Advertisement

“நீங்க பார்ட்டியில ஒன்னு சொன்னீங்களே அது உங்களுக்கு நியாபகம் இருக்கா..?” என்று மிகவும் நிதானமாக கேட்ட தீக்ஷி, 
“எப்படி உங்க மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க எங்க அப்பாவுக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொன்னீங்களே..? அதே போல தான், இன்னொரு வீட்டு பொண்ணை கேள்வி கேட்க, அதுவும் கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாத கேள்வி கேட்க உங்களுக்கு மட்டும் உரிமை இருக்கா..? என்னை இப்படி கேள்வி கேட்கும் உரிமையை யார் கொடுத்தது உங்களுக்கு..?” என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக கேட்டாள். 
அதுவரை மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி கொண்டிருந்த சுபாவின் சத்தம் மவுனமாகிவிட, கால் கட் ஆகிவிட்டதா என்று மொபைலை காதில் இருந்து எடுத்து பார்த்தாள். இல்லை லைனில் தான் இருந்தது, சில நொடி மவுனமாகவே மட்டும் இருந்த சுபா, 
“எனக்கும் உன்னை இப்படி கேள்வி கேட்க ரொம்ப வெறுப்பா தான் இருக்கு, ஆனா எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல, ஏற்கனவே விஷூக்கும், எனக்கும் முதல்ல இருந்த அந்த நெருக்கம், பிணைப்பு இல்லை, நான் அவன் பொண்டாட்டி பிள்ளயை ஏத்துக்கலைனு என்மேல் அவனுக்கு கோவம், வருத்தம், என்னை விட்டு விலகிட்டான், என்னாலயும் அவனை பிடிச்சு வைக்க முடியல, பிடிக்கல, நானும் விலகிட்டேன்”, 
“இப்போ  எனக்குன்னு இருக்கிறது ஜித்து மட்டும் தான், அவனாவது என்னோட மகனா எனக்கு  வேணும், என்னால அவன்கிட்ட போய் உன்னை விட்டுட சொல்ல முடியாது, அவன் விடவும் மாட்டான்..!!அதுவும் எனக்கு தெரியும்..”, எனும் போது அவரின் குரலில் தெரிந்த விரக்தி கலந்த கலக்கம், தீக்ஷிக்குள் மாபெரும் துன்பத்தை கொடுத்தது. 
“ஆனா  அதுக்காக எல்லாம் நான் பின்வாங்க மாட்டேன், என்னோட குடும்பத்தை உடைச்ச அந்த அரசுவோட பொண்ணு என் வீட்டு மருமகளா என்னால ஏத்துக்க முடியாது, நீ வேண்டாம் என் மகனுக்கும் சரி, என் குடும்பத்துக்கும் சரி..” என்று வெறுப்பாக சொல்லி வைத்துவிட, மீண்டும் பழைய போராட்ட நிலைக்கு தள்ளபட்டாள் தீக்ஷிதா.
“தீக்ஷி.. இது என்ன..?” என்று ராணி அவளின் செமஸ்டர் மார்க்கை பார்த்து கோவமாக கேட்க, பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள் தீக்ஷிதா. 
“அபோவ் நைன்ட்டி வாங்கியிருந்தவளுக்கு  இப்போ மட்டும் என்ன ஆச்சு ..? எல்லா சப்ஜெக்ட்லியும் 60 சம்திங் தான் வாங்கியிருக்க, ஏன் இப்படி..? படிக்க முடியாத படி  அப்படி என்ன பிரச்சனை உனக்கு..? பதில் சொல்லு..” என்று மகளிடம் கேட்டவர், அவள் பதில் சொல்லாமல் அமைதியாக நிற்கவும், சற்று தன் கோவத்தை குறைத்தவர், 
“நானும் எத்தனை நாளா ஏன் எப்படியோ இருக்கன்னு, கேட்டுட்டே இருக்கேன், இதோ இப்போ நிக்கிற மாதிரி அமைதியாவே இருக்க, அட்லீஸ்ட்   இப்பவாவது சொல்லு, உனக்கு என்னதாண்டி ஆச்சு..?” என்று அவளின் மாற்றத்தில் கோவத்தோடு வருத்தம் கொண்ட ராணி ஆதங்கமாக கேட்டார். 
ராணியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டாமல் நின்ற தீக்ஷியின் கைகளில் இருந்த மொபைல் ஒலிக்க  பார்த்தவளின் முகம் இந்திரஜித்தின் பேரை பார்த்ததும் ஒரு நொடி மலர்ந்து அடுத்த நொடி கூம்பியும் போனது.
