Advertisement

குடை 4:
இரவின் நிசப்தமும், வண்டுகளின் ஒலியும், காற்றின் ஒலியும் காதுகளை வருட, இரவு பதினோரு மணிக்கு மேல், ரயில் சோலாபூர் ஜங்க்ஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.
விகாஸ் மேல் பெர்த்தில் படுத்திருக்க, இதற்கு முந்தைய ஸ்டேசனில் ஏறிய இரண்டு பெண்கள் நடு பெர்த்தில் எதிரெதிரில் படுத்திருந்தனர். அஸ்வினி கீழ் பெர்த்தில் இருக்க, அவளுக்கு எதிரில் மித்ரன், நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.தூக்கத்தையே பார்க்காதவன் போல் அவன் உறங்கிக் கொண்டிருக்க, தூக்கத்தையே வெறுத்தவள் போல் இருந்தாள் அஸ்வினி.
படுத்திருந்த அவள் கண்கள் அவளையும் அறியாமல் கலங்க, கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தோடியது.ஏதேதோ கனமான நியாபகங்கள் அணிவகுக்க, இந்த ஒரு வருடத்தில் அவள் மறக்க நினைத்த நினைவுகள், இரவில் அவளைத் தூங்க விடாமல் செய்யும் நினைவுகள், இன்றும் வந்து அவளை நிம்மதியின்றி செய்தது.
அடித்த குளிர் காற்றில், மித்ரனுக்கு லேசாக உறக்கம் கலைய.., மறுபுறம் திரும்பிப் படுத்தான். அப்போது அஸ்வினி உறங்காமல் வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவனுக்கு பக்கென்று இருந்தது.
“என்னாச்சு..? எதுக்கு இப்படி படுத்திருக்கா..? நல்லா கலகலன்னு பேசிட்டு தான வந்தா…? இப்போ தனியா அழுதுட்டு இருக்கு இந்த பொண்ணு..! என்று மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் தோன்ற, தன் செல்போனை உயிர்ப்பித்தான்.
அதில் கிட்டத்தட்ட நூறு மிஸ்ட் கால் வரை வந்திருக்க, அதை வெறித்தவன் மீண்டும் செல்லை அணைத்து வைத்து விட்டான்.அவன் செல்போனின் ஒளியில், பட்டென்று மற்றொரு புறம் திரும்பிக் கொண்டாள் அஸ்வினி. தன்னுடைய நிஜம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று எண்ணினாளோ.. என்னவோ..?
அவள் அப்படி திரும்பியது மித்ரனுக்கு ஒரு மாதிரி இருந்தது.இத்தனை நாட்கள் கழித்து அவனுக்கு வந்த தூக்கம் நொடியில் காணாமல் போக, எழுந்தவன், அவர்களுக்கு எதிரில், மற்றொரு புறம் இருந்த அந்த ஒற்றை இருக்கை காலியாய் இருக்க, அங்கு சென்று அமர்ந்தான் மித்ரன்.
ரயிலின் ஒலியும்,இரவின் தனிமையும் சேர்ந்து கொள்ள, அவனின் யோசனைகள் பின்னோக்கி சென்றது.
யோசனையில்….
“என்ன பாட்டி சொல்றிங்க..? என்று அதிர்ந்தான் ஜீவ மித்ரன்.
ஆனால் அவனின் பாட்டி ராணியம்மாள் கொஞ்சம் கூட அசரவில்லை. அவ்வளவு வயசாகியும் அவரிடம் இருந்த மிடுக்கு கொஞ்சமும் குறையவில்லை. பார்க்கும் பார்வையின் தெனாவெட்டு, அதே பார்வைதான் மித்ரனுக்கும் வந்து விட்டதோ என்னவோ..? என்று நினைக்கும் அளவிற்கு ஒன்றாய் இருக்கும்.
அவனின் பாட்டியைக் கண்டால் இன்னமும் அவனின் தந்தை நேசனே பயப்படுவார்.அந்த அளவிற்கு ஒரு ஆளுமை அவரிடம் இருக்கும். எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். அந்த காலத்திலேயே அமெரிக்கா சென்று படித்தவர்.மித்ரனின் தாத்தா இருந்த வரைக்கும், அவரே தன் மனைவி கிழித்தக் கோட்டைத் தாண்டியதில்லை.
