Advertisement

தீரா காதல் தீ 10
“ராணிம்மா.. நாளைக்கு பங்க்ஷனுக்கு நான் கண்டிப்பா போகணுமா..?” என்று மறுநாள் அவர்களுடைய சென்னை ஹோட்டல் திறப்பு விழாவிற்கு செல்லத்தான் வேண்டுமா..? என்ற  தயக்கத்தில்  தர்ஷினி ராணியிடம் கேட்டாள். 
“நீ கேட்கிற கேள்வியே தப்பு தர்ஷினி, உன் பங்க்ஷனுக்கு நீ போகாமணுமான்னு  கேட்டா எப்படி..?” என்ற ராணி பாரதியை பார்க்க, அவரும் அதே தயக்கத்தில் இருப்பது புரிந்தது.
“ராணிம்மா.. உங்களுக்கே தெரியும், அத்தைக்கு என்னை பார்க்க கூட பிடிக்காதுன்னு, அப்படி இருக்கிறப்போ அவங்க வர்ற பங்கஷனுக்கு நான் எப்படி..?” என்று தர்ஷினி சுபாவை நினைத்து வருத்தத்துடன் கேட்டாள். 
“தர்ஷினி.. என்ன பேசுற நீ..? அவங்க எப்படி அந்த வீட்டு மருமகளோ, அதேபோல நீயும் அந்த வீட்டு மருமகள்  தான்,  அவங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ,அவ்வளவு உரிமையும் உனக்கும் இருக்கு, அவங்களுக்காக  நம்ம ஹோட்டல் திறப்பு விழாவுக்கு நாம போகலைன்னா எப்படி..?”  என்று ராமலிங்கம் கோபத்துடன் கேட்டார். 
“அது நம்ம ஹோட்டல் இல்லை, விஷ்வஜித் மாப்பிள்ளை குடும்பத்து ஹோட்டல்,  நாம எல்லாம் வெறும் கெஸ்ட் மட்டும் தான், கெஸ்டுக்கு எல்லாம் உரிமையை பத்தி பேச எந்த  அதிகாரமும் இல்லை, அவங்க குடும்ப விஷயத்தை அவங்க பார்த்துப்பாங்க..”, என்று ராணி முகம் சுளித்து ராமலிங்கத்தை பார்த்து கண்டிப்புடன் சொல்லவும், சுதாரித்த மனிதர்,  
“நானும் அதை தான் சொன்னேன்மா..” என்றவர்  வாயை மூடிகொண்டார், இல்லாவிடில்  ராணி  இன்னும் இன்னும் பேசுவார் என்ற பயம் அதிகம் எப்போதும். 
“தர்ஷினி.. அவங்க உங்க அத்தை, அவங்க இல்லாம விஷ்வஜித் தம்பி கிடையாது அதை மனசுல வச்சுக்கிட்டா போதும், அவங்க உன்னை எவ்வளவு பேசுனாலும் அதை கடந்து போக முடியும்..” என்ற  ராணி ஆறுதலாக அவளின் தலையை தடவி கொடுத்தார். 
“ராணி சொல்றது சரி தர்ஷினி, நீ எதுக்கும் கவலைபடாத, மாப்பிள்ளை எல்லாத்தையும் பார்த்துப்பார்..” என்று அரசுவும் ஆறுதலாக சொல்ல, அவர்கள் சொல்வதில் இருந்த உண்மை புரிந்த தர்ஷினிக்கு, தான் செல்லாவிடில் கணவன் நிறைய  வருத்தப்படுவான் என்ற காரணத்தாலும் சரி என்றுவிட்டாள். 
அதில் மற்றவர்களை விட ராமலிங்கத்திற்கு தான் மிகவும் மகிழ்ச்சி,  இதுவரை எந்த இடத்திலும் ஆனந்தன் அவரை தன்னுடைய சம்மந்தி என்ற மரியாதையை, அறிமுகத்தை தந்ததே இல்லை, இந்த பங்க்ஷனிலிலாவது   ஆனந்தன் தன்னுடைய சம்மந்தி என்று எல்லோருக்கும் காட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கம் கொண்டிருந்தவர், மகள் யோசிக்கவும் பதறிதான் போனார். அதனாலே ராணி இருப்பதை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார். 
