Advertisement

அத்தியாயம் பதினேழு:

அர்ஜுனிற்கும் படுத்தும் உறக்கமில்லை, அளவுக்கதிகமாக உண்டது அயர்வை கொடுத்தது. ஆனால் உறக்கமில்லை. ஒரு வலி வேறு வயிற்றில் ஆரம்பித்தது.

நர்மதாவிற்கு இப்போது சத்யாவின் மாமியார் பேசினது பின்னிற்கு போய்விட்டது,

என்னவோ அர்ஜுனை வருத்துவது போல தோன்றியது. அவனை திரும்பி பார்த்து படுத்தாள். நேற்று அவன் செய்ததை இன்று அவள் செய்தால், அதாகப்பட்டது அவனை சைட் அடித்தாள்.

நேற்று காலை முதல் கணவன் அல்லவா, எல்லாவற்றையும் அந்த நொடி தூக்கி தூர வைத்து,

அவனை மட்டுமே கவனிக்க ஆரம்பித்தாள், tall young man isn’t it , of course good looking and handsome , அவன்  கண்மூடி இருந்தான் உறங்கவில்லை என்பது புரிந்தது, நடுவில் இருந்த தலையணை தடையை எடுத்தவள், அவன் அருகில் நெருங்கி படுக்க, அசைவு உணர்ந்து நேராக படுத்திருந்தவன், அப்படியே தலையை திருப்பி பார்த்தான் என்ன செய்கிறாள் என்பது போல.

சற்று அருகில் படுத்திருக்க,

“கிட்ட படுத்தா தூக்கம் வராது சொன்ன”,

“ஆமாம்! ஆனா இப்போ நான் தூங்கலை, தூக்கம் வரும் போது தள்ளி படுத்துக்கறேன்”, என்று விளக்கம் சொல்ல,

அர்ஜுன் வாகாக அவளைத் திரும்பிப் பார்த்து படுத்து சிரித்தான்,

“எதுக்கு சிரிக்கறீங்க”,

“பின்ன சிரிக்காம, முதல்ல விட கிட்டப் படுத்திருக்க ஓகே, ஆனா இன்னும் கேப் இருக்கே”, என்று சிரித்தான்.

“கேப் எல்லாம் இவ்வளவு தான் என்னால பில் பண்ண முடியும், இதுக்கு மேல் நீங்க தான் பில் பண்ணனும்”, என்று நர்மதாவும் புன்னகைத்தாள்.

“என்ன இது அதிசயம்! என்னைப் பார்த்து சிரிக்கற நீ?”,

“என்ன கேள்வி இது என்பது போலப் பார்த்தாள்,

“யோசிச்சுப் பாரு” என்றவனைப் பார்த்து சற்றும் யோசிக்காமல்,

“அது உங்களுக்கு என் மேல இஷ்டம்ன்னு தெரியறதுக்கு முன்னாடி நான் பார்த்து சிரிச்சதில்லை” என்று விளக்கம் கொடுத்தாள்.

“அதெல்லாம் செல்லாது, இப்போ எப்படி இருக்க?”, என்று அவளின் சிரிப்பை நினைத்து அர்ஜுன் கேட்க,

“எப்படி இருக்கேன் நான், நீங்க தான் சொல்லணும், இப்போக் கூட கண்ணாடில பார்த்தேனே! நல்லா தானே இருக்கேன்!” என்றாள் வேண்டுமென்றே,

“நானே வயிறு வலில இருக்கேன், நீ இப்ப பார்த்து இந்த டைலாக் அடிக்கற, கேப் பில் பண்ணு சொல்ற” என்றான் சலிப்பாக,

“ரொம்ப வலிக்குதா” என்று எழுந்தமர்ந்தாள்,

“ஆமாம்”, என்று சொல்லியே விட்டான். திடீரென்று ஒரு வலி, அவன் சொன்ன பாவனையில் நர்மதா பயந்து விட்டாள்.

