Advertisement

அத்தியாயம் பதினொன்று:

 நர்மதாவிடம் பேசிய பிறகு அவளைக் காண வேண்டும் ஆர்வம் மிகவும் அதிகமாக இருந்தது. அத்தனை நாட்கள் ஒரு வைராக்கியம், ஆசை அளவில்லாமல் இருந்தும் பேசவில்லை. மிகுந்த அழுத்தம் மிகுந்தவன், எப்போதும் ஒரு சொல் பொறுக்காதவன் அர்ஜுன். கோபம் வருவதும் அதிகம். எல்லாவற்றிலும் ஒரு பெர்ஃபக்ஷன் எதிர் பார்ப்பான்.    

ஊரில் இருந்து அப்போது தான் அங்கு சென்னை வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.

“நானானால் ஏதோ தவறு செய்து விட்டது போல அவளின் ஞாபகமாகவே இந்த மூன்று மாதமாக இருக்க.. இவள் எவ்வளவு அசால்டாக பேசுகிறாள்”.

இதுதான் என்னை அவள் பால் இழுத்துச் செல்கிறதோ.

“எனக்கு இந்த மேக் அப் வேண்டாம்”, என்று ஒற்றை வரியில் அவள் சொல்லி முடித்த போது, நான் நாளைக்கு காலையில அங்க வந்துடுவேன் நாளைன்னைக்கு தானே நிச்சயம், பேசிக்கலாம் என்று சொல்லி வைத்திருந்தான்.

“ம், சரி!”, என்று அவள் வைத்து விட, மேலே பேச வாய்பில்ல்லாமல் போனது, அவனால், “நான் ஒரு வார லீவில் வந்துள்ளேன், திருமணம் முடிந்து மூன்று நாட்களில் மீண்டும் கிளம்பிவிடுவேன்”, என்று சொல்ல வாய்ப்பில்லாமல் போனது.  

அப்போதே மணி நான்கு, அப்பாவிடமும் அம்மாவிடமும் நைட் கிளம்பி அடுத்த நாள் காலை அங்கு வருவதாக சொல்லியிருந்தான். அவனின் அப்பா தான் ஆம்னி பஸ்ஸில் டிக்கெட் கூட சொல்லியிருந்தார்.

ஆனால் அதுவரை பொறுமையில்லை….

வீட்டில் இருந்து அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்து காரில் போட்டு, தெரிந்த அக்டிங் டிரைவர் ஒருவரை சொல்லி… உடனே கிளம்பிவிட்டான். இருக்கும் அசதியில் அவனால் கார் ஓட்ட முடியாது என்று அறிந்தவனாக.

வீட்டிற்கு சொல்ல வேண்டும் என்ற ஞாபகமில்லை. கார் ஏறியதும் நர்மாதவிடம் பேசிவிட்ட ஒரு நிம்மதி, எல்லாம் நல்ல படியாக நடக்கப் போகிறது என்ற சந்தோஷம், கண்மூடியதும் ஒரு உறக்கம் தழுவ ஆரம்பிக்க, “அண்ணா, பார்த்து ஓட்டுங்க, நான் கொஞ்சம் தூங்கறேன்”, என்று சொன்னவன்  நன்கு உறங்கிவிட, டிரைவர் பொறுமையாக வண்டி ஓட்ட ஆரம்பித்தார்.

இதில் சார்ஜ் இல்லாமல் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது. வீட்டில் அம்மா போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வரவும், “இந்தப் பையன் சார்ஜ் போடாம என்ன பண்றான்”, என்று அவனைத் திட்டிக் கொண்டே வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தார்.

இரவு பத்தரை மணிவரையும் ஃபோன் வராமல் போக, அவனுக்கு புக் செய்த பஸ் ஆபிஸிக்கு அழைத்தார். அவர்கள், “பஸ் ஒன்பதரைக்கே கிளம்பிடுச்சும்மா, இந்த நேரம் தாம்பரம் தாண்டியிருக்கும்”, என்று சொன்னர்.  அங்கே பஸ்ஸில் இருப்பான் என்ற நினைப்பில், “பஸ்க்கு பேசி அங்க அர்ஜுன்னு ஒருத்தர் இருப்பார் அவரை ஃபோன் பண்ண சொல்லுங்க”, என்று கௌரி வைத்து விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஷண்முக சுந்தரம், “அவன் என்ன சின்னக் குழந்தையா சாயந்தரம் இருந்து இந்த தவி தவிக்கற, நாளைக்கு காலையில வந்துடுவான். அதுக்கு அப்புறம் அம்மாவும் மகனும் உட்கார்ந்து எவ்வளவு நேரம்னாலும் பேசுங்க”, என்றார். 

