Advertisement

அவன் நொடியில் கிளம்பிவிட, தன் கையில் இருந்த இன்விடேஷனை பார்த்தவளுக்கு புரிந்தது, அது ஹோட்டல் திறப்பு விழாவிற்காக அன்று மாலை அவர்கள் புது ஹோட்டலிலே வைத்திருந்த பார்ட்டிக்கான இன்விடேஷன் என்று,
“என்ன தீக்ஷி காலேஜிலிருந்து  சீக்கிரம் வந்துட்ட..?”  என்று மாலை சீக்கிரமே வந்துவிட்ட மகளை பார்த்து  ராணி கேட்க, “பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்றா சொல்ல முடியும்..?” அதனாலே, 
“சும்மா தான்மா, லாஸ்ட் ரெண்டு கிளாஸ் ப்ரீ கிளாஸ் அதான்..”  என்று முடித்துவிட்டவள், பார்ட்டிக்கு செல்ல எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் ராணியின் பின்னாலே சுற்றி கொண்டிருந்தாள்.
“அத்தை கிளம்பிட்டீங்களா..? மாமா, மனோஜ், தீக்ஷி  எங்க..?”  என்றபடி மனைவி மகனுடன் அங்கு வந்த விஷ்வஜித் ராணியிடம் கேட்கவும், போகும் எண்ணம் இல்லாமல் இருந்த ராணி, எப்படி மறுப்பது என்று பார்த்தார். 
அவரின் மறுப்பை அவரின் முகத்திலே கண்டு கொண்ட விஷ்வஜித்திற்கு, “அவங்க வரமாட்டாங்க போல இருக்கு,  நீ போய் அவங்களை எல்லாம்.. முக்கியமா தீக்ஷி கையோடு அழைச்சுட்டு வா” என்று தம்பி சொன்னது சரி என்றே  தோன்றியது. 
“என்ன அத்தை யோசனை…? கிளம்புங்க, தீக்ஷி, மனோஜ் நீங்களும் கிளம்புங்க, மாமா எங்க..?” என்று கேட்டு ஆபிசில் இருந்த அரசுவிற்கும் போன் செய்து, நேரே பார்ட்டிக்கு வருவதை உறுதி செய்து கொண்டவன், ராணிக்கு மறுக்கும் வாய்ப்பே கொடுக்காமல் எல்லோரையும் கிளப்பி கொண்டு பார்ட்டிக்கு வந்துபிறகே மூச்சு விட்டான். 
பார்ட்டி நடக்கும் கார்டெனின் முகப்பிலே தீக்ஷியை மிகவும் எதிர்பார்த்து நின்ற இந்திரஜித், அவளை கண்ணில் காணவும் தான் அதுவரை இருந்த இறுக்கம்  மறைந்து முகம் தானாகவே ஒளிர்ந்தது. 
அதிலும் கருநீல கலர் லெகங்கா அணிந்து ப்ரீ ஹேர் விட்டு மெலிதான அலங்காரத்தில் இளமையின் அழகோடு ஜொலித்த தீக்ஷியின் அழகு கண்ணையும், மனதையும் கொள்ளை கொள்ள “அழகு ராட்சஸி..” என்று காதலாக முணுமுணுத்தவன், அவனை நெருங்கிய பெரியவர்களை முகம் மலர சிரிப்புடன் வரவேற்றவன், தீக்ஷியை பார்த்து வேண்டுமென்றே முறைத்து உதடு சுழித்து காதலாக முறுக்கினான். 
அவனின் முறைப்பு முறுக்கில் தெரிந்த காதலில் தீக்ஷிக்கும் காதல் பொங்க, அவனை காதல் மயக்கத்தோடு பார்த்தாள். அதை கண்டு கொண்ட இந்திரஜித்தின் கைகள் காதலியின் கை கோர்க்க துடிதுடிக்க, கைகளை இறுகி மூடி தன் தவிப்பை அடக்கி கொண்டான். 
