Advertisement

தென்றல் – 24
              வீட்டுக்குள் நுழைந்தவள் தனத்தின் பார்வையில் அவர் சொல்லியதில் அப்படியே நின்றுவிட தனத்திற்கு வந்த கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பார் தான். ஆனால் ஏற்கனவே மகன் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லியிருக்க அமைதியாக இருக்க நினைத்தாலும் அவரால் முடியவில்லை. 
உள்ளே வந்தவளை நில் என்று சொல்லியவர் பிரசாத்தை சிறிதும் திரும்பியும் பார்க்காமல்,
“உன் இஷ்டத்துக்கு நினைச்சா போக நினைச்சா வர இது என்ன டவுனுன்னா நினைச்ச? இல்ல சத்திரமா?…” தனத்தின் பேச்சில் பிரசாத்தை உறுத்து விழித்தவள்,
“சொல்லிட்டு போற மனநிலையில நான் இல்லை. அதான் கிளம்பிட்டேன். இப்போ வந்துட்டேன்…”
“அப்படி என்ன அவசரம்னு கேட்கறேன். குடும்பத்துக்குள்ள சண்டைன்னு வரத்தான் செய்யும். அத இங்க இருந்து தீர்க்க கூடவா தெரியாது? கோவம்னா இருந்து சண்டை போடு. அவனை திட்டு. யார் வேணாம்னா? அதுக்குன்னு வீட்டை விட்டு போவியோ? இத குடும்பம்னு நினைச்சியா என்னன்னு நினைச்ச?. வீட்ல நான் எதுக்கு இருக்கேன்?…” 
“ஒரு வயசான பாட்டியை கூட்டிட்டு தூரதேசம் போய்ருக்கியே அங்க வச்சு அந்தம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவதுன்னா அவங்க வீட்டு மனுஷங்களுக்கு யார் பதில் சொல்வா? உனக்கு எதும்னா அவங்களால பார்த்துக்க முடியுமா? புண்ணியத்துக்கு நல்லபடியா போய்ட்டு வந்துட்டீங்க…” 
“ஆனா நேரங்காலத்துக்கு பிசகா ஏதாவது நடந்திருந்தா திரும்பவும் ரெண்டு குடும்பத்துக்கும் தான் பிரச்சனை ஆகிருக்கும். இதெல்லாம் ஒரு படிச்ச பொண்ணுக்கு யோசனை வேண்டாமா? வீட்ல எங்க போறோம் வரோம்னு கூட சொல்ல முடியாத அடிப்படை நாகரீகம் தெரியாம தான் வளர்த்தாங்களா?…”
பேசக்கூடாது என்றுதான் நினைத்தார் தனம். ஆனால் அவரையும் மீறி கோபத்தில் ஆத்திரத்தில் வார்த்தைகள் வந்து விழ அஷ்மிதா மட்டுமின்றி பிரசாத் கூட இதை எதிர்பார்க்கவில்லை. 
