Advertisement

அத்தியாயம் பத்து:

அர்ஜுனின் மனதினில் ஒரு கோபத் தீ , அவளின் கூப்பிய கைகளைப் பார்த்தவன், “கீழ இறக்கு முதல்ல கையை”, என்றான்.

அந்தக் குரல் எந்த எதிர்வாதமும் செய்யாமல் நர்மதாவை கையை இறக்க வைத்தது.

“என்ன தான் நினைத்துக் கொண்டிருகிறாள் இவள் என்னை பற்றி”, என்று மனதில் ஒரு ஆற்றாமை தோன்றி அது கோபமாக உருவெடுத்தது.

“உனக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாது. அதுல ஒன்னு அர்ஜுன் எப்பவுமே பேச்சு மாற மாட்டான். உங்கப்பா கிட்ட எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன், கூடவே எங்க வீட்ல பெரியவங்க பேசுவாங்கன்னும் சொல்லிட்டேன்”.

“அதனால இனிமே அதுல இருந்து என்னால மாற முடியாது, நீ உங்க வீட்ல சொல்லி இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடு புரியுதா…”,

“நான் உன்கிட்ட உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்ற ஐடியாலயே இல்லை, எங்கப்பா பண்ணின வேலை சொல்ல வேண்டி வந்துடுச்சு”,

“நான் என்னவோ ஊர் உலகத்துலேயே ரொம்ப மோசமான பையன் மாதிரி செத்தாக் கூட கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்ற, இப்படிக் கையெடுத்து கும்பிட்டு என்னை விட்டுடுன்னு சொல்ற, நான் என்ன உன்னை ரேப் பண்ணவா வர்றேன்”, என்று ஆத்திரத்தில் சொல்லவும்,

“ஆங்”, என்று வாய் பிளந்து பார்த்தாள்.

நொடி நேரம் தான், “என்ன பேசறீங்க நீங்க”, என்று அவளும் கோபத்தோடு கேட்க….

“இத விட மோசமா பேசுவேன்.. சின்ன பொண்ணாச்சேன்னு பார்கிறேன்”,    

“நீ எனக்கு தேவையேயில்லை போடி, இந்த வயசு வரைக்கும் எனக்கு ஒரு பொண்ணையும் பிடிச்சது இல்லை, ஆனா உன்னைப் போய் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன் பாரு, எனக்கு அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. இனி உன் முன்னால வந்தேன், என்னை இதைவிட கேவலமா பேசு”, என்று சொல்லிச் சென்றவன் தான்,

“பண்றது எல்லாம் பண்ணிட்டு கோவம் மட்டும் பெரிய இவன் மாதிரி வருது… போடா”, என்று நர்மதாவும் அவனை திட்டி கொண்டாள் மனதிற்குள், “எவ்வளவு அசால்டாக ரேப் பண்ணவா போறேன்னு கேட்கிறான், இதை விட மோசமா பேசுவானா எவ்வளவு தைரியம்…திமிர் பிடிச்சவன், அடங்காப் பிடாரி.. நேர்ல இருந்தான்…”,  என்று மனசாட்சித் திட்டி முடிக்க…

“நேர்ல வந்தா என்ன பண்ணுவ? ஒன்னும் பண்ண முடியாது! அடங்குடி, ஒழுங்கா அவன் கிட்ட வாய் குடுக்காம இருந்தா இந்தப் பேச்செல்லாம் தேவையா.. இப்படி வார்த்தையெல்லாம் கேட்கணுமா”, என்று மனது ஒரு பக்கம் அவளையேத் திட்டியது.   “You should know your limits, you should not provoke others.  மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, ரேப் பண்ணுகிறேனா  என்று கேட்கிறான், எப்படி அவனால் உன்னிடம் இப்படி பேச முடிந்தது”.     

 அன்று பார்த்தவன் தான், அதன் பிறகு அர்ஜுன் நர்மதாவின் கண்களில் படவேயில்லை.

அவன் மட்டும் தான் படவில்லை. ஆனால் அவனைப் பற்றிய பேச்சுக்கள் தான் எப்பொழுதும். பின்னே இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் நிச்சயம், அதற்கு அடுத்து ஒரு நாள் விட்டு திருமணம், இன்று தான் அவளின் மூன்று மாத ட்ரைனிங் முடிந்தது, இதோ ட்ரெயினில் அமர்ந்திருந்தாள்… அழைக்கக் கூட யாரும் வரவில்லை, “ஸ்டேஷன் வந்திடறேன் மா! இங்க வேலை நிறைய இருக்கு!”, என்று விட்டார் அப்பா.

