Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

அன்று மதியமே கெளரியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு திருமணப் பரபரப்பு தொற்றிக் கொள்ள வீடு முழுவதும் உறவுகள், நர்மதாவின் வீட்டிலும் உறவுகள் வரத் துவங்க…

அதன் பிறகு எதுவும் யோசிக்க நர்மதாவிற்கு நேரமில்லை என்பது தான் உண்மை, மெஹந்தி வைத்துவிட ஆட்கள் வந்து விட்டனர்.

அதிலும் கௌரி அழைத்தவர், “அந்தப் புடவை மாத்திடலாமா”, என்றார்.

“அச்சோ வேண்டாம் அத்தை இருக்கட்டும், நான் புடவையை எதும் சொல்லலை, மேக் அப் மட்டும் அதுல இருக்குற மாதிரி வேண்டாம். அது மட்டும் நான் சொல்ற மாதிரி தான் வேணும், அப்போ தான் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவேன்”, என்று விட்டாள்.

அவள் வைத்ததும் அவளின் போனிற்கு ஒரு மெசேஜ், “எஸ், நர்மதா உனக்கு எது கட்டினாலும் நல்லா இருக்கும்”, என்று அர்ஜுனிடம் இருந்து.

“என்னடா இது, இவனைப் பக்கத்துல வெச்சிக்கிட்டு தான் அத்தை ஃபோன் பண்ணினாங்களோ? இவனை!”, என்று பல்லைக் கடித்தவள்,

“பெரிய கண்டிப்பிடுப்பு”, என்று பதிலுக்கு நர்மதாவும் மெசேஜ் அனுப்பினாள்.

“உன்னையே கண்டுபிடிச்சு இருக்கேன்”, என்று அவன் பதில் மெசேஜ் அனுப்ப,

“என் கைல மருதாணி வைக்கப் போறாங்க, மெசேஜ் டைப் பண்ண முடியாது”, என்று ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தாள்.

“பதில் அனுப்பத் தெரியலைன்னு சொல்லு”, என்று மீண்டும் மெசேஜ் அனுப்ப,

நர்மதாவிடம் இருந்து அவளின் அம்மா அதற்குள் ஃபோன் வாங்கியிருந்தார், “நர்மதா ஆடாம உட்கார்”, என்று.

இவனுக்கு பதில் சொல்ல முடியலையே என்ற வருத்ததோடு நர்மதா அமர்ந்தாள், அதன் பிறகு எதற்கும் அர்ஜுனுடன் வாய் அடிக்கப் போவதில்லை என்று தெரியாதவளாக.

அடுத்த நாள் நிச்சயத்திற்கு அவளை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றது தான் தெரியும், எதையும் அவளால் பிறகு யோசிக்கவே முடியவில்லை, மண்டபமே அவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது, அந்த ஊரில் இருந்த பெரிய மண்டபம் அதுதான் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவளுக்கு தெரியாதது அது அர்ஜுனின் மண்டபம் என்பது.

நிச்சயத்திற்கு அமர்த்தப்படும் முன், பெரியோர்களை  வணங்க கௌரி தான் அழைத்துச் செல்ல, அத்தனை பேர், யார் என்ன என்று தெரியாது, நர்மதாவிற்கு குனிந்து குனிந்து இடுப்பே வலி எடுத்து விட்டது.

சிறு முகச் சுணக்கம் கூட காட்டாமல் அவர் சொன்ன அனைத்தையும் செய்தாள். ஷண்முக சுந்தரம் அதனை பார்த்துக் கொண்டுதானிருந்தார். அதுவரையிலும் கூட அவருக்கு ஏனோ திருமணத்தில் முழு திருப்தியில்லை. ஆனால் அந்த க்ஷணம் நர்மதாவைப் பார்க்கும் பொழுது மிகவும் திருப்தி. அவளின் முகத்தில் ஒரு பொறுமை பணிவு அதே சமயம் ஒரு கம்பீரம் இருந்தது.   

