Advertisement

தென்றல் – 16
           ஸ்வேதாவை ராஜாங்கத்தின் வீட்டில் துவாரகாவிடம் விட்டுவிட்டு பிரசாத்தும் அஷ்மிதாவும் ஹாஸ்பிட்டல் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அதிரூபன் சந்தோஷுடன் ஏற்கனவே கிளம்பிவிட்டதாக துவாரகாவின் மூலம் தெரிந்திருந்தாலும் அவனும் அஷ்மியிடம் பேசவேண்டும் என்றும் சொல்லவில்லை. அவளும் பேசவேண்டும் என கேட்கவில்லை. 
பிரசாத் கூட பேச சொல்லி சொல்ல அஷ்மி முடியாதென மறுத்துவிட அகிலாவிற்கு இருவர் பாடு என்று ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார். அவருக்கு தெரியாதா இருவரும் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று.
ஹாஸ்பிடல் வந்ததும் பிரசாத் தங்களுக்கு அங்கே கொடுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்துவிட்டான். தனத்திற்கு பேசி விஷயத்தை சொல்லவேண்டும் என்று.
அஷ்மி ராஜாங்கத்தை பார்க்க வந்துவிட்டாள். அங்கே அகிலா மட்டும் அமர்ந்திருந்தார்.
“என்னம்மா சாப்பிட்டீங்களா?…” வந்ததுமே அவர் கேட்க,
“இன்னும் இல்லை ஆன்ட்டி. இனி தான் சாப்பிடனும்…”
“நாளைக்கு மார்னிங் நார்மல் வார்ட் ஷிப்ட் பண்ணிடுவாங்க அஷ்மி. டாக்டர் சொல்லிட்டு தான் போனாங்க…” என்று சொல்லியவரையும் அழைத்துக்கொண்டு அஷ்மி உள்ளே வர ராஜாங்கம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
“என்னை கேட்டாங்களா ஆன்ட்டி?…”
“ஹ்ம்ம் ஆமாம்மா. நீ பத்மினி வீட்டுக்கு போய்ருக்கறதா சொன்னேன். ஓகேன்னு சொன்னாங்க. வேற ஒன்னும் கேட்டுக்கலை…” 
“அவருக்கு தெரியுமே ஆன்ட்டி. அதி இல்லாத நேரம் நான் அங்க சும்மா போகமாட்டேன்னு. தெரிஞ்சிருக்கும். எல்லாமே தெரியும் அவருக்கு. ஆனாலும் காட்டிக்கமாட்டார் இவர்…” என சிரித்துக்கொண்டே அஷ்மி சொன்னாலும் அந்த வார்த்தைகளுக்கு பின்னான வலியை மிக வலிமையாக உணர்த்தியது அகிலாவிற்கு.
“அஷ்மி…” அவளின் தோள் மேல் கை வைத்து அழுத்தம் கொடுக்க,
“வாங்க நாம வெளில வெய்ட் பண்ணுவோம். அப்பாவுக்கு எதுவும் தெரிஞ்சுக்கனும்னா தூக்கம் முழிச்சு என்னன்னு கேட்கட்டும். இப்ப தூங்கும் போதே நாம பேசறதை கேட்டுட்டு இருப்பார்…” என கிண்டல் பேசி வெளியேற ஆச்சர்யத்துக்கொண்டே அவளின் பின்னே சென்றார் அகிலா.
“என்ன பெண் இவள்?” என வியக்காமல் இருக்க முடியவில்லை.
“பாவம் வைத்தி அங்கிள் ஆன்ட்டி…” என அஷ்மி ஆரம்பிக்க என்னவென்று கேட்க அகிலா வாயே திறக்கவில்லை. நிமிர்ந்து அவள் சொல்வதை கேட்க மட்டுமே செய்தார்.
அஷ்மி சொன்னாள். அனைத்தையும் சொல்லி ஸ்வேதாவை நினைத்து வருத்தம் கொள்ள அதற்கும் எந்தவித பிரதிபலிப்பும் இல்லை அகிலாவிடம்.