யாரும் எடுத்துக் கட்டி செய்ய ஆட்கள் இல்லை. எல்லாம் அவளின் அப்பாவே தான் பார்த்தார்.. உதவிக்கு மாமா மட்டுமே, தம்பி மிகவும் சிறியவன் ஆறாவது தான் படிக்கறான். இவளுக்கும் அவனிற்கும் பத்து வருட வித்யாசம்.       

இவளின் சம்மதத்தை கேட்டிருந்தால், வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பிருந்திருக்கும், இவளை தான் யாரும் கேட்கவேயில்லையே.

அர்ஜுன் சொன்னது போல, அவன் பேசிச் சென்ற இரண்டு நாட்களில் அவர்களின் வீட்டில் இருந்து பெண் கேட்டு ஜாதகம் கேட்டு ஆள் வர, அவளின் அம்மாவும் அப்பாவும் சம்மதம் சொல்லி ஜாதகமும் கொடுத்து விட்டு தான் அவளிடம் சொன்னர்.

அந்த ஞாயிறே அவளை ஊருக்கு வரவழைத்து அவளை பெண் காட்டினர்.

மாப்பிள்ளை வர வில்லை… ஊரில் இல்லை என்று சொன்னர். அம்மாவின் முகத்திலும் அப்பாவின் முகத்திலும் அவ்வளவு சந்தோஷத்தைப் பார்த்த பிறகு அவளுக்கு மறுக்க மனமேயில்லை.

அர்ஜுன் மட்டும் தான் இல்லை, ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இவளுக்கு “அர்ஜுன் எங்கே காணோம்… அவ்வளவு கோபமாக சென்றானே! பார்த்து விட்டுப் போய் வேண்டாம் என்று சொல்லிவிடுவரோ…”, என்றே கவலையாகி விட்டது. அது எவ்வளவு கீழிறக்கம், ஒரு ஊர் ஜனம் பெண் பார்க்க வருமா என்று மலைப்பாக இருந்தது.

கௌரி வந்து தலையில் பூ வைத்து சென்றதுடன் சரி.. அவருக்கு பேச நேரமேயில்லை. அவர்களின் ஆட்களை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. செல்லும் போது, “வர்றேன் நர்மதா”, என்று முகம் மலர சொல்லிச் சென்றார்.   நடுவில் யார் வந்துப் பார்த்தனர், என்ன கேள்வி கேட்டனர் எதுவும் தெரியவில்லை…

அர்ஜுனின் அக்கா சத்யா வந்தது அவளுக்குத் தெரியவேயில்லை. அம்மா கௌரியுடன் வந்தவள் அப்படியே திரும்ப சென்று விட்டாள், பேசியிருந்தால் தெரிந்திருக்கும்.

இந்த அர்ஜுன் ஏன் வரவில்லை என்று தான் தோன்றிற்று. ஆனால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. பெண் பார்த்துச் சென்று விட்டனர்… அடுத்த நாள் இவள் சென்னை வந்ததும், அர்ஜுன் கேபின் சென்று பார்க்க அப்போதுதான் ஊரில் இல்லை என்ற அர்த்தம் புரிந்தது.

அவன் ஆன்சைட் எங்கோ சென்றிருந்தான். எங்கென்று கூடத் தெரியவில்லை. எங்கே என்றதற்கு, “ஹி இஸ் ஆன் ஆன்சைட்”, என்ற பதில் மட்டுமே.. எங்கே எப்போது வருவான் என்று யாரிடம் கேட்க என்றும் தெரியவில்லை.

வாட்ஸ் அப் பில் ஒரு மெசேஜ் செய்தால் அர்ஜுன் அழைப்பான் என்று தோன்றியது தான். ஆனால் அவளால் செய்ய முடியவில்லை. “அப்படிப் பேசின, ஏன் கல்யாணத்தை நிறுத்தலை”, என்று ஒரு கேள்வி கேட்டால் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வாள். 

இதுவரையிலும் தெரியவில்லை… இதோ ஊருக்கு சென்று கொண்டிருக்கிறாள். இந்த மூன்று மாதம் எப்படி சென்றது என்று கூட தெரியவில்லை. மனதில் எப்போதும் ஒரு இரைச்சல்..

