீ எங்க இருப்ப, நான் அப்பா கிட்ட பேசணும்”

“என்கிட்டே கேட்டா எனக்கு என்ன தெரியும்?”

“அப்பா நான் வர்ற வரை உன்னை இங்க இருக்க சொல்றார்! முடியுமா?”

“அப்போ என் வேலை”

“அவருக்கு அது ஒரு பொருட்டில்லை விட்டுட சொல்வார்”

அவன் சொன்னதும் அவன் முன் சண்டையிடுவது போல வந்து நின்றாள்,

மறுபடியுமா என்று சலிப்பாக இருந்த போதும் பேசி முடித்து விடுவது என்று அர்ஜுனும் சளைக்காமல் பார்த்தான்.

“எவ்வளவு ஈசியா வேலையை விட சொல்றீங்க, how dare you are?”  

“இன்னும் இது வேறா, என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்” என்பது போல பார்த்து நின்றான் அர்ஜுன்,

“எங்கப்பா எவ்வளவு செலவு செஞ்சு என்னை படிக்க வெச்சார் தெரியுமா? நான் காலேஜ் பத்தி சொல்லலை. அது லோன்ல படிச்சேன். ஆனா ஸ்கூல், பெஸ்ட் ஸ்கூல், பெஸ்ட் எடுகேஷன், இப்ப நான் வேலைய விட்டுட்டு வீட்ல சும்மா உட்காரணுமா, எங்கப்பாக்கு நான் செய்ய வேண்டாமா? என் லோன் யார் கட்டுவா? அதுவும் எங்கப்பா தலை மேல விழணுமா?”

“ஒன்னும் பிரச்சனையில்லை லோன் நான் பே பண்றேன், நீ உங்கப்பாக்கு செய்றதுக்கும் எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. எதுனாலும் நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.

“என்ன பேச்சு இது?” என்றாள் இன்னும் கோபமாக.

“என்ன சொல்லிவிட்டேன் நல்லதாகத் தானே சொன்னேன்” என்று அர்ஜுன் விழித்தான்.

“நீங்க ஏன் பே பண்ணனும், முதல்ல எங்க அப்பா அம்மாக்கு செய்யறதுக்கு நீங்க ஏன் எனக்கு பெர்மிஷன் கொடுக்கணும். உங்க அப்பா அம்மாக்கு நீங்க செய்ய என்கிட்டே பெர்மிஷன் கேட்பீங்களா? இல்லையில்லை! பசங்க கேட்காதப்ப பொண்ணுங்க ஏன் கேட்கணும், பசங்களை மாதிரி தானே இப்பல்லாம் எந்த வித்தியாசமும் காட்டாம பொண்ணுங்களை படிக்க வைக்கறாங்க. உங்களுக்கும் எங்களுக்கும் ஏதாவுது பீஸ் டிப்ஃபரன்ஸ் வருதா ஸ்கூல்ல காலேஜ்ல” என்றாள் ஆவேசமாக.

நர்மதா கேட்பது எல்லா பெண்களுக்கும் தோன்றும் மிக மிக நியாயமான கேள்வி, ஆனால் அந்தக் கேள்விக்குரியவன் அர்ஜுன் அல்ல, இந்தக் கேள்விகள் எல்லாம் எப்போதும் அர்ஜுனிற்குள்ளும் உண்டு.

அதனால் தான் எங்கே செட்டில் ஆகப் போகிறோமா தெரியலை என்று  பொய் சொல்லி அவளின் தந்தைக்கு சீர் வரிசையைக் கொண்டு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. உண்மையில் அவனுக்கு வெளிநாட்டில் செட்டில் ஆகும் எண்ணமில்லை ஏன் சில வருடங்கள் வெளிநாட்டில் இருக்கும் எண்ணம் கூட இல்லை, சில மாதங்கள் போவான் வருவான் அவ்வளவே.

அவனுக்கு பெற்றோர் உடன் இருக்கும் எண்ணம் தான், சில வருடங்கள் கழித்து தந்தைக்கு இன்னும் வயசாகும் போது ஈரோடு வரும் எண்ணம் தான்.

