Advertisement

தென்றல் – 22
              மழையும் காற்றும் அங்கு வந்த அன்று கூட இல்லை. இந்த மூன்று  நாட்களாக சூறாவளியாய் அடித்து பெய்து ஊரையே ஸ்தம்பிக்க செய்திருந்தது. தகவல் தொடர்புகள் கூட அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. 
“அஷ்மி நாங்க கேம்ப் போய்ட்டு அப்படியே அடுத்த ஊருக்கு கிளம்பறோம். நீ ஊருக்கு போகனும்னு சொன்னியே. போய்ட்டு இன்பார்ம் பண்ணு…” என உடன் இருக்கும் தோழி கீர்த்தி சொல்ல,
“என் கண்டிப்பா போன் பன்றேன். நாளை மறுநாள் வளைகாப்பை வச்சிட்டு அன்னைக்கு காலையில போய் நின்னேன் அதி தொலைச்சிடுவான் என்னை. கேம்ப் பாதில கழண்டுக்கற மாதிரி இருக்கு…” என புன்னகைத்தவள் தோழியை வழியனுப்பிவிட்டு அனைத்தையும் பேக் செய்ய ஆரம்பித்தாள்.
காலிங் பெல் சத்தத்தில் கதவை திறக்க அந்த ஹோட்டலின் ரூம்சர்வீஸ் ஆள் நின்றான்.
“அதுக்குள்ளே கார் வந்திருச்சா?…” அவனை பார்த்ததும் அஷ்மி கேட்க, 
“எஸ் மேடம்…” என்றதும் தன்னுடைய ஷோல்டர் பேக்கை எடுத்துகொண்டவள் சிறிய ட்ராலியை உருட்டிக்கொண்டு வந்தாள். கதவை பூட்டிவிட்டு ரிசெப்ஷனுக்கு வந்தாள். அங்கே மேனேஜர்,
“மேடம் ஒரு ஹெல்ப், நீங்க டாக்டர் தானே? இங்க ஒரு எமர்ஜென்ஸி. ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா?…” என,
“கண்டிப்பா. யாருக்காவது உடம்பு சரியில்லையா?…” என கேட்க,
“எஸ் மேடம், இங்க ஒருத்தருக்கு கடுமையான ஜுரம். பக்கத்துல ஹாஸ்பிட்டல் இல்லை. கொஞ்சம் தள்ளி போகனும். மழையில கூட்டிட்டு போகமுடியலைன்னு சொல்றாங்க. நீங்க கொஞ்சம் பார்க்க முடியுமா?…” என கேட்க,
“ஒஹ், எஸ்…” என்றவள் ட்ராலியை கார் ட்ரைவரிடம் கொடுத்துவிட்டு மேனேஜர் சொன்ன அறைக்கு நடந்தாள். உடன் வருகிறேன் என்றவரையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவசர உதவிக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய சிறிய கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு வேகமாய் நடந்தாள்.
அந்த அறையின் வாசலில் வந்து நின்றதும் மேனேஜர் உள்ளே அழைத்து வந்து அவனை காட்ட,
“தனியாவா இருக்காரு? கூட யாருமில்லையா?…” என கேட்டுக்கொண்டே அஷ்மிதா படுத்திருந்தவனின் டெம்பரேச்சரை செக் செய்ய,
“கூட இவரோட ப்ரெண்ட் இருந்தார் மேடம். வெளில இருக்காரான்னு பார்த்து அனுப்பறேன்…” என சொல்லி சென்றுவிட அஷ்மி தன் பேக்கினுள் இருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து அவனை பார்த்தாள்.
“உங்க பேர் என்ன ஸார்?…” என கேட்க அவனோ காய்ச்சலின் மிகுதியில் அனத்திக்கொண்டிருந்தான். வார்த்தைகள் வரவில்லை. அவனின் முகம் எதுவோ அசூயையை காட்ட,
“இவ்வளோ காய்ச்சலாகற வரை எப்படி இருந்தீங்க?. கொஞ்சம் ட்ரை பண்ணி ஹாஸ்பிட்டல் போய்ருக்கலாம் தானே?…” என்று பேச அவளின் பேச்சில் எரிச்சல் கொண்டானோ என்னவோ அவனின் முகம் அப்படி ஒரு கோபத்தை காட்டியது.
