Advertisement

அத்தியாயம் பதினைந்து:

“டேய் அர்ஜுன், இவ உன் மானத்தை வாங்கிடுவா, உன் இமேஜ் எல்லாம் போயிடும்”, என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன்,

“என்னோடது லவ் மேரேஜ்ன்னு யார் சொன்னா, இருங்க அப்பாகிட்ட கேட்கலாம். ஏன்னா அவர் தான் கல்யாணம் பேசினார் நானில்லை”, என்று சொல்லி, “அப்பா”, என்று சத்தமாக அழைத்தும் விட,

“அண்ணா, என்ன பண்ற நீ”, என்று ஆளாளுக்குப் பதறினர்.

அவன் அழைத்த வேகத்திற்கு ஹாலில் இருந்த ஷண்முக சுந்தரமும் என்னவோ ஏதோவென்று வந்து விட,

எல்லோரும் இப்போது அவன் முகத்தை கலவரமாக பார்த்தனர், லவ் மேரேஜ் என்ற வாரத்தை எல்லாம் அங்கே சுலபத்தில் பேச முடியாது ஏதோ சின்னவர்களாக இருக்கவும் வாயடித்துக் கொண்டிருந்தனர்,

“என்னடா டேய்”, என்பது போல சத்யா அர்ஜுனை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்தாள், பின்னே வீட்டுப் பெண்கள் இப்படி பேசினால் அவ்வளவு தான் அப்பா தொலைத்து விடுவார், யார் என்றும் பார்க்க மாட்டார்.

இப்போது எல்லோரும் நல்ல பிள்ளைகளாக அமர்ந்து கொள்ள,

“எனக்கு உங்ககிட்ட பேசணும்”, என்றபடி அர்ஜுன் அவரை அழைத்துப் போக, “ஷப்பா”, என்று எல்லோரும் பெருமூச்சு விட்டனர்,

அவருடன் சென்று கொண்டே அர்ஜுன் திரும்பி பார்க்க, “நீ வாடா மகனே, உனக்கு இருக்கு”, என்பது போல எல்லோரும் ஒரு லுக் விட்டனர்.

கௌரி நர்மதாவிடம், “டிரஸ் மாத்திக்கோ நர்மதா, உன் பேக் அர்ஜுன் ரூம்ல வெச்சிருக்கேன் பாரு”, என்றார்,

“இதெல்லாம் எங்க வெக்கட்டும் அத்தை”, என்று நகைகளைக் காட்ட,

“வா, இதெல்லாம் கழட்டிடு வேற போட்டுக்கோ”, என்று அர்ஜுனின் ரூம் அழைத்துச் சென்றார். கெளரியிடம் எந்தத் தயக்கமும் நர்மதாவிற்கு இருக்கவில்லை.   

அப்பாவுடன் சென்றவன், “அப்பா அவளுக்கு பாஸ்போர்ட் இல்லை”,

“இவ்வளவு நாளா என்ன பண்ணின”,

“ஒன்னும் பண்ணலை, நீங்க தானே என்னவோ அவ பின்னாடியே சுத்தற மாதிரி பார்த்தீங்க. அதனால நான் அவ கிட்ட பேசவேயில்லை, அதனால அதை பத்தி பேசாம இப்ப அவளுக்கு பாஸ்போர்ட்க்கு என்ன பண்ணணுமோ பண்ணுங்க”,  

“உன்னோட கூட்டிட்டு போறியா”,  

“உங்களைத் தான் அரட்ட முடியும், அமெரிக்காகாரன் விசா குடுக்க மாட்டான்”,

“அவன் எதுக்குடா குடுக்கணும், நீ போகாத இங்க இரு”,

“அப்பா, கொஞ்ச வருஷம் என் இஷ்டத்துக்கு விடுங்க, அப்புறம் வந்துடறேன், திரும்பவும் ஆரம்பிக்காதீங்க, இப்ப என்ன பண்ணணுமோ பண்ணுங்க”,

“தட்கல் முடியுமான்னு பார்க்கலாம், எப்படியும் ஒரு வாரம் பாஸ்போர்ட் ரெடி ஆகிடும். ஆனா உன் மேரேஜ் சர்டிபிகேட் வேணும், நர்மதா அட்ரெஸ் அவ அப்பா வீட்டுது இருக்கும். கொஞ்சம் ரப்ச்சரான வேலைடா, சரி பார்த்துக்கலாம் விடு”, என்றவர் யாரிடமோ தொலைபேசியில் பேசி என்ன வேண்டும் என்று கேட்டு,

“இதெல்லாம் வேணும், அனேகமா நாளனைக்கு கோயம்புத்தூர் பாஸ்போர்ட் ஆபிஸ் போகணும்”, என்றார்.

