Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு:

அப்பா வந்து சொன்னவுடன் நர்மதாவிற்கு அவ்வளவு கோபம், “என்ன திமிர் இவனுக்கு”, என்பது போல, “இவர்கள் திருமணத்தை நிறுத்துவார்களா? எப்படி என்று நான் பார்க்கிறேன்?”, என்ற எண்ணம் தான்.

“யாரும் எதுவும் நிறுத்த முடியாது பா! யார் நிறுத்தறான்னு நான் பார்க்கிறேன்!”, என்று அப்பாவிடம் கோபமாக சொன்னாள்.

“இல்லை, நர்மதா அவங்க நிறுத்தறேன்னு சொல்லலை, ஜாதகத்தை பத்தி தான் பேசினாங்க. நீங்க மாத்தினிங்களா அப்படி இப்படின்னு ஆளாளுக்குப் பேசினாங்க, இந்த தம்பிக்கு தான் ரொம்ப கோபம் வந்திடிச்சு. அவங்க அப்பா கிட்ட, நீ ஒன்னும் கல்யாணம் பண்ணிவைக்க தேவையில்லை இந்த கல்யாணம் தேவையில்லைன்னு சண்டை”,

“எனக்கு அதுக்கு மேல நிக்க முடியலை, சொல்லாம கொள்ளாம வந்துட்டேன்”, என்றார் மிகுந்த வருத்தத்துடன். “என்ன முடிவு பண்ணுவாங்க தெரியலை”, என்றார்.

“என்னது இவன் சொன்னானா? என்ன தைரியம் இவனுக்கு? தானாக வந்த வரனா, இல்லை எனக்குப் பிடித்திருந்ததா, இவர்களாகத் தானே வந்தார்கள், இப்போது வேண்டாமா”, அர்ஜுன் மட்டும் முன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள் என்று தெரியாது. அப்படி ஒரு கண்மண் தெரியாத கோபம்,

அம்மா, “என்ன நடக்குமோ?”, என்று தவிப்போடு பார்க்க,

“அவங்களா வந்தா பேசிக்கலாம் இல்லைன்னா விட்டுடலாம், நாம வலிய போய் எதுவும் பேசவேண்டாம். என் பொண்ணு விதி எப்படியோ அப்படி நடக்கட்டும்”, என்றுவிட்டார் ஓரே முடிவாக.

“அப்பா கல்யாணம் நின்னா அதுக்கும் என்னை தானே பேசுவாங்கப்பா”,, என்று அழுகை முட்டி நிற்க நர்மதா வினவ..

“ஊர் உலகத்துல எவ்வளவோ நடக்குது நர்மதா, கல்யாணம் ஆகிட்டு பிரியரவங்க எத்தனையோ பேர்! இது இன்னும் கல்யாணம் ஆகலை தானே விடு! அப்பா அம்மாவையே அவ்வளவு கோபமா பேசறாங்க அந்த தம்பி! நாளைக்கு உன்னை எப்படி பேசுவாரோ. அவங்க வரலைன்னா நம்ம கண்டிப்பா போக வேண்டாம். நான் போக மாட்டேன், பணம் காசு இல்லன்னா என்ன என்கிட்டே. இப்படி என்னோட இத்தனை வருஷ வாழ்க்கையில நடந்துகிட்டதே இல்லை. இவனுங்க என்னடான்னா வான்னு சொல்ல மாட்டேன்றாங்க! போறானுங்க! அவங்க பெரிய ஆளுங்கன்னா அவங்க வரைக்கும்! எனக்கு என்ன வந்தது!”, என்றுவிட்டார்.

“இதை தானே நான் முன்னமே சொன்னேன் வேண்டாம்னு. நீங்க கேட்டீங்களா. இப்ப போய்  இப்படி சொல்றீங்க, நீங்க சரின்னு சொன்னா நான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லணும். நீங்க வேண்டாம் சொன்னா வேண்டாமா. என் பேச்சை நீங்க எப்பவும் எடுக்கறது இல்லை. அதான் இவ்வளவு பிரச்சனை”, என்று தந்தையிடம் சண்டையிட்டவள், போய் அவளின் ரூமிற்குள் அடங்கிக் கொண்டாள். 