“ராணி.. நாம எப்படி பங்க்ஷனுக்கு..?”  என்று ராமலிங்கம் குடும்பம் சென்றபிறகு அரசு யோசித்தவாறே மனைவியிடம் கேட்டார். 
“நீங்க மட்டும் போனா போதும் தான், ஆனா விஷ்வா தம்பிக்காக நானும் வரேன், பிள்ளைங்க வேண்டாம், அந்த சுபாக்கு நம்ம யார் மேலையும் நல்ல அபிப்பிராயம் இல்லை, எதோ அவங்க மகனை ஏமாத்தி தர்ஷினியை கட்டிவச்சிட்டதா நினைக்கிறாங்க..”, 
“அது கூட பரவாயில்லை, அவங்க பேரன் தருண், அவன் பிறந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும் அவனை கண்ணுல பார்க்க கூட அவங்க விருப்பபடல..”, என்று அதிர்ப்தியாக சொன்னார் ராணி. 
“ம்ம்.. எனக்கும் அந்த வருத்தம் இருக்கு ராணி, என்னமோ போ..”  என்று அரசு பேசுவதையும்,  ராணி பேசுவதையும் கேட்டபடி அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்த தீக்ஷிக்கு  இந்திரஜித்தின் எண்ணங்களே..!!
சற்று நேரம் முன்புதான் இந்திரஜித் போன் செய்து “நாளை பங்கஷனுக்கு எந்த டைம் வர்ற..?”  என்று கேட்டிருந்தான். இவள் அம்மாவிடம் கேட்டுவிட்டு சொல்வதாக சொல்லியிருந்தவள், தர்ஷினியின் பயம், அப்பா, அம்மாவின் பேச்சு எல்லாம்  கேட்ட பிறகு, அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசையே விட்டு போயிற்று.  
அதனாலே இந்திரஜித் திரும்பவும் அழைத்த போது, போனை எடுக்கவே இல்லை, அதை தொடர்ந்து அவன் அனுப்பிய மெசேஜுகளுக்கும் பதில் அளிக்காமல், ஒரு கட்டத்தில் போனையே அணைத்து விட்டவளின்  மனதில் எதோ பெரிதாக அடைத்த உணர்வு. 
தருண் பிறந்த நாள் அன்று இந்திரஜித்தின் கோவமும், வெட்கமும், தவிப்பும், திணறலும் அவளை பெரிதாக ஈர்த்திருந்தது. அதற்கு முன்னாலே அவன் பால் ஏற்பட்டிருந்த சலனம், அன்று வேறொரு பரிமாணத்திற்கு  முன்னேறியதை அவளும் உணர்ந்தே இருந்தாள். 
அதை தொடர்ந்த நாட்களில் எல்லாம் இந்திரஜித் இன்னும் உரிமையாக, காதல் மயக்கத்தோடு அவளிடம் பேச பேச அவனின் காதல் போதை அவளையும்  தொற்றி கொள்ள ஆரம்பித்தது. 
இன்று வரை இருவருமே  காதல் எனும் சொல்லையே பயன்படுத்தாமல் காதல் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தார்கள். அதுவே  ஒருவித சுவாரசியத்தை, மயக்கத்தை, ரகசிய உணர்வுகளை இருவருக்குள்ளும்  பாய்ச்ச, அதை முற்றும் முழுவதுமாக அனுபவித்து கொண்டிருந்தவர்களுக்கு இனி வரும் நாட்கள் அது போல் இருக்குமோ என்ற சந்தேகம் இந்த நொடி தீக்ஷியின் மனதில் உண்டானது. 
“ஏன் இவ போனை எடுக்க மாட்டேங்கிறா..?”  என்று மீண்டும் மீண்டும் முயற்சித்த இந்திரஜித், அவள் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதில் யோசனையானான். 
