Advertisement

அவர்களின் திகில் பார்வையில்  தன் முகத்தை சுற்றியிருந்த மப்ளரை கழட்டிய அந்த புதியவனின் முகத்தை நன்றாக பார்த்தவர்கள், “சின்ன மாமா..” என்று ஒரு சேர  கூவினார்கள். விஸ்வஜித்தின் வீட்டில் இருந்த அவனின் குடும்ப போட்டாவில் இந்திரஜித்தை பார்த்திருந்தனர்.
“ஹாங்.. சின்ன மாமாவா..?  யார்றா இந்த குரங்குகளோட பாவப்பட்ட சின்ன மாமன்..!!!!” என்று இந்திரஜித் சுற்றும் முற்றும் தேடி கொண்டிருக்கும் போது, “இங்க என்ன சத்தம்..?” என்றபடி அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்கள் அரசு, விஷ்வஜித், தர்ஷினி  என எல்லாரும் வெளியே வந்துவிட்டனர். 
“இந்த நேரத்துல இங்க என்ன சத்தம் போட்டுட்டு இருக்கீங்க..?” என்று மூவரையும் பார்த்து கோவமாக அதட்டிய விஷ்வஜித், பக்கத்தில் இருந்த  தன் தம்பியை அடையாளம் கண்டு கொண்டவன், 
“ஜித்து..” என்று தாவி அணைத்து கொள்ள, இந்திரஜித்தும் அண்ணனை மகிழ்ச்சியுடன் அணைத்து கொண்டான். அரசு  மற்றவர்களை சமாதானம் செய்து அனுப்பியவர், “வாங்க தம்பி.. வீட்டுக்கு போலாம்..” என்று இந்திரஜித்தை அழைத்து கொண்டு எல்லோரும் தர்ஷினியின் வீட்டிற்கு வந்தனர். 
மூவரும் மூலையில் பாவமாக நிற்க, மற்றவர்கள்  இந்திரஜித்தை அமரவைத்து நலம் விசாரித்து கொண்டிருந்தனர். “எப்போ  வந்த ஜித்து..? வர்றேனு சொல்லியிருந்தா நானே உன்னை பிக் அப் செய்ய ஏர்போர்ட் வந்திருப்பேன் இல்லை..” என்று விஷ்வஜித் கேட்க, 
“நைட் தான் வந்தேன், உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லலை..” என்றவன்,  “கடைசில நான் தான் அந்த பாவப்பட்ட சின்ன மாமானா..?” என்று மூலையில் நின்றிருந்த மூவரையும்  ஆராய்ச்சியாக பார்த்தவனின் பார்வை முகம் சிவக்க சங்கடத்துடன்  நின்றிருந்த தீக்ஷியின் மேல்  அதிகமாக படிந்து மீண்டது. 
“சாரி மாமா.. சும்மா விளையாட்டுக்கு தான் இப்படி..” என்று இந்திரஜித்தின் பார்வையில்  மனோஜ்  சொன்னான்.
“மனோ.. இந்த டைம்ல இது என்ன விளையாட்டு..?” என்று விஷ்வஜித் கோவமாக கேட்டான். 
“இல்லை மாமா, அக்காக்கு பர்த்டே விஷ் செய்யத்தான் வந்தோம், ஆனா இந்த பிசாசுங்க என்னை பயமுறுத்த பிளான் செஞ்சு ஒளிச்சிகிட்டாங்களா, அதான் நான் அவங்களை பயமுறுத்த பிளான் செஞ்சு, கன்னை வெடிக்க வச்சேன், அதுக்கு போய் இந்த ராட்சஸி கத்தி ஊரையே கூட்டிட்டா..” என்று மனோஜ் விளக்கம் கொடுத்தான்.  
“டேய் உலகஉருண்டை.. கன்னை வெடிக்க வச்சி, எங்களை பயமுறுத்தனதும் இல்லாம, எங்களையே ராட்சஸிங்கன்னு வேற  சொல்றியா..?” என்று அதிதி கோவமாக சண்டையிட, தீக்ஷி தங்களின் சிறு பிள்ளை தனத்தில் தலை நிமிர முடியாமல்  நின்றிருந்தாள். 
“மனோஜ்.. நீ செஞ்சதும் தப்பு, அவங்க செஞ்சதும் தப்பு, இனி இது போலெல்லாம் செய்யாதீங்க..” என்ற அரசு, “சரி எங்க தர்ஷினியோட பார்த்டே கேக்..? எடுத்துட்டு வாங்க, டைம் ஆச்சு  இல்லை..” என, அடுத்து சில நிமிடங்கள், இவர்களின் விருப்பப்படி, தர்ஷினி கேக்கை வெட்ட, மூவரும் தங்களின் கிப்டை அவளிடம் கொடுத்தனர். 
