Advertisement

தீரா காதல் தீ  7
“தீக்ஷி.. எங்க இருக்க நீ..? இன்னும் காலேஜ் முடியலையா உனக்கு..?” என்று காலேஜ் முடிந்து மகள் வரும் நேரம் கடந்தும்  வராமல் இருக்கும் மகளுக்கு போன் செய்து கேட்டார் ராணி. 
“ம்மா.. அதெப்படி தான் நான் வர்ற டைம் பார்த்துட்டே இருக்கியோ..? வேற வேலை எதுவும் இல்லையா உனக்கு..?” என்று மகளும் அம்மாவிடம் கடுப்பாக கேட்டாள். 
“என்ன மாதிரி அம்மாக்களுக்கு இதைவிட முக்கியமான வேலை வேறெதுவும் கிடையாது, அதனால நீ வாயடிக்காம எங்க இருக்க..? ஏன் லேட்..?  எப்போ வரேன்னு சொல்லு..?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் அடுக்கினார். 
“ம்மா.. நீ இப்படி என்னை கேள்வி கேட்டுட்டே இருந்தா நான்  இன்னிக்கு வீட்டுக்கு வந்த மாதிரிதான்,  வைங்கம்மா, நம்ம ஏரியாவுக்குள்ள  தான் வந்துட்டு இருக்கேன்..” என்று சொன்னவளின் பேச்சை கேட்டு கோவம் கொண்ட ராணி, 
“வண்டியை ஒட்டிக்கிட்டு போன் பேசாத்தன்னு எத்தனை டைம் சொல்லியிருக்கேன்..”, என்று  கோவம் கொண்டு திட்டினார். 
“ம்மா.. நீ வை, நான் வர்றேன்..” என்று அவர் கத்தி கொண்டிருக்கும் போதே போன் வைத்தவள், தன் ஸ்கூட்டியை வீட்டுக்கு விரட்டினாள். இல்லையெனில் தான் சென்று வீடு சேருவதற்குள், ராணிக்கு டெங்ஷனில் மயக்கமே வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை என்று அவரை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த தீக்ஷி, அவர்களின் வீட்டு கேட்டிற்குள் வண்டியை விட்டாள். 
அவள் நினைத்தது போலே ராணி வாசலிலே நின்றிருந்தவர், இவள் உள்ளே வரவும், கோவமாக முகம் திருப்பிகொண்டு உள்ளே சென்றார். “ராணி.. ஓய் ரானிம்மா.. இவ்வளவு நேரம் எனக்காக வெய்ட் செஞ்சுட்டு, இப்போ நான் வந்த உடனே உள்ளே போன என்ன அர்த்தம்..?” என்று கேட்டு கொண்டே அன்னையின் பின்னே ஓடினாள். 
“ம்மா.. எனக்கு  ஸ்னாக்ஸ் வேணும்..” என்று கேட்ட மனோஜிற்கு ஈவினிங் ஸ்னாக்ஸை கொடுத்தவர், மகளை கண்டு கொள்ளாமல் மகனுடன் அமர்ந்துவிட்டார். 
“ம்மா.. அவன் மட்டுமே படிக்க போய்ட்டு வரல, நானும் தான் காலேஜ் போய் படிச்சிட்டு வந்திருக்கேன், எனக்கும் பசிக்கும்..”  என்றவளை கிண்டலாக பார்த்த மனோஜ், 
“தீக்ஷி.. நம்ம சிம்பு படம் எப்படி இருக்க..?”  என்று கேட்டான். 