“ஜித்து.. இங்க என்ன மொபைலை நோண்டிட்டு இருக்க..? அந்த மினிஸ்டர் PAகிட்ட பேசி எந்த டைம் வராரன்னு கேளு..? அப்படியே அந்த பூ டெகரேஷனையும் செக் பண்ணு..” என்று விஷ்வஜித் பரபரப்பாக இயங்க, அவனோடு இந்திரஜித்தும் இணைந்து கொண்டாலும், மனதில்  தீக்ஷியின் நிராகரிப்பே..!! 
“அவள் வேண்டுமென்று தான் போனை எடுக்காமல்  ஸ்விட்ச் ஆப்  செய்திருக்கிறாள் என்பதில் இந்திரஜித்திற்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை, ஆனால் ஏன்..?” என்ற கேள்வி இடைவிடாமல் ஓடி கொண்டிருக்க, அவனின் வேலைகளும் அவனை இழுத்து கொண்டு சென்றது. 
இதோ மறுநாள் விடிந்து பங்க்ஷன் ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியும்  தர்ஷினியும், அரசு குடும்பம் இன்னும் வராமல் இருக்க, நொடிக்கொரு முறை அவனின் கண்களும், விஷ்வஜித்தின் கண்களும்  வாசலிலே தவம் கிடந்தது. இது அவனுக்கும், விஷ்வஜித்திற்கும் மிகவும் முக்கியமான நாள், ஆனால் அந்த மகிழ்ச்சி இருவரின் முகத்திலும் இல்லை, 
ஹோட்டல் திறப்பு விழா நெருங்க நெருங்க அண்ணன் தம்பி இருவருக்கும் வேலை நிமிர்த்தியது, இரவும் பகலும் அவர்களின் நேரங்கள் அதிலே கழிந்தது. அதனாலே விஷ்வஜித்தால் மனைவியின் பயத்தை கண்டறிய முடியாமல் விட்டவன்,  அவள் வராமல் போகவும் தான் யோசித்தான். 
நேற்றிரவு தர்ஷினியிடம் பேசும் போதும்  அவள் சோர்வாக பேசியது இப்போது புரிந்தது. இப்போது புரிந்து என்ன செய்ய..? நொடியும் நகரமுடியா சூழ்நிலை, மனம் எதோ தவறு செய்துவிட்டது போல குறுகுறுத்தது. 
மினிஸ்ட்டரும் வந்தாகிவிட்டது, இன்னமும் இவர்கள் வராமல் போக, இருவராலும் எதிலும் பங்கெடுக்க முடியாமல் தானாகவே விலகி நிற்கும் நிலை. விஷ்வஜித் கலங்கி நின்றான் என்றால் இந்திரஜித் கோவத்தோடு நின்றான். 
“ப்பா..” என்ற தருணின் சத்தத்தில் திரும்பிய விஷ்வஜித் மனைவியையும், மகனையும் கண்ட பிறகே முகம் மலர சிரித்தவன், “ஏண்டி.. இவ்வளவு லேட்..?” என்று மகனை ஒரு கையில் அள்ளிக்கொண்டவன், மறுகையால் மனைவியின்  கையை இறுக பற்றியபடி இவ்வளவு நேர தவிப்பையும் மனைவியிடம் காட்டினான். 
“தருண் தூக்கத்துக்கு அழுது கொஞ்சம் கலாட்டா செஞ்சுட்டான், அதான் லேட் ஆயிடுச்சு..” என்று மனைவி சாதாரணமாக சொல்லவும் தான்  அதுவரை இருந்த கலக்கம் மறைந்து நிம்மதியானான் கணவன்.
“வாங்க மாமா..  வாங்க அத்தை..”  என்று இந்திரஜித், அரசுவையும், ராணியையும், பாரதியையும் வரவேற்க, விஷ்வஜித்தும் அவர்களை வரவற்றவன், “தீக்ஷி, மனோஜ் வரலையா..?” என்று கேட்டான். 