“நான் நாளனைக்கு அடுத்த நாள் நைட் கிளம்பணும் பா”, என்றான்.

“என்னடா இது இவ்வளவு அவசரம், இங்க எல்லார் வீட்டுக்கும் நாளைக்கு அவளை கூட்டிட்டு போயிட்டு வந்துடு, கண்டிப்ப்பா போகணும், நாளைக்கு காலையில நர்மதா வீட்டுக்கு போயிட்டு மதியம் அங்க சாப்ட்டிட்டு, அப்படியே எல்லோர் வீட்டுக்கும் ரவுண்டு அடிச்சிடு, நைட் சத்யா வீட்டுக்கு போயிடு, அப்போ தான் நாளைன்னு கோவை போயிட்டு, திரும்ப நீ சென்னை போக முடியும்”.

“நீ ஊருக்கு போனதுக்கு அப்புறம் நர்மதா எங்க இருப்பா”, என்றார், அவன் மிகவும் பயந்த கேள்வி அவனுக்கு விடை தெரியாத கேள்வி,

“இன்னும் அவ கிட்ட பேசலை”,  

நிஜமாகத் தான் சொல்கிறானா என்பது போல அர்ஜுனைப் பார்த்தார், முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

“தம்பி, நம்ம ரெண்டு பேரும் என்னவோ முறைச்சிட்டே நிற்கறோம், என்னடா இப்படி? உன்னை விட எனக்கு இந்த உலகத்துல என்னடா முக்கியம்”, என்று சொல்ல,

“அம்மா”, என்றான் முறுக்கியபடி.

அவனின் பாவனையில் சிரித்தவர், “அவ முக்கியம் எல்லாம் கிடையாது, அவ தான் நான், நான் தான் அவ”, என்றார்.

“தோ பார்றா, பொண்ணு பின்னாடி போறேன்னு என்னை முறைச்சு முறைச்சு பார்த்துட்டு, இன்னைக்கு என்னமா எங்கப்பா டைலாக் அடிக்கறார்”, என்பது போல பார்த்தான்.

அவர் அதெல்லாம் கருத்தில் கொள்ளாமல், “உன் சந்தோசம் தாண்டா எங்களுக்கு முக்கியம்”, என்றவர், “உனக்கு இப்போவே இருபத்தி எட்டு வயசு, உன் வயசுல எனக்கு நீ பொறந்துட்ட”,

“இப்போ தான் கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கீங்க”, என்றான்.

“தம்பி, விளையாட்டுப் பேச்சு விடு”, என்றார் சற்று சீரியசாக, அதன் பிறகு அர்ஜுன் அவர் சொல்லவதை அமைதியாகக் கேட்க,

“பணம் எப்போ வேணா சம்பாதிக்கலாம், அது நமக்கு பெரிய தேவையும் கிடையாது, வேலைக்காக நீ ஒரு இடத்துல நர்மதா ஒரு இடத்துல இருக்கறது நமக்கு தேவையில்லை”,  

“என்னடா அப்பா இப்படி பேசறார்ன்னு நினைக்காத, இப்போ குழந்தைங்க உங்க வாழ்கையில வர்றது தான் சரி, அப்போ தான் ஒரு அம்பதஞ்சு, அறுபது வயசுக்குள்ள உன் கடமைகளை நீ முடிக்க முடியும், இல்லைன்னா உனக்கு ரொம்ப வயசானதுக்கு அப்புறம் தான் உன் பசங்களை நீ வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியும்”,

“குழந்தை பெத்துக்கறது மட்டும் பெருசில்லை, கூட இருந்து அதை வளர்க்கவும் செய்யணும், பெரியவங்க ஆனதுக்கு அப்புறம் இப்ப யார் சேர்ந்து இருக்கோம் சொல்லு, எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் அவங்க வேலையைப் பார்க்கிறோம். இதுல சின்ன வயசுலயாவது குழந்தைங்களை கூட இருந்து பக்குவமா வளர்க்க வேண்டாமா?”,

“நான் எப்போப்பா இல்லைன்னு சொன்னேன் கேட்காத, என் மனசுல இருக்குறதை சொன்னேன், நீ சொன்ன நான் கல்யாணம் செஞ்சு வெச்சிட்டேன், ரெண்டு பேரும் சேர்ந்து தான் இருக்கணும் வேலைன்னு ஆளுக்கு ஒரு பக்கம் இருக்கக் கூடாது”,

“இருந்த, குண்டு கட்டா ரெண்டு பேரையும் தூக்கிட்டு இங்க வந்துடுவேன். அப்புறம் உன்னை எங்கயும் விடமாட்டேன்”, என்றார் கறாராக.