அப்போதும் பத்து நிமிடம் தான் அதற்கு மேல் தாளவே முடியவில்லை அர்ஜுனிற்கு அழைத்தாள், அவன் எடுத்தும் பொரிந்து தள்ளி விட்டாள்,

“ஏய், என்ன விளையாடுறியா? கல்யாணம் வேண்டாம் சொன்னியாமே! என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது, ஏற்கனவே ஊர் பூராவும் நான் உன்னை காதலிக்கறேன்னு சொல்லி வெச்சிருக்க, இப்போ கல்யாணத்தை நிறுத்துற! என்னோட வாழ்க்கையை என்னன்னு நீ நினைச்ச”, என்று சொல்லும் போதே அழுகை வெடித்துவிட, அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை, போனை வைத்து விட்டாள்.    

அர்ஜுனிற்கு அப்போதுதான் உரைத்தது, இது அவன் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல என்று. அதுவரை அவனின் கோபத்தில் இருந்தவன் சற்று நிலைக்கு வந்தான்.

அழுகை, அழுகை, அப்படி ஒரு அழுகை… இது இயலாமையால் வரும் அழுகை… “இதுக்கு நீயே கல்யாணத்தை முன்னமே நிறுத்தியிருக்கலாம் தானே! எதுக்கு அவன் நிறுத்த சேன்ஸ் கொடுத்த!”, என்று நினைத்தவள்,

திரும்ப அர்ஜுனிற்கு அழைத்தால், “இதுக்கு நானே கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன் தானே… உனக்கு சரின்னு சொன்னேன் பாரு, நீ என்ன பண்ற கல்யாணத்துக்கு சரின்னு சொல்ற, அப்புறம் நான் வேண்டாம்னு சொல்வேன், நீ சரின்னு சொல்ற”, என்று திரும்பவும் போனை வைத்து விட்டாள், அவன் அழைத்தாலும் எடுக்க வில்லை.

அர்ஜுனிற்கு அந்த நிலையிலும் அவளின் பதிலை கேட்டு சிரிப்பு வந்தது. அது அவனின் நிலையை சற்று லகுவாக்கியது.

“இப்படி பண்ணிட்டியேடா அர்ஜுன், நர்மதாவைப் பத்தி உனக்கு நினைப்பே இல்லையா… அப்பா பண்ற இந்தக் கல்யாணம் வேண்டாம், நானே செஞ்சுக்குவேன்னு சொல்றதை விட்டு, அவளை வேண்டாம்னு உன்னை யார் சொல்ல சொன்னா… நீ நிஜமா அவ உயிரை எடுக்கற, உனக்கும் உங்கப்பாக்கும் சண்டைன்னா, அவ என்ன செய்வா? என்று மனதிற்குள் மருகிக்கொண்டிருந்தான்.

“அவளைப் போய் உன்னால மிஸ் பண்ண முடியுமா? என்ன முட்டாள்தனம் செஞ்சிருக்க?”, என்று அவனை அவனே திட்டிக் கொண்டிருந்தான்.

திரும்பவும் அப்போது தான் கௌரி கண்விழிதிருக்க, “அர்ஜுன்”, என்றழைக்க பக்கத்தில் அமர்ந்தான். எல்லோரும் தூர தான் நின்றிருந்தனர், யாரையும் அருகில் விடவில்லை அதுவரை…

“எதுக்கு இவ்வளவு கோபம் தப்புடா.. கல்யாணம் வேண்டாம் சொல்லக் கூடாது. இது உன் கல்யாணம் மட்டுமில்லை நர்மதாது கூட, அவங்கப்பா கூப்பிடு நான் பேசறேன்”, என்றார்.

“அவர் போயிட்டார்”, என்ன்றவனைப் பார்த்து, “அப்போ வீட்ல சொல்லியிருப்பரா”, என்று அதிர்ச்சியோடு கௌரி கேட்க… “ம்”, என்ற தலையசைப்பில் இருந்தே விஷயம் இன்னும் பெரிதாகிவிட்டது என்று புரிந்தது.

