Advertisement

தீரா காதல் தீ 12
“விஷ்வா..  இப்போ இந்த கவர்மெண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டை   நீங்க எடுக்கணுமா..?” என்று காரில் சென்று கொண்டிருந்த அரசு, பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்வஜித்திடமும், இந்திரஜித்திடமும்  கேட்டார். 
“ஏன் மாமா..? வேண்டாமா..?” என்று அவரின் கேள்வி எதற்கு என்று புரியாமல் கேட்டான் விஷ்வஜித். 
“வேண்டாம்ன்னு நான் சொல்லலை, ஆனா இப்போ செய்யணுமா..?ன்னு தான் யோசிக்கிறேன்..” என்று தயங்கினார். 
“மாமா நீங்க ஏன் இப்படி சொல்றீங்கன்னு எனக்கு புரியல..”, என்று இந்திரஜித் சொல்லவும்,  
“இல்லை தம்பி.. நீங்க இப்போ செய்ய நினைக்கிற அந்த ப்ராஜெக்ட், ரொம்ப வருஷமா  அந்த ஷர்மா க்ரூப் செஞ்சிட்டிருக்கிற ப்ராஜெக்ட், இப்போ நீங்க திடீர்ன்னு இடையில் வர்றதை அவங்க எப்படி பார்ப்பங்கன்னு தெரியாது”, 
“அதோட நீங்களும், மாப்பிள்ளையும்   கொஞ்ச வருஷமா தான் தொழிலுக்குள்ள வந்துருக்கீங்க, உங்களுக்கு அவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சா, அதை மத்த பிஸ்னஸ் மேன்ஸ் எப்படி எடுத்துப்பாங்கன்னும் தெரியல..” என்று மேலோட்டமாக சொன்னார். 
“ஓஹ்..” என்று அவர் சொல்ல வருவதை கிரகித்து கொண்ட இந்திரஜித்,  “அவங்க எல்லாம்  எங்களை எதிரியா பார்க்க வாய்ப்பு நிறைய இருக்குன்னு சொல்றீங்க..?” என்று சாதாரணாமாக சொன்னவன்,  
“மாமா.. கண்டிப்பா எங்களை எதிரியா தான் பார்ப்பாங்க, ஆனா இதுல இன்னும் ஒன்னு இருக்கு, அந்த ஷர்மா க்ரூப் அவங்க ஸ்டேட்டை விட்டு வந்து இங்க நம்ம ஸ்டேட்ல வந்து ப்ராஜெக்ட் செய்யும்போது,  நாம  நம்ம வீட்ல  போர் போடக்கூடாதுன்னு எப்படி மாமா..?”  என்று சிரிப்புடன் கேட்டான். 
“டேய்..” என்று அவன் சொல்லவருவது புரிந்து சத்தமாக சிரித்த  விஷ்வஜித், “நீ சிவில் என்ஜினீயர்ன்னு அடிக்கடி  ப்ரூவ் செய்யறடா..”என, தானும் சிரித்த அரசு, “செய்ங்க.. ஆனா பார்த்து செய்ங்க.. பார்த்துக்கலாம்” என்று முடித்து கொண்டார்.
 “நான் அம்மாகிட்ட என்ன காரணம் சொல்லிட்டு  அக்கா வீட்டுக்கு வர்றது..? டைம் பார்த்தீங்களா..? மணி நைட் ஒன்பது  ஆகுது, இப்போ வேண்டாமே, நாளைக்கு பார்ப்போம்..”  என்று தீக்ஷி போனில் இந்திரஜித்திடம்  கேட்டு கொண்டிருந்தாள். 