“அவ இப்ப தான் பா வேலைக்கு சேர்ந்திருக்கா”,

“வேலைன்றது எதுக்கு வருமானத்துக்கு தானே, அதை சேர்ந்து இருந்து சம்பாதிங்க, இல்லை மருமக விடமாட்டேன்னு சொன்னா நீ விட்டுடு”, என்றார் அவனை சீண்டி விடும் நோக்கில்.

“அப்பா!!!! என்னோட பொசிஷன் என்ன தெரியுமா”, என்றான்.

“அப்போ இப்போ தான் நர்மதா ஆரம்பிக்கறா, அவளை விடச் சொல்லு”,

“அதை நான் எப்படி சொல்ல முடியும், அவளை டாமினேட் பண்ற மாதிரி ஆகாதா?”,

“எனக்கு இதெல்லாம் புரியாது, நான் என்ன சொன்னாலும் உங்கம்மா கேட்பா அப்படி தான் நாங்க இருக்கோம், ஏன்னா நான் செய்யறது எல்லாமே அவளுக்கு தான். அதனால எங்களுக்குள்ள இப்படி எண்ணம் வந்தது இல்லை, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, நான் சொன்னது தான்! சேர்ந்து இருக்கலை, தூக்கிட்டு இங்க வந்துடுவேன் ரெண்டு பேரையும்”,

அதிருப்தியோடு அப்பாவை அர்ஜுன் பார்க்க, “தம்பி கல்யாணம் பண்றது, பணம் சம்பாதிக்க, வீடு கட்ட, வசதி வாய்ப்பு பெருக இல்லை, சந்ததியை பெருக்க தான் ஞாபகம் வெச்சிக்கோ! அவ்வளவு தான் சொல்வேன்!”, என்று அவர் பேச்சை முடித்து விட்டார் அவனைப் பற்றி தெரிந்தவராக,

யார் சொன்னாலும் கேட்டுக் கொள்வான், ஆனால் அதை செய்வான் என்று சொல்ல முடியாது. எல்லாம் அவன் இஷ்டம் தான். அர்ஜுனைப் பற்றி நன்கு அறிந்தவர், அதுதான் இந்த திருமணம் கூட, அவர் செய்து வைக்கா விட்டாலும் எப்படியும் செய்து கொள்வான் என்று தெரியும். மகனை நன்கு அறிந்தவர் ஷண்முக சுந்தரம்.    

அர்ஜுனிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அமைதியாக எழுந்து வெளியில் வந்தான். வீடு முழுவதும் உறவுகள் கலகலத்துக் கொண்டிருந்தனர்.

நர்மதா அங்கே தான் இருந்தாள். உடை மாற்றி ஒரு இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தாள். அவனின் ரூம் சென்றான்.  

அப்பாவும் மகனும் பேசி முடித்து விட்டதை அறிந்து, அவனுக்கு சூடாக குடிக்க காஃபி எடுத்துக் கொண்டு போனார் கௌரி.

அவரைப் பார்த்ததுமே கடிந்தான், “அம்மா நீங்க ரொம்ப அலைச்சல் படறீங்க, இதெல்லாம் வேணும்னா நான் வந்து குடிச்சிக்க மாட்டேனா. எங்க நீங்க தூக்கிட்டு வர்றீங்க, அமைதியா உட்காருங்க”, என்று அதட்டல் போடவும்,

அவனின் அதட்டலை தான் கௌரி கவனித்தார், அவனின் உற்சாகமின்மை அவருக்கு தெரியவில்லை. “நான் நல்லா இருக்கேன், ஒன்னும் இழுத்து விட்டுக்க மாட்டேன். அப்பா கிட்ட என்ன பேசிட்டு இருந்த இவ்வளவு நேரமா”,

“பாஸ்போர்ட்க்கு மா”, என்று பேச்சை முடித்து விட்டான்.

அதன் பிறகு யாருக்கும் தனியாக பேச நேரமில்லை, உறவுகள் சூழ்ந்திருக்க, “எப்போ ஊருக்கு, எப்போ திரும்ப வர்றான், என்ன ப்ளான், நர்மதா எங்க இருப்பா”, போன்ற பேச்சுக்கள் தான் அதிகம்.

