🔥தீயாய் நீ தென்றலாய் நான் 💝

தென்றல் – 01

“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட விருப்பமே இல்லனு எத்தனை முறை தான் சொல்லுவேன்” என ஷான்வியின் குரல் அந்த வீடு முழுக்க எதிரொலித்தது.

“உன்னோட சம்மதத்த இங்க யாரும் கேட்கல. உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாலும் அந்த தம்பி தான் இந்த வீட்டு மாப்ள” என ஷான்வியின் சித்தி வனிதா தீர்மானமாக சொல்லிக் கொண்டிருக்க.

“வனிதா கொஞ்சம் யோசிச்சு பாரு. எம் பொண்ண ஏன் இப்படி கஷ்டப்படுத்தற” என கௌதம் கண்கலங்கி கேட்க.

அக்னிவ் விழிகளில் அனல் பறக்க ஷான்வியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னுமா நீ உன்னோட முயற்சிய கைவிடல.   இதுக்கு மேல உனக்கு வேற எந்த வழியும் இல்லைடீ என் ஆங்கிரி பேர்ட்.

“அத நீ சொல்லாத. என்னோட முடிவுகளை எடுக்கறதுக்கு நீ யாரு? முதல்ல என் கண்ணு முன்னாடி நிக்காத அக்னிவ். மரியாதையா வெளியில போயிடு” என தன் சக்திக்கு மீறி சத்தமாக பெரும் குரலோடு  சொன்னாள்.

“பாருடா. என்னோட பேரு கூட தெரிஞ்சு இருக்கே. உன்னோட முடிவுகளை எடுக்கிற உரிமை உனக்கு கிடையாதுன்னு முதல்ல புரிஞ்சுக்கோ ஷான்” என அக்னிவ் நிதானமாக சொல்ல.

“உன்னோட குரலை கேட்க கேட்க எனக்கு ஆத்திரமும் வெறியும் தான் அதிகமாகுது.  அப்பா தயவு செய்து இந்த ஆள வெளில போக சொல்லுங்க” எனக் கத்தினாள்.

“என்ன அத்தமா பணத்தை மட்டும் வாங்கிட்டு இப்படி வாயே பேசாம நின்னா எப்படி? என் கோபத்தைக் கிளப்பாம உங்க பொண்ணு வந்து மணவரைல உட்கார சொல்லுங்க” என வனிதாவைப் பார்த்து சொல்ல.

“நான் மேஜர். என்னைய யாரும் கட்டாயப்படுத்த முடியாது. போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன். மரியாதையா வெளியே போடா”  என வார்த்தையில் மட்டுமே தனது பலத்தை காட்டினாள்.

“நீ சொன்ன உடனே விட்டுட்டு போறதுக்கு தான் இத்தனை நாளும் உன்னை சுத்தி சுத்தி வந்து கஷ்டப்பட்டு காதலிச்சேனா?”

“நானா உன்னைய என் பின்னாடி சுத்த சொன்னேன்.  உன் திமிருக்கு நான் பலிகடா ஆக முடியாது” என சீறினாள்.

“உன்னோட வெட்டி பேச்ச கேக்குறதுக்கு எல்லாம் நேரம் இல்ல ஷான். முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு. மரியாதையா வந்து உட்கார போறியா? இல்லையா?” என கண்கள் சிவக்க வார்த்தைகள் தடிக்க அவளது கரங்களை பற்றி  இழுத்தான்.

“அம்மாடி ஷான்வி நம்மோட சூழ்நிலை வழி தெரியாம சிக்கிட்டோம். வேற வழியே இல்லம்மா தயவுசெய்து” என கௌதம் அதற்கு மேல் பேச முடியாமல் தயங்க.

“அப்பா உங்க வாயிலிருந்து இந்த வார்த்தையை நான் எதிர்பார்க்கல. அவங்க தான் எனக்கு சித்தி. அவங்க அப்படித்தான் தெரியும். ஆனா நீங்க எப்படிப்பா?” என விழிகளில் கண்ணீர் வழிய கைகைளை அவனிடமிருந்து விடுவிக்க முயற்சி செய்தாள்.

இத்தனை நாளும் தனது அன்னையை இழந்த சித்தியின் கொடுமைக்கு ஆளாகி கூண்டுக்கிளியாய் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தவள் ஷான்வி.

தனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும் என காத்திருந்தவள் தான். பணத்திற்காக இவளை அக்னிக்கு திருமணம் செய்து வைக்க துணிந்தவள் அவனுடைய சித்தி வனிதா.

அவளது தந்தையும் எதையும் தடுக்க வழியின்றி வனிதாவை எதிர்த்து பேசவும் முடியாமல் ஒரு கைப்பாவையாய் நின்று இருந்தார்.

