Advertisement

பாரதி.. கணவரின் நடிப்பை கண்டு கொண்டவர், ஆத்திரத்துடன் அவரை நெருங்கும் சமயம் ராமலிங்கம் அட்டேக் வருவது போல நெஞ்சு வலியில் துடித்தார். அதை உண்மையென நம்பிய அனைவரும், அவருக்கு முதலுதவி செய்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
இக்கலவரத்தில் மாப்பிள்ளை வீட்டினர், சொத்து கிடைக்காது என்று புரிந்து கொண்டு, யார் என்ன  சமாதானம் சொன்னாலும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பிவிட, தர்ஷினி மணப்பெண் அலங்காரத்தில், எந்த விதமான வருத்தமும் இல்லாமல் நிமிர்ந்து தான் நின்றிருந்தாள். 
நெஞ்சு வலி வருவது போல நடித்து மாப்பிள்ளை வீட்டினரை ஏமாற்றி தாலி கட்ட வைத்துவிடலாம் என்று திட்டம் போட்டிருக்க, அத்திட்டம் நிறைவேறாமல்  இப்படி திருமணத்தையே நிறுத்திவிடுவார்கள் என்று எதிர்பார்க்காமல்  ராமலிங்கமும்  அடுத்து செய்வதறியாது நின்றுவிட்டார். 
இதில் அவரின் சுயரூபத்தை கண்டு கொண்டவர்கள் பாரதியும், விஷ்வஜித்தும் தான். அவனும் இத்திருமணத்திற்கு தொழில் நண்பர்கள் என்ற முறையில் வந்திருந்தான். அதோடு அவனுக்கு அரசு என்றால் பெர்சனலாக மிகவும் பிடிக்கும், 
அவன் அந்த சமயத்தில் தான் படிப்பை முடித்து தொழிலில் நுழைந்திருந்தான். அவர்களின் தொழில் என்று பார்த்தால், ஊட்டியில் இருக்கும் எஸ்டேட்டுகள், மூன்று பெரிய அளவிலான ரிசார்டுகள், ஹோட்டல்கள், அதை தவிர்த்து  மற்ற பிஸ்னஸ்களில் இன்வெஸ்ட் செய்திருப்பார்கள். 
விஷ்வஜித் தொழிலில் நுழைந்தபிறகு, அவர்களுடைய  ஹோட்டலை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தான். அதன் முதல் இடமாக சென்னையை தேர்வு செய்தவன், பெர்மிஷனுக்காக மினிஸ்ட்டரை பார்க்க சென்றிருந்தான். 
அந்த மினிஸ்டர் இவனின் பணஅளவு தெரிந்து கொண்டு, மிக மிக அதிகமாக பணம் கேட்டதோடு, தொழிலும் பங்கு கேட்டார். அங்கு வேறொரு விஷயமாக வந்திருந்த அரசு, மினிஸ்டர் இளம் வயது விஷ்வஜித்தை ஏய்க்க பார்ப்பதை புரிந்து கொண்டார். 
“என்ன சார் இது..? நீங்க கேட்கிறது பகல் கொள்ளையா இல்லை இருக்கு, நாங்க ஓடி ஓடி உழைச்சு பிஸ்னஸ் செஞ்சு வர்ற காசை, நீங்க உட்கார்ந்த இடத்துல இருந்து புடுங்குவீங்களா..? அதிலும் புதுசா தொழில்ல எல்லாம்  வேற பங்கு கேட்கிறீங்க..?  இது சரியில்லையே.. இப்படி இருந்தா நாங்க எல்லாம் எப்படி பிஸ்னஸ் செய்ரது..? இதுக்கு எங்க சங்கம் சார்பா ஏதாவது செஞ்சுதான் ஆகணும் போல..” என்று சங்கத்தை இழுத்து வைத்து பேசினார். 
