Advertisement

தென்றல் – 19
          மறுநாள் பிரசாத்துடன் குறிஞ்சியூர் கிளம்பவேண்டும் அஷ்மி. ராஜாங்கத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று வந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இதற்குள் தனம் உதய் பிரபாகரனோடு வந்து ராஜாங்கத்தை பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.
“அஷ்மி எங்க?…” என பிரசாத் துவாரகாவிடம் கேட்க, 
“மாடில தான் அண்ணா இருக்காங்க. நீங்க பாருங்க…” என்றவள் அவனுக்கு வேறு எதுவும் வேண்டுமா என கேட்க இல்லை என சொல்லி அஷ்மியை பார்க்க சென்றான்.
“நாளைக்கு கிளம்பனும், பேக் பண்ணனும். அவ பாட்டுக்கு இருக்கா?” என நினைத்தபடி செல்ல அதிரூபன் எதிரில் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தான்.
“என்ன பாஸ், ஆபீஸ் கிளம்பியாச்சா?…”
“இல்லை பிரசாத். இன்னைக்கு போனேனா அவ்வளோ தான் என்னை ஒரு வழி பண்ணிடுவா. நாளைக்கு நீங்க கிளம்பவும் தான் ஆபீஸ் போகனும்…” என புன்னகைத்தவன்,
“அஷ்மி அங்கிளோட பேசிட்டு இருக்கா. அட்வைஸ்ன்னு மிரட்டிட்டு இருக்கா. பாவம் தப்பிக்க முடியாம உட்கார்ந்திருக்காரு…” என பேசிக்கொண்டே கீழே இறங்க அவனுடனே பிரசாத்தும் இறங்கிவந்துவிட்டான்.
“நீங்க போகலை?…” என அவனை பார்த்து கேட்க,
“மிரட்டல்னு தெரிஞ்ச பின்னாடியும் போகனுமா என்ன? பொறுமையா மிரட்டிட்டு அவ வரட்டும். நான் இங்கயே வெய்ட் பன்றேன்…” பிரசாத் சொல்ல,
“ரொம்ப உஷார் தான் நீங்க…” என்று வாய்விட்டு சிரித்தான் அதிரூபன்.
“மாமா, இவளை பிடிங்க. என்னை விடவே மாட்டேன்றா. நான் போய் லஞ்ச் செய்யனும்…” வேகமாய் குழந்தையோடு வந்து துவாரகா அதிரூபனின் பதிலை எதிர்பார்க்காமல் அவனின் மடியில் மகளை விட்டுவிட்டு அதே வேகத்தோடு சென்றுவிட்டாள்.
“வேடிக்கை பார்க்கறதுக்கு எவ்வளோ அலம்பல் பாருங்களேன். மேடம்க்கு இன்னும் முழுசா சமைக்க வராது. அங்க போய் அத்தையும், சந்தியாவும் செய்யறதை வேடிக்கை பார்த்துட்டு ஹெல்ப் பன்றேன் அவங்களுக்குன்னு படுத்திட்டு இருப்பா…” 
அதிரூபன் மனைவியை கிண்டல் செய்து சிரிக்க அவனுடன் சிரித்த பிரசாத்,
“நல்லவேளை துவா கேட்கலை…” பிரசாத் சொல்ல,
“கேட்டா மட்டும்? போங்க மாமான்னு ஒரு சிணுங்கல் தான். நீங்க எதிர்பார்க்கிற எதுவும் இங்க நடக்காது. இதே அஷ்மியா இருந்தா உங்க நிலமை தான் கவலைக்கிடமா போயிருக்கும்…” 
“நானே வந்து மாட்டினேனா? சரி சரி விடுங்க…” என அசடு வழிந்தான்.
“ஊர்ல விசேஷம்னு பிரபாகர் சொல்லிருந்தார். பாப்பாக்கு மொட்டைன்னு. ஆனா எங்களால தான் வரமுடியாது பிரசாத். நீங்க அவர்ட்ட சொல்லிடுங்க. நானும் பேசிடறேன். ஏனா இங்க இருக்கற சுட்சுவேஷன், ஆபீஸ்…”
“புரியுது அதி. நான் சொல்லிடறேன். அவன் ஒன்னும் நினைக்க மாட்டான். ஆனா நேரம் கிடைக்கிறப்போ நீங்க வந்துட்டு போனா ரொம்ப சந்தோஷப்படுவான்…”
“கண்டிப்பா…” என்றவன் உள்ளே ஒரு அறையில் எதுவோ விழும் சத்தம் கேட்டு எழுந்து செல்ல உடன் பிரசாத்தும் சென்றான்.
