Advertisement

தென்றல் – 1

          அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்ததத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளாய் பரப்பிக்கொண்டிருந்தன.

லேசான தூறல் தென்றலுடன் தேகத்தை தீண்ட சிலிர்த்து அடங்கினான் பிரசாத். உடலை தீண்டிய அதன் குளுமை ஏனோ அவனின் மனதை தீண்டவே இல்லை.

தன் தாய் தனத்தின் ஆசைக்காக தன் வீட்டையே பண்ணை வீடு போல சோலைவனமாய் மாற்றியிருந்தான். சுற்றிலும் பசுமை நிறைந்திருக்க அவனின் மனதில் மட்டும் அத்தனை வெம்மை.

மாடியின் கைபிடி சுவற்றை ஓங்கி தட்டியவன் மனதில் இன்னமும் அன்றைய நாளின் தாக்கம் வீறுகொண்டு நின்றது.

“ஏன்டா, ஏன்டா, ஏன்டா அன்னைக்கு அங்க போன?” என தன்னையே திட்டி தலையில் அடித்துக்கொண்டவன் யாரோ வரும் அரவத்தில் முகத்தில் அமைதியை கொண்டுவந்தான்.

அவன் திரும்பி பார்க்கும் முன் அவனின் கால்களை கட்டிகொண்டது சின்னஞ்சிறு பிஞ்சு கைகள்.

“குட்டிப்பா….” என மழலையில் மிழற்றிய அக்குரலில் கரைந்துபோனவன் புன்னகையோடு அக்குழந்தையை கைகளில் ஏந்தினான்.

“தங்கக்குட்டி சொல்லுங்க…”

“குட்டிப்பா, போவம் பா…” என அழகாய் மொழிய,

“எங்கடா தங்கக்குட்டி? எங்க போகனும்?…” அவளை பேச வைத்து ரசித்து அழகு பார்த்தவனின் மனதில் ஒருவித இதம் பரவியது குழந்தையின் ஸ்பரிசத்திலும், தன் மீது குழந்தை கொண்ட அன்பிலும் நெக்குருகியது அவனுக்கு.

“குட்டிம்மா பாக்க…”என கண்களை உருட்டி கைகளை வாசல்புறம் நீட்ட அத்தளிர் கரங்களை தன் உதடுகளால் ஒற்றியவன் முகத்தில் லேசாய் இறுக்கம் பரவ துவங்கியது.

“இன்னும் எவ்வளவு நேரம்டா இங்கயே நிப்ப? நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு வானத்தை வெறிக்க வெறிக்க பார்த்திட்டு இருக்கியே? என்ன விஷயம்?…” என கேட்டுக்கொண்டே வந்தான் உதய் பிரபாகரன்.

“ஏன் விஷயம் இருந்தா தான் மாடிக்கு வந்து வானத்தை வெறிக்கனுமா? சும்மாவும் வெறிப்போம்…” என திரும்பிக்கொள்ள,

“உன்கிட்ட பேசமுடியுமா? கீழே எல்லாரும் ரெடி. இப்போ கிளம்பினா தான் ஈவ்னிங் மண்டபத்தை ரீச் பண்ண முடியும். நீ என்னன்னா முறுக்கிக்கிட்டு நிக்கிற?…” உதயா எரிச்சலுடன் கேட்க,

“நீங்க எல்லாரும் முதல்ல போங்க. நான் வரப்ப வரேன்…”

“என்ன? வரப்பவா? என்னடா நினச்சுட்டு இருக்க?…” என உஷ்ணப்பட்டவன்,

“பிரசாத், ஆர் யூ ஓகே?…” என சஞ்சலத்துடன் கேட்டான்.

“நத்திங், எனக்கென்ன? நல்லா தான் இருக்கேன். நீ கூட கூட பேசிட்டு இருக்காம கிளம்பு. உன்னை காணோம்னு அந்த அரைக்காப்படி இங்க தேடி வருவா. என்னன்னே யோசிக்காம என்னை பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்குவா. நீ கிளம்பு….” என்றவன் கையில் இருந்த குழந்தைக்கு அழுத்தமாய் முத்தம் பதித்து,

“இந்தா தங்கக்குட்டியை கூட்டிட்டு போ…” என்று குழந்தையை கையில் கொடுக்க அவன் சொல்லியதை போல வந்துவிட்டாள் எண்ணத்தின் நாயகி.