“யாருங்க நீங்க?…” என கேட்டு அஷ்மியின் பின்னால் ஒருவன் வந்து நிற்க,
“நீங்கதான் இவர் கூட இருந்தவரா? இவ்வளோ காய்ச்சல் இருக்கு. ஹாஸ்பிட்டலும் கூட்டிட்டு போகாம தனியா விட்டுட்டு போய்ருக்கீங்க?…” என கேட்க அவளின் கையில் இருந்த ஸ்டெதஸ்கோப்பை பார்த்தவன்,
“நீங்க டாக்டரா? மாத்தர வாங்க போனே மெடிக்கலுல. நல்லதுங்க. ரெண்டு நாள் முன்னாடி நாங்க இங்க வந்தவங்க. ஒரு கல்யாணத்துக்கு. மழையால கல்யாணமும் நின்னு இப்ப நாங்களும் ஊர் திரும்ப முடியலை. இவனுக்கு இப்படி வச்சிக்கிட்டு போற வழியில ஒண்ணுகிடக்க ஒண்ணுன்னா அவங்கம்மா என்னைய உண்டில்லன்னு ஆக்கிடுவாங்க…” என்று அவன் சொல்ல,
“நல்ல கதை சொல்றீங்க. ஆள் பார்க்க நல்லா தான இருக்கீங்க. லேசா காய்ச்சலா இருக்கும் போதே கிளம்பிட வேண்டியது தான? இப்ப ஹாஸ்பிட்டல் போய் ட்ரிப்ஸ் போட்டா தான் சரியாகும். அதும் ரெண்டு மூணு நாள் அப்சர்வேஷன்ல இருக்கனும்…” 
“ஐயோ இவனுக்கு லேசா காய்ச்சல் கண்டாலே சொலுக்குன்னு படுக்குக்கிடுவான். அதுக்குத்தான் மழைதண்ணி சேராதுன்னு பாத்துக்குவாங்க. இங்க வந்து பாக்க சொல்லி கூப்புட்டா ஒரு டாக்டரும் வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர சொல்லி சொல்லுறாங்க. இவனால முடியலன்னு சொல்லுறான். நா என்ன செய்ய?…”
“நல்லா சொன்னாங்க. இதெல்லாம் ஒரு பேச்சாங்க?…” என்று கடுப்பானவள்,
“கைல என்ன?…” என கேட்க,
“ப்ளாஸ்க்குல ஒண்ணுல பாலும், இன்னொண்ணுல வெண்ணியும் வாங்கி வந்தேன். முக்கி திண்ண ரொட்டியும்…” என்று அவன் காண்பிக்க,
“சரி சீக்கிரம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. கொஞ்சம் குடிக்க தண்ணீர் குடுங்க. ஒரு இன்ஜெக்ஷன் போட்டு அப்படியே ஹாஸ்பிட்டல் போய்டலாம்…”
“இவன் வரமாட்டானே?…”
“யோவ் மிஸ்டர். புண்ணியம், பேசாம இருங்க. எல்லாம் எனக்கு தெரியும். என்னோட கார் இருக்கு. நானே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணிடறேன். இப்படியே விட்டா இந்தாளுக்கு பிட்ஸ் வந்துரும். டெங்குவா கூட இருக்கலாம். ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்து பார்த்தா தான் தெரியும். நல்லா வந்து சேர்ந்திருக்கீங்க. ஒரு காய்ச்சலுக்கு சுருண்டுட்டாரு இந்தாள்…”
“புண்ணியமா? இல்லைங்க என் பேரு…”
“ரொம்ப முக்கியம் உங்க பேரு ஊரு எல்லாம். சொல்றதை கேளுங்க…”
கடுப்பில் அஷ்மி படபடவென பேச அவளின் பேச்சு படுத்திருந்தவனுக்கு சுறுசுறுவென கோபத்தை கிளப்பியது. ஆனால் என்ன பிரயோஜனம்? எழுந்துகொள்ளவோ எதிர்த்து பேசவோ அவனால் முடியாதே.
“மரியாதைன்னா நான் நல்லா இருந்தா இவ என் முன்னால் ஒரு வார்த்தை பேச முடியுமா? நிக்க முடியுமா? என் ஒரு தள்ளுக்கு இருப்பாளா? என்ன வாய்? என் காது வலிக்குது. காய்ச்சலை விட இவ பெரிய காய்ச்சலா இருப்பா போல?” என்று அவனால் உள்ளுக்குள் நினைக்க தான் முடிந்தது.
