Advertisement

தீரா காதல் தீ 11
“நான் யார்..?” என்ற கேள்வியுடன் தீக்ஷியின் முன்னால் நின்றார் சுபா. தருணுக்காக மாற்று துணி எடுக்க, அவர்களின் காருக்கு சென்று கொண்டிருந்த தீக்ஷிய  வழி மறைத்து சுபா கேட்கவும், அவரை புரியாமல் பார்த்தாள் தீக்ஷிதா. 
“உன்னை தான் கேட்கிறேன்..? நான் யாரு..?” என்று சுபா கோவம் வெளிப்பட அதட்டலாக கேட்டார். அவரின் அதட்டலில் நன்றாக நிமிர்ந்து நின்ற தீக்ஷி, 
“நான் என்ன பதில் சொல்லணும்ன்னு  நீங்க  எதிர்பார்க்கிறீங்க..?” என்று நிமிர்வாக பதில் கேள்வி கேட்டாள். அவளின் நிமிர்வை திமிராக நினைத்த சுபா, 
“ஜித்துக்கு நான் யாரு..?” என்று பல்லை கடித்து ஆத்திரமாக கேட்டார். 
“அவருக்கு நீங்க யாருன்னு என்னை ஏன் கேட்கிறீங்க.?” என்று அவரின் ஆத்திரத்தை பொருட்படுத்தாமல் நிதானமாகவே கேட்டாள். 
“உன்னை தான் கேட்கணும், பதில் சொல்லு..?”  என்று விடாமல் கேட்க, இந்திரஜித்திற்காக அவருடனான மோதலை தடுக்க நினைத்தவள், “அவரோட அம்மா..?” என்றாள். 
“தெரியுது தானே, அவனுக்குன்னு அம்மா நான் இருக்கேன், அப்பாவும் இருக்கார், உனக்கும் அம்மா, அப்பா இருக்காங்க, ஏன்  நாங்க எல்லாம் உங்களுக்கு பொருத்தமான பொண்ணு, மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டோமா..? நீங்களே தான் பார்த்துக்கணுமா..?” என்று நேரடியாக கேட்கவே, அவரின் கேள்வியை புரிந்து கொண்ட தீக்ஷிக்குள் சுளீரென தாக்கிய உணர்வு. 
“ஏற்கனவே நான் பாடுபட்டு பெத்து வளர்த்த என் பெரிய மகனுக்கு யாருன்னே தெரியாத உங்க அப்பா என்னமோ அவர்தான் என் மகனை பெத்து வளர்த்த மாதிரி  கல்யாணம் செஞ்சு வச்சு என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சு புண்ணியம் கட்டிகிட்டார்..”, 
“இப்போ அவர் பொண்ணு நீயும் அவரை மாதிரியே என் சின்ன மகனை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிற..?”  என்று கொதித்தார். அவளை பற்றி பேசிய போது பொறுத்து கொள்ள முடிந்த தீக்ஷியால், தந்தையை பற்றி பேசவும் தாங்க முடியாமல், 
“எங்க அப்பா ஒன்னும் பிளான் செஞ்சு இந்த கல்யாணத்தை செய்யல,  விஷ்வா மாமா ரொம்ப ஆசைப்படவும் தான் செஞ்சார், அதுவும் ஆனந்தன் மாமாகிட்டேயும் போன்ல பேசி அவர் ஒத்துக்கிட்டதுக்கு அப்பறம் தான்..” என்று சிறிது கோவமாகவே  சொன்னாள். 
“ஓஹ்.. அவர் ஒத்துக்கிட்டா போதுமா..? நான்.. நான் யாருமே இல்லையா அவனுக்கு..?” என்றவரின்  கண்களில் நீர் திரண்டுவிட, அதை கோவத்தோடு சுண்டிவிட்டவர், 
“ஒரு அம்மாக்கு பிள்ளை மேல இருக்கிற உரிமை, இந்த உலகத்துல வேற யாருக்கும் கிடையாது, அது அவங்க அப்பவாவே இருந்தாலும் தான்..” என்று  அடித்து சொல்ல, அதை தீக்ஷியும் ஒத்துக்கொண்டவள், துடிக்கும் மனதை சமாளித்து, இன்னமும் நிமிர்ந்து தான் நின்றிருந்தாள். “காதல் ஒன்றும் தவறில்லையே..!!”