இவர்கள் போன்ற  பிசினஸ் ஆட்கள் பணம் தராவிட்டால் அவர்களின் கட்சி ஏது, அதில் அரண்டு போன மினிஸ்ட்டர், விஷ்வஜித் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கி கொண்டு அன்றே பெர்மிஷனையும் கொடுத்துவிட்டார். அதிலிருந்து இருவருக்குமே நல்ல நெருக்கம், அந்த மரியாதையில், அன்பில் தான் இத்திருமணத்திற்கு வந்திருந்தான். 
ஆனால் வந்த இடத்தில இது போலானதில் அவன் பார்வை முழுவதும் தர்ஷினி மேல் தான். ஏனோ அவளை பார்க்க பார்க்க ஒரு ஈர்ப்பு, பரிவு,  புதிதாக ஒரு  உணர்வு உண்டானது. எல்லாவற்றையும் விட மிகவும் நிமிர்வாக நின்றிருந்த அவளின் நிமிர்வு, அவனை மிகவும் வசியபடுத்தியது. எப்போதும் போல இந்த முறையும் சில பல நொடிகளிலேயே முடிவெடுத்தவன், அந்த முடிவை அரசுவிடம் சொல்லியும் விட்டான். அவனின் முடிவில் ஆனந்த அதிர்ச்சி கொண்ட அரசு, 
“ரொம்ப நல்லது விஷ்வா, ஆனா உங்க வீட்ல எப்படி..? அந்தஸ்து வித்தியாசம் வரும்,  அதோட உங்களுக்கு சின்ன வயசும் கூட.. தர்ஷினிக்கும் உங்களுக்கும் சில மாசம் தான் வித்தியாசம் கூட..” என்று பாதகங்களை சொன்னார். 
“வீட்ல நான் பேசிக்கிறேன் அங்கிள், வயசுன்னு பார்த்தா கல்யாணம் செய்ற வயசு தான்..” என்று கண்ணடித்தவன், “நான் எங்க அப்பாவோட 20 வயசுல பொறந்தேனாம், அப்படி பார்த்தா என் கல்யாணம் லேட் தான், என்ன செய்ய அங்க அப்பா சுயநலவதியா  இருக்காரே..” என்று குறும்பாக சொல்ல, சிரித்த அரசு, 
“நான் உங்க அப்பாவரைக்குமாவது போன்ல பேசுறேன்..” என்று ஆனந்தனிடம் போன் மூலம் பேச, அவரும் விஷ்வஜித்தின் விருப்பத்தின் பேரில் ஒத்து கொண்டார்.  அடுத்து தர்ஷினியிடமும் விஷ்வஜித்தை காட்டி, அவனை பற்றி சொல்லி அவளிடமும் சம்மதம் வாங்கி, அன்றே  அவனுக்கும், தர்ஷினிக்கும் அதே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தேறியது. 
திருமணம் முடிந்த கையோடு எல்லோரும் ஊட்டி கிளம்பினார்கள். அங்கு சென்றால் சுபா, இத்திருமணத்தை ஏற்க முடியாது என்று ஒற்றை காலில் நின்றுவிட்டதோடு, தர்ஷினி வீட்டிற்குள் வந்தால், தான் வெளியே சென்று விடுவதாக வேறு மிரட்டினார். 
அவரின் பிடிவாதத்தில் ஒன்றும் செய்ய முடியாமல், மணமக்களோடு சென்னை திரும்பிவிட்டனர். நடுஇரவாகிட்ட நிலையில் மணமக்கள் ராமலிங்கத்தின் வீட்டிற்கு செல்லலாம் என.. விஷ்வஜித், “வேண்டாம்..”, என்றுவிட்டான். 
அவனுக்கு ராமலிங்கத்தின் மேல்  சிறிதளவும் நல்ல எண்ணம் இல்லை. ஏனோ அவரை அவனுக்கு பிடிக்காமலும் போயிற்று, அதனாலே தாங்கள் தனி வீட்டில் தங்குவதாக சொல்ல, இந்த நேரத்தில் தனி வீடு எப்படி..? என்று அவர்களை தங்களின் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார் அரசு. 