ஒரு வழியாக மேடையில் அமர்த்தப் பட, அவள் முன் மாப்பிள்ளை வீட்டினரின் தட்டுக்கள் வைக்கப்பட, அவ்வளவு சடங்குகள், அத்தனை பேரும் நலுங்கு வைக்க, அதன் பிறகு அங்கிருந்த புடவையும் நகையும் அவளிடம் கொடுக்கப்பட்டு அவள் தயாராகி வர, பெண் வீட்டினர் வசதி இல்லை என்ற குறை ஆங்காங்கே பேசப்பட்டு தான் இருந்தது.

நர்மதாவைப் பார்த்ததும் சற்று மட்டுப்பட்டது. நர்மதா அவ்வளவு அழகாக இருந்தாள், கூடவே முகத்தில் இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து, மணப்பெண்ணிற்கு உரிய களை தானாக வந்திருந்தது, எல்லோருக்கும் வெகு திருப்தி.

திரும்பவும் அவள் அமர்த்தி வைக்கப்பட, இப்போது அருகில் இன்னொரு ஆசனத்தில் அர்ஜுன் அமர்ந்தான். அவர்களின் ஜோடிப் பொருத்தம் அனைவர் கண்களையும் ஆகர்ஷித்தது.     

மீண்டும் எல்லோரும் இருவருக்கும் சேர்த்து நலுங்கு வைத்தனர். இப்படியாக நிச்சயத்தில் ஆரம்பித்து திருமணம் வரை அனைத்து நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக விமரிசையாக நடந்தது.

ஒரு மாதிரி பிரமித்து தான் போயிருந்தாள் நர்மதா, இந்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது என்று கேட்டாள் சத்தியமாக அவளுக்கு சொல்ல வராது. யார் வந்தார் யார் போனர் என்ன சொல்லி வாழ்த்தினர் எதுவும் நினைவில் இல்லை. திருமண சடங்குகள் போக வந்தவர்களை வேடிக்கை பார்க்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.    

இந்த மாதிரி ஒரு திருமண நிகழ்விற்கே அவள் சென்றது இல்லை, இதில் தனக்கு இந்த மாதிரி திருமணம் நடக்கும் என்று கற்பனையில் கூட நினைத்தது இல்லை.

சற்று வருத்தமாக கூட இருந்தது அவளின் நட்பு வட்டத்தில் யாரையும் அழைக்கக் கூட இல்லை. ஊருக்கு வருவரை ஒரு சஞ்சலம் இருந்ததினால், வந்து ஒரு ட்ரீட் கொடுத்துக் கொள்ளலாம் என்று அசால்டாக இருந்து விட்டாள்.

இப்படி நடந்த திருமணத்தில், தான் தான் அதில் கதாநாயகியும் கூட. ஆனால் தன்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லாதது போல ஒரு தோற்றம். இதோ திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து அர்ஜுன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அது வரையில் அவளுக்கு யோசிக்க கூட நேரமில்லை என்பது தான் உண்மை, வரிசையாக நிகழ்வுகள். இப்போது சற்று யோசிக்க நேரம் கிடைக்கக் மனம் அதையும் இதையும் நினைக்க விழைந்தது, முதலில் யோசித்தது, “எல்லோரும் கணவன் வீடிற்கு போகும்போது அழுவார்களாமே, எனக்கு ஏன் அழுகை வரவில்லை”, என்பது போல. அம்மாவிடம் அதை மெதுவாக கேட்டு ஒரு முறைப்பை பரிசாக  வேறு வாங்கினாள்.  

அப்போதும், “சரி, நான் தான் அழலை, நீ ஏன் அழலை, இம்சை விட்டதுன்னு ஹேப்பியா இருக்கியாம்மா”, என்று கேட்டு, திட்டு வேறு வாங்கினாள்.   

அது கூட பரவாயில்லை, அதன் பிறகு அறிவரை என்று அம்மா பேச ஆரம்பிக்க, அவளால் முடியவேயில்லை, “அம்மா விட்டுடு”, என்று அதற்கு தான் கண்ணில் தண்ணீர் வரும் போல ஆனது, “அழ வெச்சிடுவ போல இருக்கு”, என்று சொல்ல, அவள் அழும் மாதிரி இருப்பதைப் பார்த்து அவளின் தம்பி தான் அழ ஆரம்பித்தான்.  

அவனை சமாதனம் செய்வதற்குள் தான் போதும் என்றானது.

