Advertisement

“ஆமா கொடிக்கணக்குல கொட்டி நடந்திட்டிருக்கிற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இடம் கூட பிரச்சனை போல.. “ என்று மற்றவர் சொன்னார். 
“அட நீங்க வேறப்பா, ஒரு கர்சீப் கூட மிஞ்சாமல் மொத்த துணி எல்லாம் எரிஞ்சிருச்சே.. அதான்,  இதை எல்லாம் பார்த்து பார்த்து சின்ன பொண்ணுக்கு என்ன செய்யன்னு தெரியல போல..” என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி தீக்ஷியை பார்த்து கிண்டலாக சொல்லி சிரிக்க, ராமலிங்கமும் சத்தமாக சிரித்து கொண்டிருந்தார். 
அவர்கள் சிரித்து முடிக்கும் வரை பொறுமையாக கை கட்டி அமர்ந்திருந்த தீக்ஷிதா, ராமலிங்கத்தை பார்த்து, “கோடி கணக்கான சரக்கை தொலைச்சிருக்கீங்க.. என்ன பதில் சொல்ல போறீங்க..?” என்று கேட்டாள். 
“நான் எங்க தொலைச்சேன்..? அதுவே தொலைஞ்சு போச்சு..” என்று மற்ற பார்ட்னர்கள் சொல்லி கொடுத்ததை சொல்ல, மற்றவர்கள் அதற்கும் சத்தமாக சிரித்தனர். 
“ஓஹ்.. சரி அதுவே தொலைஞ்சு போன சரக்கை கண்டுபிடிக்க என்ன ஸ்டெப் எடுத்தீங்க..?” என்று பொறுமையாகவே கேட்டாள். 
“அது எடுத்தேன் நிறைய ஸ்டெப், ஆனா கண்டுபிடிக்கதான் முடியல..” என்று கைகளை விரித்து அலட்சியமாக சொன்னார். 
“ஓகே.. அந்த சரக்குக்கான நஷ்டம் எப்படி..?” என்று கேட்டாள். 
“என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்..?” என்று ராமலிங்கம் திமிராகவே பதில் சொல்லி கொண்டிருந்தார். 
“இதுதான் உங்க பதிலா..?” என்று தீக்ஷிதா தீர்க்கமாக கேட்க, “ஆமா..” என்று ராமலிங்கம் தலையாட்டிய அடுத்த நொடி, அவர் முன் ஒரு டாகுமெண்ட் காட்டிய பாலா, “இது கரெக்ட்டான்னு பாருங்க..” என்றான். 
ராமலிங்கம் என்ன டாகுமெண்ட் என்று வாங்கி பார்த்தவர், வேர்க்க விறுவிறுக்க எழுந்து நின்றுவிட்டார். “இது அநியாயம், நான் எப்போ என்னோட ஆபிஸை  உனக்கு எழுதி கொடுத்தேன்..” என்று அதிர்ச்சியாக கேட்டார். 
“என்னை கேட்டா எனக்கு எப்படி  தெரியும்..?” என்ற தீக்ஷிதாவின் நக்கல் பார்வை ராமலிங்கத்தை சீண்டிவிட, 
“உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா நீயே சரக்கை எடுத்துட்டு, என் ஆபிஸையும்  என்கிட்டே இருந்து பிடுங்குவ..” என்று ஆக்ரோஷமாக கத்தியவர், தீக்ஷதாவை நெருங்கும் நொடி, அவர் முன் திடிரென முளைத்தனர் நான்கு பாடிகார்ட்ஸ். 
அவர்களை கடந்து ஒரு இன்ச் கூட எடுத்து வைக்க முடியாமல் திண்டாடியவரை பார்த்த தீக்ஷிதா, “நீங்க தொலைச்ச சரக்குக்கான பணத்தை நானே எடுத்துகிட்டேன்..” என்றவள், பாலாவை திரும்பி பார்த்தாள். 
