Advertisement

தென்றல் – 30
               பிரசாத்தை மீண்டும் மீண்டும் அழைத்தும் அழைப்பு எடுக்கப்படாமல் போக என்ன செய்யவென்று ஒரு நொடியும் யோசிக்கவில்லை அஷ்மிதா. உடனே தன்னுடைய பைக் சாவியை எடுத்தவள் தனத்திடம் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
தனம் என்ன எது என கேட்கவும் அவகாசம் இல்லாத அளவிற்கு காற்றாய் பறந்துவிட்டாள். அவனுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் அவன் எங்கே வந்துகொண்டிருக்கிறான் என தெரிந்ததால் யாரையும் நாடவும் இல்லை.
அவளின் கையில் வண்டி பறந்தது. சுற்றிலும் இருட்டு. இரு மருங்கிலும் வயல்வரப்பும் பருத்திக்காடுகளும் இருக்க எதையும் கவனிக்கும் நிலை இல்லை. அவளின் இலக்கு பிரசாத்தை உடனே பார்த்தாகவேண்டும் என்பது மட்டுமேயாக இருந்தது.
ஊருக்கு சற்று வெளியே தூரத்தில் புள்ளியாய் வெளிச்சம் தெரிய நெருங்க நெருங்க சலசலப்பும் கூட்டமும் இவளை பயம்காட்டியது. 
பஸ் ஓன்று மின்சாரகம்பத்தில் மோதியிருக்க அதற்கு பக்கவாட்டில் ஒரு ட்ராக்டர் அபாயகரமாய் கவிழ்ந்து கிடந்தது. ஆம்புலன்ஸ் அதற்குள் வரவழைக்கப்பட்டிருக்க ஆட்கள் அதில் ஏறிக்கொண்டிருந்தனர்.
பார்த்த உடனேயே அஷ்மியின் கண்கள் இருண்டுபோனது. சமாளித்து வண்டியில்ருந்து கீழே இறங்கியவளின் கண்களில் கண்ணீர் கரைகட்ட நிலத்தில் வேரோடிய கால்களை பலவந்தமாக பிரித்துக்கொண்டு அடுத்த அடி எடுத்துவைத்தாள்.
ஆள் மனது ஓலமிட மனதை திடப்படுத்திக்கொண்டு கூட்டத்தை விலக்கி உள்ளே சென்று பார்க்க கோபத்தில் விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு சிவந்து போனது. அங்கே ஒருவனை போட்டு புரட்டி எடுத்துக்கொண்டிருந்தான் பிரசாத்.
கூட்டத்தில் ஒருவரும் அவனை நெருங்க முடியவில்லை. அவன் அடிப்பதையும் யாரும் தடுக்கவும் இல்லை. அதிலும் ஒரு சிலர்,
“போடுங்கண்ணே இன்னும் நாலு மிதி மிதிங்க. அப்பத்தான் இவனுங்க அடங்குவானுங்க…” என அவனுக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர்.
“ஏன்டா உனக்கென்ன இங்க அவார்டா குடுக்க போறாங்க உன் சாகசத்தை பார்த்து. நாயே, நாயே. ரேஸ் ஓட்டனும்னா நீ உன் குடும்பத்த இந்த பஸ்ல வச்சு ஓட்டுடி மாப்ள. அப்ப தெரியும் உசுரோட மதிப்பு என்னன்னு. ஊரான் வீட்டு உசுருன்னா உனக்கு டேஷாடா ராஸ்கல்…” 
ஒவ்வொன்றாய் சொல்லி சொல்லி தன் கை பிடிக்குள் இருந்தவனை காதோரம் இடியாய் அவனின் கையை இறக்கிக்கொண்டிருந்தான். 
