Advertisement

அத்தியாயம் பதினான்கு:

அர்ஜுன் மெதுவாக பிடியைத் தளர்த்தவும், வாயடிக்காமல் அவனிடம் இருந்து விலகினாள் நர்மதா. இரத்த நாளங்களில் புது உணர்வு தான், ஆனால் அதைக் காட்டி விட்டாள் அது நர்மதா அல்லவே.

விலகியவள், இடுப்பை அவளையரியாமல் தடவி விட்டுக் கொள்ள,

“நான் தடவி விடட்டுமா”, என்று அர்ஜுன் வரவும்,

“அய்யே”, என்று முகத்தை சுளித்து பளிப்பு காட்டியவள், “ஒன்னும் தேவையில்லை”, என்றாள், உன்னால் தானே என்று பார்வையால் குற்றம் சாட்டிக் கொண்டு, 

“வலிச்சா விடுங்கன்னு சொல்ல மாட்டியா”, என்றான் புன்னகையுடன்.

“எனக்கு வலிக்கும்னு தெரிஞ்சு தானே விட்டீங்க, அது கொஞ்சம் முன்னமே தெரியாதா”, என்று பதில் கேள்வி கேட்க,  

“ப்ச், செம அழுத்தம் போ!”, என்று சொன்னவன் இன்னும் பேசவேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பாதால், பேச முடிவெடுத்து, 

“நான் இன்னும் மூணு நாள்ல போகணும் நர்மதா”, என்றான், அதுவரை திருமணம் நன்றாக நடக்க வேண்டும் என்ற பதட்டம் மட்டுமே அவனிடம். திருமணம் முடிந்து அந்தத் தருணத்தை அனுபவித்து, இப்போது அவளை சீண்டிக்கொண்டும் தான் இருந்தான்.

இப்போது தான் இனி என்ன என்ற யோசனைகள் வர, அதை அவளிடம் பேச ஆரம்பித்தான்.

அவனின் பேச்சைக் கேட்ட நர்மதாவின் பார்வை அவனை குற்றம் சொன்னது, “நீங்க என்கிட்ட இதுவரை சொல்லவேயில்லை”, என்பது போல.

உண்மையில் அதைப் பற்றி அர்ஜுன் அவளிடம் பேசவேயில்லை, திருமண நிகழ்வுகளின் போது பேச்சு வாக்கில் கௌரியும் அவளின் அம்மாவும் பேசும் போது கேட்டிருந்தாள், அதனால் தெரியும். 

“நான் இப்ப லீவ் எடுத்து தான் வந்திருக்கேன், எனக்கு அசைன் பண்ணின வொர்க் இன்னும் முடியலை”,

“எதுக்கு இவ்வளவு அவசரம், நீங்க வந்த பிறகு பண்ணியிருக்கலாமே”,

அர்ஜுன் மௌனமாக இருக்க, “எனக்கு பதில் வேணும், அதுவும் உண்மையான பதில்”, என்றாள் முகத்தில் பிடிவாதத்தைக் காட்டி,   

சொல்லப் பிடிக்கவில்லை தான் இருந்தாலும் சொன்னான், “பிடிச்சதோ பிடிக்கலையோ நீ சரின்னு சொல்லியிருக்க, எனக்கு இந்த சான்ஸ் மிஸ் பண்ண மனசில்லை, கூடவே ஒரு பயம் கூட, உனக்கு இதுவரை யாரையும் பிடிக்கலைன்னு தெரியும், ஒரு வேலை நான் கேப் விடற சமயத்துல உனக்கு யாரையாவது பிடிச்சிட்டா”, என்று சொல்ல,

இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தாள், “என்ன பேச்சு இது”, என்பது போல,

“ஹி, ஹி, நாலையும் யோசிக்கணும்”, என்றான். பார்க்க, பேச, நிற்க, நடக்க, என்று எல்லாவற்றிலும் ஒரு கம்பீரத்தோடு இருக்கும் அர்ஜுன், நர்மதாவிடம் அசடு வழிந்தான்.   