“தீக்ஷி..  எனக்கு உன்னோட  சூழ்நிலை புரியுது, பட்  ப்ளீஸ் என்னையும் கொஞ்சம் யோசிச்சு பாரு, நானும் நீயும் நேர்ல பார்த்து ஒரு மாசத்துக்கு மேலே ஆகும், எப்போ மீட் செய்ய கேட்டாலும் ஏதாவது காரணம் சொல்லிடற, இதுக்கு மேல என்னால உன்னை பார்க்காம இருக்க முடியுதுன்னு தான் நான் விஷூ வீட்டுக்கு வந்திருக்கேன், எப்படியாவது வா, எனக்கு உன்னை பார்க்கணும் அவ்வளவுதான்..” என்ற இந்திரஜித், இறுதியில்,
 “வா தீக்ஷி ப்ளீஸ்..” என்றுவிட அதற்கு மேல் அவனை மறுக்க முடியா தீக்ஷி, “நான் வரேன்..” என்றவள், கீழே சென்று ராணியை பார்க்க, அவர் அரசுவுடன் சோபவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். 
“ம்மா..” என்று அவரின் அருகில் சென்றவள், “நான் கொஞ்சம் அக்கா வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்..”, என்று மிகவும் குறுகுறுத்த மனதுடன் அவரின் முகம் பார்க்க முடியாமல் மொபைலில் பார்வை வைத்து கேட்டவளை உறுத்து பார்த்த ராணி, 
“டைம் பார்த்தியா..? மணி ஒன்பது, இந்த நேரத்துல உனக்கு அங்க என்ன வேலை..?”என்று கண்டிப்புடன் கேட்டார். 
“ம்மா.. என்னோட ஹாண்ட்ஸ் ப்ரீ அக்கா வீட்லே விட்டுட்டு வந்துட்டேன், அதை போய் எடுத்துட்டு வந்துடுறேன்.. உனக்கு தான் தெரியுமில்லை எனக்கு நைட்ல பாட்டு கேட்காம தூங்க முடியாதுன்னு..” என,  
“இன்னிக்கு ஒரு நாள் பாட்டு கேட்காமலே தூங்கு பரவாயில்லை..”,  என்று ராணி முடித்துவிட்டார்.  
“ம்மா.. எப்போ பார்த்தாலும் அங்க போகாதா, இங்க போகாதா, அதை செய்யாதா.. இதை செய்யாதான்னு என்னை டிக்டேட் செஞ்சிட்டே இருக்காதா.. என்னை கொஞ்சம் ப்ரீயா விடு..”  என்று கள்ளம் கொண்ட மனதால் கோவம் கொண்டு பேசினாள். 
“விடு ராணி, போய்ட்டு வரட்டும்..” என்று அரசு எப்போதும் போல் மகளின் சப்போர்டுக்கு வந்து அவளை அனுப்பி வைக்க, ராணியின் உர்ரென்ற முகத்தை பார்த்தவாறே தர்ஷினியின் வீட்டிற்கு வந்த தீக்ஷிதாவின் மனம் எப்போதும் போல் சரி..?  தவறுக்கு..?  இடையில் உழன்று அவளை இம்சித்து வைதைத்தது. 
அவள் இந்திரஜித்தை காதலிக்க ஆரம்பிக்கும் போது இருந்த அந்த சந்தோஷம், மகிழ்ச்சி, பரவச நிலை, கனவுலகிலே மிதந்த அவளின் காதல் மனது.. இதெல்லாம் இப்போது எங்கே சென்றது..? என்று அவளுக்கே தெரியவில்லை.
சுபா.. அன்று பார்ட்டியில் அவளிடம் பேசிவிட்டு சென்ற நாளில் இருந்து ஆரம்பித்த அவளின் மனபோராட்டம் முடியவே முடியாத தொடர் கதையாகி போனது, அவர் பேசிவிட்ட பேச்சுக்களை நினைத்த மனகுமுறலோடு, பெற்றவர்களை ஏமாற்றும் குற்றஉணர்ச்சியும் சேர்ந்து கொண்டது. 
அதனாலே முடிந்தவரை இந்திரஜித்தை பார்ப்பதை, நெடு நேரம் போனில் பேசுவதை தவிர்க்க பார்ப்பாள். ஆனால் அவளின் காதலனோ அவளின் தவிர்ப்பை எல்லாம் நொடியில் உடைத்து அவளை நெருங்கிவிடுவான். “இதோ இப்போது போல் தான்..!!” 