அவளின் திடீர் அதிரடியை சிறிதும் எதிர்பார்க்காமல் அதிர்ந்திருந்த மற்ற பார்ட்னர்ஸ் முன் பாலா சில பேப்பரை வைக்க, எல்லோரும்  அவசரமாக அதை எடுத்து படிக்க ஆரம்பித்தனர். 
படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலே எல்லோரின் முகமும் கோவத்தை, பயத்தை, ஆத்திரத்தை பிரதிபலிக்க, அதில் ஒருவர் அப்பேப்பரை கிழித்து எறிந்தார். 
“எவ்வளவு தைரியமிருந்தா எங்களை கணக்கு காட்ட சொல்லி கேட்ப..?” என்று கத்த, மற்றவர்களும், “சின்ன பொண்ணு நீ..? எங்களை கணக்கை சப்மிட் செய்ய சொல்லி டைம் கொடுத்திருக்க..?” என்று கோவத்தில் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தனர். அவர்கள் கத்தி முடிக்கும் வரை அமைதியாகவே இருந்தவள்,  
“பாஸ்ட் மூணு  வருஷம் நீங்க எல்லாம் தான் என்னோட கம்பெனியை பார்த்துக்கிட்டீங்க, அதுக்கான கணக்கை தான் நான் கேட்டேன்..” என்று அதிகாரத்துடன் கேட்டாள்.  
“இது உன்னோட பிஸ்னஸ் மட்டுமில்லை,  நாங்களும் இதுல பார்ட்னர்ஸ் தான், இது எங்களோட கம்பெனியும் கூட..” என்று ஒரு பார்ட்னர் ஆவேசத்தோடு சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். 
“ம்ஹூம்.. இது என்னோட கம்பெனி மட்டும்தான், இதுக்கு நான் மட்டும்தான் MD.. நான் எடுக்கிறதுதான் முடிவு..” என்று நிறுத்தி நிதானமாக சொன்னாள். 
“அதெப்படி.. நீங்க போட்ட பணம்  பிப்ட்டி பர்சன்ட் மட்டும்தான்..” என்று எகிறியவர்களை துச்சமாக பார்த்தவள்,  
“இப்போ எங்களோட  ஷேர் செவன்ட்டி பர்சென்ட்.. சோ எனக்கு தனியா முடிவெடுக்க எல்லா அதிகாரமும் உண்டுன்னு நான் நினைக்கிறேன்..” என்று அலட்சியமாக சொன்னவளை எல்லோரும் உச்சகட்ட அதிர்ச்சியில் பார்த்தனர். 
“எப்படி..? எப்படி  இது  சாத்தியம்..?” என்று எல்லோரும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டவர்கள், “நாங்க இதை நம்பமாட்டோம், நீ எங்களை ஏமாத்துற..?” என்று நிதானத்தை இழந்து கத்தினார்கள். 