இப்படியாக ஒரு வழியாக மண்டபத்தை விட்டு கிளம்பி இப்போது காரில் அர்ஜுன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். ஏனோ ஒரு கோபம் அர்ஜுன் மேல் தான் திரும்பியது.  இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க என்னிடம் பேசவேயில்லை அதனால் தான் நான் யாரையும் அழைக்கவில்லை, எல்லாம் இவனிஷ்டமா அவனை முறைக்க திரும்பினாள். முறைக்க மட்டுமே முடியும் முன்புறம் தான் அவனின் அக்காவும் மாமாவும் இருந்தனர்.   

அவனைப் பார்க்க கண்மூடி அமர்ந்திருந்தான், முகத்தில் அவ்வளவு களைப்பு. மதியத்திற்கு மேலயே இப்படி தான் இருந்தான். பேசாமல் திரும்பிக் கொண்டாள்.

வீடு வந்து கார் நிற்கவும் கூட அவன் விழிக்கவில்லை. ஆரத்திக்கு தயார் செய்ய சத்யா இறங்கிவிட அவளோடு அவர் கணவரும் இறங்கி சென்று விட, அப்போது தான் நர்மதா உணர்ந்தால் அர்ஜுன் உறக்கத்தில் இருப்பதை.

“என்னடா இவன் தூங்கறானா”, ஒரு பத்து நிமிட பயணத்தில் அதுவும் புது மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்று கடுப்பாக வந்தது. “இவனுக்கு லவ் மேரேஜ் வேற? ஆனா இன்னும் இவன் லவ் சொல்லவேயில்லயே? பிடிச்சிருக்குன்னு சொல்றான்! அதுக்கு அதுதான் மீனிங் ஆஆ”, என்று மனதிற்குள் அவளே கத்திக் கொண்டாள். 

அவளுக்கு என்ன தெரியும் எல்லாம் நல்ல படியாக முடியவும், அதுவும் நர்மதா இன்னும் இன்னும் அவனை ஈர்க்கவும், அவளைப் பார்த்த நாட்களாக இருந்த அவள் தனக்கு வேண்டும் என்ற ஆசை நிறைவேற, அதுவே ஒரு நிம்மதியை கொடுக்க, தானாக இந்த சின்ன பயணத்தில் கூட ஒரு உறக்கம்.       

இப்போது பெரிய சந்தேகம் நர்மதாவிற்கு அர்ஜுனை எப்படி அழைப்பது என்று, சென்றவர்கள் வெளியே வரும்வரை உட்கார்ந்திருக்க முடியாது என்று புரிந்தவள், பட்டென்று கை மேல் அடிக்க வேகமாக கொண்டு போனவள், கடைசி நொடியில் முடிவை மாற்றி அவனின் கை தொட்டு அசைக்க, அப்போது தான் எழுந்தான். சுற்றுபுறம் பார்த்தவன், “வீடு வந்திடுச்சா”, என்று புன்னகைத்தபடி இறங்கினான். அவளும் இறங்கினாள்.

அதற்குள் ஆராத்தி வந்திருக்க, சத்யா அதை எடுத்தவள், “ம்ம்ம்ம், குடு, குடு, என்ன குடுக்கப் போற?”, என்று ஆரத்தி காசிற்கு நிற்க,

“என்கிட்டே பர்சில்லை சத்யா”, என்றான், நிஜமும் அதுவே, வேஷ்டி என்பதால் அவனிடம் இல்லை.

“என்ன இது”, என்று அவள் முறைக்க,

“அம்மா சொல்லவேயில்லை”, என்று பாவம் போல நின்றான்.

அதற்குள் இன்னொரு கார் வந்து நிற்க, அதிலிருந்து வீட்டின் மற்ற பெண் பிள்ளைகள் வந்தனர், “அக்கா எங்க உள்ள விட்டுடீங்களோன்னு பயந்த்துட்டோம், அண்ணா என்ன குடுத்தாங்க”, என்பது போலக் கூட நிற்க,

அது முறைமை அல்லவா, எல்லோரும் அர்ஜுனைப் பார்க்க, மொபைலை எடுத்தவன், “எல்லோர் அக்கௌன்ட் நம்பர் குடுங்க, நெட் ட்ரான்ஸ்பார் பண்ணிடறேன்”, என்று சொல்ல, அங்கு கொல்லென்று ஒரு சிரிப்பலை,

நர்மதாவிற்குமே சிரிப்பு…

“எப்போர்ந்து அண்ணா நீ இவ்வளவு புத்திசாலி ஆன”, என்று தங்கை ஒருத்திக் கிண்டல் செய்ய, 

“எல்லாம் உங்க அண்ணி கூட சேர்ந்ததுல இருந்து”, என்று நர்மதாவையும் பேச்சில் இழுத்தான்.