“இத்தனைக்கும் விஷூக்கு அப்போ கல்யாணம் செய்யற வயசு கூட இல்லை, அப்போதான் படிப்பையே முடிச்சு, தொழிலுக்குள்ள வந்தான், அவனுக்கு போய் கல்யாணம் செஞ்சு வச்சிருக்கார்”.  
“ஏன் அவனுக்கு அப்பா, அம்மான்னு நாங்க யாரும் இல்லையா..? எங்க மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க எங்களுக்கு தெரியாதா..?  உங்க அப்பா எந்த உரிமையில அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சார்..? இப்போ அவர் பொண்ணு நீயும், அதே வேலையை தான் செய்ற..?” என்று ஆத்திரத்தோடு ஒரு அம்மாவாக கேட்டார். 
“அதிலும் அந்த ராமலிங்கத்தோட பொண்ணு, என் மகனுக்கு பொண்டாட்டியா..? எங்க வீட்டு மருமகளா..?” என்று வெறுப்புடன் கேட்க, 
“உங்க அளவுக்கு காசு பணம் இல்லனாலும், ராமலிங்கம் அங்கிளும் ஓரளவு வசதியானவங்கதான்..” என்று அவர் அந்தஸ்து பார்ப்பதாக  நினைத்து தீக்ஷியும் கடுப்பாக சொன்னாள். 
“பணமா.. அது யாருக்கு வேணும்..? என் வீட்டுக்கு வர்ற மருமக கொண்டு வந்து தான் இங்க நிறையணும்னு ஒன்னும் இல்லை, எங்க பரம்பரையே நேர்மையா உழைச்சு சேர்த்து வச்ச பணம் என்கிட்ட நிறையவே இருக்கு..” 
“ஆனா அந்த மனுஷன் நேர்மைன்னா அது எங்க கிடைக்கும் கேட்கிற ஆளு.. அவர் ஒரு ஏழையா இருந்திருந்தா  கூட நான் கவலை பட்டிருக்க மாட்டேன், ஆனா கொஞ்சம் கூட நேர்மையில்லாத, மனசெல்லாம் கள்ளம், கபடு, பணத்தாசை புடிச்சவர், அவரோட  பொண்ணு மட்டும் எப்படி இருப்பா..?” என்று இவர்களின் திருமணம் ஆனவுடனே இவர்களை பற்றி விசாரித்து எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்த சுபா முக சுளிப்போடு சொன்னார். 
தீக்ஷிக்குமே ராணியின் பேச்சில் ஓரளவுக்கு ராமலிங்கத்தை பற்றி தெரியும் என்பதால், அவளால் அவருக்கு ஆதரவாக ஒரு சொல் கூட சொல்ல முடியா நிலை, ஆனா தர்ஷினி அவரை போல் இல்லையே..? என்று அதையே அவரிடம் சொல்லவும் செய்தாள். 
“தர்ஷினி அக்கா நேர்மையானவங்க, அவங்க..” என்று தீக்ஷி சொல்லி கொண்டிருக்கும் போதே, 
“ப்பா.. ப்பா..  என்னை ஏன் இப்படி இழுத்துட்டு வரீங்க..?” என்று தர்ஷினி குரல் கேட்க, இருவரும் திரும்பி பார்த்தனர். அங்கே  ராமலிங்கம் மகளின்  கையை பற்றியபடி இழுத்து கொண்டு வந்தவர், இவர்களை மறைத்திருந்த அலங்கார பொம்மைக்கு அந்த புறம் நிற்பது புரிந்தது. 
“ப்பா.. என்ன இது..? ஏன் இப்படி இழுத்துட்டு வரீங்க..?” என்ற தர்ஷினி, தந்தையிடம் இருந்து கையை விலக்கி கொண்டு கேட்டாள். 
“உன்னை என்ன சொன்னேன்..? எந்த இடத்திலும் விலகி விலகி நிக்காத, இதெல்லாம் உனக்கும் உரிமைபட்ட சொத்து தான்,  உரிமையா நில்லுன்னு  எத்தனை நாள் சொல்லியிருக்கேன், ஆனா நீ மாப்பிள்ளை பக்கத்துல சும்மா மண்ணு மாதிரி யாருதோன்னு நிக்கிற, இப்படி இருந்தா எப்படி..?”
