Advertisement

அத்தியாயம் பதினாறு:

அவனுக்கு குட் நைட் சொல்லிப் படுத்தும் விட்டாள், அதற்குள் போனில் மெயில் அலெர்ட் வர, எடுத்துப் பார்த்தவன், “உயிரை எடுக்கறாணுங்கடா, ராத்திரி பகல்னு எந்த ரெஸ்ட்ரிக்ஸன்சும் கிடையாது. எப்போன்னாலும் அனுப்பிடறாணுங்க”, என்று சலித்துக் கொண்டே, ஏதோ பதில் அனுப்பி முடித்து பார்க்க, நர்மதா ஆழ்ந்த உறக்கத்தில்,

“என்னடா இது, புது இடம், புத்தம் புது புருஷன், எந்த எண்ணமும் இல்லாம இப்படித் தூங்கறா, இவளை”, என்று பல்லைக் கடித்தவன், அவன் தானே தூங்க சொன்னான் என்பதே மறந்து போயிற்று,

தலையில் இருந்த நெற்றிச் சுட்டியைக் கூட கழற்றாமல் தூங்கினாள், அவளருகில் சென்று அவளின் உறக்கம் கலையாமல் அதை எடுத்து விட முற்பட்டான். எடுத்து விடும் வரை ஒன்றும் தெரியவில்லை. எடுத்து விட்டவுடன் மிக அருகில் இருந்த அவளின் அழகு முகம் அவனை வெகுவாக ஈர்க்க, அந்த பிறை நெற்றியில் ஒரு மென்மையான முத்தத்தை பதித்தான்,

அதில் அவளின் உறக்கம் சற்றுக் களைய, என்னவென்று தெரியாமல் நெற்றியைத் தடவி விட்டு ஒருக்களித்து படுத்துக் கொள்ள, இப்போது அவளின் பட்டுக் கன்னங்கள் அவனை இழுக்க, அதில் மென்மையாக அல்ல அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான், விழித்தால் விழிக்கட்டும் என்பது போல,

அவனுக்கு என்ன தெரியும் உறங்கிவிட்டால் என்னவாகினும் நர்மதா சாமான்யத்தில் விழிக்க மாட்டாள் என்று, 

தூக்க கலக்கத்தோடு கண்விழித்தவள், வெகு அருகில் அர்ஜுன் முகத்தைப் பார்க்கவும், “தூக்கம் வருது ப்ளீஸ்”, என்று கொஞ்சல் மொழி பேச,

அவளிடம் இருந்து விலக மனமேயில்லாமல், அவளைத் தூங்க சொன்ன தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டே, “சரி தூங்கு”, என்று அருகில் படுத்து அவளை அணைத்து, அவளின் வாசனையை உணர்ந்த நேரம், எழுந்து அமர்ந்தாள் தூக்கத்தோடு,

“என்ன”, என்று அவனும் அமர, “அது, அது”, என்று தூக்கத்தோடு பரிதாபமாக முகத்தை வைக்க,

“என்ன நர்மதா?”, என்றான்.

“எனக்குத் தூக்கம் வருது, ரெண்டு நாளா ரிசப்ஷன்ல நின்னது,  எல்லார் கால்லயும் விழுந்து விழுந்து எழுந்தது, ரொம்ப டையர்டா இருக்கு”, என்றாள்.

“தூங்கு, நான் ஒன்னும் பண்ணலை”, என்று அர்ஜுன் சொல்ல,

“அது, அது”, என்று இன்னும் இழுத்தாள் நர்மதா.

“என்ன சொல்லு”, என்று மீண்டும் அர்ஜுன் சொல்ல,

“எனக்கு தனியா தூங்கினா தான் தூக்கம் வரும், பக்கத்துல யார் இடிச்சிட்டு படுத்தாலும் தூக்கம் வராது”, என்று சொல்லிவிட,

“என்ன இது பக்கத்துல படுக்கக் கூடாதா”, அதிர்ந்தான், “அதுவும் நான் இடிக்கறானா? என்ன இது?”, என்று நொந்தே விட்டான். விளையாடுகிறாளா  இல்லை நிஜமா என்று அவளின் முகத்தை ஆராய்ந்தான்.  