அப்பாவும் அம்மாவும் எது கேட்டாலும் சரி என்றாள். நடுவில் சில முறை கௌரி அழைத்துப் பேசினார் தான், நர்மதாவிற்கு அவர்களின் சார்பாக ஏதாவது வாங்க வேண்டுமென்றால் அவளிடம் கேட்டு தான் செய்வார்.

என்ன கலர் புடவை எடுக்கட்டும் என்றார், நகை வாங்கும் போதும் கேட்டார், எது கேட்டாலும், “உங்க இஷ்டம் அத்தை”, என்று விடுவாள், ஆம், அத்தை என்று தான் அழைத்தாள், யாரும் சொல்லவில்லை, அவளே மாற்றிக் கொண்டாள்.

கௌரியும் அர்ஜுன் பற்றி ஏதாவது சொல்வாரா என்று பார்த்தால், அவர் எதுவும் பேசவேயில்லை. அவளின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அவர்களின் வசதி வாய்ப்புகள் பெருமை பேசவே நேரம் சரியாக இருந்தது. உண்மையில் அர்ஜுன் பற்றி அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. 

ஒரு வேளை சண்டையிட்டுக் கொண்டது தெரிந்திருக்குமோ? அதனால் தான் கௌரி ஒன்றும் பேசவில்லையோ என்று தோன்றும். கேட்பதற்கு தைரியமில்லை… அதுவும் அவர்கள் பெண் பார்க்க வந்து இறங்கிய தோரணை, ஆட்கள், தாங்கள் அவர்களுக்கு பல படிகள் கீழே என்று தெரிந்த பிறகு ஒரு சகஜ மனப்பான்மை வரவில்லை.

யார் என்ன கேட்டாலும் தலையை ஆட்டப் பழகியிருந்ததாள், மனதில் அர்ஜுன் மேல் மட்டும் ஒரு கோபம், சரி என்று சொல்லும் முன்பும் எல்லாம் அவனிஷ்டம் தான். சொன்ன பிறகும் அவனிஷ்டம் தான். பிடித்திருக்கிறது வெங்காயமிருக்கிறது என்று டைலாக் அடித்தான். ஆள் கண்ணில் படவேயில்லை என்று இன்னும் கோபமாக வந்தது. இவள் தான் சண்டையிட்டு போக சொன்னால் என்பதே மறந்துவிட்டது.   

இரவு முழுவதும் இதே யோசனைகள், காலையில் அப்பா ஸ்டேஷன் வந்திருந்தார். “என்ன கண்ணு தூங்கலையா? முகமெல்லாம் வாடிக் கிடக்கு என்றார். அப்பா எப்பொழுதும் இப்படியெல்லாம் பேச மாட்டார், என்னவாயிற்று இவருக்கு, நன்றாகத் தானே இருந்தார் என்று தோன்றியது.

அவளுக்கு என்ன தெரியும், எத்தனை நாட்கள் கூட இருந்தாலும் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது அப்பாவிற்கு தோன்றும் கரிசனம் அதிகமென்று.

“இல்லைப்பா, நல்லா தூங்கினேன்”, என்று மனதார பொய்யுரைத்தாள்… வீட்டில் அம்மாவும் விழுந்து விழுந்து கவனிக்க… ஒரு இனம் புரியாத கலக்கம் மனதினில்.

இதுவரை திருமணதிற்கு அவளுக்கு என்ன வாங்கியிருக்கிறார்கள் என்று கூட தெரியாது, அம்மாவோ அப்பாவோ அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. அதிலிருந்தே ஒன்றும் வாங்கவில்லை என்று தெரியும்.

இன்னும் இரண்டு நாட்களில் நிச்சயம்… எதற்கு இந்த கல்யாணம், வீட்டின் நிலை அவள் அறியாதது அல்ல. அவளை வேலையில் சேர்க்கச் செல்லக் கூட கடன் தான் வாங்கி வந்திருந்தனர்.

இந்த மூன்று மாத அவளின் ட்ரைனிங் சேலரி, அவளின் ஹாஸ்டல் செலவுகள் போக… ஒரு இருபதாயிரம் இருந்தது.

பெண் பார்த்த போதே வீட்டில் செலவுகளைப் பற்றி பேச முற்பட, அப்பா ஓரே வார்த்தையாக, “நான் பார்த்துக்கறேன் நீ அதைப் பற்றி கவலைப் படாதே”, என்று விட்டார்.