நாளை தான் உறவினர்கள் எல்லோரும் வருவதாக இருந்தது, சத்யாவும் நாளை தான் வருவாள், அதனால் இருவரும் மட்டுமே வீட்டில், வேலையாட்கள் கூட எப்போதும் ஒன்பது மணிக்கு மேல் இருக்க மாட்டர்.

வீட்டின் முன்பு ஒரு செக்யுரிட்டி மட்டுமே, “அமெரிக்கால இருந்த போது கூட இப்படிப் பண்ணலை ஒரு வேலை பொண்ணைப் பார்த்ததும் அம்மாவை மறந்துட்டானா”, என்று நினைத்தவர், பத்தரை மணிக்கு மேல் ஆன போதும் நர்மதாவை அழைத்தார். வீட்டில் எல்லோரும் உறங்கியிருக்க அவள் டீவீ பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.

அவள் எடுத்தும், “நர்மதா அர்ஜுன் ஃபோன் பண்ணினானா”,

“உங்க கிட்ட சொன்னேனே சாயந்தரம், அப்போ பண்ணினார் அத்தை, அதுக்கு அப்புறம் பண்ணலையே, நாளைக்கு காலைல வந்துடுவேன்னு சொன்னார்”, என்றாள்.

“நீ இப்ப எதுவும் கூப்பிடலையா”,

“இல்லை அத்தை”, என்றாள் தயங்கி தயங்கி, “ஏன் அத்தை? என்ன ஆச்சு?”, என்று கேட்கவும்,

“அது சாயந்தரம் இருந்து அவன் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஊருக்கு கிளம்பிட்டானான்னு தெரிய தான் கேட்டேன், எப்பவும் இவ்வளவு நேரம் போன் சுவிச் ஆஃப் எல்லாம் இருக்காது”, என்றார்.

அவரின் குரலில் தொனித்த கவலை ஏனோ நர்மதாவினுள்ளும் ஒரு கலக்கத்தைக் கொடுத்து. ஆனாலும், “வந்துடுவாங்க அத்தை, எதுல வர்றாங்க”, என்றாள்.

பஸ்ஸின் பெயரை சொன்னவர், “அந்த பஸ்ல தான் மா வர்றான்”, என்று அவர் சொல்லும் போதே..  “அத்தை”, என்று ஒரு பதட்டத்தோடு பேசியவள், “டீவீ ல பிளாஷ் நியூஸ்ல ஏதோ சென்னைல இருந்து ஈரோடு வர்ற பஸ் கிளம்பி கொஞ்ச நேரத்துல ஆக்சிடன்ட்ன்னு வருது”, என்று அவள் சொல்ல சொல்ல,

“என்ன”, என்று கௌரி கேட்ட விதத்தில், “என்ன என்னாச்சு”, என்று அருகில் வந்தார் ஷண்முக சுந்தரம்,

“டீ வீ…. டீ வீ… போடுங்க”, என்று கௌரியும் பதட்டமாக சொல்லிக் கொண்டு நர்மதாவின் போனை அப்படியே கட் செய்து பஸ் ஆபிஸிற்கு அழைக்க, அது தொடர்ந்து என்கேஜ்ட்டாக இருந்தது.

நர்மதா செய்வதறியாது அப்படியே பயந்து அமர்ந்து விட்டாள். அப்பா அம்மாவை எழுப்புவதா என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை.

அதற்குள் டீ வீ போட்டு ஷண்முக சுந்தரம் பார்க்க, பஸ் ஆக்சிடன்ட் என்று ஸ்க்ரோல் நியூஸ் ஓடிக் கொண்டிருக்க பதட்டமானார். அதற்குள் பஸ் ஆபிஸிற்கு லைன் கிடைக்க. அங்கே கேட்க, “ஆம்! பஸ் ஆக்சிடன்ட், உயிர்ச்சேதம் இருக்கிறது யார் என்று இன்னும் தெரியவில்லை”, என்றார்கள்.

கை கால் எல்லாம் நடுங்க அப்படியே தரையில் அமர்ந்தார் கௌரி, போனில் திரும்ப ஷண்முக சுந்தரம் விவரம் கேட்டவர், “அவனுக்கு ஒன்னும் ஆகாது கௌரி, பயப்படாத!”, என்று மனைவியை சமாதனம் செய்தாலும் கேட்கும் நிலையில் அவர் இல்லை.