உதய் பிரபாகரனின் நாயகி. மித்ரநந்தினி.

“உங்களுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்காங்க. இங்க வந்து இவனோட அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்க? எங்க கிளம்பிட்டு இருக்கோம்னு புரியுது தானே? நேரங்காலம் தெரியாம என்ன பேச்சு ரெண்டுபேருக்கும்?…”

நந்தினி வந்ததும் பிரசாத்தை பார்த்து முறைத்தவள் உதயாவை பிடிபிடியென பிடித்துவிட்டாள். அதை கண்டு பிரசாத் வாய்க்குள்ளேயே சிரித்தவன் உதயாவிடம், நான் சொன்னேன்ல பார்த்தியா? என்பதை போல கேலியாய் பார்க்க,

“அங்க என்னடா பார்வை?…” நந்தினி பிரசாத்தை முறைக்க,

“சரி சொல்லு, யாரை பார்க்கனும் அரைக்காப்படி?…” என்று கிண்டல் பேச அதில் அதிகபட்ச கோபத்தில் கொதித்தவள்,

“இவன்கிட்ட சொல்லிவைங்க என்னை இப்படி கூப்பிட வேண்டாம்னு. நல்ல விஷயத்துக்காக கிளம்பறப்போ என்னை மூட் அவுட் பண்ணாம இருக்க சொல்லுங்க…” என்று உதயாவிடம் பாய,

“ஏன்டா அவளை இன்னமும் சீண்டிட்டே இருக்க?…”

“இங்க பாரு பிரபா நீங்க கிளம்புங்கன்னு நான் சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் பின்னாலையே வந்துடறேன்…” பிரசாத் சொல்லல,

“நான் தான் முதல்லையே சொன்னேன்னே, இவனுக்கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாதுன்னு. பாருங்க எப்படி பேசறான்னு. தனமத்தை பாத்து பாத்து ஆசையா ஓர் பொண்ணை பேசி முடிவு பண்ணி பத்திரிக்கை அடிச்சு விடிஞ்சா கல்யாணம்னு இருப்பாங்க. இவரு நோகாம நொட்ட சொல்லிட்டு இருப்பாராம்…”

“ப்ச், நந்தினி, நான் பேசிக்கறேன் இவன்ட்ட. நீ ஏன் கோவப்படற?…” உதயா கேட்க,

“அப்பப்பா, ஒரு வார்த்தை சொல்லிடகூடாது உங்க தம்பியை. அங்க ஒருத்தி இவனுக்காக காத்திட்டு இருக்கா. இங்க ஊரே கிளம்பி பஸ் கிளம்ப ரெடியா இருக்குது. அந்த கவலை கொஞ்சமும் இல்லாம இன்னமும் தன் போக்கு தன்னிஷ்டம்னு இருக்கறான். இவன்ட்ட நீங்களும் கொஞ்சிட்டே இருங்க. ஆனா மரியாதையா கிளம்பி வர சொல்லுங்க…”

“எனக்கு தெரியும். நீ போ…” பிரசாத் இன்னமும் தெனாவெட்டாய் பேச,

“என்ன தெரியும்? ஆங் என்ன தெரியும்? உனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைனா முன்னமே சொல்லியிருக்க வேண்டியதுதான? தனம் அத்தைக்கு எல்லாமே மிச்சம் ஆகிருக்கும். அப்பவெல்லாம் தலைய ஆட்டிட்டு இப்ப வந்து மூஞ்சியை தூக்கி வச்சிட்டு நிக்க மட்டும் தெரியும்…” என்றவள்,

“நான் கீழே போய் அஞ்சு நிமிஷத்துல வந்து சேரனும் ரெண்டுபேரும்…” முடிவாய் சொல்லியவள் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட,

“கிளம்புடா பிரசாத்…” உதயா சொல்ல,

“பிரபா நீ என்னைக்குத்தான் உன் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கறத விடபோறியோ? உன்னோடு நிறுத்தாம எங்களையும் அதை செய்ய வைக்கிற பாரு…” என சிரிக்க அதை கண்டு முறைத்த உதயா,

“நான் கீழே போறேன்…” என திரும்ப,

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. இரு சேர்ந்தே போவோம். இல்லைனா அதுக்கும் வந்து என்னைத்தான் பேசுவா அந்த அரைக்காப்படி….”