“நர்மதா கிட்ட நான் பேசறேன் போன் பண்ணிக்குடு”,

“இல்லை, எடுக்க மாட்டேங்கறா”, என்றான் ஆற்றாமையோடு, 

“உன்கிட்ட பேசினாளா”,

“ம், அழறாம்மா, நிறைய தப்பு பண்றேன் போல”, என்று அர்ஜுன் சொன்ன போது குரலில் அவ்வளவு வருத்தம், அதன் பிறகு எதுவுமே பேசவில்லை அமைதியாக அமர்ந்து விட்டான்,

சத்யாவை அருகில் கௌரி அழைக்க, அவளும் அழுதுகொண்டே வர, “என்னடா பண்ணின?”, என்றார் மறுபடியும் கௌரி

“இங்க இருக்காத கிளம்பிட்டே இரு, உன்னைப் பஞ்சாயத்து பண்ண யாரும் கூப்பிடலைன்னு சொன்னேன்”,

“நீ யாருடா அதை சொல்ல, அவ என் பொண்ணுடா, நீ எப்படி எனக்கோ அப்படி தான் அவ”, என்று கௌரி சீற,

“எனக்கும் அவளுக்கும் ஆயிரம் இருக்கும், நீங்க ஏன் அதை கேட்கறீங்க, அவ என் அக்கா”, என்றான் அம்மாவை பார்த்து.

திரும்ப அக்காவைப் பார்த்து, “உன்னை யாரு அழ சொன்னா, இப்போ அம்மா சொல்ற மாதிரி நீ யாரு அதை சொல்லன்னு என்னைப் பார்த்து சொல்லிட்டு போக வேண்டியது தானே!”, என்றான் சத்யாவைப் பார்த்து,

“மனுஷனாடா நீ! எல்லோரையும் அந்தப் பேச்சு பேசிட்டு இப்ப ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசற”, என்று கோபத்தில் சத்யா வந்து அவனின் தோளில் பட்டென்று ஒரு அடி வைக்க,

சத்யா அடித்த இடத்தில் தூசு போல தட்டி விட்டு, “என் சட்டையை அழுக்காக்காத, அப்படி தான் நான் பேசுவேன்”, என்றான் திமிராக.

“அர்ஜுன் நீ பண்றது சரியில்லை”, என்று கௌரி அதட்ட,

“நான் எப்போ சரின்னு சொன்னேன்! நான் அப்படிதான்!”, என்றான்.

“உன்னை!!!”, என்று கடுப்பான சத்யா, ஹாஸ்பிடல் சுவரில் கையை தேய்த்து, தன் கையில் தானே துப்புவது போல ஆக்ஷன் செய்து, அவனின் சட்டையில் கையை தேய் தேய் என்று தேய்க்க,

அங்கிருந்த சூழ்நிலை இன்னும் இலகுவானது. 

“அட, அம்மாவும் மகனும் விடுங்கப்பா”, என்று அவனின் பெரியம்மா சொல்லவும்,

“கல்யாணம்”, என்று கௌரி கணவரைப் பார்த்துக் கொண்டே கேட்டார், விழியின் மொழி இயலாமையை கணவரிடம் காட்டியது.

“நடக்கும்”, என்று சொன்ன ஷண்முக சுந்தரம், “நாம யாரும் நிறுத்தறோம்னு சொல்லவேயில்லை, எல்லாம் அவனா சொல்லிக்கறான்”, என்று மகனைப் பற்றி சொன்னவர்,

“நான் இப்போவே பொண்ணு வீட்ல பேசிடறேன்”, என்று கிளம்பினார்,

அவரின் அண்ணனைப் பார்த்து, “பெரிய மாமா நீங்களும் கூடப் போங்க”, என்றார் கௌரி.

“நிறுத்தறேன்னு சொன்னது இவன்! நாங்க என்ன போய் பேச! இவன் தான் பேசணும்!”, என்று அர்ஜுனை அவர் காட்டினார்.

“அவனா!”, என்று கௌரி இழுக்க,

“நிறுத்தினது மாப்பிள்ளை பையன்! அப்போ அவன் தானேம்மா பேசணும்! இல்லைன்னா மாப்பிள்ளை சம்மதம் இல்லாம நாம் பேசறோம்னு ஆகாதா!”, என்றார்.