“மாமா..  நாங்க ஹோட்டலை சுத்தி பார்க்கட்டுமா..?” என்று ராகுலும், மனோஜும் ஆசையாக அனுமதி கேட்க, “டேய்.. இது நம்ம ஹோட்டல், போங்கடா..” என்று இந்திரஜித்  சொல்லவும், 
“தீக்ஷி.. நீயும் வா போலாம்..”  என்று மனோஜ் அக்காவை கூப்பிட, அவனை பார்த்த காதலியை “வா..” என்று கண் காட்டிய இந்திரஜித், “வாங்க.. நானும் உங்களோட வரேன்..”  என்று அவர்களோடு செல்ல கிளம்பினான். 
“ஜித்து.. இங்க என்ன செய்ற..? அங்க GK சார் உன்னை ரொம்ப நேரமா கேட்கிறார் பாரு, வா போலாம்..” என்று அதுவரை தூரத்தில் நின்று இவர்களை பார்த்து  கொந்தளித்து கொண்டிருந்த சுபா அதற்கு மேல் பொறுக்க முடியாமல் உள்ளே கோவத்தை  அடக்கி, வெளியே சிரிப்புடன் மகனை அங்கிருந்து அனுப்ப, 
“நீங்க எல்லாம் போங்க, நான் பின்னாடியே வரேன்..” என்று இளையவர்களை ஹோட்டலுக்குள் அனுப்பி வைத்த  இந்திரஜித், சுபா சொல்லியவரிடம் பேச சென்றான். அவன் அங்கிருந்து செல்லவும், 
“நீங்க எல்லாம் எங்க ஹோட்டலை நல்லா சுத்தி பார்த்துட்டு,  சாப்பிட்டு தான் போகணும், அதுக்காக உடனே எல்லாம் போக வேண்டியதில்லை, கொஞ்ச நேரம் இருந்துட்டே போங்க..”  என்று அரசு தம்பதியையும், ராமலிங்கம் தம்பதியையும் பார்த்து நக்கலாக சொன்னவர் சென்றுவிட, பெரியவர்களுக்கு, ஏன் ராமலிங்கத்திற்குமே ஓர் நொடி கூட அங்கு நிற்க முடியா நிலை. 
“வாங்க.. வாங்க..”  என்று மருமகள், மகன், பேரனுடன் அங்கு வந்த ஆனந்தன் இவர்களை வரவேற்கவும், மெலிதாக சிரித்தவர்கள் அவரின் வரவேற்பை ஏற்று தலையாட்ட, சில நிமிடங்கள் அங்கு நின்று இவர்களுடன் உரையாடிய ஆனந்தனையும் ஆள்விட்டு சுபா அழைத்து கொண்டார்.
“என்னாச்சு..? ஏன் உங்க முகம் எல்லாம் எப்படியோ இருக்கு..?” என்று ஆனந்தன், அங்கிருந்து சென்றவுடன் தர்ஷினி பெரியவர்களின் முக மாற்றத்தை கண்டு கொண்டு கேட்டாள். 
“ஒண்ணும் இல்லை தர்ஷினி, எங்களுக்கு இந்த நைட் டைம் பார்ட்டி எல்லாம் பழக்கம் இல்லை இல்லை அதான், கொஞ்சம் அவுசாகரியமா இருக்கு..” என்று ராணி சொல்லவும்,  
“சரி வாங்க, சாப்பிட போலாம்..” என்று விஷ்வஜித் கூப்பிட்டான்.
“இப்போ வேண்டாம், கொஞ்ச நேரம் போகட்டும் மாப்பிள்ளை, நீங்க வந்தவங்களை கவனிங்க, நாங்க இப்படி உட்காருறோம்..” என்று நால்வரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, வெய்ட்ரை வரவைத்து எல்லோருக்கும் ஸ்டார்ட்டர் கொடுக்க செய்த விஷ்வஜித், மனைவியுடன் அங்கிருந்து செல்லவும், அதை சாப்பிடாமல் வைத்துவிட்டனர்.
