Advertisement

குடை 9:
“நாம இப்ப எங்க போறோம்..? என்றாள் அஸ்வினி.
“எங்க போகலாம்..? என்று யோசித்த சங்கி..
“பர்ஸ்ட் மால் போகலாம், அப்பறம் அப்படியே ஏதாவது லோக்கல் ஷாப்பிங் போகலாம், அப்பறம் லாஸ்ட்டா பீச் போறோம்..! ஓகேவா..? என்றாள் சங்கி.
“ம்ம் ஓகே தான்..! இருந்தாலும் எனக்கு பிடிக்கலை.. என்றாள் அஸ்வினி.
“அடிப்பாவி சென்னைல அப்படி ஊர் சுத்துன..? இங்க பிடிக்கலைன்னு சொல்ற..?
“அது நம்ம சென்னை..! என்றாள் கெத்தாக.
“வாய்ல ஏதாவது நல்லா வந்திடும். பேசாம வா..! என்று சங்கி சொல்ல, இருவரும் கேப் புக் செய்து கிளம்பினர்.
முதலில் கொலாபா காஸ்வே  என்ற பகுதிக்கு சென்றனர். ஸ்ட்ரீட் ஷாப்பிங் என்ற முறையே இங்கு தான் தொடங்கியது என்று சொல்வர். பெண்களுக்குத் தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும் என்பதால், இருவரும் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு, அந்த இடத்தில் இருந்த கடைகளை எல்லாம் ஆசை தீர சுற்றிப் பார்த்து விட்டு, அங்கிருந்து பீனிக்ஸ் பகுதியில் உள்ள பல்லேடியம் மாலுக்கு செல்ல, பேருந்தில் ஏறினர்.
“பேசாம கேப் புக் பண்ணியே போயிருக்கலாம்..! என்றாள் சங்கி.
“இங்க இருந்து நாற்பது நிமிஷம் தாண்டி..! பஸ்லயும் தான் போய் பார்ப்போமே..! என்ற அஸ்வினி ஜன்னல் அருகில் அமர்ந்து அந்த சூழ்நிலையை ரசிக்கத் தொடங்கினாள்.
மும்பையின் டிராபிக் அவளை ஸ்தம்பிக்க வைத்தது.சென்னையின் நெரிசல் பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு.
“என்னடி ட்ராபிக் கிளியர் ஆகவே அரைமணி நேரம் ஆகும் போல..? என்றாள் சங்கி.
“ஆமா சங்கி..! என்ன பண்றது…?போவோம் மெதுவா… என்ற அஸ்வினி பேருந்தினுள் பார்க்க, கூட்டம் அவ்வளவாக இல்லை.
வெளியே கார்கள், ஏதோ அணிவகுப்பில் நிற்பது போல இருக்க, பேருந்தில் இருந்து பார்த்த அஸ்வினிக்கு ஒரு காரின் டிரைவர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் ஒய்யாரமாய் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிய, சற்று எம்பி உற்றுப் பார்த்தாள்.
“அவன் தான்..! அந்த ராங் நம்பர்..! என்று அவள் மனம் அடித்து சொல்ல, மேலும் அவனை கூர்ந்து பார்த்தாள்.
“யாரை இப்படி எக்கிகிட்டு வேடிக்கை பார்க்குற..? என்றாள் சங்கி.
“அங்க பாரு சங்கி அந்த ராங் நம்பர்..! என்று அஸ்வினி சொல்ல,
“எந்த ராங் நம்பர்..? என்று யோசித்த சங்கி,
“ஏய்..! நீ இன்னுமா அவனை நியாபகம் வச்சிருக்க..? அடிப்பாவி..! என்று சொல்லிக் கொண்டே அவளும் எட்டிப்பார்க்க,
“ஹேய்..! ஆமாடி..! நேர்ல இன்னும் செம்மையா இருக்கான். சைட் போஸ்க்கே செம்மையா இருக்கான். இந்த பக்கம் கொஞ்சம் திரும்பினா என்ன..? என்று சங்கி ஆதங்கப்பட,
அவளை மறைத்து அமர்ந்தாள் அஸ்வினி. ஏனோ அவள் அவனைப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை.
“இப்ப எதுக்குடி மறைச்சு உட்கார்ந்திருக்க..? என்றாள் சங்கி.