அவர் சொல்வதும் ஒருவிதத்தில் சரியாக பட, “சரி மாமா, அப்போ நீங்க அவனைக் கூட்டிட்டுப் போங்க, இவர் இங்கயே இருக்கட்டும்”,

“இல்லை, நானும் போறேன்!”, என்றார் ஷண்முக சுந்தரம். அர்ஜுன் சொன்னது போல அந்தப் பெண்ணை பார்க்கும் ஆர்வத்தில் தானே அவன் காரில் கிளம்பினான். ஒரு வேலை பஸ்ஸில் வந்து அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நினைத்துப் பார்க்கவே மனம் பதறியது. அதன் பொருட்டு நிலைமையை சீராக்குவது தான் அவர்களுக்கு தான் செய்யும் நன்றிக் கடன் போல தோன்றவே அவரும் செல்ல நினைத்தார்.

இவர் இப்படி மனதில் நினைத்துக் கொண்டிருக்க எல்லோர் முன்னிலையிலும் அர்ஜுன் அவரின் மானத்தை ஏலம் விட்டான்.    

“எதுக்கு? அங்க வந்து நான் நர்மதாவைப் பார்த்தேன்னு சொல்றதுக்கா, நான் எங்கயும் போகலை, நானெல்லாம் உங்கம்மா கூட சரியா பேச ஒரு வருஷம் ஆச்சு அப்படின்னு சொல்லுவார். ஆனா சத்யா பத்து மாசத்துல பொறந்துட்டா”, என்று கடுப்பாக சொல்ல.

எல்லோர் முகத்திலும் சிரிப்பு.

“டேய்…”, என்று அவனை அதட்டிய அவனின் பெரியம்மா, “சண்முகம் உன் பையன் ஒருத்தன் போதும் நம்ம வீட்டு மானத்தை வாங்கறான், அவனை முதல்ல கிளப்பிட்டு போ”, என்று சொல்ல,

கௌரி அவர் தலையில் அவரே தட்டிக் கொண்டார். அவரின் செய்கையை  பார்த்து அர்ஜுன் வசீகரமாய் புன்னகைக்க, “போடா”, என்று செல்லமாக அவனை அதட்டினர். 

இப்படியாக காலையில் ஏழு மணிக்கு நர்மதாவின் வீட்டை அடைந்தனர்.  அவர்களை அந்த நேரத்தில் அவளின் வீட்டில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

“வாங்க! வாங்க!”, என்று பயபக்தியோடு நர்மதாவின் தந்தை வரவேற்க, யார் என்பது போல மொத்த குடும்பமும் வெளியே வந்தது,  

இவர்களைப் பார்த்ததும் நர்மதா உள் விரைந்து விட்டாள், க்ஷண நேரம் என்றாலும், அது அர்ஜுனின் பார்வைக்கு தப்பவில்லை, “முகத்தைக் கூட சரியா பார்க்கலை ஓடிட்டா”, என்று மனதிற்குள் அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.

உள் செல்லாமல், “அங்க ஏதேதோ பேசிட்டோம்! அப்படியெல்லாம் எதுவுமில்லை, கல்யாணம் நல்லபடியா நடக்கும். அதை சொல்லத் தான் வந்தோம்”, என்று அப்பாவே சொல்லிவிட…

“யார் பேசினீங்க? நீங்க பேசினீங்க… தம்பி பேசினார்… அவ்வளவு தானே! நீங்க பேசாம யார் பேசுவா, அதெல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன்”,  என்று சொல்ல,

“ஆஹா! எப்படிடா இப்படி என் வீட்டுகாரர் பல்டி அடிக்கிறார்”, என்று நர்மதாவின் அம்மா வாய் பிளந்து பார்த்து நிற்க,  அதை பற்றிய எண்ணமே இல்லாமல், அர்ஜுனின் அப்பாவை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார் நர்மதாவின் தந்தை, “உள்ள வாங்க”, என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றவர்,

“காஃபி போடும்மா!”, என்று மனைவியை விரட்டினார்.

