Advertisement

அத்தியாயம்  13
தன்னுடைய இத்தனை நாள் மனப்போராட்டத்தை யாரிடமும் சொல்ல  முடியாமல்  தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தவளுக்கு  இந்திரஜித்தின் அருகாமையில் தானாகவே கண்ணீர் வந்தது. 
தன்னை  எதுவும் கேட்காமலே தான்  சாய்ந்து கொள்ள  தோள் கொடுத்த இந்திரஜித்தின் காதலுக்கு தான் அடிமையாகி இருப்பதை  இந்த நொடியில்  உணர்ந்து கொண்டாள் தீக்ஷி.  
தன்னுடைய அப்பா, அம்மாவிடமும் கிடைக்காத ஆறுதலை இவனுடைய ஒரு அணைப்பு  கொடுத்துவிட்டதை நினைத்து  மகிழ முடியவில்லை மாறாக அதுவும் துயரத்தை தான் கொடுத்தது. 
சுபா இல்லாமல் இந்திரஜித் இல்லை, அவர்தான் அவனின் முதல் உறவு.. முறிக்க முடியாத உறவு.. அதை எதிர்த்தோ, ஒதுக்கி தள்ளவோ முடியாமல் தானே அவளுடன் அவளே  போராடி கொண்டிருந்தாள். 
ஆனால் தான் சுயமாக முடிவெடுத்து எதுவும் செய்ய முடியா நிலையில்  இந்திரஜித்தின் காதல் தன்னை அவனுள் முழுவதுமாக இழுத்து கொண்டதை உணர்ந்து கொண்டவளுக்கு  இன்னும் தான்  கண்ணீர் பெருகியது.   
“தீக்ஷி.. ப்ளீஸ்.. போதும் அழுதது..”  என்று அவளின் கண்ணீர் அதிகமானதில் சொன்ன இந்திரஜித், அவளை தன் தோளில் இருந்து நிமிர்த்தி அவளின் கண்ணீர் துடைத்தவன், கலைந்திருந்த  நெற்றியோர கூந்தலையும் காதுக்கு பின்னால் சொருகினான். 
“ஏதாவது சாப்பிட்டியா..?” என்று அவளின் சோர்வான முகத்தை பார்த்து கேட்க, “இல்லை..” எனும் விதமாக தலை ஆட்டியவளின் வித்தியாசம் புரிந்து கவலை கொண்டவன், 
“நீ இங்கேயே இரு, நான் பைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன்..” என்றவன், சொன்னது போல் வேகமாக சென்று உணவு  வாங்கி வந்தான். அதுவரை பசி என்ற ஒன்றை உணராமலே இருந்தவளுக்கு அந்த நொடி அது பயங்கரமாக தெரிய இந்திரஜித் ஊட்டியதை மறுக்காமல் வாங்கி கொண்டாள். 
அவள் சாப்பிடுவதிலே அவளின் பசியை கண்டு கொண்டவன் அவளை ஆராய, இந்த சிறிது நாட்களில் அவள் மெலிந்திருப்பதும் தெரிந்தது. “என்ன ஆச்சு இவளுக்கு..? ஏன் இப்படி இருக்கா..?  கொஞ்ச நாளா ரொம்ப வித்தியாசமா பிஹேவ் செய்றா..? இவளோட நேச்சர் இது கிடையாதே..?” என்று  பல கேள்விகள் மனதில் ஓடிய வண்ணம் ஊட்டி கொண்டிருந்தான். 
“எனக்கு போதும், நீங்க சாப்பிடுங்க..” என்று தீக்ஷி  சொல்லவும், “இதெல்லாம் அநியாயம்..? நான் மட்டும் உனக்கு ஊட்டி விட்டேன் இல்லை, இப்போ எனக்கு நீ ஊட்டி விடணும் தானே..?” என்று வேண்டுமென்றே அவளிடம் வம்புக்காக கேட்டவன், அவளின் முறைப்பில் “நியாயத்துக்கு காலமில்லை..” என்று முனங்கி கொண்டு அவனாகவே  சாப்பிட்டான். 