“ஹோட்டல்  எண்ட்ரன்ஸிலிருந்து, ரூம்,  ரெஸ்டாரண்ட், ஜிம், எல்லாம்  பயங்கர ரிச்சா  இருக்கு இல்லை..”, என்று ராகுல் ஹோட்டல்  பிரமாண்டத்தை பார்த்து வாய்பிளந்து சொல்ல, 
“ஆமாண்ணா.. செம மாஸா இருக்கு, மாமாஸ் பெரிய ஆளுங்க தான் போல..”, என்று மனோஜும் பிரமிப்பாக சொன்னான். அவர்களின் பின்னே சென்றவாறே எல்லாவற்றையும் பார்த்திருந்த தீக்ஷிக்கும்  இந்திரஜித் குடும்பத்தின் செல்வநிலை, அவர்களின் பணசெழிப்பு புரிய, இந்த பணம் தான்  தர்ஷினியை ஏற்ககாமல் சுபா தள்ளிவைக்கும் காரணம் போல என்று நினைத்து கொண்டாள்.  
“இங்க தான் இருக்கீங்களா..?” என்றவாறே வேகமாக வந்த இந்திரஜித்திடம், 
“மாமா.. நீங்க இவ்வளவு பெரிய ஆளா இருந்துகிட்டு எங்களுக்கு எப்போ பார்த்தாலும் குச்சி ஐஸும், குருவி ரொட்டியுமே வாங்கி கொடுத்து ஏமாத்தி இருக்கீங்க..” என்று  தீக்ஷிக்கு பிடிக்கும் என்று கேக்கும், ஐஸ் க்ரீமும் வாங்கி வரும்  இந்திரஜித்தை கோபத்துடன் கேட்ட மனோஜை  வழிமொழிந்தான் ராகுல். 
அவர்களின் கேள்விக்கு சிரிப்பையே பதிலாக தந்த இந்திரஜித், பாக்கியிருந்த இடங்களை சுற்றி காட்டினான். “மாமா போதும், இதை முழுசா பார்க்க எங்களுக்கு சில பல நாள் ஆகும் போல, அதுவரைக்கும் எல்லாம் எங்க உடம்பு தாங்காது, நாங்க போய் முதல்ல கொஞ்சம் எனர்ஜி ஏத்திக்கிறோம்..” என்று சாப்பிட கிளம்பியவர்கள் தீக்ஷியை பார்க்க, 
“நான் வரேன், நீங்க போங்க..” என்று இந்திரஜித்தின் கண்ணசைவில் அவர்களை அனுப்பினாள். “வா.. மேல ரூப் கார்டன் இருக்கு, அங்க போலாம்..”, என்று தீக்ஷியை அழைத்து கொண்டு லிப்ட் வழியாக மேல வந்த இந்திரஜித், முதல்  வேலையாக காதலியின் கை கோர்த்து இவ்வளவு நேரம் இருந்த தன் துடிப்பை தீர்த்தான். 
இந்திரஜித் திடீரென கை கோர்க்கவும், இணைந்திருந்த கைகளை பார்த்து அதிர்ந்த தீக்ஷி நிமிர்ந்து காதலனை பார்க்க, அவன் அவளின் முகத்தையே மயக்கத்தோடு  பார்த்து கொண்டிருந்தான். 
சுற்றிலும் யாரும் இல்லா இரவு நேரத்தில் மிதமான குளிரில்,  உரிமை கலந்த காதலோடு கை கோர்த்திற்கும் காதலனின் மயக்க முகம், காதலியையும் மயக்க, அதுவரை நிமிர்ந்து நின்றிருந்த தீக்ஷி, இந்திரஜித்தின் காதல் பார்வையை  பார்க்க முடியாமல் தடுமாறி  முக சிவப்புடன் வேறு புறம் திரும்பினாள். 