அம்மாவிடம் பேசினால், “இதெல்லாம் பேசாத நர்மதா, அப்பா வருத்தப் படறாங்க..”, என்று சொல்லி அவரும் வாயை அடைத்து விட்டார்.

“என்னவோ செய்யட்டும்”, என்று விட்டு விட்டாள்.

இப்போது வீட்டிற்கு போகவும் கவலையாக இருந்தது. அவளின் தம்பி நவீன் வேறு வந்ததில் இருந்து வளவளத்துக் கொண்டிருந்தான். ஆனால் இவளின் மனதில் எதுவும் பதியவில்லை. “சீக்கிரம் குளிச்சு ரெடியாகு கண்ணு, நகைக் கடைக்கு போகணும்”, என்றார் சிறிது நேரத்திலேயே அம்மா..

எதுவும் பேசவில்லை.. “ம், சரிம்மா!”, என்றாள்.. இனி மறுத்துப் பேசி என்ன ஆகப் போகிறது, இப்போது அர்ஜுனுடனான அவளுடைய திருமணம் பற்றிய கவலைகள் பின்னுக்கு சென்றது, இப்போது இவர்கள் என்ன செய்கிறார்கள் பணத்திற்கு என்ற கவலை தான் அதிகம் இருந்தது.

காலையில் நகைக்கடைக்கு சென்றனர்.. அம்மாவிடம் இருந்த பழைய நகைகள் ஒரு இருபது பவுன் எல்லாம் புதிதாக மாற்றப்பட்டது. ஒரு தோடு மட்டுமே அம்மாவிடம். “அம்மா நீ என்ன பண்ணுவ?”, என்ற கேள்வியை அம்மா காதில் போடவேயில்லை.

“ஷ்! நர்மதா பேசக் கூடாது… உனக்கு பிடிச்ச டிசைன் எடு”, என்றார். அத்தனை நகையும் கொடுக்கும் போது அம்மாவின் முகத்தில் அத்தனை சந்தோசம்… இருந்த உளைச்சலை எல்லாம் தள்ளி வைத்து அவருக்காக பார்த்து பார்த்து சந்தோஷமாக தான் எடுத்தாள், “நான் நிறைய சம்பாதிச்சு அம்மாக்கு இதெல்லாம் திருப்பி குடுத்துடணும் கடவுளே”, என்ற வேண்டுதலோடு.

அதில்லாமல் மாப்பிள்ளைக்கு என்று அப்பா, “இரண்டு பவுனில் ஒரு சங்கிலி ஒன்றைரை பவுனில் ஒரு பிரேஸ்லெட் எடும்மா”, என்றார்.

“அவங்க கிட்ட நிறைய இருக்கும்பா..”,

“இருக்கும்மா! சொல்லப் போனா இது அவங்களுக்கு ஒண்ணுமே இல்லை. ஆனா செய்யறது நம்ம முறை, மோதிரத்துக்கு அளவு தெரியலை… அது மட்டும் அவர் வந்ததும் வாங்கிக்கலாம்”, 

“எப்போ வர்றார்”, என்று இத்தனை நாட்களில் முதல் முறையாக அர்ஜுன் பற்றிப் பேசினாள்,

“உன்கிட்ட சொல்லலை”,

“இல்லையேப்பா”,

“நான் உனக்குத் தெரியும்னு நினைச்சேன்”, என்றார்.

“இல்லைப்பா, என்கிட்டே எல்லாம் பேசவேயில்லை”,

“என்ன பேசவேயில்லையா”, என்றனர் அம்மாவும் அப்பாவும், இது அவர்களுக்குப் புது செய்தி,

“என்கிட்டே கல்யாணம் நிச்சயம் ஆன உடனே பேசினார் நர்மதா, எங்க இருக்கப் போறோம்னு தெரியலை.. சென்னையில இல்லை மறுபடியும் இங்க அமெரிக்காவான்னு அதனால எந்த சாமானும் வாங்காதீங்க, அவளுக்கும் அதிகமா எதுவும் வாங்காதீங்க, இங்க அதெல்லாம் கொண்டு வர முடியாது எல்லாம் வீண் செலவாகிடும்ன்னு சொன்னார்”.

“அதுக்கப்புறம் அவங்கம்மாவும் அதுதான் சொன்னாங்க, அதான் நகை மட்டும் தான் வாங்கறோம்”, என்றனர்.