சாப்பிட்டு முடித்தவுடன் தீக்ஷி  இந்திரஜித்தின் தோளில் சாய்ந்து, அவனின் கையோடு தன் கை சேர்த்து கட்டி கொண்டாள். இந்திரஜித்திற்கு அவளிடம்  கேட்க பல கேள்விகள் இருந்தாலும், இப்போது தான் தெளிந்திருக்கும் அவளை மறுபடியும் கஷ்டப்படுத்த தோன்றாமல் அமைதியாகவே இருந்தான். 
நேரம் தான் கடந்ததே தவிர, தீக்ஷி இன்னும் அதே நிலையில் இருக்க, “தீக்ஷி.. மாமா, அத்தை பங்க்ஷன் முடிச்சு வந்துடுவாங்க”, என்று அவளுக்கு ஞாபகப்படுத்தினான். 
ஆனால் தீக்ஷியோ எப்போதும் போல் இந்த முறை பதட்டப்படாமல், “ம்ம்..” மட்டும் சொல்லிவிட்டு  இன்னும் வாகாக அவனின் தோள் மேல் சாய்ந்து, பொங்கும் கடலையே பார்த்திருந்தாள். 
“என்னடா இது..?” என்று அதிசயபட்டு போன இந்திரஜித், “தீக்ஷி.. ரொம்ப டைம் ஆச்சு, கிளம்பு போலாம்..” என்று சொல்ல, அதற்குமே அசையாமல் அவனின் தோளிலே தொங்கி கொண்டிருந்தவளை கை பற்றி விலக்கியன், 
“என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?”  என்று அவளின் முகம் பார்த்து கேட்டவனுக்கு, “ஒன்னும் இல்லை..” என்ற பதிலையே வாய் வார்த்தையாகவும், தலை ஆட்டலாகவும் சொன்னாள். 
“ம்ஹூம்.. நோ தீக்ஷி..? சம்திங் ஈஸ் தேர்..? சொல்லு..” என்றவன், அவளின் முகத்தில் தெரிந்த உறுதியில் சொல்ல மாட்டாள் என்று புரிய, 
“ப்ளீஸ்டா.. என்கிட்ட சொல்லு, ஏதா இருந்தாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே ஹாண்டில் செய்யலாம், நான் இருக்கும் போது நீ ஏன் இப்படி தனியா கஷ்டப்படணும்..? சொல்லு தீக்ஷி..” என்று பரிவாக கேட்டான். 
எப்போதும் போலான அவனின் மென்மையான பேச்சில் மயங்கும் அவள், இந்த முறை அந்த மயக்கத்தை விரட்டியடித்து கல் போலே இருந்தாள்.  அவளின் உறுதி தெரிந்தும், 
“தீக்ஷி.. சொல்லு, என்கிட்ட சொல்ல என்ன இருக்கு..? ஏதாவது பெரிய பிரச்சனையா..? இந்த  முறை செமஸ்டர் மார்க் கூட ரொம்ப கம்மியா தான் வாங்கியிருக்க போல, எதோ உன்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்யுது..? அது என்ன..? ப்ளீஸ் சொல்லு..” என்று அவளின் மவுனம் தொடர்ந்தும் விடாமல் பொறுமையாகவே கேட்டான். 
ஒரு கட்டத்திற்கு மேல் அவள் கண்டிப்பாகவே சொல்ல போவதில்லை என்று புரிந்து கோவம் கொண்ட இந்திரஜித், சட்டென எழுந்து அங்கும் இங்கும் நடந்தான். அவனின் வேகநடையிலே  அவனின் கோவம் புரிந்தவளின் பார்வையோ காதல் பார்வையாக இருந்தது. 
“என்னை இப்படி பார்க்காத..?” என்று அவளின் பார்வையை உணர்ந்து ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவனின் கோவத்தை புறந்தள்ளியவள்,  “ஏன் பார்க்க கூடாதாம்..?”  என்று காதல் குறும்பு மின்ன  சிரிப்புடன்  கேட்டாள். 
“இப்போ மட்டும் சிரி, நான் ஏதாவது கேட்டா வாயை கம் போட்டு மூடிக்கோ..” என்று ஆற்றாமையாக சொன்னவனின் அருகில் சென்று நின்றவள் அவனின் கையோடு தன் கை  கோர்த்து கொண்டாள். 