“போனா உடனே ஒரு மாசத்துல வந்துடுவேன், அதுவரைக்கும் அவங்கம்மா இல்லை, எங்கம்மா கூட இருப்பாங்க இல்லை அங்கேயே இருக்குற மாதிரி இருந்தா நர்மதா அங்க வந்துடுவா”, என்று வாய்க்கு வந்ததை சொல்லி வைத்தான்.

“இது என்ன புதுக் கதை”, என்பது போல அப்பாவும் அம்மாவும் பார்க்க, “யாரும் வாயைத் திறக்கக் கூடாது”, என்று கண்களால் மிரட்டி வைத்தான்.

அதன் பிறகு நர்மாதவிடம் எதுவும் பேசும் வாய்ப்போ, தனிமையோ கிடைக்கவில்லை. அவ்வளவு நேரம் வரை அதிகமில்லை என்றாலும் எல்லோரிடமும் பேசிக்கொண்டு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

நர்மதாவின் வீட்டினர் சீர் கொண்டு வருவரா என்று கேட்கப் பட, “இங்க வேண்டாம், சென்னை வீட்டுக்குக் கொண்டு வர சொல்லிட்டோம்”, என்று கௌரி சொல்லி வைத்தார். 

“சாங்கியதுக்காவது இங்க ஏதாவது வைக்க சொல்லக் கூடாதா”, என்று வீட்டின் பெரியவர்கள் சில பேர் சொல்ல,

“நான் சொன்னேன் அத்தை, இவர் தான் வேண்டாம்னு சொல்லிட்டார்”, என்று ஷண்முக சுந்தரத்தை கை காட்ட, அதன் பிறகு அதை பற்றின பேச்சில்லை.

எல்லாம் நேரடியா இல்லாவிட்டாலும் காதில் விழ கேட்டு தான் அமர்ந்திருந்தாள் நர்மதா. இங்கே இருக்க மாட்டோம் அதனால் வேண்டாம் என்று சொன்னதாக தானே அப்பா சொன்னார் இப்படி சொல்கிறார்கள் அத்தை ஏன் என்ற யோசனை பலமாக மனதில் ஓடியது. ஒரு வேளை இவர்களுக்கு சமமாக செய்ய மாட்டோம் என்பதினால்  வேண்டாம் என்பதற்காக அப்படி சொல்லி விட்டார்களோ?

என்னவோ சில நிமிடங்களில் ஒரு தனிமை, அவளின் அம்மாவை பார்க்க வேண்டும் போல ஒரு ஞாபகம், தானாகவே அமைதியாகிவிட்டாள். அவ்வளவு நேரம் கூட ஒரு சீரியஸ்நெஸ் இல்லாமல் விளையாட்டு மனப்பான்மையோடு இருந்தவள், “நாங்கள் இவர்களுக்கு சமதையல்ல, இவனுக்கு ஏன் என்னை பிடிக்க வேண்டும், இப்படி எல்லாம் அதையும் இதையும் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது”.   

முதல் முறையாக மனம் ஏதோ அவளிடம் குறையாக உணர்ந்தது. இதற்கு யாரும் ஒரு வார்த்தை கூட அவளைக் குறைவாக சொல்லவில்லை, அர்ஜுனை திருமணம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னர் தான், ஆனாலும் அவளுடைய வசதி வாய்ப்பு எங்கும் பேசப் படவில்லை.

இப்படி மனதில் பலதும் ஓடிய போதும், முகத்தில் புன்னகை வாட விடவில்லை.

“நீ யாருக்கும் கம்மியில்லைன்னு நீயே நினைச்சிக்கலாம் நர்மதா! ஆனா வாழ்க்கையோட நிதர்சனம்ன்னு இருக்கு, ஒன்னுமேயில்லாம வந்து இவங்களோட இத்தனை சொத்தையும் நீ அனுபவிப்பியா”, என்று திடீரென்று அவளின் மனசாட்சி புதிய நியாயம் பேசியது. “நீ அர்ஜுனோட அப்பா இடத்துல இருந்தாலும் இப்படி தானே யோசிப்ப”, என்று அவளை கேள்வி கேட்டது.  

அப்போது தான் அங்கிருந்த பொருட்களின் மீது அனைவரின் ஆடை அணிகலன்கள் மீது எல்லாம் பார்த்தும் பாராமல் பார்வையை ஓட்டினாள்.