“சரி.. டைம் ஆச்சு, வாங்க நாம தூங்க போலாம், தர்ஷினி நீயும் போய் தூங்கு, தம்பி நாளைக்கு நம்ம வீட்ல தான் சாப்பாடு..” என்று இந்திரஜித்தை வீட்டுக்கு அழைத்த அரசு, எல்லோருடனும் வீட்டிற்கு கிளம்பினார். 
“நல்ல வேளை ராணிம்மா முழிக்கல, இல்லை நாம காலி..”  என்ற அதிதி தூங்க ஆயத்தமாக, அதை ஆமோதித்த தீக்ஷிக்கு இந்திரஜித்தின் ஆராய்ச்சி பார்வை மனக்கண் முன் வந்து சென்றது. 
“ச்சே..  இந்த அதி பேச்சை கேட்டு அசிங்கப்பட்டாச்சு, எப்படியும் என்னை பத்தி ரொம்ப கேவலமா தான் நினைச்சிருப்பார், பின்ன அந்த கத்து இல்லை கத்தியிருக்கேன்..”  என்று இந்திரஜித்தை  நினைத்தபடியே தூங்கி போனாள். 
மறுநாள் காலை இந்திரஜித்துடன், விஷ்வஜித், தர்ஷினி மூவரும் அரசுவின் வீட்டிற்கு வந்தனர். ராணி.. இந்திரஜித்தை பாசமாக வரவேற்று நலம் விசாரித்தவர், காலை உணவு பரிமாற, தீக்ஷி  இந்திரஜித்தின் முகம் பார்க்க சங்கடம் கொண்டு, தன் ரூமிலே இருந்துவிட்டாள். மனோஜ் விஷ்வஜித்துடன் சகஜமாக பழகுவது போல் இந்திரஜித்துடனும் இயல்பாக  பேச ஆரம்பித்துவிட்டான். 
“வாங்க சின்ன மாப்பிள்ளை..”  என்று  இந்திரஜித்தை ஆரவாரமாக வரவேற்றபடி ராமலிங்கம்  மனைவியுடன் அரசுவின் வீட்டிற்கு வர, விஷ்வஜித் எப்போதும் போல் அவரை கண்டும் காணாமல் இருந்து கொண்டான். இந்திரஜித் அவரின் வரவேற்பிற்கு பதிலளித்தவன், அவர் தொடர்ந்து பேச, இரண்டொரு வார்த்தைகளில் முடித்து கொண்டவன், 
“மனோ.. உங்க கார்டன் பார்க்க போலாமா..? வா விஷூ..”  என்று அண்ணனுடன், மனோஜ் உடன் வர தோட்டத்திற்கு வந்துவிட்டான். மூவரும் சிறிது நேரம் கார்டனை சுற்றி வர, மனோஜ் போரடித்து வீட்டினுள் வந்துவிட்டான். 
“விஷூ.. உன் மாமனார் நீ சொன்னதை விட மோசம் தான், அவர் கேட்கிற கேள்வி எல்லாம் பாரேன்,  என்ன பிசினஸ், எவ்வளவு வருமானம், எங்க சொத்து, இப்படித்தான் இருக்கு..” என்று வெறுப்பாக சொன்னான். 
“ம்ம்.. அவரோட உடல், பொருள், ஆவி எல்லாம் பணம் தான் ஜித்து, என்ன செய்ய..? தர்ஷிக்காக அந்த ஆளை பொறுத்துக்க வேண்டியதா இருக்கு..” என்றான் விஷ்வஜித்தும் அளவில்லா வெறுப்புடன். 
“இந்த மாதிரி ஒரு ஆளுக்கு, எப்படிடா அரசு மாமா மாதிரி ஒரு ப்ரண்ட், இவரை எல்லாம் அவர் பிரண்டா நினைக்கிறது,  விஷ மிருங்கங்களை  கூட வச்சி வளர்க்கிறதுக்கு சமம், என்னைக்கு இருந்தாலும் அதுங்களோட விஷத்தை கக்காம விடாது..”, என்றவன், 
“அரசு மாமாக்கு அவர் மேல சந்தேகமே வராதா விஷூ..? அவரை பார்த்தாலே தெரியுது பணப்பிசாசுன்னு”, என்று கேட்டான். 