அது அஷ்மியின் தாய் புனிதவதி அறை. அவர் வாழ்ந்ததற்கு சான்றாய் ஒரு அறை. அதில் அவரின் புகைப்படங்களும் அவர் பயன்படுத்திய பொருட்களும். சுத்தமாக இருந்தது அறையே. பிரசாத்திற்கு ஏற்கனவே தெரியும் புனிதவதியை.  
உள்ளே வந்து பார்க்க அங்கிருந்த பெய்ண்டிங் ஒன்று கீழே விழுந்துகிடந்தது. வேகமாய் சென்று எடுத்தான் அதிபன்.
“என்னாச்சு? இதெப்படி விழுந்தது?…” பிரசாத் அருகே வரவும்,
“இதோட ஹோல்டர் லூஸ் ஆகி கழண்டுடுச்சு. அதான் கீழே விழுந்திருச்சு…” என்று சொல்லிய அதிபன் அதை எடுத்து பொருத்த பார்த்தான். பிரசாத் அங்கிருந்த புகைப்படங்களை பார்வையிட்டுக்கொண்டே வர ஒரு வயது நிரம்பாத கை குழந்தையுடன் அஷ்மியின் தாயும், ராஜாங்கமும் நிற்க அப்புகைப்படத்தை தன் மொபைலில் படமெடுத்துகொண்டான்.
முதல் முறை வந்த பொழுது எதுவுமே அவன் மனதை அசைக்கவில்லை. ஒட்டவில்லை. ஆனால் இப்போழுதோ ஒவ்வொன்றையும் ஊன்றி பார்த்து மனதினுள் உள்வாங்கிக்கொண்டு பதியச்செய்துகொண்டிருந்தான். 
“என்ன பிரசாத்? இவ்வளோ ரசிச்சு பார்க்கறீங்க?…” என அதிரூபன் கேட்க,
“நத்திங், பார்க்கனும்னு, சும்மா தான்…” என மாறி மாறி சொல்ல புன்னகைத்த அதிரூபன்,
“இங்க தான் புனிதா ஆன்ட்டி இருந்திருக்காங்க. இங்க வேற யாரையுமே ஸ்டே பண்ண அலோ பண்ண மாட்டாங்க. இங்க எல்லாமே ஆன்ட்டி யூஸ் பண்ணின திங்க்ஸ். அவங்க ஞாபகார்த்தமா…” என்றவனை பார்த்த பிரசாத்,
“நீங்க அத்தையை பார்த்திருக்கீங்களா? உங்களுக்கு அஷ்மி எப்படி ப்ரென்ட்? ஐ மீன் நீங்க பேமிலி ப்ரெண்ட்ஸ். அதன் மூலமாவான்னு கேட்டேன்…” 
அவன் எதுவும் நினைத்துகொள்வானோ என்கிற எந்த எண்ணமும் இன்றி தெரிந்துகொள்ளவேண்டும் தன்னவளை பற்றி என்கிற உந்துதல் மட்டுமே அவனின் மொத்த முகத்திலும்.
“நான் பார்த்ததில்லை. அவங்க அதுக்கு முன்னவே தவறிட்டாங்க. இன்பேக்ட் நான் அஷ்மியை மீட் பன்றப்போ ஸ்பெஷலா எந்த பீலுமே எனக்கு இருந்ததில்லை. ஒரு குழந்தையை பார்க்கறப்ப நமக்கு வருமே ஒரு புன்னகை அதுதான் அவளை பார்த்தப்போவும். சில பேமிலி பங்க்ஷன்ல, பார்ட்டீஸ் இப்டி தான் மீட் பண்ணியிருக்கேன். அதுவும் அங்கிள் குழந்தையா அஷ்மியை தூக்கிட்டு வரும் போது பார்த்திருக்கேன். பேசனும்னு நினைச்சதில்லை. ஆனா அவளை பிடிக்கும்…”
“பின்ன எப்படி இவ்வளோ திக் ப்ரெண்ட்ஷிப்?…” பிரசாத்தின் மூளைக்குள் ஆயிரம் வண்டுகள் குடைய துவங்கியது. ஆர்வம் தாளாமல் இடையிட்டான்.