“ம், சரி! பண்ணிவிடு!”, என்று சொன்ன அக்கா, “கேர்ள்ஸ் அக்கௌன்ட் நம்பர் குடுங்க”,  

சில நொடிகள் மொபைலை நோண்டியவன், “சாரி, சர்வர் டவுன்!”, என்று சொல்ல…

“என்ன?”, என்று இடுப்பில் கை வைத்து தங்கைகள் முறைக்க, உண்மையோ என்று நம்பிய நர்மதா, “என் அக்கௌன்ட் நம்பர் கொடுக்கட்டுமா”, என்று கேட்க, அவள் என்னவோ மெதுவாக தான் கேட்டாள்.

ஆனாலும் சத்யாவின் காதில் விழுந்து விட, சிரிக்க ஆரம்பித்தாள் சத்யா,

“ஹ, ஹ, நர்மதா, இந்த அர்ஜுனை நீ அவ்வளவு நல்லவன்னு நம்பறியா, டேய்! இப்படியாடா நீ அவ கிட்ட பில்ட் அப் கொடுத்திருக்க!”, என்று சிரிக்க,

பதிலுக்கு அர்ஜுனும், “பின்ன, ஹ ஹ”, என்று சிரித்தவன், “சும்மாவா, என் பொண்டாட்டி என்னை நல்லவர், வல்லவர்,  நாலும் தெரிஞ்சவர்ன்னு தான் அம்மாகிட்டயே சொன்னா”, என்று சொல்ல மீண்டும் ஒரு சிரிப்பலை.

நர்மதாவின் முகம் சுனங்க, “நர்மதா, இவன் பொய் சொல்றான் நம்பாத”, என்று எடுத்துக் கொடுத்த சத்யா, “சரியான கஞ்சன், பைசா செலவு பண்ண மாட்டான், உனக்கு என்ன கிஃப்ட் கொடுத்தான்”,  என்று உசுப்பேற்ற,

சத்யாவின் சகஜமான பேச்சை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா, 

“என்னயா கஞ்சாப் பயன்னு சொல்றீங்க”, என்று சொல்லி ஏதோ அடிக்க வருவது போல சட்டையை மடித்து விட்டு, ஷர்ட்டின் முதல் பட்டனை கழற்றி காலரை பின்புறம் இறக்கி விட, 

அவன் கழுத்தில் அத்தனை சங்கிலிகள், “ஆ, என்ன இது?”, என்று தங்கைகள் கேட்க,

“உங்களுக்கு கொடுக்கலாம்னு தான் போட்டேன், சத்யா என்னை கஞ்சம்ன்னு சொல்லிட்டா, சோ! யாருக்கும் இல்லை!”, என்று சொல்ல, 

அங்கு பின்னும் செல்ல சண்டைகள், வாக்குவாதங்கள், ஒரு வழியாக எல்லோருக்கும் கொடுக்க, அவர்கள் வீட்டின் உள் வழிவிட்டனர்.       

ஹாலில் நர்மதா அமர்த்தி வைக்கப் பட, அங்கே ஒரு பாட்டி அமர்ந்திருக்க, “எங்கம்மாவோட அம்மா, வா ஆசீர்வாதம் வாங்கிக்கலாம், அவங்க மண்டபத்துக்கு வர மாட்டாங்க, வா”, என்று காலில் விழுந்தனர்.

பின்னர் நர்மதாவை அருகமர்த்திக் கொண்ட அந்தப் பாட்டி, “சமைப்பியா, வீட்டு வேலை தெரியுமா?”, என்று கேள்வி கேட்க,

“என்ன அம்மம்மா நீ, எனக்குக் கல்யாணத்துக்கு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கேன். நான் என்ன வீட்டு வேலைக்கு ஆளா எடுத்திருக்கேன்”, என்று அர்ஜுன் கேட்டுக் கொண்டே அவனுக்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.