“பாருஆ அங்க அத்தன பொம்பளைங்களும் ஒன்ன நம்பித்தான வேலைக்கி போய்ட்டு வாராங்க. பொழுதுல வீடு திரும்பாட்டி அவங்க குடும்பம் எம்புட்டு தவிக்கும். இதே மாதிரி ஒம்பொண்டாட்டி வார பஸ்ல உன்ன மாதிரி ஒருத்தன் விளையாட்டா பண்ணினா ஒனக்கு அது ஈஸியா தோணுமாடா?…”
இடுப்பில் நான்கு மிதி வேறு பலமாய் விழ சுருண்டு விழுந்தான் அந்த ட்ரைவர். அவனை தூக்கி நிறுத்த முயன்று இன்னும் சில அடிகளை கொடுத்துவிட்டு நெற்றி வியர்வையை துடைத்துக்கொண்டவன் அவனை கைவிட தொப்பென கீழே விழுந்தான் ட்ரைவர்.
“ஒருத்தருக்கும் உசுருக்கு ஆபத்தில்ல, அந்த ஒன்னுதேன் உன் உசுர பிடிச்சு வச்சிருக்கு. லேசான காயத்தோட எல்லாரும் பொழச்சதால நீயும் பொழச்ச. இன்னொருக்க உன்ன இந்த பஸ்ல மட்டுமில்ல இனி எந்த பஸ்லையும் பார்க்க கூடாது. பார்த்தேன், கொன்னு குழில இறக்கிடுவேன் பார்த்துக்க. ஜாக்கிரதை…” என அவனை எச்சரித்துவிட்டு,
“ஏலே பிச்ச எங்கடா இந்த மில்லு சூப்பர்வைசர்? வர சொன்னேனே?. அவன ஹாஸ்பிட்டலுக்கு போவ சொல்லு. கூட நம்ம பயலுங்க எவனாச்சும் அவன் கூட இருக்கனும். ஆகற செலவ மில் ஓனர் தான் பார்க்கனும். இல்ல பிரச்சனை பெருசாக்கிடுவேன். சொல்லி வை…” என சத்தமாய் குரல் எழுப்ப,
“அண்ணே போன் பேசிட்டோம். இன்னும் ரெண்டு நிமிசத்துல வந்துடுவாருன்னே…” என்றவன்,
“எல்லாரையும் ஆம்புலன்சுல ஏத்திட்டோம். அந்த ட்ராக்டர் நம்ம கோவிந்தராசோடது. வண்டி ஓட்டிட்டு வந்தது அவரு மவன் தான். கொஞ்சம் அடி பலந்தேன். ஆனா பொழச்சுப்பான். நடமாட்டத்துக்குதேன் நாளாவும்னு பேசிக்கறாங்க…” பிச்சை சொல்ல தாடையை தேய்த்தபடி கேட்டவன்,
“என்ன ஆகும்னு தெரிஞ்சு தான அவனும் வேகமா வண்டிய ஒடிச்சான். அனுபவிக்கட்டும்…” என இறுக்கமான குரலில் சொல்லியவன்,
“சரி நான் கெளம்புறேன். நேரமாச்சு…” 
“சரிங்கண்ணே. இங்க நாங்க பாத்துக்கறோம். பசங்களுக்கும் சொல்லியனுப்பியாச்சு. வந்துடுவானுங்க…” என பேசிக்கொண்டே இருவரும் பிரசாத்தின் கார் அருகே வர பிச்சை அங்கிருந்து நகர்ந்துவிட்டான். 
மீண்டும் எதுவோ அவனிடம் சொல்ல திரும்பிய பிரசாத் அங்கே அஷ்மியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
“ஹேய் வெள்ளெலி நீ எங்கடி இங்க?…” என ஆச்சர்யபாவத்துடன் அவளை நெருங்க,
“கிட்ட வந்த அந்த ட்ரைவர் வாங்கின அடி தான் உனக்கும். இங்க எல்லார் முன்னவும் வாங்குவ…” என அஷ்மி மிரட்டலாய் சொல்லும் பொழுதே அவளின் கண்களில் நின்றிருந்த நீர் விழியை விலகி வெளி வந்தது.