ஆனால் அர்ஜுனைப் பற்றி எதுவும் நர்மதாவிற்கு தெரியாதே, இன்னும் அவனை அறியும் தன்மையும் வரவில்லை, மனம் விட்டும் பேசவில்லை, சகஜமாக இந்த இரண்டு நாட்களில் பேசினாலும் அதில் வாக்குவாதங்கள் தான் அதிகம்.

அர்ஜுனிற்கு எரிச்சலும் கோபமும் ஒருங்கே தோன்றியது, “ரொம்ப பேசற நீ, ஓரே ஒரு சந்தோஷம், எங்கப்பாம்மா படிக்க வைச்சாங்க, நான் சம்பாரிச்சு உங்களுக்கு ஏன் குடுக்கணும்னு கேட்காம போன” 

“ஓஹ் அப்படி ஒரு விஷயம் இருக்கோ” என்பது போல நர்மதா சீரியசாக  யோசிக்க துவங்க,

அர்ஜுன் நொந்தே விட்டான். “அப்படி பசங்களும் யோசிச்சா என்ன ஆகறது”, என்று அர்ஜுனும் ஒரு தியரி பேச,

“அப்ப அவங்க லவ் லைஃப் தான் பாதிக்கும்” என்று அதைப்பற்றி அ னா                    ஃ  ன்னா கூட தெரியாத் நர்மதா பேச,

“பசங்களுக்கு தான் லவ் லைஃப் பா பொண்ணுங்களுக்கு இல்லையா” என்றான் பதில் கேள்வி அர்ஜுன் கேட்டான்.

நர்மதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க,

“ஏய், நீ புத்திசாலியா? முட்டாளா?” என்றான் கடுப்பாக அர்ஜுன்.

“முட்டாள்ன்னே வெச்சிக்கங்க”

“எதுக்கு அதை வெச்சிக்க, அதுதான் நீ, கல்யாணமாகி ரெண்டு நாள் ஆச்சு! ஒரு ஹக் இல்லை ஒரு  கிஸ் இல்லை, அதை விட்டுட்டு சும்மா எப்போ பார்த்தாலும் பொண்ணுங்களுக்கு நீ ரூல்ஸ் பேசற”,

“நான் உங்களை ஹக் பண்ண வேண்டாம், கிஸ் பண்ண வேண்டாம்னு எப்போ சொன்னேன்! நீங்க பண்ணாம என்கிட்டே சண்டை போடுவீங்களா, என்ன நானா வந்து அதெல்லாம் கொடுக்கணுமா? இதுல நான் முட்டாளாம்! நான் முட்டாளா? நீங்க முட்டாளா?” என்று பதிலுக்கு அவளும் முறைத்து நின்றாள்.  அவளாகத் தான் போய் கொடுக்கப் போகிறாள் என்று தெரியாமல்.

எத்தனை முறை இவளிடம் பல்ப் வாங்குவது என்று அர்ஜுனும் முறைத்து நின்றான்.   

“ஹேய் ஏன் பேச மாட்ட நீ , பக்கத்துல படுத்தா தூக்கம் வராதுன்னு நீ தான் சொன்ன”

“ஆமாம்! சொன்னேன்! அது தூங்கும் போது தானே, நீங்க தூங்கு சொன்னிங்க பக்கத்துல படுக்க வேண்டாம் சொன்னேன், ரெண்டு நாளா நான் தூங்கிட்டேவா இருக்கேன்” என்று அவள் கேட்க

“அப்படியே உன்னை கடிச்சு கொதறணும்னு ஆத்திரமா வருது! எனக்கு தெரிஞ்சு போச்சு! என்னை நீ நல்ல பையனா இருக்க விடமாட்ட, ரெண்டு நாலும் தூங்கிட்டேவா இருந்தேன்னா கேட்கற” என்று கையெட்டும் தூரத்தில் இருந்த அவளை இழுத்து மேலே மோத விட்டு அவளை அணைத்துப் பிடித்தான்.

“அர்ஜுன்” என்று அம்மாவின் குரல் கேட்டது. பேசிப் பேசியே நேரத்தை ஓட்டறோம் என்று சொன்னவன், “அம்மா வரேன் மா” என்று குரல் கொடுத்து அவசரமாக ஒரு இதழ் ஒற்றுதலை நடத்தி அவளை விடுத்தவன் வெளியே விரைந்தான்.

