Advertisement

“இன்னைக்கு வாய் கிழிய பேச தெரியுது. அன்னைக்கு கண்ணுல தண்ணி வச்சுட்டு மூக்கை சீந்திட்டு நின்ன. உன்னை அப்படியே விட்டிருக்கனும்…” ரத்தினசாமி போங்க,
“விட்ருக்க வேண்டித்தானே மயிலு? நான் ஒன்னும் அழலை. அதி இல்லாதப்ப நீ என்ன நினைக்கன்னு பார்க்கத்தான் சும்மா அழுத மாதிரி ஒரு ஆக்ட் பண்ணேன்…” என சொல்லி கண்ணடித்து கிண்டல் பேச,
“நீ செஞ்சாலும் செஞ்சிருப்ப. நீ எப்படி ஆளு…” என சொல்ல,
“ஐயோ போதும் உங்க சண்டை. எப்ப எதுக்கு முட்டிக்கறீங்க?. முதல்ல உள்ள போங்க…” என்று அதி உள்ளே அனுப்ப அங்கே பிரசாத் இவர்களையே பார்த்து நிற்க,
“உன்னை என்ன பேசறேன்னு கண்காணிக்கிறான் பாரு அந்த சண்டியர். என்னையே தூக்கிடுவேன்னு மிரட்டினான். இப்ப உன்னை நான் பேசறதையும் பார்த்துட்டு நிக்கிறான் பாரு. கொஞ்சம் நல்லவனா தான் தெரியறான். ஒழுங்கா வாயடக்கி பொழச்சுக்கோ…” என சொல்ல அஷ்மியின் முகத்தில் அத்தனை சிரிப்பு.
முழுதாய் மலர்ந்த மலரின் புன்னகை அவளின் முகத்தில் படர்ந்திருந்தது. ரத்தினசாமிக்கும் கூட அஷ்மியின் புன்னகையில் மகிழ்ச்சி தான். ஆசிர்வாதத்தையும் கூட முரட்டுத்தனமாய் அவளுக்கு சொல்லியவர் பேத்தியை கொஞ்ச சென்றுவிட்டார்.
மதிய உணவை விரைவிலேயே முடித்துக்கொண்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு பிரியா விடையுடன் அங்கிருந்து கிளம்பினார்கள் அஷ்மியும் பிரசாத்தும்.
அந்த வார இறுதியில் உதய்பிரபாகரன் மித்ராநந்தினியின் மகளான அஷ்மிதாவிற்கு முடியிறக்கும் வைபவம். காலை பரபரப்பாக கிளம்பி சென்றனர் பிரசாத், அஷ்மிதா, தனம் மூன்றுபேரும்.
உதய் பிரபாகரனின் குலதெய்வ கோவிலில் வைத்து தான் இந்த விசேஷம். அதை பற்றி காரில் வரும் பொழுதே அஷ்மியிடம் சொல்லிக்கொண்டே தான் வந்தான். கேட்கும் பொழுதே அதை எப்போதடா பார்ப்போம் என்று இருந்தது.
கோவிலுக்கு சென்றதும் பொங்கல் வைக்க ஆரம்பித்திருந்தனர் நந்தினியும், பாக்கியமும். அவர்களுக்கு உதவியாய் கௌரியும். நந்தினியின் குடும்பமும் வந்திருந்தனர்.
“ஹேய் தங்கக்குட்டி…” என வேகமாய் குழந்தையை அள்ளிக்கொண்டான் பிரசாத். அவன் வந்ததிலிருந்து அஷ்மியின் கண்கள் ஏனோ நந்தினியின் முகபாவனைகளை தானாகவே அவளறியாமல் கவனிக்க ஆரம்பித்தது.
இவர்களை அனைவருமே வந்து வரவேற்றனர். நந்தினி கூட வந்து இன்முகத்துடன் தனத்திடமும் அஷ்மிதாவிடமும் பேச பிரசாத்திடம் மட்டும் இன்னும் முறைப்போடே இருந்தாள். அஷ்மிக்கு யோசனையாகிவிட்டது.