அவர்களின் நிலையை புரிந்து வெறுப்பாக சிரித்தவள், “பத்து பர்சென்ட் ஷேர் தருணுடையது, அவன் மைனர்ங்கிறதால, அவனுக்கான கார்டியன் நாந்தான்னு இன்னிக்கு தான் கோர்ட் மூலமா ஆர்டர் வந்துருச்சு, அடுத்த பத்து பெர்சென்ட் Mrs. பாரதி ராமலிங்கம், அவங்களோட ஷேரை எனக்கு எழுதி கொடுத்துட்டாங்க..” என்று ராமலிங்கத்தை பார்த்து சொன்னவள், 
“சோ.. நான்தான் MD, நான் மட்டும் தான் MD.. இனி என்னை கேள்வி கேட்க உங்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை..” என்றவள், 
“உங்களுக்கு நான் கொடுத்திருக்கிற டைம் மூணு நாள்.. அதுக்குள்ள எனக்கு மூணு வருஷத்தோட அக்கவுண்ட்ஸ், கம்பெனி ரிப்போர்ட்ஸ் எல்லாம் வரணும்..” என்று ஆணை இட்டவள் கிளம்ப, அவளை வழிமறித்த ஒரு பார்ட்னர், 
“ஏதோ சின்ன பொண்ணாச்சேன்னு பார்த்தா எங்களையே போட்டு பார்க்கிறியா, நீயா..? நாங்களான்னு பார்த்துரலாமா..?” என்று வெறியோடு மிரட்ட, அவரை நேருக்கு நேர் தீயாய் வெறித்தவள், 
“பார்த்துரலாம்..”  என்று ஒரே வார்த்தையில் அவரின் மிரட்டலை ஏற்றாள்.  அவளிடம் தென்பட்ட அதீத தைரியத்தில் வாயடைத்து போன அந்த பார்ட்னரோடு மற்ற பார்ட்னர்களையும்  அசராமல்  பார்த்தவள், அங்கிருந்து கிளம்பிவிட, அவர்கள் அங்கேயே தலை மேல் கைவைத்து அமர்ந்துவிட்டனர். அதில் ராமலிங்கத்தின் நிலைதான் மிக மோசமாக இருந்தது. எல்லாம் கைவிட்டு போன நிலையில் இடிந்து போய்விட்டார் மனிதர்.
நானே நானாய் இருப்பேன்..
நாளில் பூராய் வசிப்பேன்..
போலே வாழ்ந்தே சலிக்கும்..
வாழ்வை மறக்கிறேன்..
வாகாய் வாகாய் வாழ்கிறேன்..
பாகாய் பாகாய் ஆகிறேன்.. 
என்ற  பாடல் வரிகள் காதில் ஒலிக்க புல்லட்டில் பயணப்பட்டு  கொண்டிருந்தவனின் உதட்டில் மெலிதான சிரிப்பு உதயமாகியது, இந்த வரிகளை போலே வாழ்பவன் தான் “விஷ்வஜித்..”
“எங்கு சென்று கொண்டிருக்கிறான்..?”  என்று அவனுக்கே தெரியாது, “எதற்கு செல்கிறான்..?” அதுவும்  தெரியாது. நெடு தூரம் போக வேண்டும் என்று தோன்ற உடனே வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான். 
அவனை ஏன் என்று கேட்கவும் யாரும் கிடையாது. கேட்கும்படியும் யாரையும்  வைத்துக்கொள்ளவில்லை, “எல்லோரையும் தன்னிடத்தில் இருந்து ஒதுக்கிகொண்டான்.. ஒதுங்கிகொண்டான்”. 
அவனின் மனதிற்கு சரியென்று தோன்றுவதை அந்த நொடியே செய்தும்விடுவான். அதனால எந்த பிரச்சனை வந்தாலும், தான் செய்துவிட்ட செயலுக்காக இதுவரை வருந்தியது இல்லை. 
“நான் இப்படித்தான்..!!!” என்று எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் உறுதியாக நிற்கும் தைரியம் மிக மிக அதிகம் அவனிடத்தில்.. 
அதுவே தன்னவர்களுக்கு பல இன்னல்களை  கொடுக்க, அவர்களுக்காக…!!!???  அவர்களிடமிருந்து தள்ளி நிற்கும்  முடிவை எடுத்தவன், அந்த முடிவிலே இந்நாள் வரை உறுதியாகவும் நிற்கிறான். 
ஆனால் அவர்கள் யாரும் இந்நொடி வரை அவனை தள்ளி வைக்கவில்லை..!!! வைக்க போவதுமில்லை..!!! அது அவனுக்கும் தெரியும்..!!!

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே..
ஓசை எல்லாம் திறந்தே..
காண்கின்ற காட்சிக்குள் நான் முழ்கினேன்.. 