“ஜித்து..  நீ ஒருத்தரை சந்தேகப்பட்டா தான் அவங்களோட நல்லது கெட்டதை ஆராய்வ, அரசு மாமா அவரை இதுவரை அந்த மாதிரி ஒரு பெர்சன்ட் கூட பார்த்திருக்க மாட்டார், அவர் அந்த லிங்கத்தை  ஒரு ப்ரண்டா மட்டுமில்லாம உடன் பிறப்பாவும் பார்க்கிறார். அவரை பொறுத்தவரை ராமலிங்கம் அவரோட ப்ரண்ட்..”, 
“நட்புல..  ஆராய்ச்சி, சந்தேகம், எதிர்பார்ப்பு.. இப்படி எதுவுமே  கிடையாது, அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் தான் அரசு மாமா, நட்புல எப்படி இருக்க கூடாதென்று வொர்ஸ்ட் எக்ஸாம்பிள் இந்த லிங்கம்..”, 
“ஆனா இதுல ராணி அத்தை அப்படி கிடையாது, அவங்களுக்கு எல்லாம் ஓரளவுக்கு தெரியும், அவங்களோட பயத்துல தான் லிங்கம் கொஞ்சம் அடக்கி வாசிப்பார், இல்லாட்டி இந்த மனுஷன் இன்னும் ஆடுவார்..” என்று விஷ்வஜித் சொன்னான்.  
“ஓஹ்.. ராணி அத்தைக்கு இந்த லிங்கத்தை பத்தி தெரியுமா..? அப்பறம் ஏன் அவங்க இவங்களை தள்ளி வைக்கல..?” என்று கேட்டான். 
“நான் எப்படி தர்ஷினிக்காக அந்தாளை பொறுத்துகிறேனா அந்த மாதிரி அவங்களும், அவங்க பேமிலிக்காக அந்தாளை பொறுத்துகிறாங்க, அவரை தவிர அந்தாளு பொண்டாட்டி, தர்ஷினி, அதிதி, மூணு பேரும் அவங்களுக்கு உண்மையா தான் இருக்காங்க..”, என,  
“அப்படின்னா  உன் மாமியார் அவங்ககிட்ட லிங்கத்தை பத்தி சொல்லலாமே..?” என்று இந்திரஜித் கேட்டான். 
“முதல்லே  அவங்க ராணி அத்தைகிட்ட அவரை பத்தி சொல்லிட்டாங்க போல, அவங்க தான் நான் பார்த்துகிறேன்னு சொல்லியிருக்காங்க, ஏன் இப்போவரைக்குமே அவர் செய்றதை சொல்லிட்டு தான் இருக்காங்க..” என்றவன், 
“எனக்கு இவர் மேல சந்தேகம் வந்தப்போவே நான் ராணி அத்தைகிட்ட பேசினேன், இவர் சரியில்ல, உங்களை ஏமாத்துறார்ன்னு சொன்னேன், அப்போ தான் அவங்க எல்லாம் சொன்னாங்க..” என்ற விஷ்வஜித்.  “நீ எப்போ ஊட்டிக்கு போக போற..?” என்று கேட்டான். 
“நாளைக்கு கிளம்பலாம்ன்னு இருக்கேன், அப்பா, அம்மாவை பார்க்கணும் போல இருக்கு,  உன்னை பார்த்துட்டு அப்படியே கிளம்பலாம்னு வந்துட்டேன்..” என்றான்.
“மாமாஸ்.. உங்களை உள்ளே கூப்பிடுறாங்க..” என்றவாறே வந்த மனோஜுடன், இருவரும் உள்ளே சென்றனர். “மாப்பிள்ளை.. தர்ஷி பிறந்தநாளை முன்னிட்டு எல்லோரும் சும்மா ஒரு பிக்னிக் போலாம்ன்னு பிளான் போட்டிருக்கோம், நம்ம கெஸ்ட் அவுஸ் ஒன்னு ECRல இருக்கு, அங்கதான்..” என்று அரசு கேட்டார். 
அவர் சொல்வது பிடித்திருந்தாலும், ராமலிங்கத்தை நினைத்து மறுக்க போனவர்களின் எண்ணத்தை புரிந்த பாரதி, “நான் வரலண்ணா.. எனோ தலை வலிக்குது..” என்றவர், “நீங்களும் எனக்கு துணையா இங்கேயே இருங்க..” என்று கணவரையும் தன்னுடன் பிடித்து வைத்து கொண்டார். 