“என்னம்மா தனம்? நம்ம வீட்டாளுங்களே இப்படி லேட்டா வந்தா எப்படி? கூடவே வாங்கன்னு சொன்னா வேண்டாம்னு சொல்லிட்ட…” என கிருஷ்ணமூர்த்தி கடிந்துகொள்ள,
“இருக்கட்டும் அண்ணே, அதான் வந்துட்டோமே. பொங்கலுக்கு உலை வச்சாச்சா?…” என பேச்சை மாற்ற,
“இதோ இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு. நீங்க வரவும் தான் மொட்டை போடனும்னு சொல்லிட்டு இருந்தான் பிரபா. நல்ல வேலை சீக்கிரம் வந்துட்டீங்க…” என பாக்கியலட்சுமி சொல்ல,
“லக்ஷ்மிம்மா நீங்க ஏன் அடுப்புக்கிட்ட நின்னுட்டு இருக்கீங்க? அதான் உங்களுக்கு அடுத்தபடியா இந்த அரைக்காப்படி இருக்குல. பொங்கலை வைன்னு சொல்லிட்டு நீங்க கால்மேல கால் போட்டு உட்கார வேண்டியது தான?…” என பிரசாத் கிண்டலாய் சொல்ல அவனை இன்னும் முறைத்துவிட்டு நந்தினி அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“உங்க ரெண்டு பேரு பஞ்சாயத்து என்னைக்கு தீருமோ? முதல்ல சாப்பிடலாம் வா. டிபன் ரெடி ஆகிடுச்சு…” என உதயா அழைத்து செல்ல அஷ்மியை பாக்கியலட்சுமி தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார்.
“அம்மி இப்பத்தேன் வந்தியா?…” என்று தன் கண்ணாடியை துடைத்துப்போட்டுகொண்டே நாச்சி பாட்டி வந்து கேட்க,
“ஹாய் பாட். இப்ப தான் வந்தேன். நேத்தே உங்க வீட்டுக்கு வந்து உங்களோடவே கிளம்பனும்னு தான் நான் சொன்னேன். உங்க பேரன் தான் வேண்டாம்னு சொல்லிட்டார்…” என்று பிரசாத்தை போட்டுகொடுக்க,
“அந்த படுவா செஞ்சாலும் செய்வான். இந்தா வாரேன்…” என நடக்கமுடியாமல் நடந்து உதயாவுடன் பேசிக்கொண்டிருந்த பிரசாத்தின் அருகே சென்றவர்,
“டேய் இங்க வாடா…” என அதிகாரமாய் சொல்ல,
“அதான் பக்கத்துல வந்துட்டியே கிழவி? இன்னுமென்ன வர?…” என்று குனிந்து கேட்டவனின் காதை பிடித்து திருகிய நாச்சி,
“அர்புள்டா…” என்று மிரட்டி செல்ல,
“கேர்ஃபுல்லை  தான் கிழவி சொல்லிட்டு போகுது…” என உதயா சொல்லி சிரிக்க,
“நான் என்னடா பண்ணேன்?…” என நாச்சியை பார்க்க அவருடன் ஹைபை குடுத்துக்கொண்டிருந்தாள் அஷ்மிதா.
“எல்லாம் சிஸ்டர் வேலை தான் போலையே?…” விஷ்ணு சிரிக்க பிரசாத்தின் முகத்திலும் குருஞ்சிரிப்பு படர்ந்தது.
அதன் பின் அஷ்மியும் நாச்சியும் ஒன்றாக அந்த இடத்தை சுற்றிக்கொண்டு வந்தனர். நாச்சியுடன் பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்ற அஷ்மியிடம் நந்தினியின் அம்மாவும், அத்தை கோசலையும் நன்றாக பேசினார்கள். 
பிரசாத்தை அழைத்த பாக்கியலட்சுமி அவர்களை முதலில் சாமி கும்பிட்டு வரும் படி சொல்ல ஒவ்வொன்றையும் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி. சாமி கும்பிட்டவர்கள் சென்று சாப்பிட்டும் முடித்து வந்துவிட்டனர்.
பொங்கல் வைக்கும் இடத்தில் அங்கே ஒவ்வொருவரும் கலகலப்பாக பேசிக்கொண்டே அடுப்பை எரிக்க பிரசாத் விளையாட்டாக பேசிய அனைத்திற்கும் முகத்தை கடுப்பாய் வைத்துக்கொண்டு எரிச்சலாய் பதில் சொன்னாள் நந்தினி.