“வேண்டாம் விடுடி..! அவன் எல்லாம் ஒரு ஆளு..! என்று அஸ்வினி அசால்ட்டாய் சொல்ல, அவளை நம்பாமல் பார்த்தாள் சங்கி.
“நம்பிட்டேண்டி..! நம்பிட்டேன்..! நீ நடத்து ராஜாத்தி..! என்று தன் இருக்கையில் சாய்ந்தாள்.
அஸ்வினி அவனை பார்க்காததைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். பஸ் கொஞ்சம் முன்னால் நகர, அவன் காரும் முன்னால் நகர்ந்தது.ஏனோ அவளுடனேயே அவன் வருவதைப் போன்ற பிரம்மை அவளுக்கு. அவளையும் அறியாமல், அவன் மீது ஏதோ ஒன்று அவளுக்கு இருந்தது.
“என்ன பண்ற அஸ்வினி..? நீ பண்றது எனக்கு சரியா படலை..! என்றாள் சங்கி.
அவள் சொல்ல வருவது தெரியாத முட்டாள் இல்லை அஸ்வினி. எப்போதும் அவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதம் தான்.
“நான் தப்பா எதுவுமே பண்ணலையே..? என்றாள்.
“முதல்ல உன்னோட மொபைல்ல இருந்து அவன் போட்டோவை டிலீட் பண்ணு..! அது தான் உனக்கும் நல்லது. உன் எதிர்காலத்துக்கும் நல்லது.. என்றாள்.
“நானும் முயற்சி பண்ணிட்டேன் சங்கி..! பட் என்னால முடியலை..! என்றாள் உடைந்த குரலில்.
“எப்படிடி…யாருன்னே தெரியாது..? எப்படிப்பட்டவன்னு தெரியாது..? கல்யாணம் ஆனவனா இல்லை ஆகாதவனா..? இப்படி எதுவுமே தெரியாமா..? என்று சங்கி நிறுத்த,
“நீ சொல்றதும் உண்மைதான் சங்கி..! ஆனா என் மனசுக்குள்ள இருந்த கற்பனை அப்படியே நிஜத்துல வந்த மாதிரி இருக்கான். ஒருவேளை அது தான் என்னைய ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதா என்னன்னு தெரியலை. ஆனா நான் என்னைய மாத்திக்க ரொம்ப ட்ரை பண்றேன் முடியலை..! என்றாள்.
“என்னடி இப்படி சொல்ற..? என்றாள் அதிர்ச்சியாய்.
“ஆமா..சங்கி! இது நிஜம். எனக்குள்ள இருந்த கற்பனை உருவம் தான் இவன். அதை நேர்ல பார்த்த உடனே என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை. நான் அவனை எந்த விதத்துலயும் தொந்தரவு பண்ண மாட்டேன்..! ஆனா எனக்கு இது தான் பிடிச்சிருக்கு..! என்றாள்.
அவளை பயத்துடன் பார்த்தாள் சங்கி. அஸ்வினியை பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். அவள் ஒன்றை நினைத்து விட்டாள் மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
“நீ கற்பனையை விரும்புற..! என்றாள் சங்கி.
“ஆமா..! ஆனா கற்பனை இல்ல..கற்பனையில் இருந்த நிழல் நிஜமா வந்திருக்கு..! என்றாள்.
“அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தா..? என்றாள் சங்கி.
“எனக்கு கற்பனை மட்டுமே போதும்..! என்றாள்.
“என்ன பேசுற அஸ்வினி..! உன்னைப் பத்தி நான் சொல்லி தான் உனக்குத் தெரியனும்ங்கிறது இல்லை. உனக்கு இருக்குற திறமைக்கு நீ இன்னும் எவ்வளவோ தூரம் போக வேண்டி இருக்கு..! இந்த ஒரு விஷயத்தில் நீ சறுக்கலாமா..? என்றாள்.
“எப்படிப் பட்டவங்களுக்கும் வீக்னஸ் அப்படின்ற ஒன்னு இருக்கும்..! என்னோட வீக்னஸ் இது தான்..! என்ற அஸ்வினி கண்ணை மூடிக் கொள்ள, அவளைப் பாவமாய் பார்த்தாள் சங்கி.
ஆனால் சங்கீதாவிற்கு அப்போது தெரியாது, இவன் அவளின் கற்பனை அல்ல. ஆதியும், அந்தமும் அவன் தான். அது தான் அவளை கற்பனை வடிவில் ஆட்டுகிறது என்று.