“ராட்சஸி.. என்னை இம்சிக்கிறதே உன் வேலையா போச்சு..” என்று வாய் கடிந்து கொண்டாலும், அவனின் கை அவளின் தோளை வளைத்து  தன்னோடு அணைத்து கொண்டது.
“தீக்ஷி.. அத்தை, மாமா கிளம்பிட்டாங்க, வா போலாம்.”  என்று வர மனமில்லாமல் இருந்த தீக்ஷியை கூட்டி கொண்டு அவர்களின் காட்டேஜிற்கு வந்தவன், மனோஜிடம் பொதுவாக பேசிகொண்டிருந்தான். சிறிது நேரத்திலே அரசு, ராணியுடன்  விஷ்வஜித்தும் காட்டேஜ் வந்தனர். 
“வாங்க தம்பி..”, என்று அவனை வரவேற்ற ராணிக்கு பதில் சொல்லியவனை, “இப்போ வயிற்று வலி  பரவாயில்லையா தம்பி..?” என்று அரசு கேட்டார். அவரின் கேள்வியில் சந்தேகமாக இந்திரஜித்தை பார்த்த தீக்ஷியை கண்டு கண்ணடித்தவன், 
“ம்ம்.. பரவாயில்லை மாமா..”, என்று நல்ல பிள்ளையாக சொன்னவன், தொடர்ந்து வேறு பேச ஆரம்பித்துவிட்டான். அண்ணன், தம்பி இருவரும் அங்கேயே இருந்து அவர்களுடன் பேசி கொண்டிருந்தவர்கள், தூங்க அவர்கள் புக் செய்திருந்த காட்டேஜிற்கு சென்றனர். 
“ஜித்து என்ன பிரச்சனையாம் தீக்ஷிக்கு..? ஏதாவது சொன்னாளா..?” என்று விஷ்வஜித் தம்பியிடம்  கேட்டான். 
“இல்ல விஷூ, வாயே திறக்கல..”, என்ற ஆதங்கத்துடன் சொன்ன தம்பியை யோசனையாக பார்த்த விஷ்வஜித்,  “ஒரு வேளை காலேஜில பசங்க விஷயத்துல ஏதாவது பிரச்சனையா இருக்குமோ..?” என்று கேட்டான். 
“ம்ஹூம்..  வாய்ப்பே இல்லை விஷூ, அப்படியே இருந்தாலும் அதை எல்லாம் தீக்ஷி அசால்ட்டா ஹாண்டில் செய்வா, நல்ல போல்டானா பர்சனாலிட்டி அவ..” என்ற இந்திரஜித்திற்கு சில நாட்களாக யோசித்து யோசித்து மண்டை காய்ந்திருந்தது. 
“ம்ப்ச்.. இதுக்கு  மேல என்னால யோசிக்க முடியல விஷூ..”, என்று சோர்வாக கண்மூடி அமர்ந்துவிட்ட தம்பியின் வேதனைய உணர்ந்த அண்ணனுக்கு நொடியில் ஒரு கட்சி கண் முன் தோன்றியது.  
“ஜித்து.. ஜித்து..” என்று அவசரமாக அழைத்தவன், “அன்னிக்கு நம்ம ஹோட்டல் திறப்புவிழா நைட் பார்ட்டியில நான் ஒரு செலிபிரிட்டியை கார் வரைக்கும் கூட்டிட்டு போனப்போ, அங்க வழியில் அம்மா, தீக்ஷி.. மாதிரி ரெண்டு பேர் நின்னு பேசிட்டு இருந்தாங்க”, 
“அந்த கம்மி வெளிச்சத்துல எனக்கு அப்போ உறுதியா தெரியல, ஆனா இப்போ ஏன் அது அவங்களா இருக்க கூடாதுன்னு தோணுது, அன்னிக்கு தீக்ஷி கூட உடம்பு சரியில்லைன்னு  சீக்கிரமே கிளம்பிட்டா தானே..” என்று கேட்டான். 