சிற்றெறும்புக்கு கூட துன்பம் நினைக்காத மென்மையான பூவை ஷான்வி. அவளது வாழ்க்கை மொத்தமும் இதுவரை முட்கள் நிறைந்த பாதையாகத்தான் இருந்தது. அவளுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை என பலமுறை கடவுளிடம் சண்டை ஏற்று மன்றாடி இருக்கிறாள்.

இதுவரை வாழ்க்கையில் பட்ட துன்பம் போதாது என புதிதாக அக்னிவ் வடிவில் தனது வாழ்க்கையை புரட்டிப் போடும் புயலாக வந்திருக்கிறான். அவள் சற்றும் எதிர்பாராமல் அவள் வாழ்வில் வந்த புயல் அக்னிவ் தான்.

அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் இவன் ஷான்விக்காக அனைத்தையும் விட்டுவிட்டு ஆறு மாதமாக காதல் என்ற பெயரில் இவளை சுற்றி பட்டாம்பூச்சியாய் வலம் வந்து கொண்டிருந்தான்.

மனதளவிலும் அவனது காதலை ஏற்காதவள் ஷான்வி. அவள் மட்டுமே தனது வாழ்க்கை என்று மனதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவன் அக்னிவ். இவர்களுக்கான திருமணம் போராட்டம் தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

பணம் மட்டுமே வாழ்க்கை என இருக்கும் வனிதாவிற்கு அன்பே உருவான ஒரே ஒரு செல்வ மகள் சம்யுக்தா.  கௌதமை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டவர் வனிதா. முதல் மனைவிக்கு பிறந்தவள் தான் ஷான்வி. சம்யுக்தா ஷான்வி மேல் உயிரையே வைத்திருந்தாள்.  இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிள்ளை போலவே இணைபிரியாமல் இருந்தனர்.

வனிதாவின் பேராசையின் விளைவால் இப்பொழுது ஷான்வி திருமணம் வரை வந்து நின்று போராடிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் ஷான்வியால் ஒரு விரலை கூட அவனிடமிருந்து எடுக்க முடியவில்லை. அத்தனை அழுத்தமாக அவளது கரங்களைப் பிடிந்திருந்தான். கைகள் வலிக்கத்தான் செய்தது.

“உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன். தயவு செய்து என் வாழ்க்கையில விளையாடாதீங்க. விலகிப் போயிடுங்க” என மன்றாடினாள்.

“நீ தான் என்னோட வாழ்க்கையேனு நான் நினைக்கிறேன். அதை ஏன் ஷான் புரிஞ்சுக்காம என்னைய விட்டுப் போகணும்னு நினைக்கிற. உனக்காக என்னோட வெளிநாட்டு வேலையை கூட விட்டுட்டு வந்து இருக்கேன்.”

“நான் உன்னை வேலையை விட்டுட்டு வர சொல்லல. முதல்ல என் கையை விடுடா. நீ எவ்வளவு மோசமானவன்னு இங்க இருக்கவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா இந்த இடத்திலயே நீ நிக்க முடியாது.”

“என்ன பத்தி உனக்கு என்ன தெரியும். சும்மா கதை விடாம வந்துடு ஷான்.”

“இத்தனை பேர் இருக்க சபையில வச்சி அதை சொன்னா உன்னோட மான மரியாதை போயிடும். ஆம்பளையாச்சேனே பாக்குறேன். மரியாதையா கையை விடு” எனக் கைகளை முடிந்த வரை விடுவிக்க முயற்சி செய்தாள்.

“எதையாவது பழி சொல்லி தப்பிக்கணும்னு முயற்சி பண்ணாத ஷான்வி. நேரம் கடந்து கிட்டே இருக்கு. மரியாதையே வந்து உட்காரு.”

“பழி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல. உன்னோட கேரக்டர் ரொம்ப மோசம்னு என்னால நிரூபிக்க முடியும். இதுக்கு மேல ஏதாவது வெளிப்படையா சொல்லணும்னு நினைக்கிறாயா?” என் அவனது முகத்தை குரூரமாகப் பார்த்தாள்.

“நீ சொல்ற கதை எல்லாம் கேட்க நேரமில்லை “என அவளை இழுத்து வலுக் கட்டாயமாக  அமர வைத்தான்.

“உன் கையால என் கழுத்துல தாலி ஏறுச்சு அப்படின்னா அடுத்த நிமிஷமே என்னோட உயிர் உடம்புல இருக்காது” என விழிகளில் கண்ணீர் வழிய சொன்னாள்.