“நீங்க என்கிட்டே ஏன் சொல்லலை…”,

“நீங்க பேச மாட்டீங்கன்னு என்ன தெரியும் நர்மதா”, என்றார் அம்மா. “அதான் இப்பல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனா எல்ல்லோரும் பேசறாங்க தானே! உனக்கு முன்னமே அவரைத் தெரியும். இதுல அவர் பிடிச்சிப் போய் தானே பொண்ணு கேட்டார்”.   

“பேசியிருந்தா நான் சொல்லியிருக்க மாட்டேனா”,

“இதெல்லாம் யாரவது சொல்வாங்களா கண்ணு, அதான் கேட்டுக்கலை!”, என்றார் அம்மா.

“எந்த காலத்துல ம்மா இருக்கீங்க, நான் பேசினாலும் தயங்கறீங்க. நீங்களும் என்கிட்ட எதுவும் கேட்டுக்கலை… அப்போ நான் இங்க இருக்க மாட்டேனா?”, என்றாள் நர்மதா, அவளுக்கு கவலையாகிப் போயிற்று. அப்போ என் வேலை என்பது போல,

“தெரியலையே கண்ணு, ரொம்ப பெரிய ஆளுங்க அப்படி எதுவும் கேட்க முடியறது இல்லை. அவங்களா சொல்றது தான், அதுவும் மாப்பிள்ளையோட அப்பா, எண்ணி ரெண்டு வார்த்தை தான் பேசறார், யார் கிட்ட கேட்க”, என்றார் ஆதங்கமாக அப்பா. 

“நீ மாப்பிள்ளைக் கிட்ட நல்லா பேசிட்டு இருப்பன்னு தான் நாங்க நினைச்சோம்”,

“கல்யாண செலவு முழுசும் அவங்களது தான்… பத்திரிகை கூட அவங்க தான் அடிச்சு குடுத்தாங்க.. ஒரு பத்திரிக்கையோட விலையே நாற்பது அம்பது ரூபா இருக்கும், முக்கியமானவங்க வீட்டுக்கு எங்களையும் கூட்டிட்டு போனாங்க கூட ஒரு வெள்ளி குங்கும சிமிழ் வெச்சு கூப்பிடறாங்க”, என்றார்.

“நாம போடற இந்த நகை நமக்கு ரொம்ப பெருசு ஆனா அவங்களுக்கு இது ஒன்னுமில்லை”,

இப்போது மூவர் முகத்திலும் கவலை தொற்றிக் கொண்டது, எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டுமே என்று. 

மாப்பிள்ளை வீட்டில் எதையும் கலந்தாலோசித்து செய்யவில்லை. எல்லாம் இப்படி என்ற தகவல் மட்டுமே. அது ஒன்றும் பெரிய விஷயமாக நர்மதாவின் வீட்டினருக்கு இது வரை தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் பெரிய ஆட்கள் அவர்கள் இஷ்டம் தான், தாங்கள் அவர்களுக்கு சரி சமமாக எதையும் செய்ய முடியாது என்று தெரியும்.

ஆனால் மகள் மாப்பிள்ளையுடன் பேசிக் கொண்டிருப்பாள் என்று நினைத்திருக்க, அது இல்லை என்று சொல்லவும்.. மனதில் பெற்றோருக்கு இனம் புரியாத சஞ்சலம்..

இருவரின் முகத்திலும் கவலையைக் காணவும், “இங்க வரட்டும் மா சேர்த்து வெச்சு பேசிடறேன், நல்லா பார்த்துக்குவாங்க என்னை, ஒரு கவலையும் வேண்டாம்”, என்று அவள் தேற்றும் படி ஆகிற்று.

அவர்கள் வீடு சென்றதுமே கல்யாணப் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவளுக்கு போன் செய்த கௌரி… “நர்மதா கார் அனுப்பியிருக்கேன், பார்லர் போயிட்டு வாடா, அங்க ப்ரைடல் மேக் அப் உனக்கு என்ன சூட் ஆகும்னு பார்ப்பாங்க”,

“அப்புறம் நிச்சயத்துக்கு, நைட் வரவேற்புக்கு, காலையில கல்யாணத்துக்கு எல்லாம், என்ன, எப்படி மேக் அப் பார்ப்பாங்க! போயிட்டு வாடாம்மா! நானே வந்துடுவேன்! ஆனா இன்னும் ரெண்டு மூணு பேரை கூப்பிடலைன்னு உங்க மாமா லிஸ்ட் வெச்சிருக்கார்”, என்று சொல்ல..