“அவளை அப்படி சொன்னாலே டென்ஷன் ஆகறான்னு தெரியுது தானே? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் படர பாடு இருக்கே. முடியலை…”

“விட்ரா விட்ரா…” என்றவனின் மனநிலை இப்பொழுது கொஞ்சம் மாறி இருந்தது.

“உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா பிரசாத்?…” மீண்டும் அதே கேள்வியை உதயா கேட்க அவனை பார்த்தவனின் முகத்தில் வந்துபோன உணர்வை உதயாவால் படிக்க முடியவில்லை.

“பிரசாத்…” கேள்வியாக பார்க்க,

“கிளம்பலாம் பிரபா. இனி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. பேசவும் நான் விரும்பலை…” என்ற குரலே சொல்லியது எதுவோ இருக்கிறது என்று.

அதற்கு மேலும் கேட்டு அவனை துன்புறுத்த உதயாவிற்கு இஷ்டம் இல்லை. அமைதியாய் கீழே இறங்கினான் பிரசாத்துடன்.

“என்னம்மா சொன்னான் பிரசாத்?…” தனம் கீழே தவிப்புடன் கேட்டுகொண்டிருக்க,

“இப்ப அவரு கூட்டிட்டு வந்துடுவாரு அத்தை. எல்லாம் எடுத்து வச்சாச்சு தானே? கிளம்பிடலாம். கெளரி எங்க?…” என நந்தினி கேட்டுகொண்டிருக்க,

“இங்க இருக்கேன் அண்ணி. நாங்க எப்பவோ ரெடி…” என்று விஷ்ணுவுடன் வந்து நிற்க,

“இவளை பிடி. நான் போய் விளக்குல எண்ணெய் ஊத்திட்டு வரேன்…” என்று உள்ளே சென்றவளை பார்த்துக்கொண்டே வந்தான் பிரசாத்.

“மாடியில இந்த அரைக்காப்படி எகிறினதென்ன?  இங்க வந்து வீட்டு மனுஷங்கட்ட எனக்கு பேசவே தெரியாதுன்ற மாதிரி பூனையாட்டம் பம்முறதென்ன. அதையும் இந்த குடும்பத்து அப்பாவிங்க நம்பறதென்ன? இத சொன்னா என்னை வில்லன்னு சொல்றீங்க…” என பிரசாத் சொல்ல அவனை முறைத்தான்.

“அடங்குடா, வா…” என அவனின் தோளை தட்டி அழைத்து சென்றான்.

போனதும் சாமியை கும்பிட்டு, தன் தந்தை படத்தையும் வணங்கிவிட்டு  பெரியவர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன் விறுவிறுவென நடந்து காருக்கு சென்றான்.

வீட்டில் இரண்டு பெண்களை இருத்திவிட்டு ஊர் மக்களுடன் வீட்டின் பெரியவர்களும் சென்று ஏறிக்கொள்ள பஸ் கிளம்ப பிரசாத், உதயா, நந்தினி, கெளரி, விஷ்ணு இவர்கள் பிரசாத்தின் இன்னோவா காரில் கிளம்பினார்கள்.

வரும் வழியெல்லாம் கௌரியும், நந்தினியும் பேசிக்கொண்டே வர பிரசாத்திற்கு எதுவுமே கேட்கவில்லை. அவனின் எண்ணம் முழுவது நீக்கமற நிறைத்திருந்த நினைவுகள் அவனை சுற்றி ஒரு வேலியை எழுப்பியிருந்தது.