“எந்த படம்டா..?” என்று கேட்டவாறே அன்னைக்கு தெரியாமல் சைகை செய்தவளை கண்டு கொள்ளாத மனோஜ், 
“அதான் இந்த கமலம் தியேட்டர்ல ஓடுதே அந்த சிம்பு படம் தான்,  நீ கூட  அதிதி, ராகுலோட போயி மதிய ஷோ பார்த்துட்டு, அப்படியே நம்ம முத்து அண்ணன் பேக்கரிக்கு வெளியே உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு கேக் சாப்பிட்டு வந்தியே..”  என்றவன், 
“அடுத்த முறை போகும் போது எனக்கும் முத்து அண்ணன் பேக்கரியில கேக் வாங்கிட்டு வா தீக்ஷி..” என்று மொத்தமாக போட்டு கொடுத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்து விட, ராணி மகளை பார்த்து கோவத்தில் கொதித்து கொண்டிருந்தார். 
“ம்மா..  அது அதிதி கேட்டா அதான்..”, என்றாள் தயக்கத்துடன். 
“ராணிம்மா..  எனக்கு  பசிக்குது, ஏதாவது இருந்தா கொடு, உள்ளே தள்ளிக்கிறேன்..” என்று கேட்டவாறே வந்த அதிதியை பார்த்து மனோஜ் கிண்டலாக சிரிக்க, தீக்ஷிதா நொந்து போய் பார்த்தாள். 
“ஏண்டா.. தர்பூஸ்,  பள்ளிகூடத்துக்கு  போய்ட்டு வந்துட்டியா..? ஐ.. வடை..”  என்று மனோஜின் பிளேட்டில் இருந்த வடையை எடுத்து  கடித்தவாறே  ராணியின் உர்ரென்ற முகத்தில் உஷாரானவள், தீக்ஷியை பார்க்க, அவள் மனோஜை கண் காட்டினாள். அதிலே புரிந்து கொண்ட அதிதி, கடித்த வடையை  கஷ்டப்பட்டு மென்று முழுங்கியவள், 
“ராணிம்மா.. எனக்கு இப்போதான் ஒரு முக்கியமான வேலை ஞாபகம் வந்துச்சு, நான் அதை முடிச்சிட்டு அப்பறமா பொறுமையா ஒரு ரெண்டு நாள் கழிச்சு வரேன்..” என்றவள் கிளப்ப பார்க்கவும், 
“அப்படியென்ன முக்கியமான வேலை அதிக்கா..?, ஓஹ்.. நீங்க சாப்பிட்ட கேக்குக்கு முத்து அண்ணாகிட்ட காசு கொடுத்துட்டு வரணுமா..?” என்று சத்தமாக கேட்ட மனோஜை திரும்பி முறைத்தவள், ராணியை பாவமாக பார்த்தாள். 
“ராணிம்மா.. அது ஒன்னும் இல்லை, நம்ம ராகுல் இருக்கான் இல்லை, அவன் இந்த நாள்ல தான் இந்த பூமியில வந்து தொபுக்கடீர்ன்னு குதிச்சானாம், அந்த அவதார் குட்டி பிறந்த  அதிசயத்தை கொண்டாட ஒரு படத்துக்கு போனோம்..” 
“அப்படியே எங்களுக்கு பசிக்குதுனு  ஒரு துண்டு கேக் வாங்கி கொடுத்தான், அவனை மாதிரியே அந்த கேக்கும் படு மொக்கை, ஆனா அந்த பயபுள்ளை எங்க உயிர் நண்பனா போயிட்ட ஒரே காரணத்தால ரொம்ப கஷ்டப்பட்டு அந்த கேக்கை சாப்பிட்டு வந்திருக்கிறோம்..”, என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொன்னாள். 
“ஓஹ்.. ராகுல் அண்ணாக்கு இன்னிக்கு பர்த்டேவா, எனக்கு சொல்லவே இல்லை பாரேன், உங்களை மட்டும் படத்துக்கு கூட்டிட்டு போனதுமில்லாம, கேக்கும் வாங்கி கொடுத்துருக்கார், இதோ அவங்க அம்மாக்கு போன் செஞ்சு எனக்கும் கேக் கேட்கிறேன்..” என்று மனோஜ் போன் செய்து ராகுலையும் மாட்டிவிட பிளான் செய்தான். 