இத்தனை வருடங்கள் அவர்கள் யாருக்கும் அது பெரிதாய் தெரியவில்லை. ஆனால் இன்று பிரசாத்தின் மனைவி என்று ஒரு பெண் வந்து அவளின் முன்னால் நந்தினி இப்படி பேச அஷ்மிதா தவறாக எண்ணிவிடுவாளோ என பயந்துபோன உதயா பாக்கியலட்சுமியை பார்க்க,
“நீ ஒன்னும் நினைக்காதம்மா. ரெண்டு பேரும் இப்படித்தான் எப்ப பார்த்தாலும் மல்லுக்கு நிப்பாங்க. இவனும் வம்பிழுத்துட்டே தான் இருப்பான். அவளும் அப்படித்தான் இடக்கா பேசுவா…” என சமாளிப்பாய் சொல்ல அஷ்மிக்கு என்னவோ போல் இருந்தது.
மற்றவர்களுக்கு அஷ்மியின் முகமாற்றம் புரியவில்லை என்றாலும் உதயாவிற்கும் நந்தினியின் அத்தை மகன் விஜிக்கும் நன்றாகவே புரிந்தது. நந்தினியை இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாதே?
மொட்டை போட்டு முடித்து அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறிக்கொண்டு இருந்தனர். சைவம், அசைவம் என இரண்டுவிதமாகவும் சமையல் செய்யப்பட்டிருந்தது. சாப்பிட்டு முடித்த அஷ்மி பிரசாத் பந்தி பரிமாறுவதை பார்த்து தானும் ஒரு வாளியை தூக்கிக்கொண்டு பரிமாற ஆரம்பித்தாள்.
அதை கண்ட உதயாவிற்கும் பிரசாத்திற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தங்களின் குடும்பத்தில் ஒருத்தியாக பொருந்தி இதுபோல அவள் இயல்பாக இருப்பதை கண்டு சந்தோசம் கொண்டனர்.
ஆளுக்கொரு வரிசையாக பரிமாறிக்கொண்டு வர பிரசாத் தன்னை கவனியாததை கண்டு பொருமியபடி வேலையை பார்த்துகொண்டிருந்தாள். புடவை வேறு அவளை இம்சித்துகொண்டிருந்தது.
“இந்தா பொண்ணு கொஞ்சம் சாம்பார் விடும்மா….” என்று ஒருவர் சொல்ல திரும்பி பார்த்தவள் சாம்பார் பிரசாத்திடம் இருக்க அதை கண்டு,
“இது ரசம், இருங்க சாம்பாரை கூப்பிடறேன்…” என சொல்லியவள் பிரசாத்தை பார்த்து,
“மிஸ்டர் தூக்குதுரை…” என்ற அழைப்பில் அவன் சுற்றிலும் பார்க்க,
“தம்பி அந்த பொண்ணு உங்களத்தான் கூப்பிடுது…” என பந்தியில் அமர்ந்திருந்த பெண் அவனுக்கு சொல்ல திரும்பி பாத்தவன் அஷ்மிதாவை கண்டதும் எரிச்சலானான்.
“வெள்ளலி என்ன நக்கலா?…” என முறைப்பாய் நிற்க,
“ப்ச், இவங்களுக்கு சாம்பார் வேணுமாம். சாம்பார் வாளியை தூக்கி வச்சிருக்கற துரை நீங்கதான. சோ கால்ட் தூக்குதுரை…” அஷ்மி கண்ணடிக்க கையிலிருந்த வாளியை டேபிளில் வைத்துவிட்டு,
“அடிங்க…” என அவளை துரத்திக்கொண்டு ஓடினான் அவன். 
“டேய் எங்கடா போற?…” என கேட்ட உதயாவின் அழைப்பை காதில் கூட போடாமல் வேகமாய் சென்றவன் கை கழுவுமிடத்தில் சென்று கச்சிதமாய் அவளை பிடித்துவிட்டான்.
“வெள்ளெலி பேச்சா பேசற?…” என அவளின் கன்னத்தை கிள்ள அஷ்மியின் முகம் சிரிப்பில் துடித்தது.