“அஷ்மி இப்ப என்ன ஆச்சுன்னு அழற?…”
“இன்னும் என்ன ஆகனும்? பேசிட்டு இருக்கும் போதே பதட்டமா போனை விட்டுட்ட. உன் சத்தம் ஏதும் கேட்காம உன்னோட பதட்டமான குரல்ல என்னவோ ஏதோன்னு பயந்து ஓடிவந்தேன்…” குரலில் தவிப்பு கொஞ்சமும் குறையாம இன்னமும் மிச்சமிருக்க சிறு புன்னகையுடன் அவளின் கையை அவன் பிடிக்க,
“விடுங்கன்னு சொல்றேன்ல…” என அவனிடமிருந்து தன் கையை விலக்கிக்கொள்ள பார்த்தாள்.
“அட அடங்கும்மா. ரொம்பத்தான் பிகு பண்ணிட்டு. உன்னை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் போய்டுவேனா என்ன?…” என தனக்கு நெருக்கமாய் அவளை இழுத்து பிடித்தான். அஷ்மி பதில் எதுவும் பேசாமல் நிற்க,
“உன்னோட பேசிட்டு வரும் போதே இந்த பஸ், ட்ராக்டர் ரெண்டும் என்னை க்ராஸ் பண்ணி வேகமா போச்சு. எனக்கு முன்னே போகவும் போற வேகத்துலயே எனக்கு தெரிஞ்சிடுச்சு ரெண்டு பெரும் போட்டிக்கு ஓட்டறானுங்கன்னு. சட்டுன்னு ட்ராக்டர் ஒடிச்சு பஸ்க்கு முன்னாடி திருப்பிட்டான். பேலேன்ஸ் பண்ண முடியாம பஸ் ட்ரைவர் கரண்டு கம்பத்துல மோதிட்டான்…” 
“கண்ணு முன்ன நடந்துச்சு. எனக்கு உன்கிட்ட சொல்ல கூட நேரமில்ல. பதட்டத்துல அப்படியே கார நிறுத்தி இறங்கிட்டேன். நல்ல வேல காட்டுல தங்கி இருந்த ஆளுங்களும் இருக்கவும் உதவியா போச்சு. முடிச்சுட்டு உன்கிட்ட பேசலாம்னு பார்த்தா நீ வந்து நிற்கிற. இதுவும் நல்லா தான் இருக்கு…” என அவளை உச்சிமுதல் பாதம் வரை புதிதாய் பார்ப்பதை போல பார்க்க அஷ்மியின் உடல் வியர்வையில் நனைந்திருந்தது.
ஒருவித அழுத்தம் விலக சந்தோஷத்திலும் கண்ணீர் பொங்கியது. வரும் வழியெல்லாம் எத்தனை எத்தனை கற்பனைகள். என்ன நடந்திருக்கும்? இப்ப ஆகியிருக்குமோ? அப்படி ஆகியிருக்குமோ? ஏதாவது விபரீதமாகி இருந்தால்? என நொடிக்கு நொடி லட்சம் முறை மரணித்து மருவினாள்.
“ப்ச், இன்னும் எதுக்காம் இந்த அழுகை. எனக்கு தான் ஒன்னும் ஆகலையே…” என அவளின் கண்ணீரை துடைத்தவன் சுற்றிலும் பார்த்தான்.
காரின் முன்புறம் சிலபல ஆட்கள் நின்றிருக்க ஆம்புலன்ஸ் கிளம்பி இருந்தது. அதனால் காரின் பின்பக்கம் அஷ்மியை இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தினான். 
“ஏய் வெள்ளெலி எனக்காக அன்னைக்கு நீ அழுதது சந்தோஷம் தான். ஆனா அதுக்காக எப்பவுமே எனக்காக நீ அழுதுட்டே இருக்கனும்னு நான் நினைக்கவே மாட்டேன். போதும்…” 
“அழவச்சு பதற வச்சுட்டு இப்ப வண்டி வண்டியா வசனமா பேசற? எனக்கு உன்ன புடிக்கவே இல்லை…” என அஷ்மி கோவித்தாலும் அவனின் கை தான் இப்பொழுது அவளின் கைகளுக்குள் இருந்தது. அதையும் கண்டு அட்டகாசமாய் சிரித்தவன் அவளை தன்னருகில் இருந்தான்.