பல்லேடியம் மாலில் இறங்கியவர்கள் அங்கு பொழுதைக் கடத்திவிட்டு, அங்கிருந்து பீச்சிற்கு செல்ல கிளம்பினர்.
“இந்த மால்ல இன்னும் கொஞ்ச நேரத்துல காமெடி ஷோ ஸ்டார்ட் ஆக போகுதாம்..பார்த்துட்டு போகலாமா..? என்றாள் சங்கி.
“வேண்டாமடி..! பீச்க்கு போயிட்டு, பிளாட்க்கு போகலாம். கிளைமேட் வேற சரி இல்லை..! என்று அஸ்வினி சொல்ல, இருவரும் அங்கிருந்து ஜூஹூ பீச் சென்றனர்.
மாலில் இருந்து பீச்சுக்கு செல்ல அவர்களுக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. ஆனால் அந்த பயணம் அவர்கள் ரசிக்கும் படியாகவே இருந்தது.
“மும்பையும் ஒரு விதத்துல அழகுதான் சங்கி..! என்றாள் அஸ்வினி.
“என்னடா இது..? நீ சென்னையோட புரமோட்டர் ஆச்சே..! எப்படி மும்பைய புகழ்ந்து சொல்ற..? என்று கேட்க,
“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். மும்பை மக்களை கேட்டால், மும்பை தான் பெஸ்ட்ன்னு சொல்லுவாங்க..! என்றாள்.
“அது உண்மைதான். எல்லாருக்கும் அவங்க அவங்க ஊர் சொர்க்கம் தான் என்றாள் சங்கி.
அஸ்வினிக்கு அந்த பீச் மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் அங்கு சென்ற கொஞ்ச நேரத்திலேயே மழை தூரல் போட, அந்த நிமிடத்தையும், அந்த சூழ்நிலையையும் வெகுவாக ரசித்தாள் அஸ்வினி.
“பானி பூரி சாப்பிடலாமா..? என்றாள் சங்கி.
அஸ்வினி தலையை ஆட்ட, இருவரும் பானிபூரியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நேரம் மாலை ஆறு மணியைக் காட்ட,
“இப்ப கிளம்பினா சரியா இருக்கும் வினி..! கிளம்பலாமா..? என்றாள்.
“ம்ம்..! கிளம்பலாம்..கொஞ்ச நேரம்..! என்று அலையில் காலை நனைத்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.
“டேய் இன்னும் எவ்வளவு நேரம் தான் வாங்குவ..? சீக்கிரம்..! என்ற குரலில் திரும்பிப் பார்க்க, அங்கே ஜெனி நின்று கொண்டிருந்தாள்.போனில் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் ஒரு உருவம் வருவது தெரிய, முதலில் அசட்டையாக கவனிக்கவில்லை அஸ்வினி. அந்த உருவம் அருகில் வரவர, அவளின் கண்களில் நன்றாகவே விழுந்தான் மித்ரன்.
“என்னையவே பானிபூரி வாங்க வச்சுட்ட..? என்று அவன் செல்லமாய் கோபத்துக் கொண்டு வர, கடல் காற்றில் உடலோடு பின் பறந்த அவன் சட்டையும், காற்றில் அலைபாய்ந்த அவன் முன் நெற்றி முடிகளும்… இப்படி அவனையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வினி.
“வினி…அஸ்வினி..! என்று சங்கி அவள் காதுக்கு அருகில் கத்த…
“எதுக்குடி கத்துற..? என்றாள்.
“டைம் ஆச்சு..! வா கிளம்பலாம்..! என்றாள்.
“இருடி கொஞ்ச நேரம்..! என்றவள்…
“அங்க பாரு..! என்றாள்.
அங்க என்ன இருக்கு..? என்று திரும்பிய சங்கி,  அங்கு அந்த ராங் நபரைப் பார்த்து முழித்தாள்.
“இவ மறந்தாலும், இவன் விட மாட்டான் போல இருக்கே..! எங்க போனாலும் இருக்கானே..! என்று மனதில் நினைத்தவள், அவர்களைப் பார்க்க….
“நீ பானிபூரி வாங்க கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன..? என்ற ஜெனி அவன் முடியைப் பிடித்து ஆட்ட,
அந்த ஆட்டலில்…அஸ்வினியின் மனம் ஆட்டம் கண்டது. அவனை இப்படி ஜோடியாக பார்க்க அவளால் முடியவில்லை.