அஷ்மிக்கு அவள் அவசரம். மழை வேறு இன்னும் வலுத்துக்கொண்டே இருந்தது. யாருக்கும் தகவல் கூட சொல்லமுடியவில்லை. நேரம் ஆக ஆக னியாலாமி மோசமாகும் அளவிற்கு இருந்தது. காய்ச்சல் என்று பார்த்துவிட்டு அப்படியே விட்டுவிட்டு செல்லவும் மனம் வரவில்லை. 
“ஆளு பாக்க ஓங்குதாங்கா தான வளந்திருக்கான். பச்சப்பிள்ளை கூட பார்த்துக்கும். பாவம் இவன் குடும்பம்.” என்று இப்படியாக அஷ்மி நினைத்துக்கொண்டே அவனுக்கு தண்ணீரை அருந்த கொடுக்க இரண்டு மடக்கு கூட குடிக்கவில்லை. வெறும் வயிறு உமட்டல் வந்தது.
“நைட் என்ன குடுத்தீங்க? புடிங்க இவரை. வாஷ் ரூம் ஓபன் பண்ணுங்க. ஒரு டவல் குடுங்க…”
“இந்தம்மா என்ன ஒரே நேரத்துல இத்தனை வேலை சொல்லுது?” என்று அவன் பார்க்க,
“யோவ் ஒரு கை குடுய்யா. இல்லைன்னா இங்கயே வாமிட் பண்ணிட போறான்…” என்று கடுப்பாய் சொல்ல அவனை ஒரு கை பிடித்து இருவருமாய் பாத்ரூம் செல்ல அழைத்து சென்றனர்.
வெறும் தண்ணீர் தான் என்றாலும் முதல்நாள் எதையோ உண்டு ஜீரணிக்காமல் இருந்திருக்கிறது.
“என்னத்த குடுத்தீங்க?…” என மீண்டும் கோபமாய் கேட்க,
“இங்க ஒன்னும் கெடைக்கல. அதேன் தூரமா போயி நாலு பொரட்டாவும் ரொட்டியும் வாங்கினேன். வாய்க்கு நல்லாலன்னு ஒரே பொரட்டா தான் சாப்புட்டான்…”
“நல்லா குடுத்தீங்க. எப்ப இருந்து பீவர்?…”
“நேத்துக்கு மதியானத்துல இருந்து. அதுக்கு மொத நாள் தான் வந்தம். ஆனா கல்யாணம் நின்னுபோச்சுன்னு வரவுந்தேன் தெரிஞ்சது. திரும்ப ஊருக்கும் போவ முடியலை. லேசா காச்ச இருக்கும் போதே மாத்தர தின்னுட்டான். ஆனாலும் விட்டு விட்டு வருது…”
“ப்ச், லேசா இருக்கும் போதே போய் பார்த்திருக்கலாம்ல…” 
இத்தனை கேள்விகள் கேட்கும் போதும் அவனின் கை அவளை தோளில் தான் கிடந்தது. எது செலுத்தியதோ? அவனுக்கு உதவினாள். அப்படியே விட்டுவிட்டு செல்ல அவளுக்கும் ஒப்பவில்லை. 
“நீங்க போய் கதவை திறங்க. கூட்டிட்டு போய்டலாம்…” என அஷ்மி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கதவ திறந்துகொண்டு காவலர்கள் மூன்றுபேர் வந்து நின்றனர்.
என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்பே அவனின் நண்பனை ஒருவன் பிடித்துவிட,
“நடங்க ஸ்டேஷனுக்கு…” என்றான் ஒரு காவலன்.
“வாட்? நீங்க யார் ஸார்? கொஞ்சம் கூட யோசிக்காம டோரை நாக் பண்ணாம உள்ள வந்துட்டீங்க…”
“நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர். என்னையே யார்ன்னு கேட்கிறியா நீ? கதவை திறந்து வந்ததனால தான உங்க லட்சணம் தெரிஞ்சது?…” என அஷ்மியையும் அவளின் அருகில் தொய்வாக நின்றுகொண்டிருந்தவனையும் காட்டி அலட்சியமாக கேட்க,
“கொஞ்சம் பொறுங்க, என்னால இவரை பிடிக்க முடியலை. ஒரு கை குடுத்து ஹெல்ப் பண்ணுங்க…” என அஷ்மி சொல்ல,
“நீங்க பண்ணுற தப்புக்கு என்னையே உதவி செய்ய சொல்றியா?…” 
“என்ன என்ன தப்பு பண்ணினாங்க இன்ஸ்பெக்டர்?…”
“இந்த ஹோட்டல்ல தப்பு நடக்கறதா எங்களுக்கு தகவல் வந்தது. வந்து பார்த்தா எல்லாமே சரிதான். ப்ரெஸ்க்காரங்க வெய்ட் பண்ணிட்டிருக்காங்க. வாங்க வெளில…”
ஒரு நொடி அனைத்தும் இருண்டு போனது அஷ்மிக்கு. அஷ்மிக்கு மட்டுமா அங்கிருந்த மற்ற இருவருக்கும் கூட தான். என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை.  தன் அருகில் நின்றவனை மெதுவாய் கட்டிலில் அமர்த்திவிட்டு நிமிர, 
“ஹ்ம்ம் கிளம்புங்க…” என்று இன்ஸ்பெக்டர் என்பவன் அதட்ட அஷ்மி எதையும் யோசிக்கவில்லை. யோசிக்கவில்லை என்பதை விட அவளை வேறு எந்த விதமாகவும் யோசிக்க அவளின் மூளை செயல்படவில்லை. 
