Advertisement

“அரசு.. தர்ஷினியை அங்க நம்ம வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லுப்பா, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிஞ்சு சும்மா பேருக்கு அங்க வந்து வந்துட்டா தர்ஷினி,  டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இப்போவாவது அனுப்ப சொல்லு..” என்று ராமலிங்கம்  நண்பரிடம் சிபாரிசுக்கு வந்திருந்தார். 
“சொல்றேன் லிங்கம்.. ஆனா மாப்பிள்ளை..?” என்று விஷ்வஜித்தின் ஒதுக்கம் தெரிந்ததால் யோசித்தார். 
“என்ன செய்ய..? மாப்பிள்ளைக்கு நாங்க அவங்க அளவுக்கு வசதியில்லைன்னு குறை போல, அதான் எங்களை இப்படி ஒதுக்கி வச்சிருக்கார்..” என்று அவர் சொல்வது பொய் என்று அவருக்கே தெரிந்தும் சொன்னார். 
“லிங்கம்.. நீ இப்போ பேசுறது ரொம்ப தப்பு, மாப்பிள்ளை அது போல கிடையாது, ஏனோ அவரால உங்களோட ஓட்ட முடியல, அவ்வளவுதானே தவிர, அவர் காசு பணத்தை பார்க்கிறவர் கிடையாது, அப்படி இருந்திருந்தா நம்ம தர்ஷினியை அவர் கல்யாணமே செஞ்சிருந்திருக்க மாட்டார், இனி இது போலெல்லாம் அவரை பத்தி பேசாத..”, என்று அரசு கோபமாக சொல்லவும், உஷாரான லிங்கம், 
“நீ சொல்றதும் சரிதான் அரசு, மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் தான், நாந்தான் பொண்ணை அங்க அனுப்பாத குறையில கிறுக்கு தனமா பேசிப்புட்டேன்..”, என்று முடித்துவிட்டார்.  
“விஷ்வா.. லிங்கம் மகளை பிரசவத்துக்கு  கூட்டிட்டு போக கேட்கிறான்..”, என்று அரசு அன்றே விஷூவிடம் கேட்டார். 
“வேண்டாம் மாமா..” என்று ஒரே வார்த்தையில் அவன் முடித்துவிட,  “லிங்கம்  கஷ்டப்படுறான்.. கொஞ்சம் யோசிங்க மாப்பிள்ளை..” என்று அரசு திரும்பவும் நண்பனுக்காக கேட்டார். 
“அரசுப்பா.. நான் பிரசவத்துக்கு அங்க போகல, எனக்கு இவரோடதான் இருக்கனும்..” என்று தர்ஷினியே அப்பேச்சை முடித்துவிட்டாள்.  
அந்த வார இறுதியிலே தர்ஷினிக்கு பிரசவ வலி வந்துவிட, அன்று காலை தான் விஷ்வஜித் எப்போதும் போல் பிஸினஸை கவனிக்க, ஊட்டி சென்றிருக்க, தர்ஷினி அரசுவின் வீட்டில் இருந்ததால், உடனே அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தனர். சிறிது நேரத்திலே சுக பிரசவத்தில் தர்ஷினிக்கு ஆண் குழந்தை பிறக்க,  மனோஜிடமும், அதிதியிடமும்   சண்டை போட்டு தீக்ஷிதா தான் முதலில் குழந்தையை கையில் வாங்கினாள். 
விஷயத்தை அறிந்து விஷ்வஜித்துடன், இந்திரஜித்தும், தந்தை ஆனந்தனும் உடனே கிளம்ப,  சுபா வர முடியாது என்று வீம்பாக இருந்துவிட, இவர்கள் மூவர் மட்டும் கிளம்பி வந்தனர். ஹாஸ்பிடல் வந்த விஷ்வஜித்தும், ஆனந்தனும் தீக்ஷி கையில் வைத்திருந்த அவர்களின் குடும்ப வரவை பார்க்க, இந்திரஜித்தின்  பார்வையோ குழந்தையையும், குழந்தையை  வைத்திருந்த தீக்ஷியின் மேலும் சரி சமமாக தான் இருந்தது. 