மணமக்கள் குளித்து வர, இருவரையும் தனி ரூமில் விட்டனர். தர்ஷினி மிகுந்த தயக்கத்தோடு ரூமிற்குள் செல்ல, அங்கு விஷ்வஜித் இவளை எதிர்பார்த்து காத்திருந்தான். “வா தர்ஷினி.. இங்க உட்காரு..”, என்று மனைவியின் கை பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தவன், 
“எனக்கு உன்னை பத்தி எதுவும்  தெரியாது, சொல்லேன், தெரிஞ்சுக்கிறேன்..” என்று ஆசையாக கேட்டான். அவன் சொன்னதை கேட்ட தர்ஷினி, 
“என்னை பத்தி எதுவும்  தெரியாம எப்படி என்னை கல்யாணம் செஞ்சிங்க..?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.  
“எனக்கு உன்னை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு தோணுச்சு, அதான் செஞ்சுக்கிட்டேன்.”,  என்றவனை, “இதென்ன பதில்..?” என்று கேள்வியாக பார்த்தாள் தர்ஷினி. 
“நான் சொல்றது புரியலையா..?” என்றவன், “இப்போ உன்னையே எடுத்துக்கோ, காலையில அரசு அங்கிள்  என்னை காட்டி கல்யாணத்துக்கு உன்கிட்ட கேட்டாங்க இல்லை,  ஓகே இவரை  கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு  என்னை பார்த்த அந்த  சில செகண்ட்லே,  உனக்கு எப்படி தோணுச்சு..?” என்று கேட்டான். 
“அது, அது உங்களை பார்க்கும் போது எதோ ஒரு நம்பிக்கை, உண்மை தெரிஞ்சுது, அதோட அரசப்பாவுக்கும் உங்களை பத்தி நல்லா தெரியும், அதான்..”  என்றாள் வெளிப்படையாக.  அவளின் பதிலில் திருப்தி கொண்ட விஷ்வஜித், 
“எனக்கும் உனக்கு தோணின மாதிரி ஒரு பாசம், புதுசா ஒரு நல்ல பீல்..  அந்த சூழ்நிலையிலும் நிமிர்ந்து நின்ன உன்னோட அந்த நிமிர்வு எல்லாம் பிடிச்சுது அதான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன், அதோட நான் எப்படின்னா எனக்கு சரின்னு பட்டதை  சில செகண்ட்லே செஞ்சு பழக்கப்பட்ட ஒரு வித்தியாசமானவன், போக போக உனக்கே என்னை பத்தி புரிஞ்சுரும்..” என்றவன், 
“நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்பேன், தப்பா எடுத்துக்க கூடாது..”  என்று தயக்கமாக இழுத்தவன், “உனக்கு முன்னாடி பார்த்திருந்த மாப்பிளையை கல்யாணம் செய்ய முடியாம போனதுக்கு வருத்தம் மாதிரி ஏதாவது..?” என்று கேட்டான். அவனின் கேள்வியில் லேசாக சிரித்த தர்ஷினி, 
“எனக்கு முதல்லே இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரியும்.. இன்னும் சொல்ல போனால் எனக்கு அது நிம்மதியவும் இருந்துச்சு..”, என்றவள், விஷ்வஜித்தின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல், மேலும் தொடர்ந்தாள். 
“இந்த கல்யாணம் உறுதியான நாள்ல இருந்து எனக்கு மனசஞ்சலம், கலக்கம் தான், அந்த மாப்பிள்ளையை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவும் இல்லை, ஆனா அதை சொல்ற உரிமை எல்லாம் எனக்கு  இல்லை, அவங்க தொழில் பங்கை கேட்டது எனக்கு மாப்பிள்ளை மூலமா முதல்லே தெரியும், அடிக்கடி போன் செஞ்சு அதை மட்டும் தான் என்கிட்ட கேட்பான்”, 
“நானும் எங்க அப்பாட்ட இந்த விஷயத்தை பத்தி பேசினத்துக்கு, அவர் இதை பத்தி யாருகிட்டேயும் சொல்லாத, நான் பார்த்துகிறேன்ன்னு சொல்லி,  ரொம்ப பாடுபட்டு அந்த வசதியான மாப்பிள்ளையை விட்டுற கூடாதுன்னு போராடி, மணமேடை வரை கொண்டு வந்துட்டார். ஆனா..?” என்று பெரு மூச்சு விட்டாள். 