நர்மதாவின் உள் ஏதோ மாற்றங்கள் தான், ஆனால் அதை உணர விடாமல் “நர்மதா” என்று அவளையும் கௌரி அழைக்க வெளியே விரைந்தாள்.

மீண்டும் அங்கே உறவினர்கள் கூட்டம். “இன்னைக்கு நைட் அர்ஜுன் கிளம்பறான் இல்லையா, அதுதான் சென்ட் ஆஃப் பண்ண வந்திருக்காங்க” என்று கௌரி விளக்கம் கொடுத்தார்.

“என்ன ஊர்க்கு கிளம்புகிறானா நாளை தானே” யோசித்தவள், “நாளைக்கு தானே அத்தை” என்று கேட்க,

“நாளைக்கு தான்மா யு எஸ் போறான், ஆனா சென்னை போகணுமில்லை! மறந்துட்டியா?” என்றார்.

“மறந்துட்டேனா? நான் தான் இதையெல்லாம் யோசிக்கவே இல்லையே! மனது பிசைந்தது! நான் எங்கே இருப்பேன்!” முகம் விழுந்து விட்டது. இன்னம் தனக்கு வாழ்கையை குறித்த சீரியஸ்னஸ் வரவில்லையோ என்று ஒரு சந்தேகம் வந்தது. அர்ஜுனை குறை சொல்ல முடியாது இந்த விஷயத்தில் என்றாலும்,

கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். ஆனாலும் அவளுக்கு என்ன தெரியும் என்ன சொல்லுவாள், அப்போது நான் இங்கே இருப்பேனா சென்னை போவேனா, அர்ஜுனை தேடினாள், அவள் இருந்த ஹாலில் கண்ணில் படவில்லை,

“வா, எல்லோருக்கும் சாப்பிடக் கொடுக்கலாம்” என்று கௌரி அழைத்து சென்று, காபி டீ பலகாரங்கள் என்று கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்க சொல்ல, அவர் சொன்னதை செய்தாள்.

அர்ஜுன் கௌரி ஷண்முக சுந்தரம் மூவரும் அவளின் மேல் பார்வையை பதித்து இருந்தனர். நேற்று சத்யாவின் மாமியார் பேசியதற்கு முகம் காட்டுவாளோ என்பது போல. எதையும் நர்மதா காட்டவில்லை. எல்லோருடனும் இன்முகத்தோடு தான் பழகினாள். சத்யாவின் மாமியாரிடமும் சகஜமாகப் பேசினாள். மூவருக்குமே மிகவும் திருப்தி.  

அதன் பிறகு தனிமை கிடைக்கவில்லை, மாலை ஆறு மணிக்கு மேல் அவளின் அப்பா அம்மா தம்பி என்று அவர்களும் வந்தனர். அம்மா அவளிடம் தனியாக, “நீ சென்னை போறியா கண்ணு, வேலைக்கு போகப் போறியா இல்லை மாப்பிள்ளை கூட்டிட்டு போறாரா” என்றார்.

“அம்மா, எனக்குப் பாஸ்போர்ட் இன்னக்கு தான் அப்பளை பண்ணியிருக்கோம்”,

“வந்தவுடனே போயிடுவல்ல?”

“அப்படியெல்லாம் போக முடியாதும்மா, விசா குடுக்க மாட்டாங்க”

“அப்போ எங்க இருப்ப?” என்ற கேள்வியை அவரும் முன்வைக்க.

“தெரியாது” என்றாள்.

நர்மதாவின் அம்மா யோசிக்கவெல்லாம் இல்லை நேராக கெளரியிடம் சென்றவர், “அண்ணி, நர்மதா எங்க இருப்பா?” என்று கேட்டு விட்டார்.

கௌரிக்குமே தெரியாதுதானே, “அர்ஜுன்” என்று அவனை அழைத்தவர், “உன் அத்தை நர்மதா எங்க இருப்பான்னு கேட்கறாங்க” என்றார் நேரடியாக.