“இல்லைங்க, கிளம்பறோம்!”, என்று சொன்னவர்களை விடவில்லை,

“ஒரு பத்து நிமிஷம், மாப்பிள்ளை தம்பி முதல் முதலா வந்திருக்கார்! எப்படி அப்படியே அனுப்ப!”, என்று சொல்லி பார்த்தால் அர்ஜுன் இல்லை.

வெளியே தான் நின்றிருந்தான், அவர் வெளியே சென்று அழைக்க,

“இல்லை, பரவாயில்லை, நல்ல நேரம் பார்த்து வர்றேன்”, என்று சொல்லி விட்டான்.

அவரின் முகம் சுருங்கி விட்டது, அப்படி சொல்பவனிடம் என்ன சொல்ல?

உள் சென்று அதைக் கூற, அவனின் பெரியப்பா வந்து, “நல்லது நினைச்சு செஞ்சா, எல்லாம் நல்ல நேரம் தான். வாடா”, என்று சொல்ல,

“வேண்டாம்”, என்றான், தந்தை ஏதாவது சொல்வாரே என்று. அதுவுமில்லாமல் நர்மதா எப்படியும் வெளியே வரமாட்டாள், உள் சென்று என்ன செய்ய என்று மனதில்லாமல் அப்படியே நின்று விட்டான்.  

பெரியப்பா, “நீ இப்ப வர்ற”, என்று அதட்டல் போட அதன் பிறகே வந்தான்.

ரூமின் உள் இருந்த நர்மதாவிடம், அவளின் அப்பா, “வா வந்து, வாங்கன்னு சொல்லு!”, என்று சொல்ல, “நான் வரமாட்டேன்”, என்று பிடிவாதம் பிடித்து நின்று கொண்டிருந்தாள்,

“வா கண்ணு, எல்லாம் வந்து இருக்காங்கள்ள”,

“நான் வரமாட்டேன்! நீங்க வான்னா வரணும், வேண்டாம்னா விட்டுடணுமா, நான் வரமாட்டேன்”, என்று பிடிவாதமாக நின்றாள்.

பேச நேரமில்லாமல், மனைவி காஃபி போட்டுவிட்டாரா என்று அந்த மனிதர் அதைப் பார்க்க ஓடினார்.

அங்கே மனைவியிடம், “அவ வரமாட்டேங்கறா”, என்று சொல்ல, “நான் சொல்றேன்”, என்று அவளின் அம்மா ஓடினார்.

அவர் பேசி சமாதனம் செய்து அழைத்து வர, “வாங்க மாமா”, என்று அவனின் அப்பாவையும் பெரியப்பாவையும் பார்த்து தனித் தனியாக பணிவாகவும் மரியாதையாகவும் சொன்னவள், அவர்கள் ஏதாவது பேசும் வரை நிற்க வில்லை, அர்ஜுன் புறம் திரும்பக் கூட இல்லை உள் சென்று விட்டாள். 

கண்கள் அழுது சிறுத்து இருந்தது. முகமும் வாடித் தான் இருந்தது. “பொண்ணு கிட்ட பேசு அர்ஜுன்”, என்று பெரியப்பா மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல,

“வேண்டாம் பெரியப்பா”, என்றான்.

“பேசேண்டா, அழுதிருக்கும் போல, பார்த்தாலே தெரியுது”,

“வேண்டாம், எங்கப்பா அதுக்கும் பேசுவார்”, என்று அவனும் முணுமுணுத்தான்.

“நான் சொல்றேன் போ”, என்றவர் நர்மதாவின் அப்பாவிடம், “நர்மதாவை அர்ஜுன் பார்த்து பேசட்டுமா”, என்று சம்மதம் கேட்க,

அவர், “ம் பேசட்டுமுங்க”, என்றார், கூடவே கலக்கம், இவள் என்ன செய்வாளோ என்பது போல.

அர்ஜுன் அப்போதும் அமர்ந்தே தான் இருந்தான்.

“போடா”, என்று தந்தை சொன்ன பிறகு எழுந்தவன், அவளின் ரூம் செல்ல, அங்கே இருந்த ஜன்னலில் வெளியே பார்த்து நின்றிருந்தாள்.