இந்த ஒரு வார காலத்தில், எத்தனை முறை இவளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம், ஆவல், ஆசை கொண்டான்  என்று அவனுக்கே தெரியவில்லை. இன்று அவனின் ஏக்கம் தீர அவளை பார்த்து கொண்டிருந்தவனின் பார்வையை உணர்ந்த தீக்ஷி அவனை “என்ன..?” என்பது போல்  சாதரணமாக பார்த்தாள், 
அவளின் சாதாரண பார்வையை கண்டு கொண்டவனுக்கு,   ஏமாற்றம், ஆதங்கம் உண்டாக தன்னுடைய பார்வையை திருப்பி கொண்டான். தான் அவளை தேடியது போல், அவள் தன்னை தேடவில்லை.. என்ற உண்மை புரிய, “அவளை தன்னை தேட வைக்க வேண்டும்..”  என்று அந்த நிமிடம் உறுதி கொண்டான்.
தீக்ஷிக்கோ அவளின் சிறுபிள்ளை தனத்தில் இந்திரஜித்திடம் சங்கடம் மட்டுமே கொண்டிருந்தவள், அவனிடம்  மன்னிப்பு கேட்டுவிட்ட  பிறகு அந்த சங்கடமும் இல்லாமல், அவளின் நாட்கள் எப்போதும் போல் நார்மலாக தான் சென்றது. அதனாலே அவளால் இந்திரஜித்தின்  தேடல் பார்வையை கண்டு கொள்ள முடியவில்லை.   
தர்ஷினிக்கு தருண் பிறந்த ஒரு வாரம் சென்ற நிலையில் பாரதி கீழே விழுந்து கையை உடைத்து கொள்ள, ராணி தான் தர்ஷினியை தன்னுடைய வீட்டிலே வைத்து பார்த்து கொண்டார். அதில் விஷ்வஜித்திற்கு நிம்மதியே. 
பிள்ளை பிறந்தபிறகு அம்மாவின் உதவு தேவை என்பதால் தர்ஷினி அவளின் அம்மா வீட்டிற்கு தான் சென்றாள். அதில் விருப்பமில்லை என்றாலும், வேறு வழி இல்லாததால் ஒத்து கொண்டிருந்த விஷூவிற்கு, அவள் ராணியின் வீடு வந்தது மகிழ்ச்சியே, 
அங்கிருந்ததால் அவனால் சென்று மனைவியையும், பிள்ளையும் பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டவன், இங்கு வந்ததில் நிம்மதியானான். அதுவே இந்திரஜித்திற்கும் வசதியாகி போனது. தருணை பார்க்க வரும் போதெல்லாம்  தீக்ஷியையும் பார்க்க முடிவதோடு, அவளோடு பேசவும் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டான்.  
அங்கிருந்த நாட்களில் எல்லாம் தீக்ஷியிடம் தானாகவே சென்று  பேச்சு கொடுப்பவன், அங்கு இல்லா நாட்களில் எல்லாம் போனில் பேசுபவன், அவளையும் தன்னிடம்  ப்ரீயாக பேச வைத்திருந்தான். தீக்ஷியும் இந்திரஜித்திடம்  எந்த விதமான தயக்கமும் இல்லாமல் பேசுபவள், அவனின் வார்த்தைகளில், செயலில் இருக்கும் உரிமையை, தேடலை, ஏக்கத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. 
நாளாக நாளாக அதுவே இந்திரஜித்திற்கு ஒரு ஆயாசத்தை கொடுத்தது. இவன் எதாவது உரிமையா செய்தாலும், சிலது ஏற்று கொள்பவள், பலது மறுத்துவிடுவாள். அன்றும் அது போல அவளின் பிறந்தநாளிற்கென அவன் கொடுத்த விலையுர்ந்த வைர செட்டை அவன் எவ்வளவு வற்புறுத்தியும் வாங்கி கொள்ள மாட்டேன் என்று விட்டாள். 
“தீக்ஷி..  என்கிட்ட வாங்கினா என்ன தப்பு..? ஏன் இப்படி செய்ற..?” என்று அவளின் பிறந்தநாளிற்காக ஊட்டியில் இருந்து  வந்தவன், அவளிடம் தென்பட்ட விலகளில்  கோவம் தொனிக்க கேட்டான். 
“ப்ளீஸ்.. இது ரொம்ப ரொம்ப காஸ்டலி, வேண்டாம், அதுக்கு பதிலா எனக்கு இன்னிக்கு நீங்க லன்ச் வாங்கி கொடுங்க..” என, “போடி..” என்று மனதுள் எரிந்தவன், அவளிடம் பேசாமல் கிளம்பிவிட்டான். அதற்கு பிறகு சில பல மாதங்கள் கடந்தும் அவளிடம்  பேசாமல் ஒதுங்கியே இருந்து கொண்டான். 