அமர்ந்தது அமர்ந்தபடி இருந்தார்,

பயந்து போன ஷண்முக சுந்தரம் மகளையும் மருமகனையும் அழைத்து விவரம் சொல்லி, பஸ் ஆக்சிடன்ட் விசாரிக்க சொன்ன்னவர், மனைவியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் செல்ல முற்பட, அவர் எழும்பும்முன்னே கௌரி மயங்கி சரிய, இருந்த பதட்ட்டத்தில் அவரை தூக்க முயன்றும் முடியாமல் வெளியில் செக்யுரிட்டியை அழைக்க கதவை திறந்து வர, வீட்டின் காம்பௌண்டின் உள் அர்ஜுனின் கார் நுழைந்தது.

அதைப் பார்த்ததும், “அர்ஜுன்”, என்று கத்த.. அவர் கத்திய கத்தலில் அர்ஜுன் என்னவோ ஏதோ வென்று இறங்கினான்.

“அம்மா மயங்கிட்டா”, என்று கத்தி திரும்ப அவர் உள் ஓட, அதையும் விட வேகமாய் அர்ஜுன் ஓடி அவர்க்கு முன் அங்கே சென்றான்.

“என்ன? என்னப்பா ஆச்சு?”, என்று கேட்க…

“உனக்கு டிக்கெட் புக் பண்ணின பஸ் ஆக்சிடன்ட், அதைக் கேட்டு அப்படியே உட்க்கார்ந்துட்டா நான் ஒன்னுமில்லைன்னு சொல்லச் சொல்ல அப்படியே மயங்கிட்டா”.

பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்தனர்… அதற்கும் சிறு அசைவுமில்லை.

“அப்பா! பிடிங்க!”, என்று வேகமாக தூக்கி வந்த காரிலேயே மருத்துவமனை சென்றனர்.

கண்விழிக்கவேயில்லை, ஷண்முக சுந்தரமும் அர்ஜுனும் மிகவும் பயந்து போனர். சத்யா அழைக்க, அவர்களிடம் விவரம் சொல்ல… சொந்த பந்தங்கள் அதிகம், எல்லாம் நெருக்கம் கூட, பலர் அந்த நேர்த்திலும் விரைந்து வர, சத்யாவும் அவள் கணவனும் கூட வந்து விட, ஹாஸ்பிடல் அந்த நேரத்தில் பரபரப்பானது.

ஆனால் அர்ஜுன் பத்திரம் என்று நர்மாதவிடம் யார் தெரிவிப்பர். நர்மதாவிற்கு இது தெரியும் என்றே அர்ஜுனிற்கு தெரியாது. தெரிந்திருந்தால் கண்டிப்பாக சொல்லியிருப்பான்.

நர்மதா அவளின் அப்பாவை எழுப்பி விவரம் சொல்லியிருந்தாள். யாரை கேட்பது என்று தெரியவில்லை, அவர்களின் வீட்டில் யாரின் போனும் எடுக்கவில்லை.   மிகுந்த பதட்டமாகி விட்டனர். அவளின் அப்பாவும் அம்மாவும் பயந்து அமர்ந்துவிட்டனர்.

“அம்மா! அவருக்கு ஒன்னும் இருக்காது… நல்லாயிருப்பார், எனக்குத் தோணுது பயம் வேண்டாம்”, என்றாள். நர்மதாவின் கலக்கம் எல்லாம் என்ன பிரச்சனை இது என்பது போல தான். என்னவோ மனது சொன்னது அர்ஜுனிற்கு ஒன்றும் இருக்காது என்று. 

அவனுக்கு முயன்றால் சுவிட்ச் ஆஃப் என்று தான் வந்தது. பகல் நேரமென்றால் சென்று பார்க்கலாம், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார். இரண்டு பேரின் ஊரும் ஈரோடு என்றாலும் அர்ஜுனின் வீடு ஊரை விட்டுத் தள்ளி, அவர்களின் மில்லை ஒட்டி, கிட்ட தட்ட பதினைந்து கிலோமீட்டர் தூரம்,

“அந்த பஸ்லயா வர்றாங்கன்னா சொன்னாங்க”,

“முழுசா தெரியலைம்மா”, என்று அவர்களை தேற்றிக் கொண்டே இருந்தாள்,

“நான் எதுக்கும் அவங்க வீட்டுக்குப் போய் பார்க்கிறேன்மா”, என்று அப்போதும் மனம் தாளாமல் அந்த இருட்டில் கிளம்பினார்.

“அப்பா, எப்படி இந்த நேரத்துல தனியா போவீங்க”.

“யாரைம்மா இந்த நேரத்துல கூப்பிட, வேண்டாம்”, என்று சொல்லி கிளம்பினார்.   அவர் வீடு செல்ல, அங்கே செக்யுரிட்டி மட்டும், “அம்மாக்கு உடம்பு சரியில்லை, அர்ஜுன் சாரும்,  பெரியய்யாவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க”, என்றான்.