நிஜமே! முகத்தை அவ்வளவு சீரியசாக வைத்திருக்க,

“ப்ச்”, என்று எரிச்சல் ஆனவன், வேகமாக இடத்தை விட்டு அகலப் போக,

“மேல படாம படுத்தா, ஓகே”, என்றாள் அவனின் கைபிடித்து நிறுத்தி,

“என்ன விளையாடுறியா?”, என்று அர்ஜுன் கடுப்பாக,

“இல்லை, இல்லை, நிஜமா”, என்றாள் , அவளின் முகமும் மிகவும் சுருங்கி விட,

“சரி தூங்கு, நான் அப்புறம் தூங்கறேன்”, என்று படுக்கையை விட்டு எழுந்து, வேறு இடத்தில் இருந்த சேரில் போய் அமர்ந்து கொண்டான்.

“சாரி, வந்து படுங்க, என்னைப் பிடிச்சிக்கிட்டாலும் பரவாயில்லை”, என்று நர்மதா தயங்கி தயங்கி சொல்லவும்,

“இல்லடா, நான் தான் சாரி, தூங்கு, ட்ரபிள் பண்றேன்”, என்று இறங்கி வந்தான். என்ன எதிர்பார்க்கிறான் என்று அவனுக்கேப் புரியவில்லை, அவன் தான் தூங்கு என்று சொன்னான், இப்போது தூங்கும் அவளை எழுப்பி வருத்தப்பட வைக்கிறான்.  

“உங்களுக்கு கோபமில்லையே”, என்று அப்போதும் நர்மதா கேட்க,

“கொஞ்சம் சீக்கிரம் கோபம் வரும் எனக்கு, அது என்னோட பெரிய வீக்னெஸ், முடிஞ்சவரைக்கும் குறைக்கப் பார்க்கிறேன்”, என்று அர்ஜுன் சொல்ல,

“இல்லை, பரவாயில்லை, நான் பழகிக்கறேன்”, என்று நர்மதா பதில் சொல்ல,

ஆச்சர்யமாக அவளைப் பார்த்தான், இன்னும் இன்னும் நர்மதாவைப் பிடித்தது,

படுத்தவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, தான் உறங்காமல் உறங்க மாட்டாள் என்றுணர்ந்து, வந்து படுத்துக் கொண்டவன், நடுவில் இரண்டு தலையணைகளை வைத்து, “என்னை மீறி பக்கம் வரமாட்டேன், ஆனா எவ்வளவு நேரம் என் பேச்சை நான் கேட்பேன்னு தெரியாது, ஒரு சேஃப்டிக்கு”, என்று வைக்க,

“வேணும்னா அதை எடுத்துடலாம்”, என்றாள் தயங்கி தயங்கி,

“ஹேய் அம்மு, நீ தூங்கு, சாரி, சாரி, வயசுப் பையன் இல்லையா, இவ்வளவு அழகா பக்கத்துல என் பொண்டாட்டி இருக்கவும் கொஞ்சம் தடுமாறிட்டேன், இன்னைக்கு ரெண்டு பேரும் டையர்ட்  தூங்கலாம்”, என்று சொன்னவன், “உன் நகை எல்லாம் கழட்டிடேன், தொந்தரவா இல்லை”, என்று சொன்னான்.  

“இல்லை, இல்லை”, என்று அவசரமாக சொல்லி, எங்கே அர்ஜுன் அதையெல்லாம் கழட்டி வைக்க சொல்வானோ என்று சோம்பியவள், “நர்மதா, தூங்கிட்டேன்”, என்று கண்களை மூடிக் கொள்ள,

அர்ஜுனின் முகத்தில் விரிந்த புன்னகை. தூக்கம் வந்ததோ இல்லையோ தூங்குவது போலக் கண்மூடிக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்க்க, நர்மதா மீண்டும் உறக்கத்தில்,

“குடுத்து வைச்சவ, எப்படி உடனே தூங்கறா”, என்று சொல்லிக் கொண்டவன், அவன் வாயின் மேல் அவனே அடி வைத்துக் கொண்டான்.