ப்ரெஸ் என்கிற வார்த்தை அவளின் அறிவை அந்த நொடி மழுங்கடித்ததோ? இல்லை இதுதான் விதியின் சதியோ? கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நிகழ்வோ? அனைத்தும் அப்படியாக தான் நடந்தது.
“நாங்க ஏன் ப்ரெஸ் முன்னாடி வரனும்? என்ன ரீசன்?…” அஷ்மி முடிவெடுத்துவிட்டாள் என்ன பேசவேண்டும் என்று. 
பத்திரிக்கையின் முன்பு தவறாக தன்னுடைய புகைப்படம் வெளியாவதை பார்க்க அவளால் முடியாது. சிறு தலைகுனிவேனும் இப்படி ஒரு காரியத்தால் தன் தந்தைக்கு ஏற்படுவதை அவள் விரும்பவில்லை. தன் அடையாளத்தை மறைத்தாள்.
“நீங்க இங்க பண்ணிட்டு இருக்கற வேலைக்கு வேற என்ன செய்வாங்களாம்?…” 
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் இன்ஸ்பெக்டர். பின்னால ரொம்ப பீல் பண்ணுவீங்க…” என்றவள் கட்டிலில் அமர்ந்திருந்தவனை அழுத்தமாய் பார்த்தவள்,
“இவர் என்னோட ஹஸ்பண்ட். ரீசண்ட்டா தான் எங்களுக்கு மேரேஜ் ஆச்சு. நாங்க ஒரு கல்யாணத்துக்கா தான் இங்க வந்து தங்கி இருக்கோம்…” நிமிர்வுடன் அவள் சொல்லியதை பார்த்த இன்ஸ்பெக்டர் உண்மையோ என்னும் வண்ணம் யோசனையுடன் பார்த்து,
“இவர் இவர்ன்னா இவரோட பேர் என்ன?…” என்றதும் ஒரு நொடி யோசித்தவள்,
“விஸ்வாசம். விஸ்வாசமூர்த்தி. இவர் புண்ணியகோடி என் ஹஸ்பண்ட் ரிலேஷன்…” என்று வாக்கு வந்ததை பட் பட்டென்று சொல்ல,
“கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றீங்க, தாலிய காணோம்….” 
“இப்ப தான் சார் இவரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறதுல எங்கயோ சிக்கிடுச்சுன்னு கழட்டி…” என தேடுவதை போல பாவலா காட்ட புண்ணியகோடி என்றாகப்பட்டவனோ அவளுக்கு உதவுவதாக நினைத்து,
“தங்கச்சி இந்தா இருக்குமா. இந்தா…” என ஒரு பாக்ஸில் இருந்து தங்க சங்கிலியுடன் கோர்த்த மாங்கல்யத்தை எடுத்து நீட்டிவிட அஷ்மிக்கு தூக்கிவாரி போட்டது.