கார் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் குறுக்கும் நெடுக்கும் ஒட்டிக்கொண்டு வர அதை கண்டவனின் கோபம் கரையை கடந்தது.

உதயாவிடம் காரை நிறுத்த சொல்லியவன் இறங்கி சென்று ஆட்டோவை மறித்து நிற்க பிரசாத்தை பார்த்ததுமே அவர்களுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து,

“வணக்கம் அண்ணே, கல்யாணத்துக்கு கிளம்பிட்டீங்களா?…” என போதை நிறைந்த விழிகளுடன் கேட்கவும் பளாரென ஒரு அறை விட்டான் பிரசாத்.

அடி வாங்கியவன் அடுத்த வார்த்தை பேசவில்லை. பேசினால் பிரசாத்தின் கோபம் இன்னமும் அதிகமாகும் என நினைத்தவன் அமைதிகாக்க மற்ற அனைவரும் ஆட்டோவிலேயே இருந்துகொண்டனர் பயத்துடன்.

“ராஸ்கல், தொலைச்சிடுவேன் பார்த்துக்க. குடிச்சுட்டு ரோட்ல சர்கஸ் நடத்துறீங்களோ? மவனே தலைகீழா கட்டி தொங்கவிட்டுடுவேன் பார்த்துக்க. நீ சாக என் வண்டிதான் கிடைச்சதா?…” என்று இன்னும் நான்கடி சேர்த்து அடிக்க,

“மன்னிச்சிடுங்கண்ணே. பயலுக கூட போனேன்…” என்று அவன் வலியில் அலற,

“பிரசாத், போதும் விடு. நாம கிளம்புவோம். உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது?…” என உதயா அவனை பிடித்து இழுத்தான்.

“ஒழுங்கா ஊரு போய் சேருங்கடா. கொஞ்ச நேரத்துல உங்கய்யாவுக்கு கால் பண்ணுவேன். வீட்ல இருக்கனும் நீ. இல்ல, நீ இல்ல பார்த்துக்க…” என நாக்கை மடித்துக்கொண்டு அவனை மீண்டும் ஒரு அறைவிட்டு அனுப்பினான் பிரசாத்.

காரில் ஏறிய உதயா பிரசாத்திற்கு குடிக்க தண்ணீரை கொடுத்தவன் நந்தினியை திரும்பி பார்த்தான். அவளோ உதட்டை சுழித்துக்கொண்டு வேறு புறம் திரும்பினாள்.

“எவன் எப்படி போனா என்னடா? இப்ப நாம நல்ல விஷயமா போய்ட்டிருக்கோம். எதுக்கு உனக்கு இவ்வளவு கோவம் வருது?…” என பிரசாத்தை திட்டிக்கொண்டே உதயா காரை கிளப்ப,

“இந்த அடிதடி எல்லாம் ரத்தத்திலையே ஊறினது. எல்லாத்துக்கும் அடாவடி. சொன்னா மட்டும் மாறிடுமா என்ன? இந்த ஊர்ல எல்லாரும் பயப்படறாங்கள, யார் கேட்கமுடியும்னு அலட்சியம், எல்லாம் திமிர்…” நந்தினி சொல்லவும் கௌரிக்கே ஒரு மாதிரியாக போனது.

“அண்ணி, அண்ணா கோச்சுக்கும். சும்மா இருங்க…” என சொல்ல,

“ஏய் அரைக்காப்படி வாயை மூடிட்டு வா…” என பிரசாத் விரலை நீட்ட,

“என் முன்னால கையை நீட்டாத…” என்று கையில் இருந்த வாட்டர் பாட்டிலால் ஒரு போடு போட்டாள் நந்தினி. அதைகண்டு சிரித்தவன் முன்பக்கம் திரும்பிக்கொண்டான்.

கௌரிக்கு இன்றளவு இதில் வியப்பே. இதன் ரகசியம் என்னவென இன்றுவரை அவள் அறியாதது. பெரியவர்கள் முன்பு அமைதியாக போகும் இருவரும் தனியாகிவிட்டால் அத்தனை சண்டை நடக்கும்.