ஏன் பேசிய பின்பு தனமே ஐயோவென பதறித்தான் போனார். ஆனால் எந்த பதட்டமும் இன்றி அஷ்மி அவரை நேருக்கு நேர் பார்த்தாள். அந்த பார்வையே அவருக்கு எதையோ பேசப்போகிறாள் என உணர்த்த,
“பிள்ளைங்களை வளர்க்கற பேரன்ட்ஸ் எல்லாமே நல்லது எதுன்னு சொல்லாம வளர்க்க மாட்டாங்க. நாகரீகம் தெரியாம நானும் வளரலை அத்தை. நாகரீகம்ன்றது நாம நடந்துக்கற விதத்துல மட்டும் இல்லை. நாம சந்திக்கிற சூழல், நம்மளோட பேசறவங்களோட குணாதிசயம் பேசும், விஷயம் இதை எல்லாம் பொறுத்துதான் நாம நாகரீகமா நடக்கறதும் நடக்காம போறதும்…”
“அப்படி பார்த்தா உங்க பார்வையில வீட்ல சொல்லாம போன நான் நாகரீகம் இல்லாம நடந்துக்கிட்டேனா அப்படி நான் நடக்க காரணம் உங்க பிள்ளை. அவரோட வளர்ந்த விதம் சரியா இருந்திருந்தா நானும் சரியா தான் இருந்திருப்பேன்….” என சொல்லியவள்,
“நான் உங்கட்ட சொல்லாம போனதுக்காக வேணும்னா மன்னிப்பு கேட்டுக்கறேன். ஆனா அதுக்காக என்னை மட்டும் சொல்லுங்க. தப்புன்னா திருத்திப்பேன். இல்லைனா காரணத்தை சொல்லி உங்களுக்கு புரியவைப்பேன். இது இங்க நடக்கற பிரச்சனை. அதை விட்டுட்டு என்னை வளர்த்த விதம் என் பேரன்ட்ஸ் பத்தி நீங்க பேசவேண்டாம் அத்தை. பாயின்ட் அவுட் பண்ண பெத்தவங்க தான் கிடைச்சாங்களா?…” 
என்றவள் இன்னும் இங்கே நின்றிருந்தால் இன்னும் பேசிவிடுவோம் என எண்ணி கோபமாய் அங்கே நிற்காமல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“என்னடா சொல்லிட்டு போறா உன் பொண்டாட்டி? பார்த்தியா அவ சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சதா? நான் உன்னை சரியா வளர்க்கலையாமே. எப்படி பேசிட்டா பாரு?…” என்று அழ ஆரம்பிக்க அவரை சமாதானம் செய்தவன்,
“அவ உங்களை நீங்க வளர்த்ததை சொல்லலைம்மா. என்னை சொல்லிட்டு போறா. அதை புரிஞ்சுக்கோங்க. அவளை நான் பார்த்துப்பேன்…”
“ஏன்டா அவ அத்தனை பேசறா நீயும் கொஞ்சமும் கவலைப்படாமல் சிரிக்கிற? உனக்கு என்னடா ஆச்சு?…” மகனை திகைப்புடன் பார்த்துக்கொண்டே தன் கண்களை துடைத்தார் தனம்.
ஆம், அஷ்மி பேச பேச பிரசாத்தின் முகத்தில் புன்னகை மட்டுமே. அவள் பேசிய எதற்கும் முகம் சுருங்கவில்லை. செல்லும் பொழுது அவள் சொல்லிவிட்டு சென்ற வார்த்தையில் ஒரு விரிந்த புன்னகையுடன்,
“சரியான சிரிச்சவாயன்” என அவளை போலவே தன்னை சொல்லிப்பார்த்துக்கொண்டான்.
“நான் தான் சொன்னேன்ல தப்பு என் மேலதான்னு. திரும்பவும் சண்டைக்கு நிக்கிற மாதிரி பேசினதும் இல்லாம அவ அப்பாவை பேசினா கோபம் வராதா? அதான் அவளும் பேசிட்டா. ஆனாலும் ரொம்பத்தான் மாமியார் ரோல் ப்ளே பன்றீங்க?…” தனத்தை சீண்ட,
“அந்த ரோஷம் கூட உனக்கு இல்லை. அவ அப்பாவ பேசினதுக்கு  பொங்கிட்டு போறா. நீ உன் அம்மாவை அதும் உன் முன்னவே பேசறதுக்கு சிரிச்சிட்டு நிக்கிற. என்னத்த கடைசி காலத்துல கஞ்சி ஊத்த போற?…” என முணகிக்கொண்டே தனம் அங்கிருந்து சலிப்புடன் எழுந்து சென்றார். 
அஷ்மி மேல் கோவம் இருந்தாலும் இந்த சூழ்நிலையிலும் அவளை விட்டுகொடுக்காமல் மகன் அவளுக்கு பரிந்துகொண்டு பேசியவிதம் அவருக்கு பிடித்தது. நன்றாக இருந்தால் சரி என நினைத்தார்.
அறைக்குள் அஷ்மி என்ன செய்கிறாள் என்று பார்க்க நினைத்தாலும் கால்கள் நின்ற இடத்தை விட்டு நகருவேனா என்று இருந்தது. ஏனோ பேரலை ஒன்று தன்னை சுருட்டி விழுங்கபோவதை போல மூச்சு திணற ஆரம்பிக்க தன்னை நிதானப்படுத்திக்கொண்டு செல்லவே அரைமணி நேரம் பிடித்தது.