நர்மதா அவனை பிரமிப்போடு பார்த்தாள், என்ன பதில் இது என்பது போல, அவன் வெகு சாதரணமாக தான் சொன்னான், ஆனால் எத்தனை பேருக்கு இந்த மனப்பான்மை இருக்கும், முதல் முறையாக சற்று மரியாதையோடு அவனைப் பார்த்தாள் என்பது தான் உண்மை.

ஆனால் அவனின் அம்மம்மா விடுவதாக இல்லை, “என்ன கண்ணா இப்படி சொல்ற, பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும், எவ்வளவு சொத்து சுகம் உனக்கு, உன்னை நல்லா பார்த்துக்க வேண்டாமா, குழந்தைங்களை நல்லா வளர்க்க வேண்டாமா, உன்னை கல்யாணம் பண்ணறதுன்னா சும்மாவா, ஊருக்குள்ள நான் நீன்னு உனக்கு பொண்ணு குடுக்க எல்லோரும் போட்டி போட, நீ இவளை தான் கட்டுவேன்னு சொல்லிட்ட”, என்று ஆதங்கப்பட நர்மதாவின் முகம் சுருங்கி விட்டது.

அது உண்மை தான் என்று அவளுக்கே தெரியும். திருமணம் நடந்த பிரமாண்டத்தைப் பார்த்து தானே இருந்தாள்.

எல்லோருக்குமே அந்த எண்ணம் தான், நர்மதாவை என்னவோ பெரிய அதிர்ஷடஷாலி, அர்ஜுனை திருமணம் செய்வதால் என்பது போல இந்த திருமண நிகழ்வு ஆரம்பித்ததில் இருந்தே பல பேர் அவளிடமே சொல்லி விட்டனர்.

ஆனாலும் அதை கேட்க கேட்க ஒரு சலிப்பு, “சும்மா என்னை எல்லோரும் இவனைக் கல்யாணம் பண்ண குடுத்து வெச்சிருக்கன்னு சொல்றாங்க, என்ன குடுத்து வெச்சிருக்கேன் நான் இவன்கிட்ட. இவனா வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். நான் என்ன இவன் தான் வேணும்னா நின்னேன். ஒரு கழுதையை காட்டியிருந்தா கூட கல்யாணம் பண்ணியிருப்பேன்”, என்ற மாதிரி அர்ஜுனை ஒரு லுக் விட்டாள்.

“நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அலப்பறை தாங்கலை”, என்று அலட்சியமாய் கண்களை ஓட்டினாள். அந்தப் பார்வை ஒன்றும் பெரிதாக அர்ஜுனை பாதிக்கவில்லை, நர்மதாவைப் பற்றி தெரிந்தவன் தானே, சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

எது எப்படி இருந்தாலும் நர்மதா எதுவும் வெளியில் காட்ட மாட்டாள் என்ற அபார நம்பிக்கை, திருமணத்தில் பார்த்தானே! முகத்தில் புன்னகை ஒரு நிமிடம் கூட வாட விடவில்லை, எல்லா நிகழ்வுகளிலும் ஈடுபாட்டோடு இருந்தாளா தெரியாது? ஆனால் எங்கேயும் சிறு முகச் சுணக்கமும் இல்லை, ஆளாளுக்கு சாங்கியம் சம்ப்ரதாயம் என்று அதையும் இதையும் சொல்ல, எல்லாம் செய்தாள். பல சமயம் அர்ஜுன் டென்ஷன் ஆனான், ஏதாவது சொல்லிவிடுவாளோ என்று,

ஆனால் அதுமாதிரி எதுவும் நடக்கவில்லை.

நர்மதாவின் மெச்சுரிட்டி நன்கு தெரிந்தது, இப்போது எல்லோர் முன்னிலையில் இந்தக் கேள்வி வர பதில் சொல்வது தானே நர்மதாவிற்கு கொடுக்கும் மரியாதை.          

“உனக்கு நான் இவளை ஏன் கட்டினேன்னு தெரியுமா அம்மம்மா”, என்றான்.