அண்ணனின் சந்தேக கோணத்தில் யோசித்து பார்த்த இந்திரஜித்திற்கு அன்று தீக்ஷி தலை வலி என்று சோர்வாக படுத்திருந்ததும், அதற்கு பிறகு அவளிடம் பல சமயங்களில் தென்பட்ட விலகளும், “ஏன் இருக்க கூடாது..?” என்று வலுவான சந்தேகத்தை உண்டாக்க, நொடியும் யோசிக்காமல் சுபாவிற்கு அழைத்து விட்டான். 
“ம்மா.. தீக்ஷிக்கிட்ட என்ன பேசுனீங்க..?” என்று எடுத்தவுடனே சிறிதும் தயங்காமல் நேரடியாக குற்றம் சாட்டும் தோணியில் கேட்ட இந்திரஜித்தின் கேள்வியில் கொதித்த சுபா, 
“நான் என்ன பேசினேன்னு அவ உன்கிட்ட சொன்னாளோ அதை தான் நான் பேசினேன்..” என்றுவிட்டார். 
“அப்போ நீங்க அவகிட்ட எதோ பேசியிருக்கீங்க..?  என்ன பேசுனீங்க..? எதுக்கு பேசுனீங்க..?” என்று தொடர் கேள்வி கேட்டான். அவனின் தொடர் கேள்வியிலே அவன் தன்னிடம் போட்டு வாங்கியிருக்கிறான் என்று புரிந்து மேலும் கொந்தளித்த சுபா, 
“அம்மாகிட்டேயே உன் வேலையை காட்டுறியா..? எல்லாம் சகவாச தோஷம்..” என்று  கோவத்தோடு பொரிந்தார்.
“ம்மா.. தீக்ஷிக்கிட்ட என்ன பேசுனீங்கன்னு மட்டும் சொல்லுங்க..?” என்று பல்லை கடித்து கேட்டவனிடம், 
“என்ன சொன்னேன்..? என் மகனை விட்டுடுன்னு சொன்னேன், நீ மகனுக்கும் வேண்டாம், எங்க குடும்பத்துக்கும்  வேண்டாம்ன்னு சொன்னேன்”, 
“உங்க அப்பா என் பெரிய மகனுக்கு கல்யாணம் செஞ்சு, எங்க குடும்பத்தை உடைச்ச மாதிரி,  நீயும் என் சின்ன மகனை பிடிச்சு அதே வேலையை செய்றியான்னு கேட்டேன்..?” என்று சொல்லி கொண்டே போக, 
“ம்மா.. நிறுத்துங்க..”  என்ற இந்திரஜித்தின் கர்ஜனையில் சுபாவின் கையில் இருந்த போன் கீழேயே  விழுந்து விட்டது. அதை மறுப்படியும் எடுத்து காதில் வைத்தவரிடம், 
“நீங்க என்ன செஞ்சிருக்கீங்கன்னு உங்களுக்கு கொஞ்சமாவது தெரியுமா..? ஒரு பொண்ணை  மனசளவுல டார்ச்சர் செஞ்சிருக்கீங்க, அவளுக்கு மன அழுத்ததை கொடுத்து அவளை நிம்மதியே இல்லாமால் அலைய வச்சிருக்கீங்க..”, 
“அவ அப்பாவை பத்தி பேசி அவளை கார்னர் செஞ்சு இருக்கீங்க.. அவ கேரக்டரை பத்தி பேசி அவளை அவமான படுத்தி  இருக்கீங்க..” என்று மூச்சு விடாமல் கத்தியவனின் மனக்கண்ணில் பசிக்கு வேகமாக சாப்பிட்ட தீக்ஷி தெரிய, கோவம் மடிந்து வேதனை கொண்டான். 
“கடைசியில்  நான் தான் அவளுடைய கஷ்டத்துக்கு காரணமா..?” என்று அடைத்த தொண்டையில் எச்சில் விழுங்கி தன்னை சமாளித்தவன், 
“ஏன்மா இப்படி செஞ்சிங்க..?  தீக்ஷி போல ஒரு பொண்ணை அப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு..? உங்க பேச்சு அவளை எந்தளவு பாதிச்சு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..? எப்படி இருந்தவ இப்போ எப்படி இருக்கா உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?”