எல்லாவற்றிலும் ஒரு செல்வ செழுமை. இப்போது அவளும் அப்படிதான் இருந்தாள். ஆனால் உபயம் அர்ஜுன் வீட்டினர் தான். தன் தந்தையின் உழைப்பு அம்மாவின் நகை எங்கோ அதற்குள் ஒளிந்து இருந்தது.

கண்டிப்பாக எதுவும் யாருக்கும் குறைவில்லை. அவரவர்களுக்கு உரியது அவரவரது. மனதினில் ஒரு ஒட்டாத தன்மை.    

கண்கள் லேசாக கலங்குவது போல இருக்க, யாரும் பார்த்து விடுவார்களோ என்று பொம்மை போல ஒரு மென்னகையோடு அமர்ந்திருந்தாள்.   

அவளின் அம்மா வீட்டினரையும் இரவு விருந்திற்கு அழைத்து இருந்தனர், அவர்கள் ஒரு பத்திருபது பேர் வந்தனர். எல்லோரும் வண்டி வண்டியாக அறிவுரை, “பெரிய இடத்துல வாழ்க்கைப் பட்டிருக்க விளையாட்டுத்தனத்தை விட்டு பொறுப்பா இரு, இப்படி நடந்துக்கோ, அப்படி நடந்துக்கோ, பெத்தவங்களுக்கு நல்ல பேரைத் தேடிக் கொடு, வீட்டு வேலையெல்லாம் பொறுப்பா செய், மாமானார் மாமியாருக்கு மரியாதை கொடுத்து நடந்துக்கோ, அவங்களை கேட்டு எதுவும் செய்”, இப்படிப் பல. அதுவும் அவளின் அம்மா!!!

“அய்யய்யோ எல்லோரும் வாயை மூடுறீங்களா”, என்று கத்த வேண்டும் போல உத்வேகம். ஆனாலும் முகத்தில் புன்னகை வாட விடவில்லை.        

இரவும் கனிய மணமக்கள் தனிமையில் விடப்பட்டனர். பார்த்த நாளில் இருந்து இருவரிடமும் அதுவரை இல்லாத ஒன்று தோன்றி இருந்தது, அது மௌனம்.

அர்ஜுன் ஏதாவது பேசுவானா என்று நர்மதா பார்க்க, அவள் ஏதாவது பேசுவாளா என்று அர்ஜுன் பார்க்க, பார்வைகள் தான் மோதி நின்றன. வாய் வார்த்தைகள் உதிரவில்லை.

இருவருமே நின்று கொண்டிருந்தனர். என்ன அமைதி இது என்பது போல நர்மதாவைப் பார்த்தான். மாலையில் பார்த்தது போல அவளின் முகம் இருக்கவில்லை. ஏதோ குறைந்தது. என்ன என்று ஆராய்ந்தான்.

அழகு தான் அவள்! இன்னும் ஒப்பனையில் அழகாக மிளிர்ந்தாள். வெண்பட்டு அவளின் உடலை பாந்தமாய் தழுவி இருந்தது. முகத்தில் பெரிய பொட்டு, அவளின் முகத்திற்கு இன்னும் ஒரு தனி களையைக் கொடுத்தது, கழுத்தில் எவ்வளவு நகைகள் இருந்தாலும் புது மஞ்சள் கயிறு கொடுக்கும் அழகு பெண்களுக்கு சொல்லொனாதது. அது முகத்திற்கு கொடுக்கும் தேஜஸ் தனி தான்.

இரு கைகளிலும் தங்க வளவிகள் இருந்த போதிலும் அதனுடன் நிறைய இருந்த  மணப்பெண் கண்ணாடி வளவிகள். அதனுடன் இருந்த மெஹந்தி, அவளின் சிவந்த நிறம் தெரியவேயில்லை, மருதாணி சிவப்பு தான் தெரிந்தது.

அவளை அணு அணுவாய் ரசிக்க ஆரம்பித்தான், பெண்ணாய் அல்ல தன்னுடைய மனைவியாய். அந்த முகத்தில் குறைந்தது உணர்வுகள். ஆம்! எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லை, இல்லை அவ்வப்போது பார்க்கும் நீ என்ன பெரிய இவனா என்ற பாவனை இல்லை, கோபம் இல்லை, பயமில்லை எதுவும் இல்லை,  

உற்சாகமின்றி இருந்தாள், தன்னுடைய எண்ணங்களை எல்லாம் தூக்கி தூர வைத்தான் அர்ஜுன். மாலை வரை வாயடித்துக் கொண்டிருந்தாளே என்னிடம், எல்லோரிடம், என்னவாகிற்று.