பல நல்ல குணங்கள் இருந்தாலும், ஒரு சில சுயநல குணங்களும் இருந்தது அவரிடம். எல்லா மனிதர்களிடத்தும் எல்லா நல்ல பண்புகளையும் பார்க்க முடியாது என்பது அவரின் விஷயத்தில் உண்மை.
நிறை, குறை இரண்டும் கலந்த கலவை அவர். குறையை விட நிறைகளே அதிகம் என்பதால், நேசனுக்கும் அவரின் மகன் ஜீவ மித்ரனுக்கும் அவரை எதிர்க்கும் சந்தர்ப்பம் வரவேயில்லை.இப்போது வந்திருக்கிறது.
“என்ன ஜீவா..? என்னையவே எதிர்த்து கேள்வி கேட்குற அளவுக்கு வந்துட்டியா..? நான் எது செஞ்சாலும் அதுல உன்னோட நன்மை அடங்கியிருக்கும்ன்னு சொல்லுவ..? இப்ப அந்த வார்த்தை எல்லாம் எங்க போனது..? என்றார்.
“அப்படி சொன்னது உண்மைதான் ராணிப் பாட்டி.இப்பவும் அந்த கருத்தில் மாற்றமில்லை. ஆனால் கல்யாணம் என்னோட தனிப்பட்ட விருப்பம். எனக்கான மனைவியையும் நான் தான் செலக்ட் பண்ணுவேன்.! இந்த ஒரு விஷயத்தில் நீங்க சொல்றதை என்னால் ஏத்துக்க முடியாது..? என்றான் தீர்மானமாய்.
“லவ் பண்ணி கல்யாணம் பண்ற விடலைப் பையன் பருவத்தில் இல்லை நீ. உனக்கு கீழ எவ்வளவு பொறுப்புகள் இருக்குன்னு தெரியும் தான..? நீ இப்போ எல்லாருக்கும் தலைவன் பொறுப்பில் இருக்குற..? அப்படி கல்யாணம் பண்றது கவுரவமா இருக்காது..! என்றார்.
“நான் லவ் பண்ணி, அந்த பொண்ணு பின்னாடி ரோடு ரோடா சுத்தி கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லலை.ஆனா எனக்கு வரப்போற மனைவி இப்படித்தான் இருக்கனும்ன்னு எனக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கு. அதை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.இது தான் என்னோட முடிவு..! என்றான் உறுதியாக.
“என்ன நேசா..? இவன் இப்படி பேசுறான்..? நீயும் கேட்டுகிட்டு நிக்குற..? என்று தன் மகனின் பக்கம் திரும்பினார் ராணியம்மாள்.
“இந்த விஷயத்துல நான் என்ன சொல்ல முடியும். எனக்கு தான் கல்யாண வாழ்க்கை நல்லா அமையலை. அவனுக்காவது அவன் விருப்பப்படி நல்லா அமையட்டும். அவனுக்கு எது விருப்பமோ அப்படியே பண்ணிக்கட்டும்.. என்றார் நேசன்.
ஆனால் அவரின் பதிலில் ராணியம்மாவுக்கு சுத்தமாக உடன்பாடு கிடையாது.
“என்ன நேசா சொல்ற..? அவனோட உயரம் என்ன? உன்னோட உயரமே என்ன..? நம்ம குடும்ப கவுரவம் என்ன..? இதெல்லாம் உனக்கு நல்லா தெரியும் தானே.இவன் பேசாம ஏதாவது ஒண்ணுமில்லாத வீட்டு பொண்ணை கட்டுவேன்னு சொன்னா என்ன பண்றது..? என்றார்.
“பாட்டி..! என்னோட வாழ்க்கை முழுசுக்கும் வரபோற மனைவி, காசு பணம் இருக்குறவளா இல்லாம இருந்தாலும், பொறுமையும், அன்பும் இருந்தா போதும்ன்னு நான் நினைக்கிறேன். என்றான்.