அவனின் புதிதான கோவத்தில், ஒதுக்கத்தில்  வருத்தம் கொண்டவள், அவனை தொந்தரவு செய்யாமல் தானும் ஒதுங்கி இருந்து கொண்டாள். அதில் இன்னும் இன்னும் ஏமாற்றம் கொண்டவனின் ஆதங்கம், தேடல்,  ஆசை எல்லாம் கோவமாக உருவெடுத்தது. 
“என்னுடைய விலகல் அவளுக்கு ஒன்றுமில்லையா..? நான் அவளுக்கு யாருமில்லையா..? என்னை  சமாதானம் செய்ய மாட்டாளா..?” என்று அவனுள் அவனே கேட்டு கேட்டு கொந்தளித்தான். 
அவள் மேல் ஈர்ப்பு மட்டுமே இருந்திருந்தால் கூட அவனுக்கு இவ்வளவு கோவம், ஏமாற்றம் இருந்துஇருக்காது. அவன் அதை எல்லாம் கடந்து, காதல் எனும் நிலையில் வந்து நின்றுவிட்டான். அதனாலே அவனால தீக்ஷிதாவின் விலகலை ஏற்று கொள்ள முடியாமல், அவளிடம் கோவப்பட தொடங்கிவிட்டான்.
அவர்களின் சென்னை ஓட்டல் வேலை முடியும் தருவாயில் இருப்பதால், இந்திரஜித் அடிக்கடி சென்னை வருபவன், எப்போதும் போல் விஷூவின் வீட்டில் தான் தங்கினான். தருணுக்கு உடம்பு முடியவில்லை என்று தர்ஷினி ராணியிடம் சென்று விட்டிருந்தாள்.  அவனுக்கு ராணி என்றால் தான் அவனின் அழுகை அடங்கும்.
அவன் பிறந்ததில் இருந்து அவனை பார்த்து கொள்வதால், பாரதியை விட ராணியே அவனுக்கு மிகவும்  நெருக்கம், அவரும் எப்போதுமே சலிக்காமல் அவனை இடுப்பில் வைத்து கொண்டே சுத்துவார். அதுவும் அவனுக்கு உடம்பு முடியவில்லை என்றால் சொல்லவே வேண்டாம், தூங்கும் போதும் அவர் வேண்டும் அவனுக்கு, 
இப்போதும் அது போல அங்கு சென்றுவிட, ஆண்களுக்கான இரவு உணவை தீக்ஷிதான் கொண்டு வந்தாள். இந்திரஜித் இவளை பார்த்தும் கோபமாக முகத்தை திருப்பி கொள்ள, “சாப்பிட வாங்க..” என்று அவனை கூப்பிட்டாள்.  
“இவாளால எப்படி என்கிட்ட சாதாரணமா பேச முடியுது..?”  என்று கொதித்தவன்,  தாங்கமுடியாமல், “உனக்கு என் கோவம் ஒன்னுமே இல்லையா..?” என்று கேட்டான். அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தவளை பல்லை கடித்து பார்த்தவன்,  
“நான் உன்கிட்ட பேசி மாசக்கணக்கா ஆகுது, இந்த நிமிஷம் வரை நீயா எனக்கு ஒரு போன் செஞ்சு கூட பேசல, நான் உன்னை ஒவ்வொரு செகெண்டும் எதிர்பார்த்து, தேடி அலையனும், அதானே..?” என்று  ஆத்திரமாக கத்தியவன், அவளின் அதிர்ந்த பார்வையில்,
“ம்ப்ச்..” என்று அதிர்ப்தியாக கையை வீசியவன், அங்கிருந்து கிளம்பும் நேரம், வந்த விஸ்வஜித், “எங்க சாப்பிடமா போற..?, வந்து சாப்பிடு..” என்று தம்பியை அருகில் அமரவைத்து கொண்டான். தீக்ஷி தான் அவனின் பேச்சில் அதிர்ந்து இருந்தவள்,  அவனையே   பார்த்து கொண்டிருந்தாள். 
அவளின் பார்வை உணர்ந்த இந்திரஜித், நிமிர்ந்து அவளை முறைத்தவன்,  “என்னை  எதுக்கு இப்படி பார்த்துட்டே இருக்க..? பார்க்காதா..” என்று சத்தமாகவே சொல்லிவிட, தீக்ஷிக்கு சங்கடமாகி போனது. 