“இப்பவும் கணவன் கனவுல சொன்னாருன்னு கற்பனை பண்ணிட்டு இருக்கறாங்க. இப்போ இல்லை முன்ன இருந்தே அவங்க நார்மலா இல்லாம இருந்திருக்காங்க ஆன்ட்டி. ஆனா யாருக்கும் தெரியலை. இப்படியே விட்டா இன்னும் நிறைய பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாகிடும்…”
“ஸ்வேதாவை அவளோட அண்ணா பார்த்துப்பாரு அஷ்மி. இதுல கவலைப்பட எதுவுமே இல்லை. நீ வருத்தபடாத. பிரசாத்தை இன்னும் காணும் அஷ்மி?…”
“அவர் இந்நேரம் என் தாயேனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியேன்னு அத்தைட்ட பாடிட்டு இருப்பார்….” என கிண்டல் பேச,
“என்ன?…” அகிலா புரியாமல் பார்க்க,
“இங்க வந்தப்ப பேசினது. அடுத்து அத்தைக்கு பேசவே இல்லையா, நான் வரப்போ ஞாபகப்படுத்தினேன். அதான் அம்மாவை மறந்துட்டோமேன்னு தனம் அத்தைட்ட பேசிட்டு இருப்பார். மெதுவா வரட்டும்…” என்று அசால்ட்டாய் அவள் சொல்லவும் சிரித்த அகிலா,
“நீ இருக்க பாரேன். இப்ப கூட உனக்கு விளையாட்டுதான்…” என அஷ்மியின் காதை செல்லமாய் திருக பிரசாத் சரியாக வந்தான்.
“பேசியாச்சா?…” என கேட்டவளின் கண்களில் குறும்பு தாண்டவமாட,
“ஹ்ம்ம் பேசியாச்சு. போன் பண்ணலைன்னு கொஞ்சம் பயந்துட்டாங்க போல. நானும் மறந்துட்டேன் பாரு…” என்று அவளருகே அமர அகிலாவை பார்த்து  கண்ணடித்தாள் அஷ்மி. 
“அஷ்மி…” என அகிலா கண்டிப்பாய் பார்க்க,
“பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு…” என்று அவள் படவுமே பிரசாத்திற்கு புரிந்துவிட்டது தன்னைத்தான் ஓட்டுகிறாள் என்று. அகிலாவை வைத்துக்கொண்டு அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அஷ்மியை முறைத்துவிட்டு,
“அம்மா நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க. நான் உங்களை வீட்ல ட்ராப் பன்றேன்….” 
“இருக்கட்டும்ப்பா. நானும் இருக்கேன். நீங்க வேணும்னா ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. நானும் அஷ்மியும் இருக்கோம்…” அகிலா சொல்ல,
“ம்ஹூம். நான் இருக்கேன். நீங்களும் அஷ்மியும் போய் சாப்பிட்டு வாங்க. அஷ்மி வேணும்னா ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கட்டும். நான் மாமாவை பார்த்துக்கறேன்….” அவன் முடிவாய் சொல்ல அதற்குள் அஷ்மி விஷாலுக்கு அழைத்துவிட்டாள்.
வீட்டில் நடந்துமுடிந்த களேபரத்தில் துவண்டுபோய் படுத்திருந்த விஷால் தன் மொபைலில் வந்த அழைப்பை கண்டு திகைத்துபோனான். நம்பமுடியாமல் மீண்டும் கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தவனுக்கு அட்டென் செய்யும் எண்ணமே வராமல் போக அழைப்பு நின்று மீண்டும்  வந்தது.
“எடுக்காமல் விட்டால் அதற்கும் காய்ச்சிவிடுவாளே? ஹாஸ்பிட்டலில் வேறு இருக்கிறாள். என்ன எமர்ஜென்சியோ?” என்று நினைத்து எடுக்க,
“என்ன கனவா கண்டுட்டு இருக்க? போன் பண்ணினா என்ன ஏதுன்னு அட்டென் பண்ணி கேட்க மாட்டியோ?. என்ன மயிலு கூட குயிலபுடிச்சு கூண்டிலடச்சுன்னு பாடிட்டிருக்கியா?…” 
எடுத்ததும் அஷ்மி பொரிய உண்மையில் அப்போதிருந்த மனநிலையில் விஷாலின் மனம் கொஞ்சம் இலகுவாகி அவளின் உவமையில் லேசான புன்னகை கூட வந்தது.
“இல்ல நீங்க என் நம்பருக்கு. என்னால நம்பமுடியலை. அதான்…”
“ஷாக்கை குறை. ஷாக்கை குறை. கிளம்பி ஹாஸ்பிட்டலுக்கு வா. உனக்கொரு வேலை…” என்று அஷ்மி சொல்லவும் என்ன ஏதேன கேட்காமல் உடனடியாக கிளம்பினான் விஷால்.