“அவ எப்பவுமே எந்தக் கவலையுமில்லாம இப்படி தாண்டா தூங்கணும், எதுனாலும் நீ பார்த்துக்கோ”, என்று திட்டி, அவனுடைய அழகிய மனைவியை பார்த்துக் கொண்டே அவனையறியாமல் உறங்கினான். 

காலையில் நர்மதா பலமுறை கூப்பிட்டு, பின்பு உலுக்க தான் விழிப்பு வந்தது, குளித்து முடித்து அழகாக உடுத்தி அம்சமாக இருந்தாள்.

“குட் மார்னிங் அம்மு”, என்று புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்தவள், “அது என்ன அம்மு, எவ்வளவு நேரமா எழுப்பறது, கோவிலுக்கு போகணுமாம், அப்புறம் எங்க வீட்டுக்கு போகணுமாம், அப்புறம்….”, என்று நர்மதா அடுக்க,

நேரம் பார்த்தான் எட்டு மணி, “நீ எப்போ முழிச்ச”,

“ஆறு மணிக்கு”,

“உடனே ரூமை விட்டு வெளில போயிட்டியா”,

“எஸ், பின்ன தூங்கற உங்களை எவ்வளவு நேரம் பார்க்க”,

செல்லமாக அவளை முறைத்தான், “என்ன”, என்று புரியாமல் பார்த்தவளிடம், “நீ தூங்கும் போது உன்னை நான் பார்த்துட்டு தானே இருந்தேன், எனக்கு இப்படி தோணலை”, என்றான்,

“வெக்கமா, வெக்கமா, வருது சொல்லட்டா”, என்று சிரித்தபடி நர்மதா கேட்கவும்,

“அதெல்லாம் தானா வரணும்”, என்று சொல்லியபடி எழுந்து குளிக்க சென்றான்.   

கண்ணாடி முன் சென்று நின்றவள், “வொய் நர்மதா வொய், தானா வரணும்னா, நான் என்ன வரவேண்டாம்னா சொல்றேன், அது வரமாட்டேங்குது என்ன பண்ணலாம்?”, என்று தீவிரமாக அவளை அவளே கேள்வி கேட்டு முடித்தாள்.

வெளியே துண்டு எடுக்க வந்த அர்ஜுன் அதை பார்த்து நிற்க, ஏதோ உந்த திரும்பி பார்த்தாள், அர்ஜுன் அவளை பார்த்து நிற்க, தான் பேசியதை பார்த்து விட்டான், ஹி ஹி என்று அசட்டு சிரிப்பு வேறு சிரித்து வைத்தாள்,

“பக்கத்துல யார் படுத்தாலும் தூக்கம் வராது சொல்றவங்களுக்கு வெட்கமும் வராதாம்”, என்று அர்ஜுன் பாவனையாக சொல்ல,

இன்னும் அசடு வழிந்து நின்றாள்.

“போடி, போடி, கண்ணாடி முன்னாடி நின்னு வெட்கம் வரலைன்னு சொல்லக் கூடாது, தைரியமா என் முன்ன வந்து நின்னு சொல்லணும்”, என்று உசுப்பேற்ற,

“உங்க முன்னாடி தானே, இதோ வர்றேன், ஆனா அத்தை உங்களை எழுப்பி உடனே வர சொன்னாங்க”, என்று ஓடப் போக,

“அவ்வளவு தானா உன் தைரியம்”, என்று மீண்டும் உசுப்பேற்ற,

“இப்போதைக்கு அவ்வளவு தான் என் தைரியம்”, என்று சொல்லிய படி சென்று விட்டாள்.

“என்னடா இவ ரோஷப்பட்டு பக்கத்துல வருவான்னு பார்த்தா ஓடிட்டா, கொஞ்சம் புத்திசாலி தான் போல, நம்மளை மாதிரி சீக்கிரம் எமோஷனல் ஆகறது இல்லை”, என்று புரிந்தபடி குளித்து ரெடியாகி வந்தான்.