“கொஞ்சம் ஹேன்ட்சம் தான் நீங்க, இல்லைன்னு சொல்ல முடியாது. எங்கப்பாவே உங்களை நம்பி விட்டார்னா, கண்டிப்பா நல்லவர் தான், மத்தபடியும் நிறைய பொண்ணுங்க உங்களை சைட் அடிக்கறாங்க, நல்ல வேலைல இருக்கீங்க, நல்ல சம்பளம், நல்ல வசதி…”, என்று வார்த்தையை இழுத்துப் பிடித்தவள்,

“இப்படியிருக்கும் போது உங்களையே எனக்குப் பிடிக்கலை, இன்னும் யாரைப் பிடிக்கும்னு நினைச்சீங்க”,

இந்த பதிலைக் கேட்டதும் குழம்பிப் போனான், “என்ன சொல்றா இவ? நல்லவன்னு சொல்றாளா? இல்லை என்னை பிடிக்கலைன்னு சொல்றாளா?”, என்று பார்க்க,

அதெல்லாம் பற்றிக் கவலைப் படாமல், அர்ஜுனை பார்த்திருந்தாள்.   

“இதுல எல்லோரும் உங்களைக் கல்யாணம் பண்ணினதுக்கு என்னவோ குடுத்து வெச்சிருக்கேன்னு சொல்றாங்க, என்ன குடுத்து வெச்சிருக்கேன்”,

“இன்னும் நீ எனக்கு ஒன்னும் குடுக்கவேயில்லை”, என்றான் சிரிப்போடு.

“அது எனக்குத் தெரியும், குடுக்கவும் மாட்டேன்”, என்றாள் சிறுபிள்ளை போல,

“ஆனாலும் எல்லோரும் ரொம்ப தான் சொல்றாங்க”, என்றாள் சற்றுக் கடுப்பாகவே, முகமும் ஒரு கோபத்தைக் காட்டியது, “ஏதோ போனாப் போகுதுன்னு எனக்கு உங்களோட கல்யாணம் நடந்த மாதிரி அத்தனைப் பேரும் பேசறாங்க”, என்று இந்த இரண்டு நாட்களாக எல்லோரும் பேசப் பேச கேட்டு மனதில் கனன்று கொண்டிருந்ததை மறைக்காமல் சொன்னாள்.

“அய்ய, சும்மா சொல்லிட்டுப் போறாங்க, அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்”, என்றான்.

“உங்களைப் பார்த்து என்னைக் கல்யாணம் பண்ணினதுக்கு குடுத்து வெச்சிருக்கீங்கனு யாரும் சொல்லலையே”, என்பது போல ஒரு அர்ஜுனை ஒரு லுக் விட்டாள்.

அர்ஜுன் அதை கவனிக்கவில்லை, அவனுக்கு இன்னும் பேசி முடிக்கவில்லை என்பதால், “நர்மதா நான் மூணு நாள்ல போகணும், அதை முதல்ல பேசுவோம். உட்கார்!”, என்றான் சற்று சீரியசாக.

“அதைப் பத்தி பேச என்ன இருக்கு”.  

“என்ன இருக்கா????? எங்க இருப்ப நீ……. அங்க நம்ம வீட்ல தனியா இருந்துக்குவியா”,

“ஆங், நானா தனியவா, சேன்சே இல்லை, தனியா ஹாஸ்டல் ரூம்ல பயந்து, பயந்து, தூங்காம முதல் நாள் துப்பட்டா கூட போடாம வந்து நின்னேன் உங்களுக்கு ஞாபகம் இல்லையா?”, என்றாள் அதைவிட சீரியஸாக,

அந்த நாளின் ஞாபகத்தில் அர்ஜுனின் முகத்தில் புன்னகை தானாக மலர்ந்தது. அதே புன்னகையோடு அவளைப் பார்க்க,

கூடவே திரும்பவும் சண்டையிடுவது போல முகத்தை வைத்து, “உங்களை யாரு இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ண சொன்னா”, என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள்.

“கல்யாணத்துக்கு முன்ன வந்துடலாம்ன்னு நினைச்சு தான் இந்த டேட் பிக்ஸ் பண்ண ஓகே சொன்னேன், இப்படியாகும்னு நினைக்கலை, அதுதான் இதைப்பத்தி யாரும் பேசவேயில்லை, இப்ப என்ன பண்ணலாம் அதை சொல்லு”,

“என்னைக் கேட்டா, எல்லாம் உங்க இஷ்டம் தானே, நீங்களே முடிவு பண்ணுங்க”,

“என் இஷ்டம், நான் இருந்தாலும் இல்லைன்னாலும் நீ நம்ம வீட்ல தான் இருக்கணும், உன்னால முடியுமா?”, என்றான்.