“சரி அத்தை”, என்று கிளம்பினாள்..

அங்கே சென்றால், அங்கே இருந்த பெண்மணி, “இது உங்க நிச்சயப் புடவை, இது நைட்க்கு, இது காலையில, இது நீங்க போட்டுகுற நகை என்று வகை வகையாகக் புகைப் படங்களைக் காட்டினார்.

“இதெல்லாம் என்ன?”, என்று அயர்ந்து நின்றாள்,

“உங்க மாமியாரும் நானும் நேத்து அவங்க வீட்ல டிசைட் பண்ணினோம்”, என்று அந்தப் பெண்மணி பெருமை பேச…

“என்ன பொண்ணு நீதான் போட்டிருக்குற ட்ரெஸ் நான் செலக்ட் பண்ணினேன்னு இந்தம்மா பெருமை பேசுமா?”, என்று சுறு சுறு வென்று கோபம் ஏறியது.  

நர்மாதவின் மனநிலை புரியாமல், “ஒரு குவிக் பேஷியல் பண்ணிடலாமா”, என்று அவர் கேட்க…  

“ஐயோ! வேண்டாம்! என்னோட ஸ்கின் ரொம்ப சென்சிடிவ்.. அதெல்லாம் வேண்டாம்”,

“உங்க மாமியார் தான் சொன்னாங்க..”, என்று அந்தப் பெண்மணி வற்புறுத்த,

கெளரிக்கு அழைத்தவள், “அத்தே பேஷியல் வேண்டாம், எனக்கு அது சில சமயம் ஒத்துக்காது.. இவங்க சொல்ற மேக் அப் எல்லாம் எனக்கு நல்லா இருக்காது..”

“ம், அப்படியா, ஆனா அது அர்ஜுன் தான் சொன்னான்.. இங்க எங்க சொந்தக் காரங்க கல்யாணத்துக்கு அவங்க செஞ்சிருந்தாங்க நல்லா இருக்குன்னு அவங்க கிட்ட சொல்ல சொன்னான்”,

“டேய், அர்ஜுன்! என் முன்னாடி வராம பின்னாடி இருந்து வேலை செய்யறியா”, என்று மனதிற்குள் கறுவிக்கொண்டவள்.

“இது எனக்கு நல்லா இருக்காது”, என்றாள் பிடிவாதமான குரலில்.

“என்ன பண்ணட்டும்?”, என்றார் கவலையாக கௌரி, “இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது, இவள் இப்படி சொல்கிறாளே”, என்பதாக.   

“என்கிட்டே அவரை பேச சொல்லுங்க”,

“நீ பேசேன்”, என்றார் ஆர்வமாக.

“அத்தை, என்கிட்டே இந்தியன் கால் பேசவே பேலன்ஸ் இல்லை, இதுல வெளிநாடு எப்படிப் பேச”,

“இந்தியா வந்துட்டான்.. சென்னை ரீச் ஆகிட்டான்.. என்கிட்டே இப்போ ஒரு மணிநேரம் முன்ன பேசினான்”,

“வந்துட்டனா”, என்று மீண்டும் மனதிற்குள் கறுவிக் கொண்டவள்.    

“அப்போ நீங்களே கேட்டு சொல்லுங்க, இல்லை என்கிட்டே பேச சொல்லுங்க”, என்றாள்.

“நான் சொன்னா பேசுவானா தெரியலையே”, என்று உளறி விட,

“அப்போ நீங்க முன்னமே சொல்லியிருக்கீங்களா”, கேட்கும் போதே குரல் கம்மிப் போயிற்று.