அதற்கு பிறகு தடை என்ன..? எல்லோரும் இரண்டு கார்களில் கிளம்ப, பெரிய  பார்ட்யூனர் காரில், விஷ்வஜித், இந்திரஜித், தர்ஷினி உடன், அதிதியும், மனோஜும் கடைசி சீட்டில் ஏறிகொண்டனர், தீக்ஷி.. இந்திரஜித்துடன் வர சங்கடபட்டு கொண்டு, அப்பாவின் காரில் செல்ல பார்த்தாள். 
“ஓய்.. தீக்ஷி, எங்களோட வா..” என்று தர்ஷினி அவளை தன்  பக்கத்தில் உட்கார வைத்து கொண்டாள். இந்திரஜித் டிரைவ் செய்ய, விஷ்வஜித் அவனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அண்ணன், தம்பி இருவரும் அவர்களுக்குள் பேசியபடி வர, எப்போதும் போல் அதிதி, தீக்ஷி, மனோஜ், தர்ஷினி என நால்வரும் சண்டை பாதி, பேச்சு பாதி என்று பயணித்தனர்.
கெஸ்ட் அவுஸ் சென்றதும், இளையவர்கள்  அங்கிருந்த அவர்களின் பிரைவேட் பீச்சுக்கு செல்ல ஆசைப்படவும், “சரி.. நீங்க போங்க, நான் சமையலை பார்க்கிறேன்..” என்று ராணி சுப்புவுடன் சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட, அரசு ரெஸ்ட் எடுக்க சென்றுவிட்டார். 
இவர்கள் மட்டும் பீச்சுக்கு செல்ல, அதியும், மனோஜும் எப்போதும் போல் மணல் வீடு கட்ட ஆரம்பித்து விட, தீக்ஷிக்கு கை துருதுருத்தாலும் இந்திரஜித் இருக்க அமைதியாக தர்ஷினியுடன் அமர்ந்துவிட்டாள்.  
காலையில் அவர்கள் வீடு சென்றபோதே தீக்ஷியை காணாமல் தேடியிருந்த இந்திரஜித்திற்கு  ஒரு  “ஸ்பார்க்..”  அவளிடம் உண்டாகியிருக்க, அவனின்  பார்வை நிமிடத்திற்கு ஒருமுறை  அவளை  தொட்டுவிட்டு சென்றது. 
“தீக்ஷி.. வந்து ஜுஸ், ஸ்னாக்ஸ் எடுத்துட்டு போ..” என்று ராணி குரல் கொடுக்கவும், எழுந்து சென்று எடுத்து வந்தவள், எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, சற்று தூரத்தில் போன் பேசிக்கொண்டிருந்த இந்திரஜித்திடம் செல்ல கால்கள் தயங்கினாலும், எடுத்து கொண்டு சென்றாள். 
அவன் திரும்பி நிற்க, என்ன சொல்லி கூப்பிடுவது என்று தெரியாமல் தயங்கி நின்றவளை இந்திரஜித்தும் உணர்ந்தே இருந்தான்.  அவள் வருவது  தெரிந்தே தான் திரும்பி நின்றிருந்தான். “பார்க்கலாம்.. என்னதான் செய்றேன்னா..?” என்ற எதிர்பார்ப்புடன் நின்றவனை, “க்கும்..” என்று தொண்டை கனைத்து கூப்பிட்டாள். 
“ம்ஹூம்.. அவன் திரும்பினால் தானே..”, சரி என்று அவனை சுற்றி கொண்டு அவன் முன் சென்று நின்றவள், “ஜுஸ்” என்று அவன் முகம் பார்க்காமல் கொடுக்க, போனை வைத்தவன், வாங்காமல் கை கட்டி நின்றான். 
தான் கொடுத்த ஜுஸை வாங்காமல் கை கட்டி நிற்பதை பார்த்தவள், நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள். “என்ன..?” என்று புருவத்தை தூக்கி கேட்டவனிடம், “உங்களுக்கு ஜுஸ்..” என்று கொடுத்தாள். 
அமைதியாக வாங்கி கொண்டவனுக்கு  அவளிடம் பேச்சு கொடுக்க  மனம் உந்தினாலும், பார்த்த சில மணிநேரங்களிலே என்ன பேசுவது என்று தெரியாமல், ஜுஸை குடிக்க ஆரம்பித்தவனின் முன் மறுபடியும் வந்து நின்ற தீக்ஷிதா, 
“சாரி.. நான் அப்படி கத்தியிருக்க கூடாது, உங்களை ரொம்ப சங்கடபடுத்திட்டேன்..” என்று சொல்லவும், இந்திரஜித்தின் கண்கள்  ரகசிய சிரிப்பில் மின்னியது.

Advertisement