“அம்மாவைக் கூப்பிடு” விட்டு விட்டு ஒரு வலி,

நர்மதா வேகமாக வெளியில் சென்று பார்த்தாள், வீடே உறக்கத்தில் இருந்தது, கெளரியின் ரூமும் மூடி இருந்தது.

யோசிக்கவேயில்லை, கதவை தட்டி, “அத்தை” என்று அழைத்தாள், உடனேயே ஷண்முக சுந்தரம் வெளியில் வர, கௌரியும் வந்தார்.

“அவருக்கு வயிறு வலிக்குதாம், உங்களை கூப்பிட சொன்னார்” என்றதுதான், கௌரி ரூமிற்கு விரைந்தார். அவருக்கு தெரியும் அர்ஜுன் அதிகமான வலி இல்லை என்றால் சொல்ல மாட்டான்.

நர்மதாவிற்கு அவனிற்கு வயிறு வலி என்ற கவலையையும் விட, தன்னால் என்ற கவலை அதிகமாக இருந்தது. அதை விட பயம், இப்படி தன்னால் என்று தெரிந்தால் வீட்டில் என்ன சொல்வார்களோ என்பது போல,

உள்ளே சென்றால் “அம்மா வலிக்குதும்மா” என்று சிறு பிள்ளை போல அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

பக்கத்தில் ஷண்முக சுந்தரம் வேறு, பயந்து விட்டாள். “ஐயோ! அவனின் அப்பாவிற்கு தெரிந்தால் தன்னை திட்டுவாரே” என்று கண்கள் கலங்க ஆரம்பித்தது. 

“வலிக்குது” என்று சொல்லி நர்மதாவைப் பார்க்க, அங்கே நர்மதா கலங்கி நிற்பதை பார்த்தவன்,

“ஒன்னுமில்லை சரியாகிடும்” என்றான் அந்த வலியிலும் முகத்தை சுருக்கி,

அவனின் அப்பா அம்மா திட்டுவார்களோ என்று நர்மதா பயத்தில் கலங்க, தன் வலியை நினைத்து அவள் கண்கலங்குகிறாள் என்ற நினைப்போடு அர்ஜுன் சொன்னது அவளுள் ஒரு குற்ற உணர்ச்சியைக் கொடுக்க, மளமள வென்று நர்மதாவின் கண்களில் நீர் இறங்கியது.

அவள் அழுவதைப் பார்த்து அர்ஜுனின் பெற்றோர்களும் அர்ஜுனின் வலியைப் பார்த்து கலங்குகிறாள் என்று தான் நினைத்தனர்.  மருமகள் கலங்கவும் ஷண்முக சுந்தரமும் உடனே மருத்துவரை அழைத்தார்.

அவர் வந்து பார்த்து மாத்திரைகள் கொடுத்து, அவனின் வலி குறைந்த பின் தான் சென்றார், பின்பு தான் அர்ஜுன் உறங்க ஆரம்பித்தான் அதற்கு பின் தான் கௌரியும் ஷண்முக சுந்தரமும் உறங்க சென்றனர். மணி பன்னிரண்டிற்கும் மேல், உறக்கம் சுத்தமாக விடை பெற்றிருந்தது நர்மதாவிடம்.

மனதில் ஏதோ ஒரு பயம், தானாக அர்ஜுனிடம் நன்றாக நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ தடைகள் என்பது போல, இந்த திருமணப் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து இப்படித் தானே.

அதன் பிறகு உறக்கம் என்பதே இல்லை, மணி நேரங்கள் ஓடிய போதும் உறக்கம் அணுகவேயில்லை, உறங்கும் அவனைப் பார்ப்பது நடை பயில்வது, போனில் கேம் விளையாடுவது, படுப்பது, எழுவது, அவனைப் பார்ப்பது என்று நேரம் அதிகாலை ஐந்து மணியானது.