“ நான் விசாரிச்சதுல மத்த சொத்தை போல இந்த ஹோட்டல் கூட அந்த சுபா, ஆனந்தன் மேலதான் இருக்கு, நான் முதல்லே சொன்னேன், மாப்பிள்ளை கிட்ட பேசி, இந்த ஹோட்டலை உன் பேருக்கு எழுத பாருன்னு, என் பேச்சை கேட்டியா..?”
“இப்போ பாரு அந்த சுபா, எங்களை பார்த்து எங்க ஹோட்டலை சுத்தி பார்த்துட்டு பொறுமையா சாப்பிட்டு போங்கன்னு நக்கலா சொல்லிட்டு போகுது, இதே இந்த ஹோட்டல் மட்டும் உன் பேருல இருந்திருந்தா, அந்த அம்மாவை நான் உண்டு இல்லன்னு ஆக்கியிருப்பேன்..” என்று சொல்லி கொண்டிருக்க, கேட்டிருந்த சுபா, நக்கலாக சிரிக்க, தீக்ஷிக்கு உள்ளுக்குள் கொதித்தது. 
அங்கு தர்ஷினியோ எப்போதும் போல அவரின் பேச்சை கண்டு கொள்ளாமல் நின்றிருந்தவள், அவர் இறுதியாக சுபா பேசியதை  சொல்லவும், அரசு, ராணியை  நினைத்து அதிர்ந்து போனாள். தன்னால் அவர்கள்  இதுபோல பேச்சை கேட்க நேரந்ததில் துன்பப்பட்ட தர்ஷினி, ராமலிங்கத்தின் பேச்சுக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் ராணி, அரசுவை நோக்கி சென்றாள். 
“தர்ஷினி.. ஏய் தர்ஷினி.. எங்க போற..?”  என்று  ராமலிங்கமும் மகள் பின்னால் செல்ல, “இவரை போல ஆளுங்ககிட்டேயிருந்து இதை தான் எதிர்பார்க்க முடியும்..” அவரையே எல்லையில்லா வெறுப்போடு பார்த்த சுபா சொல்லவும், தீக்ஷியும் கிட்டதட்ட அதே மனநிலையில் தான் அவரை பார்த்தாள். 
“இவர்தான் உங்க அப்பாவோட பெஸ்ட் ப்ரண்ட் இல்லை, நீங்க எல்லாம் கிட்டத்தட்ட ஒரே குடும்பமா தான் இருக்கீங்க இல்லை..?”  என்று யோசனையாக சொன்ன சுபா, 
“நம்மதுல ஒரு பொன்மொழி இருக்கு, ‘உன் நண்பனை பற்றி சொல்.. நான் உன்னை பற்றி சொல்கிறேன்ன்னு..’  அது உங்க விஷயத்துல உண்மையா தான் இருக்கும் போல.. அந்த ராமலிங்கம்..  உங்க அப்பா.. இப்போ நீ..” என்று சொல்லி சென்றுவிட, தீக்ஷிக்கு உறைந்த நிலை. 
யாரோடு யாரை இணை சேர்த்து பேசிவிட்டார்.. என்ற கோவம், ஆதங்கம், ஆத்திரத்தோடு காதல் கண்ணீரும் சேர, பக்கத்தில் இருந்த அலங்கார மேடையில் தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள்.  
சமீப காலமாக தான் துளிர ஆரம்பித்திருந்த அவளின் காதல், இனி பூ வைத்து கனியவே முடியாத நிலையில் உயிருள்ள செடியாகவே அவனவனிடமிருந்து பிடிங்கி போடும் அவலம்..!!!  
தன்னவனின் முதல் அணைப்பு, முதல் முத்தம்..  ரசித்து,  அனுபவித்து பரவசபட்டு கொண்டிருந்தவளின் காதல் துளி, ஆவியாகி போனது போல் உணர்ந்தாள். 
ஆனால் அவளுக்கு தெரியவில்லை, ஆவியாகி போன அவளின் காதல் துளி, வரும்  நாட்களில் எல்லாம் பெரும் காதல் மழையை பொழிந்து அவளை இன்னும் இன்னும் அடித்து செல்ல போகிறது  என்று..!! 
“தீக்ஷி.. தீக்ஷி..” என்றவாறே ராணி வரவும், வேகமாக கண்ணீரை துடைத்தவளின் அருகில் வந்த ராணி, “தருணுக்கு துணி எடுத்துட்டு வர சொல்லி அனுப்பினா இங்க வந்து உட்காந்திருக்க..?” என்று கேட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்து கமறியது. 
