Advertisement

தீரா காதல் தீ   2
“மேம்.. நம்ம ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிட்டிருக்கிற இடம் இன்னொருத்தருக்கு சொந்தமானதுன்னு நோட்டீஸ் வந்திருக்கு..” என்று காலையிலே தீக்ஷியின் “PA பாலா..” போன் செய்து சொல்லவும், அதிர்ந்த தீக்ஷிதா, 
“என்ன சொல்றீங்க பாலா..? அந்த இடம் நம்ம இடம்தானே..” என்று புரியாமல் கேட்டாள். 
“அந்த இடம் நம்ம இடம்தான்னு நோட்டீஸ் அனுப்பிச்சவனுக்கும் தெரியும் மேம்..” என்று பாலா சொல்ல,
 “என்ன..? தெரிஞ்சே நோட்டீஸா..?” என்றவள் நொடியில் புரிந்து, “இது நம்ம பார்ட்னர்ஸ் வேலையா..?” என்று கேட்டாள். 
“ஆமா மேம்..” என்று பாலா சொல்லவும், அதிர்ச்சி மறைந்து கோவம் கொப்பளித்தது. 
“ஓகே.. என்னன்னு பார்க்கலாம்..” என்று போனை வைத்தவளின் முகத்தில் தெரிந்த கோவத்தை  பார்த்த தருண், 
“என்ன அகைன் பிரச்சனையா..?” என்று கேட்டான். 
“எஸ் தருண்.. பார்த்துக்கலாம்..” என்றவள், கம்பெனிக்கு கிளம்பினாள். 
“பாலா.. அந்த நோட்டீஸை கொடுங்க..” என்று வாங்கி பார்த்தவள், சீக்கிரமே அவளின் லாயரை ஆபிஸிற்கு வரச்சொன்னாள். அவளின் லாயர் முரளி வரவும், அவரிடம் நோட்டீஸை கொடுத்தாள். 
முரளியும் வாங்கி படித்து பார்த்தவர்,  “இது சும்மா வில்லங்கத்துக்காக செஞ்சிருக்காங்க, இந்த கேஸ் நிக்காது..” என்று சொன்னார். 
“அது எங்களுக்கும் தெரியும்  சார், இதை எப்படி உடனடியா முடிக்கிறதுன்னு மட்டும் சொல்லுங்க..” என்றாள். 
“லீகலா உடனடியா ரொம்ப கஷ்டம் மேம்”, என்று முரளி உறுதியாக சொன்னார். 
“சார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வேலை எல்லாம் முடிஞ்சுவந்திருச்சு, நெக்ஸ்ட் மந்த் அதோட ஓப்பனிங்ன்னு அனோன்ஸ் செஞ்சிட்டோம், எனக்கு அதுக்குள்ள இந்த இஷு முடியனும்..” என,
“மேம்.. நீங்க சொல்றது எனக்கு புரியுது, ஆனா இந்த நோட்டீஸ்க்கு நாம கோர்ட் மூலமா பதில் நோட்டீஸ் அனுப்பனும், அடுத்து நாம கேஸ் பைல் செய்யணும், அதோட ஹியரிங்  வரணும்..” என்று அவர் அடுக்கி கொண்டே சென்றார். 
“இது வேலைக்காகாது..”  என்று புரிந்து கொண்ட தீக்ஷிதா, “சரி  நீங்க என்ன செய்யறதுன்னு பாருங்க..” என்று அவரை அனுப்பி வைத்தவள், “என்ன செய்வது..?” என்று யோசிக்க ஆரம்பித்தவளுக்கு அடுத்த பிரச்சனை தயராக நின்றது. 
அவர்களின் டெக்ஸ்டைல் குடோன் தீப்பிடித்து விட்டது என்று நடுஇரவு போன் வர அடித்து பிடித்து ஓடியவளின் கண் முன்னால் கோடி கணக்கான துணிகள் எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்க போராடி கொண்டிருக்க, தீக்ஷிதா எரியும் தீயையவே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். 