அதிலும் நந்தினியே அமைதியாக இருந்தாலும் அவளை சீண்டிவிட்டு வம்பு வளர்த்து பேசவைத்து சிரிக்கவும் செய்வான் பிரசாத். அதில் உதயாவோ விஷ்ணுவோ தலையிடமாட்டார்கள். ஆனால் ஒருவித பரிசுத்தமான உறவு இவர்களுக்கு மத்தியில் இருக்கிறது என்பதை சந்தோஷமாக உணர்வாள் கெளரி.

“ஹப்பா மலையிறங்கிட்டியா? இப்படியே பேசாம கண்ணை மூடி தூங்கிட்டே வா. சென்னை ரீச் ஆனதும் எழுப்பி விடறேன்…”

“தூக்கம் வரலை…” பிரசாத் ஜன்னல் புறம் பார்த்துக்கொண்டே சொல்ல,

“அங்க பாரு விஷ்ணுவை. கார்ல ஏறினதும் பின் சீட்ல போய் படுத்தவன் எப்படி தூங்கறான்னு. கார் நின்னதும் தெரியல, நடந்த கலவரமும் தெரியல, கிளம்பினதும் தெரியல. கண்ணை மூடு. உனக்கும் தானா தூக்கம் வரும்…”

“அவரை கிண்டல் பண்ணாதீங்கண்ணா. பாவம் நைட் எல்லாம் பிரசாத் அண்ணா கூட தூங்காம முழிச்சிருந்தாரு…” கெளரி வக்காலத்து வாங்க,

“யாரு இவன் என் கூட முழிச்சிருந்தானா? நீயும் நம்பிட்ட?…” என்று சிரித்துக்கொண்டே கௌரிக்கு பின்னால் பார்க்க அங்கே சீட்டில் படுத்து காலை மடக்கி மார்பில் உதயாவின் குழந்தையை உறங்கவைத்து தானும் குழந்தையாய் உறங்கியிருந்தான் விஷ்ணு.

“இப்போ எதையும் யோசிக்காத பிரசாத். அதுக்கான நேரம் முடிஞ்சிருச்சு…”

உதயா சொல்லவும் அவனையே ஒரு நிமிடம் விழியகலாமல் பார்த்தான் பிரசாத். அவனின் மனதினுள் ஏகப்பட்ட போராட்ட அலைகள்.

இவனின் வாழ்க்கையை காப்பற்றி கொடுக்க முடிந்த என்னால் என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே என நினைத்து மருகியவன் விழிகளை மூடிக்கொண்டான்.

————————————————————————

“விஷால் கேட்டரிங் ஆளுங்க எல்லாம் வந்தாச்சான்னு செக் பண்ணினியா?…” என சந்தோஷ் கேட்க,

“இப்போ தான்டா மண்டபத்தில இருந்து வரேன். அவங்க எல்லாம் மார்னிங்கே வந்துட்டாங்க. எல்லாமே பக்காவா பேசிட்டேன். செக்யூரிட்டி அரேன்ஜ்மேன்ட்ஸ் எல்லாமே க்ளீயர்…”

“குட், அர்னவ் எங்க?…”

“அவன் ப்ளவர்ஸ் டெக்ரேஷன்ல கொஞ்சம் பிஸி. ஏதோ சொதப்பிட்டானுங்க போல. அதான் திரும்ப வேற தீம் பண்ணிட்டு இருக்காங்க. அவன் டென்ஷன் ஆகிட்டான்…”

சந்தோஷும் விஷாலும் பேசிக்கொண்டே உள்ளே வர அவர்களை பார்த்த ராஜாங்கம்,

“விஷால் இந்த லிஸ்ட்ல இருக்கிற கிப்ட்ஸ் எல்லாம் ஈவ்னிங்கே அனுப்பறேன்னு சொன்னாங்க. ரிலேஷன்ஸ்,  கெஸ்ட் எல்லாம் வரதுக்குள்ள வந்துட்டா சேஃபா உள்ள வச்சிடலாம் நாம…” என சொல்ல,

“பேசிடலாம் அங்கிள், நான் இப்பவே சொல்லிடறேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் வெடிங் ஹால் போனதும் நீங்க பிஸி ஆகிடுவீங்க. ரெஸ்ட் எடுக்கவே டைம் கிடைக்காது…”

“எஸ், எஸ். கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் பீலிங் தான்…” என சிரித்தார்.