அவளின் விழிகளின் கீழ் முத்தமிட்டவன் இதழ்கள் அவளின் முகத்தில் கண்ணீர் கரைந்த இடத்தில் எல்லாம் கோலமிட அவனின் ஊர்வலத்திற்கு வர்ணம் சேர்த்தது அவளின் தேகம்.
“தள்ளி போ ஹஸ். யாராச்சும் வருவாங்க…” கிசுகிசுப்பாய் அஷ்மி பேச,
“வந்தா வரட்டுமே. யார் என்ன கேட்டுட முடியும்?…” என மிதப்பாய் பார்க்க,
“ரொம்பத்தான்…” என சிலிர்த்துக்கொண்டாள் அஷ்மி.
“ஹ்ம்ம் ரொம்பத்தான் ஆசை. பேராசை. இது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ஆனாலும் அனுபவி…” அவளின் காதுமடலை தன் பற்களால் சிறைபிடிக்க,
“அச்சோ இது எனக்கு தெரியாது பாருங்க ஹஸ். ரொம்ப கஷ்டம்னா வேணாம். வேணாம்…” என விலகி அவனுக்கு போக்கு காட்ட,
“நீ இருக்க பாரு. மனுஷனை கொஞ்சமாச்சும் ரசனையா பேச விடறியாடி?…” என காய,
“பேசறதுக்கு வேற இடமே இல்லை பாருங்க. இப்படி நடு ரோட்ல இந்த சுட்சுவேஷன்ல என்னன்னுய்யா உனக்கு ரொமான்ஸ் வருது?. இதுக்குத்தான் நான் வந்தேனா?…” 
“நீ எதுக்கு வந்திருந்தாலும் உன்னோட இந்த வருகை என்னை மயக்க வந்ததோ மாய்க்க வந்ததோ? இரண்டுமே எனக்கு விருப்பமானதாத்தான் இருக்கு…” என மயக்கம் தெளியாமல் பிதற்றியவன் அவளை மீண்டும் நெருங்க முயல அவனை தள்ளிக்கொண்டு காரின் முன் பக்கம் வந்தால் அஷ்மி.
இத்தனை நேரம் இருந்த தவிப்பும் துடிப்பும் அவனை பார்த்த மாத்திரத்தில் இந்த நிமிடமே அவனுடன் மொத்தமாய் வாழ்ந்துபார்த்துவிட ஆவல் கொண்டாள். அத்தனை நாள் இருந்த தயக்கம், தடுமாற்றம் ஏதோ ஒரு பனித்திரை இன்று முற்றிலும் அகன்றது போலான ஒரு உணர்வு. 
அதிலும் இப்பொழுதெல்லாம் கணவனாய் தன்னை யாசிக்கும் அவனின் பரிமாணங்கள் முற்றிலும் சாய்த்திருந்தது அஷ்மியை. 
அஷ்மி நகன்ற சில நொடிகள் தாக்குபிடித்தவன் அவளருகே வந்து நின்றவன் பிச்சையை அழைத்தான்.
“உரசாம தள்ளி நில்லுங்களேன்…” 
“இனியும் தள்ளி எல்லாம் நிற்க சொன்ன தட்டி தூக்கிடுவேன் பார்த்துக்க…” என மீசையை முறுக்க,
“சண்டியர்…” என முணுமுணுத்தாள்.
“சொல்லிக்கோ…” என இவன் சொல்லும் பொழுதே பிச்சை வந்துவிட,
“வாங்க அண்ணி, எங்க இம்புட்டு தூரம்?…” என பிச்சை கேட்க,
“சும்மா காத்து வாங்கலாம்னு…” பிரசாத் கிண்டல் பேச,
“அட போங்கண்ணே. அண்ணிக்கு யாராச்சும் தகவல் சொல்லியிருப்பாங்க. அதான் இருப்பு கொள்ளாம கெளம்பி வந்துருப்பாங்க. டாக்டருல…” என சொல்லவும் அஷ்மியின் மனம் துணுக்குற்றது.