“எந்த ஹாஸ்பிடல்?”, என்றால் விவரம் தெரியவில்லை. அர்ஜுன் வந்து விட்டான் என்று ஆசுவாசப்பட்டாலும் கெளரிக்கு இந்த நேரத்தில் ஹாஸ்பிடல் சென்றிருப்பதால், ஒருபயம், எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற உந்துதல். எங்கே போயிருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படியும் பெரிய ஹாஸ்பிடல் தான் போயிருப்பார் என்று தெரிந்து, வீட்டினருக்கு அழைத்து விவரம் சொல்லி ஊருக்குள் பெயர் சொல்லும் படி இருந்த ஹாஸ்பிடலை சுற்ற ஆரம்பித்தார்.  

அங்கே எல்லோரும் பதட்டத்தில் இருந்தனர், கௌரி கண்விழிக்கவேயில்லை, மூன்று நான்கு மணி போல தான் கௌரி கண்விழித்தார், அதுவரை அர்ஜுனோ, ஷண்முகசுந்தரமோ, சத்யாவோ அந்த இடம் விட்டு அகலவில்லை.

கௌரி கண்விழித்ததும் சத்யா தான் பார்வையில் பட்டால், “அம்மா”, என்று சத்யா அழைக்க, “அர்ஜுன், அர்ஜுன்”, என்று மீண்டும் பிதற்ற ஆரம்பித்தார், “அம்மா”, என்று அர்ஜுன் என்று ஓடி முன் வந்து நின்றான்.  

“அர்ஜுன்”, என்று எழுந்தவர் அவனை அணைத்துக்கொள்ள,

“அம்மா, எனக்கு ஒன்னுமில்லை, நான் கார்ல கிளம்பினேன், ஆனா சொல்ல மறந்துட்டேன், நான் பஸ்ல வரலை, நர்மதா என்கிட்டே சாயந்தரம் பேசினேன், அவளைப் பார்க்கணும் போல இருந்தது அதான் உடனே கிளம்பினேன், பத்திரமா இருக்கேன்”, என்று சொல்லியும் அவனை விடுவித்து, அவனை பார்வையால் ஆராய்ந்தார் ஏதாவது காயமா என்பது போல…

அவன் சொன்னதை அத்தனை பேரும் கேட்டு தான் இருந்தனர்.

“ஒன்னும் இல்லைம்மா”, என்று அவரை விட்டு விலகியவன், “முன்னாடி பாரு, பின்னாடி பாரு, சைட்ல பாரு, இருங்க குதிக்கறேன்”, என்று சொல்லி குதித்து வேறு காட்டியவன், “பல்ட்டி கூட அடிப்பேன், ஆனா இங்க இடம் பத்தாது”, என்றவன் சொல்லவும், அதுவரை இருந்த பதட்டம் மறைந்து எல்லோர் முகத்திலும் ஒரு புன்னகை கூட,

அதற்குள் டாக்டர் வந்து பரிசோதித்தவர், “எனக்கு தெரிஞ்சு ஒன்னுமில்லை ஜஸ்ட் ஷாக் மயங்கிட்டாங்க, இப்ப எடுத்த ப்ளட் டெஸ்ட், பல்ஸ், ஹார்ட் பீட், ஈ சீ ஜி எல்லாம் நார்மல், எதுக்கும் காலயில ஒரு தரம் பார்த்துட்டு அனுப்பிடறேன், இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் இல்லையா”, என்றார்.

அவர் அர்ஜுன் வீட்டினரின் குடும்ப நண்பர், ஒரு சிறிய ஹாஸ்பிடல் தான், ஆனால் அவர்களை பல வருடமாக பார்ப்பதால் அங்கேயே அழைத்து வந்திருந்தனர். அதனால் தான் நர்மதாவின் தந்தைக்கு தெரியவில்லை.

அப்போதுதான் ஞாபகம் வந்தவராக கௌரி, “அர்ஜுன், நர்மதாகிட்ட நீ பத்திரமா வந்ததை சொல்லிட்டியா”, என்றார்.

“அவளுக்குத் தெரியுமா?”, என்றான் சற்று கலவரத்தோடு, இத்தனை நேரமாக தவித்திருப்பாளே என்று.. 

“அவ கிட்ட தான் பேசிட்டு, நீ இந்த பஸ்ல வர்ற சொல்லிட்டு இருந்தேன், அப்போ அவ தான் சொன்னா ஆக்சிடன்ட்ன்னு  டீ வீ ல ஸ்க்ரோல் ஓடுதுன்னு, அப்படியே கட் பண்ணிட்டேன்”, என்றார்.