இப்போதைக்கு இந்த வீட்டிலிருந்து வெளியே சென்றாலே போதும் என்கிற அளவில் இருந்தான். யாரோ கழுத்தைப்பிடித்து நெறிப்பதை போன்ற திணறலில் இருந்து விடுபட நொடியும் தாமதியாமல் கிளம்பிவிட்டான்.
பைக் சாவியுடன் கீழே வந்தவன் பத்மினியிடம் சொல்லிக்கொண்டு செல்ல பார்க்க அவருக்கு பதட்டமாகிவிட்டது. என்னவோ ஏதோவென நினைத்து அகிலாவிற்கு அழைக்க,
“சொல்லுங்க பத்மினி…”
“இல்ல விஷால் இந்நேரம் கிளம்பி ஹாஸ்பிட்டல் வரான். அதான் எதுவும் பிரச்சனையா? ராஜாங்கம் அண்ணா நல்லா தானே இருக்காங்க?…” 
“ரொம்பவே நல்லா இருக்கார். நீங்க எதுக்கு இத்தனை டென்ஷன் ஆகறீங்க? ஒரு பிரச்சனையும் இல்லை. அஷ்மி தான் வர சொல்லி கால் பண்ணினா…” என்றதும்,
“நான் பயந்துட்டேன். அஷ்மிட்ட குடுங்க…” என சொல்ல அகிலா அவளிடம் மொபைலை நீட்டினார்.
“சொல்லுங்க ஆன்ட்டி, சாரை கிளம்பி வர சொன்னா உங்கட்ட பர்மிஷன் வாங்கிட்டு இருக்காரோ? அவனை அப்படியே போய் போர்த்தி படுக்க சொல்லுங்க…” 
“அடடா, அவன் கீழே வரப்ப நான் பார்த்து கேட்டேன். நீ வரசொன்னதா சொல்லவும் பதட்டமாகிடுச்சு. இப்ப என்னவாம்? ஆனாலும் இன்னைக்கு நீ பேசினது என் மனசுக்கு எத்தனை நிம்மதியா இருந்துச்சு தெரியுமா அஷ்மி. என்னோட ரெண்டு பிள்ளைங்க வாழ்க்கையை காப்பாத்தி குடுத்திருக்க நீ…”
விளையாட்டாய் பேசியவர் குரல் சஞ்சலத்துடனும் நன்றி உணர்ச்சி கலந்து வர அமைதியாய் கேட்டாள் இவள்.
“ஆண்டவனா பார்த்துதான் உன்னை இன்னைக்கு இங்க வரவச்சிருக்கான்னு நான் நம்பறேன். இல்லைன்னா பூரணி ஆட்டத்துல அதி அப்பாவால கூட தப்பிக்க முடிஞ்சிருக்காது….”
“ப்ச், ஆன்ட்டி.  நான் இல்லைன்னாலும் அதி இதை செஞ்சிருப்பான். அவ்வளவு தான். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடாது. அதுக்கு நாம முதல்ல கான்பிடன்டா இருக்கனும். தைரியமா இருக்கனும். ஜஸ்ட் அவ்வளோ தான்…” என அஷ்மி சொல்ல அவளின் பேச்சை கேட்டபடி பார்த்திருந்தனர் பிரசாத்தும் அகிலாவும்.
அந்த புறம் பத்மினி பேசினாலும் வீட்டு நிசப்சதில் விஷாலுக்கும் அவளின் பேச்சு கேட்கத்தான் செய்தது.
“விஷால் அங்கேயே இருந்தா இதையே நினைச்சுட்டு இருப்பான். அதான் இங்க வர சொன்னேன். ஒரு சேஞ்ச்காக…” அஷ்மி சொல்லவும்,
“அதுக்கென்னம்மா, இதோ கிளம்பிட்டான். நான் வைக்கிறேன் அஷ்மி…” என்று போனை கட் செய்துவிட்டு புன்னகையுடன் விஷாலிடம் கொடுக்க,
“அஷ்மி ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன்ல பத்மிம்மா….” விஷால் சொல்ல,
“ஹ்ம்ம் ஆமாம். நமக்குதான் குடுத்துவைக்கலை…” போறபோக்கில் பத்மினி சொல்லிவிட்டு,
“பார்த்து கவனமா போய்ட்டுவா விஷால். ஹாஸ்பிட்டல் போனதும் ஒரு கால் பண்ணிடு. மறக்காம ஹெல்மெட் போடு. உன்கிட்ட இதுதான் பிரச்னையே. போய்ட்டுவா…” என்று சொல்லி அனுப்பிவிட்டு உள்ளே வந்தார்.