“தீக்ஷி..” என்று ராணி கோவமாக அதட்டி கூப்பிட, “ராணி.. ஏன் இப்படி பிள்ளையை கத்துற..? இங்க வாடா..” என்று மகளை கூப்பிட்டு பக்கத்தில் உட்காரவைத்து தன் தோளில் சாய்த்து கொண்டார் அரசு.   தீக்ஷிக்கும் தந்தையின் ஆறுதல் மிகவும் வேண்டியதாக இருக்க, சலுகையுடன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள். 
“இது நல்லா இருக்கு.. நான் அவளை கண்டிச்சிட்டு இருந்தா நீங்க செல்லம் கொடுத்து அதை ஒன்னுமில்லாம ஆக்குறீங்க..” என்று கணவனை கேட்டார். 
“நீ அவளை கண்டிச்சிக்கோ, நான் உன்னோட உரிமையில குறுக்கா வரமாட்டேன், ஆனா அதே சமயம் என் பொண்ணை மனசு வருத்ததுல இருக்கும் போது அவளுக்கு ஆறுதலா தோள் கொடுக்கிறதும் ஒரு அப்பாவா என்னோட கடமை, அதுல நீயும் குறுக்கால வரக்கூடாது.. Mrs.. அரசு..” என்று மனைவியை பார்த்து கண்ணடித்து இறுதியில் மனைவியை சமாளிக்கவும் தவறவில்லை மனிதர். 
“க்கும்..” என்று கண்களால் கணவனை கண்டித்தவர், “எனக்குமே அவளோட மார்க் குறைஞ்சதா பிரச்சனை, அவ ஏன் இப்படி இருக்கான்னு தான் கவலை”, என்றவர், 
“நாம இவ்வளவு பேசுறோம், ஏதாவது பதில் சொல்றாளா பாரு..” என்று தந்தையின் தோளில் முகம் புதைந்திருந்த மகளின் கோவம் கொண்டு, அவளின் முதுகில் லேசாக அடி போட்டவர், 
“எனக்கு பதில் சொல்லு தீக்ஷி..?” என்று கேட்டு கொண்டிருந்தவரின் காலில் ஒரு பொம்மை வைத்து அடித்து கொண்டிருந்த தருண், அவரை முறைத்து பார்த்தவன், மேலேறி தீக்ஷியின் மேல் சாய்ந்து கொள்ள, தீக்ஷி அவனை தன்னோடு அணைத்து கொண்டாள்.
“டேய்.. பொடியா.. என்ன உன் தீக்ஷிக்கு சப்போர்ட்டா..? கடைசில எல்லோரும் ஒண்ணு சேர்ந்து அவளுக்கு சப்போர்ட் செஞ்சு அவளை இன்னும் கெடுக்குறீங்க..?”  என்று அங்கலாய்த்தவர் சென்றுவிட, 
“தீக்ஷிமா.. என்னடா ஆச்சு..? எதாவது பிரச்சனையா..? அப்பாகிட்ட சொல்லுடா..?” என்று பாசமாக கேட்ட தந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த தீக்ஷிக்கு, ராணியின்  கோவமே மேல் என்று தோன்றியது.
 “ப்பா.. நாம கொஞ்ச நாள் எங்கேயாவது போலாமா..?” என்று தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல், வேறெங்கேயாவது செல்ல கேட்கும் மகளின் வித்தியாசத்தை புரிந்து கொண்டவர், 
“போலாம்டா, எங்க போலாம்..?, நம்ம ECR கெஸ்ட் அவுஸ் ஓகேயா..?” என்று கேட்டார். 
“இல்லப்பா, வேண்டாம், வேற எங்கேயாவது, கொஞ்சம்.. நிறைய தூரம்..” என்று கேட்டாள்.
“ம்ம்.. ஓகேடா, ஒன்னு செய்யலாம், கோவாவுல நம்ம பிஸ்னஸ் சர்கிள்ல இருக்கிறவரோட பொண்ணுக்கு தீம் வெட்டிங் வச்சிருக்கார், அங்கேயே போலாம், உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும், நாமளும் கல்யாணம் அட்டென்ட் செஞ்ச மாதிரியும் இருக்கும்..” என்று சொல்ல, ஓகேயாகி விட்ட அவர்களின் திட்டம் போல், அடுத்த மூன்று நாட்களிலே குடும்பத்துடன் கோவா கிளம்பிவிட்டனர்.
“தீக்ஷி.. வா மணல் வீடு கட்டலாம்..” என்று பீச் வந்திருந்த மனோஜ், அக்காவிடம் கேட்டான். 
“ம்ஹூம்.. வேண்டாம், நான் வரல, நீ போ..” என்று தம்பியை அனுப்பிவிட்டவள் வெறுமையாய் பொங்கும் கடலை பார்த்திருந்தாள். சுபா அவளிடம் பேசிய நாளிலிருந்து மறுபடியும் ஆரம்பித்துவிட்ட அவளின் மனசஞ்சலங்கள், குழப்பங்கள், வருத்தங்கள் அவளை சாதாரணமாக இருக்க விடவில்லை. 