பேன்ட் ஷர்டில் வந்தவனை, “போ கண்ணா, இன்னைக்கும் வேஷ்டியே கட்டு”, என்று அம்மா விரட்ட,

“ஏன் மா”, என்றான்,

“நல்லாயிருக்கடா அதுல”, என்று கௌரி சொல்ல,

“இதை தான் அம்மா இவ கிட்ட நேத்து சொல்லு சொன்னேன், எனக்கு பொய் சொல்ல வராதுன்னு சொல்லிட்டா”, என்று நர்மதாவைப் போட்டுக் கொடுக்க,

நர்மதா டென்ஷன் ஆகிவிட்டாள், கௌரி அதை தப்பாக எடுத்துக் கொள்வாரோ என்று, “அது அத்தை”, என்று சில நொடிகளில் தடுமாற, முகமும் பதட்டத்தை பூச.

இருவரும் அவளைப் பார்த்தவர்கள், “அய்ய சும்மா சொன்னேன்”, என்று அர்ஜுன் சொல்ல,

“ஏன் நர்மதா, பொய் சொல்ல வராது சொன்ன, அதான் ஏற்கனவே சொல்லிட்டியே, இவன் நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு அதுவே பொய் தான்”, என்று அவரும் சிரிக்க,

“ப்ச், போங்கத்தை”, என்று அவரின் பின் போய் நின்று கொண்டாள்.

“அம்மா”, என்று அர்ஜுன் திடீரென்று கத்த, “என்னடா”, என்றவரிடம், “காஃபி கொடுங்க”, என்று கத்தினான்.

“அதுக்கு ஏண்டா கத்துற”, என்று சொல்லிக் கொண்டே, அதைக் கலக்க சென்றார், வீட்டில் சமைக்க ஆள் இருந்தாலும் அம்மா இருக்கும் போது அம்மா தான் கொடுக்க வேண்டும் அர்ஜுனிற்கு,

அவரின் பின்னோடு நர்மதா போக, “ஹேய், பொண்டாட்டி எங்கடி ஓடிட்டே இருக்க, இன்னும் ரெண்டு நாள்ல நான் ஊருக்கு போயிடுவேன், நீ   ஓடிட்டே இருக்க”, என்றான்.

“இவன் என்ன நாட்டை காக்க போருக்கா போறான்”, என்பது போல ஒரு லுக் விட,

“என்ன மைன்ட் வாய்ஸ் ஓட்டற”, என்றான் அவளை அறிந்தவனாக,

“சொல்ல மாட்டேன், எது சொன்னாலும் நீங்க அத்தை கிட்ட சொல்றீங்க. அவங்க என்னடா என் பையனை இப்படி பேசறா, நேத்து தானே கல்யாணம் ஆச்சு நினைக்க மாட்டாங்க”, என்று கோபப்பட்டாள்,

அதற்குள், “நர்மதா”, என்று கௌரி குரல் கொடுக்க, அவரை நோக்கி விரைந்து விட்டாள்.

“என்ன இது? இவ்வளவு கோபம் வருது இவளுக்கு, இப்ப தானே நம்மளை மாதிரி எமோஷனல் ஆகறது இல்லைன்னு நினைச்சேன்”, என்று நினைத்தபடி, பேப்பரை எடுத்துக் கொண்டு அப்பாவின் அருகில் அமர்ந்தான்.

“கோவிலுக்கு போயிட்டு, அப்படியே அவங்க அம்மா வீட்டுக்கு போயிடுங்க, அப்புறம் நான் சொன்னபடி எல்லார் வீட்டுக்கும் போயிடுங்க, நைட் அக்கா வீட்டுக்கு”, என்று சொல்ல,

“அப்பா, எத்தனை தடவை சொல்வீங்க”,

“கிளம்புடா இப்பவே ஒன்பது மணி, நீ வருவேன்னு பூசாரியை அங்கயே இருக்க சொல்லி இருக்கேன், கிளம்பு”, என்றார்.