இல்லையே? இந்த இடத்தில் ஒரு மருத்துவராக அவள் நடந்துகொள்ளவில்லையே. அணைக்கு என்னவோ என பதறிக்கொண்டு வந்தாள். பார்த்த இடத்தில் அவனின் பத்திரம் உணர்ந்தாலும் எதுவோ அவளின் மூளையை மழுங்கடித்து வேறெந்த பக்கமும் செல்லவிடாமல் அவனை மட்டுமே கண்டாள்.
“அஷ்மி வண்டி சாவியை இவன்கிட்ட குடு…” என அழைக்க பதில் சொல்லாமல் அவள் மலங்க மலங்க விழித்தாள்.
“அஷ்மி கீ எங்க?…” மீண்டும் அழுத்தி கேட்க,
“அது வண்டியிலையே தான் இருக்கு…” மெதுவாய் சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றவன் திரும்பி,
“பிச்சை வண்டியை பத்திரமா கொண்டு வரனும். கொண்டு வரனும்னா வேற ஏதாவது வண்டியில வச்சு கொண்டு வரனும். ஓட்டிட்டு வரக்கூடாது புரியுதா?…” அதட்டலான குரலுடன் சொல்ல,
“இவன் ஒருத்தன் சும்மா சும்மா சீன காமிக்கிறான்” அந்த எண்ணவோட்டத்திலும் அஷ்மிக்கு லேசாய் சிரிப்பு வந்தது பிரசாத்தின் அலப்பறையில்.
“அதேப்பிடிண்ணே. அண்ணி வண்டிக்கு ஒரு மருவாதே இருக்குல. ஓட்டலாம் மாட்டேன்.  ஷேர் ஆட்டோ இங்க இருக்கு. அதுல வச்சு கொண்டு வந்துடறோம். நீங்க கெளம்புங்க. சாவிய வீட்டுல கொண்டுவந்து குடுத்துடறேன்…” என பிச்சை சொல்லி செல்ல,
“கார்ல ஏறு….” என அஷ்மியை அமர செய்தவன் மறுபுறம் வந்து காரை கிளப்பினான். 
“என்னாச்சு முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?…” அவளை பார்த்து கேட்க,
“ஒரு வொய்பா நான் நடந்துக்கிட்டது யூஸ்வல் தான். ஆனா டாக்டரா? நான் அதை பார்க்கவே இல்லையே. என்னோட மைண்ட் வேற எதுலையும் போகலை. என்னால அங்க உங்களை தவிர வேற எதையும் பார்க்க முடியலை…” என்றவள், 
“உங்களை பார்க்கிறவரை பார்க்கனுமேன்ற தவிப்பும் பயமும். பார்த்த பின்னாடி பார்த்துட்டோம்ன்ற சந்தோஷமும் இனி வாழ்வோம்ன்ற எதிர்பார்ப்பும் மட்டும் தான் எனக்குள்ள. என்னால…” 
அதற்கு மேல் பேசமுடியாமல் அவள் தவிக்க ஆறுதலாய் தன்னோடு அணைத்துக்கொண்டான் பிரசாத்.
“நீ என்ன குழந்தையா அஷ்மி? சப்போஸ் அங்க பெரிய இஷூ ஆகியிருந்தா கூட நானே உன்னை பார்க்க சொல்லியிருப்பேன். சின்ன சின்ன காயம்தான். ட்ரைவர் எக்ஸ்பீரியன்ஸ் ஆனா ஆளு. அவ்வளவு பாஸ்டா வந்தாலும் பெரிய ஆபத்தை அழகா தடுத்துட்டான். அவன் மட்டும் இதை சரியா ஹேண்டில் பண்ணாம பதட்டத்துல பயந்துட்டா கண்டிப்பா பாதிபேருக்கு மேல…” 
“பின்ன எதுக்கு அத்தனை அடி அவனை அடிச்சீங்க? பஸ்ல அடிபட்டவங்களை விட இவனுக்கு தான் அவ்வளவு அடி…”
“அடிக்காம இதென்ன விளையாட்டா? இவனுங்க இப்பன்னு இல்லை. இதுக்கு முன்னாடியும் ரெண்டு மூணுவாட்டி இதே மாதிரி பண்ணியிருக்கானுங்க. இன்னொரு தடவை இந்த மாதிரி செய்ய கூடாதுல. அதுலயும் அந்த பஸ்ல ஒரு கர்ப்பிணி பொண்ணு வேற. நல்ல வேளை கடவுள் காப்பாத்திட்டாரு…” 
“இனி இன்னொரு முறை இந்த தப்பை பண்ணமாட்டானுங்கள. அதான் அடிச்சேன். அதும் அந்நேரம் கண்ணுமுன்னால இதை பார்த்த கோபம். யாருக்கும் எதுவோன்னு பதட்டம். அதான் நல்லா சாத்திட்டேன். ஆனா அங்க உன்னை எதிர்பார்க்கலை. பார்த்ததும் எப்படி இருந்தது தெரியுமா?…” என புன்னகைத்தான்.