“அதுவா அத்தை, உங்க பொண்ணுக்கு இவ்வளவு நேரம் டைம் கொடுத்தேன். அவ சொல்ற மாதிரி தெரியலை, இப்ப நானே முடிவெடுத்துட்டேன். அவ அங்க சென்னைல இருக்குற எங்க வீட்ல தான் இருப்பா, தனியா இருக்க முடியாது, செக்யுரிட்டி அர்ரேஞ் பண்ணிடலாம், ஆனாலும் கூட எங்கம்மாவும் நீங்களும் தான் நான் வர்ற வரை மாத்தி மாத்தி இருக்கணும், வேற ஆள் வைக்க முடியாது, எனக்கும் அது பிடிக்காது, நர்மதாவும் யாரோடையும் அட்ஜஸ்ட் ஆக மாட்டா” என்றான் தெளிவாக.

“அம்மாடி, என்ன இது?” என்பது போல இரண்டு அம்மாக்களும் விழித்து நின்றனர்.

கௌரி தான் கையை ஏகத்துக்கும் பிசைந்தார், ஷண்முகசுந்தரம் ஒத்துக் கொள்ளவே மாட்டார்.

நர்மதாவின் அம்மாவிடம், “அண்ணி, எல்லோரும் இப்ப நைட் சாப்பிட்டு கிளம்பிடுவாங்க, அப்புறம் நம்ம பேசிக்கலாம். இப்ப பேசினா அப்பாவும் மகனும் சண்டை தான் போட்டுக்குவாங்க” என்றார்.

எல்லோரும் ஒரு வழியாக கிளம்பவும், அங்கே ஆரம்பித்தது அப்பாவிற்கும் மகனிற்கும் சண்டை.

மிகவும் சீரியசான சண்டை, “நீ இருக்கும் போது மருமகளை கூட்டிட்டுப் போ, நீ இல்லாத போது நர்மதாவை இங்க விட்டுடு, அவ ஒன்னும் ஐ ஏ எஸ் சோ ஐ பீ எஸ் சோ இல்லை, நம்ம மருமக நாட்டுக்காக உழைக்கறான்னு நாங்க வந்து அங்க உட்கார்ந்து இருக்க”,

“இங்க நம்ம டர்ன் ஓவர் என்ன தெரியுமா, நீ தான் முட்டாள் தனமா அங்க போய் ஒரு க்ரேஸ்ல உட்கார்ந்து இருக்கேன்னா, அதே தப்பை நர்மதாவையும் செய்ய சொல்றியா, நான் என் மருமகளை எந்த வேலைக்கும் அனுப்ப மாட்டேன், இங்க நமக்கே ஆயிரத்தி எட்டு வேலை  இருக்கு”,

“அவ என் கூட நம்ம தொழிலை பார்க்கட்டும், நீ கிளம்பு, இந்தியா வந்ததுக்கு அப்புறம் கூட கூட்டிட்டு போ, இல்லை முடியாதுன்னா உன்னையும் எங்கயும் அனுப்ப மாட்டேன்” என்று விட்டார் முடிவாக,  சில சமயங்களில் அவரின் பேச்சை மீறவே முடியாது. இதுவும் அது போல ஒரு சமயம் என்று புரிந்தது.

நர்மதா எல்லாவற்றையும் ஒரு இயலாமையோடு பார்த்திருந்தாள், பெரிய சத்தங்கள் நடுவில் யாரும் போக முடியாத சத்தங்கள். நர்மதாவின் அப்பாவும் அம்மாவும் கூட எதுவும் பேசவில்லை.

ஷண்முக சுந்தரம் சொல்வது சரியாக தான் பட்டது. அவர்களது தொழில் பெரிய சாம்ராஜ்யம். சொத்துக்களும் நில புலன்களும் அதிகம். ஒற்றை ஆளாய் ஷண்முக சுந்தரம் அதை சமாளிக்கிறார் என்பது இப்போது கவனித்து பார்க்கையில் நர்மதாவின் அப்ப்பாவிற்கும் புரிந்தது.