“நர்மதா”, என்று அழைக்கவும் அவனை எதிர்பார்க்கவில்லை, அவசரமாக திரும்பினாள்.

அர்ஜுனை நர்மதா நேர் கொண்ட பார்வை பார்க்க, என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான். எப்போதும் ஏதாவது செய்து முழிப்பதே என்னுடைய வேலையாக போய்விட்டது என்று அவனுக்கு அவனே சலித்து கொண்டு. 

“நீ நேத்து பேசின பிறகு உன்னைப் பார்க்கணும் போல ஒரு உந்துதல். அதான் உடனே கிளம்பினேன், இல்லை அந்த ஆக்சிடன்ட்ல மாட்டியிருப்பேன்”, என்றான்.

“ஓஹ்! அதான் கல்யாணத்தை நிறுத்த சொன்னிங்களா”, என்றாள் ஆவேசமாக.

“அது அப்பாவோட சண்டை போட்டேன்! அதான் அந்தக் கோபத்துல..”, என்று அவன் அசடு வழிந்து அவன் இழுக்க…

“எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடலாம்னு இருந்தீங்களா”, என்று நர்மதா நக்கலாக கேட்க…

“ம்கூம், அது என்னால எப்பவும் முடிஞ்சிருக்காது”, என்று மீண்டும் அசடு வழிந்தான்.   

“கல்யாணம் ஆகலை நிறுத்த சொன்னீங்க! கல்யாணம் ஆகியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க போயிடுன்னு சொல்வீங்களா”, என்றாள் கைகளை கட்டி அவனை ஒரு பார்வை பார்த்தபடி.

நர்மதாவின் அந்த பாவனை, அந்த அலட்சிய பார்வை, அர்ஜுனை மிகவும் ஈர்க்க… அவள் முன் சென்று நின்றவன், “looking stylish babe, wow what an attitude”, என்று அவளை ரசித்துப் பார்க்க… 

“ம்ம்ம், கண்ணை நோண்டிடுவேன், முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”, என்று அதட்ட…

“அய்யோ, பயந்துட்டேன்! எத்தனை தோப்புக்கரணம் போடட்டும் பத்து, இருபது”, என்றான்.

“எனக்கு தோப்புக்கரணம் எல்லாம் வேண்டாம், நீங்க சரின்னு சொல்லீட்டீங்கள்ள, நான் நிறுத்தறேன்!”, என்றாள், அதை முடிவு செய்து விட்டவள் போல,  

“என்ன நிறுத்தறையா?”, என்று போலியாக ஆச்சர்யம் காட்டியவன்,

“நான் நீ விபரீதமான முடிவு எடுத்துடுவன்னு தான் சரின்னு சொன்னேன், நீ ஒன்னும் நிறுத்த வேண்டாம், நான் சரின்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்”, என்றான் அசால்ட்டு போல,  

“என்ன விபரீதமான முடிவு? நான் செத்துப் போயிடுவேன்னு நினைச்சீங்களா, நான் எதுக்கு சாகணும்”, என்று சொல்லவும்,

நர்மதா எதிர்பாராத போது அவளின் வாய் மேல் செல்லமாக அடி வைத்தான்… “ஆங்”, என்று அவள் முறைத்துப் பார்க்க,

“இந்த மாதிரி அபசகுனமா பேசக் கூடாது”, என்று சொல்லியவன், “நான் சொன்னது அந்த விபரீதமான முடிவு இல்லை, நான் தாலி கட்டுறதுக்கு பதிலா, நீ எனக்குத் தாலி கட்டுவேன்னு விபரீத முடிவு எடுத்துட்டா”, என்று கண்ணடித்தான்.

இடுப்பில் கை வைத்து முறைத்தாள். 

“என்ன உன் கூட சேர்ந்து சேர்ந்து உன்னை மாதிரி ஆகிட்டேனா”, என்றான்.

“என் கூட நீங்க ஒன்னும் சேரலை”, என்றாள் கடுப்பாக.