“இந்த டயலாக் எல்லாம் கேட்க இப்போ நேரம் இல்ல. அது அப்புறமா பார்த்துக்கலாம். ஐயரே நீங்க மந்திரத்தை சொல்லுங்க” என அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

‘இவன் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டான் போலயே. அவன் நல்லவனோ, கெட்டவனோ தெரியாது . ஆனா அவனோட வாழ்க்கையில விளையாட நான் தயாரா இல்ல. கல்யாணம் செஞ்சுக்க நான் தகுதியில்லாதவனு எப்படி புரிய வைக்கப் போறேன். ரெண்டு வருஷமா வர அத்தனை மாப்பிள்ளையும் வேண்டாம்னு ஒதுக்கினேன். கல்யாணமே இனிமே என் வாழ்க்கையில கிடையாது அப்படின்னு உறுதியா இருக்கேன். என்னோட வாழ்க்கையில நடந்த அந்த கசம்பான சம்பவத்தை யார்கிட்டயும் சொல்லவும் முடியாம தவிக்கிறேன். ஏற்கனவே என் வாழ்க்கையில நடந்த சம்பவத்திற்கே விடை தெரியாம இப்ப வரைக்கும் துடிச்சு போய் நிக்கிறேன். கடவுளே! என் வாழ்க்கையில ஏன் இப்படி விளையாடுற’ என மனதில் நினைத்துக் கொள்ள. கண்களில் கண்ணீர் ஊற்றாய் பொங்கியது.

“அடுத்து என்ன பொய் சொல்லலாம்னு பிளான் போடுறியா ஷான்வி” என அக்னிவ் அவளை முறைத்துப் பார்த்தான்.

“உங்களுக்கெல்லாம் உங்க பின்னாடியே சுத்தி சுத்தி வந்த உண்மைய காதலிச்சா அவனோட அன்ப புரிஞ்சுக்க தெரியாது. எவன் நாலு நாள் பழகிட்டு ஏமாத்திட்டு போறானோ அவனை தாண்டி நம்புவீங்க. என்ன மாதிரி உண்மையா காதலிக்கிறவன எந்த பொண்ணுமே நம்ப மாட்டீங்க. ஏண்டி இப்படி இருக்கீங்க. இந்த உலகமே இப்படித்தான் இருக்கு. நல்ல விஷயம் நடக்கும் போது கண்ணீர் விடாம சந்தோஷமா இரு ஷான்வி” என்றான்.

“நீ செய்யற இந்த கேவலமான காரியத்துக்கு சந்தோசப்பட சொல்றியா? நான் ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்றேன். கல்யாணம் பண்ற தகுதி எனக்கு இல்ல. தயவு செய்து என்னை விட்டுடுங்க” என்றாள்.

“ஷான்வி உனக்கு தகுதி இருக்கா? இல்லையா? இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம். நீ எனக்கு வேணும். அவ்வளவுதான். ஐயரே அங்க என்ன முழிக்கிறீங்க. சீக்கிரம் மந்திரத்தை சொல்லுங்க” என்றான்.

ஒரு கைகளில் ஷான்வியை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

“உங்க கண்ணு முன்னாடி இத்தனை அக்கிரமம் நடக்குது. ஒரு வார்த்தை சொல்லாம வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்களேப்பா. என்ன காப்பாத்துங்க” என கண்ணீர் சிந்தினாள்.

கௌதமை வனிதா பேசவிடாமல் தானே பேசினாள். “சும்மா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாத ஷான்வி. உங்க அம்மா செத்ததுக்கு அப்புறம் உன்னை கஷ்டப்பட்டு வளர்த்தேன். அந்த நன்றி கடனுக்காக இது கூட செய்ய மாட்டியா? ரெண்டு வருஷமா வர அத்தனை மாப்பிள்ளையும் வேண்டாம்னு சொன்ன. என்ன காரணம்னு கூட எங்களுக்கு தெரியாது. இப்ப வரை நீ சொல்லவும் மாட்டேங்கிற. இதோ இந்த தம்பி ரொம்ப நல்லவரு. இருபது லட்ச ரூபா கடனையும் அவரே ஏத்துக்கிட்டு பணத்தையும் கொடுத்தார். நம்ம கடனை அடைக்கணும்னு அவங்களுக்கு என்ன தலையெழுத்தா? இவ்வளவு நல்ல புள்ளைய வேணான்னு சொல்றியே. உனக்கு அறிவு கெட்ட போச்சா?” என் சினம் பொங்க இதுவரை மனதிற்குள் அடக்கி வைத்திருந்த கேள்விகளை எல்லாம் வனிதா கேட்டார்.

“கேவலம் இருபது லட்ச ரூபா பணத்துக்காக என்ன விலை பேசுறீங்களே. இதுவே உங்க பொண்ணா இருந்தா இப்படி செய்வீங்களா?” என ஷான்வி கேட்க.