இது போலான  இந்திரஜித்தின் விடாப்பிடியா காதலில் தீக்ஷிக்கு அவன் மேல் இன்னும் இன்னும் காதல் பொங்கும், ஆனால் அதை அனுபவிக்க முடியாமல்,  ஒரு அம்மாவாக  சுபாவின் கோவம், ஆதங்கம், எதிர்பார்ப்பு எல்லாம் மிக மிக சரி.. என்ற அவளின் நியாய மனது விழித்து அவளை இம்சிக்கும். 
இது போன்ற காரணங்களாலே இந்திரஜித்தை சந்திப்பதை தவிர்த்துவிட்டிருந்தாள். ஆனால் அதை எல்லாம் கடந்து  நீண்ட நாட்களுக்கு பிறகு  இன்று  அவனை சந்திக்க  போகும் மகிழ்ச்சி, ராணியின் கோவத்தை மறக்க செய்ய, அவளின் நடையில் தானாகவே வந்தது ஒரு துள்ளல்.  
அவளின் மலர்ந்த  முகத்திலும், காதலால் நிறைந்திருந்த உள்ளத்திலும் ரகசிய ஊற்றுகள் பொங்க, உடலின் சிலிர்ப்பை முழுவதுமாக அனுபவித்தவாறே தர்ஷினியின் வீட்டிற்குள் நுழைந்தாள். 
அங்கு நுழைந்தவுடன் அவளின் கரத்தை ஒரு வலிய கரம் பற்றி, மேலே மொட்டை மாடிக்கு கூட்டிட்டு கொண்டு  செல்ல, இருட்டிலே தெரிந்த அவனவனின் உருவத்தை ரசித்தபடி தீக்ஷியும் அவனுடன் சென்றாள். காதலியின் கை பற்றி மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில் இறுதி படிக்கட்டில் அவளை அமரவைத்தவன், அதற்கடுத்து கீழே இருந்த படிக்கட்டில் தான் அமர்ந்து கொண்டான். 
மெல்லிய நிலவு வெளிச்சத்தில் ஒளிர்ந்த அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தவனின் கைகள், அவளின் கைகளோடு பிண்ணி பிணைந்து தன் காதலை கடத்தியவனின் இறுக்கம், தீக்ஷிக்குமே மிகவும் தேவையாக இருக்க, மறுக்காது தானும் அவனின் கைகளை இன்னும் பிணைந்து கொண்டாள். 
அவளின் பிணைப்பிலும், கண்களின் இமைக்கா பார்வையிலும்  தன்னை போல் அவளும் தன்னை தேடியுள்ள உண்மை புரிய, அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தியவனின் கைகள் தன்னை போல அவளை அணைத்தது. 
பேசும் வார்த்தைகளை விட, மவுனமான இந்த அணைப்பே அவர்களின் தேடலுக்கு  போதுமான நிறைவை கொடுக்க, இருவருமே அந்த நிமிடங்களை மிகவும் விரும்பி கண்மூடி ஏற்றனர். அதிலும் தீக்ஷிக்கு இத்தனை  நாள் மனபோரட்டங்கள் அவளை மனதளவில் மிகவும் சோர்வடைய வைத்திருக்க, அவனின் நெஞ்சில் முகம் புதைத்து, அந்த சோர்வை விரட்டியடித்து காதலை அங்கு நிரப்பினாள். 
எத்தனை நிமிடங்கள் கடந்தன என்று தெரியாமல் தங்களின் அணைப்பில் இந்த உலகத்தை மறந்திருந்தவர்களை, பலமான காரின் ஹார்ன் ஒலி  இப்பூமிக்கு இழுத்து வந்தது.  அந்த சத்தம் கேட்டவுடன் ராணியை நினைத்து பதட்டத்துடன் நிமிர்ந்த தீக்ஷி, 
“அம்மா.. வெய்ட் செய்வாங்க, நான் போகட்டா..?” என்று இந்திரஜித்திடம் கேட்டாள். “ம்ம்.. போலாம்..”, என்றவன் அவளை விடாமல் மறுப்படியும் அணைத்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். 