அவனை பார்ப்பதும் அங்கிருந்த எல்லா பொருட்களையும் பார்ப்பதுமாய் நின்றுதானிருந்தாள்.    

“உட்காரு நர்மதா”, என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு தூக்கம் வருது”, என்றாள் ஏதோ செய்தி போல.

அவள் சொன்ன பாவனையில் சிரிப்பு வர, “தூங்கறதுக்கு எதுக்கு இவ்வளவு அழகா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்க”, என்றான்.

“ப்ச்! தெரியலை! எரிச்சலா வருது!”, என்றாள்.

இப்படி ஒரு பாவனையை அர்ஜுன் எதிர் பார்க்கவேயில்லை. “ஏன்? என்ன ஆச்சு?”. என்றான் ஆச்சர்யமாக.  

“தெரியலை”, என்றாள் சலிப்பாக.  

“வா, உட்கார்”, என்றான்,

அவன் காட்டிய இடத்தில் வந்தமர்ந்தாள்,

“என்ன இப்போ மனசை போட்டு குழப்பிக்கிட்டு இருக்க, சொல்லு என்கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை, எதுவும் பேசலாம்”, என்றான்.

“அம்மா பேசிட்டு இருந்ததை நினைச்சேன்”,

“என்ன பேசினாங்க?”,

“இல்லை, வேண்டாம், இப்போ தான் ரொம்பப் பேசக் கூடாது, விளையாட்டுதனமா பேசக் கூடாதுன்னு எங்கம்மா காதுல ரத்தம் வர்ற அளவுக்கு சொல்லிட்டு போனாங்க, ஏதோ லூசு பொண்ணை பெத்து வெச்சிருக்குற மாதிரி”, என்றாள் ஆற்றாமையோடு.

“ப்ச், என்ன இது? உன்னோட பேச்சு அதுதான் உன்னோட அழகை விட என்னை அட்ராக்ட் பண்ணினது, சொல்லு மனசுலயே வெச்சு எரிச்சல் ஆகாத”,  

அவன் சொன்னது தான் போதும், பொரிய ஆரம்பித்தாள், “உங்களை யாரையும் எனக்குத் தெரியாது, இனிமே நீங்க தான் எல்லாம். இது தான் உன் வீடுன்னு கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டாங்க, ஒருவேளை இங்க எனக்கு பிடிக்கலைன்னா”,

“எங்கம்மா இப்படி நடந்துக்கோ, அப்படி நடந்துக்கோ சொல்றாங்க, நீங்கல்லாம் என்ன சொன்னாலும் கேட்கணும் சொல்றாங்க, உங்க அம்மா சொன்னா கேட்கணும், அப்பா சொன்னா கேட்கணும், எல்லா வேலையும் செய்யணும், வாயடிக்க கூடாது, நல்ல பேர் எடுக்கணும், இப்படி நிறைய”,

“காலையில சீக்கிரம் எழுந்துக்கணும், இந்த வீட்டோட பழக்க வழக்கங்களுக்கு பழகணும், சமைக்கணும், வீட்டை சுத்தமா வைக்கணும், உங்களை நல்லா பார்த்துக்கணும், இப்படி நிறைய எனக்கு சொல்லத் தெரியலை”,

“ஆனா உங்க கிட்ட யாரும் எதுவும் சொல்லலை, உங்க பழக்க வழக்கம் எதுவும் மாறாது, உங்ககிட்ட யாரவது பொண்ணோட அப்பா அம்மா சொல்றதை கேளுங்கன்னு சொல்றாங்களா? எனக்கு மட்டும் ஏன் மாறணும், ஏன் இந்த சிஸ்டம்?”.

“நான் தாலி போட்டிருக்கேன், மெட்டி போட்டிருக்கேன், நீங்க என்ன போட்டிருக்கீங்க”, என்றாள்,

“ஆங்”, என்று விழித்தான் அர்ஜுன்.

“என்ன இது லூசு மாதிரி பேசறேன்னு நினைக்க வேண்டாம். ரியல்லி ஐ அம சிக். என் அத்தை ஒருத்தங்க வாய் பேசக் கூடாது, மாப்பிள்ளை மனம் கோணாம நடந்துக்கணும்ன்னு சொல்லிட்டுப் போறாங்க, இதுக்கு என்ன அர்த்தம்?”, என்று ஆவேசமாக கேட்டாள்.