இந்த தொடர் தாக்குதல் அவளை மேலும் மேலும்  வலுவாக்கியதே தவிர விட்டு ஓடச்சொல்லும் எண்ணத்தை நொடியும் அவளுள் விதைக்கவில்லை. “பார்க்கலாம்.. இன்னும் என்ன..? என்று பார்த்துவிடலாம்..” என்ற வைராக்கியம் அவளுள் கொழுந்துவிட்டு எரிந்தது. 
“நீங்களா..? நானா..?  யார் ஜெயிப்பது..? யார் தோற்பது..?” என்ற சவால் உண்டாக, அவர்களை முடுக்குவதற்கான  வழிவகைகளை மிக மிக தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“தருண்..  இன்னிக்கு என்னோட AAR க்கு  வர்றியா..?” என்று ஆசையுடன் கேட்ட தீக்ஷியை பார்த்த தருணுக்கு என்ன தோன்றியதோ..? 
“ம்ம்.. ஓகே போகலாம்..” என்று அவளுடன் கிளம்பிவிட்டான்.
“மேம்.. உங்களை பார்க்க ராமலிங்கம் வெய்ட் செஞ்சிட்டிருக்கார்..” என்று ஆபிசிற்குள் நுழைந்தவுடன் பாலா வந்து சொல்லவும்,
“ஒரு ஒன் ஹார் கழிச்சு  அனுப்புங்க..” என்றவளை சிரிப்புடன் பார்த்தான் தருண். 
“என்ன மேன்  சிரிக்கிற..? இப்போ நீ கோவப்படணும்..” என்று தீக்ஷி குறும்பாக தருணிடம் கேட்டாள். 
“நான் ஏன் கோவப்படணும் தீக்ஷி..?” என்று தருணும் அதே குறும்பு மின்ன கேட்டான். 
“பின்ன உன் தாத்தாவை வெய்ட் செய்ய வச்சிருக்கேன் இல்லை அதுக்கு தான்..”
 “ம்ஹூம்.. ஹி டிசர்வ் திஸ் தீக்ஷி..” என்று சொன்ன தருணின் குரலில் லேசான வெறுப்பு. 
“நோ தருண்.. இது மட்டுமே அவருக்கு போதாது, இன்னும் இன்னும் செய்யணும்..”  என்ற தீக்ஷியின் குரலில் கடலளவு வெறுப்பு. 
“மேம்.. ஒன் ஹார் முடிஞ்சுது, இப்போ அவரை அனுப்பலாமா..?” என்று பாலா போன் செய்து சொல்லவும், 
“ம்ப்ச்.. அனுப்புங்க”, என்றவள், “நீங்களும் வாங்க..” என்று போனை வைத்தவள், தருணை பார்க்க, 
“எனக்கு அவரை பார்க்க வேண்டாம், நான் உள்ளே இருக்கேன்..” என்று அவர்களின் பர்சனல் ரூமிற்குள் சென்றுவிட்டான் தருண். 
“என்னம்மா தீக்ஷி.. நல்லா இருக்கியாம்மா..? தருண் எப்படி இருக்கான்..? சாப்பிட்டியாம்மா..?” என்று மிகவும் பாசமாக கேட்ட  ராமலிங்கத்தின் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல்,  அவரை வெறித்த அவளின் பார்வையில் ராமலிங்கத்தின் வாய் தானாகவே மூடிக்கொண்டது. 
அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அவர் அமைதியாக நிற்கவும், கை காட்டி அமரசொன்னவள், பாலாவை பார்த்தாள். அவளின் பார்வையை புரிந்துகொண்டவன், 
“என்ன விஷயம் சார்..?” என்று ராமலிங்கத்தை கேட்க,  ஒரு வார்த்தை கூட பேசாமல் அவரை அவமதித்த தீக்ஷயின்  செயலில் உள்ளுக்குள் கொதித்த ராமலிங்கம், வெளியே பாசாங்கான சிரிப்புடன், 
“அது நம்ம லோட் வண்டி எங்க இருக்குன்னு கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்..” என்றார். 
“எந்த லோட் வண்டி..?” என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டான் பாலா. 
“அதான் நம்ம கடை சரக்கை ஏத்திட்டு வந்த லாரி தான்..”