“இப்ப தானே சொன்னேன், என்னால தனியா இருக்க முடியாதுன்னு”,

“அப்போ என்ன பண்ணலாம்”,

“எனக்கு தெரியலை?”,

“என்னோட வந்துடறியா அங்க யு எஸ் க்கு”,

“எனக்கும் அங்க வேலை குடுப்பாங்களா”, என்றாள் கண்கள் மின்ன,

“ம்கூம், அதெல்லாம் குடுக்க மாட்டாங்க”,

“அப்போ லீவ் குடுப்பாங்களா”,

“ம்கூம், அதுவும் குடுக்க மாட்டாங்க”,

“அப்போ எப்படி வர முடியும்?”,

“நீ ரிலீவ் ஆகிக்கறியா”, என்றான் அவள் கண்டிப்பாக மாட்டாள் என்று தெரியும், ஆனாலும் கேட்கவில்லையே, நீங்க கேட்டீங்களா, உங்களோட வர சொல்லி என்று கேட்டாலும் கேட்பாள் என்று உத்தேசித்துக் கேட்டான்.

“நோ, ப்ராப்லம்”, என்றாள் உடனே, “ஆனா அங்க கன்செர்ந்க்கு த்ரீ மந்த்ஸ் சேலரி  காம்பன்சேட் பண்ணனும்”,  

“பண்ணிடலாம் நீ நிஜமாவா சொல்ற”, என்று அர்ஜுன் ஆர்வத்தோடு கேட்க,

“எஸ், நிஜமா, ஆனா என் சேலரி வேற நீங்க எனக்கு குடுக்கணும் மாச மாசம்”, என்றாள்.

“அதை விட டபிள் மடங்கு குடுக்கறேன், என்னோட வர்றியா”, என்றான் கண்கள் மின்ன, வந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு. அவன் ஒரு பக்கம் அவள் ஒரு பக்கம் இருப்பதில் அவனுக்கு விருப்பமே இல்லை,

போனால் எப்படியும் ஆறு மாதமாவது ஆகும் என்று தெரியும். விட்டுச் செல்ல மனதில்லை, ஏற்கனவே பார்க்கும் நேரமெல்லாம் வாக்குவாதங்கள், இதில் திருமணமாகி உடனே செல்வதா, என்று மனதிற்கு ஒரு மாதிரி இருக்கவும் தான் கேட்டான்,

“அப்போ என்னை வேலைக்குப் போகக் கூடாது சொல்றீங்களா?”, என்றாள் கோபமாக, கூடவே மனதிற்குள், “பணம் இருக்குற திமிர், அதுதான் என்னத்தையோ நான் குடுத்து வெச்சிருக்கேன்னு ஆளாளுக்கு பேசறாங்க”,  

“நீ வேலைக்குப் போகக் கூடாது அப்படியெல்லாம் இல்லை, என்னோட வரணும்ன்றதுக்காக தான் சொன்னேன்”, என்றான், கூடவே குரலில் ஒரு ஏமாற்றம் கூட, நிஜம் போலவே பேசி ஏமாற்றி விட்டாள் என்று.

அவள் நிஜம் போலவெல்லாம் கேட்கவில்லை, எப்போதும் போல விளையாட்டுத்தனமாக தான் கேட்டாள், அவனுடைய எதிர்பார்ப்பிற்கு தான் அப்படி ஒரு தோற்றம்.

கூடவே அவளை திரும்பவும் ஹாஸ்டலில் விட அவனின் அப்பா சம்மதிக்க மாட்டார், “என்ன? கல்யாணம் பண்ணி என் மருமக அங்க போறதா?”, என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார், “அப்படியென்ன பெரிய வேலை விட சொல்லு”, என்பார் அவனுக்கு தெரியும்.

இப்போது அதுதான் பெரிய கவலை, வீட்டில் அதையும் இதையும் சொல்வார்கள் இவள் என்ன செய்வாள் என்று.

