Advertisement

தீரா காதல் தீ  6
“தீக்ஷிதா.. எங்க கிளம்பிட்ட..?, நான் இங்கதானே இருக்கேன்..”  என்று கேட்டவாறே தன் கையை பிடித்து தடுத்த    விஷ்வஜித்தை அங்கு எதிர்பார்ககாமல் அதிர்ந்தவள், “ண்ணா..!!!”   என்றாள். 
“என்ன  சொல்லி கூப்பிட்ட..?” என்று விஷ்வஜித் சத்தமாக கேட்டான். அவன்  எதனால் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு மலர்ந்த முகத்துடன் “அண்ணான்னு..” கூப்பிட்டேன்.. என்றாள் கொஞ்சம் சத்தமாக.. 
“Mr. அருணாச்சலம் கேட்டேங்களா..? அவளுக்கு யாருமில்லைன்னு யாரோ இங்க பேசினமாதிரி என் காதுல விழுந்திச்சு..”, என்று கொஞ்சம் அதட்டியே அதிகாரத்துடன் கேட்டவன், 
“இந்த அண்ணனைவிட பெரிய சொந்தம் அவளுக்கு தேவையில்லன்னு நினைக்கிறேன்.. சோ மத்தவங்களை பத்தி பேசுறதுக்கு முன்னாடி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு பேசுறது நல்லது”,  என்றவன், 
“அப்பறம் என்ன சொன்னீங்க..? ரொம்ப பெருந்தன்மையா உங்களுக்கு..? உங்க பெருந்தன்மை ஹேர் எல்லாம் எதுக்குன்னு எங்களுக்கு தெரியும்..” என்று அவர்களின் எண்ணத்தை கண்டு கொண்டதை சொன்னவன்,
“நிகில்.. நீங்க என் தங்கச்சிக்கு மாப்பிள்ளையா..? நோ சேன்ஸ், எல்லோர் முன்னாடி கேட்டு அவளை கார்னர் செய்ய பார்க்கிற நீ..?” என்று கோவமாக கேட்டவன், “ஜாக்கிரதை..” என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவன், தீக்ஷியின் கை பிடித்து அங்கிருந்து கூட்டிக்கொண்டு சென்றான். 
இதில் மிகவும் வெறியானது நம் இந்திரஜித் தான். இவர்கள் பின்னால் வேகமாக வந்தவன், “ஏய்.. நில்லுடி, யாரை கேட்டு இவனை நீ அண்ணான்னு கூப்பிட்ட..?”  என்று ஆத்திரமாக தீக்ஷியை அதட்டினான். அவனின் கோவம் எதனால் என்று புரிந்த விஷூ, மெலிதான சிரிப்புடன் தம்பியை பார்க்க, அவனோ அண்ணனை கொலை வெறியாக பார்த்தான். 
“டேய்.. உனக்கு இவ தங்கச்சியாடா..? துரோகி, ஒழுங்கு மரியாதையா இப்போவே போய் எல்லார்கிட்டயும் இவ உன் மச்சினிச்சின்னு சொல்லிட்டு வா.. நீயும் போடி..”  என்று மிரட்ட, தீக்ஷி எங்கோ பார்த்து  நின்றாள். 
“விடுடா, இப்போ என்ன..? எனக்கு தங்கச்சின்னு தானே சொன்னேன், உனக்கு இல்லையே..”  என்று லாஜிக் பேசினான் விஷ்வஜித். இந்திரஜித்தோ அதை ஏற்காமல் முறைத்து கொண்டு நின்றவனின் பார்வை எல்லாம், உள்ளுக்குள் மிகவும் உடைந்து போனாலும், வெளியே விறைப்பாக நின்றிருந்த தீக்ஷியின் மேல் தான் இருந்தது. 
“அவளுக்கு யாரும் இல்லை..” என்று அவர்கள் சொன்னது, அவளை மிகவும் பாதித்திருப்பது புரிந்தது. அதனாலே, “நீ கிளம்பு..” என்று தானே அவளை கார் வரை கூட்டி சென்றவன், விஸ்வஜித்தை பார்க்க, அவன் அவளுடன் கிளம்பினான். காரில் சென்று கொண்டிருந்த தீக்ஷி, விஷ்வஜித்தின்  நினைவுகள் எல்லாம்  அவர்களின்  கடந்த காலத்தில் தான் இருந்தது.
……………………………………………………………………………………..