“தீக்ஷி.. நான் உன்கிட்ட தான் கேட்கிறேன், முதல்ல அம்மாவை நிமிர்ந்து பாரு.. என்று அதட்டி, அவளின் குனிந்த முகத்தை நிமிர்த்தியவர், “என்ன ஆச்சு தீக்ஷி..? அழுதியா..? ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு..?” என்று கவலையாக கேட்ட ராணி மகளின் அருகில் அமர்ந்து கொள்ள, அவரின் தோளில் சாய்ந்த தீக்ஷி, 
“நத்திங் மா.. எனோ கொஞ்சம் தலை வலியாயிருக்கு..”  என்று நம நம தொண்டையை செருமி சரி செய்து, சொன்னாள். “ஏன் திடீர்ன்னு தலைவலி..?” என்று அவளின் நெற்றியின் இருபுறமும் தொட்டு பார்க்க, மெலிதான சூட்டில், துடித்து கொண்டிருந்தது. 
“ம்மா.. வீட்டுக்கு போலாமா..?” என்று தீக்ஷி கேட்கவும், அவருமே அங்கிருந்து செல்ல நினைத்திருந்ததால் சரி என்றுவிட்டவர், “நீ இங்கேயே இரு, நான் உள்ளே போய் அப்பாவை கூட்டிட்டு வரேன்..” என்றவர் சென்று அரசுவை அழைத்து வந்தவர், 
“போலாம் தீக்ஷி.. மனோஜ், ராகுல் எல்லாம் பாரதியோட வர்றேன்னு சொல்லிட்டாங்க..”, என்று மகளை அழைத்து வீடு வந்து சேர்ந்தனர். 
“இந்த காபி.. சாப்பிடு”, என்று சோபாவில் அமர்ந்திருந்த மகளுக்கு கொடுத்தவர், நெற்றியில் தைலம் போட்டு தேய்த்து விட செய்தார். அவளுக்கும் அழுததில் தலை வலி வந்திருக்க, அமைதியாக கண் மூடி இருந்தவள், ராணியை அமரவைத்து அவரின்  மடியிலே தலை சாய்த்து படுத்து விட்டாள். 
“இப்போ எப்படி இருக்கா..?” என்று அரசு கேட்பது காதில் விழுந்தாலும் அமைதியாக கண் மூடி படுத்திருந்தவளுக்கு, சுபா பேசியதே உள்ளுக்குள் சுழன்றது. இவள் மடியிலே படுத்திருக்க, ராணியும் அரசுவும் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். 
“ம்மா..” என்றபடி மனோஜுடன், பார்ட்டிக்கு சென்றிருந்த எல்லோரும் வர, தீக்ஷிக்கு யாரிடமும் சகஜமாக பேச முடியாது  என்று  தோன்ற, ராணியின் மடியிலே கண் மூடி படுத்திருந்தாள். 
“அரசுப்பா.. ராணிம்மா.. என்னை மன்னிச்சிருங்க, என்னால தானே, அத்தை உங்களை அப்படி பேசிட்டாங்க..”  என்று  ராணியின் அருகில் அமர்ந்த தர்ஷினி, அவரின் கையை பிடித்து மன்னிப்பு கேட்டாள். 
“யார் சொன்னா..?” என்று பார்த்தவருக்கு ராமலிங்கத்தின் திருட்டு முழி பிடிபட அவரை முறைத்தவர், “அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீ அதை நினைச்சு வருத்தப்படாத”, 
“அப்பறம் இதை எல்லாம் மாப்பிள்ளைகிட்ட சொல்லிட்டு இருக்காத, ஏற்கனவே அவர் நிக்க கூட நேரமில்லாமல் ஓடிட்டு இருக்கார், இந்த டைம்ல அவரை இன்னும் கஷ்டபடுத்தாத..” என்று முடித்து விட்டவர், “போ.. தருண் பாரு தூக்கத்துக்கு சொக்குறான்..”, என்று அவர்களை அனுப்பி வைத்தவர், ஹோட்டல் பற்றி பிரமிப்பாக பேசி கொண்டிருந்த மகனையும் சென்று தூங்க சொன்னார்.  