“பிரசாத் இன்னைக்கு பிரதோஷம். நானும் பாக்கியமும் கோவிலுக்கு போகலாம்னு பேசியிருந்தோம். போய்ட்டு வரேன். நைட்டுக்கு சாப்பிட ஒன்னும் செய்யலை. இன்னைக்கு பிரபா வீட்டு முறை கோவில்ல அன்னதானம். நான் ஒரு எட்டு மணிவாக்கில சாப்பாடு குடுத்துவிடறேன்…” என்றவர்,
“கோவப்படாம அவகிட்ட பேசு. சண்டை போட்டாலும் சத்தம் வீட்டுக்கு வெளிய வரக்கூடாது…” என முறைப்பாய் சொல்ல,
“நான் ட்ராப் பன்றேன்ம்மா…” என எழுந்தான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். பிரபாவே வரேன்னு தான் சொன்னான். நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டு ஆட்டோக்கு போன் பண்ணிட்டேன்…” என சொல்லும் பொழுதே வெளியே ஆட்டோ சத்தம் கேட்க இருவருமாய் வெளியே வந்தனர்.
தனம் கிளம்பி சென்றதும் உள்ளே வந்து வெளிக்கதவை மட்டும் பூட்டியவன்  மெதுவாய் அஷ்மியை பார்க்க சென்றான். அங்கே அவள் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க மெதுவாய் அவள் அருகில் அமர்ந்து தன்னுடைய போனை பார்க்க ஆரம்பித்தான்.
உள்ளே வந்ததும் தான் சென்றதை பற்றி எதுவாவது பேசுவான் என்று பார்க்க அவனோ கண்டுகொள்ளாத பாவனையில் அமர்ந்திருக்க கடுப்பானவள்,
“கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாம உன்னால எப்படி இருக்க முடியுது? அதும் என் பக்கத்துல வேற உரசிட்டு உட்கார்ந்து இருக்க. எவ்வளோ தைரியம் உனக்கு?…” என சகட்டுமேனிக்கு பொரிய அவளை பார்த்துவிட்டு எழுந்தவன் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து கால்கள் இரண்டையும் கட்டிலின் மேல் நீட்டினான். 
“நான் பேசிட்டே இருக்கேன் கொஞ்சமாவது ரோஷம் வருதா? ஆர் யூ மேட்?…” என்றவளை அவன் பார்த்த பார்வையில் ஒரு நொடியேனும் தடுமாறி நின்றாள்.
“ஹ்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம். வச்சிக்க வச்சிக்க…” என குறும்பாய் புன்னகைக்க அவனின் புன்னகை அவளின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றி தூபம் போட்டது.
“நான் எத்தனை காயப்பட்டு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ அலட்டிக்காம உட்கார்ந்திருக்க. எத்தனை தெனாவெட்டுடா உனக்கு?…” என்று லேப்ட்டாப்பை தூக்கி வைத்துவிட்டு கட்டிலை சுற்றிக்கொண்டு அவன் அருகே வந்தாள். 
“குடிச்சிருக்க, தப்பா பேசியிருக்க, அந்த பொண்ணை அடிச்சிருக்க, தூக்கிட்டு போய்ருக்க, இதுக்கெல்லாம் மேல அவளை அவளை உனக்கு பிடிச்சிருக்கு. என்கிட்டையே சொல்ற நீ. அப்போ நான் யார்?…”
அஷ்மிக்கு கோபம் அவன் மீது இருந்தாலும் நந்தினியின் மீதான ஈர்ப்பு அவளை அணுவணுவாய் கொன்றது.