அர்ஜுனின் போன் அலாரம் அலறியது, போன் எங்கே என்று பார்த்து, அதைத் தேடி அணைப்பதற்குள் அர்ஜுன் விழித்து விட்டான்,

“சாரி! சீக்கிரம் ஆஃப் பண்ண தேடினேன், கிடைக்க டைம் ஆகிடுச்சு. நீங்க தூங்குங்க” என்றாள் நர்மதா.

“நீ எப்போ எழுந்த” என்று அர்ஜுன் கேட்க,

“நான் தூங்கவேயில்லை” என்று சொன்னவள், பிறகு நாக்கை கடிக்க,

“என்ன தூங்கவேயில்லையா?” என்று எழுந்து அமர்ந்தான்.

“என்னவோ தூக்கம் வரலை, இப்ப வலி எப்படி இருக்கு”

“வலி இல்லை, இப்ப பரவாயில்லை, நீ ஏன் தூங்கலை”

“என்னவோ தூக்கம் வரலை”

“வா” என்பது போல அர்ஜுன் தலையசைக்க, அருகில் வந்தவளிடம்,

“உனக்கு என்னை பிடிக்கவேயில்லையா, கூட இருக்க முடியாதுன்னு தோணுதா”

“இது என்ன கேள்வி”, என்பது போல விழி விரித்து நோக்கினாள்,

“அப்படிதானா”, என்றான்.

“என்ன அப்படிதானா?”, என்று இடுப்பில் கைவைத்து கோபமாக கேட்டாள், “கேள்வியும் நீங்களே கேட்டு, பதிலும் நீங்களே சொல்லக் கூடாது, இப்ப பிடிக்கலைன்னா, டாடா, பை பை, போயிட்டு வா, சொல்வீங்களா”

அவள் கேட்ட பாவனையில், “இல்லை, அப்படி கேட்கலை” என்றான் அவசரமாக.

“பிடிக்கலைன்னு தோணினா, பிடிக்க என்ன செய்யணும்னு யோசிக்கணும், அதை விட்டுட்டு இப்படி கேட்க கூடாது”

“என்ன செய்யணும்?” என்றான் திரும்ப அவளிடமே,

“ஒன்னும் செய்ய வேண்டாம், நான் பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன்?”

“அப்போ பிடிச்சிருக்கா” என்றான் புன்னகையோடு.

“அதெல்லாம் சொல்ல முடியாது, நீங்க தான் பிடிக்கலைன்னு கண்டுபிடிச்சீங்களே அப்படி இதையும் கண்டு பிடிங்க, நானும் அதை தான் கண்டு பிடிக்க முயற்சி செஞ்சிட்டு இருக்கேன், எனக்கும் சொல்லுங்க”  என்று முறுக்கினாள்.

பரிதாபமாக விழித்து நின்றான் அர்ஜுன்,

“இந்த மாதிரி எல்லாம் உளறக் கூடாது சரியா” என்று பெரிய மனுஷியாய் பேச

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என்று சொல்லித் தலையாட்டுவதை தவிர வேறு வழி அர்ஜுனிடம் இல்லை.

“இப்ப கிளம்பணும் பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு நீ குளிச்சு ரெடியாகு”.

“ஓகே” என்ற சொல்லோடு, அவள் உடைகளை எடுக்க முனைந்தவள், “ட்ராவல் பண்றோம் தானே, நான் சுரிதார் போட்டுக்கட்டுமா சௌகரியமா இருக்கும்” என்று அவனிடம் சம்மதம் வேண்டி நின்றாள்.

“உன் இஷ்டம் தான், இதுக்கு என்னை கேட்பியா”

“கொஞ்ச நாள் கழிச்சு கேட்க மாட்டேன், இப்ப தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு அதான்” என்று போகிற போக்கில் சொல்லிப் போனாள்,

“இவ என்னடா ரொமான்ஸ் பண்ணவும் விட மாட்டேங்கறா? சீரியஸா பேசவும் விட மாட்டேங்கறா? ஆனா இவ மட்டும் என்ன வேணா பேசறா?” என்று மூடிய அவளின் பாத்ரூம் கதவைப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தான்.