“இதோ கிளம்பறேன்”, என்று அவனின் வாய் தான் சொன்னதே ஒழிய பேப்பரை ஒரு நோட்டம் விட்டு தான் எழுந்தான்.

“சரியான பிடிவாதம்”, என்று மகனை முறைக்க மட்டும் தான் முடிந்தது.

பூஜைக்கு என்று நர்மதாவிடம் பொருட்களை கொடுத்த கௌரி, “கிளம்புங்க”, என்று சொல்ல.

“நீங்க யாரும் வரலையா அத்தை”, என்று நின்றாள்.

“இல்லை, நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க, அங்க கொஞ்சம் படி ஏறணும், கல்யாண அலைச்சல், இவன் கத்துவான்”, என்று அர்ஜுனை காட்டினார்.

“சரி”, என்று நர்மதா கிளம்பினாள், டிரைவர் காரோடு நிற்கவும்,

“நாங்க போயிக்கறோம், சாவியை குடுங்க” என்று அர்ஜுன் சொல்ல,

“வேண்டாம் அர்ஜுன், நிறைய இடத்துக்குப் போகணும், நீ நிறுத்தி நிறுத்தி ஏற முடியாது” என்று அப்பா சொல்ல, மீற முடியாமல், சற்று கடுப்போடு காரில் ஏறினான்,

“குழந்தை பெத்துக்கோன்னு அட்வைஸ் மட்டும் பண்ணினா போதுமா, அவளோட பழகவே விடமாடேங்கறார், கல்யாணத்துக்கு முன்ன சண்டை வர வெச்சார், இப்போ செக்யுரிட்டி கார்ட், கிழிஞ்சது போ” என்று திட்டிக் கொண்டான்.

அதன் பிறகும் உண்மையில் இருவருக்கும் தனிமையே கிட்டவில்லை,

கோவிலுக்கு சென்று அபிஷேகம், அலங்காரம், பூஜை என்று அமர்ந்து நர்மதாவின் வீடு வந்த போதே பன்னிரண்டு மணி,

காலை உணவு வீண் தான் ஆனது, மதிய விருந்தே தயாராக இருக்க, அதை உண்டு, அடுத்த நாள் பாஸ்போர்ட் ஆஃபிசிற்கு தேவையானதை எடுத்து வைத்து, அங்கிருந்து உறவினர்கள் வீடு சென்று, அவர்கள் கொடுப்பதையும் உண்டு, ஒரு கட்டத்திற்கு மேல் நர்மதாவால் முடியாமல் எல்லாவற்றையும் அர்ஜுன் புறம் தள்ள, அதையும் தெரிந்தும் தெரியாமலும் காலி செய்து, சத்யா வீட்டிற்கு இரவு விருந்திற்கு என்று வந்தார்கள்.

நர்மதாவால் உண்ணவே முடியவில்லை, இலையில் வைத்ததில் பாதி உண்பது போல பாவ்லா செய்து மீண்டும் அர்ஜுன் இலையில் தள்ளினாள்.

சத்யாவின் மகள் “அத்தை” என்று பேச வர,

“சொல்லிடாதடா குட்டி”, என்று அவளிடம் கெஞ்சி சமாளித்து, அது மாமா இங்க போட்டுட்டார், அதுதான் நான் திரும்ப போட்டேன் என்று சொல்லி, கூட இரண்டு பிள்ளை விளையாட்டை பேசி அவளை திசை திருப்பினாள்,

ஆனாலும் சற்று நேரத்தில் ஏதோ வித்தியாசத்தை நர்மதாவிடம் உணர்ந்தான். ஒரு அமைதி, என்ன என்று பார்வையால் கேட்க, வயிறு நிறைஞ்சிருக்கு என்பது போல சைகை காட்டினாள். அதுதான் போல என்று விட்டுவிட்டான். 

ஒரு வழியாக வீடு வந்த போது இருவருமே அலண்டு இருந்தனர்.