“ம், என்ன அதிசயம், பொண்ணு அழகா இருக்கு, அதான் தெரியுதே”, என்று நொடிக்க,

“ஏன்? ஊருக்குள்ள இவளை விட அழகான பொண்ணுங்க இல்லையா என்ன?”, என்றான்.

“அப்போ என்ன பார்த்துக் கட்டின”, என்று பாட்டியும் பேச்சை வளர்க்க,

“அதுவா அம்மம்மா, என் பொண்டாட்டி ரொம்ப விவரம் அதைப் பார்த்துக் கட்டினேன்”, என்றான் புன்னகையோடு,

“ம்ம், விவரம் தான்!”, என்று பாட்டியும் நக்கலாக சொல்ல,

புன்னகை முகத்தோடே, “ம்ம், ரொம்ப பாருங்க!”, என்று அவரைப் போலவே சொல்லியவன்,

“இப்பக் கல்யாணம் நடந்ததே, அந்த மண்டபத்துக்கு எவ்வளவு வாடகை?”, என்றான் நர்மதாவைப் பார்த்து.

ஏதோ தனக்காகப் பேசுகிறான் என்று புரிந்தவள் போல மிகவும் யோசித்து “ஒரு லட்சம் இருக்குமா”, என்று புத்திசாலித்தனமாக சொல்ல,

இவர்கள் பேசுவதை எல்லோரும் பார்த்து தான் இருந்தனர், எல்லோர் முகத்திலும் புன்னகை, கூடவே நர்மதாவையும் சற்று கவனித்துப் பார்த்தனர்.  

“என்ன இது? என்னை ஏன் லூசு மாதிரி பார்க்குறாங்க”, என்று தடுமாறியவள் திரும்ப அர்ஜுனைப் பார்த்தாள்.  

புன்னகைத்தவன், “அம்மாமா நீ சொன்ன என்னோட வசதி வாய்ப்பு எதுவும் அவளுக்கு தெரியாது, ஏன் அவங்க அப்பா அம்மாகே தெரியுமான்னு தெரியாது”,

“நம்ம பெரிய ஆளுங்க, வசதி வாய்ப்பு அதிகம்னு தெரியும், ஆனா அர்ஜுனைப் பிடிச்சு போய் தான் பொண்ணு குடுத்தாங்க”, என்று காலரை தூக்கி விட்டவன், “ஆனா இவளுக்கு அது கூட இன்னும் இல்லை, அப்பா அம்மா சொன்னாங்கன்னு தான் கல்யாணம் பண்ணியிருக்கா, பிடிக்கல்லாம் இல்லை”, என்றான் சரியாக நர்மதாவைக் கணித்து.  

“அதனால் இப்படி பேசி இனிமேயும் பிடிக்காம பண்ணிடாதீங்க”, என்றான்.

ஏனோ அந்தப் பேச்சு நர்மதாவிற்கு ரசிக்கவைல்லை.

நர்மதா அவனுக்கு மட்டும் கேட்குமாறு, “இதெல்லாம் ஏன் சொல்றீங்க, அவங்க என்னை பத்தி என்ன நினைச்சா என்ன? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, யாரோ என்னவோ பேசிட்டு போறாங்க யாருக்கும் விளக்கம் குடுக்க அவசியமில்லை இது நம்ம வாழ்க்கை பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்வாங்களா? மானத்தை வாங்காதீங்க”, என்று அவனை கடிந்து கோபமாகப் பேசினாள், ஆனால் முகம் மட்டும் சிரித்த மாதிரி இருக்க,   

சத்யா அர்ஜுனைப் பார்த்து, “என்ன?”, என்று கண்களால் கேட்க,

“மண்டபம் வாடகை சரியா சொன்னேனான்னு கேட்கறா”, எனவும்,

மீண்டும் ஒரு சிரிப்பலை………

“அண்ணி, அது நம்ம மண்டபம் தான்”, என்று தங்கை ஒருத்தி சொல்ல,

“ஓஹ் பெரிய பல்ப் வாங்கிட்டேனா”, என்று மனதிற்குள் நினைத்தவள், “இவங்க என்கிட்டே எதுவும் சொன்னது இல்லை”, என்று அசடு வழிந்தாள் நர்மதா.