“தீக்ஷி.. தீக்ஷிதா.. சீக்கிரம் ஸ்கூல்க்கு  டைம் ஆகலையா..? இன்னும் எவ்வளவு நேரம் தான் போன்ல பேசுவ..? சீக்கிரம் வா..” என்று ராணி மகளை அதட்டி கொண்டிருக்க, மகளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், மிக தீவிரமாக  தர்ஷினியிடம் போனில் பேசி கொண்டிருந்தாள். 
“தீக்ஷி.. தீக்ஷி..” என்று தொடர்ந்து குரல் கொடுத்த ராணி, அவள் வராமல் போக, தானே சென்று மொபைலை அவளிடம் இருந்து பிடிங்கி தன் காதில் வைத்தவர், 
“தர்ஷி.. நீ  இன்னும்  கிளம்பாம  இவகிட்ட என்ன பேசிட்டிருக்க..? கிளம்பு, அவளும் ஸ்கூல் கிளம்பட்டும், ஈவினிங் ரெண்டு பேரும் பேசுங்க..” என்று கண்டிப்புடன் சொன்னார். “சரிம்மா.. நாங்க கிளம்பிட்டு, அங்க வந்துடுறோம்..” என்று தர்ஷினி போனை வைத்து விட, ராணி திரும்பி மகளை முறைத்தார். 
“என்ன தீக்ஷி இது..? ஸ்கூலுக்கு கிளம்புற டைம்ல போன் பேசிட்டிருக்க, நீ டைம்க்கு போகலேன்னா ஸ்கூல் கேட்டை க்ளோஸ் செஞ்சுடுவாங்க, அப்பறம் நீ வெளியே தான் நிக்கணும், தெரியுமில்லை..”  என்று  ராணி  சொல்லவும், 
“ம்மா.. உனக்கு விஷயமே தெரியல, அவ அதுக்கு பிளான் செஞ்சுதான் போன்ல பேசிட்டு, லேட் பண்ணிட்டிருக்கா..”, என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும்  தீக்ஷியின் தம்பி மனோஜ் சொல்லிவிட்டு சாப்பிட செய்தான். தன்னுடைய பிளானை  அம்மாவிடம் போட்டு கொடுத்த  தம்பியை முறைத்த தீக்ஷி,எழுந்து சென்று அவனின் தலையில் கொட்டு வைத்தாள்.  
“எதுக்கு இப்போ என் தலையை தடவி கொடுக்கிற தீக்ஷி..?” என்று அவளின் கொட்டை கிண்டலடித்தவன்,  “சுப்பு.. இன்னிக்கு பூரி, குருமா சூப்பர்.. நீங்க  லஞ்சுக்கும் இதையே கொடுத்துடுங்க, அதோட கொஞ்சம் தயிர் சாதமும் வைச்சுடுங்க..” என்று சுப்புவிடம் பேச ஆரம்பித்துவிட்டான். 
“தீக்ஷி..  மனோஜ் சொல்றது உண்மையா..? ஏன் லேட் செய்ற..? எங்களோட வர்ற பிளான் ஏதும் செய்றியா..?” என்று மகளை பற்றி நன்கு அறிந்தவராக கேட்டார் ராணி. 
“ம்மா.. அதெல்லாம் ஒன்னும் இல்லை, நான் வந்தா  உங்களுக்கும், தர்ஷி அக்காவுக்கும்  ஷாப்பிங் செய்ய ஹெல்ப்பா இருக்கும்னு தான் பார்த்தேன், எனக்காக ஒன்னும் இல்லை..” என்று தோளை குலுக்கியவளை முறைத்த ராணி, 
“இந்த வருஷம் நீ 12த் ஞாபகம் இருக்குல்ல, இன்னும் கொஞ்ச நாள்ல போர்ட் எக்ஸாம் வேற வரபோது, அதுக்கு ப்ரீபேர்  செய்யாம, எங்களோட ஷாப்பிங் போகணுமாக்கும்..” என்று மகளை கண்டிப்புடன் அதட்டி, ஸ்கூல் கிளப்பிவிட்டார். 
“ராணி..” என்றபடி பாரதி, மகள் தர்ஷினியுடன் வர, “வாங்கக்கா.. சாப்பிடீங்களா..?” என்று ராணி அவர்களை வரவேற்று அவர்கள் மறுக்க மறுக்க, உணவுண்ண வைத்தவர், அவர்களுடன் ஷாப்பிங் கிளம்பினார்.  