“அவங்க வீட்டுக்குன்னு நான் போனதில்லை. அங்கிள்க்கு உடம்புக்கு முடியலைன்னு ஒருநாள் அப்பா, அம்மாவோட நானும் கூட போனேன். பார்த்துக்க யாருமே இல்லை. அப்பாவுக்கு ஒரு காரியம் ஆகவேண்டி இருந்தது. அப்போதான் அன்னைக்கு தான் ஆரம்பிச்சது எங்க ப்ரெண்ட்ஷிப்…” என்று அன்றைய நாளின் நினைவில் முகம் கனிந்தான்.
“அஷ்மி இப்போன்னு இல்லை பிரசாத். குழந்தைலயே செம்ம மெச்சூர்ட். ஒரு விஷயம் நடக்குதுன்னா ஏன் எதுக்குன்னு அப்பவே அவ புரிஞ்சுப்பா. நாங்க அன்னைக்கு போனப்போ ஹால்ல உட்கார்ந்து இருந்தா அம்மாவும், அப்பாவும் அவளை பார்த்துட்டு அங்கிளை பார்க்க போய்ட்டாங்க. நான் மட்டும் அவ பக்கத்துல உட்கார்ந்தேன். என்னவோ எனக்கு பேசனும்னு தோணுச்சு…”
“என்னை பார்த்ததும் அப்பாவை பார்க்க வந்திருக்கீங்களான்னு கேட்டா. கைல அவ அம்மாவும் அப்பாவும் இருக்கற போட்டோ. எனக்கும் அவளுக்கும் ஒரு மூணு வருஷம் தான் வித்யாசம். அப்பாவுக்கு என்னனு கேட்டேன். அம்மா வேணும்னு கேட்டேன். அப்பா அழுதாங்க. அதான் அப்பாக்கு ஹெல்த் சரியில்லைன்னு சொன்னா…”
“எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை. அம்மா சாமிக்கிட்ட இருக்காங்க. நீ அழாதன்னு சொன்னேன். அதுக்கு அவ சொன்ன பதில் எனக்கு இப்பவும் ஷாக். நான் இனி எப்பவும் அழமாட்டேன். அம்மா கேட்க மாட்டேன். நான் அழுதா அப்பாவும் அழுவாங்க. அப்பாக்கு முடியாதுல அப்படின்னு சொன்னா. அந்த முகத்துல எத்தனை தெளிவு தெரியுமா? ஒரு மூணு வயசு குழந்தை மனசுல தன்னோட அழுகை அப்பாவை பாதிக்குதுன்னு பதிந்து போச்சு….” 
“அன்னைக்கு அவங்கம்மா பத்தி பேசினவ அதுக்கப்பறம் உங்க கல்யாணத்துக்கு அப்பறம் குறிஞ்சியூர் கிளம்பறதுக்கு முதல் நாள் நைட்ல தான் பேசினா. இப்போ வரை அம்மான்னு யாரையுமே அவ சொல்லி கூப்பிட்டதே இல்லை தெரியுமா? அதுவும் ஒரு வைராக்கியம் தான்….” 
இதை சொல்லும் பொழுதே அதிரூபன், பிரசாத் இருவருமே உணர்ச்சியின் பிடியில் இருந்தனர். 
“அவ இப்போ வரை அந்த ஸ்டேன்ட்ல இருந்து மாறவே இல்லை. எப்போவாவது கண் கலங்குவா. ஆனா சுதாரிச்சுப்பா. ஏன்? எதுக்குன்னு தெரியாம அவளை அழவிடாம பார்த்துக்கனும்னு அப்பவே எனக்குள்ள ஒரு வைராக்கியம்னு கூட சொல்லலாம். அப்போ இருந்து அஷ்மிக்கு எல்லாமே நானாவும் எனக்கு என்னோட தாய்க்கு அடுத்து எனக்கு அஷ்மியும் இருந்தா. எனக்கு அஷ்மி எப்போல இருந்து முக்கியமானவளா மாறினான்னு தெரியலை. ஆனா என் அம்மாவுக்கு அவ எல்லாமா மாறினா. அம்மாவுக்கு அஷ்மியை ரொம்ப ரொம்ப பிடிக்கும்…”
இதைவிட ஒரு மனிதனால் தங்கள் நட்பை பற்றி விளக்கம் கொடுக்க முடியுமா? எத்தனை பவித்திரமான உறவு இவர்கள் மத்தியில் என பார்த்தான் பிரசாத்.