எப்போதையும் விட இன்னும் பொறுப்புகள் கூடி விட்டது போல உணர்ந்தான் அர்ஜுன், பின்னே அப்பாவையும் சமாளிக்க வேண்டும் கூடவே இவளையும்.

என்ன செய்ய என்று தெரியவில்லை, ஞாபகம் வந்தவனாக, “பாஸ்போர்ட் இருக்கா”, என்றான்,

“இல்லை”, என்பது போல தலையாட்டியவள், “இதைக் கூட கேட்காம இந்த மூணு மாசமா என்ன பண்ணுனீங்க? அப்போ என்னைக் கூட்டிட்டு போற ஐடியா இல்லை”, என்றாள்.

 நொந்தே விட்டான், “முன்னால வந்தா கடிக்கற, பின்னால போனா உதைக்கிற”, என்று சொல்லியே விட்டான்.

“என்னைக் கழுதை சொல்றீங்களா?”,

“கண்டுபிடிச்சிட்டியா, இப்ப நான் நிஜமா டையர்ட் தூங்கறேன்”, என்று கடுப்பாக சொல்லி படுத்தும் கொண்டான்.

“என்ன இது?”, என்று அவள் முறைத்துப் பார்க்க, அவன் கண்மூடிக் கொண்டான்.

மூன்று மாதங்கள் பேசமால் இருந்தது தான் தவறு என்று புரிந்தது, இனி என்ன செய்ய என்றும் தெரியவில்லை. இவளானால் கேட்டால் ஒரு பதிலையும் உருப்படியாக சொல்ல மாட்டேன் என்கின்றாள். தலையை வலிப்பது போல இருந்தது.

“உன்னைப் பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டான், ரொம்ப படுத்தாதடி”, என்று அவளுக்கு அவளே சொல்லி அமைதியாக, அர்ஜுனின் அருகில் போய் படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவன் கண்மூடி இருக்க, அவனைக் கண்களால் அளந்தாள், “கொஞ்சம் ஹேண்ட்சம்ன்னு ஏன் பொய் சொன்ன நர்மதா, ரொம்ப ஹேண்ட்சம்மா தான் இருக்கான், அவன்கிட்ட சொல்லலைனாலும் உண்மையை ஒத்துக்கோடி, இனி இவன் தான் உன்னோட பெட்டர் ஹால்ப்”, என்று நினைக்கும் போதே முகத்தில் புன்னகை.

அர்ஜுன் அவனையறியாமல் தலையை அழுத்திக் கொள்ள, அவனையே பார்திருந்தவள், “தலை வலிக்குது போல, பாவம்டி, இப்படியா படுத்துவ”, என்று அவனருகில் நெருங்கி அமர்ந்து, அவனின் தலையை பிடித்து விட,

கண்திறந்து பார்த்தான், “இவளா அழுத்தி விடுகிறாள்?”, என்பது போல,

“தூங்குங்க, அப்புறம் சண்டை போடலாம்”, என்றாள் மலர்ந்த முகத்தோடு,

“சண்டை தான் போடணுமா?”, என்றான் அவளை தீர்க்கமாக பார்த்தபடி.

“இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா மட்டும் தான்”, என்று தோளைக் குலுக்கி அலட்சியமாக சொல்ல,

“என்னை ஒழுங்காவே இருக்க விடமாட்ட நீ”, என்று புரண்டு படுத்தவன், அவள் எதிர்பாராத போது அவளின் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டான்.

“எழுந்து கொள்வோமா”, என்று அவள் நினைக்கும் போதே, “ப்ளீஸ், என்னைக் கொஞ்ச நேரம் தூங்க விடு”, என்று அலுப்பாகச் சொல்ல,

“நான் என்ன பண்ணினேன்”, என்று திரும்பவும் பேச வந்தவள், அவனின் முக பாவனைகளை பார்த்து அசையாமல் அப்படியே அமர்ந்திருக்க, இன்னும் வாகாக அவளின் மடியில் தலைவைத்துக் கொண்டவன், அவளின் கையை எடுத்து, தலையில் வைத்து, பிடித்து விடு என்பது போல செய்ய, கையை இழுக்க நினைத்தவள், அவனின் முகம் பார்த்து, அது முடியாமல், இதமாகப் பிடித்து விட சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட்டான்.