பைக்கில் செல்ல செல்ல விஷாலின் மனதிற்குள் பத்மினி சொல்லிய வாக்கியம் ஊசியாய் குத்தியது. தவறு, தன்னுடைய தவறு எத்தனை பெரிய இழப்பை தந்திருக்கிறது. 
தன் அண்ணனின் திருமணம் வரை தெரியாத ஓன்று, தான் நினைக்காத கோணம். அதன் பின்னான நிகழ்வுகள். ஆனாலும் சமாதானமாகமுடியவில்லை. தவறு. இனி இப்படி நினைப்பதே தவறு என தனக்கு தானே மனனம் செய்துகொண்டு அவன் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்துவிட்டான்.
அவன் வருவதற்குள் அஷ்மியும், அகிலாவும் சென்று உண்டு வர, பிரசாத் தனியாக சென்று சாப்பிட்டு வந்திருந்தான். மூவருமாய் பேசிக்கொண்டிருக்க தூரத்திலிருந்தே இவர்களை பார்த்துவிட்டான் விஷால். 
ஹாஸ்பிட்டலின் கைபிடி சுவற்றில் சாய்ந்துகொண்டு பிரசாத் நின்றிருக்க அவனருகில் அஷ்மிதா அகிலாவுடன் தங்களின் ஊர் பற்றிய சில சுவாரசியமான நிகழ்வுகளை பேசிக்கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்தபடி வந்தவன் அருகில் நெருங்கும் முன்பு பிரசாத்தை பார்த்தான். அஷ்மியின் பேச்சை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் அவளின் கணவன். கூடவே முகத்தில் ரசனையான புன்னகை. ஒரு நொடி அசைத்துப்பார்த்தது இந்த பிம்பம். 
“ஐ டிசர்வ் இட். இந்த இழப்பிற்கு நான் தகுதியானவன் தான். இது இந்த வேதனை இந்த வலி எனக்கு தேவை தான்.” என நினைத்தான்.
இனி எதுவும் மாறுவதற்கில்லை. மாற்றான் மனைவி. நினைப்பதும் தவறு, மறந்துவிடவேண்டும். என நினைத்துக்கொண்டே வர அஷ்மி அவனை கவனித்துவிட்டாள். 
வழக்கம் போல அவனை பார்த்து ஆட்காட்டி விரலை நீட்டி வாவென முறைப்புடன் அழைக்க வெகுவாய் அந்த தருணத்தை உள்வாங்கிக்கொண்டான். உரிமையான அதட்டலான பார்வை. அதில் பரிவும் கொஞ்சமே நட்பும் இருக்க இது ஒன்றே போதும். இவள் நட்பு ஒன்றே எனக்கு போதும்.
சஞ்சலங்கள் பனியென மெல்லமாய் விலக ஆரம்பிக்க சரியான பாதைநோக்கி மனதை செலுத்த ஆரம்பித்தான். அதுவரை இருந்த மன அழுத்தம் நீங்கி புன்னகையுடன் அவர்களை சமீபித்தான். 
மூவருக்கும் ஒரு ஹாய் சொல்லியவனை பிரசாத்தின் பார்வை ஆராய அகிலா தள்ளி சென்று நின்றுகொண்டார்.
“உம்மணாமூஞ்சியா வருவன்னு பார்த்தேன். பரவாயில்லை. தேறிடுவ…” என பாராட்ட பிரசாத்தின் மனதினுள் லேசான எரிச்சல் மண்டியது. அவனும் சென்று அகிலா பக்கத்தில் அமர்ந்துகொள்ள,
“அகிலா ஆன்ட்டியை வீட்ல ட்ராப் பண்ணனும். அதுக்குத்தான் கூப்பிட்டேன். விட்டுடுவ தானே?…” அஷ்மி கேட்க,
“கண்டிப்பா, நீங்க சொல்லி நான் ஏன் மறுக்க போறேன். கண்டிப்பா செய்வோம்…” அவனும் சிரிக்க அவனிடத்தில் தென்பட்ட மாற்றத்தில் புன்னகைத்தாள் அஷ்மி.