“பச்சைக்கிளி…” என்கிற குரலில் சந்தோஷை விட வேகமாய் திரும்பினான் விஷால். அஷ்மிதா இவனின் உடனடி பார்வைக்கு கடுப்பாய் பதில் பார்வை பார்த்தவள்,

“நீயா பச்சைக்கிளி? உன்னை கூப்பிட்ட மாதிரி வேகமா பார்க்கற. போய் வேலையை பாரு…” என்று முறைக்க விஷாலின் முகம் லேசாய் வாடிவிட்டது.

“நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்டா…” என்று சந்தோஷ் நகர,

“விஷால்…” ராஜாங்கத்தின் அழைப்பில் திரும்பியவன் முகத்தில் குற்றவுணர்ச்சி.

“அஷ்மி மேரேஜ் நல்லபடியா முடியனும் எனக்கு. ஐ நோ. பட்…” ராஜாங்கம் சொல்ல,

“அச்சோ அதெல்லாம் இல்லைங்க அங்கிள். அது வந்து, சும்மா. ப்ச். இதை விடுங்க. ஐ ஆம் ஆல்ரைட். இப்ப நான் இந்த கிப்ட்ஸ் எப்ப வரும் என்னனு கேட்டுட்டு வீட்டுக்கு கிளம்பறேன். பத்மிம்மா வர சொல்லியிருந்தாங்க…” என்றவன் ஒரு தலையசைப்புடன் விடைபெற செல்லும் அவனையே பார்த்து நின்றார் ராஜாங்கம்.

“சொல்லுங்க கல்யாணப்பொண்ணே…” என அஷ்மிதாவின் அருகில் வர,

“நீ என்னை கல்யாணப்பொண்ணேன்னு என்னை கூப்பிடாட்டிலும் நான் கல்யாணப்பொண்ணுதான். யாரும் இல்லைன்னு சொல்ல போறாங்களா? சும்மாசும்மா அதையே சொல்லிட்டு திரியற? என்ன?…” என மிரட்ட,

“தப்புத்தானுங்க. இப்ப சொல்லுங்க. எதுக்கு கூப்பிட்டீங்க?…” என சரண்டர் ஆக,

“ஹ்ம்ம், அது. உன் மொபைலுக்கு வாட்ஸாப் நம்பர் அனுப்பியிருக்கேன். என்னோட ப்ரெண்ட் அவங்க. சென்னைக்கு புதுசு. நீ ரிஸீவ் பண்ணிடேன்…”

“அவ்வளவு தானே பண்ணிடலாம்…” என்று தன் மொபைலை பார்த்துக்கொண்டே அவனும் கிளம்பிவிட்டான்.

“டாக்டர் பாப்பாவை கைல வச்சிட்டு மருதாணி வைக்கிறது கஷ்டம். என்கிட்டே குடுங்க அவளை…” என துவாரகா கேட்க,

“அவ தான் தூங்கிட்டாள. இதுல என்ன கஷ்டம்? வா நீயும் வந்து மெஹெந்தி போட்டுக்கோ…” என துவாரகாவையும் இழுத்து தனக்கருகில் அமர்த்திகொண்டாள் அஷ்மி.

அதிரூபனும், துவாரகாவும், அகிலாவுடன் ராஜாங்கம் வீட்டிற்கு ஒரு வாரம் முன்னமே வந்துவிட்டனர். திருமண வேலைகள் இருக்க ராஜாங்கத்தை முடிந்தளவிற்கு எந்த வேலையிலும் நுழைய முடியாத படி அனைத்தையும் தன் தோளில் போட்டுக்கொண்டான் அதிரூபன்.

இதனால் ராஜாங்கத்தின் கவலை மொத்தமாய் குறைந்தது. அவரின் கவலை எல்லாம் அஷ்மிதாவை வைத்தே. இன்னமும் மாப்பிள்ளையை பார்க்கவும் இல்லை, அவர்களை பற்றி அறிந்துகொள்ளவும் இல்லை.