“நான் தான் காலைலயே சொன்னேன் தானா..? அவனுக்கு கல்யாணம் ஆகியிருந்தா என்ன பண்ணுவன்னு..! இப்ப நீயே பாரு…இனியாவது தேவையில்லாம எதையும் யோசிக்காத..! என்ற சங்கி, அவளை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
அவர்கள் சென்ற சில நிமிடங்களில்…
“டேய் ஜீவா..! இப்ப ஒரு பொண்ணு உன்னைய செம்மையா சைட் அடிச்சா..! என்றாள்.
“யாரு..! என்றபடி மித்ரன் திரும்பி தேட,
“தேடாத…! அதோ அங்க போறா பாரு..! என்று ஜெனி கைகாட்ட…
திரும்பிப் பார்த்த மித்ரனின் கண்களுக்கு அவள் ஒரு புள்ளியாகத் தான் தெரிந்தாள்.
“சும்மா சொல்லக் கூடாது..! செம்ம பிகர். தமிழ்நாட்டு பொண்ணா இருக்கணும்..! எவ்வளவு முடி வச்சிருந்தா தெரியுமா..? எனக்கே பொறாமையா இருந்தது. அதான் அவளைக் கடுப்பேத்த உன் முடியை பிடிச்சு ஆட்டுனேன்…! நான் நினைச்ச மாதிரியே கடுப்பாகிப் போய்ட்டா..! என்றாள் ஜெனி சிரிப்புடன்.
“ஒரு நல்ல பிகர் என்னை சைட் அடிச்சா உனக்கு பொறுக்காதே..! இரு எனக்கும் ஒரு நாள் வரும்..! அன்னைக்கு இருக்கு கச்சேரி..! என்று மித்ரன் சொல்ல…இருவருக்கும் சிரிப்பு.
ஆனால் அங்கே ஒருத்தி சிரிப்பையே தொலைத்துவிட்டு சென்று கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு இப்படி அமைதியா வர..? என்றாள் சங்கி.
“நிஜமாவே அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா..? என்றாள்.
“உறுதியா சொல்ல முடியாது..! அவ அவனோட காதலியா கூட இருக்கலாம்..! என்றாள் சங்கி.
“இருக்காது..! என்னோட உள்மனசு சொல்லுது..!  என்றாள்.
“அது உன்னோட பிரம்மை. உன்னோட மனசு உனக்கு சாதகமா தான் யோசிக்கும்..! இதை இதோட விடு..! என்றாள் சங்கி.
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. இவள் இதோடு மட்டுமல்ல..எதோடும் விடமாட்டாள் என்று.
அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போது மழை வலுக்கத் தொடங்கியது.
“இப்ப என்னடி பண்றது..? நான் சொன்னப்பவே கிளம்பியிருக்கலாம்..! கேப் புக் பண்ணு..! என்றாள் சங்கி.
“அரைமணி நேரம் ஆகுமாம்டி..! என்றாள்.
“ஆட்டோல போகலாமா…? என்றாள்.
“இந்த டைம்ல…ஆட்டோ அவ்வளவு சேப்டி கிடையாது. இரு வெயிட் பண்ணலாம்..! என்ற அஸ்வினிக்கு கண்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தாள்.
அவள் தேடியது வீண்போகவில்லை. மித்ரனும் ஜெனியும் வந்தனர். அவளுக்கு கொஞ்ச தூரத்தில் நிற்க, ஜெனி மித்ரனின் கைகளுக்குள் கையைக் கோர்த்து இருந்தாள். அவர்களைப் அப்படிப் பார்த்த அஸ்வினிக்கு கடுப்பாக, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஜீவா..! உன்னைய சைட் அடிச்ச பொண்ணு..! அங்க நிக்குது பாரு..! என்றாள் வாயைத் திறக்காமல்.
“எங்க..? என்றான் சுற்றும் முற்றும் பார்த்தபடி.
“அலையாதடா..! அப்படியே கவனிக்காத மாதிரி பாரு…எனக்கு கொஞ்சம் தள்ளி..! வொயிட் டாப்.. என்றாள் ஜெனி.
மித்ரன் பார்க்காதவனைப் போல பார்க்க…அவளின் ஓரம் மட்டும் தான் தெரிந்தது.