என்ன சம்பளம் வந்து விடும் என்று இந்த மருமகன் அங்கே போய் உட்கார்ந்து இருக்கிறார் என்பது போல தான் அவரின் எண்ணம் கூட இப்போது.

என்ன இருந்தாலும் எதுவும் சொல்ல முடியாது, அப்பா மகன் இருவருமே பிடிவாதக்காரர்கள் என்று பார்க்கையிலேயே புரிந்தது.

“நீ என்னம்மா சொல்ற” என்று நர்மதாவைப் பார்த்து ஷண்முக சுந்தரம் கேட்க, என்ன சொல்லுவாள் விழித்தாள்.

சில நொடிகள் தயங்கியவள், “இவர் எப்படி சொல்றாரோ அப்படி” என்று அர்ஜுனைக் கை காட்டவும்,

அர்ஜுன் வியந்து அவளை நோக்கினான், இவ்வளவு நேரமாக உரிமை அது இது என்று பேசிவிட்டு இப்போது எப்படி பேசுகிறாள் என்பது போல, ஆனாலும் ஒரு வகையில் அந்த பதிலில் அவனுக்கு மிகவும் திருப்தி.

“அப்பா” என்று அவரிடம் பொறுமையாக பேச ஆரம்பித்தான், “நீங்க சொல்றது எல்லாம் சரி, எவ்வளவு நாள் வேலைக்குப் போவா அவ, ஒரு குழந்தை பொறக்கற வரை. அதுக்கப்புறம் ஒரு ஸ்கூல் போகற வரை வேலைக்குப் போக முடியாது, நாலு வருஷம் அந்தப் படிப்பபை படிச்சிருக்கா, மூணு மாச ட்ரைனிங் போயிருக்கா, பணம் நமக்கு பெரிய விஷயமில்லை, ஒரு சம்பளம் கூட முழுசா வாங்காம நிக்கறதா”

“ஏண்டா. ஏண்டா, நர்மதா சம்பளத்தை விட பல பேர் நம்ம கிட்ட அதிகமா வாங்குவாங்க, அவ சம்பளம் குடுக்கற முதலாளி டா, நீ தான் சொல் பேச்சு கேட்கறது இல்லைன்னா! அவளையும் சேர்த்து கெடுக்காத!”

“இப்படி பேசுபவரிடம் என்ன பேச, என்ன நான் முதலாளியா ஒண்ணுமே புரியலை உலகத்திலே” என்று இன்னம் விழித்து நின்றாள்.

“எப்போயிருந்து இவர் பொண்ணுங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்” என்று கௌரியும் விழித்து நின்றார். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்று பார்ப்பதை விட, அவரின் மருமகள் என்ற எண்ணம் தான் அதிகம். அர்ஜுனிற்கு அது நன்கு புரிந்தது.

“நான் அவ கிட்ட பேசிட்டு சொல்றேன்பா”

“எப்போ, நைட் நீ சென்னை கிளம்பறன்னு வேற சொன்ன”

“இவ்வளவு பேசிட்டு, கிளம்பு கிளம்புன்னா எங்க கிளம்புவேன், நாளைக்கு நைட் ரெண்டு மணிக்கு பிளைட், நாளைக்கு மதியதுக்கு மேல ஆபிஸ் போகணும். அதனால் காலையில கிளம்பினா போதும். டிரைவரை ஒரு அஞ்சு மணிக்கு சொல்லிடுங்க”

“நாளைக்கு அவரை வழியனுப்ப நர்மதா போகறாளா”, என்று மெதுவாக அவளின் அப்பாவிடம், அவளின் அம்மா கேட்க,

“நாம எதுவும் கேட்க வேண்டாம், அவளே போன் பண்ணுவா, கிளம்பு” என்று சொல்லி எல்லோரிடமும் பொதுவாக சொல்லிக் கொண்டு அவளின் பெற்றோர் கிளம்பி விட்டனர்.

பின்பு அர்ஜுன் ரூமினுள் அடைந்து கொண்டான். “போ நர்மதா! இந்த பால் கொண்டு போய் கொடு! நீயும் சாப்பிடு!” என்று நர்மதாவையும் ரூமின் உள் செல்ல வைத்தார் கௌரி.

Advertisement