வந்ததும், “டேய், தம்பி! நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு நர்மதாக்கு பாஸ்போர்ட் ஆஃபிஸ்ல அப்பாயின்ட்மென்ட், அங்க எட்டரை மணிக்கு இருங்க, இங்க இருந்து ஏழு மணிக்கு கிளம்பிடுங்க” என்றார்.

“சரிப்பா, குட் நைட்” என்று போய் படுத்துக் கொண்டான் முடியவேயில்லை,

“சாரி”, என்று முன் வந்து நின்றாள் நர்மதா அவனின் நிலை புரிந்தவளாக,

“நீ சமைச்சு கொடுமை பண்ணினா கூட பரவாயில்லை, அடுத்தவங்க சமைச்சதை சாப்பிட வெச்சே இன்னைக்கு நாள் போச்சு”, என்று நெற்றியையில் கை வைத்தான்.

“வலிக்குதா பிடிச்சி விடட்டா” என்று நர்மதா அருகில் வர,

“ம்ம்ம்ம், வயிறு தான் வலிக்குது, அங்க பிடிச்சி விடறியா” என்றான் கடுப்பாக,

“பிடிச்சு விடட்டுமா”, என்று நர்மதா அதற்கும் அருகில் வர,

“ஒன்னும் வேண்டாம் போ, முடிஞ்சா பக்கத்துல படுத்துக்கோ! முடியுமா?” என்றான்.

“ம்ம், ம்ம்”, என்று தலையாட்டியவள், “நீங்க குடுக்க சொன்னீங்கன்னு தான் குடுத்தேன்”,

“ஒரு வீட்ல சாப்பிட முடியாம முழிச்ச கொடுன்னு சொன்னேன், அதுக்குன்னு எல்லா வீட்லயுமா, மொத்தம் எட்டு வீடு, அதுவும் அக்கா வீட்ல அவ்வளவையும் வெச்ச”,

“நான் என்ன பண்ணட்டும்! உங்க மாமாவோட அம்மா எங்க வீட்ல யாரும் வேஸ்ட் பண்ண மாட்டங்கன்னு முன்ன நின்னு சொல்லுது, எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு” என்றாள்.

“பெரியவங்க நர்மதா அது இது பேசக் கூடாது, அது சாப்பாடு வேஸ்ட் பண்ணக் கூடாது சொல்லியிருப்பாங்க” என்று சமாதனம் சொல்ல,

“ப்ச்”, என்றவள், “இன்னும் மோசமா அவங்ககிட்டயே பேசியிருப்பேன். நான் உங்களை காதலிக்கறேன்னு ஊர் பூராவும் சொல்லி வெச்சது அதுதான். பேசியிருப்பேன். என்ன பொண்ணை வளர்த்து வெச்சிருக்காங்கன்னு எங்க அப்பா அம்மாக்கு ஒரு கெட்ட பேர் வரக் கூடாதுன்னு வந்தேன்” என்றாள் கோபமாக.

“எதுக்கு இவ்வளவு கோபம், நம்ம கல்யாணம் முடிஞ்சிடுச்சு விடு!”

“அதில்லை இப்போ, இது வேற, என்று இடைவெளி விட்டவள்,

“இதெல்லாம் நீ எங்க சாப்பிட்டு இருக்க போற, சாப்பிடு சொல்றாங்க, அப்புறம் அப்படியே ஒன்னு மேல ஒன்னு வைக்கறாங்க. எப்படி சாப்பிட முடியும்” என்றாள் மித மிஞ்சிய ஆற்றாமையோடு.  “என்ன அப்படியா கேட்டாங்க?” என்று அதிர்ந்தான். “நான் பக்கத்துல தானே இருந்தேன்”, என்று படுத்து இருந்தவன் கோபமாக எழுந்து அமர்ந்தான்

“நீங்க கவனிக்கலை, நான் என்ன சாப்பாட்டுக்கு இல்லாம இருந்தேனா இல்லை சாப்பாடு என்ன தங்கத்துளையும் வைரத்துளையும் செய்யறாங்களா” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டாள். “இரு, அவங்களை” என்று அக்காவிடம் திட்ட அர்ஜுன் போனை எடுத்தான்.