முதல் முதலாக தன்னை கண்டு முகம் சிவந்து தடுமாறிய அவளின் வெட்கத்தை  கண்டு, மேலும் பொங்கிய காதல் ஊற்றை சமாளிக்க முடியாமல் தானும் திணறிய இந்திரஜித் அடைத்த  தொண்டையை செருமியவன், 
“ஏதாவது பேசு தீக்ஷி, இது ரொம்ப எப்படியோ  இருக்கு, ஐ காண்ட் ஹாண்டில்  மை இன்னர் பீலிங்ஸ்..” என்று அவளின் கையை மேலும் இறுக்கி நெறித்தவன், அவளை ஒரு சுழற்று சுழற்றி தன் பக்கம் திருப்பி நிறுத்தினான்.
தீக்ஷிக்குமே அந்த நேர தனிமை கொடுத்த தவிப்பு அதிகமிருக்க, துணிந்து இந்திரஜித்தின் முகம் பார்த்தவள், ஒரு நொடிக்கு மேல் முடியாமல் மீண்டும் முகம் திருப்பி கொண்டாள். 
“வேண்டாம் தீக்ஷி.. இப்படி செய்யாத, இது என்னை  இன்னும் பலவீன படுத்துது, ஏதோ ஏதோ தோணுது..!!”   என்றவனின் பார்வை அவளின் உதட்டில் அச்சடித்து நிலைத்தது. 
இருபதை நெருங்கும்  தீக்ஷியின் வயதும், இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்த இந்திரஜித்தின் வயதும் அவர்களை  துணிந்து காதல் செய்யும் அச்சத்தை கொடுக்க,  இருவருமே நெருங்க பயந்து விலகி தான் நின்றனர். 
ஆனால் அதுவே அவர்களை இன்னும் இன்னும் காதல் உணர்ச்சியில் தள்ளி சோதிக்க, ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியா இந்திரஜித், கோர்த்திருந்த கையை வலுவாக இழுத்து காதலியை அணைத்துவிட, அவர்களின் முதல் அணைப்பில் நடுங்கி  சிலிர்த்து போன தீக்ஷி  பதிலுக்கு அணைக்காமல் கையை இறுக்கி மூடி நின்றாள். 
அவள் அணைக்காமல் இருப்பது உணர்ந்து தன்னுடைய அணைப்பை இறுக்கி அவளின் விரித்த கூந்தலில் முகம் புதைத்த  இந்திரஜித்தும், தீக்ஷியும்,  பயம், தயக்கம், வெட்கம், தடுமாற்றம், திணறல் என எல்லாம் கலந்த ஒரு கலைவையான உணர்வில், மற்றவரின் அருகாமையை  உணர்ந்து, ரசித்து, அனுபவித்தனர். 
“ம்ஹூம்.. இது ஆகாது, நாம கீழ போயிடலாம்..”  என்ற இந்திரஜித், தன்னுடைய அணைப்பை விலக்கி, அவளின் முடியை சரி செய்தவனை பார்த்திருந்த தீக்ஷியின் வெட்கபார்வையில் தாங்கமுடியாமல், 
“நீ என்னை தூண்டிவிட்டு பைத்தியமாக்குற..” என்று காதல் கோவத்தில் சீரியவன், அவனின் முதல் முத்த அச்சாரத்தை அவளின் கன்னத்தில் மிக மிக அழுத்தி பதித்தவன், இழுத்து கொண்டு கீழே வந்துவிட்டான்.  
 
இருவரும் தனியாக வருவதை, அதுவும் ஒருவித உரிமையோடு சேர்ந்து வருவதை கண்டுவிட்ட சுபா, தீக்ஷி தனியாக  இருக்கும் போது, அவளின் முன் எல்லையில்லா கோவத்தோடு நின்றார்.

Advertisement