அசையாமல் அவனின் தலையை எடுத்து தலையணையில் வைத்தவள் வெளியில் வந்தாள்,

“ஏன் நர்மதா ரெஸ்ட் எடுக்கலையா?”, என்று சத்யா கேட்க,

“இல்லை அண்ணி, அவங்க தூங்கறாங்க! எனக்கு போர் அடிச்சது! வெளிய வந்துட்டேன்”, என்று சொல்ல,

சத்யாவிற்கு சிரிப்பு வந்து விட்டது, சிரித்து விட்டாள்.

“என்ன அண்ணி?”, என்று நர்மதா கேட்க,

“ஒன்னுமில்லை”, என்றாள் சத்யா,

“என்ன அண்ணி மைன்ட் வாய்ஸ்”, என்று புன்னகைத்து நர்மதா கேட்கவும்,

“ஓஹ், என்னோட மைன்ட் வாய்ஸ் உனக்கு தெரியுமா”, என்று சத்யா கிண்டலாக கேட்க,

“ஏன் தெரியாது, கல்யாணம் ஆகி இப்ப தான் வந்தாங்க, அவன் தூங்கறான், இவ போர் அடிக்குதுன்னு வெளிய வந்து நிக்கறான்னு தானே சிரிச்சீங்க”, என்று நர்மதா சொல்ல,

முதலில் பயந்து, அவசரமாக யாரும் கேட்டு விட்டார்களோ என்று சத்யா சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமில்லை, அவளுக்கு அதன் பின் சிரிப்பை அடக்கவே முடியவில்லை சத்தமாக சிரித்து விட்டாள்.

“ஹேய், யார் முன்னாடியாவது இப்படி பேசி வைக்காத”, என்று சிரிப்போடு சொல்ல,

“யாருமில்லை, நீங்க அதுதானே நினைச்சீங்க”, என்றவளைப் பார்த்து,

“ஹ, ஹ, நீ சேன்சே இல்லை போ!, வா!”, என்று அவளைக் கூப்பிட,

“வான்றீன்களா போன்றீன்களா”, என்றாள்.

“ஹ, ஹ, வா, வா”, எல்லோரும் இருக்கும் இடத்தில் அவளை அமர்த்தி விட,  எல்லோரும் பேச முதலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், பின்பு அவளும் சகஜமாக பேச அங்கே ஒரே சிரிப்பலை தான்.

அங்கே எழுந்த சிரிப்பொலியைப் பார்த்து புதுப் பெண் இப்படி சிரிக்க கூடாது என்று சொல்ல வந்த கௌரி, அப்படியே நின்று விட்டார். பின்னே அவள் சிரிக்கவேயில்லை, சுற்றி இருந்தவர் தான் சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் பெரியம்மாவின் கண்டனப் பார்வையை பார்த்து சற்று அடங்கியவர்கள் பின்பு நர்மதாவைக் கேள்விக் கணைகளால் துளைக்க,   

அவளிடம் எதைக் கேட்டாலும் அவளுக்குத் தெரியவில்லை, அர்ஜுனைப் பற்றியோ அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதைப் பற்றியோ தெரியவில்லை,

“இவனை!!!!”, என்று அர்ஜுனை நினைத்து பல்லை தான் கடிக்க முடிந்தது,

“இன்னும் எதையும் ப்ளான் பண்ணலை, இங்க வந்துடுவோம்னு நினைச்சு இருந்தார் போல”, என்று அதையும் இதையும் சொல்லி சமாளிக்க, ,“டீ பொண்ணுங்களா, உங்க அண்ணி கிட்ட இன்னும் எதுவும் உங்க அண்ணன் சொல்லலை, அவளை எதுக்கு இப்படி கேள்வி கேட்டு துளைக்கறீங்க”, என்று கௌரி நடுவில் வர,

“என்ன பெரியம்மா நீங்க? லவ் மேரேஜ் இது கூட பேச மாட்டாங்களா”, என்று மகள் ஒருத்திக் கேட்க, “உங்க அண்ணனுக்கு தான் இது லவ் மேரேஜ், அண்ணிக்கு இல்லை பொண்ணுங்களா, இப்ப கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்ன தான் உங்க அண்ணன் அண்ணிகிட்ட பேசினான்”, என்று கௌரி எடுத்துக் கொடுக்க,