“புண்ணாக்கு புண்ணியம். கவுத்திட்டியே…” என்று முறைக்க கூட முடியாமல் அவள் பார்க்க,
“தாலி புதுசா இருக்கே. கழுத்துல போட்ட மாதிரியே இல்ல…” என புண்ணியமாக்கப்பட்டவன் முதுகில் லத்தியால் அடிக்க,
“சும்மா அடிக்காதீங்க. நவரசம் செத்துருவான் சார்…” என்றவன் இன்ஸ்பெக்டரின் முறைப்பில், 
“ஏங்க போலீசு, அதான் இப்பத்தான் கல்யாணம் ஆச்சுன்னு சொன்னாகள்ள. திரும்ப கேட்கீக?…” என்று புண்ணியம் சொல்ல,
“நீ வாய மூடிட்டு இருந்தா புண்ணியமா போகும்” என நினைத்த அஷ்மி,
“அதான் பார்த்துட்டீங்கள்ள. இப்ப கிளம்புங்க…” என்று வெடுவெடுக்க,
“எனக்கு உங்க மேல இன்னும் சந்தேகம் போகலை. எங்க அவரை இதை உங்களுக்கு போட்டுவிட சொல்லுங்க…” என பிடிவாதமாய் நிற்க எரிச்சலானவள் சற்றும் யோசிக்காமல் மாங்கல்யத்தை வாங்கி விஸ்வாசத்தின் கையில் கொடுத்து அவன் கையுடன் சேர்த்து தானே தன் கழுத்தில் போட்டுகொண்டாள்.  
அஷ்மியின் பொறுமை எல்லை கடந்திருக்க அப்போதும் இன்ஸ்பெக்டர் யோசனையோடு அவன் அப்படியே நிற்க,
“போதுமா? இப்ப இங்க நடந்ததுக்கு நீங்க மன்னிப்பு கேட்கனும். இல்லை நடக்கிறதே வேற. பேமிலி மெம்பர்ஸ் இருக்கற ரூம்ல போலீஸ் நீங்க உள்ள புகுந்து அராஜகம் பண்ணீங்கன்னு நான் கம்ப்ளைன்ட் குடுப்பேன். கமிஷனர் வரை எனக்கு தெரியும். கால் பண்ணவா?…” என அஷ்மி மிரட்ட,
“எங்களுக்கு வந்தது பால்ஸ் இன்பர்மேஷன் போல மேம். சாரி உங்களை தொந்தரவு செஞ்சதுக்கு…” என சொல்லி குழப்பமான முகத்துடன் திரும்ப,
“சாரி கேட்டுட்டா சரியாகிடுமா? எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்…”
“என்ன என்ன ஹெல்ப்?…”
“இவரை ஹாஸ்பிட்டல் போக தூக்கிட்டு கீழ கார் வரைக்கும் வரனும்…”
“ஏம்மா எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு வேற வேலை இல்லையா?. போலீஸ்காரனுக்கே வேலை சொல்லுற?…” என்று இன்ஸ்பெக்டர் கத்த,
“போலீஸ்னா பப்ளிக்குக்கு ஹெல்ப் பண்ணனும். பப்ளிக் சர்வண்ட் தானே நீங்க? அதை விட்டுட்டு எங்களுக்கு குடைச்சல் குடுத்துட்டு இப்ப ஹெல்ப் பண்ண முடியாதுன்னா. இவரை தூக்கிட்டு கார் வரைக்கும் வாங்க…” என அஷ்மி சொல்ல,
“என்ன ஆடரா போடற?…”
“தனியா இருந்த ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப்கிட்ட வந்து வம்பு பண்ணி தப்பா நினைச்சு பேசிருக்கீங்க. எங்கள தீவிரமான மன உளைச்சளுக்கு ஆளாக்கிட்டீங்க. இப்ப ஹெல்ப் பண்ணி தான் ஆகனும்.முடியாதுன்னா இப்ப நான் ப்ரெஸ்கிட்ட, உங்க ஹையர் அபிஷியர்ட்ட போறேன்…”
அஷ்மிதா ஆட்டு ஆட்டு என ஆட்ட வேறு வழியின்றி பிரசாத்தை தூக்கிக்கொண்டு சென்றார்கள் அவர்கள். 
காரில் அவனை கிடத்திவிட்டு அஷ்மி மேலும் பேசும் முன்னால் தலைதெறிக்க ஓடிவிட்டனர். அதுவும் ஒரு சாதாரண காரில். யோசனையுடன் அவள் மீண்டும் ரிசப்ஷன் வந்து மேனேஜரிடம் பேச வந்தவர்கள் யார் என்று தெரியாதென்றும் வாசல் வழி யாரும் வந்ததாக தெரியவில்லை என்றும் சொல்ல யோசனையுடன் பார்த்தவள் யார் வந்து கேட்டாலும் தன்னுடைய முகவரி பற்றி சொல்ல கூடாது என்று கேட்டுக்கொண்டு காரில் கிளம்பிவிட்டாள்.
“ரொம்ப நன்றிங்க…” புண்ணியமாகப்பட்டவன் சொல்ல,
“பேசாம வாய மூடிட்டு உக்காருங்க…” என்று எரிந்துவிழுந்தவள் ஹாஸ்பிட்டல் வரை எதுவும் பேசவில்லை. 