“எஸ், இன்னும் சேரலை”, என்று கண்ணடித்தான் அவளை பார்வையால் வருடுயபடி, ஒரு லாங் ஸ்கிர்ட், அதன் மேல் ஒரு ஷார்ட் டாப்ஸ், கலைந்திருந்த கூந்தல், அழுது சிவந்திருந்த முகம், அதில் தெரிந்த கோபம், அணு அணுவாய் அவளை ரசித்தான். 

“என்ன பேச்சு இது”, என்பது போல அவள் உதடு சுழிக்க,

அதனை ரசித்தபடி, “இது அந்த சேர்றது இல்லை”, என்றான்.

நர்மதா இன்னும் முகத்தில் உஷ்ணத்தை காட்ட, அதை பற்றி கவலைப் படாமல், “எந்த சேர்றதுன்னு டவுட் இல்லையா உனக்கு”, என்று விஷமமாக கேட்டான்.

கையில் ஏதாவது கிடைத்தால் தூக்கி வீசலாமா என்று நர்மதா  யோசிப்பது அவளின் முகத்தில் இருந்தே தெரிய சிரித்தபடி.. 

“என்னோட நினைவுகள்ள சேர்றது, அது உன்னைப் பார்த்த நாள்ல இருந்து சேர்ந்து தான் இருக்கேன்”, என்றான் இன்னும் ரசனையாக.

“எப்படி முடியுது, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு, இப்படி பேச எப்படி முடியுது”, என்றாள் இன்னும் கடுப்பாக.

“அதுவா”, என்று மெலிதாக சிரித்தவன், “உன்னைப் பார்க்கற வரை எந்த முடிவு வேணா என்னால எடுக்க முடியும். ஆனா உன்னைப் பார்த்துட்டேன், அதுக்கு அப்புறம் வேற எந்த முடிவும் செல்லாது. எல்லாம் கற்பூரமா கரைஞ்சிடும்”, என்று தீவிரமாக அவன் சொல்ல.

“i hate love dailogues, i really hate that. இதுக்கு நீங்க என்னை திட்ட கூட செய்ங்க. ஆனா இப்படி பேசாதீங்க எனக்கு பிடிக்கவேயில்லை”, என்றாள் முகத்தில் கலவரத்தை தேக்கி.

அந்த பாவனையைப் பார்த்தவன், இன்னும் வாய்விட்டு சிரிக்க துவங்க..

“ஐயோ, எல்லோரும் வெளில இருக்காங்க, சத்தம் கேட்கும் சிரிக்காதீங்க”, என்று சொல்ல..

இன்னுமே அர்ஜுனிர்க்கு சிரிப்பு, அவனின் அழகான பிசாசு அவன் அருகில் இருப்பதினால்,

அவசரமாக நெருங்கி வந்து அவனின் வாய் பொத்தினாள், “நிறுத்துங்க!”, என்று கிசுகிசுப்பாக சொல்லிக் கொண்டே, மயங்கி தான் நின்றான் அர்ஜுன்.

க்ஷண நேர மயக்கம், அவளின் அருகாமையை விடுவானா என்ன? நர்மதாவை இடையோடு அணைத்துப் பிடிக்க… அதை சற்றும் எதிர்பார்க்காத நர்மதா, கத்தப் போனவள், அவனின் வாயில் இருந்து கை எடுத்து அவளின் வாயை மூடிக் கொள்ள,

அந்த மூடிய கைகளின் மேல் மென்மையாக இதழொற்றவும், அவனின் பிடியில் இருந்து திமிரவும், அவனின் செய்கையை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

“இப்ப நீங்க விடலை, நான் கை வைச்சதை எடுத்துடுவேன்”, என்று வாய்க்குள் பேசி பயமுறுத்தினாள், அவள் சொல்ல வந்தது சத்தம் போடுவேன் என்பது போல,

ஆனால் அர்ஜுன் அவளின் உதடுகளை பார்வையால் வருடி, “கை எடுத்திட்டா இங்க குடுப்பேன், எடுத்துடு”, என்றான் சிறு புன்னகையோடு.