“என்ன அர்ஜுன்?”, என்பது போல சத்யா பார்க்க.

“கதை விடறா சத்யா இவ, எனக்கு பேச சேன்ஸ் கொடுக்கலை”, என்று அர்ஜுன் காலை வார,

“தங்கை ஒருத்தி, அண்ணா நீங்க பேசும்போது யாரவது பேச முடியுமா?”, என்று அவனின் காலை வாரினாள்.

“ஏன் ரகசியத்தி சொல்ற? சொல்லாத! உன் அண்ணி தானா தெரிஞ்சிக்கட்டும்!”, என்று சொல்ல,

“அண்ணா விட்டுடு!”, என்று தங்கை தான் சொல்லும்படி ஆகிற்று.

இப்படியாக வீட்டினர் அனைவரிடமும் நர்மதாவை சகஜமாக பேச வைத்தான், அவர்களையும் நர்மதாவிடம் பேச வைத்தான்.

அதற்குள் பெரியவர்கள் வந்துவிட, “மா! எனக்கு ரொம்ப டையர்டா  இருக்கு!”, என்று செல்லம் கொஞ்சினான்.

கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு என்றவர், நர்மதா நீயும் போம்மா, நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன் என்று அவளையும் அவனோடு அனுப்பினார்.

அவனின் ரூம் சென்றதும், “ம் ரெடி ஸ்டார்ட்”, என்றான் கை கட்டி நின்றபடி.

புரியாமல், “என்னத்த”, என்று  எரிச்சலாக நர்மதா கேட்க,

“என்னை அப்பப்போ முறைச்சு பார்த்து கண்லயே திட்டிட்டு இருந்தியே, அதையெல்லாம் இப்ப திட்டு”, என்று அர்ஜுன் போலி பவ்யத்தோடு  சொல்லவும்.

“என்கிட்டயேவா”, என்று அவனைப் பார்த்து நக்கலாக பார்வையை செலுத்தியவள்.

“சாரி, முடியாது”, என்றாள் அவளும் பணிவாக.

“ஏன்? என் மேல கோபமில்லையா, ஹஸ்பன்ட்ன்னு ஒரு ஈடுபாடு வந்திடிச்சா”, என்று ஆர்வமாக  கேட்க,

“என்னது ஈடு,,, பாடா… அப்படின்னா, ஆக்சுவலா அத்தை கொஞ்ச நேரத்துல கூப்பிட்டிட்டுடுவாங்க, இந்த டைம் கேப் எனக்குத் திட்ட பத்தாது. ஆரம்பிசிட்டேன்னா, நிறுத்தவே முடியாது. சோ நைட் ஃபுல்லா திட்டலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன், எதையும் ப்ளான் பண்ணாம பண்ணக் கூடாது”, என்றாள் ரைமிங்காக,

“அம்மாடி, இவளை எப்படி டா சமாளிக்க போற”, என்று அர்ஜுன் நொந்தே விட்டான். பின்பும் விட்டேனா என்பது போல, “நைட் நம்ம வேற பிளான் பண்ணனும் நர்மதா”, என்று அழகாய் ஒரு புன்னகை புரிந்தான்.

இதுக்கெல்லாம் நான் அசருவேனா என்பது போல அவனைப் பார்த்து லுக் விட்டவள், “என்ன பிளான்? ஃபாமிலி ப்ளானா?”, என்று அசால்டு போல கேட்க,

பொங்கி வந்த சிரிப்பை முயன்று கட்டுப் படுத்தி, “ஓஹ் மை காட்”, என்று வெகுவாக ஆச்சர்யத்தை முகத்தில் காட்டி, “ஐயோ, நர்மதா.. என்ன இப்படி பேசற நீ”, எனவும்.