“எங்க பிரான்ச்  லாரி வந்திடுச்சே..” என்று பாலா சொல்லவும், ராமலிங்கத்தின் பொறுமை லேசாக குறைய, திரும்பி பாலாவை முறைத்தபடி, 
“என்னோட பிரான்ச் கடை சரக்கு லாரி..” என்று சொன்னார். 
“நோ.. அது உங்களோட பிரான்ச் இல்லை, உங்க பொறுப்புல விட்டிருக்கிற எங்களோட  பிரான்ச்..”  என்று தீக்ஷி அழுத்தம் திருத்தமாக சொன்னவள், அவரின் முன் ஒரு பேப்பரை நீட்டினாள். 
அவளுடைய பேச்சில் கன்றி போன முகத்துடன் அமர்ந்திருந்த ராமலிங்கம், தன்னிடம் தீக்ஷி கொடுத்த பேப்பரை வாங்கி பார்த்தவுடன், அவரின் நடிப்பு விட்டு, கோவமாக வெகுண்டு எழுந்தார். 
“இது என்ன..? என்மேல் ஏன் என்குயரி வச்சிருக்க..?” என்று கத்தினார். அவரின் கத்தலை  சிறிதும் மதியாமல், 
“ஈவினிங் என்குயரிக்கு ரெடியா இருங்க..” என்றவள், பாலாவை பார்க்க, அவன் ராமலிங்கத்தை கிட்டத்தட்ட அங்கிருந்து இழுத்து கொண்டே சென்றான்.
“மேம்.. இது இப்போதைக்கு தேவைதானா..?” என்று பாலா ராமலிங்கத்தை அனுப்பிவைத்து விட்டு வந்து கேட்டான். 
“கண்டிப்பா தேவைதான்  பாலா”, என்று தீக்ஷி உறுதியுடன் சொல்லி கொண்டிருக்கும் போது, பர்சனல் ரூமை விட்டு வெளியே வந்த தருண், அங்கிருந்த வெயிட்டிங் சோபாவில் கால் நீட்டி படுத்து கேம் விளையாட ஆரம்பித்தான்.
“தருண்.. இங்க  இப்படி படுக்காத, உள்ளே போய் படு”, என்று தீக்ஷி கண்டிப்புடன் அதட்டினாள். 
“ஓஹ் கமான் தீக்ஷி, இங்க படுத்தா என்ன..?” என்று எரிச்சலாக கேட்டவன், தொடர்ந்து படுத்தப்படியே கேம் விளையாடினான். 
“தருண்.. இது ஆபீஸ் ரூம், டிசிபிளினா நடந்துக்கோ..” என்று தீக்ஷி சொல்லவும், 
“இதுக்குத்தான் நான் உன்னோட வர்றதே இல்லை, எதோ ஆசையா கூப்பிட்டேன்னு வந்தேன் பாரு என்னை சொல்லணும்..” என்று கத்தியவன், “ஐயம் லீவிங் நவ்..” என்று உடனடியாக கிளம்ப, தீக்ஷி கட்டுப்படுத்தப்பட்ட கோவத்துடன்  தருணை முறைத்தாள். 
அவளின் கோவத்திற்கு சிறிதும் குறையா கோவத்துடன் நின்ற தருணை பார்த்த பாலா, “ஆரம்பிச்சிட்டாங்களா..?” என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டான். 
“ஓகே போ.. எனக்கென்ன உனக்கு தான் லாஸ்..” என்று தீக்ஷிதா கோவத்தோடு  தோளை குளுக்கவும்,
“எனக்கென்ன லாஸ்..?” என்று தருண் சந்தேகமாக கேட்டான். 
“பின்ன நம்ம நியூ ஷாப்பிங் மால்ல சில்டர்ன்ஸ்க்கு  புது டைப்  கேம் ஏதாவது செய்யலாம்ன்னு பிளான், அதான் உங்கிட்ட ஏதாவது ஐடியா இருக்கான்னு கேட்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன், ஆனா நீதான் போறேன்னு சொல்றியே.. போ..” என்று சொல்லவும், தருணின் முகம்  பளிச்சென மலர்ந்தது. 