“அதை மட்டும் வச்சு என்ன பண்றது..? என்றார்.
“வாழ்க்கையோட முழுமையே அதுல தான் இருக்குதுன்னு நம்புறவன் நான்.அதுமட்டுமில்லாம நான் ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்புறேன்..! என்றான்.
“என்ன சொல்ற ஜீவா..? இதை ஒரு நாளும் என்னால அனுமதிக்க முடியாது. எவளோ ஒருத்தியைக் கொண்டு வந்து இந்த மொத்த சொத்துக்கும் ராணியா என்னால உக்கார வைக்க முடியாது.
உங்கப்பா என் பேச்சை கேட்டதால தான்…இன்னைக்கு ராஜா மாதிரி இருக்கான். இல்லைன்னா இவ்வளவு பெரிய தொழிலை நடத்தியிருக்க முடியுமா…? என்றார்.
“உண்மைதான்.. எங்கப்பா ஊருக்குதான் ராஜா. ஆனா சொந்த வாழ்க்கையில் அவர் ஜீரோ. அதுவும் உங்களால்தான். இந்த தொழில் உலகத்துல இப்படி அவர் சக்சஸா வரக் காரணமும் நீங்கதான். அவரோட முன்னேற்றத்துக்கும் நீங்க தான் காரணம்.அதே சமயம் அவரோட சொந்த வாழ்க்கை இப்படி ஆனதுக்கும் நீங்க தான் பொறுப்பு..! என்றான்.
“மித்ரா என்ன பழக்கம் இது..? பாட்டியை எதிர்த்து பேசிட்டு..? என்னை யாரும் கட்டாயப்படுத்தலை. எல்லாமே எனக்குத் தெரிஞ்சு தான் நடந்தது. என்னைய வச்சு உன்னோட வாழ்க்கையை எப்பவும் நீ தீர்மானிக்கத் தேவையில்லை… என்றார்.
“என்ன பேசுறிங்க டாட். நீங்க மட்டும் தனியாள் கிடையாது. உங்களுக்கு பையன்னு சொல்லி நானும் இருக்கேன். உங்களோ வாழ்க்கை என்னோட வாழ்க்கையை எப்படி தீர்மானிக்காது என்று நீங்க தீர்மானமா சொல்ல முடியும்..எல்லாத்தையும் கொடுத்த உங்களால சில விஷயங்களை எப்பவும் குடுக்கவே முடியாது.. என்றான் வேதனையான குரலில்.
“மித்ரா..நான் உன்னைக் கேட்காம, உன் சம்மதம் இல்லாம எதையும் செய்யலை.. என்றார் நேசன்.
“எப்ப கேட்டாலும் இதை ஒன்னை சொல்லிடுவிங்க டாட்..! என்றவன், அதற்கு மேல் அங்கு நின்று பேச விருப்பம் இல்லாதவனாய் சென்று விட்டான்.
“என்ன நேசா இதெல்லாம்..? என்றார் ராணியம்மாள்.
“அவன் லவ் பண்ற விஷயம் எனக்குத் தெரியாதும்மா…! தெரிஞ்சிருந்தா நான் உங்ககிட்ட சொல்லியிருக்க மாட்டேனா..? என்றார்.
“நான் சொல்ற பொண்ணைத்தான் அவன் கல்யாணம் பண்ணனும்.மீறி ஏதாவது பண்ணினான்…அதுக்கப்பறம் என் முகத்துலையே முழிக்கக் கூடாது..! என்று கறாராய் சொன்னார் ராணியம்மாள்.
ராணியம்மாள் பிறந்த வீடு செல்வாக்கியமான வீடு. அவருடன் பிறந்தது ஒரு அண்ணன் மட்டுமே. அவரும் ராணியின் மீது அதிக பாசம் கொண்டவர். செல்வம், நல்ல குடும்பம், நல்ல படிப்பு என்று அமைந்ததால் இயற்கையிலேயே அவருக்கு கொஞ்சம் திமிர் இருக்கத்தான் செய்தது. அதை அறிவுத் திமிர் என்று கூட சொல்லலாம்.