“ஏம்பா என்கிட்டே சொல்லவேயில்லை”, என்று ஷண்முக சுந்தரத்தை சற்று கோபமாக கேட்க,

எல்லோர் முன்னிலையிலும் அப்பாவை அர்ஜுன் அதட்டுவது சத்யாவிற்கு பிடிக்காமல், “அப்பா கிட்ட எதுக்கு சத்தம் போடற, அந்தப் பொண்ணு உனக்கு என்ன ஆனா என்னன்னு தூங்கியிருக்கும், இல்லைன்னா இந்த நேரம் இங்க வந்திருக்க மாட்டங்க”, என்றாள் சத்யா.

அர்ஜுன், “என்ன பேச்சு இது?”, என்பது போல சத்யாவை ஒரு பார்வை பார்த்தான்.

அதற்குள் அங்கிருந்த அவனின் சித்தப்பா,  “என்ன அண்ணா இன்னும் ரெண்டு நாள் இருக்கும் போது, மாத்தி மாத்தி அபசகுனமா நடக்குது, ஜாதகம் நல்லா பார்த்தீங்களா”, என்று பேச, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனம் கொள்ளாமல் தன்னுடைய மொபைலை அங்கே ஹாஸ்பிடல் ரூமில் சார்ஜ் போட்டு வைத்திருந்ததய் எடுத்து ஆன் செய்தான்.

அவ்வளவு தான் வரிசையாக மிஸ் டு கால் அலெர்ட்கள், அம்மா மாலையில் இருந்து கிட்ட தட்ட இருபத்தி ஐந்து முறைக்கு மேல் அழைத்திருக்க, அதன் பிறகு நர்மதா கிட்ட தட்ட நூறு முறைக்கு மேல், “ஐயோ, என்ன இது”, என்று அவசரமாக அவளுக்கு அழைக்க, ஒரே ரிங்கில் எடுத்தாள், “அத்தை, எப்படி இருக்காங்க”, என்ற கேள்வியோடு,

அதிலேயே அவனுக்கு ஒன்றுமில்லை என்று அவளுக்கு தெரியும் என்று புரிய, “நல்லாயிருக்காங்க, பயத்துல மயக்கமாயிட்டாங்க, இப்ப தான் கண்முழிச்சாங்க”, என்றான்,

“நீங்க எங்க இருக்கீங்க?”, என்றாள் திரும்பவும் அவசரமாக, இருக்கும் ஹாஸ்பிடல் பெயரை சொல்ல, “அது எங்க இருக்கு?”, என்றாள் உடனேயே,

“ஏன்? எதுக்கு இவ்வளவு டென்ஷன்? நல்லா இருக்காங்க அம்மா! நானும் நல்லா இருக்கேன்!”, என்றவனிடம்,

“அப்பா. நீங்க எங்க இருக்கீங்கன்னு ஒரு மணில இருந்து தேடிட்டு இருக்கார்”, என்றாள்.

“என்னது?”, என்று அதிர்ந்து நேரம் பாத்தவன், “நீ வை, நான் அவர்கிட்ட பேசறேன்”, என்றான்.

திரும்ப அவருக்கு அழைத்தான், “அம்மா, நல்லா இருக்காங்க! ரொம்ப நேரமா அலைச்சல் போல, நீங்க வீட்டுக்குப் போங்க, காலையில வாங்க”, என்றான்.

“இல்லை தம்பி, நான் வர்றேன்”, என்று பிடிவாதமாக அந்த மனிதர் வந்தார், வாயிலில் நின்று அந்த அவரை அழைத்து உள் சென்றான்.

நிறைய பேர் இருக்க, அவருக்கு இந்த இரண்டரை மணி நேரமாக தெருத் தெருவாக அலைந்தது சொல்லொணா ஒரு துயரத்தைக் கொடுத்தது. அலைந்தது கூட பெரிதாக தெரியவில்லை, விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து எவ்வளவு மன உளைச்சல். “இத்தனை பேர் இருக்கிறார்கள் ஒருவர் கூட நம்மிடம் சொல்லவில்லையே. நான் இந்த நேரத்தில் தெரு தெருவாக அலைந்து கொண்டிருந்திருக்கிறேன் என்ன மனிதர்கள் சே”, என்றாகிவிட்டது.

அவரை ரூமின் உள் அழைத்துச் சென்றான், யாரும் அவரை வாவென்று அழைக்க வில்லை, யாரைப் பற்றியும் கவலையில்லை, ஆனால் ஷண்முக சுந்தரம் ஒரு தலையசைப்புக் கூட இல்லை.

சில உபகரணங்களின் பிடியில் இருந்த கௌரி தான், அவரை வாங்க என்பது போல தலையசைத்தவர்,

“நர்மதா கிட்ட அர்ஜுன் பத்திரமா இருக்கான்னு சொல்லிட்டீங்களாண்ணா”, என்றார்.