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”, என்று சிணுங்கியவள், என்ன சொல்வது என்று தெரியாமல், “நான் மூணு நாளா பிரஷ் பண்ணலை”, என்றாள் கடுப்பாக.

“நீ வாழ்க்கை முழுசும் பிரஷ் பண்ணலைன்னா கூட எனக்குக் கவலை இல்லை”, என்றான் வெகுவாக சிரிப்பைக் கட்டுபடுத்தி,   

“என்னை என்ன ஆடு, மாடு, கோழின்னு நினைச்சீங்களா, நான் ஒரு நாளைக்கு மூணு தடவை பிரஷ் பண்ணுவேன்”, என்று சண்டையிட,

அர்ஜூனால் என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மீண்டும் சத்தமாக சிரிக்கத் துவங்க, அவசரமாக மீண்டும் நர்மதாவும் அவனின் வாயை கைகளினால் மூட.. மீண்டும் இவனும் அவளை அணைத்துப் பிடிக்க…  

“ப்ளீஸ்”, என்று நர்மதா கெஞ்சவும் விட்டவன், “இதுக்கு மேல நான் இருந்தேன், எங்கப்பாவும் பெரியப்பாவும் அவ்வளவு தான்”, என்று சொல்லி அவன் வெளியேறப் போக..

“நான் கல்யாணத்தை நிறுத்துவேன்”, என்றாள்.

“இந்தக் கல்யாணம் நடக்கட்டும், அடுத்த கல்யாணத்தை நிறுத்திக்கோ”,

“அடுத்த கல்யாணமா”, என்று நர்மதா முறைக்க,

“எஸ், இப்ப எனக்கு இருபத்தி எட்டு, அடுத்து முப்பதாம் கல்யாணம் பண்ணிக்குவேன், நாற்பதாம் கல்யாணம் பண்ணிக்குவேன், அப்படியே அம்பது, அறுபதுன்னு கண்ட்டிநியு ஆகும். எல்லாம் உன்னோட தான்!!”, என்று சொல்ல…

“ஆங்”, என்று வாய் திறந்து பார்த்தவளைப் பார்த்து,

“என்ன உன் கூட சேராமையே உன்னை மாதிரி ஆகிட்டேனா”, என்றான்.

“இவனை ஒன்றும் செய்யமுடியவில்லையே, ம்ம்ம்”, என்று பாவமாக நர்மதாவின் தலை ஆடியது, 

“உண்மையா பொண்ணுங்களை சைட் அடிக்க மாட்டேன், பார்க்க மாட்டேன், பேச மாட்டேன், அப்படி எதுவுமே கிடையாது… ஆனா யாரையும் கல்யாணம் பண்ணனும்னு தோணினது இல்லை. யாரையும் கட்டிப் பிடிக்கணும்னு தோணினதே இல்லை… யாரோட பேச்சும் என்னை இவ்வளவு ரசிக்க வெச்சது இல்லை”.

“ஆனா, எனக்கு இப்படி எதுவும் தோணலை”, என்றாள் முகத்தை சீரியசாக வைத்து.

“அதுதான் எனக்குத் தெரியுமே”, என்றான் அசால்டாக…

கூடவே, “பாதி கல்யாணத்துக்கும் மேல இங்க இப்படி தான் நடக்கும், பிடிச்சு நடக்குற காதல் கல்யாணம் கூட பிரிஞ்சிடறாங்க, இவங்க யாரும் பிரியறது இல்லை”, என்றான் அவளையே பார்த்த படி..  

“என்ன திமிர் இவனுக்கு? என்ன சொல்லல வர்றான்? புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு, இவன் இப்படிப் பேசினா நான் என்ன பண்ண? காலம் முழுசும் இப்படிப் பேசியே என்னை கொல்வானோ?”, என்று நர்மதா பார்த்து நிற்க,

நர்மாதவின் முகத்தில் கலவையான உணர்வுகளைப் பார்த்தவன், “டேய் அர்ஜுன், எஸ்கேப் ஆகிடு”, என்று உள்ளுணர்வு சொல்ல, அவன் தலையசைத்து சென்று விட்டான்.

“இவனை என்ன செய்ய..”, என்று பாவமாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்தாள்.

 

Advertisement