“ப்ளீஸ்.. ரொம்ப லேட் ஆகிடுச்சு, அம்மா என்னை தேடி இங்கேயே வந்தாலும் வந்துடுவாங்க..” என்று அதுவரை இருந்த காதல் மயக்கம் மறைந்து பயம் கொண்டு பேசியவளை புரிந்து பெருமூச்சோடு அவளை விடுவித்தான். 
அவள் எழுந்து நின்றவள் படிக்கட்டிலே அமர்ந்து தன்னையே பார்த்திருக்கும் இந்திரஜித்தின் ஏக்க பார்வையில், அங்கிருந்து நகர தோன்றாமல், முடியாமல் அங்கேயே தேங்கி நின்றாள். 
“இப்படி பார்த்தா நான் எங்கிருந்து போக..?” என்று முனகியவளின் சத்தம் அவனுக்குமே கேட்க, லேசாக சிரித்தவன், தானும் எழுந்து நின்று அவளின் கை பிடித்து கேட் வரை கூட்டிட்டு கொண்டு வந்தவன் போகச்சொல்லி அவளின் கையை விட்டான். 
“போக வேண்டும்..” என்று அதுவரை தவித்த தீக்ஷி,  அவனின் கை விலகிய நொடியில், போக வேண்டும் என்பதை மறந்து, மறுத்து அவனையே பார்த்தாள். 
“நான் இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கதான் இருப்பேன், கிளம்பு, அத்தை அங்க கேட்டிலே நிக்கிறாங்க பாரு..” என்று ராணியை கை காட்டி சொல்ல, எட்டி பார்த்த தீக்ஷிக்குமே அதற்கு மேல் அங்கு நிற்கமுடியாது என்று புரிய, அவனை விட்டு விலக  பிடிக்காமல் விலகி தன் வீடு நோக்கி சென்றாள்.
“ஏன் இவ்வளவு லேட்..?” என்று மகளை கடிந்தவாறே உள்ளே சென்ற ராணி, “ஆமா எங்க ஹாண்ட்ஸ் ப்ரீ..?”என்று கேட்டார். 
“அது.. தேடுனேன் கிடைக்கல..” என்று அவரின் முகம் பார்க்காமல் சொன்னவள், விரைந்து தன் ரூமிற்குள் வந்துவிட்டாள். அவள் ரூமில் நுழைந்த நொடி, இந்திரஜித் அவளின் மொபைலுக்கு அழைத்துவிட, எல்லாவற்றையும் மறந்து  அவனுடன் பேச ஆரம்பித்துவிட்டாள்.  
அன்று மட்டுமில்லாமல் இந்திரஜித் அங்கு  இருந்த அந்த ஒரு வாரமும்,  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனியாக சந்திப்பதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் பேசுவதுமாக தங்களின் காதல் உலகில் மிதந்தாள் தீக்ஷிதா.  ஒருவாரம் முடிந்து அவன் ஊட்டி கிளம்பிசென்ற பிறகு சுபாவிடம் இருந்து வந்த போனில் தான்  நிதர்சனத்திற்கு திரும்பினாள்.
“நான் அவ்வளவு சொல்லியும், நீ என் மகனை விடமாட்ட இல்லை..” என்ற அவரின் ஆத்திர குரல், அவளுக்கு கோவத்தையே வரவழைத்தது. 
“என்ன பேசுறீங்க நீங்க..? ஒரு பொண்ணுகிட்ட இப்படி தான் பேசுவீங்களா..?” என்று குரலில் கடினத்தை தயங்காமல் காட்டினாள். 
“என்ன ரொம்ப கோவம் வருதோ..? அப்படித்தான் எனக்கும் வருது, இன்னும் சொல்ல போனால் உன்னை விட அதிகமா வருது, என் ஒரு மகன் வாழ்க்கையை உங்க அப்பா கெடுத்தார், இப்போ நீ என்னோட இன்னொரு மகன் வாழ்க்கையையும் கெடுக்க பார்க்கிற, அதுக்கு நான் விடமாட்டேன், விடவே மாட்டேன்..” என்று நிதானமில்லா ஆங்காரத்தோடு கத்தினார். 

Advertisement