“என்னடா ஆச்சு..?” என்று விஷ்வஜித்து  இவர்களை பார்க்க, “உனக்கு ரொம்ப முக்கியமா சொல்லனுமா..? சாப்பிடற வேலையை மட்டும்  பாரு..” என்று அண்ணனை அதட்டியவன், சாப்பிட செய்ய, 
“நான் கிளம்புறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க..” என்று அங்கிருக்க முடியாமல் தீக்ஷி கிளம்பவும், “ஏன் கொஞ்ச நேரம் இங்க இருக்க மாட்டியா..?” என்று அதற்கும் அவளிடம் கோவப்பட்ட இந்திரஜித்தை கூர்மையாக பார்த்த தீக்ஷி, 
“நீங்க ஏன் கொஞ்சநாளா என்மேல் இவ்வளவு கோவபடுறீங்க..?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
 “எனக்கு இருக்கிறது..!! உனக்கு இல்லைன்ற கோவம் தான்..!!!” என்று இந்திரஜித் சொல்லவும், “இது என்ன பதில்..?” என்று தீக்ஷி பார்த்தாள். 
“என்ன புரியலையா..? இதுதான் என் கோவம், எனக்கு தோன்ற மாதிரி உனக்கும் தோணுனா என் கோவம், பேச்சு, எதிர்பார்ப்ப  எல்லாம் புரியும், அதான் இல்லையே..?” என்றான். 
“ஜித்து.. என்ன இது..?”  என்று தம்பியின் பேச்சு செல்லும் திசையை புரிந்து விஷூ கோவமாக  அதட்டினான். 
“என்னை என்ன தான் செய்ய சொல்ற..? இத்தனை மாசம் ஆகியும் இவளுக்கு என் மனசு புரியவே இல்லை..!!   இல்லை என்னால தான் புரிய வைக்க முடியலையா தெரியல..!!”
“இதோ இப்போ கூட நான் இவகிட்ட சண்டை போட்டு பேசாம இருந்து மாசக்கணக்கா ஆச்சு, இவ என்னை ஏன்னு கூட கேட்டுக்காமா ரொம்ப சாதாரணமா பேசுறா.. என்னால அப்படி சாதாரணமா பேச முடியல..” என்று அவனின் ஏமாற்றம் கோவமாக மாறியிருக்க, ஆவேசமாக கத்தவே செய்தான். 
“நானும்  இவகிட்ட என்னோட கோவத்தை காட்ட கூடாதுன்னு என்னை நானே ரொம்ப கட்டுப்படுத்திகிட்டு தான் இருந்தேன், ஆனா  இதுக்கு மேலயும் என்னால எப்படி பொறுமையா இருக்க முடியல..?”, என்று கத்தியவன், தீக்ஷிதாவின் வெறித்த பார்வையில் சற்று நிதானமானவன், 
“எனக்கும் புரியுது தான், எனக்கு உன்மேல்  தோன்றது  போல, உனக்கும் என்மேல தோணனும்னு  எந்த கட்டாயமும், அவசியமும் இல்லைன்னு, ஏன் நான் இப்போ பேசுறது, கோவப்படறது, எதிர்பார்க்கிறது எல்லாமே ரொம்ப தப்பு தான். ஆனாலும் என்னால முடியல”, என்று கண்களை மூடி திறந்தவன், 
“சாரி..” என்று இத்தனை நாள் மனப்போராட்டத்தில் சற்று சோர்வாக சொன்னவன், தீக்ஷிதாவை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டான். அன்று மட்டுமில்லை அடுத்து தருணின் முதல் வருட பிறந்தநாள் பங்க்ஷனிற்கு வந்த போதும் அவளின் புறம் திரும்பவே இல்லை. 
ஆனால் இந்த முறை தீக்ஷிதாவின் பார்வை அவன் மேல் மட்டும் தான் இருந்தது. அவன் அன்று அவளிடம் கோபப்பட்ட போது  “இதென்ன அராஜகம்..?” என்று  அவன் மேல் மிகவும் கோவம்தான் வந்தது. 
ஆனால் இறுதியாக அவன் மிகவும் சோர்வாக சொன்ன “சாரி..”  தான் அவளை எதோ ஒரு விதத்தில் பாதித்திருந்தது. 

Advertisement