“இல்ல மாப்பிள்ளை அவங்க வரல..”, என்று வேறெதுவும் சொல்லாமல் ராணி சுருக்கமாக முடித்துவிட, இந்திரஜித் கொதித்து போனான். இன்றைய நாள் விஷ்வஜித்திற்கு போல் அவனுக்கும் மிகவும் முக்கியமான நாள், 
அண்ணனோடு சேர்ந்து அவனும் பிஸினஸில் அடியெடுத்து வைக்கும் நாள்.  இன்றயை நாளில் அவனின் துணை அவனோடு இல்லாமல் போக, அதனின் முக்கியத்துவம் மறைந்து, எதிலும் மகிழ்ச்சியாக ஒன்றமுடியாமல் முகம் இறுகி போனது. 
“வாங்க அரசு.. வாங்கம்மா..” என்று ராணியையும், பாரதியையும் வாய் திறந்து  வரவேற்ற ஆனந்தன்,  பக்கத்தில் நின்றிருந்த ராமலிங்கத்தை  பார்த்து தலையை மட்டுமே அசைத்தார். சுபா இவர்களை பார்த்ததும் வெறுப்புடன் முகம் திருப்பி கொள்ள, விஷ்வஜித்திற்காக பொறுத்து கொண்டனர். 
மினிஸ்டர் ரிப்பன் கட் செய்து ஹோட்டலை திறந்து வைக்க, விளக்கேற்றும் நிகழ்வில், ஆனந்தன் அவர்களோடு தர்ஷினியையும் ஏற்ற வைக்க, சுபா உள்ளுக்குள் கொதித்து போனார்.
“விஷூ.. நான் கொஞ்சம் வெளியே போறேன்,  நீ பார்த்துக்கோ..”  என்று இந்திரஜித் அண்ணனிடம் சொல்லவும், “டேய்  இந்த நேரத்துல எங்கடா கிளம்பிட்ட..? கெஸ்ட் எல்லாம் பார்க்கணும்..” என்று விஷ்வஜித் சொல்வதை கேட்க, அங்கு இந்திரஜித் இல்லை. 
தீக்ஷியின்  வீட்டிற்கு செல்ல  வேகமாக காரை கிளப்பியவன், வழியில் தீக்ஷியே காலேஜிற்கு வந்து கொண்டுருக்கவும், குறுக்காக அவளின் வழியை மறைத்து  காரை நிப்பாட்டினான். 
அவனின் காரை அடையாளம் கண்டு கொண்டவள், உதடு கடித்து தன் முக உணர்வுகளை மறைத்தவள், தன் வண்டியை ஓரமாக நிறுத்த, இந்திரஜித்தும் அவளின் வண்டியை ஒட்டி காரை நிறுத்தி இறங்கி வந்தவன், எதுவும் பேசாமல், கேட்காமல் அவளை வெறித்தபடி நின்றான். 
அவன் ஏதாவது கேட்டாலாவது சொல்லலாம், பேசலாம்.. இப்படி எதுவும் இல்லாமல் முகம் இறுக நின்றவனின் கோவம் அவனின் சிவந்த முகத்திலும், விறைத்த உடலிலும் நன்றாக தெரிந்தது.  சற்று முன் வரை தான் செல்லாதது அவளுக்கு அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை, 
ஆனால் இந்த நொடி, இந்திரஜித்திடம் தென்பட்ட ஏமாற்றம், அவளை எதிர்பார்த்து  பொய்த்து போன கோவம், அவளின் தவறை அவளுக்கு சுட்டி காட்ட, அவனின் கூர் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தவிப்புடன் முகம் திருப்பி கொண்டாள்.  
இந்திரஜித்தும் அவளின் தவிப்பை உணர்ந்து இப்போதிருக்கும் கோவத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று மனதிற்கு புரிய, காரை திறந்து இன்விடேஷனை எடுத்தவன், எதுவும் பேசாமல் அவளின் கையை பிடித்து இழுத்து அதில் இன்விடேஷனை திணித்தவன், அடுத்த நொடி காரை கிளப்பி கொண்டு சென்றுவிட்டான். 

Advertisement