அவளின் உணர்வுகள் புரிந்தவன் இறுக்கமாய் கண்களை மூடி திறந்தான். என்றோ விதைத்த வினை இன்று வலிக்க வலிக்க அறுவடை செய்கிறான். அமைதியாய் அவளை பார்த்தவன், 
“என்ன திட்டனுமோ திட்டிடு. உன் மனசுல இருக்கிறதை எல்லாத்தையும் சொல்லிடு. ஆனா என் கண்ணைவிட்டு மட்டும் எங்கயும் போய்டாதடி. சத்தியமா தாங்கமாட்டேன்…”
“ஓஹ் அப்போ பர்ஸ்ட் லவ் கையை விட்டு போச்சே அன்னைக்கு மட்டும் எப்படி ஸார் தாங்கின? உன் கண்ணு முன்னால அவளுக்கு இன்னொருத்தன் தாலி காட்டினப்போ ஏத்துக்க முடிஞ்சவனுக்கு நான் எல்லாம் எம்மாத்திரம்?…”
வேண்டுமென்றே அவனை நோகடிக்க அவள் பேசிய வார்த்தைகள் அவளையே கூறு போட்டன. உன்னை பேசி எனக்கும் வலிக்குதுடா என மனதிற்குள் பொசுங்கினாள்.
“அஷ்மி…”
“அஷ்மியே தான். லவ் பெயிலியர் ஆனதை கூட ஏத்துப்பேன். ஆனா அதை இவ்வளவு நாள் என்கிட்டே சொல்லாம மறைச்ச பார்த்தியா அத தான் ஏத்துக்க முடியலை…”
“நான் வேணும்னு அவளை அடிக்கலை. ஒரு விளையாட்டு பேச்சுக்கு அவ இவ்வளோ பெரிய ஸீன் க்ரியேட் பண்ணிட்டா. அதான்…”
“விளையாட்டுக்கு யாரை வேணும்னாலும் வரைமுறை இல்லாம பேசுவியா? நாலு பசங்க சேர்ந்தாலே இப்படித்தான் பேசுவாங்கன்றதை உன்னை மாதிரி ஆளுங்க தான் ப்ரூவ் பன்றீங்க. விளையாட்டுன்னு சொல்ற இதே மாதிரி நான் பொது இடத்துல போகும் போது எவனாவது நீ பேசின மாதிரி என்னை பேசினா விளையாட்டுக்கு பேசறான்னு கேட்டுட்டு நீயும் கண்டுக்காம வந்திருப்பியா?…”
இத்தகைய தாக்குதலை அவன் எதிர்பார்கவே இல்லை. இதற்கு என்னவென்று பதில் சொல்லுவான்? அவன் திகைத்துபோய் நிற்க,
“முடியாதுல்ல. நரம்பு புடைக்குமே? ரத்தம் கொதிக்குமே? உனக்கு உன் பொண்டாட்டியை பேசினா மட்டும் கோவம் வரும். ஆனா நீ மட்டும் யாரோ ஒருத்தியை பேசலாம். அவளுக்கு யாருமே இல்லை பாரு. அவளுக்கும் அப்பா, அண்ணன், சொந்தம்னு இருந்திருப்பாங்க தான?…”
“நான் தான் சொன்னேன்ல அஷ்மி. கொஞ்சமா குடிச்சிட்டேன்னு…”
“குடிச்சா ஒழுக்கம் தெரியாம போய்டுமா? எத்தனை போதையிலையும் அம்மா அம்மாவா தான் தெரியுவாங்க. குடின்னு சொல்லி அதுக்கு பின்னால ஒளிஞ்சு நீ பண்ணினதை நியாயப்படுத்தாத. எனக்கு இரிட்டேட் ஆகுது…”
“ஓகே நியாயப்படுத்தி சொல்லலை. ஸாரி…”
“எவ்வளவு ஈஸியான வார்த்தைல இந்த ஸாரி. மன்னிப்பு. ஏன் சொல்ல மாட்ட? இந்த வார்த்தைக்கு என்ன? நரம்பில்லாத நாக்கை சுழற்றி மன்னிப்புன்னு நினைச்சா இந்த வார்த்தை மட்டுமில்ல நாம என்ன பேசணும்னு நினைக்கிறோமோ அது வந்து தான கொட்டிட்டு தான் இருக்கும். ஆனா எப்போ, எங்கே, யார்க்கிட்ட என்ன வார்த்தைன்றதை நாம தான் முடிவு பண்ணனும். மன்னிப்பு கேட்டா மட்டும் சரியாகிடுமா?…”
“நான் தான் பண்ணினது தப்புன்னு ஒத்துக்கிட்டேனே?…”
“ஒத்துக்கிட்டா நீ மகாத்மாவா? நீ ஒத்துக்கிட்டு திருந்தி நந்தினிக்கு நல்லது பண்ணினதால உன்னோட பாவக்கணக்கை அழிச்சுட்டாங்களா?. நீ செஞ்சதை நந்தினி  மறந்துட்டாங்களா?..” அவனை கேள்விகளால் திணறடித்தாள்.