“தேவையில்லாத வார்த்தை எல்லாம் பேசாதடி. அந்த தம்பி தான் உனக்கு புருஷன். கல்யாணத்தை முடிச்சிட்டு மாமியார் வீட்டுக்கு போய் சேர வழியை பாரு என் பொண்ண பத்தி பேசுற தகுதி எல்லாம் உனக்கில்ல” என்று சொல்ல.

கௌதம் அங்கு ஒரு தந்தையாக எதுவும் பேச முடியாமல் சூழ்நிலை கைதியாக கண்ணீரோடு நின்றார்.

ஐயர் மந்திரங்களை ஓத சம்பிரதாயங்கள் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்க. ஷான்வி எப்படி இதற்கு மேலும் கல்யாணத்தை நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

‘ஊரார் நாலு பேர் இருந்தா பரவால்ல. யாரையும் கூப்பிடாம இப்படி கோவில்ல வச்சு ரகசியமாக கல்யாணம் பண்ணும் போது யாரை உதவிக்கு அழைப்பது. இப்ப நான் என்ன பண்ண போறேன்’ என விடை தெரியாமல் அவசரமாக மூளையை சிந்திக்க சொல்லி தட்டி விட்டாள்.

அவளால் எந்த முடிவுகளையும் எடுக்க முடியவில்லை. நேரம் தான் கடந்து கொண்டிருந்தது.

“அக்னிவ் நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க. தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க. நான் உங்களுக்கு ஏத்த பொண்ணு இல்ல. இந்த இடத்துல நான் அதை சொல்லவும் முடியாது. திருமண வாழ்க்கைக்கு ஏற்றவ நான் இல்ல‌ தயவு செய்து என்னை விட்டுடுங்க. சொல்ல முடியாத ஒரு களங்கம் என்னோட வாழ்க்கையில இருக்கு. புரிஞ்சுக்கோங்க” என்று மன்றாடினாள்.

“ஸாரி டியர். எதையும் புரிஞ்சிக்கிற நிலைமையில நான் இல்ல. என்னவா இருந்தாலும் நீ எனக்கு வேணும். நான் உன்னை தொடக் கூட மாட்டேன். பொண்டாட்டியா என் கூட நீ இருந்தாலே போதும். உன்ன பார்த்துக்கிட்டே காலத்தை ஓட்டிடுவேன். ஷான்வி இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. நீ கண்ணீரை துடைச்சுகிட்டு சமத்தா சந்தோசமா சிரிச்ச முகத்தோடு உட்காரு. அது போதும்” என்றான்.

“அப்பா உங்க மனசு கொஞ்சம் கூட இறங்கலையா? இதுக்கு நீங்க என்னை கொன்னே போட்டு இருக்கலாமே அப்பா” எனத் தவிப்போடு கௌதமின் முகத்தை பார்க்க.

“தயவுசெய்து என்னை மன்னிச்சிடும்மா. உன் சித்தியோடு கொடுமைல ஒவ்வொரு நாளும் சித்திரவதை படுவதை விட அந்த தம்பி கூட போய் உன்னோட வாழ்க்கைய சந்தோஷமா வாழப்பாரம்மா. இதுதான் நல்ல முடிவுனு எனக்கும் தோணுது” என கண்ணீருடன் சொல்ல.

கெட்டி மேளம் கெட்டிமேளம் என்ற ஒரு குரல் யாருமே இல்லாத கோவிலில் கல்யாணம். இதுல எங்க இருந்து கெட்டி மேளம் கொட்டுறது. அதெல்லாம் எதுவும் கிடையாது. தாலியை கொடுங்க ஐயரே” என்றான் அக்னிவ்.

ஐயர் மந்திரம் ஓத தாலி எடுத்துக் கொடுக்க. சித்தி வனிதா அமர்ந்த வண்ணம் ஷான்வியின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள. அக்னிவ் ஷான்வியின் கழுத்தில் கதற கதற மங்கள நாண் சூட்டினான்.

அவளது கழுத்தில் மஞ்சள் கயிறு புது தாலி பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது. அவளது கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றுப் பிரவாகம் எடுத்தது.

தன்னோட வாழ்க்கையில எது நடக்க கூடாதுன்னு நினைத்தாளோ அது நடந்துருச்சு. ‘கலங்கப்பட்ட நான் எப்படி இவருக்கு தகுதியானவளா இருக்க முடியும். இவருடைய வாழ்க்கையில நான் எப்படி மனைவியா காலமெல்லாம் வாழ முடியும்’ என கண்ணீருடன் அதே இடத்தில் மயங்கி சரிந்தாள்.

தீயாய் தொடரும்…