“எப்படிப் பேசறேன்?”, என்றவளைப் பார்த்து,

“நான் மூணு நாள்ல அமெரிக்கா போகணும் இல்லையா? அதைப் ப்ளான் பண்ணலாம்னு சொன்னேன்”, என்றான் சீரியஸ் போல,

இன்னும் நக்கலாக அவனைப் பார்த்தவள், “இவ்வளவு செலவு செஞ்சு அவசரமா என்னைக் கல்யாணம் பண்ணி, அந்த நைட் உட்கார்ந்து நீங்க  அமெரிக்கா போறதை ஏன் ப்ளான் பண்ணனும், அதுக்கு நீங்க வந்தே இருக்க வேண்டாம்”, என்று அவளும் சீரியஸ் போல சொல்லி,

“ஓகே, நோ ப்ரோப்லேம்! உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன், என்னோட திட்டுற பிளானை நாளைக்கு நைட் போஸ்ட்போன்ட் பண்ணிக்கறேன், இன்னைக்கு நீங்க ஊருக்கு போறதை பிளான் பண்ணுவோம்”, என்று சொல்ல,

“அம்மா தாயே விட்டுடு, நான் ஒன்னும் பிளான் பண்ணலை”, என்று கைகளை உயர்த்தி பாவம் போல அர்ஜுன் தோல்வியை ஒத்துக் கொள்ள,

“ம், அது! அந்தப் பயம் இருக்கணும்! தோடா என்கிட்டயேவா”, என்று சொல்ல, அர்ஜூனால் சிரிப்பை அடக்க முடியவேயில்லை வாய் விட்டு சிரிக்க ஆரம்பிக்க, எப்போதும் போல அவசரமாக வந்து நர்மதா, அர்ஜுனின் வாய் பொத்த்தினாள்,

அர்ஜுன் இடையோடு அவளை அணைத்துப் பிடித்து, அவன் வாய் மூடிய விரகளில் முத்தமிட, வேகமாக கையை விலக்கினாள் நர்மதா. ஒரு சிறு அதிர்வு உடலிலா? மனதிலா?

பிடித்திருந்த அவளின் இடையை இன்னும் இறுக்கியபடி, “தேங்க்யு வெரி மச், எவ்வளவு கலாட்டா பண்ணாலும், என்னை கலாட்டா பண்ணாம கல்யாணம் பண்ணினதுக்கு, ஐ லவ் யு”, என்று அர்ஜுன் உணர்ந்து சொல்ல,

அவனின் பார்வையை எதிர் கொண்டவள், “இதுக்கு நான் என்ன சொல்லணும், பதிலுக்கு ஐ லவ் யு ன்னா, இல்லை எனக்கு வெக்க வெக்கமா வருதேன்னா”, என்று நர்மதா வாய் மொழியாக சொல்லி கூடவே கண்களில் ஒரு கிண்டலை தவழவிட, அதற்கு அர்ஜுன் வாய் மொழியால் பதில் சொல்லவில்லை, கண்களால் சொன்னான், “உன்னை வெட்கபட வெக்கறனா இல்லையான்னு பாருடி”, என்பது போல,

நர்மதாவின் விழியும், “உன்னால முடிஞ்சா பாருடா”, என்று சொன்னது போல அர்ஜுனிற்கு ஒரு தோற்றம் கூட, இருவருமே பார்வையை விலக்கவில்லை, நர்மதாவால் என்ன முயன்றும் அவளின் இடையை சுற்றியிருந்த அர்ஜுனின் கையை விலக்க முடியவில்லை. 

நர்மதாவின் கைகள் அர்ஜுனின் கைகளை விலக்க வெகுவாக முயற்சித்துக் கொண்டிருக்க, உடலும் ஒரு திமிறலை காட்ட, அதையும் மீறிய சிலிர்ப்பு நர்மதாவின் உடலில்.

அந்தப் பரவசத்தை உணர ஒவ்வொரு அணுக்களும் துடித்த போதும், அர்ஜுனின் கைகள் மட்டுமல்ல கண்கள் கூட அவளின் உடலில் ஜாலம் செய்த போதும், ஒரு சிறு தவிப்பையோ பரவசத்தையோ அவளின் முகம் காட்டவேயில்லை. அர்ஜுன் அதையும் ரசித்துப் பார்த்தான்.    

கைகளால் தான் விலக முயன்று கொண்டிருந்தாள், “விடுங்க”, என்று வார்த்தையாக சொல்லவில்லை, கண்களும் “விடுங்க”, என்று கேட்கவில்லை. அர்ஜுனே கடைசியில் அவளுக்கு வலிக்குமோ என்று பிடியைத் தளர்த்தினான்.    

 

Advertisement