பரிதாபமாக விழித்து நின்றான் அர்ஜுன். 

அவள் ஏதோ சொல்ல வர, “அர்த்தம் எல்லாம் சொல்ல வேண்டாம், விடு!”, என்றான் அவசரமாக.    

அவனை முறைத்து பார்த்தவள், “நான் ஒன்னும் அர்த்தம் சொல்லலை இடியட்”, என்று திட்டி, “பொண்ணுங்களை சாஃப்டா ஹேண்டில் பண்ணுங்கன்னு பசங்களுக்கு யாராவது சொல்றாங்களா”, என்றாள்.

“இதேதடா நான் எங்களுடைய வாழ்க்கையைப் பற்றி நினைத்திருக்க, இவள் பெண்களுடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறாள், எனக்கு நானே ஆப்பு வெசிக்கிட்டேனா”, அங்கே அவனின் ரூமில் இருந்த மினி பிரிட்ஜை திறந்தவன், குளிர்ந்த நீரை எடுத்து தொண்டையில் சரித்து, அவளையும் குடி என்று கொடுத்தான்.  

“என்ன என்னைப் பார்த்தா லூசு மாதிரி இருக்கா, இப்போ போய் ஃபெமினிசம் பேசறேன்னு”,

“என்ன சொல்வது?”, என்று தெரியாமல் அர்ஜுன் முழிக்க,

“அப்படித் தானே நினைச்சீங்க?”,

“நான் எங்க நினைச்சேன்? நீயே கேள்வி கேட்கற! நீயே பதில் சொல்லிக்கற!”,

“பின்ன நர்மதாவை யாரும் திட்ட முடியாது, ஏன்னா அவளை அவளேத் திட்டிக்குவா”, என்றாள் நக்கலாக,

அர்ஜுனிற்கு சிரிப்பு பொங்கியது, ஆனாலும் சிரிக்காமல் அவள் பேசியதை பற்றி விளக்கம் சொன்னான்.     

“நீ சொல்றது எல்லாம் சரி! ஆனா இதை கடை பிடிக்கறவங்க எத்தனை பேர், ஐ மீன் எத்தனை பொண்ணுங்க இப்படி இருக்காங்க”, என்றான்.

“ஆங்”, என்று இப்போது விழித்தாள் நர்மதா, திரும்பவும் ஏதோ பேச வர,

“நீ சொல்றது எல்லாம் சரி, ஆனா இப்ப நம்ம பத்தி மட்டும் பேசுவோம் என்ன?”, என்றான் சிறுபிள்ளைக்கு சொல்வது போல,

“இதென்ன நான் சின்னப் பொண்ணா, ஏதோ மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்யற மாதிரி செய்யறீங்க”, என்று சிலிர்த்து எழ,

“ஆங், இந்த நர்மதா தான் எனக்கு வேணும், நீ இந்த சாரில ரொம்ப அழகா இருக்க”, என்று பேச்சின் திசையை மாற்றினான்.  

“பயமா இருக்கா?”, என்றாள்.

முதலில் புரியவில்லை, பிறகு அவள் அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது என்ற டைலாக் சொல்கிறாள் என்று புரிந்தவன்,

“இல்லையே”, என்றான் மென் நகையோடு,

“இல்லையா, அப்போ என்னோட மேக் அப் கலைச்சா பயமா இருக்குமா”,

சிரித்தவன், “நர்மதா, இப்படிப் பேசியே பொழுதை ஓட்டிடுவோம்”,

“வேற என்ன பண்ண?”,

“ம், இந்த வேஷ்டி சட்டையில நீங்க அழகா இருக்கீங்கன்னு கூட சொல்லலாம் நர்மதா”,

“அப்படியா, ஆனா நான் பொய் சொல்ல மாட்டேன்”,

“அம்மா தாயே! என்னை விட்டுடு”, என்றான் பரிதாபமாக.

“அஹாங்! இப்படி சொல்லக் கூடாது, என்னை விட்டுடு, நீ தூங்கு சொல்லணும்!”, என்று சொல்ல

என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் அர்ஜுன். சற்று முன்புவரை எப்படி சோகம் போல இருந்தாள். இப்போது இப்படி பேசுகிறாள் என்று யோசித்தபடி அவளையேப் பார்த்திருந்தான். 

அதிக நேரம் கோபத்தையோ சோகத்தையோ அவளால் இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை என்று புரிந்தது.