மித்ரனுக்கு, அவர் பார்த்திருக்கும் பெண் கூட அப்படித்தான். படிப்பிலும், அழகிலும், செல்வத்திலும் எதிலும் குறைந்தவள் அல்ல. அவளை எப்படியாவது மித்ரனுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்பது அவரின் ஆசை.
ஆனால் இன்று மித்ரன், வேறு ஒரு பெண்ணை விரும்புவதாய் சொல்லவும், அவருக்கு அதை ஜீரணிக்க முடியவில்லை. என்ன செய்வது என்ற யோசனையிலேயே மூழ்கிக் கிடந்தார்.
ஜீவ மித்ரன்- ஜேஎம் குழுமத்தின் வாரிசு. நேசனுக்குப் பிறகு அனைத்தும் அவன் பொறுப்பில். அவனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலார்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அனைத்தையும் அவன் விரும்பினானா என்று கேட்டால் பதில் என்னவோ பூஜ்யம் தான். அவனுக்கு பணத்திலேயே புரளும் அந்த வாழ்க்கை சுத்தமாகப் பிடிக்கவில்லை. தனிமையையும், அமைதியையும் அதிகம் விரும்பினான்.
ஆனால் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிக்க வேண்டுமே..! அதனால் ஒரு சிறந்த தொழில் அதிபனாக வலம் வந்தான். அவனுடைய வெற்றி என்று சொல்வதைக் காட்டிலும் நேசனுடைய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். ஒரே தலைமுறையில் அதிபதியாய் மாற சினிமாவில் மட்டுமே முடியும்.
ஆனால் இங்கு அப்படியில்லை. பரம்பரை சொத்து என்று ஒன்று இருந்தாலும், அதைப் பத்தாக பெருக்கும் வித்தையைக் கற்றிருந்தார் நேசன். தொழிலுக்காக தன் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு உழைத்ததன் காரணமாக,  இந்த உயரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.
ஆனால் மித்ரன் அவருக்கு நேர்மாறாக இருந்தான். அவரிடம் இருக்கும் எல்லா குணங்களும் அவனுக்கும் உண்டு. ஒன்றை பத்தாக மாற்றுவதில் தந்தையைக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் விரும்பியது நிம்மதி. பணம் மட்டும் வாழ்க்கையில்லை என்று, அவன் படித்த பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்தும், அனைத்தையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.
தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு கடுப்பாக வர, சுவற்றில் ஓங்கிக் குத்திய குத்தலில், அவன் கைகள் தான் வலித்திருக்க வேண்டும். மாறாக அவனுடைய இதயம் வலித்தது.
இத்தனை நாட்கள், அவனின் உந்து சக்தியே அவனுடைய காதல் தான்.அதையும் இன்று யாரோ தன்னை விட்டு நிரந்தரமாக பிரிக்க முயல்வதைப் போல் தோன்றிக் கொண்டே இருக்க, அதுவே அவனுக்கு நிம்மதியில்லாமல் செய்தது.
ராணியம்மாளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்றும் அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
தனது செல்லை எடுத்தவன், ஜெனிக்கு அழைத்தான்.
“என்னடா இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க..? என்றாள்.
“ஏன் இந்த நேரத்துல நான் உனக்கு போன் பண்ணதே இல்லையா..? என்றான் வெடுக்கென்று.
“இல்லடா..? ஈவ்னிங் தான பார்த்தோம்.அப்ப கூட ஒன்னும் சொல்லலை. இப்ப கூப்பிடுறியா? அதான் கேட்டேன்..! என்றாள் ஜெனிபர்.
“எங்க இருக்க..? என்றாள்.
“மித்து, உனக்கு என்ன ஆச்சு..? இந்த நேரத்துல எங்க இருப்பாங்க..? வீட்ல தான்..! என்றாள்.
“உன்னை உடனே பார்க்கணும்..! என்றான்.
“என்ன விளையாடுறியா? நான் இப்போ தான் வீட்டுக்கே வந்தேன்..! மறுபடியும் வெளிய கிளம்பவா…? ரொம்ப டயர்டா இருக்கு மித்து..! என்றாள்.