அவன் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவள் எதற்கு பதில் பேசாமல் அவனை பார்க்கவும் வெளியில் பார்க்க்கவுமாய் இருக்க இவனின் விழிகள் அவளை குறுகுறுவென மொய்த்தது. 
“ஹப்பா, ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க ஹஸ்…” என சொல்ல மழை லேசான சாரலாய் ஆரம்பித்தது. தனத்திற்கு அழைத்தவன்,
“அம்மா பிச்சை அஷ்மி வண்டியோட வருவான். சாவியை வாங்கி வச்சிடுங்க. மழை பெய்யுது. நாங்க பண்ணைவீட்டுல இருந்துட்டு மழை விடவும் வீட்டுக்கு வரோம்…” என சொல்ல,
“என்ன தேவைக்குடா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சும்மா மழையில இங்கயும் அங்கயும் அலைஞ்சுட்டு இழுத்து வச்சுட்டு எங்களை படுத்தவா. நீ நாளைக்கு வெயில் வந்த அப்பறமா வந்தா போதும் சாமி…” என சொல்லிய தனம் போனை வைத்துவிட பிரசாத்திற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“ஆனாலும் அம்மாவும் புள்ளையும் இருக்கீங்களே? அப்பப்பா, நீங்க கார்ல வரது அத்தைக்கு தெரியாதாமாம்? பண்ணைவீட்டுக்கு போற கார் வீட்டுக்கு போக முடியாதாமாம்? நல்லா பன்றீங்க…” என அஷ்மி கிண்டல் பேச பிரசாத்தின் புன்னகை இன்னும் விரிந்தது.
பண்ணைவீட்டில் கார் நுழைந்ததும் காரில் குடையை அவன் எடுத்து தர அதை வாங்காமல் அவள் அமர்ந்திருக்க சில நொடிகள் அவனும் காரினுள்ளே அமர்ந்துவிட்டான். மழை இன்னும் பலமாய் பெய்ய ஆரம்பித்திருந்தது. 
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அஷ்மி திரும்புவதே இல்லை என தெரியவும் புன்னைகை தவழ்ந்தது இவனிடத்தில். அதே புன்னகையுடன் காரை விட்டு இறங்கியவன் மறுபுறம் வந்து கதவை திறந்தான்.
“இறங்கு அஷ்மி. எவ்வளவு நேரம் கார்லயே இருப்ப?…” என்றதும் இறங்கியவள் அவனுடன் குடைக்குள் நுழைந்தாள். வீட்டு வாசல் இன்னும் ஆறே அடிகள் தாம். ஆனால் அவர்கள் அடியே அறையடிக்கு கூட இல்லை. 
இந்த குடைக்குள் பயணம் இன்னுமின்னும் நீளாதா என்னும் வகையில் மனதை அள்ளிச்சென்றது. அந்த ரம்யமான தருணம் இருவரையும் வேறொரு மனநிலைக்கு செல்ல வீட்டை அடைந்து கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றனர்.
பேச்சற்ற ஒரு மௌனம் அந்த வீட்டை நிறைத்திருக்க குளிர் வேறு ஊசியாய் உடலை துளைக்க கிட்சனுக்குள் சென்றவன் அடுப்பில் நீரை வைத்து ப்ளாக் டீ செய்ய வைத்துவிட்டு இங்கே வந்தால் அணியும் இலகுவான உடைக்கு அவன் மாற அஷ்மி அவன் என்ன செய்கிறான் என பார்க்க வந்தாள்.