எல்லாம் அவள் வெளியில் வரும் வரை தான், குளித்து முடித்து, உறங்கா ஒரு அயர்வோடு அவள் வெளியே வந்த போது,

அவளிடம் இருந்து பார்வையை விளக்கவே முடியவில்லை.  

“நீங்க போங்க” என்று சொல்லியபடி அர்ஜுனை நர்மதா பார்க்க, அவனின் பார்வை வீச்சில் சற்று நாணம் எட்டிப் பார்க்க துவங்கியது.   

அதை அர்ஜுன் கவனித்தாலும் உணரும் முன் “போங்க போங்க” என்றபடி இவள் கண்ணாடி முன் சென்று நின்று கொண்டாள்.

அவளின் முகம் தெரியவில்லை, இந்த அறிவாளிக்கு கண்ணாடியில் பார்க்க தோன்றவில்லை, அவன் குளிக்க செல்ல, மூடிய அந்தக் கதவுகளை பார்த்து மெல்லிய புன்னகை நர்மதாவிற்கு.

அவன் வெளியே வரும் போது, தயாராகி நின்று கொண்டிருந்தாள், அப்போது பார்த்து அவனின் தொலைபேசியும் ஒலித்தது,

“சொல்லுங்கம்மா” என்று அவன் பேச,

“எப்படி தம்பி இருக்கு” என்றார் ஷண்முக சுந்தரம்,

“பரவாயில்லைப்பா” என்றவனிடம்,

“நீ போறியா, இல்லை நான் போகட்டுமா  நர்மதா  கூட” என்று அவர் கேட்கவும்,

“நான் குளிச்சு ரெடியாகிட்டேன் பா” என்றான்.

என்ன சொல்லுவார், “சரி” என்று அவர் வைத்து விட,

“என்ன” என்பது போல பார்த்துக் கொண்டிருந்த நர்மதாவிடம்,

“அப்பா என்னை ரெஸ்ட் எடுக்க சொல்றார், அவர் உன் கூட வர்றாராம்” என்றான்.

“ஓஹ்” என்று அவன் வராததற்கு முகம் சுருங்கிய போதும், “நீங்க ரெஸ்ட் எடுக்கறீங்களா நான் மாமாவோட போகட்டுமா” என்றாள்.

“போயேன்” என்றபடி அப்படியே அமர்ந்து கொண்டான் அர்ஜுன்.

“உங்களுக்கு வயிறு வலிக்குதுன்னு தான் சொன்னேன்”

“அது எனக்கு எல்லாம் சாப்பிட தள்ளும் போது இல்லை, என் கூட வரும் போது மட்டும் தான் தெரியுமா, வயிறு வலியே உன்னால தானே” என்று சொல்லிவிட,

அவனின் வயிறு வலி தன்னால் தான் என்று ஏற்கனவே உளன்று கொண்டிருந்தவள், அதை அவனின் அப்பா அம்மாவிடம் வேறு சொல்லி விடுவானோ என்ற கவலையில் இருந்தவள், இதனைக் கொண்டு இரவு முழுவதும் உறங்காமல் இருந்தவள், இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மளமளவென்று கண்களில் நீர் நிறைய, அது கண்களை விட்டு கீழேயும் இறங்கியது.

“நர்மதா ஏன் அழற” என்று பதறி விட்டான்,

“இப்போ நீங்க திட்டறீங்க, அப்புறம் அத்தை கிட்ட சொல்லிடுவீங்க, என்னை தான் தப்பா நினைப்பாங்க, நான் ஒன்னும் வேணும்னு செய்யலை, எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது , நான் எங்கயும் போகலை, எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்று அமர்ந்து விட்டாள்.

கண்களில் இருந்து கண்ணீரும் விடாமல் வர, “அம்மு, இங்க பாரு அழாத! நான் சும்மா சொன்னேன் யாராவது வேணும்னு செய்வாங்களா! அழாத!”, என்று சொல்லியும், ஒரு பெரிய அழுகை அழுது முடித்தாள்.