“அஷ்மி…” அவளை எப்படி சமாளிக்கவென அவன் விழிக்க,
“நானும் தான் ஒருத்தனை கல்யாணம் செஞ்சிக்க நினைச்சேன். நல்லா நோட் பண்ணு. நினைச்சேன். வெறும் நினைப்பு தான். அதுவும் அவன் மேல எந்த ஃபீலிங்கும் இல்லை எனக்கு. ஆனா நீ ஆசைப்பட்டிருக்க நந்தினியை பார்த்ததுமே. அந்த ஒரு நாளா ஒரு நொடியா இருந்தாலும் உன்னோட மனசுல என்னை வைக்கவேண்டிய இடத்துல அவங்களை ஒரு நிமிஷம்னாலும் நீ வச்சு பார்த்துட்ட…” என முகத்தை மூடிக்கொண்டவள் மீண்டும் அவனை பார்த்து,
“இங்க பிடிச்சியாமே? இப்படி கழுத்தை இறுக்கமா பிடிச்சன்னு சொன்னாங்க. இப்படி கையை திருக்கினன்னு சொன்னாங்க. அப்போ உன்னோட டச்சிங்? நீ அவங்களை எப்படியெல்லாம் தொட்டு தூக்கி?…” முகத்தை மீண்டும் அழுத்தமாய் மூடிக்கொண்டாள்.
“அஷ்மி…” அவளை தொட பார்க்க,
“யோவ் தள்ளி போயா…” என பிடித்து தள்ளிவிட்டாள்.
அவளின் எண்ணமும் அது செல்லும் திசையும் வெகு சுலபமாய் பிரசாத்திற்கு பிடிபட்டது. 
“பொசசிவ்னெஸ்” என சொல்லிக்கொண்டவன் மனதினுள் அவ்வார்த்தைகள் குளுமையாய்  இறங்கியது. நிதானமாய் மீண்டும் சேரில் அமர்ந்தவன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளையே கண் எடுக்காமல் பார்த்தான்.
“நான் இத்தனை பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட வருத்தமில்லாம மாப்பிள்ளையாட்டம் உட்கார்ந்திருக்க? எழுந்திரிடா…” என்று அதட்ட கண்கள் கலங்கியது. கொஞ்சமும் அசராமல் அப்படியே தான் இருந்தான்.
“நான் அப்போ பண்ணினது தப்புதான். உன் கிட்ட சொல்லிட்டேன். இதுல நானா போய் எந்த வம்பும் பண்ணலை. அவளா வந்தா அவளோட துடுக்குத்தனத்தால வாங்கிக்கட்டிக்கிட்டா. போய்ட்டா. இப்ப அவ என் வாழ்க்கையில் மனதில்னு எங்கயுமே இல்லை. அவ பிரபா வொய்ப் அவ்வளோ தான்…” என அழுத்தமாய் அவன் சொல்லிய விதம் திமிராய் இருக்க,
“இப்போ இல்லைன்னா என்ன அர்த்தம்? அப்போ ஏற்கனவே இருந்திருக்கான்னு தானே அர்த்தம்? அதத்தான் என்னால முடியலைன்னு சொல்றேன்…” 
“நடந்ததை மாத்த முடியாது அஷ்மி. ஆனா மறந்திடலாம் இல்லையா?…”
“மறந்திட்டு? ஓஹ் உன்னோட செகென்ட் இன்னிங்க்ஸ்க்கு நானா? தொலைச்சிடுவேன் பார்த்துக்க…”
“சரி நீ இல்லைன்னா என்ன பண்ணலாம்?. நீயே சொல்லேன்…” அவளை அசால்ட்டாய் பேசி பேசி படுத்திவைத்தான். 