“படுத்தறடி வெள்ளெலி, தூக்குதுரையா நான். வீட்டுக்கு போனதும் இன்னைக்கு மொத்தமா தட்டி தூக்கிடறேன்…” என்றவன் தன் கையில் ஒட்டியிருந்த சாம்பாரை அவளின் கன்னத்தில் பூசிவிட்டு புன்னகையோடு நகர்ந்துவிட்டான்.
“சரியான ரவுடி…” என்ற சிரிப்போடு சிணுங்கிக்கொண்டே கன்னத்திலும் கழுத்திலும் ஒட்டியிருந்த சாம்பாரை கழுவினாள் அஷ்மி. கழுவி முடித்து அங்கிருந்து நகர்ந்து கோவிலின் பின்னால் வந்துகொண்டிருக்க அங்கே,
“பைத்தியமா நந்து நீ? இன்னும் பழசையே நினைச்சிட்டு இருக்க? பிரசாத் அண்ணா வொய்ப் முகமே மாறிடுச்சு. ஏன் இப்படி பன்ற?…” விஜி நந்தினியை தனியாக அழைத்து வந்து கேட்க இந்த குரலில் அஷ்மிதா மெதுவாய் எட்டிப்பார்த்தாள்.
“பிரசாத் அண்ணா தான் எல்லாமே மறந்து இப்போ எவ்வளோ நல்லவங்களா இருக்காங்க.  நீ மட்டும் ஏன் அதையே பிடிச்சுட்டு தொங்கற?…” என அறிவுரை சொல்ல,
“அப்போ அவன் பண்ணினது எல்லாம் இப்ப திருந்தினதனால தப்பில்லைன்னு ஆகிடுச்சு இல்லையா விஜி? உனக்கு மறந்திடுச்சா விஜி, இங்க பிடிச்சான், என் கழுத்தை நெறிச்சான். என்னை அழ சொன்னான். உன்னை என்னலாம் பண்ணினான். இப்ப அது எல்லாமே நடக்கலைன்னு ஆகிடுச்சுல அவன் திருந்திட்டான்ற ஒரு விஷயத்தால?…”
“நந்து, வாயை மூடு?…” விஜி பதற,
“எதுக்குடா? நீ தான கேட்ட. மறந்திடுன்னு எவ்வளோ ஈசியா சொல்ற? அருவியூரை அங்க நடந்ததை, அவன் என்னை உன்னை எப்படிலாம் படுத்தினான்றதை ஜென்மம் முழுக்க மறக்க முடியாது…” 
“போதும் நந்து, நீ கத்துறதுலையே உன் வீட்டு மனுஷங்களுக்கு தெரிஞ்சிட போகுது. நல்லதை பகிர்ந்தா  எல்லாரும் சந்தோஷப்படுவாங்க. இதை சொன்னா குடும்பமே உடைஞ்சு போய்டும் நந்து. சொல்றதை கேளு…” 
“ஏன் கேட்கனும்? எல்லாமே பண்ணிட்டு இன்னைக்கு நல்லவனாட்டம் என்ன பேச்சு பேசி என்னை சீண்டிட்டே வேற இருக்கான். நானும் அவனை மாதிரி பழசை மறந்துட்டு அவனை மாதிறிவே வெட்கமே இல்லாம பல்லை காட்டனுமா? என்னால முடியாது…” 
இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாளோ நந்தினியின் வாயை ஒரு கையால் பொத்தியவன் மறு கையால் அறைய பாய்ந்தான். அவளின் கண்களில் கண்ணீரை பார்க்கவும் தான் கையை இறக்கிவிட்டு,
“போகலாம்டா. வா…” என அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். 
ஆனால் அங்கு ஒருத்தியின் இதயத்தை சுக்குநூறாய் உடைத்துவிட்டு செல்வதை எவருமே அறியவில்லை. பிரம்மை பிடித்ததை போல நின்றிருந்தாள் அஷ்மிதா.
விஷால் செய்த தவறுக்கு உடனடி தீர்வை யோசித்தவள் இன்று செய்வதறியாமல் கல்லென சமைந்து நின்றாள்.
“அதி ரொம்ப வலிக்குதுடா. எங்கடா இருக்க?…” வலிக்கும் நெஞ்சத்தை இறுக்கமாய் பிடித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டாள் அஷ்மிதா.

Advertisement