“இதுக்கு தான் நான் உங்க கிட்ட சொல்லலை, விடுங்க” என்று ஃபோனை பிடிங்கினாள். “சிலர் எல்லாம் அப்படிதான், விடுங்க”, என்று அவளுக்கு அவளே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.  “அப்படியே மூடி வெச்சிட்டு எழுந்திருக்க வேண்டியதுதானே”

“என்னைக்கிருந்தாலும் விட்டுப் போற உறவில்லை, அதுதான் அமைதியா வந்துட்டேன்”  அவனிடம் சொல்லிவிட்டாலும் மனது சமாதானம் ஆகவில்லை, ஆனாலும் எதையும் காட்டாமல் படுக்க ஆயத்தமாகினாள்,

அர்ஜுனிடம் சொல்லியது போல அவனருகில் படுத்தாள், அர்ஜுனிற்கே மனது ஒரு மாதிரி வருத்தமாக இருந்தது. “சும்மா தான் அம்மு சொன்னேன், நீ தூங்கு” என்றான் அவளிடம். நேற்று போல ஒரு தலையணை தடையை இருவரிடமும் உருவாக்கி,  என்ன மனிதர்கள் என்று அவனுக்குள்ளும் எண்ணம் ஓடியது.

நேற்று தானேடா நினைத்தாய் அவள் எந்தக் கவலையுமின்றி உறங்க வேண்டும் என்று இன்றே அது கெட்டுப் போவதா என்று தான் தோன்றியது சிறு சிறு வார்த்தைகளும் மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடும், வசதி வாய்ப்புகள் எப்படியோ யாரிடமும் ஒரு சொல் கேட்டு பழகியிராதவள் நர்மதா, நினைக்க நினைக்க ஒரு கோபம் பொங்கியது.

எழுந்து அமர்ந்தாள், அசைவு தெரிய கண்விழித்துப் பார்த்தான் அர்ஜுன்,“என்ன அம்மு”, என்றான். நீங்க ஒன்னும் என்னை அப்படிக் கூப்பிடாதீங்க”, என்றாள் எரிச்சலாக

அர்ஜுன் அவளையே பார்க்க, “எனக்கு தெரியுது இதுல உங்களோட தப்பு எதுவும் இலைன்னு, but i am sorry to say this and i am forced too even, உங்களை யாரு என்னை கல்யாணம் பண்ண சொன்னா”, என்று கோபமாக கேட்டாள். அர்ஜுன் அதற்கும் எதுவும் பேசவில்லை அமைதியாகப் தான் பார்த்திருந்தான்.

“எல்லோரும் என்னை இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்னு இளக்காரமா பார்க்கற மாதிரி ஒரு ஃபீல் இந்த கல்யாணத்துல இருந்தே, இப்போ அவங்க சொல்லி காட்டிட்டாங்க, எனக்கு பிடிக்கவேயில்லை” என்றாள் ஆத்திரமாக.

யார் மட்டும் இதில் என்ன செய்ய முடியும், அர்ஜுனிற்கு என்ன பதில் பேசுவது என்று கூட தெரியவில்லை.நேற்று இரவு அப்படி ஒரு ஆவேசமான பேச்சு , இன்று வேறு ஒன்று,  “எதுன்னாலும் நாளைக்கு காலையில பேசலாம் ப்ளீஸ், எனக்கு எல்லாம் சாப்பிட்டது முடியலை” என்றான் சலிப்பாக. அவன் சொன்னன விதத்தில் நர்மதா சற்று கட்டுக்குள் வந்தவள், “ரொம்ப டார்ச்சர் பண்றனா” என்று இறங்கி வந்தாள். அவளையும் பார்க்க பாவமாக தான் இருந்தது.“தூங்கு அம்மு”, என்றான். அதை மீறாதவளாக, கண்மூடிக் கொண்டாள்.

Advertisement