அடுப்படியில் பாத்திரத்தில் நீர் கொதித்துக்கொண்டிருக்க அதனருகே டீ தூளும், நாட்டு சர்க்கரையும் எடுத்துவைக்க பட்டிருந்தது. அதை பார்த்ததும் அவளே டீயை தயாரித்து எடுத்துக்கொண்டு திரும்ப பிரசாத்தும் வந்துவிட்டான்.
“ஏய் வெள்ளெலி உன்னை ஹால்ல காணோமேன்னு தேடுனேன். இங்க என்ன பன்ற? நான் வந்திருப்பேன்ல…” என கேட்டுக்கொண்டே அவளிடமிருந்து ஒரு கப்பை வாங்கிக்கொள்ள,
“டீ போட்டா நின்னு போட்டு முடிக்கனும். தண்ணியை சுட வச்சுட்டு போய்ட்டீங்க? அது கொதிச்சு வத்திடும். அதான் நானே ரெடி பண்ணிட்டேன். தள்ளுங்க ஹஸ். மழையை வேடிக்கை பார்க்க…” என அவனை தாண்டிக்கொண்டு அவள் செல்ல பிடித்து நிறுத்தினான். 
“அட இருங்க மேடம். மழையை மாடில போ வேடிக்கை பார்க்கலாம்…”
“படி வெளில இருக்கு. மழையில மேல போனா நனைஞ்சிடுவீங்க…”
“அதெல்லாம் போகலாம்…” என்றவன் அவளின் கை பிடித்து அழைத்து சென்றவன் கீழ உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு கதவையும் உட்புறமாக பூட்டிவிட்டு வீட்டின் கடைசிக்கு சென்றவன் அங்கே ஒரு மரத்தால் ஆனா படிக்கட்டின் வழியே அவளுடன் மேலே ஏற ஆரம்பித்தான்.
“போன முறை வந்தப்ப இது இங்க இல்லையே. இப்போ எப்படி?…” அஷ்மி சந்தேகம் கேட்க,
“தேவைனா ஏற்பாடு செய்யாமலா? தோணுச்சு. போட்டுட்டேன்…” மேலே வந்தவன் அந்த அறையை திறந்துகொண்டு உள்ளே அழைத்து சென்றான். பெரிய ஜன்னல் கதவை திறந்து வைத்தவன் விளக்கை அணைத்துவிட்டு மெல்லிய விளக்கொளியை பரவவிட்டு அவளருகே வந்து நின்றான்.
“ஹஸ் டீ குடிக்கலை?…” பின்னிருந்து அவனின் நெருக்கம் அஷ்மியின் பேச்சில் ஏற்ற இறக்கத்தை தரவிறக்க அவளை அணைத்தார் போன்று நின்றவன் பதில் ஏதும் பேசவில்லை. 
கையில் இருந்த கப்பை கீழே வைத்தவள் அவனின் தோள் சாய திறந்திருந்த ஜன்னலுக்கு திரையாய் மழையே மாறியது. 
இருவரும் தாம்பத்திய வாழ்க்கையின் புதிய பக்கத்தை புரட்டிட துவங்க பெண்ணவள் மௌனம் அவள் மீதான ஆணவன் சலனம் புதுக்கவிதை ஒன்றை புனைய தொடங்கியது.
காதல் ஆகப்பெரும் சக்தி. அங்கே உணர்வுகளாய் கடலொன்று எழும்பி மிகப்பெரும் சுனாமி அலைகளாய் உருவெடுத்தது.
அங்கே இருவரின் குறைகள் மறைந்து, காதல் உணர்ந்து, தயக்கங்களை, தடுமாற்றங்களை உடைத்தெறியும் பேரழிவின் உச்சமாய் ஒரு ஆழிப்பேரலை.
கூடுவிட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றிலொன்றாய் கலந்தாட 
ஊன் கலந்து ஊனும் ஒன்றுபட தியானம் ஆழ் நிலையில் அரங்கேற 
காதலென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு

Advertisement