திருமணத்திற்கு சம்மதம் சொல்லிய பிறகு அதை பற்றி சொல்ல முயன்ற போது காதுகொடுத்து கேட்காதவள் எப்போது என்ன செய்வாளோ என்கிற கவலை மட்டுமே அவருக்கு.

அஷ்மிதாவின் ஒரு கையில் மெஹெந்தியை நிரப்பிக்கொண்டிருக்க அவர்களுக்கு அருகில் வந்த அகிலா குழந்தையை தூக்கிகொண்டார்.

“ஆன்ட்டி,..” என அஷ்மி பார்க்க,

“நீ இந்த வேலையை முடி. குழந்தை நல்லா தூங்கினா தான் நைட் ப்ரெஷா இருப்பா…” என்று கண்டிப்பாக சொல்ல துவாரகா சிரித்துவிட்டாள். அவளை முறைத்தவள்,

“அதி எங்க?…” என,

“மாமா மண்டபத்துல தான் இருக்காங்க டாக்டர். இன்னும் வரலை. லன்ச் சாப்பிட வருவாங்கன்னு நினைக்கேன்…”

“ரொம்ப கவலைப்படாத. அங்க அவன் நல்லாவே கொட்டிப்பான்….”

“மாமாவை சொல்லலைனா உங்களுக்கு தூக்கம் வராது போங்க…” என சிணுங்கிய துவாரகா அஷ்மிதாவை ஆழ்ந்து பார்க்க,

“என்ன முயல்க்குட்டி உன் ஆள் இல்லைன்னதும் என்னை சைட் அடிக்கிறியா?…” என கேட்டு கண்ணடிக்க,

“அய்ய, அதுக்கில்லை டாக்டர்…” என்றவள் அஷ்மிதாவின் காதினருகே குனிந்து கிசுகிசுப்பான குரலில்,

“நீங்க தான நிறைய ஸ்டன்ட் பண்ணி அட்டகாசமா கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னீங்க? இப்ப எல்லாமே புஸ்ஸா போய்டுச்சே. அதான் பீல் பன்றீங்களான்னு பார்த்தேன்…”  என யாரும் கேட்காதவண்ணம் சொல்ல,

“விடு முயல்க்குட்டி உன் ஆசையை நிறைவேத்திடலாம்…” என திரும்பவும் அஷ்மி கண்ணடிக்க,

“நானா? நான் எப்ப ஆசைப்பட்டேன்? என்ன ஆசைப்பட்டேன்? ஒண்ணுமில்லையே…” என பதற,

“இதோ இப்பத்தான கேட்ட, புஸ்ஸாகிடுச்சுன்னு. உனக்காக உன் மாமா மட்டுமில்லை, நான் கூட எதுவும் செய்வேன் முயல்க்குட்டி. விடு நைட் பார்த்துக்கலாம்…” என சாதாரணமாக அஷ்மி சொல்ல துவாரகாவின் முகமே பேயறைந்ததை போல ஆனது.

“டாக்டர்…” என அதிர்வாய் பார்க்க அஷ்மிதாவிற்கு சிரிப்பு பொங்கியது.

வேலைகள் துரிதமாய் நடக்க மதிய நேரம் நெருங்க ஆரம்பிக்க அங்கே ரத்தினசாமி வீட்டிலோ பத்மினி கவலையாய் இருந்தார் அவரின் முன்பு.

“சொல்றதை கேளுங்க. அதி வேற போன் பண்ணி கிளம்பியாச்சானு கேட்கறான்…”

“யார் சொன்னாலும் சரி, நான் அந்த அதிகபிரசங்கி கல்யாணத்துக்கு வரமாட்டேன். வரமாட்டேன். உங்களுக்கு வேணும்னா நீங்க போய்க்கோங்க. என்னை கூப்பிடாதே…”

கிளம்பவே மாட்டேன் என்று ரத்தினசாமி பிடிவாதமாய் அமர்ந்திருந்தார் அவரின் வீட்டில்.

Advertisement