ஹாஸ்பிட்டலுக்கு நுழைந்ததும் ஒரு வில் சேரை எடுத்துக்கொன்டு ஒருவர் வரவும் அவனை ஏற்றிவிட்டு உள்ளே அட்மிட் செய்து டாக்டரிடமும் பேசிவிட்டு அவன் இருந்த அறைக்குள் வந்தாள்.
“இங்க பாருங்க மிஸ்டர் விஸ்வாசம், ஒரு ப்ரீ அட்வைஸ். ஆள் வளர்ந்த அளவுக்கு உங்களுக்கு உடம்புல பலம் இல்லாம இருக்கு. முதல்ல உடம்பை கவனிங்க. உங்களால உங்களை சுத்தி இருக்கறவங்களுக்கும் பிரச்சனை. உங்களை பார்க்க வந்த எனக்கும் பிரச்சனை. இது தேவையா?…” என்றவள்,
“ஓகே கெட் வெல் சூன். நான் கிளம்பறேன். சீக்கிரம் குனமாகிட்டு ஊர் போய் சேருங்க. இங்க இருக்க இருக்க நிலைமை கவலைக்கிடம் தான். புரியுதா?…” என்று சொல்லி அங்கிருந்து அவள் கிளம்ப போனவளின் கையை பலம்கொண்டமட்டும் அழுத்தமாய் பற்றினான்.
அவனின் இழுப்பிற்கு நின்று திரும்பி பார்த்தவள் என்னவென பார்க்க அவனின் பார்வை தன் கழுத்தை தீண்டியதில் உணர்வுற்றவள்,
“ஓஹ் இதுவா, நானே மறந்துட்டேன். இதை எல்லாம் மறந்துடுங்க. இது ஒரு சின்ன ஆக்ஸிடன்ட். அவ்வளோ தான்…” என்று கையை அவனிடமிருந்து விடுவித்து சட்டென தாலிச்செயினை கழற்றி அவனின் கையில் வைத்துவிட்டு,
“இப்போ பை விஸ்வாசம்…” என சொல்லிவிட்டு வெகு இயல்பாய் அங்கிருந்து சென்றுவிட அவனால் தான் எந்தவித எதிர்வினையும் ஆற்றமுடியவில்லை அவனிடம்.
அவன் விஸ்வாசம் என்றழைக்கபட்ட பிரசாத். 
மூன்று நாட்கள் கழித்து முற்றிலும் குணமாகிய பின் அதே ஹோட்டலுக்கு வந்து கேட்க அஷ்மி பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. தெரிவிக்க படவில்லை.
ஊருக்கு வந்ததும் அத்தனை கோபத்தையும் தனத்தின் மேல் தான் காட்டினான். 
“உங்களால் தான் போனேன். எனக்கெதற்கு இந்த வேலை?…” பொரிந்து தள்ளிவிட்டான்.
மகனின் கோபத்திற்கான காரணம் புரியாமல் தனத்தின் நிலை தான் திண்டட்டமாக போனது.
“யாருக்கோ கல்யாணம்னா கல்யாண வீட்டுக்கரங்க  அக்கறைப்பட்டு தாலியை வாங்கிட்டு போகனும். அவங்க சகுனத்தடை வந்திடகூடாதுன்னு சங்கிலில லேசா கண்ணி விட்ட தாலியை திரும்ப சரிபண்ணி என்னை வாங்கிட்டு வர சொன்னா உங்களுக்கு அதெல்லாம் முடியாதுன்னு ஏன் சொல்ல தோணலை? சொல்லியிருந்தா எனக்கு இத்தனை கஷ்டம் வந்திருக்காதுல?…”
அவன் கஷ்டம் என்று சொன்னது காய்ச்சலை என்று தனம் நினைக்க பிரசாத்தால் உண்மையை சொல்லமுடியாத நிலை. 
“பாருங்க நடக்காத கல்யாணத்துக்கு நான் போய் இத்தனை கஷ்டப்பட்டிருக்கேன். இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்…” போய் வந்து ஒரு மாதம் வரைக்கும் சொல்லி சொல்லி காண்பித்து தன் ஆற்றாமையை தணிக்க முயன்றான்.
முடிந்தால் தானே?
“அவளும் அவ வச்ச பேரும். கைல சிக்கட்டும் மவளே” என்று பல்லை கடிக்க மட்டும் தான் முடிந்தது.

Advertisement