“பணம் முன்னாடி நிக்கிற  எந்த உறவும் நிலைக்காதுன்னு எங்க அப்பாக்கு தெரியாம போச்சு, இனியாவது தெரிஞ்சிகிட்டா நல்லது..” என, “அது கஷ்டம் தான்..” என்று விஷ்வஜித் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.  
இப்படியே  புது மணத்தம்பதிகள் தங்களின் இணையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு விடிய விடிய பேசி, இறுதியில் கலைப்பாகி தூங்கி விட்டனர். மறுநாள் மணி பத்தை கடந்தும் கீழே வராமல் போன மணமக்களை எதிர்பார்த்து மிகவும் காத்திருந்தது நம் தீக்ஷியும், அதிதியும் தான். 
இருவருக்கும் விஷ்வஜித் அதிரடியாக தங்களின் அக்காவை திருமணம் செய்ததில் அவன் மேல் ஒரு ஹீரோ அபிமானம் உருவாகியிருந்தது. அவனை நன்றாக பார்க்க, அவனிடம் பேச என்று ஆர்வத்துடன் மேலேயே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தனர். 
“தீக்ஷி, அதி.. அங்க என்ன பார்வை வேண்டியிருக்கு..? கிளம்புங்க..”  என்று இருவரையும், அவர்கள் ரூமிற்கு அனுப்பி விட்டார் ராணி. மதிய உணவு நேரத்திற்கே கீழே வந்த இருவரையும் தீக்ஷியும், அதிதியும் குறுகுறுவென பார்த்தனர். 
இரு மச்சினிகளின் பார்வையை கண்டு கொண்டவன், அச்சிறு பெண்களிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் லேசாக சிரித்தபடி கடந்துவிட்டவன், அரசுவிடம் சென்று தனி வீடு எடுத்து தங்குவதாக சொன்னான். 
“விஷ்வா.. எப்படியும் நீ உன்னோட ஹோட்டல் கான்ஸ்டரக்ஷன் வேலையை, மத்த தொழிலை எல்லாம்  பார்க்க, அடிக்கடி வெளியூர், ஊட்டி போக வேண்டியிருக்கும், அப்போ எல்லாம் தர்ஷினி எப்படி தனியா..?” என்றவர், 
“இங்க நம்ம தெருவிலே ஒரு வீடு விலைக்கு வருது, அதை வாங்கிடலாமா..? சொத்துக்கு சொத்தும் ஆச்சு, தர்ஷினி எங்க பக்கத்திலும் இருப்பா, நீயும் கவலையில்லாம உன் பிசினஸை பார்த்துக்க வசதியா இருக்கும்..”  என்று சொன்னார். 
விஸ்வஜித்திற்குமே அந்த யோசனை பிடித்துவிட, அன்றே சென்று வீட்டை பார்த்தவர்களுக்கு, வீடு பிடித்துவிட, அரசு சீதனமாக அவ்வீட்டை வாங்கி தருவதை மறுத்துவிட்டு அவனே வாங்கினான். அந்த வாரத்திலே நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சு குடித்தனமும் சென்றுவிட்டனர். அதுவரை அரசுவின் வீட்டில் தான் இருந்தனர்.
ராமலிங்கத்தின் வீட்டிற்கு மறுவீடு செல்ல கேட்டதற்கும் வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்டான். அவனின் இத்தைகைய செயல், ராமலிங்கத்திற்கு எனோ கிலியாகவே இருந்தது. அவரை பார்க்கும் அவன் பார்வை வெறுப்புடனே இருக்க, அவனை நெருங்க முயன்றவருக்கு  இன்ச் கூட இடம் கொடுக்க வில்லை. 