“தெரியலை..! என்றான்.
“பக்கத்துல போய் பார்க்கலாமா..? என்றாள் ஜெனி.
“ம்ம் சரி..! என்றான்.
“அடிங்க..! என்ன சரி..? நீ சைட் அடிக்க நான் துணைக்கா..? பிச்சிடுவேன் மகனே..! என்றாள்.
“நான் கேட்டனா..? அந்த பொண்ணு இங்க இருக்கான்னு நான் கேட்டனா..? நீயா என்னை கூப்பிட்ட, நான் சரின்னு சொன்னதும்..நீயா வேண்டாம்ன்னு சொல்ற..? என்ன நியாயம் உன்னோட நியாயம்..! என்றான்.
“நீ கெத்தா இருப்பன்னு நினைச்சேன்..! என்றாள்.
“அப்படி எல்லாம் எனக்கு நடிக்கத் தெரியாது. பொண்ணுங்க தானா சைட் அடிக்க குடுத்து வச்சிருக்கணும்..! என்றாள்.
“அப்படியா..? உங்க கிராணிகிட்ட கேட்போமா..? என்றாள்.
“அம்மா தாயே..ஆளைவிடு..! என்றபடி அவன் கொஞ்சம் நடந்து சென்று காரில் ஏறினான். ஜெனியும் பின்னோடு சேர்ந்து அவனுடன் காரில் ஏற,
இவ்வளவு நேரம் அவர்களின் நெருக்கத்தையும், ஒருவருக்கு ஒருவர் பேசி சிரித்ததையும் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வினிக்கு, இதயம் நழுவி அந்த மழை நீரில் கரைந்ததைப் போல் ஆனது.
ஜெனி அவனின் கையை உரிமையுடன் பிடித்துக் கொண்டு நின்றிருந்த காட்சியே அவளின் கண் முன்னால் வந்து வந்து போனது.
அதற்குள் அவர்கள் புக் செய்திருந்த கேப் வர, அங்கிருந்து கிளம்பினர் இருவரும். அந்த இரவு நேரத்தில், மும்பை வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்க, அஸ்வினியின் மனம் மட்டும் இருண்டு கிடந்தது.
“சங்கி சொல்ற மாதிரி…இது உனக்குத் தேவையில்லாத வேலை..! என்று மனசாட்சி சொல்ல,
“இல்லை..! நான் அவனை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கேன். என்னோட நியாபகத்துல அவன் முகம் பரீட்சியமானதா தோணுது. அது மட்டுமில்லாம அவனை எனக்கு பிடிச்சிருக்கு..! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
தனது செல்லை எடுத்து அதில் இருந்த அவனின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே வர… அவளுக்கு மீண்டும் பழைய உற்சாகம் திரும்பியது. அவளின் செய்கைகளை விநோதமாய் பார்த்தபடி வந்தாள் சங்கீதா.
பிளாட்டில், அவர்கள் அறைக்கு வந்த பின்பும் அஸ்வினி அதே நிலையில் இருக்க,  சங்கிக்கிக்கு தான் பயமாக இருந்தது.
“அஸ்வினி..! நாம இன்னும் கொஞ்ச நாளல்ல கிளம்பிடுவோம்..! என்றாள்.
“ஆமா..! அதுக்கென்ன..? என்றாள்.
“ஒண்ணுமில்லை..! என்ற சங்கீதாவிற்கு மனதிற்குள் ஆயிரம் யோசனைகள்.
அதே நேரம் மித்ரனின் வீட்டில்…
“என்ன யோசிச்சு வச்சிருக்க ஜீவா..? நான் உனக்குப் பொண்ணு பார்த்திருக்கேன்..! அவளுக்கும் உன்னைய ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னைய உனக்குத் தெரியாமையே விரும்பியிருக்கா..! நம்ம அந்தஸ்துக்கு ஏத்த குடும்பம்..! என்று சொல்லிக் கொண்டிருந்தார் ராணியம்மாள்.
“என்னால முடியாது..! என்றான்.
“சரி..! நீ யாரை விரும்பறன்னு சொல்லு..! அந்த பொண்ணையே பேசி முடிக்கலாம்..! என்று ராணியம்மாள் கேட்க,
“அதெல்லாம் வேண்டாம் பாட்டி..! நேரம் வரும் போது நானே சொல்றேன்..! என்றான்.