ஒரு நிமிடம் யோசித்தவன்.. ஹோ..! சாரி ஜெனி. நீ ரெஸ்ட் எடு.. என்றபடி வைத்து விட்டான்.
“என்னடா பண்ற? முட்டாள். இந்த நேரத்துல கூப்பிட்டா, அவ என்ன நினைக்க மாட்டா..? உன்னோட பிரச்சனைக்கான சொல்யூஷனை நீதான் தேடனும்..! என்று மனசாட்சி இலவசமாக அறிவுரை வழங்க…
“ம்ம்..! தேடுறேன், தேடுறேன்…என் பிரச்சனை என்னோட. நானே அதுக்கான பதிலைத் தேடுறேன்..! என்றபடி கண்மூடி உறங்க முற்பட்டான். ஆனால் முடியவில்லை. மனதின் கணம் தாங்க முடியாமல் கண்ணைத் திறந்தது போல், இப்போது ரயிலிலும் கண்ணைத் திறந்தான் மித்ரன்.
“ஷிட்..! இதென்ன நான் கண்ட்ரோல் இழக்குறேன்..? என்றபடி தலையை சரித்துக் கொண்டவன், நேரத்தைப் பார்க்க…அது இரண்டு மணியைக் காட்டியது.
ரயில் ஷாஹாபாட் தாண்டி, வாடி ஸ்டேசனை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது தான் திரும்பி அஸ்வினியைப் பார்த்தான். ஒருவழியாக உறங்கி விட்டிருந்தாள்.
உறக்கத்தில் கூட எதையோ யோசித்துக் கொண்டிருப்பாள் போலும். அவளின் முகம் எதோ சோர்வினைக் காட்ட, அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
அவளைப் பார்க்க, பார்க்க மனதிற்குள் நிலவும் அமைதியை அவன் உணர ஆரம்பித்தான். அந்த நொடி எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.
“என்ன பண்ற மித்ரா..? ஏற்கனவே பட்ட அடியெல்லாம் பத்தாதா..? இதென்ன மறுபடியுமா..? என்று உள்ளே ஒரு எச்சரிக்கைக் குரல் கேட்க..அவனால் அவளை விட்டு முகத்தைத் திருப்ப முடியவில்லை.
அவளை எங்கோ பார்த்த மாதிரி இருந்த எண்ணம்…, மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த முகம் அவனுக்கு மிகப் பரிட்சியமனாதைப் போலவே இருந்தது. அதானால் தானோ என்னவோ அவன் நிம்மதியாக உணர்ந்தான்.
தூக்கம் வராமல் எழுந்து சென்றவன்…படியின் அருகில் சென்று நின்றான். நேரம் போவதே தெரியாமல்  அங்கேயே நிற்க, தூக்கத்திலும், குழப்பத்திலும் அவன் கை லேசாக நழுவி அவன் தடுமாற, அந்த கைகளை பட்டென்று பிடித்து இழுத்தாள் அஸ்வினி.
“என்ன சார்..? இங்க என்ன பண்றிங்க..? பார்த்து நிக்க மாட்டிங்களா..? கொஞ்சம் பேலன்ஸ் தவறி இருந்தாலும் என்ன பண்றது..? என்றாள் படபடவென.
“தேங்க்ஸ் மிஸ் அஸ்வினி. அப்படி எல்லாம் தவறி விழுந்திட மாட்டேன்..! எனக்கு முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு..! என்றான்.
“ஏன் சார்..? நீங்க எப்பவும் புரியற மாதிரி பேசவே மாட்டிங்களா..? என்றாள்.
லேசாக சிரித்தவன்..இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற..? என்றான்.
“சார்..! நான் பாத்ரூம் போக வந்தேன்..! இங்க பார்த்தா நீங்க நிக்குறிங்க..? என்றாள்.
“இந்த நேரத்துல இப்படி தனியா வரது தப்பு..! என்றான் அவன். அவனையும் மீறி அந்த வார்த்தை வந்து விட்டிருந்தது.