“அத்தை..” என்று குரல் கொடுத்தபடி இந்திரஜித் வரவும், மூடியிருந்த இமையை இன்னும் அழுத்தி மூடி கொண்டாள் தீக்ஷி. “வாப்பா..” என்று அவனை வரவேற்று அமர செய்தவர்களிடம், 
“ஏன் நீங்க சாப்பிடாமலே டக்குனு கிளம்பி வந்துடீங்க..?” என்று தீக்ஷியை பார்க்கமால் பார்த்தபடி சற்று உரிமையோடே கேட்டவன், ஆட்கள் எடுத்து வந்திருந்த உணவை தானே சென்று டைனிங் டேபிளில் அடுக்கினான். 
“சாப்பிட வாங்க..” என்றவன், “தீக்ஷி ஏன் படுத்திருக்கா..?” என்று சாதாரணமாக கேட்பது போல் கேட்டான். 
“அவளுக்கு கொஞ்சம் தலைவலி, அதான் வந்துட்டோம்..” என்ற ராணி கணவனை பார்க்க, அவர் பெருமூச்சோடு எழுந்து கொண்டார். ராணியும் மகளின் தலையை எடுத்து குஷனில் வைத்தவர், கணவனோடு சாப்பிட சென்றார். 
சில நொடிகள் தம் கட்டி அவர்கள் அருகில் இருந்தவன்,  அவர்கள் சாப்பிட ஆரம்பித்துவிடவும், “நான் ஒரு போன் பேசிட்டு வந்துடுறேன்..” என்றவன், அவசரமாக தீக்ஷியின் அருகில் ஓடி வந்தவன், மண்டியிட்டு அவளின் நெற்றியை தடவி கொடுத்தான். 
“ஓய்.. கேடி, நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும், கண்ணை திற..” என்று செல்லமாக அதட்ட, தன்னை கண்டு கொண்டான் என்பதால் வேறு வழி  இல்லாமல் கண் திறந்தவளை வாஞ்சையாக பார்த்தவன்,  
“என்ன ஆச்சு..? ஏன் திடீர்னு தலைவலி..? இப்போ  பரவாயில்லையே..?” என்று அவளின் சோர்வான முகத்தை பார்த்து கவலையாக கேட்டவனின் விரல்கள், மென்மையாக அவளின் நெற்றியை வருடி கொண்டிருந்தது. 
“ம்ம்.. ஓகே..”  என்று தலையாட்டினாள். “சரி.. இரு வரேன்”, என்று வெளியே ஓடியவன், வரும் போது கைகளில் இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்த மேங்கோ பேஸ்ட்ரி கேக்.. அதை பார்க்கவும், கண்ணில் நீர் தேங்க தயாராக, கண் சிமிட்டி அதற்கு தடை போட்டவளின் முன் மீண்டும் மண்டியிட்டு அமர்ந்தவன், 
“உனக்கு பிடிக்கும்ன்னு இதையும் மெனுவுல வச்சிருந்தேன்..” என்றவன் அவளை  எழுப்பி  ஆசையாக ஸ்பூன் எடுத்து ஊட்டிவிட  சிறிதும் யோசிக்காமல் வாய் திறந்து வாங்கி கொண்டாள். சிறிது வேகமாகவே  ஊட்டிவிட்டவன், அவளின் வாய் ஓரத்தில் ஒட்டியிருந்த கேக் துண்டை தன் கர்சீப் எடுத்து துடைத்தவன், 
“தண்ணி குடிச்சுட்டு படுத்துக்கோ..” என்று, பக்கத்தில் இருந்த நீர் ஜார் தண்ணியை கொடுக்க, வாங்கி கொடுத்தவளின் மனம் மயங்கி..   தவிக்கும் நிலைதான்.
 அரசு, ராணி வரும் அரவம் கேட்கவும், குனிந்து அவளின் தோள் பற்றி படுக்க வைத்தவன், நெற்றியில் இதழ் பதித்தே நிமிர்ந்தான். 
“சரி மாமா.. நான் கிளம்புறேன், இன்னும் பார்ட்டி இருக்கே..” என்று தண்ணி பார்ட்டியை மெலிதான சிரிப்புடன் சொன்னவனின் கண்கள் காதலாக காதலியை  வருடிவிட்டே சென்றது. 
“தன்னை பார்க்க தான் பார்ட்டிக்கு இடையில் ஓடி வந்திருக்கிறான்..” என தீக்ஷிக்கு புரிய,  செல்லும் அவனையே பார்த்திருந்தவளின் கண்களில்  முன்பை விட மிக   மிக   அதிகமான காதல்..!!!!

Advertisement