இணக்கமாய் பேசி சமாதானம் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு மனம் கொஞ்சம் ஆறியிருக்குமோ என்னவோ அவனின் இந்த திமிரான பேச்சு இன்னமும் காயப்படுத்தியது. 
ஆம், தவறுதான் செய்துவிட்டேன் தான். ஆனால் மறந்துவிட்டு வாழலாம் என கொஞ்சமும் அலட்டாமல் பதில் சொல்லியது கோபத்தை கொடுத்தது. கூடவே அழுகையையும். அவனிடம் என்ன எதிர்பார்த்தால் என்று அவளுக்கே தெரியவில்லை. அழுகை வந்தது உடன் கண்ணீரும்.
“உன்னால நான் அழறேன். நீ பார்த்துட்டே இருக்க…” என அவனை குற்றம் சொல்ல மெலிதான புன்னகை அவனிதழ்களில்.
கட்டியிருந்த வலதுகையை  எடுத்து கன்னங்களில் வைத்துகொண்டு சுவாரஸியமாய் அவளை பார்த்தான். அதிலும் அப்பட்டமான ரசனையும் மகிழ்ச்சியும் சரிவிகுதியாய் போட்டிபோட்டது.
“அழ வச்சிட்டு சிரிக்கிற நீ. மான்ஸ்டர். உயிரை எடுக்கிற மோசமான வைரஸ். நீயெல்லாம் என்ன மனுஷன்?…” என அவனின் மேல் தலையணை ஒன்றை எரிய அதை லாவகமாய் தடுத்தவன்,
“உன்னோட கண்ணீர் விலைமதிக்க முடியாத ஒண்ணு. அதை யாராலும் பெற முடியாதுன்னு அதி சொன்னார். நீ உன் வாழ்க்கையில் இப்படி கண்ணீர் விட்டு அழுதது உன் அப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப தான்…” அவன் என்ன சொல்ல வருகிறான் என புரியாமல் அஷ்மி பார்க்க, 
“இப்ப எனக்காக அழற. எனக்காக மட்டும். அப்போ நான் உன் மனசுல எங்க இருக்கேன்னு புரியுது. மனசார சொல்றேன். இப்ப நான் அவ்வளோ சந்தோஷமா இருக்கேன். எனக்காக என்னோட மனைவியோட விலைமதிப்பில்லா கண்ணீர். இது சொல்லுது உன் மனசுல எனக்கான இடம் எதுன்னு…”
“மண்ணாங்கட்டி. ஒண்ணுமே இல்லை. ஏன்டா ஏன்டா என்னை சாவடிக்கிற? என்னோட அழுகையை கூட ரசிக்கிற. உன்னோட உண்மையான குணம் இதுதானா? அரக்கன்டா நீ…” என அவனின் டிஷர்ட்டை பிடித்து எழுப்பி உலுக்கியவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு சொல்லி,
“காதலிச்சா இத்தனை வலிக்குமா? எனக்கு வலிக்குதுடா…” என உதடுகள் மட்டும் முணுமுணுக்க அவனிடம் முகம் காட்டாமல் திரும்பிக்கொன்டாலும் அவளின் அருகே நின்றவனுக்கு நன்றாகவே கேட்டது.
“அஷ்மி…” அவளை தவிப்புடன் அணைக்க முயல சீறிக்கொண்டு திரும்பி அவனை தள்ளினாள்.
“வேண்டாம். நீ போ. போ…” என அவள் கத்த கையை கட்டிக்கொண்டு பார்த்தான் அவளை.