அவனை மேலும், கீழுமாக பார்த்தவள்.. நீங்க எந்த காலத்துல இருக்கீங்க..? நான் மும்பைல இருந்தே தனியா தான் வரேன்.இந்த பாத்ரூம் தனியா போக மாட்டேனா..? என்று அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தவள், தன்னுடைய இடத்திற்கு செல்ல முற்பட…
“கொஞ்ச நேரம் இங்கயே நில்லுங்க மிஸ்.அஸ்வினி. நல்ல லொக்கேஷன்..! என்றான்.
“இந்த இருட்டுல உங்களுக்கு என்ன லொக்கேஷன் தெரியுதுன்னு எனக்குத் தெரியலை.ஆனா எனக்கு இருட்டுன்னா பயம்.இந்த நேரத்துல உங்க கூட இப்படி தனியா எந்த தைரியத்துல நிக்குறது, நான் வரேன் சார்..! என்றபடி அவள் இடத்திற்கு சென்று விட்டாள்.
“என்னைப்பார்த்தா எப்படி இருக்கு உனக்கு, அயோக்கியன் மாதிரியா..? என்றான் கோபத்துடன்.
“என்ன சார்? எதுக்கு இப்போ நீங்க சண்டைக்கு வரீங்க. நீங்க எப்படி வேணுமின்னாலும் இருக்கலாம்.ஆனா நான் நம்பனும்ன்னு என்ன அவசியம் வந்தது. என்றபடி அவள் செல்ல எத்தனிக்க…
“அஸ்வினி பிளீஸ்..! கொஞ்ச நேரம் நில்லு, என்னன்னு தெரியலை உன்னைப் பார்த்தா மனசு கொஞ்சம் அமைதியா இருக்கு..! என்றான் ஆழ்மனதில் இருந்து.
அந்த குரல் அவளை ஏதோ செய்ய, அப்படியே நின்றாள்.அவனும், அவளும் எதிரெதிரே..!
“உங்களுக்கு என்ன சார் பிரச்சனை..? சொல்லனும்ன்னு நினைச்சா சொல்லுங்க..? என்றாள்.
“கேட்டு நீ என்ன செய்ய போற..? என்றான்.
“என்னால ஒன்னும் செய்ய முடியாது தான் சார். இருந்தாலும் உங்க மனபாரம் கொஞ்சம் குறையுமே..? என்றாள்.
“மனசில் இருக்குறதை சொன்னால், மன பாரம் குறையுமா? என்றான்.
“கண்டிப்பா சார்..! என்றாள்.
“இது உனக்கும் பொருந்தும் இல்லையா..? எதுக்காக அழுதுகிட்டு இருந்த..? என்றான்.
“சும்மா உளறாதிங்க சார்..? நான் எதுக்கு அழ போறேன்..? என்றான்.
“அப்போ நான் பார்த்தது பொய்யா..? என்னை நம்பி சொல்லனும்ன்னா சொல்லலாம்…! என்றான்.
“இல்ல சார்…அம்மாவைப் பார்க்க போற ஆனந்தம்.வேற எதுவும் இல்லை..! என்றபடி தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டாள்.
அவன் அவளையே ஆழ்ந்து பார்க்க…
“உங்களுக்கு என்ன சார் பிரச்சனை..? என்றாள் விடாமல்.
ஒரு பெருமூச்சை விட்டவன்..வேறென்ன..? எல்லாம் காதல் பிரச்சனை தான்..! என்றான்.
“என்ன சார் லவ் பெயிலியரா..? என்றாள்.
“லவ் மட்டுமா பெயிலியர்..வாழ்க்கையே பெயிலியர்…! என்றான்.
“உங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே சார்..! என்றாள்.
“அதுக்காக, முகத்துல எழுதி ஒட்டிகிட்டா திரிய முடியும்..? என்றான்.
“என்ன சார் காமெடியா..? என்று அவள் கேட்க,
சன்னமாய் சிரித்தவன், வெளியே வேடிக்கைப் பார்க்க, அந்த சிரிப்பு கூட நன்றாக  இருந்தது.

Advertisement