“என்னடா இது” என்று நொந்து விட்டான். அதற்குள் கண்ணில் இட்ட eye லைனர் கரைந்து இருந்தது. அவளுடைய முகமும் அவ்வளவு சிவந்து விட்டது.

அதற்குள் அம்மா வெளியில் இருந்து “அர்ஜுன்” என்று குரல் கொடுக்க,

வேறு வழியின்றி கதவு திறந்து வெளியே சென்றான்.

“என்னடா தம்பி நீ ரெடியாயிடேன்னு சொன்ன” என்று அப்பா கேட்கவும் தான், குளித்து பனியனுடனும் துண்டுடனும் இருப்பதை உணர்ந்தான்.

“குளிச்சிடேன் பா! டிரஸ் பண்ண எவ்வளவு நேரம் ஆகும்! இதோ அஞ்சு நிமிஷம்” என்று திரும்பவும் உள்ளே வந்தான்.

அழுது முடித்து அப்படியே அமர்ந்திருந்தாள் நர்மதா, அழுததில் அதுவரை வராத தூக்கம் வேறு வரும் போல இருந்தது.

மளமளவென்று உடை மாற்றியவன், “முகம் துடைச்சிக்கோ நர்மதா, நீ அழுதது ரொம்ப தெரியுது” என்றான்.

பக்கத்தில் இருந்த ஒரு துண்டை எடுத்தவள் முகத்தை துடைத்து, “போயிடுச்சா” என்றபடி நிற்க,

“போகலை” என்று தலையாட்டினான்,

“இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது” என்றாள் சோர்வாக.

“வா” என்றபடி வெளியே போக, நர்மதாவை பார்த்த கௌரி “என்ன நர்மதா முகம் இப்படி சிவந்திருக்கு” என்றார் கவலையாக.

“அதுவாம்மா அழுதா அதுதான்”, என்றான் அர்ஜுன் “ஐயோ! இவன் என்ன சொல்லப் போகிறான்!” என்று நர்மதா பதறி பார்க்க,

“அதும்மா அக்கா வீட்ல அவங்க மாமியார்…” என்று அவர் சொன்னதை சொன்னவன், “அதுக்கு அழுதாம்மா” என்று எடுத்துக் கொடுக்க,

என்ன இது என்பது போல கௌரியும் ஷண்முக சுந்தரமும் செய்வதறியாது பார்த்து இருந்தனர். அதுதான் விஷயம் என்று சொல்லி அவர்களை ஒரு குழப்பு குழப்பி, அவர்கள் தெளியுமுன் அவசரமாக காபி குடித்து, டிரைவர் கார் எடுக்க, அர்ஜுனும் நர்மதாவும் கிளம்பினர். 

“நீங்களும் வாங்க அத்தை” என்று நர்மதா கிளம்பும் போது அழைக்க,

“நான் ரெடி இல்லைடா நீங்க போங்க” என்றார் கௌரி,

“இல்லை நீங்க வாங்க” என்று பிடிவாதமாக நர்மதா நிற்க,

“போ” என்று ஷண்முக சுந்தரமும் சொல்ல, அவசரமாக அவரும் உடன் கிளம்பினார்,

காரில் ஏறியதும் அவரின் மடியில் தலை வைத்து உறங்க ஆரம்பித்தவள் தான், நன்கு உறங்கிவிட்டாள்,

திருமணமாகி இரண்டு நாட்கள், கிடைத்த தனிமையை வேண்டாம் என்று சொல்லி மாமியாரை கூட அழைத்துக் கொண்டு அவரின் மடியில் தலைவைத்து உறங்கினால் என்ன சொல்ல?

“is everything fine arjun”

“hope so maa”  என்று சொல்லி அவனும் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்குமே தெரியவில்லை தானே.

வளர்ந்த பிள்ளைகள் அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியாமல் மௌனியானார் கௌரி.     

Advertisement