ஆரம்பித்த இடத்தில் அப்படியே நிற்கிறோம், இன்னும் இவள் எங்கே இருப்பாள் என்று முடிவு செய்யவேயில்லை. இவளை என்ன செய்ய என்று யோசித்தபடி அவளையே விழியகற்றாமல் பார்த்திருந்தான். 

அவனின் பார்வையை பார்த்தவள் ஏதோ மனதிற்குள் திட்டுகிறான் என்றெண்ணி, “என்ன இவளை பெத்தாங்களா செஞ்சாங்களான்னு யோசிக்கறீங்களா”,

“ம்க்கும், அதை ஏன் யோசிக்க போறேன். நம்ம குழந்தையை எப்படி பொறக்க வெக்கிறதுன்னு யோசிக்கறேன்”, என்று பாவனையாக அர்ஜுன் சொல்லவும்,

நர்மதா அவளையும் மீறி சிரிக்க ஆரம்பித்தாள், அவள் பேசி மற்றவர்களை சிரிக்க வைத்து, அழுது, திட்டி, இப்படித் தான் அர்ஜுன் பார்த்திருக்கிறான். உண்மையில் இப்படி மனம் விட்டு சிரித்து பார்த்ததில்லை, அந்த சிரிப்பு இன்னும் இன்னும் அவனை பித்தாக்கியது. 

அதை அவனும் உணர்ந்தான். உணர்ந்த நொடி அர்ஜுனிற்கு தோன்றியது இதுதான். “இந்த ஃபீல் நான் அவளுக்கு குடுக்க வேண்டாமா, அதைக் குடுக்கலைன்னா அப்புறம் என்ன இருக்கு, ஊர்ல எத்தனை பொண்ணுங்க உன்னை ரசிச்சாலும் உனக்கு ஒன்னுமில்லை அர்ஜுன். ஆனா உன் பொண்டாடி உன்னை ரசிக்க வேண்டாமா, உனக்கு அவளை கட்டிப் பிடிக்கணும், மேல மேல போகணும்ன்ற உணர்வு இருக்குற மாதிரி, அவளுக்கு வேண்டாமா, அதில்லாம வாழறது என்ன வாழ்க்கை”, என்று அவன் யோசித்த நேரம்,      

சிரித்து முடித்தவள், “நான் தூங்கட்டுமா”, என்று மீண்டும் கேட்க,“தூங்கு”, என்பது போல தலையசைத்தான்.

“இல்லை! வேண்டாம்!”, என்று ஏதாவது பேசுவான் என்று நர்மதா எதிர்பார்க்க, அர்ஜுன் எதுவுமே பேசவில்லை.

அவளின் பார்வை, நிஜமாக இவன் என்னை தூங்க சொல்கிறானா என்பது போல பார்க்க, அர்ஜுனின் பாவனை தூங்கு என்பதாக தான் இருந்தது,  

அர்ஜுனிற்கு இன்னும் இன்னும் நர்மதாவிடம் வேண்டும் என்று தோன்றியது. என்ன என்று தான் தெரியவில்லை.

“நிஜம்மா தூங்கட்டுமா?”, என்றாள் திரும்பவும். “ஆமாம்!”, என்றவனைப் பார்த்தவள், “நிறைய தமிழ் சினிமாப் பார்த்து கெட்டுப் போயிட்டீங்க போல”, என்றாள் சிரிப்புடன்.

என்ன என்று புரியாமல் அர்ஜுன் பார்க்க,“உன்னோட சம்மதமில்லாமல் கல்யாணம் பண்ணி இருக்கலாம், ஆனா உன்னோட சம்மதத்தோட தான் தொடுவேன்னு மைன்ட் வாய்ஸ் ஓடுதா”, என்றாள்.

அவளைப் பார்த்தவனின் முகத்தில் விரிந்த சிரிப்பு, “சேன்சே இல்லைடி என் பொண்டாட்டி”, என்றான், ஆனாலும் “சம்மதமா”, என்று கேட்கவேயில்லை.

அவனின் பார்வையிலேயே முகம் சிவக்கும், நாணம் காட்டும், உருகிக் கரையும் நர்மதா வேண்டும் என்று அர்ஜுனின் ஒவ்வொவொரு அணுவும் எதிர்பார்க்க,“ஓகே, குட் நைட்!”, என்று சொல்லி எங்கே படுக்க என்பது போல பார்வையை படுக்கையில் ஓட்ட ஆரம்பித்தாள் நர்மதா.   

Advertisement