“இல்லாத காதலிக்கு எதுக்கு ஜீவா நேரம் எல்லாம்..? என்றார் ராணி.
“பாட்டி..! என்றான் அதிர்ந்து.
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா…? நீ இதுவரைக்கும் யாரையும் காதலிக்கலை. இனியும் காதலிக்க மாட்ட..! என்று அவனின் பாட்டி ஆணித்தரமாகக் கூற..
“நீங்களா ஒன்னை நினைச்சா, அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்..? எனக்கு மனசுக்குள்ள என் மனைவியைப் பத்தின ஒரு கற்பனை இருக்கு.. என்றான்.
“நான் உன்னைக் கட்டாயப்படுத்தலை..! பொண்ணைப் பாரு..! உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்..! என்றார் ராணி.
“பார்த்துட்டு வேண்டாம்ன்னு சொல்லிட வேண்டியது தான்..! என்று நினைத்தவன்…
“சரி என்றான்.
“என்னடா சொல்ற..? சரின்னு சொல்லிட்டியா..? என்றாள் ஜெனி.
“ஆமா ஜெனி.பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியது தான்..! என்றான்.
“சரி..! உனக்கு கவிதை அனுப்புற அந்த பொண்ணு யாருன்னு கண்டு பிடிச்சியா…? என்றாள்.
“எங்க இன்னும் இல்லை.  அதெல்லாம் ரொம்ப முக்கியமா இப்ப..? என்றான்.
“பாவம்டா..! உருகி உருகி இருந்தது அந்த கவிதை எல்லாம்..! உன்னை காதலிக்கிறாளோ என்னவோ..? என்றாள் ஜெனி.
“இப்ப பாட்டி பார்த்த பொண்ணும் என்னை விரும்புறாளாம்..! என்றான் சிரித்துக் கொண்டே.
“மச்சி..உனக்கு எங்கையோ மச்சம் இருக்குடா. அதான் பொண்ணுங்க தானா உனக்கு வந்து விழறாங்க..! என்றாள் ஜெனி.
“மச்சம் இல்லை. பணம் இருக்கு..! அதான் தானா வராங்க..! என்றான் வெறுப்பான குரலில்.
“அப்படி பேசாத ஜீவா. நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க..! என்றாள் ஜெனி.
“இருந்தா நல்லது தான்..! என்றான்.
அந்த கவிதைகள் அஸ்வினியின் கவிதைகள் தான். காதல் கவிதைகள் அல்ல. பொதுவான ரசனை சார்ந்த கவிதைகள். தினமும் அவனின் எண்ணிற்கு அனுப்பிவிடுவாள்.
ஒருகட்டத்திற்கு மேல் அந்த என்னை பிளாக் செய்ய நினைத்தான் மித்ரன். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. அவனுக்கு இருக்கும்  பிசியான வேலைகளுக்கு இடையில், பல நாள் அவன் அதைப் பார்த்ததே இல்லை என்று சொல்லலாம்.
ஒரு நாள் ஜெனியிடம் அவன் செல் சிக்க..அப்போது தான் அவளும் பார்த்தாள்.
அந்த நாளில் இருந்து அதை வைத்தே அவனை ஒட்டிக் கொண்டிருந்தாள். இவன் விளையாட்டாய் எடுக்க, அங்கே ஒருத்தி அதை சீரியசாய் அனுப்பிக் கொண்டிருந்தாள். அவளின் புரபைலில் ஒரு ரோஜா மட்டுமே இருந்தது. அதனால் ஜெனிக்கும் அவளைத் தெரியவில்லை.
இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் தானாக வந்து கலந்து கொண்டவள் லக்சனா. மித்ரனின் பாட்டி அவனுக்குப் பார்த்திருக்கும் பெண். மித்ரனையும் அவளுக்குப் பிடித்தது. அவனுடைய பணத்தையும் அவளுக்குப் பிடித்தது.
அதற்காகவே ராணிக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டாள். அவளும் ஓரளவு வசதி படைத்த குடும்பம் என்பதால் ராணியம்மாளுக்கும் அவளை மறுக்க முடியவில்லை. அவ்வளவு அழகாக இருந்தாள்.அந்த அழகில் அவரும் மயங்கி, பேரனையும் சேர்த்து இழுத்து விட்டார்.

Advertisement