பாடல் வரிகள் தொடர்ந்து காதினுள் ஒலிக்க, ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி வண்டியை ஓட்டிகொண்டிருந்தவனின் பார்வை ஓர் இடத்தில் நிற்க, வண்டியும் அவ்விடத்தை அடைந்தது. 
அங்கு  நான்கு பேர் சேர்ந்து கொண்டு ஒரு நடுத்தர வயது மனிதரை அடித்து கொண்டிருக்க, அந்த ஹைவே ரோட்டில் சென்று கொண்டிருந்த வண்டிகள் அனைத்தும் ஒரு நிமிடம் நின்று அக்காட்சியை வேடிக்கை பார்த்து சென்று கொண்டிருந்தது. 
வண்டியை நிறுத்தியபடி  அடிவாங்கும் மனிதரை பார்த்தவனின் கால்கள், வண்டியை விட்டு இறங்கி, அவர்களிடம் சென்று  நின்றவுடன், அவனின் கை, அந்த மனிதரை அவர்களிடம் இருந்து பிரித்து இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தியது. 
அவனின் செயலில் கோவம் கொண்ட அந்த நால்வரும் விஷ்வஜித்தை  தாக்க அவனை நெருங்க, விஷ்வஜித்தின்  கை மின்னல் வேகத்தில் ஒருவனின் மூக்கில் குத்த, கால் அடுத்தவனின் காலை தட்டிவிட்டு உதைக்க, இன்னொரு கை மற்றவனின் நெஞ்சில் குத்தியதோடு அடுத்தவனின் வயிற்றில் ஆழமாக இறங்கியது. 
இவை எல்லாம் மின்னல் வேகத்தில் நிகழ்ந்துவிட, அடிவாங்கியவர்களுக்கு    என்ன நடந்தது என்று புரியவே பல நிமிடங்கள் தேவைப்பட்டது. 
“இந்த தண்ணியை குடிங்க..” என்று அம்மனிதரை  தன் வண்டி  மேல் சாய்த்து நிற்க வைத்தவன், அவருக்கு தன் பேக்கிலிருந்து தண்ணி பாட்டிலை திறந்து குடிக்க கொடுத்தான். அவரும் வேகமாக குடித்துவிட்டு கொடுத்தவர், விஷ்வஜித்தை பார்த்து கை குவித்து நன்றி சொன்னார். 
“இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு..?” என்று அவரின் நன்றியை கண்டு கொள்ளாமல், அவரின் குவித்த கையை கீழிறக்கி கேட்டான். 
“பக்கத்துல துர்கா ஹாஸ்பிடல் இருக்கு..” என்று  சொல்லவும், 
“வாங்க போலாம்..” என்று அவரை ஏற்றிகொண்டு வண்டியை எடுத்தவனின் முன்னால் அந்த நால்வரும் ஆவேசமாக வந்து நின்றார்கள். 
“டேய்.. யார்டா நீ..? யார் ஆளுங்க மேல கை வச்சிருக்கேன்னு தெரியுமா..? என்று பதவியில் இருக்கும் அமைச்சரின் பேரை சொன்னவன், உன்னை இங்கேயே தர்ஸ்ஆக்கிடுறோம் இரு..” என்று போன் எடுத்து பேச செய்தவனை சொடுக்கு போட்டு கூப்பிட்டவன். 
“நான் இங்க பக்கத்துல  துர்கா  ஹாஸ்பிடல்ல தான் இருப்பேன், அங்கேயே வந்துருங்க..” என்று மிகவும் சாதாரணமாக சொன்னவன், அவரோடு ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டான். 
“டேய் என்னடா இது..? தலைவரோட பேரை சொன்னதுக்கு அப்பறமும் இவ்வளவு சாதாரணமா அட்ரஸ் சொல்லிட்டு போறான்..”  என்று, அந்த நால்வரும் அவனின் சாதாரணமான பேச்சில் திகைத்து போய் நின்றனர். 

Advertisement