“இல்லை, அது, வந்து, கொஞ்சம் கோபமா இருந்தானா”, என்று தடுமாற,

“என்கிட்டே பேச விருப்பமில்லைன்னா விட்டுடுங்க அத்தை, என்னவோ மேக்  அப் இருக்கட்டும், நான் வைக்கிறேன், நீங்க சொல்ற இந்த மேக் அப் போட்டா நான் அங்கயே தான் இருப்பேன் ஆனா பொண்ணைக் காணோம்னு எல்லோரும் தேடுவீங்க, யாருக்கும் என்னை அடையாளம் தெரியாத அளவு அந்த மேக் அப் இருக்கும்”, என்று சொல்லி போனை வைத்துவிட்டு திரும்ப,

அந்தப் பெண்மணி, “என்னடா இந்தப் பெண் இப்படி சொல்கிறது”, என்று பார்த்து நிற்க,

“நீங்க ஏன் இப்படி பாக்கறீங்க, நான் அவ்வளவு அழகா தெரிவேன்னு சொன்னேன்”, என்று சொல்லவும்,

“கடவுளே! இந்தப் பொண்ணு கிட்ட இருந்து என்னை காப்பாத்து”, என்று வேண்டுதல் வைக்க ஆரம்பித்து இருந்தார் அந்த பெண்மணி.  

அடுத்த மூன்றாவது நிமிடம் அர்ஜுன் அழைத்தான்…

“என்ன பேச சொன்னியாம்?”, என்ற அதட்டலோடு….

“அதுவா ஸ்லிப் ஆஃப் தி டங்(slip of the tongue)…”, என்று பற்கள் அத்தனையும் சிரிப்பது போல இழுத்துப் பிடித்தாள். பேச்சில் சில நொடி இடைவெளி, என்னவோ செய்கிறாள் இவள் என்று அர்ஜுனிற்கு சொல்ல,   

“என்ன பண்ணிட்டு இருக்க”,

“என் பல்லெல்லாம் காட்டிட்டு இருக்கேன், எதிர்ல இருக்குறவங்க எண்ணிட்டு இருக்காங்க”, என்று அவள் பேசப் பேச..    

அவளிடம் மிகவும் கடுமையாகப் பேசி விட்டு வந்த வருத்தம் அந்த நிமிடம் வரை அர்ஜுனின் மனதை அழுத்திக் கொண்டிருந்தது மாயமாய் மறைந்தது.

“இரத்தக் காட்டேரி,  பார்த்த நாள்ல இருந்து என் உயிரை எடுக்கறா”, என்று ஆற்றாமை தாங்காமல் முனுமுனுத்து, ஆசுவாசப் பெருமூச்சு விட்டு புன்னகைத்தான்.

“என்ன சொன்னீங்க சரியா கேட்கலை”, என்று  கத்தினாள்.

“உனக்கு தானே கேட்கலை எனக்கு கேட்கலைன்னா சொன்னேன், எதுக்கு கத்துற”, என்று சிரிப்போடு சொன்னவன், “எதுக்குப் பேச சொன்ன”, என்றான் தன்மையாக.

“நீங்க தான் பேசமாட்டேன்னு சொன்னிங்கலாம்”,

“நீதானே பேச வேண்டாம் சொன்ன”,

“இந்தக் கல்யாணம் கூட தான் வேண்டாம் சொன்னேன், ஆனா நடக்குதில்லை”,

“நான்தான் வேண்டாம்னா என்னைப் பிடிக்க்கலைன்னு சொல்லிடுன்னு  சொன்னேன் தானே”,

“நான் சொன்னா என் வீட்ல கேட்டுடுவாங்களா என்ன?”, என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், அதை அவனிடம் காட்டாமல்…

“எல்லாம் உங்க இஷ்டமா, அதெல்லாம் முடியாது, அதெல்லாம் பிடிக்கலைன்னு சொல்ல  முடியாது. இது என் கல்யாணம் கூட தான்… எல்லாம் என் இஷ்டம் தான், நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்”,  

இவள் பேசப் பேச அந்தப் புறம் அர்ஜுன் முகத்தில் புன்னகை, “அர்ஜுன் உன் நிலைமை இப்படியா ஆகணும், ரெண்டு நாள் விட்டு பேசியிருந்தாலே இந்த டைலாக் பேசியிருப்பா போல இருக்கே.. அதுக்கு ஏண்டா மூணு மாசம் பேசாம இருந்த”, என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டு இருந்தான்.   

“பிசாசு, ராட்சசி, என்னோட மூணு மாசத்தை இவ நினைப்புலயே ஓட்ட வெச்சிட்டு, என்னைப் பேச வேண்டாம்னு சொல்லிட்டு… நான் பேசலைன்னு சொல்றா இவளை..”, என்று கடுப்பில் பற்களை கடித்தான்.   

இன்னும் நிறைய அவனின் பற்களை கடிக்க வைப்பாள் என்று புரியாமல்.     

   

 

Advertisement