அவரால் பேசக் கூட முடியவில்லை, “ம்”, என்பது போல தலையாட்ட, அதற்குள் நர்மதாவிற்கு அழைத்து அவளின் அப்பா வந்துவிட்டார் என்று சொல்லிவிடுவோம் என்று அவளுக்கு அழைத்தான். டவர் இல்லாததால் ரூம் விட்டு வெளியே வந்தான். 

அதற்குள் அங்கே இருந்த இருந்த ஒரு உறவினர், “பொண்ணோட ஜாதகம் சரியா குடுத்தீங்களா, இல்லை பெரிய இடத்துப் பையன்னு அதுக்கு தகுந்த மாதிரி ஜாதகத்தை மாத்திட்டீங்களா, ஏன்னா இப்படிப் பல இடத்துல நடக்குது”, என்றார்.

நர்மதாவின் அப்பா அப்படியே நின்று விட்டார் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. பதறி ஷண்முக சுந்தரத்தைப் பார்க்க, அவர் அதை பார்த்துக் கொண்டு தானிருந்தார். அவருக்குள்ளும் அந்தக் கேள்வி தானோ என்பது போல நர்மதாவின் அப்பா பார்க்க, அதற்குள் கௌரி, “என்ன பேச்சு இது இப்படியெல்லாம் பேசாதீங்க தம்பி”, என்றார் அந்த கேள்வி கேட்ட மனிதரைப் பார்த்து,

“இந்த மாதிரி எல்லாம் நடக்கறது தான் அண்ணி, நம்ம தான் உஷாரா இருக்கணும், இல்லைன்னா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் இருக்கும் போது இப்படி ஒரு சங்கடம் நம்ம குடும்பத்துக்கு வருமா, எதுக்கும் நாளைக்கு ஒரு தரம் ஜாதகத்தை பார்த்துடலாம், அப்புறம் முடிவு பண்ணிக்கலாம், பையனுக்கு என்னவோ ஏதோன்னு பதறி இருக்கீங்க, நீ இவ்வளவு நேரமா மயக்கமா இருந்திருக்கீங்க. வர்ற முன்னாடியே இப்படின்னா அந்தப் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் வேற ஏதாவது பெருசா உயிர் சேதம் ஆகிடுச்சுன்னா”, என்று சொல்ல,

“ஐயோ, தம்பி. என்ன பேச்சு இது! நாளன்னைக்கு நிச்சயதார்த்தம், ரெண்டு நாள்ல கல்யாணம், ஊர் முழுசும் அழைச்சு விட்டிருக்கோம், இப்படிப் பேசாதீங்க”, என்றார் பதட்டமாக, 

சத்யாவும், “சித்தப்பா சொல்றது சரிதானேம்மா, எதுக்கும் இன்னொரு தடவை பார்த்துடலாம்”,

“ஐயோ, என் பொண்ணு அத்தனை தடவை சொன்னாலே இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நான் இப்படி பண்ணிட்டேனே, இப்படி பேசறாங்களே”, என்று மனதில் ஒரு ஓலம் எழ… அவ்வளவு தான் யாரிடமும் எதுவும் பேசவில்லை அவர் பாட்டிற்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார்.

உள் வந்த அர்ஜுன், அவர் செல்ல முயல்வதை பார்த்து, “கிளம்பிட்டீங்களா”, என்று சம்ப்ரதாயமாக கேட்க..

“என் பொண்ணு உங்களை பார்த்திருக்கவே வேண்டாம்”, என்றார்.

“என்ன”, என்று புரியாமல் பார்க்க, “இல்லையில்லை அப்படி சொல்லக் கூடாது, அவ உங்களைப் பார்க்கலை, நீங்க அவளைப் பார்த்திருக்க கூடாது, பெரிய மனுஷங்கன்னு நம்பி விட்டேனே”, என்று புலம்பியபடி அவர் பாட்டிற்கு செல்ல…

“யாரு, அது நம்மளைப் பார்த்து பெரிய மனுஷங்கலான்னு கேட்கறது, எங்க வந்து என்ன பேசறாங்க”, என்று ஒருவர் சத்தமிட,

நர்மதாவின் அப்பா பயந்து விட்டார், “இல்லைங்க, நான் அப்படிச் சொல்லலை”, என்று பதற,

“நீ அப்படி தான் சொன்ன”, என்று அர்ஜுனின் பெரியப்பா ஒருமையில் பேசினார்.

“இல்லையில்லை”, என்று அவர் கை கூப்பி மன்னிப்பு கேட்க விழைய,

“என்ன பண்றீங்க? கையை இறக்குங்க!”, என்று அவரின் கை பிடித்து இறக்கி விட்ட அர்ஜுன், “என்ன நடக்குது இங்க?”, என்று கத்தியவன், “என்னமா நடக்குது?”, என்றான் கெளரியைப் பார்த்து..