“மேடம் ஏன் டாக்டர்க்கு படிச்சாங்க தெரியுமா? அதுவும் அப்பவே ரொம்ப தெளிவான முடிவை எடுத்திருந்தா. அவங்கப்பாக்கு உடம்புக்கு முடியலைன்னு சொன்னதும் டாக்டரை தான் வரவழைச்சோமாம். உடம்புக்கு ஒரு கஷ்டம்னா கூட இருந்து யார் வேணும்னாலும் பார்த்துக்கலாம். இதுவா அதுவான்னு யோசிக்கலாம். ஆனா என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்க டாக்டரால தான் முடியும். அதை சரி பண்ணவும் கூட…”
“அதனால டாக்டருக்கு படிக்கறேன்னு சொல்லுவா. சொல்லுவான்னா அவ ட்வெல்த் வரை இதை தான் சொல்லிட்டேருப்பா. அதுவும் வீட்ல யாருக்காவது முடியலைன்னா அவ பன்ற அலம்பல் இருக்கே. இண்டர்நெட்ல ஒன்னொண்ணுக்கும் என்னென்ன சிம்டேம்ஸ்ன்னு பார்த்து அதுவா இதுவான்னு இவளே ஒரு டாக்டரா மாறி படுத்திடுவா. அங்கிளுமே அஷ்மியோட ஆசைக்கு குறுக்க நிக்கலை…”
அதிரூபன் சொல்லி முடிக்க இன்னும் அவளை பற்றி கேட்டுகொண்டே இருக்கவேண்டும் போல ஆர்வமாய் அமர்ந்திருந்தான். இவர்கள் பேசி முடிக்கவும் துவாரகா அழைக்க வரவும் சரியாக இருந்தது.
“இங்க என்ன பன்றீங்க? சாப்பாடு ரெடி. சாப்பிட வாங்க…” என அழைக்க,
“அஷ்மி?…” என்றான் பிரசாத்.
“டாக்டர் நர்ஸ்கிட்ட பேசிட்டு இருக்காங்க…” என சொல்லி செல்ல,
“இவ அடங்கமாட்டாளா? எத்தனை தடவை தான் சொல்ல?…” என வேகமாய் எழுந்து அதிரூபன் சொல்ல,
“அதி, அதி அவ பேசட்டும் விடுங்க. அப்பாவோட ஹெல்த் அவங்களுக்கு அப்படித்தானேருக்கும்…” பிரசாத்ஸ் ஒள்ள,
“அப்ப நாங்க பார்த்துக்கமாட்டோமா?…” என அதிரூபனின் கேள்வியில் அப்படியே நின்றுவிட்டான் பிரசாத்.
“ஹேய் சும்மா தான் சொன்னேன். நீங்க…”
“எனக்கும் தெரியும் அதி நீங்க சும்மா தான் என்னை கேலிக்கு சொன்னதா. ஆனா சும்மா கூட நீங்க பார்த்துக்கமாட்டீங்கன்னு எனக்கு எப்பவும் சொல்ல வராது…” என்று புன்னகைத்தவன் முன்னால் நடக்க அதிரூபனின் மனம் நெகிழ்ந்துவிட்டது.
அஷ்மியும் வந்துவிட அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர். மறுநாள் அஷ்மி கிளம்பும் நேரம் முன்பே ரத்தினசாமியின் குடும்பம் மொத்தமும் இங்கே வந்துவிட்டனர். ரத்தினசாமி கூட. உள்ளே வரும் பொழுதே,
“அதிபா அப்பா வந்துட்டேன்ய்யா…” என சொல்ல,
“ஆரம்பிச்சுட்டாருய்யா. சரியான அப்பாப்புள்ளைன்னு இனி யாரும் சொல்ல கூடாது. இனி சரியான புள்ளைஅப்பான்னு மாத்துங்க. க்ரெடிட் கோஸ் டூ மயில் மட்டுமே…” என அஷ்மி சொல்லி சிரிக்க,
“ஏய்…” என்று ரத்தினசாமி முறைப்பாய் பார்க்க,
“பின்ன நீங்க ரெண்டுபேரும் போடற சீன்க்கு என்னை வழியனுப்பற ஸீன் செகென்ட் பொஷிஷனுக்கு போய்டுமே மயிலு. தாடியும் மீசையுமா இருந்துட்டு மகனை பார்த்ததும் க்ளீன் ஷேவ்ல கலக்கலா வந்து நீ நிக்கறதை பார்த்துட்டு அன்புள்ள அப்பா அப்பா உன்னை போல் யாருமே இல்லைன்னு பாட ஆரம்பிச்சுடுவானே…” என கேலி பேச,
 
           
       

Advertisement