அதில் பதறிப்போன அதிதியும், தீக்ஷியும், “டேய் தர்பூஸ், நாரதா..” என்று கத்த, ராணி மகனிடம் வேண்டாம் என்றவர், தீக்ஷியையும், அதிதியையும் பார்க்காமல் ரூமிற்கு சென்று விட, அவரின் கோவத்தில் தீக்ஷிக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது. 
“டேய்..  பானை ஏண்டா எங்களை மாட்டிவிட்ட..?” என்று அதிதி மனோஜிடம்  சத்தம் போட்டு கொண்டிருக்க, தீக்ஷி ராணியின் ரூமிற்கு சென்றாள். அவர் அமைதியாக கை கட்டி சோபாவில் அமர்ந்திருக்க, இவளும் சென்று அவரின் அருகில் அமர்ந்தவள், 
“ம்மா.. சாரி, உன்கிட்ட சொல்லாம போனதுக்கு, ஆனா நான் அப்பாக்கிட்ட போன் செஞ்சு பெர்மிஷன் வாங்கிட்டு தான் போனேன்..”, என்றவள், அவரின் மடியில் படுத்து கொண்டு, அவரின் கையை எடுத்து தன் தலையை தடவ செய்தவள், 
“அதிதி நாளைக்கு ஹாஸ்டல் போறதால, படத்துக்கு போலாமான்னு கேட்டா, அவளும் அங்க ஹாஸ்டல்ல போனதால நம்மளை எல்லாம் ரொம்ப மிஸ் செய்றா போல, அதான், இனி உன்கிட்ட கேட்காம எங்கேயும் போகமாட்டேன்..  ப்ராமிஸ்..” என்று சொல்லவும், 
“ஓகே.. இதுதான் பைனல், இனி இப்படி சொல்லாம போக கூடாது..”, என்றவர், “சரி வா டிபன் சாப்பிட போலாம்..” என்று மகளுடன் வெளியே வந்தவரிடம், “சாரி ராணிம்மா..” என்று அதிதியும் மன்னிப்பு வேண்டவும், “சரி சரி சாப்பிடுங்க..” என்று இருவருக்கும் டிபன் கொடுக்க, மனோஜிற்கு  அழகு காட்டிவிட்டு சாப்பிட செய்தனர். 
“ம்மா.. இன்னிக்கு நைட்  அக்கா பார்த்டேக்கு  ஒரு சர்பிரைஸ் பிளான் போட்டிருக்கோம், அதனால நாங்க நைட் அங்க போக போகப்போறோம்..” என்று  இரவே ராணியிடம் சொல்லிவிட்டவர்கள், நள்ளிரவு 12 மணியை நெருங்கும் சமயம், தீக்ஷி, அதிதி, மனோஜ் மூவரும் தர்ஷினியின் வீட்டிற்கு சென்றனர். 
“அக்கா வீட்டு ஸ்பேர் கீ  எடுத்துட்டு வர சொன்னேனே எங்கடா..?” என்று  தீக்ஷி தம்பியிடம் கேட்டாள். 
“அச்சோ மறந்தே போயிட்டேன்க்கா..” என்று மனோஜ் சொல்லவும், அவனை முறைத்தவர்கள், “ஒழுங்கா போயி நீயே எடுத்துட்டு வா..” என்று அவனை அனுப்பினார்கள். 
“தீக்ஷி.. இந்த எட்டப்பனை  பழிவாங்க சரியான சேன்ஸ் கிடைச்சிருக்கு..”, என்று உற்சாகமாக சொன்ன அதிதி, அவளின் திட்டத்தை சொல்லவும், “வேண்டாம் அதி, மனோ பாவம்..” என்று தம்பிக்காக  பார்த்தாள்.