கௌரியால் பேசவே முடியவில்லை, மளமளவென்று கண்களில் நீர் இறங்க,

“சத்யா”, என்று அக்காவைப் பார்த்து கத்தியவன், “என்ன நடக்குது?”, என்று அவளிடம் கேட்க..

அவள் ஒரு வாறு விஷயத்தை சொல்ல.. “அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க”, என்று நர்மதாவின் அப்பாவிடம் அர்ஜுன் பேச முனைய, 

“இங்க பாரு என் பையனை, இப்படி அந்த பொண்ணு பின்னாடி சுத்துறான், என்ன ஜாதகம் பார்த்து என்ன பண்ண? இந்தக் கொடுமைக்கு தான் ஜாதகம் வாங்கி வெச்சதோட சரி நான் பார்க்கவேயில்லை, இந்த கல்யாணம் நடத்தறேன் எப்படியோ போகட்டும்னு. அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு படுத்துட்டு இருக்கா, வரப் போற மாமனாரைப் பார்க்கறான்”, என்று எல்லோர் முன்னும் பேசிவிட,

அர்ஜுனிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை… “சே, சே, என்னோட வாழ்க்கைக்கு இது போதும் எனக்கு, என்ன சுத்தறேன், யார் பின்னாடி சுத்தறேன்.. இப்படி நீங்க எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டிய அவசியமேயில்லை”, என்று கோபமாக அவரிடம் கத்தினான்.

அர்ஜுனின் கோபம் கௌரி அறிந்ததே, கோபம் வந்தால் என்ன பேசுவான், என்ன செய்வான் என்றே தெரியாது. அவர் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தில் அத்தனை பேரும் அறிவர். “அர்ஜுன் கோபப்படாத, வார்த்தையை விடாத”, என்று கௌரி சொல்லியதை அவன் காதில் கொள்ளவேயில்லை.

அடுத்த நிமிடம் திரும்பி நர்மதாவின் அப்பாவிடம், “மன்னிச்சிடுங்க, இந்தக் கல்யாணம் நடக்காது, எங்க அப்பா ஏற்பாடு பண்ணின கல்யாணம் நடக்காது”,என்றவன்,

“அப்படி யாரும் எனக்கு பிச்சை போடற மாதிரி கல்யாணம் பண்ண தேவையில்லை. இவருக்கு பையனா பொறந்ததுக்கு நான் வாழ்கை முழுசும் தனியாவே இருந்துட்டு போயிடறேன், பையன் வாழ்கைன்னு எங்க அப்பாவுக்கும் தோணலை, இங்க இருக்குற சித்தப்பா பெரியப்பான்னு யாருக்கு தோணலை”, என்றான் ஸ்திரமாக.

“என்ன அர்ஜுன் இது? சும்மா ஒன்னு ரெண்டு எப்பவும் யாரும் பேசறது தான். அப்படியெல்லாம் யாரும் பண்ண மாட்டாங்க. உன் கல்யாணம் நடக்கும் அமைதியா இரு”, என்று சமாதானம் சொல்ல,

அர்ஜுனிற்கு கட்டுக்கடங்காத கோபம் , “தன் விருப்பத்தைச் சொன்ன நாளில் இருந்து அவனின் அப்பா இப்படி தான் பேசுகிறார். ஒரு மாதிரி அவனின் தன்மானத்தை அது சீண்டி விட்டு இருந்தது. இவர் எனக்கு எதுவும் செய்யத் தேவையில்லை”, என்ற ஆணவத்தைக் கொடுத்தது.  

அவனின் அப்பாவிற்கு பத்து மடங்கு மேல் அவன் என்பது தான் உண்மை.

“இல்லை பெரியப்பா, இந்தக் கல்யாணம் நடக்காது. எவ்வளவு அசால்டா எல்லோரும் இப்படி கல்யாணத்தை நிறுத்த பேசறீங்க, ஒரு பாவ புண்ணியமும் இந்த உலகத்துல இல்லையா, இவரும் இவர் ஆளுங்களும் ஊருக்குள்ள பஞ்சாயத்து பேசி பேசி எல்லாம் அனாவசியமா போயிடுச்சு”,

“அர்ஜுன் யாரும் கல்யாணத்தை நிறுத்த பேசலை, நிறுத்த மாட்டங்க”, என்று யார் சமாதானமும் எடுபடவில்லை.