“அஷ்மி கால் டாக்ஸி புக் பண்ணி போய்ப்பேன். எதுக்கும்மா?…” அகிலா மறுப்பாய் பார்க்க,
“மூச், ஒண்ணு நீங்க ஹஸ் கூட போங்க. இல்லைன்னா விஷால் கூட போங்க. வேற ஆப்ஷனே இல்லை…” கண்டீஷனாய் சொல்ல அகிலாவால் ஒன்றும் பேசமுடியவில்லை.
பிரசாத்தை அழைத்துக்கொண்டு சென்றால் அஷ்மி இங்கே தனியாக இருக்கவேண்டும். விஷாலுடன் செல்ல மனது ஒப்பவில்லை. ஆனால் வேறு வழி இல்லையே. 
விஷாலுமே இதை எதிர்பார்க்கவில்லை. முதலிலேயே சொல்லியிருந்தாலாவது கார் எடுத்து வந்திருப்பான். இப்போது பைக்கில் தன்னுடன் வருவாரா என்கிற சந்தேகத்துடன் விஷால் சங்கடமாய் நிற்க,
“என்ன விஷால்?…” அஷ்மியின் அழைப்பில் நிமிர்ந்தவன்,
“வந்து நான் கார்ல வரலை. பைக்ல தான். அத்தை வருவாங்களான்னு தெரியலை…” என்றதும் பிரசாத் இனியும் அமைதியாக இருக்கமுடியாது என எழுந்து வந்தான்.
“என்னோட கார் இருக்கு. அதுல போய்ட்டுவாங்க. இல்லைன்னா காரை நாளைக்கு எடுத்துட்டு வந்தா கூட போதும். இப்போ ப்ராப்ளம் சால்வ்ட்…” என்று சொல்ல தயங்காமல் வாங்கிக்கொண்டான். 
வாங்காமல் அதற்கும் தயங்கினால் அஷ்மியிடம் பேச்சு வாங்கவேண்டியிருக்குமே. அதன் பொருட்டே வாங்கிக்கொள்ள,
“ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ். ட்ரெஸ் மட்டும் மாத்திட்டு வந்திடறோம்…” என்று பிரசாத் முன்னே நடக்க,
“நானும் வந்திடறேன் ஆன்ட்டி…” என அஷ்மியும் அவனின் பின்னே சென்றாள்.
“நீங்க சாப்பிட்டீங்களா அத்தை?…” விஷாலின் கேள்விக்கு வெறும் தலையசைப்பு மட்டுமே அகிலாவிடம். 
அதற்குள் பத்மினி அழைத்துவிட அவருக்கும் விஷயத்தை விஷால் சொல்லவும் அகிலாவிடம் பேசிவிட்டு போனை வைத்தார் பத்மினி.
இங்கே அறைக்குள் நுழைந்ததும் பாத்ரூம் சென்று முகத்தை கழுவியவன் டவல் எடுத்து வராததை நினைத்தும் மீண்டும் வெளியில் வந்தான். அஷ்மிதா பின்னால் வருவதையே கண்டுகொள்ளாதவன் போல டவலையும் ஒரு ட்ராக் பேண்ட், டிஷர்ட் எடுத்துக்கொண்டு மீண்டும் பத்ரூமினுள் நுழைந்துகொள்ள அஷ்மி தன்னுடைய உடையை எடுத்துவைத்து காத்திருந்தாள்.
அவன் வரவும் இவள் சென்று ப்ரெஷ் ஆகிவிட்டு வந்து கலைந்துகிடந்த கூந்தலை அள்ளி போனிடெயில் போட்டவள் பிரசாத்தை பார்க்காமல் கதவருகில் சென்று கதவை திறந்துகொண்டே,  
“ஹஸ் வாங்க போகலாம்…” என அழைக்க திறந்த கதவை ஒரு கையால் மூடியவன் அவளை திருப்பி கதவிலேயே சாய்த்து நிறுத்த,
“ஹஸ், பேசனும்னா சொல்லவேண்டியது தானே? இப்படி ஸ்டன்ட் பண்ணனுமா என்ன?…” அசால்ட்டாய் கேட்க,
“கதவை சாத்தறது எல்லாம் உன் டிக்ஷனரில ஸ்டண்டா வெள்ளெலி?…” என புருவம் சுருக்கி கேட்டவன்,
“அகிலாம்மாக்கிட்ட என்ன சொன்ன? நான் எங்கம்மாட்ட பேசினதை பத்தி கிண்டலா பண்ணின?…” 
“கிண்டலா? நானா?. ஹஸ்?…”
“இன்னைன்னு சொல்லுவியா நீ?…” முறைப்புடன் கேட்க உண்மையில் கோபப்பட்டுவிட்டானோ என்று ஒரு நொடி நினைக்கத்தான் செய்தாள். ஆனால் அப்படி இல்லை என்று புரிந்துபோனது.