“என்ன தம்பி பாசமா..? அவன் நம்மளை அப்படி நினைக்கிறானா..? எப்போ சேன்ஸ் கிடைச்சாலும் நம்மளை  போட்டு கொடுத்துடுறான், நாம இன்னிக்கு அவனை  செய்ய போறதுல, அவன் நம்ம பக்கமே இனி  திரும்ப கூடாது..” என்றவள், தீக்ஷியை இழுத்து கொண்டு சென்றாள்.  
தர்ஷினியின் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளியிருக்கும் அவர்களின் வீட்டிற்கு சென்று தர்ஷினி  வீட்டின் சாவியை கொண்டு வந்த மனோஜ், இவர்களை காணாமல் லேசான பயம் கொண்டான். நள்ளிரவு மணி 12ஐ நெருங்கி கொண்டிருக்க, தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாய் நாய் குலைத்து கொண்டிருக்கவும், மனோஜிற்கு வியர்க்க ஆரம்பித்தது. 
“எங்க போனாங்க இவங்க..?” என்று அக்காக்களை தேடி, கண்ணை அலையவிட்டவன். அங்கு மரத்தின் பின் தெரிந்த துப்பட்டாவை வைத்து தீக்ஷியையும், இன்னொரு மரத்தின் பின் நின்றிருந்த அதிதியையும் கண்டு கொண்டான். 
“அப்பாடா..” என்று மூச்சை இழுத்து விட்டவன், “லூசுங்க எப்படி ஓளிச்சிருக்குங்க  பாரு..” என்று தலையில் அடித்து கொண்டவன், அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு  “என்னையே பயமுறுத்த பார்க்கிறீங்களா..? இருங்க உங்களை என்ன செய்றேன் பாருங்க..” என்று காலரை தூக்கிவிட்டு கொண்டவன்,  சத்தம் செய்யாமல், தீக்ஷி இருந்த மரத்தின் பின்னால் சென்றவன், தன் கையில் இருந்த பர்த்டே கலர் கன்னை வெடிக்க வைத்தான். 
மரத்தின் முன் மறைந்திருந்த தீக்ஷி,  திடீரென தன் பின்னால் வெடித்த சத்தத்தில்  “ஆஆஆஆ…” என்று கத்தியபடி  மரத்தின் பின்னிருந்து  படக்கென வெளியே குதித்தவள்,  தன் முன் முகத்தை மூடி நின்றிருந்த  மனிதனை கண்டு கண் மூடி இன்னும் இன்னும்  “ஆஆஆஆ..” என கத்த ஆரம்பித்துவிட்டாள். 
“ஏய்.. ஏய் ஏன் கத்துற..?    ஷட் அப்,    ஏய் பொண்ணு  உன்னைத்தான்  வாயை மூடு.. ஓஹ் காட், வாயை மூடி தொலை..” என்று அந்த மனிதன் இவளின் சத்தத்தை அடக்க முயன்றவன், “ஹாஹாஹா..” என்ற  தன் பக்கத்தில் நின்று சிரித்து கொண்டிருந்த  மனோஜை கோவமாக முறைத்தான். 
மனோஜோ அந்த புதியவனின் முறைப்பை கண்டு கொள்ளாமல் அவளின் பயந்த முகத்தை பார்த்து மேலும் சத்தமாக சிரித்தான். அதிதி, மனோஜ் செய்ய வருவதை எட்டி பார்த்து கண்டு கொண்டவள், தீக்ஷியை நெருங்கும் முன், மனோஜ்  அந்த கன்னை வெடிக்க  வைத்துவிட்டான். 
அவளும் அந்த முகம் மூடிய  புதிய மனிதனை கண்டு லேசாக பயந்தவள்,  தீக்ஷியின் அருகில் ஓடினாள். மனோஜின்  சிரிப்பு சத்தத்தில் லேசாக கண் திறந்து பார்த்த தீக்ஷியும், அதிதியும் அந்த புதிய மனிதனை திகிலுடன்  பார்த்தனர். 

Advertisement