“நம்பிட்டோம்!!!”, என்று கொல்லென்று பெண்கள் சிரித்தனர்,

“எங்க அண்ணனை யாரவது பிடிக்காதுன்னு சொல்வாங்களா, கல்யாணம் நிச்சயம் ஆன உடனே அண்ணி லவ் பண்ண ஆரம்பிச்சு இருப்ப்பாங்க அப்படி தானே அண்ணி”, என்று ஒரு தங்கை சொல்ல,

“ஐயோ, மறுபடியும் இவன் அலப்பறையா, இவ்வளவு நல்லவன்னு பில்ட் அப் விட்டு வெச்சிருக்கானா, இல்லை நிஜமாவே அவன் அவ்வளவு அட்ராக்ட்டிவா”, என்று மீண்டும் நர்மதா யோசிக்க ஆரம்பித்தாள்,

“எனக்கு ஒன்னும் தெரியலையே”, என்று மீண்டும் யோசிக்க,  “என்ன அண்ணி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க”, என்று கேட்க,

“ம்ம்ம்ம், பிடிச்சிருக்கு ரொம்ப, ஆனா அப்போயில்லை இப்போ”, என்று ஒப்புக் கொடுத்தாள். கூடவே மனதில் யோசனையும், “அப்படித்தானா தெரியவில்லையே, இந்தப் பொண்ணுங்க என்னடா என்னை இண்டர்வியு பண்ணுது” என்பது போல,

அப்போதுதான் அர்ஜுன் எழுந்து வர, அவனையே பார்த்தாள், “இவனை எனக்குப் பிடித்திருக்கிறதா”, என்பது போல, “என்னடா என் பொண்டாட்டி என்னை இப்படி ஒரு லுக் விடறா”, என்று யோசித்தபடியே அர்ஜுன் வந்து அமர்ந்தான்,

இப்போது அண்ணனை ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பிக்க, அவனின் காதல் கதையை, “அம்மா, என்ன இது?”, என்பது போல கெளரியை பார்த்தான்.

“இவ்வளவு நேரமா நர்மதாவை கேட்டாங்க, இப்ப உன்னைக் கேட்கறாங்க”, என்று கௌரி எடுத்துக் கொடுக்க, “ஐயோ, இவ என்ன சொல்லித் தொலைச்சா தெரியலையே”, என்று கலவரமாக நர்மதாவை பார்த்தான்.

அவனின் பார்வையை புரிந்தவள், “உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு சொன்னேன், அப்போ இல்லை, இப்போ”, என்று அப்படியே சொல்ல,

எல்லோரும் மீண்டும் கொல்லென்று சிரித்தனர், “என்னைக் காமெடி பீஸ் ஆக்கறதை விடலியா நீ”, என்று சன்னக் குரலில் அவளைப் பார்த்து கேட்க,

சத்யா இன்னும் சிரித்தாள், “டேய் அர்ஜுன், உன் பொண்டாட்டி சேன்சே இல்லை, கொஞ்ச நேரம் பேசினாலும் அவ சிரிக்காம பேசி எங்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறா”, என்றாள்.

“இதுதான் என்னோட லவ் ஸ்டோரி கூட”, என்று மனதில் நினைத்தான், ஆனால் வெளியில் சொல்லவில்லை. 

“ஆனா எல்லோரும் ஏன் லவ் ஸ்டோரி சொல்றாங்க அண்ணி, இவர் என்கிட்டே எப்பவும் லவ் சொன்னதே இல்லையே”, என்றும் சீரியசாக சத்யாவிடம் நர்மதா சொல்லவும்,

“அப்படியா”, என்பது போல எல்லோரும் இப்போது அர்ஜுனைப் பார்க்க,   

“பின்ன ஆளாளுக்கு லவ் ஸ்டோரிய சொல்லுங்கன்னு கேட்டா, நீ எப்போடா என்கிட்டே லவ் சொன்ன?”, என்பது போல அர்ஜுனை ஒரு பார்வை பார்த்தவள், பதவிசாக கௌரியின் புறம் பார்வையைத் திருப்பி அமர்ந்து கொண்டாள். “ஓரே ஒரு நர்மதாவை வெச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே”, என்பது போல நர்மதாவைப் பார்த்தான்.

Advertisement