அவர் பேசிய வார்த்தைகள் வடுவாய் மனதில் பதிந்துவிட்டதோடு, அவரின் கோவம் சரிதானோ..? என்ற சந்தேகமே அவளை நிம்மதி இல்லாமல் அலைய வைத்து கொண்டிருந்தது. 
அவர் சொல்வது போல் அப்பா இந்த திருமணத்தை செய்தே வைத்திருக்க கூடாதோ..? அவர்களுடைய மகனுக்கு திருமணம் செய்துவைக்க அப்பா யார்..? இது ஒரு அம்மாவாக சுபாவிற்கு அவர் செய்த அநியாயம் தானே..? அப்படி இருக்க அவரின் மகள் என்னுடைய காதலும் அவரை மேலும் தானே வெறுக்க, கோவம் கொள்ள வைக்கும், 
ஆனால் இதில் அப்பா பிளான் செய்து வேண்டுமென்றே செய்ய வில்லையே, ராமலிங்கம் அங்கிள் எப்படி இருந்தாலும், தர்ஷினி மிக நேர்மையானவள் தானே, இதோ அவர்களின் திருமணம் முடிந்து இத்தனை வருடங்கள் கடந்தும் தர்ஷினியால் அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லையே..? அதை ஏன் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்..? இது போன்ற கேள்விகளை விட, 
“தங்களுடைய காதல்..!! அதற்கு இப்போது தான் என்ன செய்ய வேண்டும்..?” என்ற கேள்வி தான் அவளை மிகவும் துரத்துவது.. 
இவ்வாறான  நிலையாலே அவளால் இந்திரஜித்திடம் முன் போல் பேச முடியாமல் தடுமாறியவள், அவனை முழுவதுமாக தவிர்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டாள் தான், ஆனால் அதை செயல்படுத்த இந்திரஜித் விட வேண்டுமே..!! 
அவனிடம்  பேச, பார்க்க மறுக்க எந்த காரணம் சொல்லாமல் சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் ஏற்று கொள்பவன், அவளை  தொடர்வதை மட்டும் விடவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவள் இரண்டொரு வார்த்தை பேசும் வரை அவன் விடுவதில்லை, நேரில் பார்க்க மறுத்தாலும் வீடியோ கால் மூலமாவது பார்த்து விடுவான். 
அதற்காக அவளை மிரட்டுவதோ, கோவம் கொள்வதோ இல்லை, பொறுமையாக பேசியே சாதித்துவிடுபவனின் மேல் தீக்ஷி தான் பல முறை கோவப்படுவதுண்டு. 
இதோ ஒரு வாரத்திற்கு முன்பும்,  அவனை விட்டு விலகமுடியாமல் தவிக்கும் தன்னுடைய இயலாமையின் மேல் அளவில்லா கோவம் கொண்டிருந்தவள், இந்திரஜித் வீடியோ கால் பேச கூப்பிடவும், தன் கோவத்தை அவன் மேல் காட்டி கத்தியிருந்தாள். 
அதோடு முடியாமல், தன்னுடைய போனையும் அணைத்தே விட்டவள், இந்த நொடி வரை அதை ஆன் செய்யவும் இல்லை. ஆனால் அது அவளுக்கு மேலும் தான் துன்பத்தை கொடுத்தது. 
“தன்னை தேடியிருப்பானோ..?” என்றே நினைத்து இவள் தான்  அவனை அதிகம் மிக அதிகம் தேடினாள். எங்கு சென்றாலும், என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அவன் நினைவு மனதில் மிதந்து கொண்டே இருந்தது.
“தீக்ஷி… ரூம் போலாமா..? அப்பா, அம்மா பங்க்ஷனில் இருந்து வந்துருவாங்க..” என்று மனோஜ் வர, நீ போ என்று தம்பியை ரூமிற்கு அனுப்பி வைத்தவள், இருள் சூழ்ந்த போதும் அங்கேயே அமர்ந்திருந்தவளின் உள்ளுணர்வு  உந்த பரபரப்பாக  திரும்பி பார்த்தவளை சிறிதும் ஏமாற்றாமல், அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் இந்திரஜித். 
தன்னையே மெய்மறந்து பார்க்கும் தீக்ஷியின் தேடல் பார்வையை கண்டு உள்ளுக்குள் யோசனையானவன், ஏதும் பேசாமல் அவளின் பக்கத்தில் அமர்ந்தவன், அவளின் தோள் சுற்றி கை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான். அந்த நொடி அவளின் கண்ணில் இருந்த நீர், அவனின் தோளை நனைத்து அவளின் காதலை அவனுக்கு சொன்னது.

Advertisement