“ராணி.. இந்தளவு விலை இருக்கிற புடவை எல்லாம் ஏன் எடுக்கிற..? வேண்டாம்மா..”, என்று ராணி எடுத்த விலை அதிகமுள்ள புடவைகளை மறுத்தார் பாரதி. 
“க்கா.. தர்ஷினியும் என் பொண்ணு தான், இது எல்லாம் நான் அவளுக்கு கொடுக்கிற கல்யாண சீரா நினைச்சுக்கோங்க..”, என்று  பாரதி மறுத்தாலும் கேட்காமல் அதிக விலை உள்ள ஆடைகளையே எடுத்தார். 
பாரதிக்கு, ராணியின் எண்ணம் நன்றாக புரிந்தது, தர்ஷினிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார் ஓரளவிற்கு வசதியானவர்களே, அவர்கள் அளவு  ராமலிங்கம் குடும்பம் இல்லை, ஆனாலும் தங்களின் சக்திக்கு மீறித்தான் மகளை அங்கு கொடுக்க ஒத்து கொண்டவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட, ராணி  தன்னால் முடிந்த செலவுகளை பார்த்து கொண்டார். 
பாரதியின் கணவர் ராமலிங்கமும், தீக்ஷியின் தந்தை அரசுவும் சென்னை பட்ட படிப்பு முதல்லே நண்பர்கள், இதில் அரசுவின் குடும்பம் நல்ல வளமானவர்கள் என்றால் ராமலிங்கத்தின் குடும்பம், மிடில் கிளாஸ் வகையை சேர்ந்தது. அந்த வேற்றுமையை அரசு  இருவருக்குள்ளும் என்றுமே வரவிடத்தில்லை. 
அவரை பொறுத்தவரை நண்பர் என்றால் நண்பர், இதில் எந்த விதமான வேற்றுமையும்  தேவையற்றது என்பார். அதனாலே, அவர் பரம்பரை தொழிலை கையில் எடுத்த போது, ராமலிங்கம்  சிறு தொகையை கொடுத்து, அவரின் தொழிலில் தன்னை இணைத்து கொள்ள கேட்டபோது, சிறிதும் யோசிக்காமல் பத்து சதவீதம் பங்கை கொடுத்து தங்களின் தொழிலில் அவரையும் சேர்த்து கொண்டார்.  
தர்ஷினியின் கல்யாண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருக்க, தீக்ஷிக்கும் பள்ளி இறுதி தேர்வு முடிந்து, அவளும் மிகுந்த உற்சாகத்துடன் தர்ஷினியின் கல்யாண வேளைகளில் ஈடுபட்டாள். இருவரின் வீடும் அடுத்தடுத்த தெருவிலே இருக்க, தர்ஷினியும், அவளின் தங்கை அதிதியும்  முழு  நேரமும், ராணியின் வீட்டில் தான் இருப்பார்கள். 
“அரசு.. எனக்கு கொஞ்சம் லோன் ஏற்பாடு செய்யணும்..”, என்று ராமலிங்கம் முகத்தை  கஷ்டப்படுவது போல் வைத்து கொண்டு கேட்டார். அவரின் நடிப்பை உணராத அரசு, 
“லோனா..? லோன் எதுக்குப்பா..?”  என்று கேட்டார். 
“இல்லை தம்பிக்கு தொழில் செய்ய காசு வேணும்ன்னு கேட்டிருந்தான், அதுக்கு கொடுத்துட்டுதால, இப்போ தர்ஷினி கல்யாணத்துக்கு நகை எடுக்க, மண்டபம், மத்த செலவுக்கெல்லாம் பணம் தேவைப்படுது, அதான்..” என்று சொன்னார்.
 ராமலிங்கத்தின் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் என குடும்பம் மிக பெரியது, இதில் ராமலிங்கம் தான் மூத்தவர், அதனாலே அவர் அவரின் வருமானத்தை எல்லாம் உடன் பிறந்தவர்களுக்காக செலவு செய்வதாக தான் அரசுவிடம் சொல்லி கொண்டே இருப்பார். 
ஆனால் அவர் தருவது என்னமோ கொஞ்சம் தான், அது தெரியாத அரசுவும் கடமை தவறாத தன் நண்பன், குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்ற எண்ணத்தில், அவர் சொன்னதை நம்பி,அவருக்கு லோன் ஏற்பாடு செய்து தராமல் தானே பணம் தருவதாக சொல்லிவிட்டார். 