தனி குடித்தனம் ஆரம்பித்த புது மன தம்பதிகள் முதலில் நண்பர்களாகவே தங்களின் வாழ்க்கையை ஆரம்பித்தனர். நாட்கள் செல்ல செல்ல இருவருக்குமே, மற்றவர் மேல்  பிடித்தம்  உண்டாக, நண்பர்களாய் இருந்தவர்கள் கணவன், மனைவியாய் தங்களின் வாழ்க்கையை தொடங்கினார்கள். 
அந்த மாதத்திலே தர்ஷினி கருவுற்றாள். இந்த செய்தி தெரிந்த பின்னும், சுபா இவர்களை ஏற்று கொள்ளாமல் வீம்பாகாவே இருந்தார். ஆனந்தன் மட்டுமே அடிக்கடி வந்து மகனை, மருமகளை பார்த்து செல்வார். தர்ஷினி கருவுற்ற முதல் சில நாட்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  இருவருக்குமே மிகவும் இளவயது என்பதால், ராணி தான் எல்லாற்றையும் பார்த்து கொண்டார்.  
அரசு, ராணியின் அன்பில், இருவரிடமும் மிகவும் நெருக்கமாகிவிட்டான்  விஷ்வஜித். அவனால் ராமலிங்கத்துடன் ஓட்ட முடியவில்லை என்பது புரிந்து கொண்டு, இவர்களே எல்லாவற்றையும் முன்னின்று செய்தனர். அங்கு சுபாவும் மகனிடமும் விலகி நிற்க, அப்பாவும், வெளிநாட்டில் படித்து கொண்டிருக்கும் தம்பி இந்திரஜித்தும் தான் அவனுக்கு துணையாக இருந்தனர்.
இதில் தீக்ஷி சென்னையிலே கல்லூரி படிப்பை படிக்க, அதிதி கோவை ஹாஸ்டெல் சென்றுவிட்டாள். இருவரும் விஸ்வஜித்தின் அமைதியான குணம் புரிந்து, அவனிடம் இருந்து விலகியே இருந்து கொண்டனர். 
அதிலும் அதிதிக்கு எனோ அவனுக்கு தங்களின் குடும்பம் பிடிக்கவில்லை என்று நன்றாக புரிய, அக்காவுடன் நன்றாக இருப்பதே போதும் என்ற எண்ணத்தில் இன்னும் இன்னும் விலகி விட்டாள். பாரதிக்கும் அவனின் விலகல் புரிய, அவன் இல்லா நேரத்தில் சென்று மகளுடன் இருந்துட்டு வருவார். 
மனோஜ் மட்டுமே விஷ்வஜித்துடன் ஒட்டிக்கொண்டு இருப்பான். விஷ்வஜித்திற்குமே குட்டி தம்பி போல இருந்த மனோஜை மிகவும் பிடிக்கும் என்பதால், அவனுமே அவனுடன் இருக்க பிரியப்படுவான்.
தர்ஷினிக்கு ஐந்தாம்  மாதம் ஆரம்பித்திருக்கும் நேரத்தில் விஷ்வஜித்திற்கு ஒரு பெரிய பிஸ்னஸ் ஆர்டர் கிடைக்க, அவனின் முழு நேரத்தையும் அதில் இழுத்து கொள்ள, தர்ஷினி தனியாக இருக்க முடியாமல், அரசுவின் வீட்டில் சென்று தங்கி கொள்வாள்.  
ராமலிங்கத்தின் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என விஷ்வஜித் அவளிடம் எப்போதுமே  சொன்னதில்லை, ஆனால் தர்ஷினிக்குமே சில நாட்களாக தந்தையின் சுயரூபம் தெரிய ஆரம்பித்திருக்க, அவளுமே அங்கு செல்ல பிரியப்படாமல் அரசுவின் வீட்டிற்கு தான் செல்வாள். 
நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க, தர்ஷினியின் ஒன்பதாம் மாதத்தில் இந்திரஜித் படிப்பை முடித்துவிட்டு சொந்த நாடு திரும்பியிருந்தான். வந்தவன் ஊட்டிக்கு செல்லாமல் நேரே தன் அண்ணனின் வீட்டிற்கு தான் வந்தான். அங்குதான் முதலில் தீக்ஷியையும்  பார்த்தான்.

Advertisement