“அப்படி யாரும் எனக்கு போனாப் போகுதுன்னு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டிய அவசியமில்லை. அந்தப் பொண்ணு நிம்மதியா இருந்தது. அவங்கப்பா சொன்ன மாதிரி எந்த நேரத்துல நான் அவளைப் பார்த்தனோ”,

“நம்ம குடும்பத்துக்கு எதுவும் நல்லா இல்லாம போகலை, எல்லாம் அவ குடும்பத்துக்கு தான் அப்படி ஆகிடுச்சு. அவங்க சந்தோசம் நிம்மதி எல்லாம் போச்சு, நாளைக்கு இங்க யார் வீட்ல எது நடந்தாலும் அவளை தான் சொல்வீங்க. அந்தப் பாவம் எனக்கெதுக்கு, யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ நிம்மதியா இருக்கட்டும். நான் இப்படியே இருந்துடறேன்”,

“அவளைப் பார்க்கனும்னு தான் பெரியப்பா நான் சாயந்தரம் கார்ல வந்தேன் இல்லை இந்த  ஆக்சிடன்ட் ஆன பஸ்ல தான் வந்திருப்பேன், இந்த நேரத்துல உயிரோடவும் இருந்திருக்க மாட்டேன், அவளால தான் நான் உயிரோட இருக்கேன்னு யாருக்கும் தோணாமப் போசில்லை”,

“வருஷா வருஷம் ராமேஸ்வரத்துக்கு நாலு பஸ் அஞ்சி பஸ்ல குடும்பமா போய் முன்னோர்கள் பாவம், பூர்வ ஜென்ம பாவத்தைக் கழிக்கறேன்னு பூஜை பண்ணினா பத்தாது… இப்படி இருக்குற மனுஷங்க உலகத்துல யாரும் நல்லாவே இருக்க மாட்டாங்க, ஏன் நான் ஏன் அதை சொல்லணும், நல்லாயிருங்க, எல்லோரும் நல்லா இருங்க, ஆனா அர்ஜுன்னு ஒருத்தன் இருந்தான்றதை எல்லோரும் மறந்துடுங்க”, என்று பொரிந்து தள்ளினான்.   

“அர்ஜுன் அமைதியா இருடா, யாரும் கல்யாணத்தை நிறுத்த மாட்டங்க, தப்பா பேசலை விடு”, என்று சித்தி சமாதனம் செய்ய,

“விடுங்க சித்தி, என் கல்யாணம் நடக்கணுமா நடக்கக் கூடாதான்னு நான் தான் முடிவு பண்ணனும், யாருமில்லை”,  

 “எல்லாம் இந்த அம்மா செஞ்ச வேலை”, என்று கெளரியைத் திரும்பிப் பார்க்க, யாரும் அவரிடம் கவனம் வைக்கவில்லை, நடந்த பிரச்சனையில் அவர் மீண்டும் மயங்கி இருந்தார். ஷண்முக சுந்தரமும், சத்யாவும் அருகில் விரைந்து வர, “தூர நில்லுங்க, எங்கம்மா பக்கத்துல யாராவது வந்தீங்க தொலைச்சிடுவேன்..”, என்றான் அப்பாவைப் பார்த்து கை நீட்டி. 

“டேய், அர்ஜுன்”, என்று அவர் பதற,

“எங்கம்மாவை பார்கலைன்னு தானே சொன்னீங்க, நான் பார்த்துக்கறேன், எனக்கு இனி யாரும் மாமனார்ன்னு கிடையாது, இனி நீங்க இந்த இடத்துலயே இருக்க கூடாது. உங்க மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு இந்த இடத்தை காலி பண்ணுங்க”, என்றவன், சத்யாவின் கணவரைப் பார்த்து, “உங்க மனைவியைக் கூட்டிட்டு நீங்களும் கிளம்புங்க, என் வீட்ல வந்து அவ பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியமே இல்லை.. பெத்தவங்க தான் எனக்கு அப்படின்னா, கூடப் பொறந்ததும் அதுக்கும் மேல இருக்கு”, என்றான்.    

அர்ஜுனை அடக்க முடிந்தவர் கௌரி மட்டுமே, அவர் மயங்கி இருக்க,  அவனை நிறுத்தும் வழி யாருக்கும் தெரியவில்லை. ஆளாளுக்கு இப்போது ஷண்முக சுந்தரத்திடம் பேசினர், “அவன் கோபம் தெரியாதா?  ஏண்ணா இப்படி பேசினீங்க”,  என்று ஆளாளுக்கு பதறினர்.

மீண்டும் அந்த இடம் பதட்டமானது, டாக்டரை வரவழைத்து அவர் பார்க்கத் துவங்க,

நர்மாதவின் அப்பா எங்கே என்று அர்ஜுன் பார்க்க, அவர் இருந்த சுவடே இல்லை.      

 

Advertisement