“அதுக்கு எதுக்கு லோன் எடுக்கிறப்பா..? நானே தர்றேன், நீ உன்னால முடியுறப்போ கொடு போதும்..” என்று ராமலிங்கம் பேருக்கு மறுத்ததை கேட்காமல், அந்த நிமிடமே  சில பல லட்சங்களை ராமலிங்கத்தின் கையில் கொடுத்தார். ராமலிங்கமும் விருப்பமில்லாமல் வாங்குவது போல வாங்கி கொண்டார். 
“க்கா.. இந்த மேக்அப் உனக்கு முகூர்த்தத்துக்கு நல்லா இருக்கும், இந்த செட் எப்படி இருக்கு..” என்று  ஆல்பத்தை பார்த்து கேட்டு கொண்டிருந்த தீக்ஷிய கவனிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்த தர்ஷினியை பார்த்த அதிதியும், தீக்ஷியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்து ரகசியமாக சிரித்தவர்கள், 
“க்க்காகாகா..” என்று அவளின் காதில் சென்று கத்த, அப்பொழுது தான் காபி கப்பை கையில் பிடித்தபடி வந்த  மனோஜ், இவர்களின் சத்தத்தில் அலறி, காபி கப்பை தன் மேலே போட்டு கொண்டான். சூடு தாங்கமுடியால் கத்தியவன், 
“ஏய்.. பிசாசுகளா, ஏன் இப்படி கத்துனீங்க..? ராட்சசிங்க, இருங்க உங்களை வரேன்..” என்று அவர்கள் இருவரையும் துரத்தி கொண்டு ஓடினான். அதுவரை மனசஞ்சலத்தில் அமர்ந்திருந்த தர்ஷினி, இவர்களின் சேட்டையில் அதை மறந்து  மனம் விட்டு சிரித்தாள். 
இப்படியே கல்யாண நாளும் நெருங்கியது. முகூர்த்தத்திற்கு முன்தினம் மாலை எல்லோரும் மண்டபத்திற்கு  கிளம்பினார்கள். முன் தினமே ரிசப்ஷன் வைத்திருக்க, ரிசப்ஷன் முடிந்ததும், மாப்பிள்ளையின் தந்தை, ராமலிங்கத்தை கூப்பிட்டனுப்பினார். 
ராமலிங்கம் திகிலடைந்த முகத்துடன் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தவரின் முகம் வேர்த்திருந்தது. மாப்பிள்ளையின் தந்தை, வரதட்சணையாக அரசுவின் தொழிலில் இருந்த இவரது பத்து சதவீத பங்கை கேட்டிருந்தார். 
அதை கொடுக்கும் எண்ணம் இல்லாத, ராமலிங்கம் பொய்யாக கொடுப்பதாக ஒத்து  கொண்டவர், கொடுக்காமல்  தாலி கட்டி முடியும் வரை அவர்களை ஏமாற்ற நினைத்திருக்க, மாப்பிள்ளையின் தந்தையோ, தாலி கட்டுவதற்குள் அந்த பங்கை கொடுக்காவிடில் திருமணம் கேன்சல் என்று மிரட்டிவிட்டார். 
இந்த திருப்பத்தை எதிர்பார்க்காத ராமலிங்கம், அடுத்து என்ன செய்வது என்று குறுக்கு வழியில் யோசித்தவருக்கு பளிச்சென ஒரு திட்டம் தோன்ற,  அதை மறுநாள் முகூர்த்த நேரத்தில் செயல் படுத்தியும் விட்டார். 
மாப்பிள்ளையின் தந்தை அவர் மிரட்டியது போல், திருமணத்தை நிறுத்திவிட, விஷயம் இன்னதென்று தெரியாமல் எல்லோரும் அதிர்ந்தனர்.  அரசு, முன் சென்று மாப்பிள்ளையின் தந்தையை விசாரிக்க, அவர் விஷயத்தை சொல்லவும், அரசு, ராமலிங்கத்தை கேள்வியாக பார்த்தார். 
“ஆமா அரசு, நான் கொடுக்கிறதா ஒத்துக்கிட்டேன் தான், ஆனா இப்போ என்கிட்ட அந்த பங்கு இல்லை, தங்கச்சி கல்யாணத்துக்கு கடனா அந்த பங்கை வச்சி தான் காசு வாங்கியிருந்தேன், அதுல நான் போட்டிருந்த கையெழுத்தை வச்சி, அவர் அதை  எனக்கு தெரியாம அவர் பேருக்கு எழுதிகிட்டார்..”  என்று பொய் சொல்லி நடித்தார். 

Advertisement