 “உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலம்மா.. நீங்க எது கேட்கிறதா இருந்தாலும் என்னை, உங்க மகனை தான் கேட்டிருக்கணும், அதை விட்டு அவளை ஏன்மா..?” என்று விட்டு போன மனதுடன் கேட்ட மகனுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய சுபாவின் பதிலை எதிர்பார்க்கா இந்திரஜித்,
“ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க, இந்த செகண்ட் வரை நான்தான் அவபின்னாடி சுத்திட்டு இருக்கேன், அவ இல்லை, அவ என்னை விடறதே பத்தி இங்க பேச்சே கிடையாது, நான் அவளை விடமாட்டேன், அவ்வளவுதான்..” என்று உறுதியாக முடித்து விட்டு போனை வைத்தவன் மனம் குமுற பெட்டில் அப்படியே குப்புற விழுந்தான். 
அவனின் அருகில் அமர்ந்த விஷ்வா, ஆதரவாக அவனின் தோள் தட்டியவாறே “ஜித்து.. இதுவரை என்ன பிரச்சனைன்னு தெரியாம இருந்தோம், இப்போ இது தான்னு தெரிஞ்சிருச்சு இல்லை விடு பார்த்துக்கலாம்..” என்று சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது இந்திரஜித்தின் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தவன்,
“ஜித்து.. தீக்ஷி தான் கால் பண்றா..” என்று கவிழ்ந்து படுத்திருந்த தம்பியிடம் போனை கொடுக்க, “வேண்டாம்.. நான் இப்போ பேசல..”  என்று விட்டான். சில நிமிடங்கள் கழித்து மறுப்படியும் அவளிடம் இருந்து போன் வர, 
“ஜித்து பேசு..”  என்று அதட்டிய அண்ணனிடம் இருந்து போன் வாங்கி கொண்டு வெளியில் வந்தவன், “ம்ம்.. சொல்லு தீக்ஷி..” என்று முயன்று சாதாரணமாக கேட்டான். 
“ஆமா நீங்க எப்படி இங்க வந்தீங்க..? அப்பா எதோ உங்களுக்கு வயிறு வலின்னு வேற கேட்டுட்டு இருந்தார்..” என்று கேட்டாள். 
“எங்களுக்கும் இந்த தீம் வெட்டிங்குக்கு இன்விடேஷன் உண்டு மேடம், உங்களை போல நாங்களும் அவருக்கு பழக்கப்பட்ட பிசினஸ் சர்க்கிள் தான்..”  என்று சீண்டல் போல சொன்னவனின் பேச்சில் சிரித்தவள், 
“அது என்ன வயிறு வலி..?” என்று அவர்கள் தங்கியிருக்கும் ரூம் பால்கனியில் இருந்து பேசியவாறே திரும்பி பார்த்தவளின் பார்வையில் வெளியில் நின்றிருந்த இந்திரஜித் தென்பட, அவனை பார்த்தபடியே கேட்டாள்.  
“ஆமா என்னை  பாடாபடுத்துற ஒரு ராட்சஸியை பார்க்கணும்ன்னா சும்மாவா..? சில பல பொய்கள் தேவைப்பட தான் செய்யுது, என்ன இந்த வெட்டிங்குக்கு விஷூ மட்டும் தான் வர்றதா இருந்துச்சு, நீ இங்க இருக்கிறது தெரிஞ்சதும் நானும் வந்துட்டேன்..” என்று சொன்னவனின் குரல் நார்மாலாக இருந்தாலும், முகம் மிகவும் கசங்கி இருந்ததை கண்டு கொண்டாள். 
“ஏன் உங்க முகம் இப்படி இருக்கு..?”  என்று கேட்டவளின் கேள்வியை உணர்ந்து அவர்கள் இருக்கும் பக்கம் திரும்பி பார்த்தவனின் பார்வையில் தீக்ஷி பட, ஓடி போய் அவளை இறுக்கமாக கட்டி கொள்ள வேண்டும் என்ற உந்துதலை பாக்கெட்டில் கை விட்டு அடக்கியவன்,  
“எப்படி இருக்கு..? அதெல்லாம் ஒன்னுமில்லை..”  என்றான். “ம்ஹூம்..” என்று மறுத்தவள், போனை வைத்திவிட்டு உள்ளே சென்றுவிட, இவன் கை கட்டி அங்கேயே நின்றுவிட்டான்.  