“நான் ஏன் இல்லைன்னு சொல்லபோறேன். பாடத்தான் செஞ்சேன். பாட்டையும் படிக்கத்தான் செஞ்சேன்…” என்றவளின் முகம் அவனின் முகத்தோடு நெருங்கி நிற்க அந்த ஷணம் உண்மையில் அஷ்மியால் இலகுவாக கடக்கமுடியாமல் தான் போனது. அதை கட்டிக்கொள்ளாமல்,
“ஹஸ், என்ன இது அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது?…” அவனை விலக்கி நிறுத்த பார்க்க,
“அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது நீ பாட்டை பாட்டா படிக்கலாம். நான் உன்னை படிக்க கூடாதா?…” அவன் சொல்லவும் விழிகள் விரிய ஆவேன அவனை பார்த்தாள் அஷ்மி.
அந்த நிமிடம் அவளின் பார்வை அவனை என்னவோ செய்ய தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிவிடலாமா என்று எண்ணி சொல்லவும் வாய்திரந்துவிட்டான். அதற்குள் அஷ்மி தெளிந்து,
“ஹஸ், உங்களுக்கு இப்படியெல்லாம் பேசக்கூட வருமா?…” என அதிசயித்து கேட்க,
“ஏன்? நான் என்ன குழந்தையா?…” 
“பார்ரா, உடனே நானும் இதை அக்ஸப்ட் பண்ணிட்டு என் புருஷன் குழந்தை மாதிரின்னு டயலாக் அடிப்பேனாக்கும்? போங்க ஹஸ்…” என கேலி பேச பிரசாத்தின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.
“இந்த வாய் இருக்கு பாரு, இதை…” என தன் விரல்களை கொண்டு அவளின் இதழ்களை தீண்டும் முன் அஷ்மியின் மொபைல் சப்தம் எழுப்ப பார்த்தவள் பிரசாத்திடம் காண்பித்தாள்.
“ப்ச். ஊஃப்…” என பின்னால் இரண்டெட்டு வைத்து தள்ளி நின்றவன் அவளை கதவை திறக்குமாறு கை நீட்டி காண்பித்தான்.  அவனின் முகத்தை பார்த்தவளுக்கு சுவாரஸியம் பொங்கியது.
“ஹஸ் பேஸ் லைக் லவ்லி…” என நினைத்துக்கொண்டே கதவை திறந்து முன்னாள் நடந்தாள். பிரசாத் கதவை பூட்டிக்கொண்டு பின்னால் சென்றவன்,
“நைட் பேசிடனும். என்னோட பாஸ்ட் எல்லாமே பேசிடனும். எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது.” என நினைத்துக்கொண்டான்.
நினைப்பு மட்டுமே. அதை செயல்படுத்த அஷ்மி இடம் கொடுக்கவேண்டும் அல்லவா? 
நினைவுகள் நினைவுகளாகவே தங்கிவிடும் என்பதை அவன் அந்த நொடி உணரவும் இல்லை. நினைவில்லாத பொழுதில் கூட தன்னுடைய தவறு அவளுக்கு தெரியவே கூடாது என்று தானே நினைக்கப்போவதையும்  அறியவில்லை.
காதல் கொண்ட மனம் அவளிடத்தில் சொல்லாமலே உள்ளுக்குள் புதைக்கபோவதை அறியாமல் மனம் நிறைந்த மகிழ்வுடன் அவளின் பின்னே சென்றான்.
பலரது வாழ்க்கையில் அதிர்வுகள், ஆச்சர்யங்கள் கொடுக்கும் அவன் வாடிக்கை அவனின் வாழ்க்கையில் செல்லாமல் போகபோவதை அவனே உணரவில்லை. 
சொல்லவேண்டும் என்று நினைப்பதும் அவனே. சொல்ல கூடாது என்று நினைக்கபோவதும் அவனே. எதிர்பாராத நேரத்தில் தன் வாயாலேயே சொல்லப்போவதும் அவனே.
எல்லாம் தான் நினைப்பதில் தான் உள்ளது எனும் அவனின் இறுமாப்பு பொடிபொடியாய் உதிரப்போகிறது என்பதை அறியும் போது?

Advertisement