“தீக்ஷி.. ஐ ஹாவ் லாட்ஸ் ஆப் ஐடியா, அதை எல்லாம் செய்யலாம்..”என்று உற்சாகமாக சொன்னான். அவனின் உற்சாகத்தில் தன் கோவத்தை விட்ட தீக்ஷியும், 
“ஓகே.. செய்யலாம்”, என்றவள், போன் எடுத்து உடனே ஆர்கனைசரை வரச்செய்தவள், 
“தருண்.. நீ உன்னோட ஐடியா எல்லாம் இவர்ட்ட சொல்லு..”, என்று அவர்களை அங்கிருந்த டேபிளுக்கு அனுப்பியவளை பார்த்த பாலாவினுள் “இவங்க ரெண்டு பேரும் என்ன டிசைன்னே தெரியலடா சாமி, அவருக்குத்தான் தெரியும், இப்போ  அவர் எங்கிருக்கிறாரோ..?” என்று அவரை பற்றி யோசித்து கொண்டிருந்தவனிடம், 
“பாலா.. ஏன் அப்படி கேட்டிங்க..?” என்று தீக்ஷி கேட்க, தன் யோசனையை தள்ளி வைத்தவன், 
“இல்லை அவர் மற்ற பார்ட்னர்ஸோடு சேர்ந்து எதோ பிளான் செய்யற மாதிரி இருக்கு, மே பி இன்னிக்கு ஈவினிங் என்கொய்ரி நமக்கு பாதகமா கூட முடியலாம்..” என்றான். 
“நோ பாலா.. நீங்க சொல்றது தப்பு, அவரை தான் மற்ற பார்ட்னர்ஸ் யூஸ் செய்றாங்க, அவரை வச்சுத்தான் அவங்க எனக்கு அகைன்ஸ்ட்டா பிளானும் போட்றாங்க, சோ அதை முதல்ல ஸ்டாப் செய்யனும், அதுக்குத்தான்  இந்த என்கொயரி..” என்று தீவிரமான யோசனையுடன் சொன்னாள். 
“தீக்ஷி.. நான் என்னோட எல்லா கேம்ஸும் சொல்லியிருக்கேன், அவர் அதுல எதெது செய்ய முடியும்ன்னு பார்த்து சொல்றேன்னு சொல்லியிருக்கார்..” என்று தருண் குதூகலமாக சொல்லிக்கொண்டே வர, தீக்ஷியின் எண்ணமெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்க போகும் என்கொயரி மேல்தான் இருந்தது. 
தருணை கொண்டு சென்று வீட்டில் விட்டவள், “இன்று இரவு நடக்க போகும் பங்க்ஷனுக்கு” தருணை தயாராக இருக்க சொல்லிவிட்டு, நேரே என்கொயரிக்கு வந்தாள். அங்கு பாலா தயாராக நிற்க, இருவரும் சேர்ந்து ஹாலிற்குள்ளே சென்றனர். 
இவளுக்காக காத்திருந்த ஐந்து பார்ட்னர்ஸும், இவளை வஞ்சினத்தோடு பார்த்தனர். அவர்களின் பார்வையை கண்டு வெளிப்படையாகவே நக்கலாக சிரித்தவள், நேரே சென்று MD சீட்டில் அமர்ந்தாள். 
“மேடம்.. எதுக்கு ராமலிங்கம் மேல என்கொயரி வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா..?” என்று ஒரு பார்ட்னர் கிண்டல் சிரிப்புடன் கேட்க, இன்னொரு பார்ட்னரும், 
“எதுக்கு வச்சிருப்பாங்க..? மாமா குச்சி  மிட்டாயும், குருவி  ரொட்டியும் வாங்கி தரமாட்டேன்னு சொல்லியிருப்பாரு, அதுக்குதானோ என்னமோ..?” என, மற்றவர்கள் எதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டது போல சத்தமாக சிரித்தனர். 
“பாவம் சின்ன புள்ளை தானே, அதான் எதை எப்படி செய்யறதுன்னு தெரியாம முழிக்குது”
“ஆமாமா.. போலீஸ் நகையை பிடிச்சு வச்சிருந்தப்போ கூட ரொம்ப பாடுபட்டுத்தான் மீட்க முடிஞ்சதா கேள்விப்பட்டேன்..” என்று ஒரு பார்ட்னர் சொல்ல, 

Advertisement