“இப்போ சொல்லுங்க..?” என்று வந்த தீக்ஷியை பார்த்து அதிர்ந்தவன், “தீக்ஷி.. இந்த நேரத்துல ஏன் இங்க வந்த..? உங்க அப்பா, அம்மா பார்த்துட போறாங்க, உள்ள போ..” என்று கண்டிப்புடன் சொன்னவனை கண்டு கொள்ளாமல் அவனையே கூர்மையாக பார்த்தாள். 
“ச்சு..” என்று அவளின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முடியை கோதி கொண்டு வேறு புறம் திரும்பி நின்று கொண்டான். அவனுக்கு எதிரில் சென்று நின்றவள், 
“ப்ளீஸ்.. சொல்லுங்க..”, என்று அவனின் கையை பற்றி கொண்டு கேட்டவளை கோவம் கலந்த காதலோடு பார்த்தவன், நொடியில் அவளின் இடை பற்றி இழுத்து தன்னோடு அணைத்து கொண்டான். 
அவனின் திடீர் அணைப்பில் அவனுள் அடங்கியவளை இன்னும் இன்னும் தனக்குள்ளே புதைத்து   கொள்பவனை  போல  இரு கைகளாலும் அவளின் பூவுடலை இறுக்கி வளைத்து தன்னோடு அணைத்து கொண்டவன், 
“நான் உன்கிட்ட  கேட்ட கேள்விக்கு எனக்கு நீ  பதில் சொன்னியா..? இல்லையில்லை, இப்போ என்னை மட்டும் ஏன் கேட்கிற..?” என்று கோவமாக சீறியவன், அவளின் கழுத்தில் முகம் பதித்தான். 
இத்தனை நாள் தனியாகவே எவ்வளவு வருத்தப்பட்டிருக்கிறாள். ஏன் என்னிடம் சொல்லியிருந்தால் தான் என்ன..? என்ற கோவம், சுபா பேசிய பேச்சின் தாக்கம், அது உண்டாக்கிய இயலாமை என்று மிகவும் மோசமான மனநிலையில் இருந்தவனின் கோவம் பேச்சில் வெளிப்பட்டது.  
“நான் சொல்லன்னா நீங்க சொல்ல மாட்டிங்களா..? சொல்லுங்க..” என்றவளிடம், “முடியாது, நீ சொல்லு முதல்ல..” என்றவனின் சூடான கோபமூச்சில்  தீக்ஷியின் உடலிலும் உஷ்ணம்  ஏறியது. 
“ஈவினிங் கூட நார்மலாதானே இருந்தீங்க..? இப்போ என்ன ஆச்சு..?” என்று பொறுமையாகவே கேட்டவளின் உடல் அவனின் அளவுக்கு அதிகமான நெருக்கத்தில் சுகவேதனை கொண்டது.  
“நீ சொல்லு..”  என்று அதட்டவே செய்தவன், அவள் சொல்ல முடியாது என்பது போல் உறுதியாகவே நிற்க, கடுங்கோபம் கொண்டவன்,  அவளின் கழுத்தில் பற்கள் படிய கடித்தே விட்டான்.
“ஸ்ஸ்..” என்று வலியில் அலறியவளின் அலறல்  தான் செய்ததை உணர்த்த வேகமாக அவளை விட்டு விலகி, தான் கடித்த தடத்தை பார்த்தான். பற்கள் பதிந்து லேசாக ரத்தம் துளிர்த்து இருக்கவும் அதிர்ந்தவன், 
“சாரி.. சாரி.. மன்னிச்சுக்கோடி, ரொம்ப வலிக்குதா..?” என்று அந்த இடத்தை தொட கை கூசியவண்ணம் பதட்டத்துடன் பார்த்தவனின் பரிதவிப்பை உணர்ந்தவள், தானே சென்று அவனை அணைத்து, 
“ஷ்ஷ்.. ஒன்னுமில்லை, விடுங்க..” என்று சமாதானம் சொன்னவளை அணைக்க கை வராமல் அவன் கடித்த தடத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

Advertisement