“இங்க பாரு நீயும் நானும் ஜஸ்ட் பேருக்கு தான் ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப். ஜஸ்ட். ஜஸ்ட் மட்டும் தான்…” என தீயாய் அவனின் முகம் பார்க்க,
“உன்னோட ஜஸ்ட் என்னை இன்னும் உன் பக்கம் தான் இழுக்குது அஷ்மி. இருந்தாலும் இந்த ஜஸ்ட் எனக்கு ஓகே தான்…” என அசராமல் கூற,
“போடா…” என்று முறைத்துவிட்டு சென்று படுத்துக்கொண்டாள் அஷ்மி.  அவளருகே வந்து அவனும் அமர்ந்து அவளின் தலை வருட மீண்டும் வேகமாய் எழுந்து அமர்ந்தவள்,
“உன்னால எப்படிடா முடியுது? அவளை விரும்பிட்டு அவளை கண்முன்னால வச்சிட்டு ரொம்ப ஈஸியா உன்னால முடியுது? அப்போ நான் இல்லைன்னாலும் நீ இப்படித்தான் இருப்ப இல்ல? உன்னை போய்…” 
“கண்டிப்பா உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு இந்த ரெண்டு நாள்ல புரிஞ்சிடுச்சு அஷ்மி…” அவளுக்கு தன்னை உணர்த்திவிட முயல,
“பொய் சொல்லாத. முடியலைன்னா கிளம்பி வந்திருப்ப தானே? தேடி வந்திருப்ப. ஆனா நீ தான் ஏர்போர்ட்க்கு கூட ரிஸீவ் பண்ண வரலை. இதுல இருக்க முடியாதாமாம்…”
காதலும் கோபமும் ஆத்திரமும் அவளை அலைகழிக்க வார்த்தைகள் கவனமின்றி வந்துகொண்டே இருந்தது.
“என்ன அஷ்மி நீ சராசரி பொண்ணு மாதிரி?”  என அவளின் மனசாட்சி அவளை கடிய,
“பொண்ணுல என்ன சராசரி பொண்ணு, சாதிச்ச பொண்ணு. பொண்ணுங்க எல்லாருமே சாதிக்க பிறந்தவங்க தான். சராசரி பொண்ணு எந்த விதத்திலையும் குறைவில்லை. சாதிச்ச பொண்ணு மட்டும் எல்லாத்துலையும் நிறைவில்லை. சில உணர்வுகள் எல்லாமே எல்லாருக்கும் பொதுவானது.”
அவளுக்கு அவளே புத்தி சொல்லிக்கொண்டாள். அவளால் தாளமுடியவில்லை. இன்னும் இன்னும் அவனை கேள்விகளால் வகுந்துவிட நினைத்தாலும் காதல் நிறைந்த நெஞ்சம் ஆற்றாமையால் அயர வைத்தது.
“என்னை மிஸ் பண்ணுனியா வெள்ளெலி?…” அவளின் காதருகே குனிந்து அவன் கேட்க இல்லை என தலையை மட்டும் அசைக்க,
“நான் உன்னை மிஸ் பண்ணினேன். ரொம்பவே…” இகழ்ச்சியாய் அவனை பார்த்தவள்,
“நந்தினி மிஸ் ஆகி பிரபாவுக்கு மிசஸ் ஆனப்ப மிஸ் பண்ணினதை விடவா என்னை மிஸ் பண்ணின?…” வார்த்தைகள் விஷமாய் அவனை தாக்க ஒரு நிமிடம் சுருண்டுபோனாலும் புன்னகை மாறா முகத்துடன்,
“ஆமா, அவ ரத்தகாட்டேரி. அவளை நான் மிஸ் பண்ணலை. கொஞ்சம் பீல் பண்ணினேன், அவ்வளோ தான். ஆனா நீ மாயக்காரி, சூனியக்காரின்னும் சொல்லலாம். என் புத்தி மொத்தத்தையும் உன் பக்கமா மந்திரிச்சு வச்சிருக்க. அதான் உன்னை மட்டுமே தேடுது என்னோட கண்ணும், மனசும் எல்லாமே…”
வசியக்காரன், உண்மையில் இவன் தான் மாயக்காரன். வார்த்தைகளால் அவளை வசியப்படுத்த முயன்றான். 
முயற்சி திருவினையாக்குமா?

Advertisement